ஒருத்தரிடம் காசே இல்லையென்றாலும் அவரால் ஒன்றை வாங்கமுடியும். அது கடன்தான்! கடன் குடுப்பதோ, வாங்குவதோ தவறில்லை. ஆனால் ஒப்புக்கொண்ட தேதியில் கடனை திருப்பிக் கொடுப்பதும், அப்படி சொன்ன தேதியில் திருப்பிக் கொடுப்பவருக்கு கடன் கொடுப்பதும் முக்கியம்!
நேற்று என் ஆஃபீஸ் பாய் ஒருத்தன் “சார்.. ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்க” என்றான். அவன் ஏற்கனவே எனக்கு நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. அது இரண்டு மாசங்களுக்கு முன். இரண்டு மாசத்தில் நான் கேட்காததால் மறந்துவிட்டேன் என்று நினைத்தானோ என்னமோ. ஆனால் நான் அதை சொல்லி “ஏற்கனவே வாங்கினதைக் குடுக்கல இல்லியா? அதனால இப்ப தரமாட்டேன்” என்று பயமுறுத்திவிட்டு, மனசு கேட்காமல் ”வேறொருத்தன் எனக்கு தரணும் அவன் தந்தால் தர்றேன்” என்று சொல்லி கொடுத்தும் விட்டேன். “கண்டிப்பா 200 ரூபாயும் திருப்பிக் குடுத்துடுவேன்” என்றிருக்கிறான். பார்க்கலாம்!
நான் மிக உயரிய பதவியிலிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நல்ல பதவிதான். என் போன்றவர்களுக்கு சங்கடமான விஷயம் கீழே பணிபுரிபவர்கள் இது போன்ற சின்ன சின்ன கடன் கேட்பதும், அதை மறந்துவிடுவதும்தான்! (குடுத்தவங்க இல்ல. வாங்கினவங்க மறந்துடறாங்க!)
அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்!
இப்போதெல்லாம் பிச்சைகாரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை!
இப்படித்தான் பேனா மூடியோடு கொடுத்தால் திரும்பி வராது என்று மூடியை கழட்டி விட்டுத்தான் கொடுப்பானாம் ஒருத்தன். “இப்பெல்லாம் பேனா திரும்பி வந்துடுதா?” என்று கேட்டால் ”எங்க? வீடு பூரா மூடியா இருக்கு” என்றானாம்!
இதை எழுதும்போதுதான் உட்கார்ந்து யோசித்தேன். அப்படி இப்படி என்று ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது! என்ன கொடுமை இது!
நான் எப்போதோ கல்கிக்கு ஒரு பொன்மொழி எழுதி அனுப்பினேன்.
“உங்கள் நண்பன் உண்மையானவனா என்று சோதிக்க வேண்டுமா? அவனிடம் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பனுக்கு உண்மையானவனாக இருக்க வேண்டுமா? கடன் கொடுக்காதீர்கள்!”
கடன் கொடுப்பதில் இல்லை என்று சொல்லும் கலை ரொம்ப முக்கியம்! அதில் வடக்கத்தியர்கள் கை தேர்ந்தவர்கள். உடனே கொடுக்க மாட்டார்கள். நாளைக்கு, நாளைக்கு என்று இழுத்தடிப்பார்கள். அந்த இடைவெளியில் நிஜமான காரணமா, திருப்பிக் கொடுப்பதில் தேர்ந்தவனா என்றெல்லாம் எடை போட்டு விடுவார்கள்! கொடுக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான். என்ன கொஞ்சிக் கூத்தாடினாலும் பைசா கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாது!
கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பதிலும் சரி, வாங்கினதை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பதிலும் சரி நம்மவர்கள் திறமைசாலிகள்!
