Thursday, October 23, 2008

என் கதை!

எனக்கு கதை எழுதத் தெரியாதுன்னு இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு கதை எழுதத் தெரியும்னு நான் தெரிஞ்சுகிட்டது எப்போ-ன்னு யோசிச்சுப் பார்த்தேன். நாம மொத மொதல்ல லீவு லெட்டர் எழுதறோம்ல, அப்பவே கதை எழுதற பழக்கம் நமக்கு ஆரம்பிச்சாச்சுன்னு நெனைக்கறேன்!

பள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.

அப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன். ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.

நமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான்! ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம். ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன். அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும். ‘காதலன்’ல எஸ்.பி.பி. கேரக்டர்தான் அவர்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். அப்போ, ரெகுலரா மாசத்துக்கு ரெண்டு, மூணு கடிதம் அவருக்கு அனுப்புவேன். ஒரு தடவை அவர், பதில் கடிதம் போட்டப்ப ‘உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் ஏன் கதை எழுதக்கூடாது?’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..!) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்?) எழுத ஆரம்பிச்சேன்.

எழுதி அனுப்பின எல்லா கதையும் வந்தது.. திரும்ப போஸ்ட்ல. கூடவே ஒரு துண்டுக் கடிதமும் வைப்பாங்க. ‘இதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்!) தொடர்ந்து முயற்சிக்கவும்’ அப்படீன்னு. அது கொஞ்சம் உற்சாகத்தைத் தரும்.

அப்போ திருப்பூர்ல ‘கரும்பு’ன்னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நூலகத்துல பார்த்தேன். அதுல கடைசி ரெண்டு, மூணு பக்கம் வெற்றுத்தாளா விட்டிருப்பாங்க. நம்ம படைப்பை எழுதலாம்.

‘அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க. அந்தக் கொடுமைக்கெல்லாம் நடுவுல நானும் ஒரு கொடுமையா கதை ஒண்ணை எழுதி வெச்சேன். காசா.. பணமா..

அடுத்தநாள் அதைப் போய்ப் பார்த்தப்போ, பலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல?) ஒரே சந்தோஷமா இருந்துச்சு.

அதுக்கப்புறம் 1993ல உங்கள் ஜூனியர்ல ஒரு சிறுகதைப் போட்டி வெச்சிருந்தப்ப, அந்தக் கதையை கொஞ்சம் மெருகேத்தி அனுப்பினேன். அது ‘முள்ளுக்கும் மலர் சூடு’ங்கற தலைப்புல சிறப்புச் சிறுகதையா வந்தது.

உடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும்? அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா? அப்படி இருந்தது. அதுக்கடுத்து என் மனைவிக்கு முதல் தடவை பிரசவமாகி, அவங்க முகத்தைப் பார்ட்த்துட்டு வெளியே வர்றப்போ இந்த உணர்வு இருந்தது.

இதையெல்லாம் இப்போ யோசிக்கறதுக்கு காரணம், கொஞ்ச நாள் முன்னாடி என் தம்பி வந்து ஒரு பத்து பதினைஞ்சு கவர் குடுத்தான். அதுல எப்பவோ நான் பத்திரிகைகளுக்கு அனுப்பி, திரும்பி வந்த கதைகள் இருந்தது. சுஜாதா சொல்லுவார், ‘ஒரு கதையை எழுதி வெச்சுட்டு, நீங்களே ஒருவாரம், பத்துநாள் கழிச்சு படிச்சுப் பாருங்க. எங்கெங்க தப்பு பண்ணியிருக்கோம்னு தெரியும்’னு. அது எவ்ளோ சத்தியமான வார்த்தைன்னு தெரிஞ்சுது. படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.

