Monday, September 29, 2008

எனக்கு UNEASYயாக இருக்கிறது!



எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு “இன்னும் உன் ட்ரெஸ்ஸைத் தைக்கலையாம். வா. போய் வாங்கீட்டு வரலாம்” என்று அப்பா அழைப்பார். உடுமலைப்பேட்டை லைப்ரரிக்கு எதிரே ஒரு செட்டியார் மசால் பொரிக்கடை இருக்கும். (இப்போதும் இருக்கிறது.) அதற்கு அருகில் இந்த பாய் டெய்லர்கடை. இரவு பத்து மணிக்குப் போனால், நள்ளிரவு ஒரு மணிவரை உட்கார வைத்து தைத்துக் கொடுப்பார். (சட்டை, டவுசர்தான்!)

இன்று அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை!

அப்போதெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே உடைகள் எடுத்து, தைக்கக் கொடுத்து விடுவோம். இதோ இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது. இன்னும் ட்ரெஸ் எடுக்கவில்லை. ‘என்ன ரெடிமேட்தானே. முந்தின நாள் கூட எடுத்துக்கலாம்’ என்கிற எண்ணம்தான்!

நான் உடுமலையில் இருக்கும்போது VIP டெய்லர்ஸ் ஆனந்த் என்பவர் பேண்ட் தைப்பதில் கில்லாடி. ஆளைப் பார்த்தே, அளவெடுக்காமலே கச்சிதமாகத் தைப்பார் என்ற பெயர் அவருக்குண்டு. பிறர் தைத்தால் THIGH பகுதியில், ஒரு மாதிரி பிடித்த நிலையில் UNEASY-யாக இருப்பதை, இவரிடம் தைக்கும்போது உணரமுடியாது. அதேபோல பேண்ட்டுக்கு ஃப்ளீட் வைப்பதிலும் இவர் கிங்! ஆனால் பின்னாளில் குடியினால் கெட்ட பேர் சம்பாதித்துக் கொண்டார்.

அதற்குப் பிறகு உடுமலையில் டெய்லர்களில் பெயர் வாங்கியவர் கிராண்டி டெய்லர்ஸ். இன்றைக்கும் உள்ளது என நினைக்கிறேன். இவருக்கு வாய் பேச வராது. ஒரு முறை இவருக்கு விளம்பர பேனர் வைக்கும்போது ‘கிராண்டி டெய்லர்ஸ் – தொழில் மட்டுமே பேசும்’ என்று வைத்தோம்! படு பயங்கர திறமை சாலி!

என் நண்பன் மயில்சாமியும் பெஸ்ட் டெய்லர்ஸ் என்ற பெயரில் டெய்லர்கடை வைத்திருந்தார். தீபாவளிக்கு ரெண்டு, மூணுவாரம் முன்னமே புக்கிங் க்ளோஸ் ஆகிவிடும். தீபாவளிக்கு முன் இரண்டு நாட்கள் கடையில் ரெடியானவற்றை அடுக்கிவைத்துக் கொண்டு, நாங்கள் வரும் வாடிக்கையாளர்களுக்கெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருபோம். அதற்கே நேரம் பத்தாது!

இப்போது எல்லாமே ரெடிமேட் தான். அவசர உலகமாகிவிட்டது! ரெடி மிக்ஸ், ரெடிமேடு மாவு, ரெடிமேடு புரோட்டா (விக்கிதுங்க!), ரெடிமேடு பதிவு (அதான் எதிர்வினைப் பதிவு. எடுத்தமா, கட்-எடிட் பண்ணினமா... ரெடி!)

ஆனால் இந்த ரெடிமேடு ட்ரெஸ் நமக்கு நச் சென்று பொருந்தினாலும் பழைய டெய்லர்கடை நினைவுகள் நம்மைத் தொடரத்தான் செய்கிறது!

ரெடிமேடு ட்ரெஸ் எடுப்பது என்பது அந்தஸ்தின் அடையாளமாகத்தான் முன்பெல்லாம் கருதப்பட்டது. யாராவது ரெடிமேடு ட்ரெஸ் எடுத்தால், அவனைப் பார்த்தால் ‘பெரிய பணக்காரண்டா’ என்பது போலப் பார்ப்போம்! இப்போது 150 ரூபாய்க்கெல்லாம் ரெடிமேட் ட்ரெஸ் கிடைக்கிறது.

எங்கள் ஊரில் ரெடிமேட் ட்ரெஸ் அதிபயங்கரப் பாய்ச்சலில் முன்னேறியது தளி ரோட்டில் எஸ்.குமார்ஸ் ஷர்ட்ஸ் என்ற கடை வந்தபோதுதான். ‘90 ரூபாய்க்கு நல்ல சட்டைடா’ என்று போய் வாங்கி வந்தார்கள். கடை முதலாளி வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் முதல் இரண்டு நாட்கள் இரவு 7 மணிக்கெல்லாம் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார். பிறகு நிறைய சரக்கை (சட்டைங்க!) வாங்கிவந்து கடையை நிரப்பி, நல்ல வியாபாரம் பார்த்தார்.

இப்போதும் எங்கள் நிறுவனத்தில் தீபாவளிக்கு எல்லா ஸ்டாஃப்-க்கும் ஒரு செட் ட்ரெஸ் மெட்டீரியல்ஸ் கொடுக்கிறார்கள். ஒரு போதும் நான் அதைத் தைத்துக் கொண்டதில்லை. என் தம்பிக்கு கொடுத்துவிடுவேன். தைப்பதில் திருப்பூரில் சில சங்கடங்கள். இருக்கும் ஒன்றிரண்டு டெய்லர் கடைக்காரர்களும் எனக்கு நண்பர்கள். யாரிடம் கொடுத்தாலும் இன்னொருவரின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். அதுவுமிலாமல் ரெடிமேட் நன்றாக செட் ஆகிவிட்டது!

ஆனால் இப்போதும் பெரும்பாலான பெண்கள் சுடிதார் மெட்டீரியல் எடுத்து தைத்துத்தான் போடுகிறார்கள். எனக்குத் தெரிந்து திருப்பூரில் ஒரு லேடீஸ் டெய்லர் கடையில் எப்போதும் கூட்டம்தான். வருடத்தின் எந்த நாளில் போய் ஆர்டர் கொடுத்தாலும் ‘ரெண்டு வாரத்துக்கு பிஸி. அப்புறம்தான் கிடைக்கும்’ என்பார். தரையில் ஆளுரயத்துக்கு துணிகளை அடுக்கி வைத்திருப்பார்! குடுத்து வெச்ச மனுஷன்!

பழைய படங்களில் எல்லாம் டெய்லர் கடையில் காஜா எடுக்கும் கேரக்டர் ஒன்று இருக்கும். (நடிகர் ஹாஜா ஷெரீப்-பின் பெயர் ஹாஜா ஷெரீப்பா, இல்ல காஜா எடுக்கற கேரக்டர்ல ஒரு படத்துல நடிச்சதால காஜா ஷெரீப்பா என்றொரு சந்தேகம் எனக்கு இருந்தது!) இப்போது டெய்லர் கேரக்டரே படத்தில் வருவதில்லை! இங்கே திருப்பூரில் காஜா எடுக்கும் மிஷினில் ஒரு நிமிடத்தில் 150-200 காஜா எடுத்துவிடலாம்! சின்ன வயதில் ‘நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா. இன்னும் காஜா எடுக்கலை’ என்று சொல்லப்பட்டிருக்கிறேன்!

எப்போதோ ஒருமுறை துணி எடுத்து தைக்கக் கொடுத்துப் போட்டுக் கொண்டாலும், எனக்கு UNEASY யாகத்தான் இருக்கிறது. (தலைப்பு வந்துடுச்சாப்பா?) ரெடிமேட் ட்ரெஸ்ஸில் இருக்கும் COMFORTABLE இதில் இல்லை. ஆகவே இப்போதெல்லாம் ரெடிமேடு ட்ரெஸ் மட்டுமே எடுக்கிறேன்!







ஒரு கொசுறுச் செய்தி: மேலே இருக்கும் பெடல் மிஷின்தான் டெய்லர்கள் வைத்திருப்பார்கள். SINGLE NEEDLE MACHINE என்றழைக்கப்படும் இது SINGER என்ற கம்பெனியுடைய தயாரிப்பு. இந்த மிஷின் இப்போது மோட்டார் வைக்கப்பட்டு இதே சிங்கர் நிறுவனத்தால் POWER MACHINE ஆக வந்து கொண்டிருக்கிறது. வேறு நிறுவனத் தயாரிப்பும் இருக்கிறது என்றாலும், இன்றளவும் LOCK STITCH MACHINE என்றழைக்காமல் சிங்கர் மிஷின் என்றுதான் அழைக்கிறார்கள்! அதேபோல இந்த இயந்திரத்தை இயக்கத் தெரிந்தவர்கள் சிங்கர் டெய்லர்கள்தான்! (ஜெராக்ஸ் மிஷின் போல!)

பி.கு: லக்கி தப்பா நெனைக்கமாட்டாருன்னு இந்தத் தலைப்பை வெச்சுட்டேன்! ஒரு சாதாரண வார்த்தை ஒரு பிரபலத்தால் சொல்லப்பட்டால் எவ்வளவு புகழ் பெற்றுவிடுகிறது என்பதற்கு இந்த UNEASY ஒரு உதாரணம். ஹாட்ஸ் ஆஃப் லக்கிஜி!

ஸ்பெஷல் அவியல் - 29.09.08



(கனலி, பரிசல்காரன், செந்தில்வேல்)


என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்வால்பையன், வெயிலான், அப்துல்லா, அதிஷா ஆகியோருக்கு அறிமுகமான என் நண்பர் செந்தில்வேல் மேல்படிப்பு மற்றும் வேலை விஷயமாக லண்டன் (மான்செஸ்டர்) செல்கிறார். இன்று மதியம் 3 மணிக்கு கோவையிலிருந்து விமானம் மூலம் செல்கிறார். (சென்னை வந்திருந்தபோது என்னோடு இருந்தாரே.. அவர்!)

இதை வலையுலக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளச் சொன்னார். அங்கே போய் அவரும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது. எதுக்கும் ஜாக்கிரதை!

அங்கே யாராவது ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்கீங்களா? இருந்தா ஒரு மெயிலைத் தட்டுங்களேன். ஒரு கோல்டன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு நான் கியாரண்டி!

நண்பா.. ஆல் தி பெஸ்ட்ப்பா!

***********************************************

இங்கே செந்தில் இருக்கும்போது மாதத்துக்கு ஒருமுறைகூட பார்த்துக் கொள்வதில்லை. ஃபோன் மட்டும்தான், ஆனால் இப்போது ஒன்று, ஒன்றரை வருடங்கள் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது என்னமோ செய்கிறது.

************************

நான் வாரா வாரம் அவியல் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது கொஞ்ச நாட்களாக எழுதுவதில்லை. லட்சக்கணக்கான மெயில்கள் அனுப்பியும், நேரில் மிரட்டியும் ‘ஏண்டா எழுதறதில்ல’ என்று கேட்பார்கள் என்று நினைத்தால் ஒருத்தரும் கேட்கவே இல்லை! எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன் என்று தெரிகிறது. இருங்க.. இருங்க உங்களை வேற வழீல வெச்சுக்கறேன்!

*********************************

இன்னைக்கு காலைல இங்கே திருப்பூர்ல அங்கங்க சாலை மறியல்கள். தண்ணிப் பிரச்சினை. தண்ணி சரியா வர்றதில்ல, அப்படியே வந்தாலும் தண்ணி வர்ற நேரத்துல மின்சாரம் இல்லைங்கற ப்ரச்சினை. மின்சாரம் இல்லாத நேரத்துல, தண்ணி வந்து மோட்டார் போட்டு தண்ணி ஏற்ற முடியாததால சம்சாரம் திட்டற ப்ரச்சினை. இப்படி என்னென்னவோ சொன்னாங்க.

நான் அப்படி இப்படி புகுந்து ஆஃபீஸ் வர ட்ரை பண்ணிகிட்டிருக்கறப்ப ஒரு ஆளு என் பைக்கை குறுக்காட்டி, ‘சார்... என்ன ப்ராப்ளம் சார்?’ ன்னு கேட்டார். எனக்கிருந்த கடுப்புல “டாஸ்மாக்ல பீர் ஸ்டாக் இல்லைன்னு ரகளை பண்றாங்க சார்”ன்னு சொல்லீட்டு போய்ட்டேன்.

அரை மணிநேரத்துக்கப்பறம் ஆஃபீஸ் வந்தப்ப ஒரு ஸ்டாப் என்கிட்ட வந்து “கிருஷ்ணா, மேட்டர் தெரியுமா? டாஸ்மாக்ல பீர் இல்லைன்னு சாலை மறியலாம்” -ன்னாரு. இன்னொருத்தரு “ஆமாமா, அப்படியே குடுத்தாலும் கூலிங் பீர் தர்றதில்லயாம்”ன்னாரு.