நான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, தளிரோட்டில், முனிசிபல் காம்ப்ளக்ஸில் எங்கள் ஸ்கூலருகே `க்ரவுன் காபி பார்’ என்றொரு பேக்கரி இருந்தது. கடைக்காரருடன் நல்ல நட்பு. நாங்கள் அருகிலுள்ள கேரம் க்ளப்பில் விளையாடுவதும், இவர் கடையில் அரட்டையடிப்பதுமாக ரொம்பவும் பிஸியாக இருந்த காலம் அது. கடையின் விலைப்பட்டியலை ஒரு சார்ட் பேப்பரில் எழுதித் தரச் சொன்னார். (என் கையெழுத்து அப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கும்!) எழுதிக் கொடுத்தேன். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்றும் எழுதச் சொன்னார். நாமதான் அடுத்தவன் சொல்றத கேட்கவே மாட்டோமே? ‘அது வேண்டாம்ண்ணே’ என்று சொல்லி, வித்தியாசமாக இருக்கணும் என்று ‘ஊசி நுழைந்து பிரிக்க முடியாத நட்பையும், காசு நுழைந்து பிரித்துவிடும்’ என்று எழுதிக் கொடுத்தேன்.
பிறகு 1992ல் திருப்பூரில் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த போது ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த க்ரவுன் காபி பார் ஓனரிடமிருந்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வந்தது. அவர் கடையில் என் அக்கவுண்டில் 192 ரூபாய் இருந்தது. (ரொம்ப முக்கியமான கேள்வி: பேங்க்ல அக்கவுண்ட்ல இருக்குன்னா, அது நம்ம பணம்! டீக்கடைல அக்கவுண்ட்ல இருக்குன்னா அது கடன்! ஏன் இப்படி?) அதைக் குறிப்பிட்டும், நீ எங்க இருந்து டீ சொன்னாலும் அனுப்பிக் கொடுத்தேனே’ என்றெல்லாம் வருத்தப்பட்டு எப்ப தருவ?’ என்று கேட்டிருந்த அந்த லெட்டரை அவர் நான் எழுதிய பொன்மொழியையே எழுதி முடித்திருந்தார்! நான் தூங்காத இரவில் அந்த இரவும் ஒன்று!
என் தந்தை பணிபுரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் அவரது முதலாளி (சேட்) தனது மேசைமேல் வைத்திருந்த ஒரு குறிப்பு:-
YOU ASK ME CREDIT
I GIVE NO MONEY
YOU GET MAD.
I GIVE CREDIT.
YOU DIDN’T PAY.
I GET MAD.
BETTER
YOU GET MAD.
39 comments:
Me the first!!!
இனிமேல் தான் பொறுமையா பதிவை படிக்கனும்
இது விழிப்புணர்வு வகைப் பதிவா?
கடன் கேட்பதும் சரி தேவை இல்லை, கொடுப்பதும் தேவை இல்லை.
வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
தரமான பதிவு!
மெசேஜ் ரிசீவ்டு....
பதிவுல இருக்குற பொன்மொழிகள் கலக்கல்!!!!
//கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. //
50 பைசா புளிப்பு முட்டாய் கூட கொடுப்பது இல்லையா ?
கடைக்காரர் எவரும், ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதில்லை என்று எழுதினால் நன்றாக இருக்கும் !
காசை ஏமாத்துறவனுக்கு என்ன மரியாதை என்கிறீர்களா ?
:)
/
இதை எழுதும்போதுதான் உட்கார்ந்து யோசித்தேன். அப்படி இப்படி என்று ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது!
/
இப்பிடி எல்லாம் இருக்க கூடாது மங்களூருக்கு 2550 மணியார்டர் அனுப்பி அதை 5000 என ரவுண்ட் ஆக்கவும்.
/
YOU ASK ME CREDIT
I GIVE NO MONEY
YOU GET MAD.
I GIVE CREDIT.
YOU DIDN’T PAY.
I GET MAD.
BETTER
YOU GET MAD.
/
இதுதான் டாப்பு
:)
நமக்கெல்லாம் கடன் வாங்கித் தான் பழக்கம். குடுக்கிறதில்ல (இருந்தாத் தான குடுக்குறதுக்கு):)
// ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது! என்ன கொடுமை இது!//
என்ர கடனையும் சேத்திட்டீங்களா?
தெரியாத்தனமா வாங்கிட்டேன்.
கடனைக் குடுறானு போன்ல சொல்லியிருக்கலாம். இல்லைன்னா நேர்ல வந்து மிரட்டியிருக்கலாம்.
இப்படி பகிங்கர பதிவு போடுவது எந்த வகையில் நியாயம்? (ஆமா! உங்கள பதிவே போடக்கூடாதுனு சொன்னோம்ல? எப்டி சொன்னாலும் அடங்க மாட்டீங்களா?)