இப்போ வலையில எழுதறவங்கள்ல, நான் படிச்சவங்கள்ல சிறுகதையில வெண்பூவும், சாருவே, ‘இவரைப் பாருவே’ன்னு சொன்ன நர்சிம்-மும் என்னை ரொம்ப வெக்கப்பட வைக்கறாங்க. எந்தவிதமான ஐஸுக்காகவும் இதைச் சொல்லல. படிச்சவங்களுக்குத் தெரியும். ஆரம்பத்துல நான் எழுதறப்போ எனக்குள்ள இருந்த வேகம், பொறி எல்லாத்தையும் இவங்க எழுத்துல பார்க்கறப்போ அவ்ளோ சந்தோஷமாவும், பொறாமையாவும் இருக்கும். கதையெழுத ஒவ்வொரு கரு கிடைக்கறப்பவும், இதை எப்படி எழுத... எப்படி ஆரம்பிக்கன்னு யோசிச்சுட்டே இருக்கறப்போ, பணிச்சுமை, வேற டென்ஷன்னு மனசு ஒருமைப்படாம அலையறப்போ, கதையெழுதற மூடுக்கு என்னைக் கொண்டுவர்றதுக்கு, வீட்ல இருந்தா சுஜாதாவைப் படிப்பேன். சிஸ்டத்துல உட்கார்ந்திருந்தேன்னா, வெண்பூ, நர்சிம்-மோட கதைகளை மேய்வேன். அப்படி ஆய்டிச்சு!

இதெல்லாம் யோசிக்கக் காரணம், நான் மதிக்கற இன்னொரு நண்பர் ‘ஒரு கதை எழுதியிருக்கேன். உங்க பார்வைல எப்படி இருக்குன்னு சொல்லுங்க’ன்னார். எனக்கு சோகக்கதைகள் 1%கூடப் பிடிக்காது. என்னமோ அது அப்படித்தான். அவர் குடுத்தது சோகக்கதை. அதுனால சொல்ல கஷ்டமா இருந்தது. இருந்தாலும் அவர் ரொம்ப கேட்டுகிட்டதால சொல்லீட்டேன். ரெண்டு நாளா ‘அவரை நாம டிஸ்கரேஜ் பண்ணீட்டமோ’ன்னு கஷ்டமா இருக்கு. ஏன்னா, கதையெழுதறவங்களுக்கு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு அவங்களை நீர்த்துப் போகச் செய்யறவங்களைக் கண்டாலே ஆகாது எனக்கு. எனக்கு சிலது பிடிக்கலைன்னாலும், அதுல பிடிச்சதை எழுதி, ‘இது சூப்பர். இந்தமாதிரி முயற்சிக்கவும்’ன்னு மைனஸைச் சொல்லாம ப்ளஸ்ஸை மட்டும் சொல்லீட்டு வந்துடுவேன். (ஆனாலும், ரொம்ப நேரம் ஃபோனே வர்லீன்னா, என்னமோ மாதிரி ஆகி, ஏதாவது கால் வந்ததா’ன்னு ஃபோன் ஸ்க்ரீனை எடுத்துப் பார்த்துப்போமே... அந்தமாதிரி எப்பவாச்சும் எங்கயாச்சும் போய் அறிவுரை சொல்லீட்டும் வர்றதுண்டு!) இல்லீன்னா, லதானந்த் அங்கிள் மாதிரி சீனியர் ரைட்டர்ஸ்கிட்ட ‘இது சரியா வருமா அங்கிள்’ன்னு நம்ம நெனைச்சதை விவாதிக்கலாம்.

கடைசியா ஒரு சின்ன அட்வைஸ்..

விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.

இது கதை எழுதறவங்களுக்கு இல்ல. அவங்களுக்கு அறிவுரை சொல்றவங்களுக்கு!

38 comments:

கார்க்கிபவா said...

:)))))

கார்க்கிபவா said...

இதுக்கு நான் மீ த ஃப்ர்ஸ்ட் போட்டது பொருத்தம்தானே சகா?

ARV Loshan said...

விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//

நச்..

