Wednesday, October 29, 2008
I AM BACK!
தீபாவளிக்கு என்ன ப்ரோக்ராம்? (தொலைக்காட்சியில் அல்ல. வீட்டில் கேட்ட
கேள்வி)
சனிக்கிழமை கோவை போய் மச்சினன் வீட்டில இருந்துட்டு, ஞாயிற்றுக்கிழமை உடுமலைப்பேட்டை போய் ரெண்டு நாள் இருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பி வரலாம் என்று முடிவானது. (முடிவானது-ங்கறதிலிருந்தே யாரோட முடிவுன்னு தெரிஞ்சிருக்கும்)
இரண்டு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் என் அலைபேசி இருந்ததால் நானும், ஐந்து நாட்கள் நான் வலைப்பதிவுகள் பக்கம் வராததால் நீங்களும் நலமாயிருந்தது நாடறிந்த விஷயம்!
**************************************
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகுமாரின் பெண்மை பற்றிய பேச்சை விஜய் டி.வி-யில் கேட்டேன். (கொடுமை என்னவென்றால் அந்த நிகழ்ச்சி திருப்பூரில்தான் பதிவானது. நேரில் பார்க்கவில்லை!) அப்புறம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. ஜெயாமேக்ஸிலும், இசையருவியிலும் மாறி மாறிப் பார்த்தேன். ஜெயா மேக்ஸில் ஹரிஹரனின் ஒரு நிகழ்ச்சி! (அபாரமாக இருந்தது! பாடிய எல்லாமே Rare Hits!) மக்கள் டி.வி-யில் புதிய கோணங்கிகளும், சந்தானத்தின் காமெடிகளும்!
*********************************************
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!
எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...
என்ன கொடுமை குருவாயூரப்பா இது?
****************************
அண்மையில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு சில தகவல்களுக்காகச் சென்றிருந்தோம், அடிப்படைக் கழிப்பிடவசதி இல்லாமல் இருந்தது. தமிழகத்தின் பல அரசு பள்ளிக்கூடங்களின் கதி இது என்று என்னோடு வந்தவர் புலம்ப, மற்றொருவர் சொன்னார். தமிழகமல்ல. இந்தியா முழுவதும் அரசு பள்ளிகள் ஒரே மாதிரிதான் என்றார்.
‘டாய்லெட் கட்டிக் கொடுக்க யாரும் முன்வரவில்லையா’ என்று கேட்டதற்கு தலைமை ஆசிரியர் சொன்னார்:-
“பக்கத்துல உள்ள சில நிறுவனங்கள் ஐந்தாறு வகுப்பறைகள் கட்டித் தரதா சொல்லிருக்காங்க”
“அதுதான் ஓரளவு போதுமானதா இருக்கே. வகுப்பறைகளுக்குப் பதிலா கழிப்பறகள் கட்டித்தரச் சொல்லிக் கேட்கலாமே”
“கேட்டோம். அவங்க ஒத்துக்கொள்ளவில்லை”
“ஏன்”
“வகுப்பறைகள் கட்டி முன்னாடி அவங்க நிறுவனத்தோட பேர் போடணுமாம். கழிப்பறை கட்டினா அதுல பேர் போடறது நல்லாயிருக்காதாம்”
எங்களுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
***********************************
பெரிய அரசியல் தலைவர்கள் பிறந்தநாள்கள் வரும்போதெல்லாம், ‘அந்தக் காலத்துல இவர் மிகவும் நேர்மையாக இருந்தார்’ என்று சொல்லி ஏதேனும் சம்பவத்தை உதாரணமாகக் காட்டுவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும்:
எனக்குத் தெரிந்து ஒரு ஊரின் சப்-ரெஜிஸ்ட்ரார் வரும் மக்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பார். தனது அலைபேசி எண்ணை அலுவலகம் எங்கும் ஒட்டி வைத்திருப்பார். எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் என்பார். பத்திரம் பதிய வருபவர்கள் கைகட்டி நின்றால் “ஏன் பெரியவரே என்னைப் பாவத்தை சுமக்க வைக்கறீங்க? கையைக் கட்டாதீங்க’ என்பார். பொதுமக்கள் யாரும் நிற்கக் கூடாது. உட்காரணும் என்பார். நடுவே டீ சாப்பிட வெளியே போகும்போது, பத்திரம் பதிய வந்திருக்கும் ஏதாவது பொதுஜனத்தின் தோளில் கைபோட்டுக் கொண்டு ‘வாய்யா, டீ சாப்பிடலாம்’ என்று போவார்.
