எல்லாத்தையும் கலந்துகட்டி எழுதும் இந்தப் பகுதிக்கு `அவியல்' என்று பெயர் வைத்தது பலருக்கும் புரியவில்லை போல.. எனது நண்பர்கள் சிலரே கூப்பிட்டு `ஏன்டா, சமையல் குறிப்பெல்லாம் எழுதறயா?' என்று கேட்கிறார்கள். முதலில் இது போல எழுதியதற்கு, `நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்' என்று தலைப்பிட்டிருந்தேன். அது கொஞ்சம் பெரியதாக இருந்ததால் இப்படி மாற்றினேன். வேறு எதாவது தலைப்பு வைக்கலாமா என்று யோசிக்கிறேன்.. எனி ஐடியா?
------------------------------------------------------
என்னங்க நடக்குது இங்கே?
இன்றைய தினகரனில்....
‘மருத்துவமேற்படிப்பு பிரச்னை-டாக்டர்கள் சாலை மறியல்’
‘என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் ஸ்டிரைக் நீடிப்பு’
‘விசைத்தறியை காக்க வலியுறுத்தி பல்லடத்தில் உண்ணாவிரதம்’
‘விதை உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் இன்று துவக்கம்’
‘சிஎன்சியை அரசு கல்லூரியாக்கக் கோரி சுமை தூக்குவோர் வேலை நிறுத்தம்’
‘நூல் விலை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு ஜவுளி ஆலைகள் இன்று வேலைநிறுத்தம்’
‘விளையாட்டு மைதான பிரச்சினை-போராடக் குவிந்த மாணவிகளை போலீசார் விரட்டியடித்தனர்’
என்ன கொடுமை சார் இது?
-----------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போயிருந்தபோது எடுத்த பொருட்களுக்கு பில் போட க்யூவில் நின்றிருந்தேன். கொஞ்சம் நீண்ட க்யூவானதால் ஒரு ஒரு பொருளை எடுத்திருந்த ஒரு பெண்மணி அவரது பையனை (பத்து வயதிருக்கலாம்) முன்னே சென்று கொடுக்க சொன்னார். க்யூவில் வராமல், முன்னேயே கொஞ்ச நேரம் நின்று சரியாக என் முறை வந்த பொது, எனக்கு முன் அந்தப் பொருளை நீட்டினான். பணியாளர் பில் போட்டுக் கொண்டிருந்தபோது நான் விளையாட்டாக அவனிடம் பேசினேன்..
"க்யூவில் வரலியா?"
அவன் ஒரு மாதிரி ஆகி என்னைப் பார்த்து இல்லை என்பதாய் தலை ஆட்டினான்..
"அந்நியன் படம் பாக்கலியா?" என்றேன் நான் அடுத்து. அதற்கும் இல்லை என்றான். நான் சிரித்துக் கொண்டே "பயப்படாத.. சின்னத் தப்புதான்.. ஆனாலும் தப்பு!" என்றேன்.
பிறகு நான் பில் போட்டுவிட்டு, பில்லுடன் பணம் கட்ட வேறொரு க்யூவில் நின்ற போது, எனக்கு முன் அந்த சிறுவன் நின்றிருந்தான். எங்கிருந்தோ வந்த அவனது அம்மா அவனை 'பத்து ரூபா தானே.. முன்னாடி போய் குடு' என்றார். அவன் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்து "போம்மா" என்று அகலாமல் நின்றான். எனக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அடுத்து நடந்தது... ?
அந்த அம்மாள் அவனிடமிருந்து பில்லை பிடுங்கிக் கொண்டு எல்லோருக்கும் முன் சென்று பணத்தைக் கட்டிவிட்டு சென்றார். இப்போது அந்த சிறுவன் என்னைப் பார்த்த பார்வைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை..
----------------------------------------------------------------
ஒரு மொக்கை கற்பனை..
‘நான் என்ற எண்ணத்தை அழியுங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு அரசியல்வாதியைப் பேசச் சொன்னபோது..
"என் பொன்னான மக்களே, என் உடன்பிறவா உடன்பிறப்பே.. இந்த அருமையான தலைப்பிலே என்னைத்தவிர யாரும் பேசமுடியாதென்பதால் என்னைப் பேச அழைத்திருக்கும் விழாக்குழுவினரே.. அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.
நான் எனது ஐம்பத்திரெண்டு வருடகால வாழ்விலே எதையும் என்னுடையது என்று கூறிக்கொண்டது கிடையாது என்பது என்னை அறிந்த உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். (மேடையில் அமர்ந்திருப்பவர் ஒருவரிடம் ‘யோவ்.. என் சோடா என்னாச்சுய்யா?) எதுவும் எனது என்றில்லாமல் எல்லாமே நமது என்று எண்ணுபவன் நான்! என்னுடைய இந்த எண்ணத்தினால் தான் நமது கட்சியும் நானும் இவ்வளவு பேரோடும், புகழோடும் இருக்கின்றோம். மறைந்த நமது தலைவர் கூடக் கூறுவார் என்னைப் போல பரந்த மனப்பான்மை வேறு எந்தக் களவாணிப் பயலுக்கும் இல்லை என்று. அவர் என்ன சொல்வது.. நானே சொல்கிறேனே என் போல வேறு யார்?
அதே போல நான் எப்போதுமே எனக்கென்று எதையும் ஒதுக்கிவைத்துக் கொண்டதில்லை. என்பொருளைக் கூட அடுத்தவருக்காக விட்டுக்கொடுப்பவன் நான். (மேடையில் சோடா கொண்டு வரும் சிறுவனிடம் ‘டேய்.. மொதல்ல எனக்கு குடுடா’) ஆகவே மக்களே.. என்னைப் பாருங்கள்.. என் வாழ்க்கையைப் பின்பற்றுங்கள். எனது எண்ணம் போல உங்களையும் தூய்மையானதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
5 comments:
ஆஹா, உங்க நண்பர்கள் கரெக்டாதாங்க சொல்லி இருக்காங்க. எனக்கு நீங்க என்ன எழுதுறீங்கன்னு தெரியும், ஆனாலும் அவியல்னு பேர பார்த்த உடனே அம்மா சமையல் ஞாபகம் வந்து, இதை ஞாபகப்படுத்தின பாவத்துக்காகவே உங்களுக்கு பின்னுட்டம் இன்னைக்கு போடக் கூடாதுன்னு போயிருக்கேன்.கோச்சுக்காதீங்க.ஹி ஹி ஹி
அந்த சிறுவன் மேட்டர் சூப்பர். இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க. பார்க்கும் போது ரொம்ப கோவமா வரும்! இந்த விஷயத்துல ஆண்கள் ரொம்ப டீசென்ட்!
வரவர அவியல் தான் ரொம்ப அதிகமா இருக்கு.
சாதம் எப்ப சமைப்பீங்க? :))
நன்றி rapp, sathya, ambi..
அம்பி, வலைச்சரத்திலிருந்து வந்தாச்சா?
கிருஷ்ணா, வலைச்சரத்தில் ஸ்டார் ஆப் தி வீக்னு அம்பி அண்ணா ஒரு வாரம்தான் சரத்தை தொகுத்தார். அது இருக்கட்டும், ஜாலியா ஒரு வாரம் நடந்தது நடக்காதுன்னு மொக்க போட்டுட்டு, இப்ப பெரிய மொக்க போட யோசனையா இருக்கா? ஹி ஹி ஹி கோச்சுக்காதீங்க, சும்மா சொன்னேன்.
Post a Comment