உங்கள் தல(சுஜாதாவுடன்) - நானும் அவரின் பரம ரசிகன் , மின்னஞ்சல் தொடர்பு வைத்து இருந்தவன் என்ற அடிப்படையில் ஒரு விஷயம் .. அவரும் யார் கேட்டாலும் எழுதுவது எப்படினு advice சொல்வதே இல்லை..நானும் சும்மா கேட்டிருக்கிறேன்..

பாலகுமாரானை ஒப்பிட 'காதலன்' அப்பா பாத்திரம் ரொம்பவே பொருத்தம்.. ஆனால் சில நேரம் அவர் அறிவுரை சொல்லாமல் இருப்பதையும் குழப்பி விடுவார்.. எனக்கு..

முதல் கதை பிரசுரமான அனுபவத்தை சொன்ன விதம் அற்புதம்.. பிரசுரம்..பிரசவம்.. ஒன்று தான் இரண்டுமே..

சென்ஷி said...

மீ த தேர்டு :)

சென்ஷி said...

சாரி.. மீ த ஃபோர்த் & பிஃப்த்

Athisha said...

கலக்கல் தலைவா
சூப்பர்
பின்னீட்டீங்க
கலங்கடிச்சிட்டீங்க

அதும் அந்த லவ் மேட்டர் டக்கர்...!

Thamiz Priyan said...

அப்ப அடுத்து ஒரு கதை ரெடியாகுதுன்னு சொல்லுங்க... போடுங்க.... வெயிட்டீங்ஸ்ஸ்ஸ்ஸ்

narsim said...

நன்றி பரிசலாரே..

கடைசி வரிகள் அற்புதம்..

உங்கள் பகடி வழக்கம் போல் ரசிக்கும்படி இருந்தது.. அதிலும்.. எல்லா கதைகளும் வந்தது... கலக்கல்..

நர்சிம்

பரிசல்காரன் said...

வெகு நாட்களுக்குப் பிறகு மனமிறங்கி, இந்த ஏழையின் வீட்டிற்கு வருகை புரிந்திருக்கும், அண்ணன் சென்ஷியை வருக வருக-வென வரவேற்கிறேன்!

பரிசல்காரன் said...

@ loshan

//பிரசுரம்..பிரசவம்.. ஒன்று தான் இரண்டுமே..//

கலக்கல் தோழா!

வெண்பூ said...

அருமை பரிசல். ஆனாலும் என்னையும் என் கதைகளையும் உங்க கூடயும், நர்சிம் கூடயும் ஒப்பிட்டதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஹி..ஹி.. சந்தோசமாவும் இருக்கு..

கடைசி வரிகள் கலக்கல்.. என் கருத்து என்னன்னா நம்ம எழுதப்போற கதையை பத்தி அடுத்தவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணலாம், ஆனா அவங்க கருத்துக்களை நம்ம கதையில திணிக்கக்கூடாது, அதனாலதான் கதை எழுதி முடிக்கிறவரை நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை.

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை.//

சொன்னாமடும் கேட்டுக்கற மாதிரிதான்.

ஒரு தடவை இப்படித்தான் என் தங்கமணிகிட்ட கதையைச் சொல்லிட்டிருந்தேன். முக்கியமான இடத்துல ’அடுத்து என்ன ஆகும்னு சொல்லு’ன்னு கேட்டேன்.

’பொரியல் தீய்ஞ்சு போயிடும்’ன்னு ஓடிட்டாங்க.

புதுகை.அப்துல்லா said...

அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க.

//

எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு விளக்கிக்கிட்டு!!!!! சுருக்கமா நம்ப அப்துல்லா கவிதைகள் மாதிரின்னு சொல்லி இருந்தீங்கன்னா எல்லாருக்கும் டக்குனு புரிஞ்சுடப்போகுது :)

புதுகை.அப்துல்லா said...