Crown Coffee Bar ஓனரைப் போல் நீங்கள் என்னிடம் கேட்பதற்குள் சம்பளம் வாங்கி கடனை குடுத்துடறேன். ;)
எச்சு கிச்சு மீ..
எனக்கு ஒரு 1000 ரூபாய் கடன் கிடைக்குமா?
பல முறை கடன் பெற்று திருப்பி கொடுக்காத நண்பன் இன்று திரும்பவும் கேட்டான். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டு மன குழப்பத்தில் இருந்தேன். உங்கள் பதிவு ஒரு தெளிவை கொடுத்தது... மிக்க நன்றி... :-)
ரொம்ப நெருங்கிய தோழி கஷ்ட நிலைமையில் இருப்பதாக சொல்லி ..பிள்ளைக்கு பீஸ் கட்டனும் புக் வாங்கனும்ன்னும் 5000 தாடீன்னு கேட்டா... என்கிட்ட ஏது?நான் ஊருக்கு வந்தால் என் செலவுக்குன்னு இருந்ததில் 2000 குடுத்தேன்.. இனி வாழ்நாள் முழுதுக்குமான ஒரே கடன் திரும்ப வராது என்று நினைக்கிறேன்.. மீண்டும் அவள் கேட்கவும் மாட்டாள் என நினைக்கிறேன்...அனுப்பவதாய் இருந்தால் என்றைக்கோ அனுப்பி இருப்பாள்..அவளைப்பார்க்கும் போது அதைப்பற்றி அவளே நினைவுப்படுத்த முடியாதபடி நானே வேகவேகமாக பேசிவிட்டு ஓடிவந்துவிடுவேன்.. என்ன செய்ய?
உங்க கிட்ட கடன் வாங்க நிறையபேரு இங்க க்யூவில் நிற்கறாங்களாமே? ஒரு லட்சம் கிடைக்குமா எனக்கு? பெரிய பதவில இருக்கீங்க ஒரு லட்சமெல்லாம் ஒரு காசா.. :) என்ன பரிசல் அண்ணா? அந்த பழமொழியப்படிக்க சொல்றீங்களா..
மன்னிக்கனும் அது பழ மொழி இல்லை யே உங்க பொன்மொழியாச்சே! :)
திருப்பி கேட்க எந்த அளவு உரிமை இருக்குன்னு நினைக்கறேனோ அந்த அளவு தான் கடன் கொடுப்பதற்கும் என்று வைத்துள்ளேன். நீங்க குறுப்பிட்ட மாதிரி நம்மளை விட சில மடங்கு வசதி குறைவானவர்களுக்கு, எந்த அளவிற்கு குடுத்தால் திருப்பி கேட்க வேண்டாமோ அந்த அளவிற்கு மட்டும் தான் கொடுப்பது. முடிஞ்சா கொடுக்கும் போதே, 'நான் திருப்பி கேக்க மாட்டேன், நீயும் திரும்பவும் கேட்காதேன்னு' சொல்லிடலாம்.
கரெக்டா சொன்னீங்க பரிசல். ஒருமுறை என்னுடன் பணியாற்றிய ஒருவருக்கு 30,000 ரூபாய் கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. ஒரு வருடம் ஆகின்றது இன்னும் அதிலிருந்து 1,500 ரூபாய் வரவேண்டும். இப்போதெல்லாம் "கடன் இல்லை" என்று சொல்ல அஞ்சுவதில்லை.
நம்ம கத வேற மாதிரி... ஒருத்தரு நம்ம கூட பேசும்போதெல்லாம் "உனக்கு இவ்வளவு நான் தரணுமில்ல.... கொஞ்ச கொஞ்சமா சீக்கிரமே குடுத்து முடிச்சுடறேன்" அப்பிடின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு... ஆனா ஒரு பைசா திரும்ப வந்ததில்லை.
இப்போல்லாம் இல்லன்னு பட்னு சொல்லிர்ரது... கஷ்டந்தான்...
கமல் ஓரு படத்துல கசாப்பு கடைக்காரராக இருப்பார். அங்கு கடன் எலும்பை முறிக்கும் என்று எழுதி இருப்பார். :))
கயல்விழி சொன்ன மாதிரி வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் நிம்மதியாப் போகும்.
