
இதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. பதிவர் நர்சிம்மை எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது ஜூ.வி என் பதிவை வெளியிட்டபோது அவர் ஒரு பதிவு போட்டபோதுதான்! “ஏண்டா... ஒருத்தர் உன்னைப் பற்றி எழுதினால்தான் கவனிப்பாயா” என்று கேட்டால் தலைகுனிவதைத் தவிர வேறு பதிலில்லை!
இன்றைக்கு அவர் ஒரு பதிவைப் போட்டு “போட்டிக்கு வாடா ராசா” என்று அழைத்திருக்கிறார். பெரும் பதிவர்களோடு என்னையும் அவர் அழைத்திருப்பது மகிழ்ச்சி.
அதற்கு ‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்று பதில் பதிவு போட்டுவிட்டார் தோழர் லக்கிலுக். என் கருத்துக்களைச் சொல்வதில் இப்போது கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கிறது. ஏனென்று சொல்லிவிடுகிறேன்.
நான் வலைப்பூவை ஆரம்பித்தபோது எழுத வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை நான் எழுதவே இல்லை. தனிமனிதத் தாக்குதலுக்குப் பயந்துதான்! சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதுதான் உண்மை!
அலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயக்கம்!
அதையும் மீறி எழுதுடா என்றழைத்த நர்சிம் அவர்களுக்காக (பெரிய பதவில இருக்காருன்னு பயமுறுத்தீருக்காரு லக்கிலுக்!) என் சில சிந்தனைகள்...
தனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?
ஹெல்மெட் கட்டாயம் என்று சட்டம் போட்டால், அதை எதிர்த்து அரசையே குழப்பி, எப்படியோ சாவுங்கடா என்று அரசே கண்டுகொள்ளாத அளவிற்கு அதைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டினார்கள் மக்கள்.
பொது இடங்களில் புகைக்காதே என்றால் அந்த சட்டம் எழுதப்பட்ட ஜி.ஓ-வையே எரித்து புகைபிடித்து, அதைக் கொண்டுவந்தவர் முகத்திலேயே ஊதவும் தயங்காத மக்கள்.
போதை வஸ்துக்களுக்குத் தடை என்றால் எந்த பயமுமின்றி பான்பராக், கணேஷ், ஹான்ஸ் என்று எல்லாக் கடைகளிலும் விற்பதும் மக்கள். வாங்குவதும் மக்கள்.
ரோட்டில் குப்பை போடுவதோ, எச்சில் துப்புவதோ நம்மவர்களை ஜெயிக்க வேறு யாருமில்லை! அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று! இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை! இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா? (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான்!)
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, திருட்டு டி.வி.டி. பார்ப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது, டிராஃபிக் ரூல்ஸை மீறுவது, பிளாஸ்டிக் உபயோகம் என்று இது ஒரு எல்லையில்லாப் பட்டியல்.
நான் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை இது. டிராஃபிக் சிக்னலின் போது பச்சை விளக்கு எரிந்தால்தான் நான் பைக்கை எடுப்பது வழக்கம். ஆனால் எப்போதுமே பின்னாலிருப்பவர்களிடம் நான் திட்டுவாங்கிக் கொள்வது வாடிக்கை. அவர்களுக்கு சிக்னல் மீட்டர் 4ஐக் காட்டும்போதே பறந்துவிட வேண்டும்! நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு! மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம்! ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு? நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல?’ என்று லொள்ளுபேசுவேன் நான்!
நான் இதையெல்லாம் செய்யாத ஒழுக்கசீலன் என்று சொல்லவரவில்லை. பிளாஸ்டிக் உபயோகம், திருட்டு டி.வி.டி.யைத் தவிர மற்றவை என் லிஸ்டில் இல்லை. ஒருவேளை அதுவும் நாளை வரக்கூடுமோ என்கிற பயமும் இருக்கிறது. காரணம் திருட்டு டி.வி.டியையும் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தேன். இப்போது மாறிவிட்டேன்:-(
என் முதலாளி நாங்களிருக்கும் பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு, அவ்விஷயங்களில் ஆர்வமான ஒரு பொதுவான NGO வை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் இருவரும் கிராம பஞ்சாயத்து ப்ரசிடெண்ட்டைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதாய் சொன்னாலும்கூட அதை உபயோகிக்க அந்த கிராம மக்கள் ‘பழகவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியாய் இருந்தது. அப்போதுதான் என்னோடு வந்த நண்பர் சொன்னார்... தமிழகத்தில் கழிப்பறை உபயோகிப்பவர்கள் சதவீதம் வெறும் 35-40%தானாம்! சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம்! கேவலமாக இருந்தது அவர் சொன்னதைக் கேட்டு!
அதேபோல அந்தப் பஞ்சாயத்தில் 32 கிராமங்கள். 32 கிராமங்களுக்கு ஐந்து குப்பை வண்டியாம். எல்லா குப்பைகளையும் எடுத்துவந்து அதற்கான குப்பைக் கிடங்கில் கொட்ட அரசாங்கம் நியமித்துள்ள நபர் - (நம்புங்கள்) ஒரே ஒருவர்தான்!
‘மக்கள் ஒழுங்காக குறிப்பிட்டிருக்கும் இடங்களில் குப்பை கொட்டினால் அவருக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா அப்படிப் பண்றதில்லையே சார்’ என்று ஆதங்கப்பட்டார் அவர்!
பலப் பொழுதும் இந்த தனிமனித ஒழுக்கத்தால் நானும், நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மாறியிருக்கிறோமா? பஸ்ஸில் நாம் இறங்கும்போது முண்டியடித்து ஏறும் கூட்டத்தைப் பார்த்து திட்டிவிட்டு, அடுத்த பஸ்சுக்குள் நாமும் அதே பாணியில் இறங்குபவர்களை முட்டித்தள்ளி, முண்டியடித்து ஏறாமலா இருக்கிறோம்?
எனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.
இது நிச்சயம்!
கண்டிப்பா... ஏதாவது செய்வோம் பாஸ்!