Sunday, June 22, 2008

எதிர்பாராத திருப்பம்


எனக்கு பதட்டமாக இருந்தது..

அவரை நான் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது.. இதுவரை இப்படி ஒரு நாளை நான் சந்தித்ததில்லை..

அப்படி என்னதான் நடந்தது..?

"நாளைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு" என்று கூறி நேற்று நேரத்திலேயே அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.

நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு.. படுக்கைக்கு சென்றபோது.. மணி பத்தரை ஆகி விட்டிருந்தது.. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். படுத்த சிறிது நேரத்திலேயே அலாரம் வைக்க மறந்தது ஞாபகம் வர.. என் செல்போனைத் தேடினேன். ஹாலிலேயோ, சமையலறையிலேயோ வைத்து விட்டேன் போல. எழுந்து போக சலிப்பாய் இருக்கவே, தலை மாட்டில் அவரது போன் இருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. சரி.. அதிலேயே அலாரம் வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்தேன்..

அலாரம் வைத்ததோடு நின்றிருக்கலாம்.. ஸ்க்ரீனில் ஏதோ சிம்பல் தெரியவே அது என்னவென்று பார்த்தேன். அடுத்த நாளைக்கான ஒரு ரிமைண்டர் வைத்திருந்தார்..

"Meeting at Hotel Chalukya - Room No. 205 - To go with Sudha" என்று சொன்னது அந்த ரிமைண்டர். அதற்குப் பிறகு நான் தூங்கவேயில்லை.

யார் இந்த சுதா? அது என்ன ஹோட்டலில் மீட்டிங்?

அவர் எப்போதுமே எதிர்பாராத ஆபீஸ் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை. அதனால் எப்படி இதைக் கேட்பது என்று தயக்கம்.. பயம்.

இன்று காலை எப்போதும் போல வழக்கமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் பாட்டுக்கு கிளம்பி விட்டார்.

"ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க அபி?" என்று என்னைக் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.. கேட்கவே இல்லை.

யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் செல்போனை எடுத்தேன்..

ரமணியிடம் உதவி கேட்கலாம்..

"ரமணி.. ஒரு உதவி வேணும் உன்கிட்ட”

“சொல்லு அபினயா”


அவ்வளவுதான்.. ரமணியின் குரலைக் கேட்டதும் நான் உடைந்து விட்டேன். என்னையும் அறியாமல் குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன்.


“ஏய்.. ஸ்டுப்பிட்.. சும்மா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்காதே. ஆபீசுக்கு போன் போட்டு அவர்கிட்டயே கேளு.. மனசுல வெச்சுக்கறதுதான் உன்னைமாதிரி பொண்ணுகளோட பெரிய தப்பு”



ரமணி சொன்னது சரியோ என்று தோன்றியது.


எதற்கு மனதில் போட்டு குழப்பிக் கொண்டு? அவரிடம் நேரடியாகவே பேசிவிடலாம்.


அவரின் செல்போனை டயலினேன்.


தொடர்ந்து ரிங் போய் கட்டானது.


என் மனக் குரங்கு மறுபடி கிளை தாவ ஆரம்பித்தது.


வேறு ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் வரும் முன்.. அவரது அலுவலகத்தில் அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக எண்ணுக்கு போன் செய்தேன்.


நான்காவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.


வேறு யாரோ எடுத்தார்கள். ஆண் குரல்தான்.. யாரது..


“ஹலோ.. ராகவ் சார் இல்லயா?”


“சார் வாஷ் ரூம் போயிருக்காருங்க மேடம். நீங்க?”


“நான் அபினயா.. அவர் மனைவி”


“வணக்கம் மேடம்”


“நீங்க?”


“நான் சுதாகர் மேடம். சாரோட பி.ஏ”


”எ..என்ன பேர் சொன்னீங்க?”


“சுதாகர்”


“இன்னைக்கு ஹோட்டல் சாளுக்யால மீட்டிங்.....”