அப்ப வந்த இன்னொருத்தரும் “திருப்பூர்ல டூப்ளிகேட் சரக்கெல்லாம் வருதுப்பா. அந்தப் பிரச்சினையையும் தீர்த்தா பரவால்ல”ன்னாரு.

“மூணுபேரும் போங்க, குடத்தோட நிறையபேர் உட்கார்ந்திருக்காங்க. கூட உட்கார்ந்து உங்க ப்ரச்சினையையெல்லாம் சொல்லுங்க”ன்னேன்.

“குடத்தோடயா?”

“ஆமா. இவ்ளோ நாள் கிடைக்காதவங்களுக்கு குடம் ஃபுல்லா பீர் தரணும்ன்னுதான் சாலை மறியலே”ன்னுட்டு போனேன்.

‘இது இவன் வேலையாத்தான் இருக்கும்’ன்னு அவங்க பேசினது கேட்டுது.

Sunday, September 28, 2008

சரோஜா – காக்டெய்ல் வித் கிருஷ்ணா




போனவாரம் ஞாயிற்றுக்கிழமைதான் ‘சரோஜா’ போகும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே வெங்கட் பிரபு – சரண் கூட்டணியின் சென்னை-28 பார்த்து, அவர்களால் கவரப்பட்டதால் எனக்கு மிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. திருப்பூர் சக்தி தியேட்டருக்கு ஈவ்னிங் ஷோ போனால், வாட்ச்மேனிடம் தியேட்டர் முதலாளி என்னவோ சொல்லி அனுப்ப, அவர் என்னை உள்ளே விடவே இல்லை. பிறகுதான் தெரிந்தது அன்றைக்கு வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ், சிவா நான்கு பேரும் தியேட்டருக்கு வந்திருந்தார்களாம். நான் வேறு உள்ளே போனால் ரசிகர்களுக்கு யாரைப் பார்க்க என்ற குழப்பம் வரும், எனக்குக் கூடும் கூட்டத்தால் சரோஜா டீமின் கோபத்துக்கு தியேட்டர் முதலாளி ஆளாகநேரிடும் என்பதால் என்னை உள்ளே விடவில்லை என்று தெரிந்தது. ப்ச். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். அடுத்தநாள் இரவுதான் பார்த்தேன்.

கலக்கலான படம். எந்த சந்தேகமும் இல்லை. த்ரில்லரில் காமெடி புதுசு.

விஜய் டி.வி.-யில் நேற்று சரோஜா டீமுடன் நேற்று காஃபி வித் அனு. வைபவ், சிவா, வெங்கட் பிரபு & பிரேம்ஜி நான்கு பேரும் அனுவுடன் சேர்ந்து ஒரே காமெடி பஜாராக இருந்தது. முதலில் வெங்கட் பிரபுவை அழைத்து, பிறகு சரோஜா ஹீரோ மூணுபேரும் வராங்க என்று வைபவ், சிவா & பிரேம்ஜியை அழைத்தார். வெங்கட்டுக்கு கோவம். ‘அதெப்படி இப்படி சொல்லலாம். ப்ரேம்ஜி கோவிச்சுப்பாரு.’ என்றார். என்னவென்று அனு குழம்ப, ‘ப்ரேம்ஜிதாங்க ஹீரோ. இவங்க ரெண்டு பேரும் ஹீரோவோட ஃப்ரெண்ட்ஸ்’ என்று சொல்ல ஒரே கலக்கல். சிவா குறுக்கிட்டு ‘ப்ரேம்ஜி இப்படித்தான் ஊரு பூரா சொல்லிகிட்டு திரியறாரு. இதாவது பரவால்லைங்க. சந்தோஷ் சுப்ரமணியத்துல நான்தான் ஹீரோ. என் ஃப்ரெண்ட்டா ஜெயம் ரவி நடிச்சிருக்காரு. என் ஃப்ரெண்டோட பாய்ஃப்ரெண்டா நான் நடிச்சிருக்கேன்’ன்னு சொல்றாரு’ என்று சொல்லி வயிறு வலிக்க வைத்தார்.

சிவாவின் காமெடி சென்ஸ் பிரமாதம். கொஞ்சம்கூட சிரிக்காமல் ஜோக்கடிக்கிறார். சமயத்தில் சீரியஸாகச் சொல்கிறாரா, காமெடி செய்கிறாரா என்று குழம்புமளவு! படத்தில் இவர் அதிகம் பேசிய வசனம் ‘சார்’.

அனு படம் பார்க்கவில்லையாம். ‘சென்னை 28 நான் பார்க்கல. படம் ஹிட். இதுவும் ஹிட் ஆகணும். அதுனாலதான் பார்க்கல’ என்று அனு சொன்னபோது, வெங்கட்பிரபுவை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு “‘உன்னைச் சரணடைந்தேன்’ நீங்க பார்த்திருக்க கூடாது” என்று சிவா சொன்னது சரவெடி!

இந்த நாலுபேரும் அனுவிடம் சரோஜா கதை என்று இல்லாத கதையை ரீல் சுற்றினார்கள். போதாக்குறைக்கு இவர்களுக்கு அடுத்து வந்த, ஜெயராம் (ஹ்யூமர் சென்ஸ்ல கிங்!) அவர் பங்குக்கு ஒரு சரோஜா கதை என்று ஒரு புதுக் கதை சொன்னார்! (எனக்கு ரெட்டைக் குழந்தை பிறக்கறதுலதான் கதை ஆரம்பிக்கறது..) வைபவை அவர் கலாய்த்த விதம் இன்னும் வயிறு வலிக்கிறது! ஒரு நாளாவது ஜெயராமுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது!

படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதால் தமிழில் எடுத்து, மறுபடி அதே சீனை தெலுங்கில் எடுத்திருக்கிறார்கள்.

ஷூட்டிங்கின் நடுவில் ஜெயராமின் ஹாபி பற்றி சொன்னார்கள். ஷாட் முடிந்ததும் சும்மா இருக்காமல் தூரத்தில் லைட்மேன், அல்லது அசிஸ்டெண்ட்ஸ் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதற்கு இவர் டப்பிங் கொடுப்பாராம்.. யாராவது லைட்மேன் இரண்டு பேர் நின்று ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் இவர் இங்கு நின்று கொண்டு அவர்கள் ‘படமெடுக்கறானுக பாரு. ஒரே ஷாட்டைப் போட்டு கொழப்பி, இப்பவே படத்தோட ரிசல்ட் தெரியுது. ஃப்ளாப்தான்யா’ என்று பேசுவாதாய் டப்பிங் கொடுப்பாராம். சரியான எண்டர்டெய்ன்மெண்டாக இருந்தது என்றார்கள். இன்றிலிருந்து நானும் இதை ட்ரை பண்ணலாம் என்றிருக்கிறேன்!

இதுவரைக்கும் உலக அளவில் த்ரில்லர் டைப் சினிமா ஒன்றில் காமெடியை படம் முழுக்க யாருமே கொடுத்ததில்லையாம். இதுதான் முதல் காமெடி த்ரில்லர் என்று சொன்னார் வெங்கட் பிரபு.

நிஜம்தானே சார்? காமெடி இல்லையே?

ப்ரகாஷ்ராஜ் படம் போட்டு அவர் பற்றிய செய்தி சொல்லாமலா?

தமிழில் ஷாட் எடுத்துவிட்டு, தெலுங்கு ஷாட்டுக்கு டக்கென்று ரெடியாகிவிடுவாராம் ப்ரகாஷ்! வசனத்தை தெலுங்கில் மட்டுமில்லாமல், ஒரியா, ஸ்பானிஷ் என்று பல பாஷைகளில் பேசிக்காட்டுவாராம்!

ப்ரகாஷ் சார், அபியும் நானும் தீபாவளிக்கா?

Saturday, September 27, 2008

பீர்பாட்டில் திறக்கிறேன்....


வால்பையன் மன்னிக்கவும்!

எனக்கு பீர் அறிமுகமானது நண்பனின் செந்தூர் ஒயின்ஸ் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பிறர் பீரடிப்பதைப் பார்க்க மட்டுமே செய்தேன். பதினொன்ணு, பனிரெண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாள் (மப்பில் தேதி,கிழமை மறந்துவிட்டது) நானும் ஒரு பீரடிக்க ஆரம்பித்தேன். அதுவும் தற்செயலாகவே கிங்ஃபிஷ்ராக அமைந்துவிட்டது. சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் இப்போது பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது.

ஆனால் சில நாட்களாக இத்தோடு பீரடிப்பதை விட்டே ஓடிப்போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு ஸ்ட்ராங் அடிக்கப் போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு டூப்ளிகேட் சரக்கு விற்ற டாஸ்மாக் சூபர்வைசரைப் பகைத்துக் கொண்டது.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பீருக்கு வரிசையாக பத்து ஊறுகாய் கொடுக்கக் சொன்னார் அந்த டாஸ்மாக் சூபர்வைசர். சால்னாக்கடைக்காரரும் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே சாப்பிட்டேன். மற்றவை எல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பக்கத்திலேயே அவர் இருந்தாலும், நான் மப்பில் இருந்ததால்... சரியாகத் தெரியாமல் அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு ஊறுகாய்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் சாப்பிட்டேன் என்று நானே கூறினேன். அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு ஊறுகாய் திருப்பிக் கொடுப்பது பிடிக்காது என்று நினைத்தேன். அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக சாப்பிட்ட டூப்ளிகேட் பீரில் நான் ஏதும் மிக்ஸ் செய்யவில்லை. டாஸ்மாக் சூபர்வைசரின் அந்த சதியின்போது , பீரடித்து இறுதியாக "இந்த பீருக்கு நீங்கள் செவன் அப் மிக்ஸ் பண்ணி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் சால்னாக்காரர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். 'போடாங்கொய்யால... ம**” என்று திட்டிவிட்டார். மப்பில் சூடு சொரணை இருக்குமா என்ன? நானும் பின்விளைவாக "என்னடா சூபர்வைசரிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்றும் எழுதியிருந்தேன்.

அதை அவர் கண்டுகொள்ளவில்லை. நான் எப்பொழுது பீரடித்தாலும் எனக்கு மப்பு அவ்வளவாய் ஏறாது. இருந்தாலும் ஒரு பீரடித்து ஏறவில்லை என்றால் அதன்பின் இன்னொரு பீர் என் டேபிளுக்கு வருவது போல் ஆர்டர் செய்து விடுவேன். அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற டேபிளுக்கு பீர் வந்ததால், என் டேபிளுக்கு பீர் தருவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பீர் எடுக்க வேண்டியதாயிற்று. சமீபத்தில் மப்படித்த போது, சவுண்டு சந்திரனும் மஜாவேந்திரனும் பாரிலேயே ப்ளாட் ஆனபோதுகூட டாஸ்மாக் சூபர்வைசர் எழுப்பிவிடப் போனபோது நானும் கைகொடுத்து தூக்கிவிட்டு ஒரே ஒரு ஸ்மைல் மட்டும் காட்டினேன். சூபர்வைசர் எனது ஸ்மைலிற்கு திரும்ப சிரிக்கக்கூட இல்லை. ஆனால் அதன் பின் அவர் சிரித்தால் எனக்குத் தெரியும் வண்ணம் திரும்பி உட்கார்ந்தேன். முகத்தில் அவர் சிரிக்காமல் என் பின்னால் போய் முதுகில் சிரித்தது தெரிந்தது.

நான் என்ன துரோகம் அவருக்கு செய்தேன். நான் பீரடிக்கும் பாரில் எல்லாம் எனக்கு ஊறுகாய் தரக்கூடாதெனவும், நான் மப்பில் உளறுபவன், பீருக்கு காசுதராமல் போவேன் எனவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் சொந்தமாகவே ஒரு பார் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.





அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். என் பீருக்கு நான் காசு கொடுக்காமல், கொடுக்க முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கடங்காரன் அல்ல நான்.


இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது. எனக்கு கோட்டர் கோயிந்தசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆனால் மப்பு என்ற வார்த்தை போதையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். (ரெண்டும் ஒண்ணுதாண்டா வென்ரு!) நான் வாழ்க்கையில் அடித்த ஒரே ஹா(ர்)ட் சிக்னேச்சர்மீது ஆணையாக நான் காசுகொடுக்காமல் போனதில்லை, போவதில்லை, போகப்போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பார் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல சால்னாக்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு சூபர்வைசர், நான் தான் மப்படித்து உளறுவேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு கிங்ஃபிஷர் பீர் தவிர வேறொரு பீரும் பிடிக்கும். அதுவும் இதே பாரில்தான் அடித்திருக்கிறேன். எனது போதை நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன். பக்கத்துக் கடைகளிலிருந்து சில முக்கியமான சைட் டிஷ்களைத் சேர்த்து அப்போது அடிப்பேன். இதற்காக நான் கடைக்காரனுக்கு பணம் கொடுப்பதால் அந்த பணத்திற்குண்டான மரியாதையின் பொருட்டு அந்த பீரை முழுக்க முழுக்க நானே குடிக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன். இது தவிர நான் வேறு சரக்கெதுவும் அடிப்பதில்லை.


