Saturday, October 11, 2008

அறிவில்லையா உங்களுக்கு? மனிதாபிமானமே இல்லையா?


வெள்ளிக்கிழமை.

பேருந்து நிறுத்த மக்கள், காலணி தைக்கும் தாத்தா, இளநீரை லாவகமாகப் பிடித்து வெட்டும் பெண் தொழிலாளி, முடியைப் பின்னாமல் ஃப்ரீ ஹேரில் சென்று கொண்டிருக்கும் கேரளத்துப் பெண்கள், சாலையோரக் கோயிலில் கூட்டம் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தான் அவன்.

வந்து கொண்டிருக்கும்போதே... கொஞ்சம் தூரத்தில் சிறுகூட்டம் கூடுவதைக் கவனித்தான்.

பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினான்.

ஒரு டி.வி.எஸ். தாங்கவே தாங்காத பாரத்தோடு குப்புறக்கிடந்தது. இரண்டு இளைஞர்கள் அதைத் தூக்கி சரிப்படுத்தி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். தென்னைமர ஈர்க்குச்சியால் நெய்யப்பட்ட விளக்குமாறு பாரம்.

கொஞ்சம் தள்ளி, 45-50 வயதுக்குட்பட்ட மனிதர் உட்கார்ந்த வாக்கில் முதுகு காண்பித்து கிடந்தார். அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அவருக்கு அருகில் நான்கைந்து பேர் ‘உயிர் இருக்கோ... இல்லையோ’ என்று முனகியபடி பக்கத்திலே போகவே பயந்து நின்றிருந்தனர்.

இவன் தயங்காமல் அவர் அருகில் என்று அவரது முகத்தைத் தூக்கினான். அவர் கண்களை மெதுவாகத் திறந்தார். முகம் பீதியில் உறைந்திருந்தது. கை பதட்டத்தில் நடுங்கியபடி இருந்தது.

‘உங்களுக்கு ஒண்ணுமில்லண்ணா. பயப்படாதீங்க. ..” என்றபடியே அவரது தலையில் எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தான்.

இல்லை.

“அடிச்சுட்டுப் போய்ட்டான்.. வேணும்னே என் வண்டி மேல மோதறமாதிரி வந்து என்னைக் குப்புறத் தள்ளீட்டான்” என்று புலம்பினார் அவர்.

“என்ன வண்டிண்ணா?”

“பைக்” - இப்போது அவர் குரல் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. இதற்குள் ஒன்றிரண்டுபேர் தண்ணீர் பாட்டில் கொண்டு வர அவர் தண்ணீர் குடித்தார்.

இவன் பேசிக் கொண்டே அவரது கை, கால்களைப் பரிசோதித்தான். சிராய்ப்புக் காயங்களிலிருந்து சின்ன அளவில் ரத்தம் வந்துகொண்டிருந்தது.

“டி.வி.எஸ் ல இவ்ளோ சுமையை ஏத்தலாமா? வண்டியை எடுத்து நிறுத்தவே முடியல. எப்படி ஓட்டீட்டு வந்தீங்க?” - அந்த இளைஞரில் ஒருவன் கேட்டான்.


“டெய்லி இந்தமாதிரிதான் வர்றேன்க. ஒரு பைக்-காரன் சைடு குடுக்காம மெதுவாப் போனான்னு முந்தினேன். அவன் கோவப்பட்டு என் பக்கத்துல வந்து ஒளட்டிவிட்ட்டுட்டுப் போய்ட்டான்” என்றார்.

அவ்வளவு பாரம் அதிகம்தான். ஆனால் அந்த பாரம்தான் அவரைக் காப்பாற்றியது என்றார் கூட்டத்தில் வந்து நின்ற பக்கத்து கம்பெனியின் வாட்ச்மேன். வண்டி இரண்டுமுறை பல்டி அடித்ததைப் பார்த்திருக்கிறார். வண்டியின் இருபுறமும் விளக்குமாறு நீட்டிக் கொண்டிருந்ததால் அது ‘பம்பர்’ போல இவர்மீது நேரடி அடி படாமல் காத்திருக்கிறது!

“சரி.. உங்க ஃப்ரெண்டு நம்பர் சொல்லுங்க. கூப்பிடறேன். அவர்கூடப்
போங்க” என்கிறான் இவன்.

“99********. இது என் பையன் நம்பர்ங்க. கூப்பிடுங்க” என்றார் அவர்.

இவன் அழைத்தான்.