நான் முடிக்கும் முன்..


“நானும் சாரும்தான் போறோம் மேடம்...”


ச்சே.. என்ன பொண்ணு நான்.. சுதாகரை சுதா என்று அவர் ரிமைண்டரில் வைத்திருந்ததால் குழம்பி..


“சரி சுதாகர்.. ஒண்ணுமில்ல சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும்”


“எப்படியும் ஒம்பது பத்து மணியாயிடும் மேடம்.. வீட்டுக்கு போய்தான் சாப்பிடணும்னு சொல்லீட்டிருந்தாரு”


“ஒக்கே.. நான் போன் பண்ணினதா சொல்ல வேண்டாம்.. அப்புறமா அவர் மொபைல்ல பேசிக்கறேன்”


“சரிங்க மேடம்”

போனை வைத்ததும் எனக்கு ரிலாக்ஸாக இருந்தது. இரவு வரும் அவருக்காக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

-----------------------------------

பரிசல்காரன்: என்னடா உங்களுக்கு வேற வேலையே இல்லயா? ட்விஸ்ட்.. ட்விஸ்ட்ன்னு இந்த மாதிரி எத்தனை கதைடா எழுதுவீங்க என்று சலித்துக்கொள்கிறவர்கள் மட்டும் கீழே படிக்கவும்..

-----------------------------------------


ராகவின் அலுவலகத்தில்...


“என்னப்பா.. போன் அடிச்ச சத்தம் கேட்டது? யாரு?”


“உங்க மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. நீங்க கணிச்சது சரிதான் சார். நான் நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேன். என் பேருக்காகத்தானே என்னை வேலைலயே வெச்சிருகீங்க..”


“வெரிகுட்.. நீ போய் மார்க்கெட்டிங்ல இருக்கற சுதாராணிய என் காருக்கு வரச் சொல்லு. சாளுக்யா போகணும்”

------------------------------------------------------


மீண்டும் பரிசல்காரன்: என்னடா கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ஏமாத்தறதா கதய முடிச்சுட்டியே.. அவ மட்டும் என்ன இளிச்சவாச்சியா?’ ன்னு வருத்தப் படறவங்க மட்டும் கீழே படிக்கவும்..

------------------------------------------


அபினயாவின் வீட்டில்:


ராகவின் அலுவலகத்திற்கு பேசிய பின் அபினயா ரமணிக்கு போன் போட்டாள்..


“ரமணி.. நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமில்ல.. அந்த சுதா, சுதாகர். அவரோட பி.ஏ.”


“எனக்கு தெரியும்.. நீதான் மனசப் போட்டு குழப்பிக்கற”


“சரி.. அவரு வர எப்படியும் ஒம்பது மணி ஆயிடுமாம்”


“ஏய்.. ஏய்.. என்ன?”


“ப்ளீஸ்டா.. உன்னைப் பாத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. வாடா”


“சரி அபி.. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்” என்றான் ரமணி.

--------------------------

மீண்டும் மீண்டும் பரிசல்காரன்:- "இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவிர்க்கவும்” என்று உரிமையோடு கடிந்து கொண்ட வடகரைவேலன்.. ‘என்னய்யா குடும்பம் இது’ என்று ஆதங்கப்பட்ட அகரம்.அமுதா, ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன்.. எல்லாத்துக்கும் மேல `கேஸ் வரப் போகுது’ என்று பயமுறுத்திய வெண்பூ ஆகியோரது பின்னூட்டங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட முடிவு..

---------------------------------------


அபினயாவிடம் வருவதாய் சொல்லிவிட்டு போனைத் துண்டித்த ரமணி காரில் ஏறி நேராக செலுத்தினான். காரை நிறுத்திய இடம்..


ஹோட்டல் சாளுக்யா!


நேராக ரிசப்ஷன் நோக்கி நடந்தவன் தூரத்தில் வந்த ராகவ்-வின் இன்னோவாவைப் பார்த்ததும் ஹோட்டலின் வாயிலிலேயே நின்றான்..