பொதுவாக நான் எந்த பாருக்கும் ஆதரவாளன் இல்லை. மப்படித்துவிட்டு உளறுவதும் எனக்கு பிடிக்காது, ஆனால் டாஸ்மாக் பார் சூபர்வைசர்களின் போதை உளறல்கள் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில சூபர்வைசர்களால் நான் சால்னாக்கடைக்கார நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு. நான் பீரடித்து எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பார்களில் எனக்கு சைட் டிஷ் கொடுத்து எனக்கு யாரும் போதையேற்றப் போவதில்லை. எனக்கு காசு செலவாவதே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே பார்ட்டி என்ற பெயரில் அரைமப்பு ஆறுமுகம் சார், நண்பர் மட்டை மனோகரனின் உளறல்களை கிண்டலடித்து நானும் மட்டையாகும் நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு பார் ஏதாவதிலும் கச்சேரி நடந்திருக்கலாம்.


வேறு இடத்தில் நான் அப்படியேதேனும் மப்பில் உளறியிருந்தால் என்னை மன்னித்து, நான் உளறக்கூற முடியாத அளவுக்கு ஃபுல்மட்டையாக இன்னொரு பீர் எனக்கு ஆர்டர் செய்துவிட்டு, காசையும் செட்டில் செய்து விடுங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு பீர் ஆர்டர் செய்யப்போகும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.








இத்துடன் எனது (எத்தனையாவது என்று தெரியவில்லை) பீர் முடிந்தது.


யோவ்... அடுத்த பீர் கொண்டுவாய்யா.....ங்கொய்யாஆஆஆஆஅல!


(முக்கியக் குறிப்பு: வால்பையனிடம் முன் அனுமதி பெறப்பட்ட எதிர்பதிவு. இதைப்படித்து கும்மி, மொக்கையே சரணம் என்று திருந்தி வருமாறு வால்பையனுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது!)

Friday, September 26, 2008

சினிமா... சினிமா...! (இலவச இணைப்புடன்...!)

எனது ரொம்ப பழைய நோட் ஒன்றில் எழுதி வைத்திருந்தது இது.. இப்போது ஏதாவது மாற்றமிருக்கிறதா அல்லது ஏதாவது சேர்ந்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
  • சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..
  • டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..
  • கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!
  • வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)
  • எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.
  • எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.
  • அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.
  • டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.
  • பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.

  • வில்லனின் வலது கை அல்லது வில்லன்கூட இருக்கும் கதாபாத்திரம் ஒன்றுக்கு கிறிஸ்துவப் பெயர் இருக்கும்.
****************************************************************


அப்புறம் இலவச இணைப்பாய் ஒரு கவிதை!





காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?

**************************************

பி.கு: வேற வழியே இல்ல நண்பர்களே. கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இது ரெண்டுமே மீள் பதிவுதான்!

Thursday, September 25, 2008

எல்லோர்க்கும் பெய்யும் மழை!




அந்தப்பெண்ணுக்கு அவள் தந்தை ஆறு வயதிருக்கும்போது சதுரங்கம் கற்றுக் கொடுக்கிறார். அவருக்கும் சதுரங்க ஆட்டம் மீது வெறி. பொழுதுபோக்காய் சொல்லிக் கொடுத்தாலும் அபார கவனிப்பும், நொடிப்பொழுது நகர்த்தல்களுமாய் கற்றுக் கொடுத்த தந்தையையே நாலே மாதங்களுக்குள் வென்று விடுகிறாள் அவள். அதற்குப் பிறகு பலமுறை விளையாடும்போது. தன் மகளிடம் தனித்திறமை இருப்பதாய்ப் படுகிறது அவருக்கு. சதுரங்கத்தில் மிகுந்த பற்று கொண்ட அவர் பல நண்பர்களுடன் விளையாடும்போதெல்லாம் உணர்ந்திராத சவால்களை தனது மகளுடன் விளையாடும்போது உணர்கிறார்.

அவர் பெயர் ஜெயச்சந்தர். சென்னைத் துறைமுகத்தில் பணி. சதுரங்கத்தில் தனித்திறமை கொண்ட மூத்த மகளை ஊக்குவிக்க நினைக்கிறார். ‘நம் மகள் என்பதால் எனக்குத்தான் அவள் விளையாடுவது சிறப்பாகத் தெரிகிறதோ’ என்று சந்தேகம் வந்தவர், சதுரங்கத்தில் திறமை வாய்ந்த தனது சில நண்பர்களுடன் தன் மகளை மோத விடுகிறார். அவர்களும் ‘உன் மகளிடம் நல்ல திறமை ஒளிந்துள்ளது’ என்று சான்றளிக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் மூலமாக சென்னை செஸ் ஃபெடரேஷனில் இருக்கும் ஒருவரது அறிமுகம் கிடைக்கிறது. அவரும் இவரது மகளை வெகுவாகப் பாராட்டி விட்டு, பெரிய அளவில் போட்டிகளில் இவள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.

அந்தப் பெண் தான் மோஹனப்ரியா. சிலதினங்களுக்கு முன் ஒரு போட்டிக்காக இவள் வியட்நாம் செல்ல உதவிகேட்டு பதிவு வெளியாகி, அதன் மூலம் பதிவர் புதுகை அப்துல்லா உதவியளிப்பதாய் சொன்ன அதே மோஹனப்ரியா!

ஆரம்ப வருடங்களில் மோஹனப்ரியாவின் தந்தை எப்படி சமாளித்தார்? பிடித்தமெல்லாம் போக வரும் எட்டாயிரம் ரூபாயில் இவளை எப்படி பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் போட்டிக்கு அனுப்புவது? ஊக்குவிக்க பலர் இருக்க, இவள் தந்தை வீட்டை விற்கிறார்! ஆலந்தூரில் தன் சொந்த வீட்டை விற்று, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

இதுவரை ரஷ்யா, ஜார்ஜியா, சிங்கப்பூர், துருக்கி, துபாய் உட்பட பல நாடுகளுக்கும் சென்று சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொள்ள அவர் வீட்டை விற்ற பணம் உதவிற்று. சென்ற இடமெல்லாம் மோஹனப்ரியாவுக்கு சிறப்பே. இரு நாடுகளில் தங்கப் பதக்கத்தையும், ஒரு நாட்டில் வெள்ளியும் வென்ற இவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற என்ன காரணம்?

தேசிய அளவிலோ, (NATIONAL) சர்வதேச அளவிலோ (INTERNATIONAL) போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமானால் சதுரங்க வீரர் தனக்கென தனிப் பயிற்சியாளர் வைத்துக் கொள்வது அவசியம். சென்னையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சர்வதேசப் பயிற்சியாளர் ஒரே ஒருவர்தான். தேசியப் பயிற்சியாளர் ஐந்து, ஆறு பேர் உள்ளனர். சர்வதேசப் பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஆயிரமும், தேசிய அளவிலான பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஐநூறும் கட்டணம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரப் பயிற்சி என்று வைத்துக் கொண்டாலும் மாதத்துக்கு ரூ. 15000 அல்லது ரூ.30000! எங்கே போவார் அந்தத் தந்தை?

ஆம்! இதுவரை அவள் தனக்கென பயிற்சியாளரே வைத்துக் கொள்ளவில்லை! பல நாடுகளில் போட்டியின் போது இவளுடன் போட்டியிடுபவரின் பயிற்சியாளர் ஒரு சுற்றில் மோஹனப்ரியாவின் நகர்த்தல்களைப் பார்த்து, கிரகித்துக் கொண்டு அடுத்த சுற்றில் தங்கள் மாணவருக்கு சொல்லிக் கொடுத்து தயார்படுத்திக் கொண்டிருக்க பயிற்சியாளர் இல்லாமலேயே பல சவால்களைச் சந்தித்தவள் இவள்! இன்னொரு விஷயம் இரு தினங்களுக்கு முன் வரை சதுரங்கப் போட்டிக்கு முக்கியமாகத் தேவைப்படும் ‘டைமர்’ கூட இந்தப் பெண்ணிடம் கிடையாது. உடன் விளையாடி, சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இருக்கும் (அல்லது) அடுத்த சுற்றுக்காக காத்திருக்கும் சக வீரர்களிடம் டைமரை இரவல் வாங்கித்தான் விளையாடியிருக்கிறாள்! அது மட்டுமல்ல, விளையாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ள கணினியும் இவளிடம் இல்லை! இத்தனை சங்கடங்கள், சவால்களுக்கிடையில்தான் அந்த த்ங்க, வெள்ளிப் பதக்கங்கள்!

இப்படி விளையாடி இவள் அடைந்திருப்பது ஜீனியர் லெவலில் உலக அளவில் பத்தாவது இடம், இந்தியாவில் ஜூனியர் லெவலில் முதலிடம்! அதுவும் தொடர்ந்து மூன்று வருடங்களாக!

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பத்தாவது படிக்கும் இவளுக்கு படிப்பிலும் நல்ல பெயர். இதுவரை முதல் அல்லது இரண்டாவது இடம்தானாம்! இரண்டாவது ரேங்கைத் தாண்டியதில்லையாம்!


இந்த நிலையில் வியட்நாமில் நடைபெறவிருக்கும் சர்வதேசப் போட்டியில் பங்குபெற மோஹனப்ரியா செல்ல வழியின்றித் தவிக்கிறார் அவளது தந்தை. கையிருப்பு எல்லாம் கரைந்துபோக, இதுவரை எவரிடமும் ஸ்பான்சர்ஷிப் கேட்காத இவள் தந்தை கையைப் பிசைந்து நிற்கிறார். நண்பர்கள் மூலம் வலைப்பதிவில் வேண்டுகோள் விடுக்கப் படுகிறது. ‘என் நிறுவனம் மூலம் ஆவன செய்கிறேன்’ என்று உறுதியளிக்கிறார் புதுகை அப்துல்லா!

இதற்கிடையில் தமிழக செஸ் ஃபெடரேஷனில் மோஹனப்ரியா வியட்நாம் செல்ல ரூ.70000/- அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நண்பர் அப்துல்லா தான் ஒத்துக் கொண்டபடி அந்தப் பெண்ணை அழைத்து என்னென்ன தேவைகள் என்று விசாரித்திருக்கிறார்.

அவர்கள் தேவைப் பட்டபடி டைமர் கருவியும், மோஹனப்ரியா விளையாடிப் பயிற்சி பெற மடிக்கணினியும், சதுரங்க விளையாட்டுக்கான மென்பொருட்களும் இரு தினங்களுக்கு முன் வழங்கிவிட்டார்! அதுமட்டுமல்ல, சதுரங்க விளையாட்டின் மூலம் மோஹன்ப்ரியாவுக்கு வருமானம் கிடைக்கும் வரை இந்தியாவுக்குள் எந்த நகருக்கு விளையாடப் போனாலும் அதற்கான செலவுகளை தனது நிறுவனம் ஏற்றுக் கொள்வதாய் அறிவித்திருக்கிறார் அப்துல்லா.

தனது அதிகார எல்லைக்குட்பட்டு இவ்வளவு மட்டுமே செய்ய முடிந்தது என்று வருத்தப்படும் அப்துல்லா, அந்தப் பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு சர்வதேசப் பயிற்சியாளர் (மாதம் ரூ.30000/-) நியமிக்க அனுமதி கேட்டு, அடுத்த BOARD DIRECTORS MEETING- க்காக காத்திருக்கிறார்.

சொந்தத் திறமை மூலம் இப்படி ஒரு உயரத்தை எட்டிப் பிடித்த மோஹனப்ரியாவைப் பாராட்டுவதா...

தகுதியுள்ள அந்தப் பெண் வெல்ல வழிவகுக்கும் அப்துல்லாவைப் பாராட்டுவதா..

மனதுக்கு நிறைவாக உணர்கிறேன் அப்துல்லா. வேறொன்றும் இல்லை சொல்ல.

Wednesday, September 24, 2008

நான் யாருக்கு அல்லக்கை?


அல்லக்கை என்ற வார்த்தை எப்படி வந்திருக்கக் கூடும் என்ற ஆராய்ச்சிக்கு சரியான விடை கிடைக்கவில்லை. கூகுளில் அல்லக்கை என்று தேடினால் முக்கால்வாசி நம்ம வலையுலகில் பல சந்தர்ப்பங்களில், வலையுலகப் பதிவர்களால்தான் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதுதான் வருகிறது.


தமிழகத்தில் இந்த வார்த்தையைப் பரவலாக்கச் செய்த பெருமை நம்ம கவுண்டமணியையே சாரும் என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. அதற்கு முன் இந்த வார்த்தைப் பிரயோகம் சினிமாவில் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. (முரளிகண்ணன்தான் பதில் சொல்லணும்!) கவுண்டமணி (எங்க ஊர் – உடுமலைப்பேட்டைக்காரர்ங்க!) இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியதால், இது கோவை மாவட்டத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. கோவைக்காரர்களைவிட, சென்னைக்காரர்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.