இரண்டையும் தவிர்த்தல் நல்லது..
*****கயல்விழி சொன்ன மாதிரி வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் நிம்மதியாப் போகும்.*******
புதுகை சார்,
கார் லோன், ஹோம் லோன் எல்லாத்தையும் சேத்துதான் கயல்விழி சொன்னாங்களா ? இல்லாட்டி பர்சனல் லோன் மட்டும் சொன்னாங்களா.
(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )
(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )
:)))
மெசேஜ் ரிசீவ்டு....
பதிவுல இருக்குற பொன்மொழிகள் கலக்கல்!!!!
நீங்க கந்து வட்டி பிஸினஸ் எல்லாம் பண்றீங்களா..?
சொல்லவே இல்ல...
பரிசலண்ணே.... உங்களோட இந்த பதிவுக்கு நான் ஒரு sequel போட்டாச்சு. அது எப்பிடிண்ணே கரெக்டா கொக்கி போடறீங்க?
நான் பணம் கொடுக்கிறவரு.
//YOU ASK ME CREDIT
I GIVE NO MONEY
YOU GET MAD.
I GIVE CREDIT.
YOU DIDN’T PAY.
I GET MAD.
BETTER
YOU GET MAD. //
இது போல நான் ஒரு கடையில் படித்து ரசித்த ஒரு வாசகம்
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாடா
நான் இங்கு திண்டாட...
தேவையா எனக்கு, இனிமே கடன் கொடுக்கமாட்டேன் சார்...
நான் வாழ்க்கையில பயப்படுறது ரெண்டு பேருக்குத்தான்,
1) என் அண்ணண் ஜோசப் செல்வன்
2) திருவாளர்.கடன்.
கடன் வாங்கித்தான் ஒரு விசயத்த செய்யணும்ண அதச் செய்யாமலேயே இருக்கலாம்கிறதுதான் என்னோட கொள்கை. எனக்கும் வராக் கடன்கள் நிறைய இருக்கு. முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல. யாராவது அவருகிட்ட சொல்லி உடனே குடுக்க சொல்லுங்க. வசூலித்து தருபவர்களுக்கு 10% தரப்படும்.
பரிசல்,
ஒரு லட்ச ரூபாய் அவசரக் கடனாகக் கொடுங்க.
நம்ம jkr முதல்வரானதும் திருப்பித்தருகிறேன்.
(நீங்கதான் இப்ப கொ ப செ, அது ஞாபகமிருக்கட்டும்)
//ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை!
//
Bus conductor-ra vittuteengale....
//கார் லோன், ஹோம் லோன் எல்லாத்தையும் சேத்துதான் கயல்விழி சொன்னாங்களா ? இல்லாட்டி பர்சனல் லோன் மட்டும் சொன்னாங்களா.
(பர்சனல் லோன் - நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நாமே கொடுப்பது )
//
ரொம்ப அவசியமான ஹோம் லோன், கார் லோன், கல்வி கடன் எல்லாம் இல்லாமல் இருப்பது கடினம்(மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் மிடில் க்ளாஸ் பற்றி சொல்கிறேன்). வீட்டு கடன், கல்வி கடனுக்கு எல்லாம் இண்ட்ரெஸ்ட் ரேட் குறைவு, வரி செலுத்தும் நேரத்திலும் சலுகைகள் கிடைக்கும். கார், தேவையான அளவுக்கு வாங்கினால் பரவாயில்லை.
நான் முக்கியமாக குறிப்பிடுவது, க்ரெடிட் கார்ட் லோன், பர்சனல் லோன் போன்ற ஆபத்தான கடன்கள். உடனே செலுத்த முடியாவிட்டால், க்ரெடிட் கார்ட் உபயோகிப்பதை உடனே நிறுத்துவது நல்லது. பர்சனல் லோன்களால் தேவை இல்லாத சங்கடங்கள்.
@ கயல்
முதல் வருகைக்கு நன்றி!
//வருமானத்துக்கு ஏற்றப்படி கணக்கிட்டு வாழ பழகிக்கொண்டால் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.//
கடன் இப்பெல்லாம் பேச்சில்ல. வீச்சுதான்!
@ முரளிகண்ணன்
அப்படீன்னும் வெச்சுக்கலாம்!