காரை விட்டிறங்கிய ராகவ், ரமணியைப் பார்த்ததுமே முகம் வெளிறினான்.


”ர.. ரமணி.. நீ எங்க இங்க?”


“ராகவ்.. நீ எல்லை மீறிப் போய்ட்டிருக்க. ஒரு நல்ல நண்பனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அபி உன்னைப் பத்தி விசாரிக்க எங்கிட்ட சொன்னா. உனக்கும், சுதாராணிக்கும் இருக்கற லேசான பழக்கம் தெரிஞ்சும் வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லாத, திறமைசாலியான உன்னை மாத்திடலாம்ன்னு நம்பி உன்கிட்டயே அதப் பத்தி கேட்டேன். நீ ”அப்படியெல்லாம் இல்ல. சும்மாதான் பழகறோம்” ன்ன. ஆனா கல்யாணமாகி இவ்வளவு நாள் கட்டுப்பாடோட இருந்த நீ, இப்போ இப்படி..”


“ரமணி.. நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல”


“சும்மா இருடா. உனக்காக பொய் சொல்ற சுதாகர் ஆயிரம் ரூபா குடுத்தா உன்னைப் பத்தி என்கிட்டயும் சொல்லுவான்னு புரிஞ்சுக்கோ. இப்பவும் நீ வர லேட்டாகும், போரடிக்குதுடா.. வீட்டுக்கு வா”ன்னு உரிமையோட அபி என்னைக் கூப்பிடறா. நீ சுதாராணிகிட்ட பழகறமாதிரி நான் அபிகிட்ட..”


“ரமணி... ப்ளீஸ்.. என்னை கொல்லாதே”


“அட.. நீங்க மட்டும் என்ன வேணா பண்ணலாம். அப்படித்தானே?”


“இல்ல ரமணி. ஏதோ ஒரு நொடி பிசகினதுல இப்படி ஒரு தப்பு பண்ண இருந்தேன்.. இனி இந்த மாதிரி நினைச்சுக்கூட பாக்க மாட்டேன். உன் கார் இங்கயே இருக்கட்டும். வா ரெண்டு பேருமா இதுலயே வீட்டுக்கு போலாம்” என்ற ராகவ் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய சுதாராணியைப் பார்த்து சொன்னான்..

“நாளைக்கு அக்கவுண்ட்ஸ்ல போய் உன் கணக்கை செட்டில் பண்ணிக்கம்மா”

34 comments:

வெண்பூ said...

மொத்தத்துல "ஜாடிக்கேத்த மூடி"ன்றீங்க... பாத்து கலாச்சாரக் காவலர்கள் உங்களுக்கு எதிரா கெளம்பிடப் போறாங்க.

Anonymous said...

கிருஷ்ணா,

சுவராஸ்யமாக இருக்கிறது.

ஆனா மையக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. தயவு செய்து தவிர்க்கவும்.

மேலும் நானே இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று காரில் வரும் பொழுதுதான் யோசனை செய்தேன்.

இங்கு வந்து பார்த்தால் உங்க ப்திவும் அதே கருத்தில்.

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னக் கருமம் இது...

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்க எழுத்து திறமையை பாராட்டுகிறேன்... அருமை...

VIKNESHWARAN ADAKKALAM said...

கதையின் கரு விளையாட்டுத் தனமாக இருக்கிறது.

கதைக்கு சுவாரசியும் கொடுத்ததில் நீங்கள் வெற்றியடைந்துவிட்டீர்கள்...

அகரம் அமுதா said...

சீ! விவஸ்தை கெட்ட குடும்பமா இருக்கும் போல.

பரிசல்காரன் said...

@ வெண்பூ
//பாத்து கலாச்சாரக் காவலர்கள் உங்களுக்கு எதிரா கெளம்பிடப் போறாங்க//

அய்யய்யோ.. ஆனானப் பட்ட குஷ்புவாலயே தாங்க முடியல நம்மெல்லாம் எம்மாத்திரம்?