இதன் அர்த்தத்தைத் தேடியபோது “The meaning of allakkai is errand boy, useless, money crazy” என்றும் “Allakkai is a tamil word with very rich meaning. Loosely translated it means "Uppukku chappani" என்றும் வந்தது. ஆனால் இது எந்த அகராதியில் சொல்லப்பட்டதுமல்ல. நம்மைப் போன்ற யாரோ பதிவர்கள்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒருவரின் அல்லக்கை என்றால் அவரை ஆதரிப்பவர், அவர் இட்ட பணியை செய்பவர் எனலாம். ஒருசில இடங்களில் ஜால்ரா, எடுபிடி என்னும் பொருள்படும்படியும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், ரொம்ப ஆழமாக யோசித்தால் யாரையாவது நமது வலது கை, இடது கை என்பது போல, இந்த அல்லக்கையும் வந்திருக்கக்கூடும். அதாவது நான் அவருக்கு வலது, இடது கை என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமல்ல, வேண்டுமானால் அல்லக்கை (உடம்போடு அல்லாத, கொஞ்சம் தள்ளியிருக்கும் கை) என்று வைத்துக் கொள்ளலாம். அல்லாத கை, மருவி அல்லக்கையாகியிருக்கக்கூடும்!




என் வசதிக்காக அல்லக்கை என்றால் ஆதரிப்பவர் என்றே வைத்துக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். (இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா? கிழிஞ்சது போ!)



நேற்று லக்கிலுக் ‘நான் சாரு நிவேதிதாவின் அல்லக்கை’ என்றதுதான் இந்தப் பதிவுக்கான பொறி என்பது பதிவுக் குழந்தைக்குக் கூடத் தெரியும். எனக்கும் சாருவின் எழுத்து பிடிக்கும். (அதானே, லக்கி சொன்னா உடனே ஆமாம் போடுவியே..) எல்லாரும் அவரது பல புத்தகங்களைக் குறிப்பிட்டாலும், நான் கோணல் பக்கங்களின் கிறுக்குத்தனமான ரசிகன். போதாக்குறைக்கு அவருக்கு கடிதமெல்லாம் எழுதி, ஒருமுறை அவராகாவே எனது அலைபேசிக்கு அழைத்துப் பேசியதில் இருந்து அவரைப் பிடித்துப் போனது. (அப்போதெல்லாம் எனக்கு வலையுலகத் தொடர்பே கிடையாது!)



குடும்பத்தைப் பொறுத்தவரை என் தாயமாமா பாலசுப்ரமணியனுக்கு நான் அல்லக்கையாக இருந்திருக்கிறேன். சின்ன வயது தொட்டு அவருடனே சுற்றி இன்றளவும் என் பல செயல்களும், நடத்தையும் அவர் போலவே இருக்கிறதாய் நானே நினைத்துக் கொள்வதுண்டு!



எழுத்துத்துறையைப் பொறுத்தவரை தமிழ்வாணன் (சீனியர்!), பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் என்று பலரைப் படித்திருந்தாலும் பாலகுமாரன், சுஜாதா என்னை மிக பாதித்தார்கள். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, இனிது இனிது காதல் இனிது என்று பலவும் பைபிள் போல வைத்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் உடையார், அது இதுவென்று அவர் போனபிறகு அவரை தொட(ர)வில்லை! :-(



ஆனால் சுஜாதா என்னுள் அசைக்கமுடியாமல் சிம்மாசனமிட்டு இருக்கிறார்! விஞ்ஞானம், மருத்துவம், கவிதை, நகைச்சுவை, சிற்றிதழியல் என்று கலந்துகட்டி அடிக்கும் அவரைப் பார்க்கவே முடியாதது என் துரதிருஷ்டம்! எழுத்துத்துறையைப் பொறுத்தவரை நான் சுஜாதாவின் அல்லக்கை. அதில் எனக்கு சந்தேகமே இல்லை!



பள்ளிக்கூட நாட்களில் நான் யாருக்கும் அல்லக்கையாக இருந்ததில்லை. நானுண்டு, என் படிப்புண்டு என்றுதான் இருந்திருக்கிறேன். நண்பர்கள் என்றாலும் ஓரிரு க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்தான். அங்கே எனக்கு இந்த அல்லக்கை ப்ரச்சினை வந்ததில்லை!



பதிவுலகில் வந்தபிறகு நான் லக்கிக்கு ஜால்ரா அடிக்கறேன், லக்கியின் அல்லக்கை என்பது போன்ற மெயில்கள் எனக்கு வந்துள்ளது. அதில் எனக்கேதும் இழிவோ, கவலையோ இல்லை. (லக்கி ஒரு வேளை கவலைப்படலாம்!!!) நான் எழுதவருமுன்னே, நான் முன்னே எழுத வந்திருந்தால் எப்படியெல்லாம் எழுதியிருப்பேனோ அப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தரின் ப்ரதியாக என்னைப் பார்ப்பதில் என்ன வருத்தமிருக்கமுடியும்!




ஆனால், லக்கியின் அரசியல் ஆர்வம் எனக்கு ஆச்சர்யமளிக்கக் கூடியது. அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சிக்கவோ, விவாதம் புரியவோ செய்யும் அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் என்றாலே ‘வேண்டாமே’ என்று ஒதுங்கும் சராசரியாகத்தான் நான் இருக்கிறேன். ஓட்டுப் போடுவதும், அரசியல் நிகழ்வுகளை கவனிப்பதுமன்றி அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் லக்கியுடன் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்ற பெரியபுள்ளி ஒருவர் (இவருக்கு லக்கியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது) லக்கி பல கட்சிகளின் வரலாறு பற்றி பேசியதைக் கேட்டு ‘அவருக்கு அரசியலைப் பற்றி நிறைய வரலாறு தெரிஞ்சிருக்குங்க. நிச்சயம் அவர் ஒரு நாள் மந்திரியாகக் கூடிய வாய்ப்பிருக்கு’ என்றார்! (நோட் பண்ணிக்கங்கப்பா!)



அல்லக்கை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை வேறு தளத்தில் பயணிப்பதால் இதோடயே நிறுத்திக்கறேன். இதன் தொடர்ச்சியை இன்றைக்கு மதியம் இரண்டாவது பதிவாக வேறொரு பிரபல பதிவர் போடுவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

Tuesday, September 23, 2008

இரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு!!

இரண்டொரு நாட்களுக்கு முன், சரியாக 20ம் தேதி... அதிஷாவிடமிருந்து ஒரு அழைப்பு.

“பரிசல்... ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்னாச்சு. நெஜமாவே ஒனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?”


“அதுவும்தான். ஆனா இப்போ சொல்ல வந்தது அதில்ல”

“பின்ன?”

“தமிழ்மணத்துல அக்டோபர் 20-லிருந்து நான்தான் ஸ்டார்! இப்போதான் மெயில் பார்த்தேன்”

“ம். சூப்பரு. கலக்குங்க” என்று அவர் பாணியிலேயே வாழ்த்தினேன்.

கொஞ்சநேரம் வேலை பார்த்துவிட்டு என் மெயில் பாக்ஸைத் திறந்தால்... எனக்கும் ஒரு மின்னஞ்சல்! ‘அக்டோபர் 6 லிருந்து நட்சத்திரப் பதிவராகச் சம்மதமா? புகைப்படத்தை அனுப்புங்கள்’ என்று கேட்டு. சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அதெப்படி, ஒரே நாள்ல எங்க ரெண்டு பேருக்கும் மெயில் அனுப்பியிருக்காங்க-ன்னு ஒரு சந்தேகமும் தமிழ்மணத்தோட ஐ.டி. ஜி.மெயில்லயா இருக்கும்?’ன்னு ஒரு சந்தேகமும் வந்தது. எதுக்கும் இருக்கட்டும்ன்னு ‘ப்ரொஃபைல் போட்டோ ஒண்ணுதானே..’ன்னு கேட்டு வழக்கமா எழுதறா மாதிரி அளவில்லா அன்போடு – கிருஷ்ணா’ன்னு ஒரு ரிப்ளையைப் போட்டு வெச்சேன்.





அதிஷாகிட்ட கூப்ட்டு சொன்னேன்.


“ம்... சூப்பரு. கலக்குங்க” ன்னவருகிட்ட

“ஏன்யா.. யாராவது கலாய்க்கறாங்களா?” ன்னு கேட்டேன்.


“இல்ல.. இதே மாதிரிதான் இதுக்கு முன்னாடி நட்சத்திரமா இருந்தவங்களுக்கும் மெயில் வந்திருக்காம்”ன்னாரு.

“என்ன எழுதப்போறோம்ன்னு முன்னோட்டம் கேட்டிருக்காங்க?”

“அதெல்லாம் தேவையில்லயாம். சும்மா அறிமுகம் மட்டும் குடுத்துட்டு, எழுத ஆரம்பிங்க”

சந்தோஷத்தோட வடகரைவேலன் கிட்ட கூப்ட்டு பகிர்ந்துகிட்டேன். வாழ்த்தினாரு. (என்ன சந்தோஷமான செய்தின்னாலும் அண்ணாச்சிக்குதான் முதல் ஃபோன் போகும்!) அடுத்ததா, அந்த மின்னஞ்சலோட ப்ரிண்ட் அவுட் ஒண்ணு எடுத்துவெச்சுகிட்டு இரவு வெயிலானை சந்தித்து காமிச்சேன். அவரும் வாழ்த்துக்கள்-ன்னாரு.

அடுத்தநாள் ஞாயிறு. ‘டாப்டென்ல இருக்கிங்களே’ன்னு கூப்ட்ட நர்சிம்கிட்ட கூட சொன்னேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். “என்ன எழுதணும்ன்னு ப்ரிப்பேர் பண்ணிக்க ரெண்டு, மூணு வாரம் டைம் இருக்குல்ல? ஜமாயுங்க”ன்னாரு.


அன்னைக்கு பூரா தமிழ்மணத்தைத் திறந்து வெச்சுகிட்டு இதுக்கு முன்னாடி நட்சத்திரப்பதிவர்கள் என்ன மாதிரி அறிமுகம் குடுத்திருக்காங்க, என்ன பதிவு போட்டிருக்காங்க-ன்னு ஆராய்ச்சி செஞ்சேன். நாம எப்படி எழுதலாம்... வித்தியாசமா ஏதாவது பண்ணலாமா... ஏழு நாளும் நட்சத்திரம் சம்பந்தமா ஏழுவிதமா பதிவு போடலாமா, ஒண்ணு, ரெண்டுன்னு ஏழுவரைக்கும் வர்ற மாதிரி ஏழு பதிவு ரெடி பண்ணி ஒவ்வொண்ணா போடலாமா, திருப்பூர் சாயக் கழிவுகள்பத்தி நிச்சயமா ஒரு நாள் எழுதணும்-இப்படி பலவித சிந்தனைகள்!


நேத்து, திங்கள் காலையில பதிவு போட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு மெயில் பாக்ஸைத் திறந்தா.... இந்த மெயில் வந்திருந்தது.









”ஸ்டார் பக்கத்துல ஒரு ஃபோட்டோ இல்லாம, பத்து ஃபோட்டோவா கேப்பாங்க.. அதென்ன அளவில்லா அன்போடு.. நாங்க மட்டும் என்ன, அன்பை அளந்துகிட்டா இருக்கோம்?”

-இப்படிக்கு விளையாடியது
உங்கள் ரசிகனில் ஒருவன்


இப்படி மெயில் வந்திருந்தது!


‘எவ்வளவோ தாங்கியிருக்கோம். இதத் தாங்கமாட்டோமா?ன்னு கம்னு இருந்துட்டேன். அதிஷாவுக்கு ‘பாருய்யா இந்தக் கொடுமையை’ன்னு மெயிலை ஃபார்வேர்ட் பண்ணிவிட்டேன்.

‘அடப்பாவிகளா’ன்னு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு ரூம்ல உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு இருந்தாரு அவரு!

வேறொரு நண்பர்கிட்ட இது பத்தி சொன்னப்ப, ‘நீங்க ஓக்கே பரிசல். உங்களுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும். ஆனா யாராவது பெண்பதிவர்களுக்கு இதுமாதிரி புகைப்படமும், அறிமுகமும் கேட்டு, அவங்க அனுப்பி அது தவறா பயன்படுத்தப்பட்டா என்ன ஆகறது? ஏற்கனவே பெண்பதிவர்கள் எழுதறது குறைஞ்சுகிட்டே வருது’ன்னு ஆதங்கப்பட்டார் அவர். நியாயம்தான்னு பட்டுது!

அதுக்காக, இதை ஒரு பதிவா போட்டு, ‘தமிழ்மணத்துல இருந்து மின்னஞ்சல் வந்தா எப்படி வரும், அதை எப்படி ஃப்ராட் ப்ரூஃப் (!?!) பண்ணிவெச்சிருக்காங்க-ன்னு அவங்களையே கேட்டா என்னன்னு தோணிச்சு!


