Thursday, October 16, 2008

காணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்

அந்த டைரியை நான் நான்கு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.. 2005-ம் வருட டைரி என்று ஞாபகம்..

கடந்த வியாழக்கிழமை அதை நான் புத்தக பீரோவில் தேடிக்கொண்டிருந்த போது என் மகள் மீரா வந்து "என்னப்பா நாலு நாளா கிடந்து தேடிகிட்டிருக்கீங்க?" என்று கேட்டாள். ஐந்திலிருந்து ஆறாவது போய்விட்டாள்.. என்னைப் போலவே புகழ் பெற்ற நிருபராகும் ஆசை அவளுக்கு இருக்கிறது.(புளித்துப் போன இந்த காமெடிக்கு மன்னிக்கவும்.. நானும் புகழ் பெற்ற நிருபனாகும் ஆசையோடு இருந்தேன்) நான்கு நாளாக நான் டைரி தேடுவதை கவனித்திருக்கிறாள்..

"பழைய டைரி ஒண்ண தேடிட்டிருக்கேன் மீரா.."

"எதுக்குப்பா?"

நான் இந்த வலைப் பக்கத்தைப் பற்றி அவளுக்குச் சொன்னேன்.. "நாம என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. இதுக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. விகடன்ல கூட வாராவாரம் ஒரு வலைப்பூ பத்தி எழுதறாங்க"

"சரிப்பா.. அதுக்கும், நீங்க டைரி தேடறதுக்கும் என்னப்பா சம்பந்தம்?"

"நானும் அந்த மாதிரி ஒரு blog ஆரம்பிச்சிருக்கேன். அந்த 2005-ம் வருட டைரில சில கவிதைகள், கதைக் கருக்கள் எழுதி வெச்சிருந்தேன். அதை என்னோட blog-ல போடலாம்னுதான் தேடறேன்"

நான் இதை சொன்னதிலிருந்து அவளும் என்னோடு தேட ஆரம்பித்தாள். ஆனால் டைரி கிடைத்தபாடில்லை.

"அப்பா.. அம்மாகிட்ட கேட்டுப்பாக்கலாம்பா.. அதுல அம்மா வீட்டுக்கணக்கெல்லாம் எழுதிட்டிருந்ததா ஞாபகம்"

இருக்கலாம். என் மனைவிக்கு வீட்டை ஒழுங்குபடுத்தி வைப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி ஒழுங்குபடுத்தும் போது எங்காவது எடுத்து வைத்திருக்கலாம்.

மனைவியை அழைத்துக் கேட்டேன்..

"நீங்க வருஷத்துக்கு நாலஞ்சு டைரி கொன்டு வரீங்க.. எது-ன்னு யாருக்கு தெரியும்?"

"2005-ன்னு நேராவும், தலைகீழாவும் ப்ரிண்ட் பண்ணீருப்பாங்க"

"என்ன கலர்?"

"சாம்பல் நிறம் மாதிரி இருக்கும்"

என் மகள் மீரா இடைமறித்துச் சொன்னாள்.. "நீ கூட அதுல கணக்கெல்லாம் போடுவம்மா.. போன தடவை என் ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோன்னு அதுலதான் பாத்துச் சொன்ன.." - சொல்லிவிட்டு ‘எப்படி?’ என்பது போல என்னை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. நான் பாராட்டும் விதமாக அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.

"ஓ.. அது உங்க ஃப்ரண்ட் உசேன் ப்ரசண்ட் பண்ணின டைரிதானே?" - மனைவி கேட்டபோது புல்லரித்துப் போனது எனக்கு.. ‘ஆஹா.. எவ்வளவு ஞாபகசக்தி இவளுக்கு..! இவளை மனைவியாய் அடைய நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தவாறே Feelings of India-வுக்கு பிரேக் விட்டுவிட்டு "ஆமா..ஆமா.. அதேதான்.." என்றேன் உற்சாகமாய்.

"இருங்க வரேன்" என்று உள்ளே போனாள். நானும் என் மகளும் சந்தோஷமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம்.

சிறிது நேரம் கழித்து வ்ந்த மனைவியின் கையில் கக்கூஸ் டப்பா இருந்தது! "ஏய்.. அதை எதுக்கு கையில தூக்கிட்டு வர்ற?"

"இல்லீங்க.. போன சண்டே பிளாஸ்டிக்காரனுக்கு பேப்பர், புக் எல்லாம் போட்டு டாய்லெட்டுக்கு பக்கெட் வாங்கினேன்ல?"

"ஆமா.. அவன் வந்தப்ப தான் நான் சலூனுக்கு கிளம்பிட்டிருந்தேன்.." சொல்லும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது..

"கரெக்ட்.. எல்லாத்தையும் போட்டுட்டு பக்கெட் வாங்கினேனா.. கூட மேட்சிங்கா இந்த டப்பாவையும் கேட்டதுக்கு இன்னும் எதாவது புக்ஸ் போடுங்கம்மா’ன்னான்.. அதான் பரண்ல இருந்த சில புக்ஸ போட்டேன்.
அந்த டைரி அது கூடத்தான் இருந்தது"

எனக்கு சினிமாவில் கிராபிக்ஸில் முகம் நான்கைந்தாக பிளக்குமே.. அப்படி ஆனது!

15 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

nice, u miss that diary but
u have one chapter form that one.
any way u are elgible to blog writter.

M.Rishan Shareef said...

நல்லவேளை,டப்பா காப்பாத்திடுச்சு எங்களை..! :P

Girish.K said...

என் மனைவிக்கு வீட்டை ஒழுங்குபடுத்தி வைப்பதில் ஆர்வம் அதிகம்.
நல்ல நகைச்சுவை இது

Girish.K said...

இவளை மனைவியாய் அடைய நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்


sarithan....

பரிசல்காரன் said...

வேலைப்பளு.. அதுனால ஒரு மீள்பதிவு. மன்னிச்சுக்குங்க!

கார்க்கிபவா said...

மீள்பதிவு போட்டு எங்கள மீளாத்துய‌ரத்துல ஆழ்த்திட்டிங்க.. நான் வேணும்னா ஏதாவது எழுதி தரட்டுமா? (ஹிஹிஹிஹிஹி)

விஜய் ஆனந்த் said...

:-)))...

சரவணகுமரன் said...

:-))

Mahesh said...

ஆஹா... கவுத்துட்டாங்களே..... அது இருக்கட்டும். இந்த "மீள் பதிவு"ன்னா என்ன? ம்த்த பதிவுகளுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? நான் சீரீசா கேக்கறேன்.

narsim said...

கலக்கல் பதிவு தல.. அப்ப படிக்கமா இருந்தவங்களுக்கு மீள் பதிவு இல்ல..தூள் பதிவு..

நர்சிம்

Vishnu... said...

மீள் பதிவு ..அருமை நண்பரே ...

விஷ்ணு

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் இப்பதான் 1ஸ்ட் டைம் படிக்கிறேன்...

Rangs said...

தினமும் ஒரு பதிவா? எப்டிதான் முடியுதுங்க?

ரொம்ப பிரமிப்பா இருக்குது..

ஆர்வம் இருக்குதுன்னாலும் பொறுமை ரொம்ப முக்கியம்..

தொடருங்கள்..

ரங்கராஜ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதென்னாடா படிச்சாப்ல இருக்கே தலைப்பு ன்னு பார்த்திட்டே வந்தேன்.. அதே தானா..சரி சரி..

Thamira said...

அது..!