பரிசல்காரன் said...
ஒரு தடவை இப்படித்தான் என் தங்கமணிகிட்ட கதையைச் சொல்லிட்டிருந்தேன்

//

அண்ணே நீங்க தங்கமணின்னு சொல்லாதீங்கண்ணே. வழக்கம் போல அண்ணி பேரே சொல்லுங்கண்ணே. வித்தியாசமா உணருகிறேன்.

Ramesh said...

கடைசி வரிகள் அற்புதம்..

Thanks for sharing the thoughts!

rapp said...

நீங்க சொல்றது ரொம்ப சரிங்க. சம்மந்தியோட லேட்டஸ்ட் சுழல் கதைகள் கூட சூப்பரா இருந்தது:):):) அளவா, அழகா பதிவெழுதரதில், அதுவும் அத்துணை ஏரியாக்களையும் கவர் பண்ணி நர்சிம் சாரை அடிச்சுக்க முடியாது. ஆனா ஆயிரம் படைப்புகளை சம்மந்தி கலக்கலா எழுதினாலும், நேத்தைக்கு தாமிரா சார் பதிவுல எனக்கு ஆனந்த கண்ணீர் வர்ற மாதிரி அவ்ளோ அனுபவிச்சி எழுதின மாதிரி வருமா:):):)

rapp said...

//சாரி.. மீ த ஃபோர்த் & பிஃப்த்//

சென்ஷி அண்ணே, ஏதோ இந்த தரம் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டீங்கன்னு இறுமாப்பில் எள்ளி நகையாட வேண்டாம், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....................

rapp said...

//நம்ம கதையில திணிக்கக்கூடாது, அதனாலதான் கதை எழுதி முடிக்கிறவரை நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை//

சம்மந்தி, உண்மையச் சொல்லுங்க, எழுதி முடிச்சப்புறமும் நீங்க சொல்றதில்லைதானே:):):)

கயல்விழி said...

//விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//

அருமையான வரிகள்!

நீங்கள் எழுதும் கதைகளும் குமுதம், விகடனில் பிரசுரமாகும் பல கதைகளை விட நன்றாகவே இருக்கிறது. பிரபல பத்திரிக்கைகளில் சில கதைகளை படித்துப்பார்த்து, "இதெல்லாம் எப்படி பிரசுரமாகியது?" என்று வியந்திருக்கிறேன்.

Bleachingpowder said...

//தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.//

அதுக்கு வாத்தியார் எவ்வளவு மார்க் போட்டாங்கன்னு சொல்லவே இல்ல..

//அப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) //

அப்ப படிச்சிட்டு கல்ய்யாணத்துக்கு போக மாட்டீங்களா???

//அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன்.//

இப்ப மட்டும் என்ன பகிரங்க கடிதமா போடுறீங்க :)

//ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.//

விரிவான்னா அது அந்த நாவலை விட பெருசா இருக்குமா??

//நமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான்!//

நீங்க இன்னும் சிட்டிசன் பாக்கலைனு நினைக்குறேன்.

//ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம்.//

அவர் தான பயப்படனும், நீங்க ஏன் பயந்திங்க.

//ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன்.//

அனுப்பிருந்தா அத அவரே பண்ணிருப்பாரே :))

//அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும்.//

நிஜம்.

ஒரு தடவை கோவை. ஆர்.எஸ் புரம் அன்னபூர்னா வாசலில் அவரை பார்த்தது ரோடுன்னு கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்திட்டேன்.

பரிசல்காரரே காலையில் இருந்டு ஒரே மூட் அவுட். அதான் உங்களை கலாய்ச்சிட்டு இருக்கேன். தப்பா நினைச்சுகாதீங்க :))

☼ வெயிலான் said...

எனக்கு கதை எழுதத்தெரியாது, எழுதலை, அனுப்பலை :)

அதெப்படி பரிசல், அறிவுரை சொல்றவங்களுக்கே அறிவுரை சொல்றீங்க?