நட்சத்திரப்பதிவர்கள் பற்றி ‘உதவி’ பக்கத்துலயே இது பற்றி ஒரு விளக்கம் குடுத்தீங்கன்னா சந்தோஷம்!


ஏன்னா, நான் கலாய்க்கறதையும், கலாய்க்கப் படுவதையும் ரசிச்சே பழகிட்டேன். எல்லாரும் அப்படின்னு சொல்லமுடியாது. இந்த மாதிரி ஒரு அங்கீகாரம் கிடைக்காதான்னு ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றமானா ஒருமாதிரி வெறுத்துப் போற மனநிலைக்குப் போய்ட்டாங்கன்னா.. கஷ்டமில்லையா.. பாவம்! நானும் எதிர்பார்த்தேன். இல்லைங்கல. ஆனா, இது விளையாட்டுக்காக யாரோ பண்ணினதுன்னு தெரிஞ்சப்ப அவ்வளவா மூட் அவுட் எல்லாம் ஆகல. ‘ஆஹா... என்னைப்போல் ஒருவன்’ ன்னு நெனைச்சுகிட்டேன்!


கடைசியா அந்த நண்பருக்கு ஒரே ஒரு எச்சரிக்கை....

இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினீங்க.....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அழுதுடுவேன்!



பி.கு. 1: இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான். தலைப்பு தப்பு... எனக்கும் இப்படி ஒரு மெயில் வந்ததுன்னு சொல்றவங்க.. கூச்சப்படாம பின்னூட்டத்துல சொல்லுங்க. சோகத்தைப் பகிர்ந்துக்கலாம்!


பி.கு.2: இந்த விளையாட்டை விளையாடின நண்பர் யாருன்னு கண்டுபிடிக்க வடிவேலுவோட செல்வாக்கைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கேன். விரைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, பலவித கலாய்த்தல்களுக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்படுகிறது!

Monday, September 22, 2008

வேணாம் வடிவேலு... விட்டுடுங்க.



























அன்புள்ள வடிவேலுவுக்கு...

நான் உங்க ரசிகன்-ங்கறத சொல்லவே வேண்டியதில்லை. உங்க டயலாக் டெலிவரிக்கும், மாடுலேஷனுக்கும், பாடி லேங்குவேஜூக்கும் யாருதான் உங்களுக்கு ரசிகனா இருக்க மாட்டாங்க?

விவேக் மேல்தட்டு மக்களை தன்னோட சிந்திக்கற டைப் காமெடி மூலம் ஒரு பாதைல நடந்து போய்ட்டிருக்கறப்ப, ஒண்ணும் தெரியாத மாக்கான் மாதிரி இருந்துகிட்டு, நீங்க பண்ற சேட்டைகள் மூலமா கலக்கலா எல்லாரையும் கவர்ந்தீங்க. நீங்க வர்றவன், போறவன்கிட்டயெல்லாம் அடிவாங்கறப்ப எதுக்கும் கலங்காம நீங்க பேசற டயலாக் பலதும் இன்னிக்கு சொன்னதுமே ‘குபுக்’ன்னு சிரிப்பு வர்ற அளவுக்கு பேர் பெற்றிருக்குது.

’அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்’

‘வேணாம்… வலிக்குது. அழுதுடுவேன்’

‘ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க’

‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’

’இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?’

‘கிளம்பீட்டாய்ங்கய்யா… கிளம்பீட்டாய்ங்க’

‘என்னை வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே’

‘இதுதான் அழகுல மயங்கறதா?’

‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ் மட்டம் வீக்’

‘என்னா வில்லத்தனம்?’

‘இப்பவே கண்ணைக் கட்டுதே..’

இந்தப் பட்டியல் ‘முடியல’ வரைக்கும் முடியாத ஒண்ணு! படிக்கும்போதே உங்க மாடுலேஷன்லதான் படிக்கமுடியும். படிச்ச உடனே ஒரு ரிலேக்சேஷன் கிடைக்கும். ஏன், என் வாழ்க்கையிலயே பல சிக்கலான சந்தர்ப்பங்களை உங்களோட ஏதாவது டயலாக்கைச் சொல்லி, கூட இருக்கற எல்லாரையும் சிரிக்கவெச்சு, சூழ்நிலையிலவே மாத்தியிருக்கேன்.

ஒரு கட்டத்துல விவேக்குக்கும், உங்களுக்கும் கடுமையான போட்டி ஆரம்பிச்ச சமயம், அது ஆரோக்யமான போட்டிதான்-ங்கற மாதிரி, விவேக் சில படங்கள்ல உங்க ‘கிளம்பீட்டான்யா’ வைச் சொல்லி சிரிக்க வெச்சாரு. அவ்வளவு ஏன், நீங்க நடிக்காத சூப்பர் ஸ்டாரோட ‘சிவாஜி’ல விவேக் உங்க மாடுலேஷன்ல ஒரு இடத்துல பேசுவாரு. அதுமட்டுமில்லாம ரஜினிகாந்தே ‘என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே’ன்னு டயலாக் பேசினாரு. அவன் டயலாக்கை நான் பேசறதா’ன்னு கொஞ்சமும் தயங்காம பேசினது சூப்பர் ஸ்டாரோட பெருந்தன்மைன்னாலும், அந்த டயலாக் யாரு எழுதியிருந்தாலும் உங்களாலதான் அது பிரபலாமாச்சுங்கறதுல எந்தவித சந்தேகமுமில்லை!

ஆனா… சமீபமா உங்க பேரு அரசியல்ல அடிபடறது பிடிக்கல தலைவா. உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம்ன்னு எனக்குப் படுது. அரசியல் தேவையில்லைன்னு சொல்ல வரல. சும்மா காசுக்காக மேடைல அரசியல் பேசி, காணாமப் போன காமெடி நடிகர்கள் லிஸ்ட்ல நீங்களும் வந்துடுவீங்களோன்னு பயமா இருக்கு! ரூம்போட்டு யோசிச்சு, உங்களை வெச்சு காமெடி பண்ண ஒரு கூட்டம் கெளம்பீடுச்சு. அதுல நீங்க மாட்டினா அப்புறம் ’வேணாம். வலிக்குது’ன்னு ’அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ன்னு அழ வேண்டியதுதான். ஏன்னா அரசியல்ல உங்க பில்டிங்கும் ஸ்ட்ராங்கில்ல, பேஸ்மட்டம் வேற வீக்கா இருக்கு. இது உங்களுக்கே தெரியும்.

இதுக்கு முதல்ல உங்க வீட்டுக்கு முன்னாடி நடந்த கார் பிரச்சினையப்ப உங்க மேல அவ்வளவா தப்பில்லைன்னு சம்பவ இடத்துல இருந்த என் நண்பர் மூலமா தெரிஞ்சுகிட்டப்ப ’பாவம்யா இவரு’ன்னுதான் தோணிச்சு. அதே மாதிரி இரண்டு நாட்களுக்கு முன்னாடி உங்க வீட்ல, அலுவலகத்துல நடந்த கல்வீச்சு சம்பவமும் வன்மையா கண்டிக்கக்கூடிய விஷயம்தான். அதுல பாதிக்கப்பட்ட உங்களோட மனம் எவ்வளவு சங்கடத்துக்குள்ளாகியிருக்கும்ன்னு புரிஞ்சுக்கமுடியுது. அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக் கூடியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ஆனா, இன்னைக்கு காலைல செய்திகள்ல உங்க பேட்டியைப் பார்த்தேன். ‘விஜய்காந்த் எந்தத் தொகுதியில நின்னாலும் அவரை எதிர்த்து நிக்கறேன். அவரா, நானான்னு பார்க்கறேன்’ –ன்னு சொன்ன நீங்க அதுக்கு முன்னாடி, ‘பார்க்கலாமா… நீயா நானான்னு பார்க்கலாமா?’ன்னு ஒருமைல சொன்னதை என்னால ரசிக்க முடியலைங்க.

நான் யாருக்கும் பரிஞ்சு பேசல. அரசியல்ல குதிக்கறது அவ்வளவு சாதாரணமா என்ன? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே யோசிச்சு, யோசிச்சு நம்ம மனநிலைக்கு இது ஒத்துவராதுன்னு அமைதியா இருக்காரு. உங்களுக்கு எதுக்கு இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு பேட்டி? இதுனால நீங்க நாளைக்கே அரசியலுக்கு வருவீங்கன்னு நான் சொல்லல. இந்தமாதிரி பேட்டியெல்லாம் நீங்க குடுக்கறதால உங்களை யாரோ பின்னாடி இருந்து இயக்கறதாகவும், அதுக்கு நீங்க பலிகடா ஆகற மாதிரியும் தோணுது.

ஒரு காலத்துல விஜய்காந்த்-துக்கு குடைபிடிக்கற கேரக்டர்ல நடிச்ச நீங்க இன்னைக்கு நிஜ வாழ்க்கைல அவரையே இப்படி எதிர்க்கற அளவுக்கு வளர்ந்ததுக்கு பின்னாடி இருக்கற உங்க உழைப்பு சந்தேகத்துக்கிடமில்லாதது. அதற்குப் பாராட்டுக்கள். ஆனா, எல்லாரையும் அரவணைச்சுப் போங்க தலைவா. இந்த மாதிரியெல்லாம் பப்ளிக்ல ஒருத்தரை, அதுவும் உங்க சொந்த ஊர்க்காரரை ஒருமைல திட்டற அளவுக்கு போகணுமா?

வேணாம் வடிவேலு...விட்டுடுங்க!

இப்படிக்கு
உங்கள் ரசிகர்கள்ல ஒருத்தன்.

Sunday, September 21, 2008

என்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை இது-ங்கற தலைப்புல எழுதறது இப்போ ட்ரெண்டா? ரெண்டு, மூணு போஸ்ட் இந்தத் தலைப்புல பார்த்தேன்!

ஓக்கே, மேட்டருக்கு வரேன்.

நேத்து உமாவோட அண்ணன் பையன் ருத்ரேஷுக்கு மொட்டை அடிக்க ஒரு கோயிலுக்குப் போனேன். பையனுக்கு முடியெடுக்க வந்தவர், ஒரு குச்சி எடுத்து ப்ளேடு சொருகி, நூலால கட்டி ஷேவிங் ரேசர் ஒண்ணு ரெடி பண்ணினாரு. கடுப்பாய்ட்டோம் நாங்க!

இந்த ஃபோட்டோவப் பாருங்க!







என்ன கொடுமை இல்ல?

ஆனா ஒரு நியூஸ் என்னான்னா, அதுக்கப்புறம் நாங்க வாங்கிக் கொடுத்த ரேசரை விட இந்த ஆயுதம்தான் அவருக்கு இலாவகமா இருந்தது!




மொட்டைப் பையனுக்கு வாழ்த்து சொல்லீடுங்க!

Saturday, September 20, 2008

எனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்!

எனக்கு விளம்பரங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்!

ஒரு பெரிய சைஸ் புத்தகத்தில், ஒரு பக்கம் இடது உள்ளங்கை விரித்த நிலையிலும், வலதுபக்கம் வலது உள்ளங்கை விரித்த நிலையிலும் ப்ரிண்ட் செய்யப்பட்டு, ‘கொசுவை ஒழிக்க இதைப் பின்பற்றுங்கள்’ என்று எழுதி, இந்தப் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, கொசு வரும்போது அடியுங்கள் என்று இருக்கும். கீழே துக்கிணியூண்டு சைஸில் ‘அல்லது ஹிட் உபயோகியுங்கள்’ என்று இருக்கும்!

இன்னொரு விளம்பரம், இது எதற்கான விளம்பரம் என்று நினைவில்லை. ஒருத்தன் கடலுக்கு நடுவே யாருமில்லாத குட்டித் தீவு ஒன்றில் நின்று கொண்டிருப்பான். (தீவு என்றால் குட்டி மணல் மேடு போலத்தான் இருக்கும்) இரண்டே இரண்டு தென்னை மரங்கள் (ஒரு பத்தடி இடைவெளியில்) இருக்கும். இவன் கொஞ்சநேரம் ஏதாவது கப்பல் வராதா என்று மண்டை காய்ந்துகொண்டு நின்றிருப்பான். சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு மரப்பெட்டி ஒன்று வரும். இவனிருக்கும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளி, அந்தப் பெட்டி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இவனுக்கு நீச்சல் வராததால், கடலுக்குள் சென்று எடுக்கவும் முடியாது. திடீரென்று யோசனை வந்தவனாய் அருகே இருக்கும் ரம்பம் போன்ற ஒரு இரும்புசாதனத்தால் ஒரு மரத்தை அறுக்கத் தொடங்குவான். மரம் மடங்கி கடலில், அந்தப் பெட்டி இருக்கும் இடத்தருகே விழும். இவன் தடுமாறித் தடுமாறி அந்த மரத்தின் மீது நடந்து போய் அந்தப் பெட்டியைக் கைப்பற்றி வருவான்.

