Tuesday, October 14, 2008

ஒரு வலையுலக வாசகரின் பேட்டி


சிலர் இருக்கிறார்கள். சாதாரணமாகத் தெரிவார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமையும், அறிவும் அவர்களே அறியாததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைச் சந்தித்தேன் சமீபத்தில்.

என்னைப் பார்க்க வேண்டும் என்றே அவரது ஊரிலிருந்து வந்திருந்தார். அலுவலின் காரணமாய் அவரை வரவேற்கவோ, முழுமையாக அவரோடு இருக்கவோ வக்கற்று இருந்தேன் நான். அவரோடு பேசியதிலிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டேன் நான்.

அவரோடு உரையாடியதிலிருந்து.....


உங்களுக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியது யார்?

என்னுடைய நண்பர் திரு. ராஜகாந்தன். கரூரில் NHல் பணிபுரிகிறார். அவர்தான் எனக்கு BLOGGER எனப்படும் பதிவுலகைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தினார்.

அதற்கு முன்பு வாசிக்கும் பழக்கம்...

மிகவும் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன்.


உங்கள் நண்பர் பதிவுலகில் எதை அறிமுகப்படுத்தினார்?

முதல்ல தமிழ்மணத்தைத்தான் அறிமுகப்படுத்தினார். தமிழ்மணம் மூலமா உங்களுடைய பதிவு ஏதோ ஒன்றைத்தான் முதல்ல படிச்சேன். அப்புறம் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்மணம் மூலமா போனா எக்கச்சக்கமா இருக்குன்னு இப்போ நேரடியாவே சிலருடைய பதிவுகளை மட்டும்தான் படிக்கறேன்.

என்னுடைய பதிவுல எது புடிச்சது?

அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவு சிறப்பானதாக எதுவும் மனதில் இல்லை! ஆனா சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.


யார் யாருடைய பதிவுகளைப் படிப்பீங்க?

உங்களுடையது (பரிசல்காரன்), லக்கிலுக் (கொஞ்சம் இடை வலி விட்டு...) வால்பையன், தாமிரா, வடகரைவேலன், அதிஷா ஆகியோருடையதைத் தவறாமல் படிப்பேன். அதுதவிர தமிழரங்கம் நிச்சயமாக படிப்பேன்.

ஜெயமோகன், பாமரனும் படிப்பேன்.

நீங்க வலைப்பூ ஆரம்பிச்சாச்சா?

இன்னும் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருக்கேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். எழுதமுடியுமான்னு தெரியல. எழுதினாலும் சரியா வருமான்னு தெரியல.

பதிவர்களுடன் நேரடி அறிமுகம் உண்டா?

இதுதான் முதல். அலைபேசியிலும் உங்களோடுதான் முதலில் பேசினேன். பிறகு கார்க்கியுடன் பேசினேன். அப்புறம் வால்பையன்.

ப்ளாக்ல சீரியஸ் எழுத்துக்கள் படிப்பதுண்டா?

ப்ளாக்ல இன்னும் அந்த அளவு இறங்கல தோழர். சீரியஸ் எழுத்துக்கள் இருக்கான்னே தெரியல.

ப்ளாக்-கை விட்டுடுங்க.. படிக்கற வேற எழுத்தாளர்கள்?

நாஞ்சில் நாடன் மிகவும் பிடிக்கும். ரமேஷ்-ப்ரேம் படிப்பேன். ப்ரேம் என்னுடைய நண்பர் ராஜகாந்தனுக்குப் பழக்கம். அவர் மூலமாக ப்ரேமுடன் சிறிய அளவில் பழக்கமுண்டு. முதலில் ரவிகுமார் (எம்.எல்.ஏ)வின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். எப்போதும் அ.மார்க்ஸ்-சின் கட்டுரைகளை தேடி, தொடர்ந்து படிப்பேன். எந்த ஒரு ப்ரச்சினையையும் தனிமனிதனாக நின்று போராடும் குணமுடைய மனிதர். வண்ணதாசனும் பிடிக்கும்! பூமணி என்ற (குறைந்த அளவில் எழுதிக்கொண்டிருக்கும்) மதுரையைச் சார்ந்த எழுத்தாளரும் பிடிக்கும்.

இலக்கிய உலகில் பழக்கமானவர்கள்?

ரமேஷ்(ப்ரேம்) பழக்கம். ஆதவன் தீட்சண்யா நெருங்கிய நண்பர். டெலிஃபோன்-ஸில் பணிபுரிகிறார். த.மு.எ.ச.வில் முக்கியப் பொறுப்பாளர். கதை, கவிதைகள் அற்புதமாக இருக்கும்! உ.பி-யில் மாயாவதி அரசால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இலக்கியம்தான் முதல் அவருக்கு. குடும்பம், வேலைகூட இரண்டாம்பட்சம்தான் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை, இலக்கியம், செயல்பாடும் ஒரே எண்ணத்தில் இருக்கும். எந்தத் தீயபழக்கமும் இல்லாத, இலக்கியத்துக்காக தன்னை முழுக்க அர்ப்பணித்த ஒரு போராட்ட குணம் படைத்த அற்புத மனிதர்!