அவரது நடவடிக்கைகளால் மிகவும் கவரப்பட்டு, அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். பிறிதொரு நாளில் ஒரு ஹோட்டல் முன் அவரைச் சந்தித்த போது நான்தான் அந்தக் கடிதம் அனுப்பியவன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு “உங்களைப் பற்றி சொல்லுங்களேன். பத்திரிகைல போடணும்” என்று சொன்னதற்கு பதறி “ஐயையோ.. வேணாம் தம்பி. பிரச்சினை வந்துடும். இப்படியெல்லாம் நான் பண்றது யாருக்கும் பிடிக்காது” என்று மறுத்துவிட்டார்!
‘இந்தக் காலத்துல நல்லவனா இருக்கறதுக்குப் பயப்பட வேண்டியிருக்கு’ என்று நினைத்துக் கொண்டே விடைபெற்றேன்.
ஓரிருவாரங்களுக்கு பிறகு அந்த ஊர்ப்பக்கம் போனபோது பத்திர ஆஃபீஸுக்குப் போனேன். முன்னால் போடப்பட்டிருந்த பெஞ்சுகள் எல்லாம் காணாமல் போய், சூழலே மாறியிருந்தது. அந்த மனிதரின் பேரைச் சொல்லிக் கேட்டபோது ஒரு உதவியாளன் பீடியைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து வாயில் வைத்தபடி கேட்டான். “அந்தாளு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வெகு நாளாச்சு. ஒனக்கு என்ன வேணும்?”
“நீதி வேணும். அவரை ஏன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க? ” என்று நினைத்தவாறே.. “ஒண்ணுமில்ல” என்று புறப்பட்டேன்.
**************************
எங்க ஊருக்குப் போயிருந்தப்ப கிளி ஜோசியம் பார்க்கறவர்கிட்ட போன எலக்ஷனப்ப பேசிகிட்டிருந்தது ஞாபகம் வந்தது. சும்மா பேசிகிட்டிருக்கறப்ப ‘விருத்தாச்சலமும் வி, விஜயகாந்தும் வி. அதுனால அங்க விஜயகாந்த்தான் ஜெயிப்பாரு’ன்னு சொல்லி, அதே மாதிரி ஆனப்ப கிழிஞ்சு போன காலரை இதுக்காகவே மாத்தி, தூக்கிவிட்டுகிட்டிருந்தாரு.
போனவாரம் அவரைப் பார்த்து, ‘இப்போ அதே தொகுதில வடிவேலுவும் நிக்கப் போறதா சொல்லியிருக்காரே. அவரும் வி-தானே?’ன்னு கேட்டுவெச்சேன்.
‘கிளி லீவு. நாளைக்கு வாங்க. சொல்றேன்’ன்னு தப்பிச்சுட்டாரு. கிளி இன்னும் லேட்டஸ்ட் நியூஸைப் படிச்சிருக்காதுன்னு நெனைக்கறேன்.
************************************
தமிழைப் பேசி கொலை பண்றவங்க மாதிரி, எழுதிக் கொலை பண்றவங்கள்ல பலவகை. (அதுல நானும் ஒருவகையோ?) அதாவது கடைகளுக்கு முன்னாடி வைக்கற A போர்டு-ங்கற ஸ்டேண்ட் போர்டுல இடப் பிரச்சினையால எழுத்த பிரிச்சுப் பிரிச்சு எழுதறாங்க பாருங்க.. கொடுமை.
ரஞ்சனி செப்பல்ஸ்-ஐ
ரஞ்சனி
செப்
பல்
ஸ்
அப்படின்னும்,
டிஃபன் ரெடியை..
டி
பன்
ரெ
டி – ன்னும் எழுதறாங்க.
இதுலயும் கொடுமை ஒரு இடத்துல அந்த ரெடியை ஒத்தைக் கொம்பு மேல, ர கீழ், அதுக்குக் கீழ டி-ன்னு எழுதியிருக்காங்க.