“தம்பி.. உங்க அப்பா வண்டி இங்க பாலு எக்ஸ்போர்ட்ஸ் பக்கத்துல பெட்ரோல் இல்லாம ட்ரை ஆகி நின்னுடுச்சு. வண்டில பாரம் இருக்கறதால தள்ளவும் முடியல. அவரு காலைல சாப்பிடலயாம். ரொம்ப ட்யர்டா இருக்காரு,வந்து கூட்டீட்டுப் போறியா?”

“நீங்க யாருங்க?”

இவன் பெயர் சொன்னான். “இந்தப் பக்கமா வந்துகிட்டிருந்தேன். என் வண்டிலயும் பெட்ரோல் இல்ல. இருந்தாலும் உங்கப்பா வண்டி பெட்ரோல் டேங்க்கே தெரியாத அளவுக்கு பாரம் இருக்கு”

“சரிங்க.. பத்து நிமிஷத்துல வர்றேன்”

நின்று கொண்டிருந்த பத்து பதினைந்துபேர் கலைந்துபோக ஆரம்பித்தனர். இவனும், இன்னும் இருவரும் மட்டுமே இருந்தனர்.

“சார்.. இவரை அந்தப் பக்கம் மர நிழல்ல உட்காரச் சொல்லுங்க” என்றார்கள் அவர்கள். சொன்னதோடன்றி அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மர நிழலில் அமரவைத்துவிட்டு இவனிடம் வந்தார்கள்.

“சார்.. ஆஃபீஸூக்கு நேரமாச்சு. நாங்க கிளம்பறோம்” என்றபடி சென்றனர். இப்போது இவன் மட்டுமே.

இவன் அவரிடம் சென்றான்.

“டீ சாப்பிடறீங்களா?”

“இல்ல. வேண்டாம் தம்பி. நல்லவேளையா உயிர் பொழச்சேன். பின்னாடி லாரியோ, பஸ்ஸோ வந்திருந்தா நான் காலி”

“கெட்டநேரத்துலயும் ஒரு நல்ல நேரம். இல்லீங்களா?” என்றபடி மணிபார்த்தான். 9.15.

“உங்களுக்கு நேரமாச்சுன்னா கிளம்புங்க தம்பி. என் பையன் வந்துடுவான்ல”

“இல்லீங்க. பரவால்ல” இன்னும் பத்து நிமிஷம் வெய்ட் பண்றேன்”

9.30.

ரோட்டில் இவனது மேனேஜிங் டைரக்டரின் கார் இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றது. இவன் பதட்டமானான். அவரது மகனுக்கு தொலைபேசினான்.

“வீரபாண்டிகிட்ட வந்துகிட்டிருக்கேன்” என்ற பதில் கிடைத்தது. எப்படியும் குறைந்தது 20 நிமிடமாகும். இவரைத் தனியே விட்டுப் போகவும் மனமில்லை. கடந்துசென்ற இவன் எம்.டி. இவனைப் பார்த்திருந்தால்கூடத் தேவலாம். இந்தக் காரியத்துக்காக தாமதம் என்று தெரியவரும். ஒன்றும் சொல்லப் போவதில்லை.

இன்றைக்கு எனப்பார்த்து ஒரு முக்கியப் புள்ளியுடனான மீட்டிங்-குக்காக சரியாக ஒன்பதரைக்குப் போகிறார். இவனும் கண்டிப்பாக அங்கே இருக்கவேண்டும்.

யோசித்துக்கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. எம்.டி-யின் ரிங்டோன்.

“அண்ணா, நான் கிளம்பவா... ஸாரிங்க. ஓனர் ஆஃபீஸ்க்கு வந்துட்டாரு, கூப்பிடறாரு”

“ஐயையோ.. அதான் அப்பவே கிளம்புங்கன்னு சொன்னேனே. பையன் வந்துடுவான். நான் பார்த்துக்கறேன். ஒண்ணும் பிரச்சினையில்ல” என்றார் அவர்.

“சரிங்க. பையன் வந்த தகவலுக்கு எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்றபடி பைக்கை எடுத்துப் பறந்தான் இவன்.

அலுவலகம் சென்று மீட்டிங் முடித்தான். வேறு சில அவசரப் பணிகளும் இருந்தது. வழக்கம்போலவே இவன் ஞாபகமறதி நன்றாக வேலை செய்யவே காலைச் சம்பவத்தை மறந்தே போனான்.

மதியம் மூன்று மணி. யாருக்கோ ஃபோன் பண்ண வேண்டி டயல் செய்திருந்த நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் காலையில் அழைத்த அந்தப் நபரின் மகன் எண் தட்டுப்பட்டது.

‘அடடா.. வந்து கூட்டீட்டுப் போயிருப்பான்ல’ என்று நினைத்தபடி அந்த நம்பரை அழைத்தான்.