@ விஜய் ஆனந்த்
நன்றி!
@ கோவி.கண்ணன்
//கடைக்காரர் எவரும், ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதில்லை என்று எழுதினால் நன்றாக இருக்கும்//
கடை அவர்களது. நாம் கஸ்டமர்கள். நம்மிடம் சில்லறை எதிர்பார்ப்பதே சில்லறைத்தனம். இல்லையென்றால் நமக்கு 50 காசை விட்டுக்கொடுப்பதுதான் வியாபார நேர்மை. (திருப்பூர் ஆனந்தா ஸ்டோர் அப்படித்தான் செய்வார்கள்) அதை விடுத்து தரவே தராமல் விடுபவர்களுக்கு என்ன மரியாதை?
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க..
@ மங்களூர் சிவா
//இப்பிடி எல்லாம் இருக்க கூடாது மங்களூருக்கு 2550 மணியார்டர் அனுப்பி அதை 5000 என ரவுண்ட் ஆக்கவும்.//
அட்ரஸை மெயிலவும்.
@ வெயிலான்
யோவ்.. வாயில நல்லா வருது.
உன்ர கடனை எவன்யா சொன்னான். அது அன்புக்கடன். அதை நானோ நீயோ அடைக்க முடியுமா? அப்பிடிப்பாத்தா அன்னைக்கு காருல கூட்டீட்டுப் போனதுக்கு நாந்தான் ஒனக்கு பாக்கி தரணும். எவ்ளோன்னு சொல்லு..
@ ஜெகதீசன்
ஓ! கெடைக்குமே.. உங்கட பாஸ்போர்ட்டை அடமானம் தர்றீயளா?
@ சரவணகுமரன்
//உங்கள் பதிவு ஒரு தெளிவை கொடுத்தது... மிக்க நன்றி... :-)//
என்ன பண்ணினீங்க. குடுத்தீங்களா.. இல்லையா? என் பதிவு இந்தமாதிரி வேலையெல்லாம் பண்ணுதா?
@ முத்து தங்கச்சி
பரவால்லம்மா. அஞ்சுக்கு மூணு தப்பிச்சதே! என்னாங்கறீங்க?
@ சுந்தர்
//முடிஞ்சா கொடுக்கும் போதே, 'நான் திருப்பி கேக்க மாட்டேன், நீயும் திரும்பவும் கேட்காதேன்னு' சொல்லிடலாம்.//
அதுசரி! குடுத்துட்டு திருப்பிக் கேட்க மாட்டோம்ன்னா க்யூவுல நின்னுல்ல வாங்கீட்டு போவாய்ங்க!
@ வெண்பூ
இதே மாதிரி 50000 கொடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் என் சக அலுவலர் ஒருத்தர்! அவர் கொடுமையைத்தான் எழுதலாம் என்றிருந்தேன். `வேண்டாம் கிருஷ்ணா' என்றதால் எழுதவில்லை!
@ மகேஷ்
//ஒருத்தரு நம்ம கூட பேசும்போதெல்லாம் "உனக்கு இவ்வளவு நான் தரணுமில்ல.... கொஞ்ச கொஞ்சமா சீக்கிரமே குடுத்து முடிச்சுடறேன்" அப்பிடின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு..//
அவரு முந்திக்கறாரு! (மகேஷ் உங்க பேரை தமிழ்ல மாத்திடுங்களேன்....)
@ புதுகை அப்துல்லா
நான் உங்களுக்கு அஞ்சப்பர் பேலன்ஸ் எவ்ளோ தரணும்???
@ thooya
சரிங்க! சரிதாங்க...
@ அவனும் அவளும்
கயலே வந்து பதில் சொல்லீட்டாங்க..
@ ச்சின்னப்பையன்
மெசேஜா? நானா? ஏன் இப்டி?
@ ஈர வெங்காயம்
உங்ககிட்ட வட்டிக்கு வாங்கிதானே பண்றேன்?? தெரியாத மாதிரி கேக்கறீங்களே?
@ குடுகுடுப்பை
எப்ப வந்து வாங்கிக்கட்டும்?
@ ஜோசப் பால்ராஜ்
//முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல.//
நேர்ல வாங்க. கவனிக்கறேன்..