எப்படிய்யா படிப்பாங்க?
*********************************
கேரளா அடிமாலியில் கடந்த மாதத்தில் ஒரு நாள் 52 பயணிகளை ஏற்றிக்கொண்டு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்த பேருந்தில் ஒரு சீட் அப்படியே பெயர்ந்து பஸ்ஸுக்கு அடியில் விழுந்துவிட்டது.
அந்த சீட்டில் பயணி இருந்தாரா? பயணி இல்லை! வேறொருவர் இருந்தார்.. ட்ரைவர்!
ஆம். ட்ரைவர் சீட்தான் அப்படிப் பெயர்ந்தது!
உடனே சுதாரித்த ட்ரைவர் ஸ்டியரிங்கைப் பிடித்துத் தொங்கியபடி காலால் ப்ரேக்கை அழுத்திப் பிடித்து பயணிகளைக் காப்பாற்றிவிட்டார்!
பஸ் அப்போது ஒரு அபாயகரமான வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது என்பது கொசுறுச் செய்தி!
*******************************
பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கவிதை. எம்.எஸ்.நரேந்திரன் என்பவர் எழுதியது.. கடைசி வரியின் அர்த்தம் புரிபடுகிறதாவென யோசியுங்கள்!
வீட்டுக் கூடத்தில் துப்பாக்கி
புதுச்சேலையும் பல்லுமாய் பழைய வேலைக்காரி
ஆயில்பாத், இனிப்பு, போனஸ், லேகியம்
சின்னப்பெட்டியில் காஞ்சி சின்ன சாமியார்
பழக்கமான குரல்களுடன் வழக்கமான படிமன்றம்
சொறிந்த தலையுடன் யூனிஃபார்மில் தபால்காரன்
வெடிச்சத்தம், மழை, வாசனையுடன் புதுச்சட்டை
லெட்சுமி வெடித்த கைக்கட்டுடன் தம்பி
பக்கத்து வீடுகளுக்காகவே பட்டுடன் அம்மா
அதே கிழிந்த பனியனில் அப்பா
வீதியெங்கும் சிதறிய சிவகாசித் தாள்கள்
நாளைக்குப் பள்ளிக்குப் போகவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
வந்தாச்சா.. நல்லாயிருக்கு..
என்ன வேணும்..? // எனக்கு நீதி வேணும்?///
சூப்பர்
// I AM BACK! //
Back with a BANG.. கலக்கல் பரிசல்...
me the 3rd
பரிசல் தீபாவளி அன்னிக்கு பதிவர் நண்பர்களுடன் உங்கள் அலைபேசியை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல் போச்சு :(
//சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...
என்ன கொடுமை குருவாயூரப்பா இது?
//
:) கோயிலுக்கு உள்ளேயே உடைமாற்றும் அறை (கேமரா இல்லாமல் ) அமைக்கலாம்.
//ஐந்து நாட்கள் நான் வலைப்பதிவுகள் பக்கம் வராததால் நீங்களும் நலமாயிருந்தது நாடறிந்த விஷயம்!
//
திருப்பூரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை என்று நினைத்தேன்.
:)
// கோவி.கண்ணன் said...
//ஐந்து நாட்கள் நான் வலைப்பதிவுகள் பக்கம் வராததால் நீங்களும் நலமாயிருந்தது நாடறிந்த விஷயம்!
//
திருப்பூரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை என்று நினைத்தேன்.
:) //
ஹிஹி...நான் மொபைலுக்கும், கம்பியூட்டருக்கும் கேபிள் கட் பண்ணப்பட்டதுன்னு நெனச்சேன்...
:-)))...
வெண்பூவுக்கு ரிப்பீட்டேய்...
புடவைக் கூடாது ஓகே. ஆனா நெறயப் பேர் துப்பட்டாவை பறக்கவிட்டுக்கிட்டு போறாங்களே:(:(:(
// ட்ரைவர் ஸ்டியரிங்கைப் பிடித்துத் தொங்கியபடி காலால் ப்ரேக்கை அழுத்திப் பிடித்து பயணிகளைக் காப்பாற்றிவிட்டார்!