“தம்பி.. நாந்தான் _______________ பேசறேன். அப்பாவைக் கூப்டுட்டுப் போய்ட்டீங்களா?”

அடுத்த நிமிடம் அந்தத் ‘தம்பி’ வெகு சூடானான்.

“என்னய்யா நெனைச்சுட்டிருக்கீங்க? அறிவில்லை உங்களுக்கு? அவரு ஆக்ஸிடெண்ட்டாகி விழுந்திருக்காரு. அப்படியே விட்டுட்டுப் போயிருக்கீங்க? நான் வர்ற வரைக்கும் கூட வெய்ட் பண்ணமுடியாதா உங்களுக்கு? ச்சே.. மனிதாபமானமே இல்லியா... என்ன மனுஷங்க நீங்க? ஒரு டீ கூட வாங்கித் தர்ல.. ஒரு சோடா வாங்கித்தர்ல”

இவன் “ஸாரிங்க.. தப்புதான்.. மன்னிச்சுடுங்க..” என்று இடையிடையே சொல்லிக் கொண்டிருந்தான்.

“மன்னிப்பு வேற கேட்கறீங்க பண்ணின காரியத்துக்கு. ச்சீ” என்றபடி இணைப்பைக் கோபமாய்த் துண்டித்தான் அந்தத் தம்பி.

இவன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தான்.

28 comments:

கார்க்கிபவா said...

நீ(ங்க)தானா அது?

எல்லாம் காலம் பரிசல்..

அவன அப்படியேவ விட்டிங்க? நான் திருப்பூர் வரும்போது சொல்லுங்க.. அவங்க அப்பாவாது டைம்க்கு வர்றாருனு பார்த்துடலாம்.

சின்னப் பையன் said...

அடக்கடவுளே!!! நல்லதுக்கே காலம் இல்லே....:-((

வெண்பூ said...

கலக்கல் கதை பரிசல்... எனக்கென்னவோ இது உங்க சொந்த அனுபவம் மாதிரி தோணுது :))))

தமிழ் அமுதன் said...

ஒரு சின்ன சந்து அதுல ஒரு சுமோ போகுது! கொஞ்ச தூரம் போனதும் சுமோ போக
முடியாத அளவுக்கு ஒரு பைக் குறுக்க நிக்குது! சுமோ டிரைவர் ஹாரன் அடிக்க! யாரும் வரல!மறுபடியும் ஹாரன் அடிக்க வேகமா வந்து ஒருத்தர் பைக்க ஓரமா நகர்த்துராரு!
சுமோ டிரைவர்:- ஏன்யா அறிவில்ல ஒனக்கு? வண்டிய நடுரோட்டுல நிப்பாடிட்டு நீபாட்டுக்கும் போய்ட்ட ?
வண்டிய நகர்த்தியவர் :- யார பாத்துய்யா அறிவில்லயான்னு கேக்குற ?இது என் வண்டி இல்ல,எதோ போனா போகுதுன்னு வழிபண்ணி கொடுத்தா? இது தேவையா எனக்கு வா வந்து நீயே வண்டிய நகதிக்க! (அவர் பைக்க ரோட்டுலயே நிப்பாட்டிடுறார் )

சுமோ டிரைவர் கீழ எறங்கி வந்து பைக்க ஓரமா நகர்த்திட்டு இவர் கிட்ட ''ஒரு சாரி கூட சொல்லாம'' சார்ர்ர்ருன்னு போய்டுறார்
எடம் -சிங்கார சென்னை

Thamiz Priyan said...

பல நேரங்களில் புண்ணியத்துக்கு ஓசியில் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பதம் பார்க்கும் காரியமும் நடக்குது... :( என செய்வது? காலத்தின் கோலம்

Ramesh said...

I have experienced the same, many times!

Effort, money & my personal time = Help.

Result = you blogpost title. @ Chennai.

ஜெகதீசன் said...

ஹிம்ம்ம்.... :((

முரளிகண்ணன் said...

அடக்கடவுளே!!! நல்லதுக்கே காலம் இல்லே....:-((

repeateeee

சிம்பா said...

அவசர உலகம்...

colourkool said...
This comment has been removed by the author.
colourkool said...

பரிசல் அண்ணா இதுக்குலாம் கவலை படாதிங்க அவருக்கு தெரிஞ்சது இவலவுதான்...
இதலாம் பார்த்துட்டு உங்க நல்ல குணத்த தயவுசெய்து மாற்றிக்கொல்லாதிர்கள் ..!

tamilan said...

அட அவ்வளவு செஞ்சவரு ,,போன் பண்ணும் போது உண்மையான நிலவரத்தை சொல்லி இருக்கலாம் ,,,,,உதவி செய்த நல்லவர் பல்லாண்டு வாழ்க ,,,

cheena (சீனா) said...