@ வேலன்
தந்துட்டாப் - போச்சு!
@ ராஜா
ஆமாமா..
மங்களூர் சிவா
நம் 2 , விவேகாநந்தர் தெரு
மங்களூர் குறுக்கு சந்து
மங்களூர் பஸ் நிலையம் அருகில்
மங்களூர்
என்னது அட்ரஸ திருப்பி சொல்லணுமா?
மங்களூர்
மங்களூர் பஸ் நிலையம் அருகில்
மங்களூர் குறுக்கு சந்து
நம் 2 , விவேகாநந்தர் தெரு
மங்களூர் சிவா
@ மங்களூர் சிவா
அந்த அடரஸுக்கே அனுப்பறேன்...
கலெக்ட் பண்ணிக்கோங்க...
கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் லிஸ்ட் இருந்தால் அதில் என் பெயர் முதலில் இருக்கும்.பல ஆயிரங்களை இழந்திருக்கிறேன்.வாங்கினவர்கள் எல்லாரும் தலை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார்கள்.நான்தான் ஏதோ கடன் வாங்கின மாதிரி தலை திருப்பிக்கொண்டு போகிறேன். நேற்று கூட ஒருவனை பார்க்க சென்றிருந்தேன்.
40000 தர வேண்டும் இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கிறான்.
நான் பர்சனல் லோன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
//@ ஜோசப் பால்ராஜ்
//முக்கியமா திருப்பூர்ல பரிசல்காருன்னு ஒருத்தர் 5000 டாலர் வாங்குனாரு, இன்னும் கொடுக்கல.//
நேர்ல வாங்க. கவனிக்கறேன்..//
பாருங்க மக்களே, குடுத்த கடன திரும்ப கேட்ட கவனிச்சுக்கிறேன்னு சொல்லி மிரட்டுறாரு. எனக்கு பயமா இருக்கு
கம்பராமயணத்துல ராவணண் கலங்குறத " கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" அப்டின்னு எழுதியிருப்பாரு.
அதே கம்பர் இங்க கடன் குடுத்த என்னைய, கடன் வாங்குன பரிசல்கார் மிரட்டுறத பார்த்தா " கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கினான் " அப்டின்னு மாத்தி எழுதிடுவாரு..
// உன்ர கடனை எவன்யா சொன்னான். அது அன்புக்கடன். அதை நானோ நீயோ அடைக்க முடியுமா? அப்பிடிப்பாத்தா அன்னைக்கு காருல கூட்டீட்டுப் போனதுக்கு நாந்தான் ஒனக்கு பாக்கி தரணும். எவ்ளோன்னு சொல்லு.. //
யோவ் பரிசலு,
;) - நான் எல்லாம் எழுதிட்டு இது மாதிரி ஒன்னு போட்டிருக்கேனே. அர்த்தம் தெரியுமா?
தெரியலைன்னா மேகாட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.
பரிசல்!
பதிவுக்கு சிறிதே தொடர்புள்ள ஒரு விஷயம் இதோ:
"கடன்பட்டார்..." பாடினது கம்பரில்லையாம்! அருணாச்சல கவிராயராம்(திரிகூட இராசப்ப கவிராயருடன் இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்னு நான் சொன்னா நீங்க கேக்கவா போறீங்க?!)
ஆதாரம்:
http://groups.google.com.do/group/panbudan/msg/cf78fc7cf3bc58eb
http://jeevagv.blogspot.com/2008/08/blog-post_2521.html
அன்புடன்
வெங்கட்ரமணன்!
"அதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்!"
100 க்கு 100 உண்மை!! நான் CREDIT CARD கூட உபயோகப்படுத்துறது இல்லை, ஆனால் எனக்கு வரவேண்டிய கடன் 10000 ருபாய் தாண்டும்.. கடன் வாங்கிய பலரும் என் கீழ்நிலையில் பணிபுரியும் சகஊழியர்கள்.. அவர்கள் திருப்பி தராததன் ஒரே காரணமாய் அவர்கள் கருதுவது என் உயர்நிலை வேலை.. "இவருக்கு என்ன ??"
“இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்??) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” -
ஆயிரம் ரெண்டாயிரம் ன்னாலும் அப்படிதான் ... ரொம்ப ரொம்ப சரிங்க..
Post a Comment