//
இதுக்கு வேற ஏதாவது செய்யணும். பஸ்சுக்கு அடியிலன்னவுடனே கொழம்பிட்டேன்.
கலக்கல் பரிசல்...............
எனக்கென்னவோ யாராவது சொல்லும்போது ஐ அம் பேக்குனு சொல்ற மாதிரியே இருக்கு..
சினிமா பத்தி எதுவும் சொல்லக் காணோம். ஏகன் பார்க்கலையா? அட கேள்விக்கூட படலையா சகா?
கே.கே.
welcome back. புது அவியல் மணமாக இருக்கிறது. சேலைத் தலைப்பை பாதுகாப்பாக (safety pin உதவியுடன்) சொருகிக் கொள்ளவேண்டும் என்று வேண்டுமானால் உத்தரவு போடலாம். ஒட்டுமொத்தமாக புடவை கூடாது என்பது கொஞ்சம் ஓவர்.
ஒரு அங்குசம் வாங்கினால் ஒரு யானை இலவசம் என்பதுபோல் ஒரு கழிப்பறை கட்ட உதவினால்தான் பள்ளியறை, சாரி, வகுப்பறை கட்ட உதவி பெறுவோம் என்று சொல்லிப் பார்க்கலாம்.
கவிதை அழகு. கவிதைசொல்லி, பள்ளியில் பயிலும் அண்ணனோ, அக்காவோ; அல்லது பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியரோ/ஆசிரியையோ. தீபாவளிக்கு அடுத்த நாள், கொண்டாட்ட களைப்புக்குப்பின், பள்ளி/வேலைக்கு செல்வது கொடுமை. அதை சொல்வதாகப் புரிந்துகொண்டேன். Am I missing something?
அனுஜன்யா
கே கே எப்படி ஐந்து நாள் பதிவு போடாம இருந்தீங்க? !!!
நல்ல வேளை நீங்க சென்ற இடத்தில் இணைய இணைப்பு இல்லை, உங்கள் குடும்பத்துடன் தீபாவளியை எந்த தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பில்லா பார்த்த எஃபெக்ட் தலைப்புல தெரியுது தல..
"லகலகலகனு கலக்கலக்கல்" ஆன மேட்டரா இருக்குறத பார்த்தா அப்படியே சந்திரமுகியையும் பார்த்திருக்கீங்கனும் தெரியுது..
கவிதை நச்..
நர்சிம்
சூப்பர்... அவியலுக்குன்னே எப்பிடித்தான் மேட்டர் புடிக்கிறீங்களோ... இதுக்குத்தான் கண்ணும் காதும் திறந்து இருக்கணும்கறது...
///(முடிவானது-ங்கறதிலிருந்தே யாரோட முடிவுன்னு தெரிஞ்சிருக்கும்)///
தெரிந்த்தது ஐயா தெரிந்தது.
வீட்டிற்கு வீடு வாசற்படி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகுமாரின் பெண்மை பற்றிய பேச்சை விஜய் டி.வி-யில் கேட்டேன்.
யதார்த்தமான அவரது உரையை கேட்ட பலபேர் அரங்கத்தில் நெகிழ்ந்தவாறு இருந்தது,மனதைத் தொட்டது.
//என்ன வேணும்? நீதி வேணும்//
பரிசல் டச்?
கவிதை நல்லா இருக்கு பரிசல்.
அவியல் வழக்கம்போல சூப்பர்.
\\அந்த சீட்டில் பயணி இருந்தாரா? பயணி இல்லை! வேறொருவர் இருந்தார்.. ட்ரைவர்!// அடக்கொடுமையே, பராமரிப்புன்னு ஒண்ண அந்த பஸ்ஸுக்கு பண்ணியிருந்திருக்க மாட்டாங்கன்னு தோணுது. நல்லவேளை ஓட்டுனருக்கு ஒண்ணும் ஆகிடலேயே
சேலை ஆபத்துங்கறதுக்காக எடுத்த ஐடியா .. நல்ல ஐடியாவா இருக்கு.. :) பேசாம கோயில்ல சட்டத்தை மாத்த சொல்லிடலாம்..
அத்த
னையு
ம்
நல்
லாரு
ந்த
து
பரி
சல்
.!