கொண்டுவந்து திறந்து பார்த்தால், அதில் இரு மரங்களில் கட்டி ஆட உபயோகிக்கும் ஊஞ்சல் இருக்கும்! மண்டை காயும் இவனுக்கு!


இந்தமாதிரி விளம்பரங்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை, ஜெயா டி.வி-யில் முன்பு ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

AXNல் இரவு பதினோரு மணிக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்த WORLD’S SEXIEST ADVERTISEMENTS என்ற நிகழ்ச்சியும் எனக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சிதான்! இப்போதும் ஒளிபரப்புகிறார்களா என்று தெரியவில்லை!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரங்களை மட்டும் பார்க்கும், ஆவல் எனக்கு அதிகம். ஃபெவிகாலின் எல்லா விளம்பரங்களும் எனக்கு மிகப் பிடிக்கும். கார்ப்பெண்டர்கள் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டே டி.வி.பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திலிருந்து விழும் காதலியின் ஒரு கையைப் பிடித்தபடி காதலன் தடுமாறிக் கொண்டிருப்பான். ‘என் கையை விட்டுடாதே’ என்று அவள் கெஞ்சிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கும். கொஞ்ச நேரத்தில், அவள் கை தளர்ந்து, கீழே விழுந்து விடுவாள். அப்போதும் ‘என் கையை விட்டுடாதே’ என்ற குரல் கேட்கும். அந்த கார்ப்பெண்டர்கள் என்னடா என்று பார்ப்பார்கள். அங்கிருக்கும் நாலைந்து டி.விக்களில் ஒரு டி.வி.யில் மட்டும் அவள் கையை காதலன் விடாமல் பிடித்திருக்க, அந்த டயலாக் கேட்டுக் கொண்டெ இருக்கும். மெதுவாக கேமராவை மேலே கொண்டு சென்றால், அந்த டி.வி-யின் மேல் ஃபெவிகால் டப்பா!
.
அதே போல எம்.சீலுக்கு ஒளிபரப்பான உயில் விளம்பரம், (ஒரு லட்சமோ, கோடியோ எழுதியிருப்பதில் ‘1’ என்ற எண் மட்டும் நீர் பட்டு அழியும்), ஹால்மார்க் க்ரீட்டிங்ஸ் கார்டுக்கு வந்த ஒரு விளம்பரம், (மழையில் நனைந்தபடி ஒரு க்ரீட்டிங் கார்டை மார்போடு அணைத்தபடி, கஷ்டப்பட்டு நனையாமல் கொண்டு சென்று, கோவித்துக் கொண்டு செல்லும் காதலியை அடையும் காதலன், அந்தக் கார்டை அவளிடம் கொடுப்பான். பிரித்தால் ‘ஸாரி’ என்றிருக்கும். அவ்வளவு நேரம் மழை நீரில் நனையாது காத்த அந்த கார்ட், நனையும்.. அவள் கண்ணீரால்!), ஃபெவிக்விக் மீன் பிடி விளம்பரம் (ரொம்ப நேரம் ஒருத்தன் மீன் பிடிக்காமல் கஷ்டப்பட, திடீரென வரும் ஒரு கிராமவாசி குச்சி ஒன்றில் 1,2,3,4 என ஃபெவிக்விக்-கைத் தடவி, நீருக்குள் விட்டு வெளியில் எடுக்க, நாலு மீன் ஒட்டி இருக்கும்), பஜாஜ் க்ளாஸிக் ஸ்கூட்டருக்கு வந்த ஒரு விளம்பரம் (ஸ்கூட்டரில் செஸ் ஆடிக்கொண்டே செல்வார்கள் – அவ்வளவு அலுங்காமல், குலுங்காமல் போகுமாம்!), DHL கொரியருக்கு வந்த ஒரு விளம்பரம், (கொலம்பஸ் கடலில் நீந்தி கரை சேர்ந்து ஒரு நாட்டைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில், கூக்குரலிடும்போது, கரையிலிருந்து வரும் DHL பணியாளர் ‘கொலம்பஸ்.. எ லெட்டர் ஃபார் யூ’ என்று அவரிடமே கொரியர் டெலிவரி பண்ணுவது), பஜாஜ் பைக்குகளின் விளம்பரம் என்று வித்தியாச விளம்பரங்கள் என் மனதை கொள்ளை கொள்ளும்!

பேசியது போதும்... இனி கொஞ்ச நேரம் கீழே இருக்கும் விளம்பரங்களை ரசியோ ரசி என்று ரசியுங்கள்!













































































































எப்படி? அசத்தலா இருக்குல்ல?

இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகிட்ட வாலுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகள்!


வித்தியாசமான விளம்பரங்களின் (மேலே இருப்பது போல) தொகுப்பு புத்தகம் பற்றிய தகவல்களை லக்கிலுக் போன்ற அத்துறையில் இருப்பவர்கள் தந்தால் மகிழ்வேன்! (கஷ்டப்பட்டு, காசு சேர்த்து வாங்கத்தான்..!)



பி.கு. 1: என் மகளை நல்லதொரு அட்வர்டைஸிங் டைரக்டர் ஆக்கும் ஆவல் உண்டு. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

பி.கு 2: பேனா விளம்பரத்துக்காக ஒரு கான்செப்ட் வைத்திருக்கிறேன். யாருக்காவது வேணுமா? 

Friday, September 19, 2008

பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!



டைட்டிலில் இருந்து ஆரம்பமாகிறது அதகளம். தென்னை மரத்தில் பலா, புஷ்ஷூடன் கை குலுக்கும் பின் லேடன், பூச்செடிகளுக்கு நீரூற்றும் பீரங்கி வண்டி (நல்ல கற்பனை!), நிலாவில் விவசாயி என்று டைட்டில் போடும் போதே போஸ்ட் கார்ட் படங்களில் சிரிக்க வைக்க ஆரம்பிக்கிறார்கள். அதில் டாப் க்ளாஸ் இன்னொரு விமானத்தை ‘டோ’ பண்ணியபடி பறக்கும் விமானம்!

டைட்டில் அதகளம் என்றால் ஆரம்பக் காட்சி அமர்க்களம். சாவு வீட்டில் சைட்டடிக்கும் இளைஞர்கள், எழவு விசாரிக்க வந்த அப்பாவின் நண்பரிடம் ‘சார், நேத்து மேட்ச் பார்த்தீங்களா’ என விசாரிக்கும் இறந்தவரின் இரண்டாவது மகன். மகளோ, “அம்மா இந்த ட்ரஸ் நல்லாயிருக்கா. இன்னைக்கு சண்டே. அப்பா வேற செத்திருக்காரு. நிறைய பேரு வருவாங்கள்ல வீட்டுக்கு..” என்று அம்மாவைக் கேட்கிறாள். அம்மாவோ, “சீக்கிரம் காரியம் முடிஞ்சா பரவால்ல. பதினோரு மணிக்கு சீரியல் போட்டுடுவான்” என்று கவலைப் படுகிறாள். மூத்த மகனோ கார் சாவியைத் தேடி, ‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். கார் சாவியை பாக்கெட்ல வெச்சிருப்பாரு’ என்று புலம்பியபடி வெள்ளைத் துணி போர்த்தியபடி கிடக்கும் அப்பாவின் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.

நல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி படம் பார்க்கத் தொடங்கலாம்!

ப்ளாட் வாங்குவதே கனவாகக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பத் தந்தை, (நெடுமுடி வேணு) அவரது இரண்டு மகன்கள், (கார்த்திக் & ஓம்) அவரை ஏமாற்றும் பேபி சார், (நாசர்), அதை ஆசிப் அலி (பாஸ்கி)யுடன் சேர்ந்து கார்த்திக் எப்படி பழிவாங்கி முறியடிக்கிறார் என்பதே கதை.

கதையை விடுங்கள். அதை நகைச்சுவை தேன் கலந்து தந்தவிதம் சூப்பர். இடைவேளை வரை சிரிக்க வைத்தவர்கள், இடைவேளைக்குப் பிறகு விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.

தம்பி ஓமின் நடிப்பு பிரமாதம். அவர்தான் கிட்டத்தட்ட ஹீரோ. தங்கள் இடத்தில் நாசர் கட்டிய காம்பவுண்டைத் தகர்க்க ரௌடி கும்பலை அவர் அழைத்து வருவது காமெடி தர்பார். ‘நாங்கள்லாம் யாரு? சும்மாவா.. டெர்ரர்ல?’ என்றபடி வரும் அந்த ரௌடி கும்பல் தலைவன் தனது சாகசங்கள் அடங்கிய போர்ட்ஃபோலியோவைக் காட்டுவது சிரிப்பென்றால், காம்பவுண்டை இடிக்கும்போது, ஒரு ஃபோட்டொகிராஃபர் சுற்றி சுற்றி வந்து படம் பிடிப்பது சிரிப்போ சிரிப்பு!

ஹீரோயின் ஏதோ ஒரு விளம்பரத்தில் வருபவர் என்பது தெரிகிறது. ஹீரோவும், ஹீரோயினும் உட்கார்ந்து காபி சாப்பிடும் காட்சிகள் விளம்பரம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நெடுமுடி வேணு மனைவி கேரக்டரில் நடிப்பவரின் டயலாக் டெலிவரி, அசல் சீரியல் டைப்! பல சீன்கள் தொடர்நாடக எஃபெக்டில் இருப்பது மைனஸ் பாய்ன்ட்.

அதுவும் ஹீரோ தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்கு நடித்துக் கொடுத்திருப்பார் போல.. அஞ்சு பைசாவுக்கு கூட அவர் முகத்தில் குஷியே இல்லை. வேண்டா வெறுப்பாக இருப்பது போல ஒரு உம்மணாமூஞ்சி கதாபாத்திரம். ஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது ஹீரோவுக்கு வர வேண்டுமே.. ம்ஹூம்! ஹீரோவின் பாத்திரப் படைப்பில் சறுக்கிவிட்டார் டைரக்டர்!

இடைவேளைக்குப் பிறகு படம் நால்வரின் ரணகளத்திலேயே நேரம் போவதே தெரியாமல் ஆக்கிவிடுகிறது! நாசர், அவரது பி.ஏ.வாக வரும் ஜான்விஜய் (தகவல் நன்றி: லக்கி), மௌலி, அவரது பி.ஏ.வாக வரும் பாலாஜி (ஜெயா டி.வி. காம்பியரர்)

நாசர்: எத்தனை நாளாச்சு இப்படி இவரைப் பார்த்து. அதுவும் குடித்துவிட்டு சேடடை பண்ணும் காட்சியில் ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். சிரித்து, சிரித்து வயிறு வலித்துத் தொலைக்கிறது!

ஜான்விஜய்: அசால்ட்டான நடிப்பு. ஒரு ஃப்ராடின் பி.ஏ.வுக்குரிய அத்தனை பாடி லேங்குவேஜையும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் ஸ்டேஷனில் நெடுமுடிவேணுவிடம் “பேபி சாருக்கு ஒன்ன ரொம்பப் புடிச்சுப் போச்சுய்யா” என்று சிரித்தபடி பேசும் காட்சி டாப். டயலாக் டெலிவரிக்கு ஸ்பெஷல் ஷொட்டு!

மௌலி: கேட்கவே வேண்டாம். நடிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. நடிக்க வராதது போல நடிக்கும் சீன்களில் சபாஷ் பெறுகிறார். ‘நான் என் மகளுக்காக இதைச் செய்யறேன்’ என்று சொல்லிவிட்டு, ஹீரோ தலையாட்டி முடிக்கும் முன், ‘அவ உனக்காகச் செய்யறா’ என்று சொல்வது உட்பட பல இடங்களில் தந்தைப் பாசத்தை அழகாக காட்டியிருக்கிறார். காசு வாங்கிவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் ‘மொதல்ல தண்ணி குடுங்கப்பா’ என்று கேட்கிறாரே.. எத்தனை பேர் கவனித்தார்களோ!

பாலாஜி: புதுமுகமா? ஆனாலும் சபாஷ் சாரே! ஃபிஷ்ரிஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளை விரட்டும் இடத்தில் விலா நோக வைக்கிறார்!


நெடுமுடிவேணு நடிப்பும் சொல்லியே ஆகவேண்டிய ஒன்று. சோகம் ததும்பியே இருக்கும் (30 லட்சத்தை முழுசா கோட்டைவிட்டா வேற எப்படி இருக்கும்?) இவரது சீன்களில் எல்லாம் மலையாள ஆர்ட் பட வாசனை! பீட்சாவுக்கு சட்னி, சாம்பார் கேட்கும் இவர், மௌலி பணம் வேண்டாம் என்று திரும்பி வரும்போது சந்தோஷமாக அவரைக் கவனிக்கும் பாங்கில் நெடுமுடியின் கேரக்டரைப் பதியவைத்து விடுகிறார் இயக்குனர்!


பாஸ்கிக்கு சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு படம்.


க்ளைமேக்ஸ்?