இது தான் நடைமுறை - என்ன செய்வது - நாம் நம் காரியத்தைப் பார்த்துக் கொண்டு செல்ல முடியுமா என்ன ?

Cable சங்கர் said...

:):(:(:)-

Kanchana Radhakrishnan said...

பரிசல்காரன் உங்களுக்குமனிதாபிமானமே இல்லையா?"

தமிழன்-கறுப்பி... said...

அது நீங்கதான...?

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...!

வீணாபோனவன் said...

திரு. பரிசஸ் ;-)
நான் ஒரு பதிவு போடவே ஒரு மாதம் (இன்னும் போடவே இல்லபா) ஆகுதப்பா.... நீங்க என்ன தினமும் அழகா பதிவு போடுறிங்க? எப்படியோ போங்க :-)

ஒரு நல்ல எழுத்தாளர். எந்த வகையுலும் எதிர்பார்பில்லாமல் நல்ல விஷயங்களை உங்களுக்கு தறுகிறார்

http://pkp.blogspot.com/

வீணாபோனவன் said...

தமிழ் பிரியன்,
தயவுசெய்து அந்த "(" குலோஸ் பண்ணிடுங்க.... கண்ணுல குத்துது...கண்ணு கூசுது....


-வீணாபோனவன்

புதுகை.அப்துல்லா said...

ஹோட்டலில் அவன் உணவருந்திக் கொண்டு இருக்கும் போது அருகில் இருக்கும் ஓருவர் காபி குடித்தபடி மயங்கி விழுகிறார். பதறிய அவனும் அவன் நண்பனுமும் அவனுடைய காரில் அவரை தூக்கிப்போட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

"இவர் உங்களுக்கு என்ன வேணும்?"
"யாருன்னு தெரியாதுங்க"
"அப்ப தர்மாஸ்பத்திரி தூக்கிகிட்டு போக வேண்டியதுதான? இங்க ஏன் கொண்டுவந்த?"

மனிதாபிமானத்தோட இப்படி அன்பாக கேட்டவர் அந்த மருத்துவமனையின் கம்பவுண்டர் அல்ல.... மருத்துவர்.

குசும்பன் said...

அவ்வ்வ்வ்வ்வ் அட்ரெஸ் வாங்கி நாலு பொடறியிலேயே போட்டுவிட்டு வரரும் அவனுங்கள!

ராஜி said...

sirikkaratha, alugarathanne theriyala... :-):-(

Raj said...

பச்சாதாபம் பார்த்தீங்கல்லே...உங்களுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்!

narsim said...

தந்தையின் மீது பாசமாக இருக்கிறாரே அதுவரை சந்தோசமே.. மாலை நீங்கள் அழைத்தபோது... இன்னும் 10 நிமிசத்துல வந்துருவேங்க.. என்று சொல்லாமல் இருந்தரே..

இதனால் எல்லாம் உதவும் பண்பை விட்டுவிடக்கூடாது..
நர்சிம்

Syam said...

எல்லா போஸ்டும் படிச்சிட்டு தான் இருக்கேன் பரிசல்..கமென்ட் மட்டும் போட முடியல...இனியும் கரெக்ட்டா கமென்ட் போடுவேன்னு எதிர்பாகாதீங்க... :-)

rajakantan said...

கடைசியில் கொஞ்சம் மிகைப்படுத்திவிட்டீர்களோ?

Sundar சுந்தர் said...

//என்னய்யா நெனைச்சுட்டிருக்கீங்க? //
அதானே என்னய்யா நெனைச்சுட்டிருக்கீங்க? - உங்க பேரு என்னங்க ஸ்டாலினா? வருங்கால முதல்வரோட அப்பன்னு எனக்கு தெரியாம போச்சுங்க. அதை மனசுல வச்சிக்கிட்டு எனக்கு மந்திரி பதவி மட்டும் கிடையாதுன்னு சொல்லிடாதிங்க. அட்லீஸ்ட் ஒரு எம்எல்ஏ பதவியாது போட்டு கொடுங்கன்னு கேட்ட்ருக்க வேண்டியதுதானே? இப்ப உங்களால நாளைக்கு யாருக்காவது உதவ போக, இந்த பிரகஸ்பதி திருந்தாம என்கிட்டேயும் இதே மாதிரி பேச போறான் - நான் தான் இதை எல்லாம் செய்ய வேண்டியதா போச்சு. என்னய்யா நெனைச்சுட்டிருக்கீங்க?

Jaisakthivel said...

என்னங்க சும்மா உங்ககிட்ட சொன்னத பிளாக்குல எழுதிஇட்டீங்க - சக்தி