முரளிகண்ணன் said...

அருமையான முத்தாய்ப்பு

Anonymous said...

ஐயா எனது பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் சொல்வதேயில்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன்

Saminathan said...

கதையல்ல நிஜம்..?

rapp said...

me the 25th:):):)

MADURAI NETBIRD said...

//பள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.//

நண்பரே அனைவருக்கும் அந்த அனுபவம் உண்டு. நான் பள்ளி தேர்வு எழுதிய நாட்களில் பக்கத்திற்கு ஒரு மதிப்பென் என்று குறைந்த பட்ச மதிப்பென் 35 க்கு அதிகமாக வரும் அளவு அளவிற்கு 45 பக்கங்கள் எழுதுவது இயல்பு

ஆ உண்மையை சொல்லி விட்டேனா

Rangs said...

இப்ப சாரதா புக் ஸ்டால் இருக்குதா? ரொம்ப சின்னதா ஆயிருச்சு.. மொதோ மாரி காமிக்ஸ் எல்லாம் கெடைக்கறது இல்லன்னு சொன்னாங்க..
நான் படிக்கறப்ப எல்லாம் தினமும் சாயங்காலம் அங்க போகாம பஸ் ஏறவே மாட்டேன்..

ILA (a) இளா said...

//விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//
ஆமாங்க இது அறிவுரை சொல்றவங்களுக்கும் பொருந்தும், என்னாச்சுன்னு விசாரிக்கிறவங்களுக்கும் பொருந்தும். நல்ல பதிவு..

thamizhparavai said...

//உடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும்? அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா//
உங்கள் வார்த்தைகளில் உங்களை உணரமுடிகிறது....
நீண்ட நாள் கழித்து(நான் படிக்கவில்லையோ என்னவோ) அருமையான பதிவு...

Anonymous said...

//முக்கியமான இடத்துல ’அடுத்து என்ன ஆகும்னு சொல்லு’ன்னு கேட்டேன்.

’பொரியல் தீய்ஞ்சு போயிடும்’ன்னு ஓடிட்டாங்க.//

தங்கமணிகள் எல்லாம் இப்படி நிதானமா இருப்பதாலதான் வயித்துப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லாம இருக்கு. கத சொல்றன் கவித சொல்றன்னு அவங்க நிம்மதியக் கெடுக்காதப்பா.

Mahesh said...

//மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும்? அதே மாதிரி உணர்ந்தேன். //

எஸ். ராமகிருஷ்ணனோட உவமைகள் மாதிரி இருக்கு !!!

//படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.//

அதுதான் உங்களோட வெற்றிக்கு காரணமோ?

Thamira said...

பலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல?)
இதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்!)/// ரசித்தேன் பரிசல். பதிவின் இறுதிக்கருத்துகளும் பிரமாதம்.

Thamira said...

தங்கமணிகள் எல்லாம் இப்படி நிதானமா இருப்பதாலதான் வயித்துப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லாம இருக்கு. கத சொல்றன் கவித சொல்றன்னு அவங்க நிம்மதியக் கெடுக்காதப்பா.// வேலண்ணாச்சிக்கு ஒரு ரிப்பீட்டேய்..

ரமேஷ் வைத்யா said...

//மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும்? அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா//
அண்ணா,
எவ்வளவு க்ளிஷே கவனிச்சீங்களா? கொஞ்சம் உஷாரா இருங்க‌

Kumky said...

:)))

Kumky said...

வந்துட்டங்னா..
பொட்டிய ரொப்பிறவேண்டியதுதான்.

Kumky said...

இதோட மூனு மட்டம் படிச்சிட்டேன்.
எந்த தொய்வும் இல்லயே.
யார் உங்களுக்கு அட்வைஸ் சொன்னது?

கணினி தேசம் said...

கலக்கலா எழுதியிருக்கீங்க...!!
நன்றி