அப்படின்னு ஒண்ணு இல்லைங்க!

நான் புதனன்று இந்தப் படம் பார்க்கும் போது என்னுடன் சேர்த்து முதல் க்ளாஸில் 20 பேரும், கீழே 68 பேரும் ஆக மொத்தம் 88 பேர்தான் தியேட்டரில்! கஷ்டமாக இருந்தது. (மெனக்கெட்டு எண்ணினோம்ல?)

குசேலன், குருவி என்று ஸ்டார்களைப் போட்டு, நம்மை சோதிப்பதற்குப் பதிலாக இந்த மாதிரி நகைச்சுவையுடன் கூடிய படங்கள் அவசியமாய் தேவைப்படுகிறது.

ஆனால் வசனங்கள், காட்சிகள் எல்லாமே காமெடி சீரியல் பார்க்கும் எஃபெக்டைத் தருவதால், தமிழக மக்களுக்கு இந்தப் ப்டம் பிடிக்குமா, இங்கே இந்தப் படம் எதிர்பார்த்த (யாரு? என்னை மாதிரி ஆளுக எதிர்பார்த்த) வெற்றியைப் பெறுமா என்று எங்களைக் கேட்டால்.......


பொய் சொல்லப் போறோம்....வெற்றிபெறும்!

Thursday, September 18, 2008

பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்!

கடந்த வெள்ளிக் கிழமை அதிஷா என்னை வந்து சந்தித்ததை சனிக்கிழமை பதிவாகப் போட்டுவிட்டு அதிஷாவுக்கு கூப்பிட்டேன்.

“நம்ம சந்திப்பை அதிஷாவுக்கு நேர்ந்த கொடுமை-ன்னு பதிவு போட்டுட்டேன் நண்பா” -ன்னேன்.


“எல்லாருக்கும் நான்தான் கிடைச்சனா? இப்பதான் நர்சிம் கூப்ட்டு எனக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறதா சொன்னார்” என்றார் அதிஷா.

எனக்குள்ளிருந்த குறும்பன் (குசும்பன் ஃப்ரெண்டு!) விழித்துக் கொள்ள... என் செல்லிலிருந்து அடுத்த அழைப்பு நர்சிம்முக்கு போனது.

“பாஸ்... அதிஷாவுக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறீங்களா?”

“ஆமா கிருஷ்ணா... ஆனா நான் சிஸ்டம்கிட்ட போக கொஞ்ச நேரமாகும். நீங்க எழுதறீங்களா?” என்று கேட்டார் நர்சிம்.

நான் அப்போது ஒரு வீக்லி மீட்டிங்கின் ஆரம்பத்தில் இருந்தேன். (வெளங்கிடும்!)

”எனக்கும் லேட்டாகுமே பாஸ். நீங்க எழுதிடுங்க. கொஞ்ச நேரத்துல நான் அதை சூடான இடுகைல கொண்டு வந்துடறேன்” என்றேன்.

அடுத்த சில மணித்துளிகளில் நர்சிம்மிடமிருந்து அழைப்பு.

காரில், லேப்பின் டாப்பில் லேப்டாப்பை வைத்தபடியே டைப்பி முடித்திருந்தார் மனுஷன்!

“கிருஷ்ணா.. படிக்கறேன் கேளுங்க” என்று முழுப் பதிவையும் படித்தார்.


“செந்தழல் ரவியும் வர்றாரு பாஸ். அதையும் கடைசில மென்ஷன் பண்ணிடுங்க” என்றேன்.

எழுதி, பதிவேற்றி விட்டார்!

கொஞ்ச நேரத்தில், வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையை முடித்துவிட்டு நர்சிம்மின் பதிவில் போய், சீரியஸாக ஒரு பின்னூட்டத்தைப் போட்டு, பார்ப்பவர்கள் உண்மை என்று நினைக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

நர்சிம்மின் பதிவைத் திறந்தபோது அதில் நான் மிக மதிக்கும் பதிவர்கள் இருவர் அதிஷா திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். பைத்தியக்காரன் முதல் பின்னூட்டம் போட்டிருந்தார். அதேபோல ஜ்யோவ்ராம் சுந்தரும் பின்னூட்டம் போட்டிருந்தார். (மற்ற பின்னூட்டம் போட்டிருந்தவர்கள் விஷயம் தெரிந்து கிண்டலடித்திருந்தார்கள்)

படித்து கஷ்டமாகப் போய்விட்டது. அதில் ஜ்யோவ்ராம் சுந்தர் உடனே நர்சிம்முக்கு அலைபேசி “என்ன நடக்குது இங்கே” என்று விசாரித்திருக்கிறார். நர்சிம்மும் உண்மையைச் சொல்லிவிட்டார்.

“இதெல்லாம் பேசி வெச்சுட்டுதான் பண்றோமுங்க”என்று.

உடனே ஜ்யோவ்ராம் சுந்தர் சாரும் (அதாவது ஜ்யோவ்ராம் சுந்தரை ‘சார்’ங்கறேன். வேற ‘சாரு’ம் இல்ல!) “அப்படியா, இருங்க நானும் கும்மறேன்” என்று என்னைத் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டார்.

நானும் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஜ்யோவ்ராம் சுந்தர் சாருக்கு அலைபேசி “தப்பா நெனைச்சுக்காதீங்க தலைவா” என்று சொல்லிவிட்டேன். எத்தனையோ நாளுக்கு முன் அவரது அலைபேசி எண் கிடைத்திருந்தாலும் ‘அவ்ளோ பெரிய மனுஷன்கிட்ட ஒரு மொக்கைச்சாமி என்ன பேசிவிட முடியும்’ என்று பேசவில்லை. முதல் பேச்சே இப்படி அமைந்துவிட்டது!

அன்று (சனிக்கிழமை) இரவு ஒரு வெளிநாட்டு அழைப்பு. என் இனிய நண்பர் வெற்றிகரமான மகிழ்ச்சியானவர் அழைத்தார்.

“பரிசல்... இப்போ நான் உங்க ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுல பெருமைப் படறேன்” என்றார்.

“அப்படியா? இப்படி நீங்க ஃபீல் பண்ர அளவுக்கு என்ன ஆச்சு?” என்றேன்.

“அதிஷாவோட காதல் திருமணத்துக்கு நீங்க உதவுறீங்களே.. அதைச் சொன்னேன்” என்றார்.

கொஞ்ச நேரம் புரியாமல் முழித்து, அடடே' என்று சுதாரித்து ஸ்க்ரீன் ப்ளேவில் செட்டிலாகி.. “அதுக்கென்ன வி**? (பேரைச் சொல்லக்கூடாது!) நான் கூட லவ் மேரேஜ்தான். உதவ மாட்டேனா?”

“எப்ப கல்யாணம்?”

“நாளைக் காலைல 7.30 - 9. பொண்ணு இங்க என் வீட்லதான் இருக்காங்க, பேசறீங்களா? வாழ்த்து சொல்லுங்க” என்றேன். (‘சரி.. லைன் குடுங்க’ என்றால் கடகடவெனச் சிரித்து உண்மையைச் சொல்லிவிடலாம் என்ற நினைப்பில். ஆனா நான் இன்னும் இ.வா-வாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நின்றால் நானென்ன செய்யமுடியும்?)

“இல்ல பரிசல். நான் இப்போ ஒரு மார்க்கமா இருக்கேன். காலைல கரெக்டா 9.30 மணிக்கு கூப்ட்டு வாழ்த்தறேன்” என்றார்.

அடுத்த நாள் இன்னொரு பூப்போன்ற வெள்ளை மனதுக்காரர் (இதுக்கு நீ பேரையே சொல்லித் தொலைச்சிருக்கலாம். நீயும் உன் கிசுகிசுவும்..) ஃபோன் செய்தார். அவருக்கு உண்மை தெரியும் என்று நினைத்தேன். அவர் எப்போதுமே கொஞ்சம் ஜாலியாகப் பேசக்கூடிய பேர்வழி. சீரியஸாக பேச ஆரம்பித்தார். ‘ஓஹோ.. உண்மையைத் தெரிஞ்சுகிட்டு என்கிட்டயே நடிப்பா’ என்று நினைத்துக் கொண்ட நான் ஸ்க்ரீன் ப்ளேவை பக்காவாக மெய்ன்டெய்ன் செய்து பேசி முடித்தேன்.


அதுக்கப்புறம் அடுத்த நாள் அதிஷாவோட தங்கை மகள்கள் காதுகுத்துக்கு நானும். செந்தழல் ரவியும் போறப்ப ஈரோட்டிலிருந்து கார்த்திக் கூப்ட்டார். அவர்கிட்ட “பொண்ணு மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாடி போய்ட்டிருக்கோம்”ன்னேன். முடிஞ்சு கீழ வந்தப்ப எனக்கு நிறைய மிஸ்டு கால் அலர்ட்ஸ் இருந்தது. அதுல ரெண்டு, மூணு அந்த வெளிநாட்டுப் பதிவர்கிட்டேர்ந்து. அன்னபூர்ணால சாப்பிட்டுடு அவருக்கு ‘கூப்டுங்க’ன்னு மெசேஜ் குடுத்தேன். கூப்ட்டாரு.

“அதிஷாவுக்கு லைன் குடுங்க. வாழ்த்திக்கறேன்:” ன்னாரு. அதிஷாகிட்ட பேசிட்டு மறுபடி என்கிட்ட “என்னங்க.. அவரு கல்யாணம் முடிஞ்சுடுச்சான்னா காதுகுத்துக் கல்யாணம்-ங்கறாரு?” ன்னு பாவமா கேட்டாரு. ஒருத்தரை எவ்ளோ நேரம்தான் கலாய்க்கறதுன்னு நானும் உண்மையச் சொல்லீட்டேன்!

யோசிச்சுப் பார்த்தா, இது தப்போன்னு மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. முக்கியமா ஏமாந்த ரெண்டு, மூணு பேர் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தான். கெட்ட வார்த்தைல திட்டினாலோ, திரும்பி நில்லுடா’ன்னு சொல்லி முதுகுல நாலு போடு போட்டாலோ நானும், நர்சிம்மும் வாங்கிக்குவோம். அவங்களும் உரிமையோட அடிப்பாங்க...

ஆனா பைத்தியக்காரன் மாதிரி ஒரு மதிப்புமிக்க பதிவர், கும்மி, மொக்கையெல்லாம் தெரியாத ஒரு நல்ல மனுஷன் மனசு ‘என்னடா.. இப்படியெல்லாமா விளையாடறது’ன்னு இதுனால கஷ்டப்பட்டிருக்குமோ நினைக்கறப்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு. ரெண்டு நாளா இதுக்கு ஒரு மன்னிப்பு பதிவு போடணும்னு கெடந்து துடிக்குது.

இது ஏதோ ஜாலிக்காக சம்பந்தவங்கிட்ட அனுமதி வாங்கிப் பண்ணினதுதான்னாலும், நேரடியாகவும், மறைமுகவாகவும் இதுனால எங்களைத் தப்பா நெனைச்ச எல்லார்கிட்டயும் நானும், நர்சிம்மும் மன்னிப்பு கேட்டுக்கறோம். கொலை செஞ்சவனை விட, உடந்தையா இருக்கறவனுக்குதான் தண்டனை அதிகம்-ங்கறா மாதிரி.. நானே பதிவு போட்டு ஸாரி கேட்டுக்கறேன். ஏன்னா, எனக்கு நல்லா தெரியும்.... நர்சிம் கிட்ட ‘இதெல்லாம் வேணாம் பாஸ்’ன்னிருந்தா அவரு கேட்டுகிட்டிருப்பாரு. நல்ல மனுஷன். தப்பு என் மேலதான்.


பி.கு:-
பதிவு ரொம்ப சீரியஸா முடியற மாதிரி இருக்கறதால் ஒரு மேட்டரைச் சொல்லி, முடிச்சுக்கறேன். ‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!

Wednesday, September 17, 2008

வாழ்க ஜனநாயகம்!

எனது நண்பர் தங்கியிருந்த காம்பவுண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்போது எழுதுகிறேன்...

சின்ன சின்ன பத்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட். இவர் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் சனிக்கிழமை... இரவு ஒரு மணிக்கு இவரது வீட்டிற்கு எதிர் வரிசை வீடொன்றிலிருந்து சத்தம் வரவே வெளியே வந்து பார்த்திருக்கிறார். வடநாட்டிலிருந்து வந்து இங்கே பணிபுரியும் சில இளைஞர்களிருந்த அறையிலிருந்துதான் சத்தம். ‘தண்ணியப் போட்டுட்டு இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சு’ என்று புலம்பியபடி வீட்டிற்குள் சென்றவர், கொஞ்ச நேரத்தில் ‘அலப்பறை’ அதிகமாகவே வெளியே வந்து
அவர்களின் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார். ஒருத்தன் மேல் இருவர் அமர்ந்து தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்த நம் நண்பருக்கு அதிர்ச்சி!