பரிசல்காரன் said...

@ வடகரை வேலன்

//மையக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. தயவு செய்து தவிர்க்கவும்//

உடனடியான பின்னூட்டதிற்கு மகிழ்ச்சி!

மன்னிக்கவும். ஒரு சுவாரஸ்யத்திற்காக எழுதிய கதை! இந்த மாதிரியெல்லாம் நடக்கல-ன்னு உங்களால சொல்ல முடியுமா?- என்றெல்லாம் வாதிட விரும்பவில்லை!

மறுபடி..

மன்னிக்கவும்!

சின்னப் பையன் said...

என்ன கொடுமை சரவணன் இது...

பரிசல்காரன் said...

@ விக்னேஸ்வரன்..

//கதைக்கு சுவாரசியும் கொடுத்ததில் நீங்கள் வெற்றியடைந்துவிட்டீர்கள்//

நன்றி! அதுக்காக மட்டும் தான் இப்படி ஒரு கேவலமான (???) கருவை எழுதவேண்டியதாப் போச்சு!

பரிசல்காரன் said...

@ அகரம் அமுதா

//சீ! விவஸ்தை கெட்ட குடும்பமா இருக்கும் போல.//

@ ச்சின்னப்பையன்

//என்ன கொடுமை சரவணன் இது//

அல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க! ரெண்டு நாள் முன்னாடி என்னோட ஒரு கதையைப் படிச்சுட்டு இந்த ட்விஸ்ட்தான் தெரியுமே-ன்னு எல்லாரும் சொன்னதால இப்படி ரெனண்டு ட்விஸ்ட் இருக்கறா மாதிரி ஒண்ணை எழுதினேன்! முடிவை மாத்தட்டுமா?

சென்ஷி said...

//அகரம்.அமுதா said...
சீ! விவஸ்தை கெட்ட குடும்பமா இருக்கும் போல.
//

ஹா.. ஹா. ஹா.. :)))

ஒண்ணியும் ஜொள்ளிக்க முடியல :))

ராமலக்ஷ்மி said...

வடகரை வேலன் said..//மேலும் நானே இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று காரில் வரும் பொழுதுதான் யோசனை செய்தேன்.//

'எதிர் வீட்டுத் தாவணி'யிலே துளசி மேடமும் இதே போல சொல்லியிருந்தாங்க. பல சமயங்களில் நாம் ஒன்று நினைத்து வைத்திருக்க அதே போல பிறரது எழுத்துக்கள் அமைவது கண்டு வியப்பா இருக்கும்.

மன்னிக்கணும். இதே கருவில் இதே போன்ற ட்விஸ்டுடன் எங்கோ [விகடனோ குமுதமோ]படித்த ஞாபகம். அதற்கும் நான் மேற்கூறியதே காரணமாயிருக்கலாம்.

[வந்துட்டேன்ல..]

Athisha said...

same pinch...

கதை நல்லா வந்துருக்கு...
கருதான் சிக்கலே..
என்ன பெண்ணியமா...கலக்குங்க

Anonymous said...

//ஒரு சுவாரஸ்யத்திற்காக எழுதிய கதை! இந்த மாதிரியெல்லாம் நடக்கல-ன்னு உங்களால சொல்ல முடியுமா?- என்றெல்லாம் வாதிட விரும்பவில்லை! //

உங்கள் உழைப்பு வீனாகிறதே என்ற ஆதங்கம்தான் வேறில்லை.

அப்பாவுக்குக் கடிதம் உங்கள் தரம்.

சுவராஸ்யத்திற்காக தரத்துடன் சமரசம் வேண்டாம்.

உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி சென்ஷி, ராமலட்சுமி, அதிஷா..

வடகரை வேலன்
உங்களின் அன்புக்கு அடிமையாகி முடிவை மாற்றி விட்டேன்!

Anonymous said...