ப்ளாக் வந்தபிறகும் படிக்கும் பழக்கம் தொடர்கிறதா?

இல்லை. குறைந்துவிட்டது. இணையத்திலேயே முழுநேரமும் போய்விடுகிறது.

அது உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

இல்லவே இல்லை. இணையத்தில் சீரியஸ் எழுத்துகளை அவ்வளவாக தேடிப் படிக்க ஆரம்பிக்கவில்லை தோழர்.

நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறீர்கள். அரசாங்க உத்தியோகம் என்றால் சுமையற்றது இல்லையா?

(சிரிக்கிறார்..)

ஒருமுறை நான் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரவுப் பயணம். மைசூர் எக்ஸ்பிரஸ். சேலத்துல ரயில்வே போலீஸ் ரெண்டுபேரு இருந்தாங்க. ஏட்டு ஒருத்தரு. கான்ஸ்டபிள் ஒருத்தர். ஏட்டு ‘சீட் காலியா இருக்கா.. கொஞ்சம் தூங்கிக்கறேன்னார். கான்ஸ்டபிள் என்கூடப் பேசிக்கிட்டு இருந்தார்..

“ரொம்பக் கொடுமைங்க இந்த ரயில்வே போலிஸ் உத்தியோகம். எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக் கூடாதுங்க. நாங்க ரெண்டுபேரும் ஜாலியா கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா சுத்திகிட்டிருக்கோம்ன்னு நெனைப்பீங்க. மூணு (அ) நாலு ஸ்டேஷன் சேர்ந்தது ஒரு பீட். ஒரு பீட்டிலிருந்து அடுத்த பீட் வரைக்கும் ரெண்டு போலீஸ் ட்ரெய்ன்ல போகணும். அடுத்த பீட்ல ரெண்டு பேர் ஏறுவாங்க. இப்படி மாறி மாறிப் போகணும்”

இதுல என்ன கஷ்டம்ங்க-ன்னு கேட்டேன் நான். போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து சொன்னார்...

“ஹூம்! நடுவுல நைட்ல இருட்டுல யாராவது அடிபட்டுட்டாங்கன்னா அவ்வளவுதான். ஒரு போலீஸை இறக்கிவிட்டுட்டு, கையில ஒரு லாந்தரைக் குடுத்துட்டு ட்ரெய்ன் போயிடும். அந்தப் போலீஸ் விடிய விடிய அடிபட்டு கிடக்கற உடம்புக்கு காவல் காக்கணும். விட்டுட்டுப் போய்ட்டா நாயோ, நரியோ கடிச்சுடும். ஆம்புலன்ஸோ, டாகட்ரோ அடுத்தநாள்தான் வருவாங்க. யாருமே இரவோட இரவா வரமாட்டாங்க. நான் இப்படி ஒரு தடவை ஒரு ‘பாடி’க்கு காவல் காத்தேன். இரவு ஒரு மணிக்கு ஒருத்தன் அடிபட்டு இறந்துட்டான். காவலுக்கு என்னை இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க. அப்பப்ப பிணத்தைக் கடிக்க வந்த நாய்களை விரட்டிகிட்டிருந்தேன். விடிகாலை மூன்று மணி. கும்மிருட்டு. பிணத்தைப் பார்த்தா பயம் வரும் என்று லாந்தரை பிணத்தருகே வைத்துவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பிப் பார்த்தால் அந்தப் பிணத்தின் கைமட்டும் உயர்ந்து என்னைக் கூப்பிட்டுச்சு...”

(தொடரும்)


டிஸ்கி:- அவர் யாரென்பதையும், அரசு வேலைகள் குறித்த அவரது பார்வையையும் நாளை சொல்கிறேன். அதுவரை அவர் யாரென்று தெரிந்தவர்களும் சொல்லவேண்டாம்.. ப்ளீஸ்.

22 comments:

Thamiz Priyan said...

அண்ணே! ஏதோ பேய்க்கதை பி.டி.சாமி மாதிரி கதையை சஸ்பென்ஸில் வச்சுட்டீங்க...:))
பதிவுலகிற்கு புதிதாக வருபவர்களின் எண்ண ஓட்டங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை.

Thamiz Priyan said...

////சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.////
:)

anujanya said...

எப்படி கே.கே. இப்பிடி கலந்து கட்டி அடிக்கறீங்க! ஒரு புது நண்பருடன் பேசியதை இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா? தமிழ் பிரியனின் 'பி.டி.சாமி' ரசித்தேன். எழுத்தாளரையும் தாண்டி, பத்திரிக்கை ஆசிரியராப் போகலாம் நீங்க. எங்க 'தொடரும்' போடலாமுன்னு தெரிஞ்சிருக்கு.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

நான் சொல்லலப்பா..

Kumky said...

என்னங்க இது..ராஜேஷ்குமார் பாணியில போய்க்கிட்டிருக்குது.....