"பாதகம் செய்பவரைக் கண்டால்.." பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.. உடனே வீறுகொண்டு.. ‘ஏய்.. ஃபேமிலியெல்லாம் குடியிருக்கற காம்பவுண்ட்ல சும்மா இருக்க முடியாதா?’ அவ்வளவுதான்.. "அவனை அடிங்கடா.." என்று இவரை நோக்கி வருகிறார்கள்.. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சத்தம் அதிகமாகவே-பக்கத்து தெருவில் இருக்கும் தனக்கு தெரிந்த வார்டு உறுப்பினர் ஒருத்தருக்கு அலைபேசி அழைத்து வரச்சொன்னார்.

உடனே வந்த அவரிடமும் “ஏய்.. வந்துட்டாருடா நாட்டாமை” என்று தண்ணி பார்ட்டி இளைஞர்கள் வம்பு பேசிவிட, உடனே அவர் ரோந்து வந்து கொண்டிருந்த போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்ததும்... கொஞ்ச நேர விசாரணைக்குப் பிறகு ‘தண்ணி’யடித்திருந்த இளைஞர்களை ஜீப்பில்
ஏற்றிவிட்டு...


"யாருப்பா கம்ப்ளைய்ண்ட் பண்ணினது?"

உடனே சுதாரித்த வார்டு உறுப்பினர் நமது நண்பரை அழைத்து..

"சொல்லுப்பா.. என்ன நடந்தது?"

நம்ம ஆளு பாரதியார் வெறியன் வேறயா... ‘ஆஹா.. சமூகத்துக்கு ஒரு நல்லது செய்யறோம்’ என்று தன் மனதில் இருந்ததெல்லாம் கொட்டுகிறார்.

"வாரா வாரம் இதே கூத்துதான் சார். வாரா வாரம் சனி, ஞாயிறுல தண்ணி போட்டுட்டு ரகளை பண்றது, கேமரா செல்ல வெச்சுட்டு வெளில உட்கார்ந்து போற வர்றவங்களை படம் புடிக்கறது வேற..-ன்னு இவங்க பண்ற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்ல சார்.."

"சரி தம்பி, நீ என்ன பண்ற.. ஹவுஸ் ஓனரையும் கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா"


மணி இரவு இரண்டு! அந்த நேரத்தில் ஹவுஸ் ஓனரை எழுப்பி, அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு போகிறார்.

விடிகாலை நான்கு மணிவரை நடந்த பஞ்சாயத்து.. ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்கிறது. (அதாவது நம்ம ஹவுஸ் ஓனரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள்!)

உடனே நமது நண்பர்..

"நாங்க கம்ப்ளைன்ட் பண்ண வந்தோம், நாங்க ஏன் பணம் குடுக்கணும்?"

"ஆங்? என்னப்பா தம்பி என்னமோ கேக்குறாரு?" என்று போலிஸ் கேட்டதும் பதறுகிறார் ஹவுஸ் ஓனர்..

"சும்மா இருப்பா.. நான் அந்த ஏரியால நிம்மதியா இருக்க வேண்டாமா? சும்மா தூங்கிட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து மாட்டிவிட்டுட்டு, கேள்வி வேற கேட்குற..." என்று நம் நண்பரை அதட்டி விட்டு.. போலீசிடம்..

"அவ்வளவு பணமில்ல சார் இப்போ.."

"பரவாயில்ல.. நம்ம தம்பி இருக்காரில்ல.. இவர்ட்ட நாளைக்கு குடுத்து விடுங்க.." (நம்மாளுதான்!)

வெளியே வந்த போது தான் நம்ம நண்பருக்கு தெரிந்திருக்கிறது.. யார் மீது கம்ப்ளைய்ண்ட் பண்ணினாரோ அந்த இளைஞர்கள் ஏற்கனவே பேரம் படிந்து அறைக்கு போய்விட்டார்கள்!

"என்ன கொடுமை சார் இது?" என்று ஹவுஸ் ஓனரைப் பார்த்து கேட்டவருக்கு அடுத்த கொடுமை காத்திருக்கிறது..

"இந்தா ஐநூறு ரூபா.. நாளைக்கு வந்து குடுத்துடு"-என்கிறார் ஹவுஸ் ஓனர்.

"ஏன் சார்.. பணம் வெச்சிருக்கீங்கள்ல? குடுத்திருக்க வேண்டியதுதானே?"

"மூடிட்டு வா. உனக்கு அதெல்லாம் தெரியாது.."

அடுத்த நாள்.. ஞாயிறு..

காலை ஆறு மணிக்குதான் படுத்தாலும், வேறு வழியில்லாமல் ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்து (அந்த ‘அலப்பறை’ இளைஞர்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க..) ஸ்டேஷன் போய்.. பல குற்றவாளிகளுக்கு நடுவே.. சங்கடப்பட்டவாறே நின்று.. பேரம் பேசி காசைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்!

திரும்பி ரூமுக்கு வந்த போது.. அந்த இளைஞர்கள் சண்டே ஸ்பெஷல் மதிய உணவுக்காக.. சுதி ஏற்றிக்கொண்டிருந்தார்களாம்!

வாழ்க ஜனநாயகம்!

பின் குறிப்பு: வேலை அதிகமென்றால் மீள்பதிவன்றி வேறு வழியில்லை!

Tuesday, September 16, 2008

அதிஷாவுடன் ஒரு நாள்...

ஞாயிறு காலை ஒரு திருமணத்துக்குப் போய், அங்கிருந்து அதிஷாவின் தங்கை மகள் காதுகுத்துக்குப் போவதாய் திட்டம். (இந்தத் திட்டம் கார்க்கிக்கு தெரியுமா?)

மண்டபத்தில் இருந்தபோது செந்தழல் ரவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. ஃபோனை எடுக்கவா, இல்லை ‘எதுவும் செய்ய வேண்டாம் பாஸ்’ என்று பேசாமல் இருப்பதா என்று குழம்பி பிறகு எடுத்து அவரை வடவள்ளியில் நிற்கச் சொல்லிவிட்டு, போய் அவரைச் சந்தித்து அழைத்துக் கொண்டு இருவருமாய் மருதமலை சென்றோம்.

போகிற வழியிலேயே “நான் எதுக்கு காதுகுத்துக்கெல்லாம் வரேன்?” என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார். “எனக்கெப்படித் தெரியும்? இப்ப வர்றீங்களா இல்லையா?” என்று மிரட்ட வேண்டியதாயிற்று.

நாங்கள் மருதமலையை அடைந்தபோது ‘பதிவர்கள் கூட்டத்தால் மருதமலை அதிர்ந்தது’ என்று எழுத ஆசைதான். ஆனால் எங்கள் இருவரைத்தவிர அங்கு பதிவர்கள் என்று யாருமே இல்லை. அதிஷா கூட இல்லை! கூப்பிட்டால் ‘வந்துட்டே இருக்கேன் கிருஷ்ணா’ என்றார்!

நானும் செந்தழல் ரவியும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரவி அவரது வேலையைப் பற்றி மிக சுவாரஸ்யமாய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் கழித்து அதிஷா அவரது குடும்பத்தாரோடு வந்து சேர்ந்தார். கோயிலை நோக்கிப் போகும் போது, வழியிலேயே ஒரு கரம் என் தோளைத் தொட்டது. (தமிழ்வாணன் நாவல் படிக்கற மாதிரி இருக்கா?) திரும்பினால், வடகரை வேலன். நால்வருமாய் இன்னும் கொஞ்ச நேரம் நடந்தபோது ‘ஈரவெங்காயம்’ சாமிநாதன் அவரது மனைவியோடு நின்றுகொண்டிருந்தார்.




வடகரைவேலன், அதிஷா, செந்தழல்ரவி, சாமிநாதன், பரிசல்காரன் (இதை அரபிக் ஸ்டைலில் படிக்கவும்!)

சீக்கிரம் காதுகுத்துவாங்கன்னு பார்த்தா, அதிஷாவோட அம்மா ‘மொதல்ல எல்லாரும் உக்காருங்க’ன்னு சாப்பாடு போட்டாங்க. வயிறு முட்ட சாப்பிட்டப்புறம் எங்க பதிவர் சந்திப்பு நடத்துறது? ஆளாளுக்கு கொஞ்ச நேரம் மொக்கையாப் பேசீட்டு இருந்தோம். சாமிநாதன் அவரோட மனைவிகூட சென்னை சில்க்ஸ் புதிய கிளைக்கு போகணும்ன்னு சொல்லி கிளம்ப, செந்தழல் ரவியும், அவரோட மனைவி சீக்கிரம் வரச் சொல்லியிருக்காங்கன்னு சாமிநாதன் கூடவே கார்ல போய்ட்டாரு.

அதுக்கப்புறம் அதிஷாவோட தங்கை குழந்தைகள் ஹரிணி, சிவாஷினிக்கு மொட்டை போட்டு, காது குத்தற வைபவம் நடந்தது. நானும் வடகரை வேலனும் இருந்து குழந்தைகளை வாழ்த்தினோம்.




(ஹரிணிக் குட்டியும், அதிஷாவும்)


(சிவாஷினியும் அதிஷாவும்)

அதற்குள் வடகரை வேலனுக்கு அவரது மகளிடமிருந்து மிரட்டல் வரவே, அவரும் கிளம்பிவிட்டார்.


(ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு!!)

‘காலையிலிருந்தே தம் அடிக்கல’ என்று புலம்பிக் கொண்டேயிருந்த அதிஷா அவரது வீட்டாரிடம் அனுமதிபெற்றுக் கொண்டு என்னோடு வந்தார். மருதமலையை விட்டு பைக்கில் இறங்கும்போதுதான் கவனித்தேன். வழியெங்கும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அதிஷாவிடம் புலம்பியபோது அவர் சொன்னார்.....


வேண்டாம். அவருகிட்டயே கேட்டுக்கங்க.


இருவருமாக அன்னபூர்ணா சென்று சில்லி புரோட்டா சாப்பிட்டுவிட்டு (இதெல்லாம் யாருய்யா கேட்டா... பதிவெழுத மேட்டர் இல்லீன்னா இந்தக் கொடுமையெல்லாம் பண்ணக் கூடாது..) நேராக சஞ்சய் வீட்டுக்குப் போனோம்.

ஞாயிறன்று கூட பொறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்த சஞ்சய் எங்களை வரவேற்று உபசரித்தார். அவரும், அதிஷாவும் பழைய தோஸ்த் ஆகையால் நான் சும்மா அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.


(சஞ்சயும் அதிஷாவும் பின்னே ஞானும்)


அதற்குப் பிறகு என் ப்ரதர்-இன்-லா வீட்டுக்குப் போய், அங்கிருந்து அதிஷா வீட்டுப் போய் அவரை பத்திரமாக ஒப்படைத்தேன்.


(அதிஷா வீட்டில் ஹரிணி)

பி.கு: அதிஷாவோட தங்கை மகள் ஹரிணி செமயா போஸ் குடுக்குதுங்க!

Monday, September 15, 2008

PIT போட்டி - உதவுங்கள் ப்ளீஸ்!!

இன்னைக்கு சில அவசர அவசிய காரணங்களுக்காக வெளியூர் போக வேண்டி இருக்கறதால நேத்து நடந்த அதிஷா இல்லத் திருமணம் குறித்தும் (காதுகுத்துக் கல்யாணம்க..), பதிவர் சந்திப்பு குறித்தும் (நாட்டுல இந்தப் பதிவருங்க தொல்லை தாங்க முடியலைப்பா) நாளைக்கு எழுதறேன். இப்போதைக்கு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


இதுல எதை PIT போட்டிக்கு அனுப்பறதுன்னு கன்னாபின்னான்னு குழம்பி, போட்டிக்கு நம்ம தேர்ந்தெடுக்கப் பட்டதே பெரிய விஷயம்டா... இதுல ரொம்ப யோசிச்சு ஜெயிக்கணும்கற ஐடியாவெல்லாம் எதுக்கு-ன்னும் தோணுது!

இன்னைக்கு நைட் பன்னெண்டு மணிவரைக்கும் அனுப்பலாம்ல? அதுனால உங்க யோசனைகள் தேவை.. ப்ளீஸ்...









மொதல்ல காது குத்து நடந்த அதிஷாவோட தங்கச்சி குழந்தைகள் ஹரிணி, சிவாஷினிக்கு வாழ்த்து சொல்லீடுங்க. (தலீவா, வீட்ல சொல்லி சுத்திப் போடச் சொல்லுப்பா. )









இது திண்டல் மலை முருகன் கோயில். இந்தப் படத்தை அனுப்பலாமா?








இது மருதமலைல எடுத்தது. ராஜகோபுர கட்டுமானப் பணி நடக்குது.





இது கோவை ராம் நகர்ல எடுத்தது. குறுக்கால இருக்கற மின்கம்பிகள் படத்தைக் கெடுக்குது. அதையெல்லாம் நீக்கற டெக்னாலஜியெல்லாம் நமக்குத் தெரியாது.


இந்த மூணுல எதை அனுப்ப? ப்ளீஸ்.. சொல்லுங்கப்பூ...