கிருஷ்ணா,

மாற்றுக்கருத்தை ஏற்று, முடிவை மாற்றியதற்கு நன்றிகள்.

குறைந்த நேரத்தில், கதையின் போக்கை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கத் தேவையான கற்பனை வளம் உங்ளிடம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

நல்ல எழுத்தாளனுக்கு (கலைஞனுக்கு) விமர்சனத்தை ஆரோக்யமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் மிக முக்கியமானது. அது உங்களிடம் அமைந்துள்ளது.

வெற்றிகளை உங்கள் தலைக்கும், தோல்விகளை உங்கள் இதயத்திற்கும் எடுத்துச் செல்லாதீர்கள்.

rapp said...

ஹை, சூப்பரா இருக்கே பின்னூட்டமெல்லாம். கிருஷ்ணா இந்த வாரம் இந்த ட்விஸ்ட்டு கதைகளை தள்ளி வெச்சிட்டு நகைச்சுவை கதை ரெண்டு எழுதுங்க. எனக்கு எப்பப் பார்த்தாலும் பல பாசிபிளிட்டீச யோசிச்சு யோசிச்சு கிட்ட தட்ட எந்த விதமானக் கதைய படிச்சாலும் அதோட முடிவை ரெண்டாவது பாராவுலயே கணிச்சிடும் பழக்கம் ஒரு வ்யாதி மாதிரி ஆகிடுச்சி. அந்தப் பிரச்சினை நகைச்சுவை கதைகள் கிட்ட இல்லாததுனால அவைகள் எனக்கு நெம்ப பிடிக்கும். உங்களுக்கு இயல்புலயே நகைச்சுவை வர்றதால நீங்க ஏன் அதை முயற்சி பண்ணக் கூடாது?

பரிசல்காரன் said...

ராப்.. இந்த வாரம் முடியுமான்னு தெரியல.. (ஏன்னு நாளைக்கு இரவு நான் பதிவேத்தப் போற அவியல்ல சொல்றேன்) ஆனா கண்டிப்பா உங்களுக்காக ரெண்டு காமெடி கதைகள் ரெடி பண்றேன்.

இந்தக் கதை உருவானதுக்கு 'எதிர் வீட்டு தாவணி' க்கு நீங்க போட்ட பின்னூட்டம்தான் காரணம்!

rapp said...

நெம்ப நன்றி கிருஷ்ணா, புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மூன்று முடிச்சு ல வர பைத்தியக்காரன் மாதிரி ஒருத்தர் வந்து கதையில் நீங்கவைக்கும் ஒவ்வொரு டிவிஸ்ட் போது திட்டிக்கிட்டே ஒரு முடிச்சு போட்டுப்பார் சொல்லிட்டேன்..

பரிசல்காரன் said...

நன்றி ராப். உங்க பதிவை படிச்சுட்டேன்.

என்ன கயல் மேடம் இப்படி பயமுறுத்த்றீங்க? (உங்க வேண்டுகோளின்படி (அவ்வ்வ்)சி.வா.ஜி- ரிலே பதிவு இன்னைக்கு நான் போடப்போறேன்

லதானந்த் said...

இத்தனை திருப்பங்களோட ஒரு கதை!

ம்ம்ம்!

இன்னிக்கு எல்லா வேலையயும் ஒதுக்கிட்டு உனக்குப் பின்னூட்டம் போட்டுட்டுத்தான் மறு வேலை!

1983ம் வருஷம் ,சுசி, அப்படிங்கிற பேர வெச்சி இந்த மாரி ஒரு கதை வந்திருக்கு.

ஒரு போட்டி மாதிரி.

முடிவை சரியா யூகிக்கிறவங்களுக்குப் பரிசு குடுத்தாங்க.

பரிசு வாங்கினது யாருன்னு சொல்ல என்ர தன்னடக்கம் தடுக்குது.

VIKNESHWARAN ADAKKALAM said...

இது ஓகே....

அகரம் அமுதா said...