Kumky said...

அப்புறம்.,புது நண்பரை சந்திச்சீங்களே...மருந்து..விருந்துன்னு ஏதும் இல்லையா?

வெண்பூ said...

பதிவர் சந்திப்பு போய் இப்ப வாசகர் சந்திப்பா... கலக்குங்க.. உங்கள் வாசகர் ஒருவர் உங்களை தேடி வந்து பேசுகிறார் என்பது எனக்கு பெருமையா இருக்கு பரிசல்.. பாத்துகோங்க, நானும் பரிசலுக்கு ஃப்ரெண்டுதான், ஃப்ரெண்டுதான்.. :)))

வெண்பூ said...

//
கும்க்கி said...
அப்புறம்.,புது நண்பரை சந்திச்சீங்களே...மருந்து..விருந்துன்னு ஏதும் இல்லையா?
//

அடப்பாவிகளா.. புதுசா ஒரு மனுசன பாத்தா உடனே மருந்தா.. யாரையும் பாக்கலேன்னாலும் "யாருமே வரலீங்களே" அப்படின்னு கவலையில மருந்து.. திருத்தவே முடியாது.. எல்லாம் அந்த Tail Boyஐ சொல்லணும்.. கெடுத்து வெச்சிருக்காரு.. :))))

Kumky said...

ஏணுங்ணா வேளை மெனக்கெட்டு அம்புட்டு பதிவ எலுதீருக்கீங்களே.. ஒன்னு கூடவா நெனப்பில்லன்னு சொல்லிட்டாரு...என்னா வாசகரோ போங்க.....இவிங்களையெல்லாம்....

☼ வெயிலான் said...

பரிசல்,

நானும் தான் பேட்டியின் போது கூட இருந்தேன். ஆனா அதை எழுத்துல இவ்வளவு சுவாரஸ்யமா கொண்டு வர்ற லாவகம் உங்களுக்குத் தான் இருக்கு.

கலக்குங்க!

வாசகர் யாருனு தெரியணும்னா ஒரு தனி மின்னஞ்சல் அனுப்புங்க ;)

narsim said...

நல்ல உரையாடல் பரிசலாரே.. அதை மிக நல்ல முறையில் பதிந்தது அருமை..

நர்சிம்

Mahesh said...

பேட்டி காண்பது எப்படி?ன்னு ஒரு பயிற்சி மையம் தொடங்கலாம் போல... சுய நேர்காணல், நேர்காணல், அடுத்தவர் சொல்ற மாதிரி எழுதறது (ஹி ஹி.. நம்ம சந்திப்ப பத்தி எழுதினீங்களே...), சொந்த அனுபவத்தை படர்க்கையில எழுதறது.... கலக்குங்க !!!

Bleachingpowder said...

யாருப்பா அது, பரிசலை சீரியஸ்ஸா எழுத சொன்னது. இப்ப பாருங்க அவர் இருட்டு,பிணம்,நரி,நாய்னு எழுதி நம்மள பயமுறுத்திட்டு இருக்காரு.

Kumky said...

அட சும்மாயிருங்க வால்........
நீங்களும் பேய்க்கதை எழுதமாட்டிங்க.. எழுதறவங்களையம் குறை சொல்லிகிட்டு.....

கிரி said...

//சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.//

வழிமொழிகிறேன்.

பரிசல்காரன் said...

எல்லாருக்கும்

:-)

வால்பையன் said...

//கொஞ்சம் இடை வலி விட்டு...)//

அவருக்கு இடையில் எந்த வலியும் வரவில்லை, அதற்கு நான் சாட்சி.

வால்பையன் said...

//எல்லாம் அந்த Tail Boyஐ சொல்லணும்.. கெடுத்து வெச்சிருக்காரு.. :))))//

உண்மை தான்
குடிகாரனுக்கு செல்லும் இடமெல்லாம் சரக்கு

வால்பையன் said...

//Bleachingpowder said...
யாருப்பா அது, பரிசலை சீரியஸ்ஸா எழுத சொன்னது.//

ஐ யாம் ஆல்ரெடி இன்சைடா

சின்னப் பையன் said...

//நல்ல உரையாடல் பரிசலாரே.. அதை மிக நல்ல முறையில் பதிந்தது அருமை.. //

ரிப்பீட்டே.....

Rangs said...

இப்பதான் பேசி முடிச்ச மாரி இருக்குது...அதுக்குள்ள ஒரு பதிவு போட்டுட்டீங்களே பரிசல்.....

இதுதான் உங்க வெற்றியின் ரகசியமா?

கலக்குங்க!!!!

அப்றம் ரொம்ப நன்றி...உங்க கோட பேசுனது ஊர்ப் பக்கம் ய்மஹால ஒரு ரௌண்டு வந்த மாரி இருந்துச்சு...

சிறப்பு நன்றி கனலி தொடர்புக்கு...

பேசுவோம்..

மிக்க அன்புடன்,

ரங்கராஜ்

Cable சங்கர் said...

அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு.../