என் தந்தை சிறு வயதில் எப்படி வார்த்தைகளை பிரித்து எழுத வேண்டும் என சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறது. உதாரணம் சொல்வார். ஒரு ஹோட்டலில் இப்படி எழுதியிருந்ததாம்.
சாப்பா
டுப்போ
டப்ப
டும்
"அப்போ நான் போயி கேட்டேன் எனக்கு ரெண்டு சாப்பா குடுங்க"
அனைவருக்கும் நன்றி!
கொஞ்சம் பிஸியாக இருப்பதால் தனித்தனியாக பின்னூட்டம் போட முடியவில்லை என்பதைத் தனித்தனியாக சொல்ல முடியாததால், தனித்தனியாக சொல்லாமல் ஒட்டுக்காச் சொல்லிக்கறேன்! (இதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம்டா..!)
@ கிரி
இணைய இணைப்பு, லேப்டாப் எல்லாமே இருந்துச்சு நண்பா! நான் கட்டுப்பாடோட இருக்க கத்துக்கிட்டேன்ல!
I am back-என்று சொல்லிவிட்டு, பதிவு போட்டு முன்னாடி வந்துவிடுகிறீர்களே! தலைவா.
//டி
பன்
ரெ
டி – ன்னும் எழுதறாங்க.//
இது பின்நவீனத்துவ கவிதைன்னு குசும்பன் சொன்னாரே
அது உண்மையில்லையா
"அவியல்" மிகச்சுவையான செய்திகளின் கலவையாக இருந்தது. நன்றி.
Arnold வசனம் போல் தலைப்பு நச் !!
திருப்பூரில் தினமும் ஏழு மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. இருந்தாலும் தொடர்ந்து எப்படித்தான் பதிவு எழுதுகிறீர்கள்?
நேரம் கிடைக்கும்போது குருவாயூர் கிருஷ்ணன் சுடிதார் விவகாரம் பற்றிய எனது பதிவினை படியுங்கள்
http://nattunadappu.blogspot.com/2007/11/blog-post_07.html
கலக்கல் அவியல்... சரி தீபாவளிக்கு நல்லா சாப்பிட்டு தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சேன்...
//கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!//
சுடிதாரில் கூட துப்பட்டா மாட்டும் அபாயம் இருக்கிறதே?
Welcome back!!!
டி
பன்
ரெ
டி
ய படிக்க ஜப்பான் மொழி தெரியனும் போல :-)
-வீணாபோனவன்.
எங்க தமிழ் வாத்தியார் சொன்னது இது...
சாப்பா
டுப்போ
டப்பா
டும்
பிராமணர்
கள் சாப்பிடுமிடம்
(நன்றி:சபாபதி)
//“வகுப்பறைகள் கட்டி முன்னாடி அவங்க நிறுவனத்தோட பேர் போடணுமாம். கழிப்பறை கட்டினா அதுல பேர் போடறது நல்லாயிருக்காதாம்”//
:(
//சனிக்கிழமை கோவை போய் மச்சினன் வீட்டில இருந்துட்டு, ஞாயிற்றுக்கிழமை உடுமலைப்பேட்டை போய் ரெண்டு நாள் இருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பி வரலாம் என்று //
கோவையிலும் உடுமலைப்பேட்டையிலும் ஏதாவது அசாதாரணமான மாற்றம் நடந்திருக்கும். அதையும் சொல்லியிருக்கலாமே?
வந்தாச்சா? வாங்க வாங்க.
திருக்குறள் கதையும், விருந்தினர்கள் பற்றிய தொடர்பதிவும் பாக்கி இருக்குன்னு ஒரு எட்டு ஞாபகப்படுத்திட்டு போக வந்தேன்.
பாய்தூஜ் வாழ்த்துக்கள்
http://hairulovchessmaniacs.blogspot.com/
அண்ணே, அவியல் நெம்ப அருமையா இருக்கு.
இந்த சேலை, சுடிதார் பிரச்சனை இருக்கே, அது நெம்ப முக்கியமான பிரச்சனை. அத வைச்சு நான் ஒரு பதிவு எழுதிடுறேன். எழுதிட்டு வர்றேன்.
Post a Comment