இது சூப்பர்.இத்தவறுகள் நாட்டில் நடப்பதுதான். நீங்கள் அதை எழுதியதிலும் தப்பில்லை. ஆனால் அப்படி வழுவியவர்களுக்குப் புத்தி புகட்டுவதுபோல் முடிவு இருக்க வேண்டும். இந்த மூன்றாம் முடிவில் எனக்கச் சம்மதம். வாழ்த்துக்கள்

☼ வெயிலான் said...

12பி - லிங்குசாமிக்கு இணை இயக்குநரா சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமா இருக்குது.

அப்புறம் வ.வேலன் சொன்னமாதிரி தரத்தை இழக்காதீங்க.

Anonymous said...

வெயிலான்,

12B-ன் மூலம், Run Lola Run என்ற ஜெர்மானியத் திரைப்படம்.

சொன்ன நேரத்திற்கு வந்திருந்தால், ஒரு நிமிடம் முன்பாக வந்தால், ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் என்ற மூவகை முடிவுகள் கொண்டது.

கிடைத்தால் பாருங்கள்.

பரிசல்காரன் said...

லதானந்த் அங்கிள்..

உங்க வாழ்த்துக்கு நன்றி!

நீங்கள்லாம் எப்போதோ போட்ட ரோட்டுலதான்
நாங்கள்லாம் வண்டி ஓட்டிகிட்டிருக்கோம்!

நன்றி அகரம்.அமுதா, அன்பு விக்கி, & வெயிலான்!

ராமலக்ஷ்மி said...

எதிர்ப்பு கிளம்பியதும், இன்னொரு திருப்பத்தைத் தாங்கள் கொடுத்தது மற்றுமொரு 'எதிர்பாராத திருப்பம்'.
ஆனால் இந்தத் திருப்பம் நல்ல திருத்தம். வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ ராமலட்சுமி மேடம்..

//இந்தத் திருப்பம் நல்ல திருத்தம். //

அட! இதுவே ஒரு கதைத் தலைப்பு போல இருக்கே!

ராமலக்ஷ்மி said...

////ராமலட்சுமி மேடம்..

//இந்தத் திருப்பம் நல்ல திருத்தம். //

அட! இதுவே ஒரு கதைத் தலைப்பு போல இருக்கே!////

அப்போ அடுத்த கதை ரெடியா?
எப்போதும் கதை கதையா எழுதிக் குவிக்கும் தாங்கள், எப்போதாவது கதை எழுதும் நான்- எப்போதோ எழுதிய "ஜானி ஜானி நோ பப்பா"க்கு இப்போது கருத்து சொல்லுங்களேன் பார்ப்போம்.

☼ வெயிலான் said...

/// 12B-ன் மூலம், Run Lola Run என்ற ஜெர்மானியத் திரைப்படம்.
கிடைத்தால் பாருங்கள் ///

கோயமுத்தூர் அடுத்த தடவை வந்தா, மணல் கடிகை நாவலை உங்கட்டருந்து வாங்கணும். அதுக்கப்புறம் தான் எல்லாம்.

கயல்விழி said...

வாசகர்களுக்காகவும், கலாச்சாரக்காவலர்களுக்காகவும் தொடர்ந்து முடிவை மாற்றி இருக்கிறீர்கள். இந்த கதையை நீங்களே உங்கள் விருப்பப்படி முடித்திருந்தால் எப்படி முடித்திருப்பீர்கள்?

பிகு: நீங்கள் முடித்திருப்பது மாதிரியான முடிவு வெறும் கற்பனையில் நடப்பது, நிஜத்தில் நடப்பது இல்லை. என்ன செய்வது, நமக்கெல்லாம் நிஜ உலகை விட கற்பனை தான் பிடித்திருக்கிறது.

அமர பாரதி said...

எல்லாஞ் செரிதேன். கடைசீல எதுக்கு சுதாராணிய அக்கவுன்ட்ஸ் செட்டில் பண்ணி அனுப்பனும். அது பண்ணின தப்பு என்ன?