விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.
ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.
சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.
அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்
வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.
அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.
சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.
இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.
வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.
குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.
அதிகாரிகளே...
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.
மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.
சபாஷ் ராஜ்மோகன்.
அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.
விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?
என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..
காவிரிப்பிரச்னை
காவிரிப்ப்ரச்னை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு.
எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன். இந்த நேரத்தில் நமது சகபதிவர் கிழஞ்செழியன் எத்தனையோ வருடங்களுக்கு முன் ‘அதானே’ என்ற தலைப்பில் ஒரு நாளிதழில் தினமும் எழுதி வந்துகொண்டிருந்த குட்டிக்கவிதைகள் சில...
என் காதல் கைகூடுமா
வேலை கிடைக்குமா என்றெல்லாம்
உள்ளூர் ஜோசியர் மூலம்
தகவல் சொல்வதற்காகவே
அகண்ட வானில்
சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களே
உங்கள் மற்ற வேலைகள்தான்
என்னென்ன?
*
தருமம் குறைந்தால்
தண்டிக்கவென்றே
தொடர்ந்து
அலை ஒற்றர்களை அனுப்பி
வேவு பார்த்துக்கொண்டேயிருக்கிறது
கடல் கடவுள்
(ஒரு ஆச்சர்யமான உண்மை:- இந்தக்கவிதை சுனாமி வருவதற்கு முன்பே எழுதியது!)
*
எங்கள் டிவியில்
எண்பது சேனல்
சாட்டலைட் கொடுக்கும்
தகவல் தொடர்பில்
உலக முகங்கள் பரிச்சயமாச்சு
உறவினர் முகங்கள் மறந்துபோச்சு
*
கடல் கரையில்
வாங்கிய சுண்டலில்
உப்பே இல்லை
*
கல்லுக்குள் இருக்கும்
தேரைக்கும் உணவு வைத்தான்
சரீ
கல்லுக்குள் கொண்டுபோய்
தேரையை ஏன் வைத்தான்?
*
புத்தரும் மகாவீரரும் கூட
நடுராத்திரியில்
சொல்லாமல் கொள்ளாமல்தான்
வெளியேற வேண்டியிருந்தது
எவ்வளவு பெரிய ஆளுக்கும்
கஷ்டம்தான் மனைவியை
கன்வின்ஸ் செய்வது
*
என் தெருவில் மெஸ் வைத்தாள்
கிட்டுமாமி
முதலிரவில் புருஷன் செத்த
கிட்டுமாமி
தோல்சிவந்த, உடல் திமிர்ந்த
கிட்டுமாமி
எவனெவனோ முயற்சி செய்தும்
புருஷனுக்காய் பொட்டுவைக்கும்
கிட்டுமாமி எவனுக்கும்
கிட்டாமாமி
*
பன்பட்டர் ஜாமும் பாலுகடை டீஒன்றும்
ஃபில்டர்கிங் கோல்ட்ஃப்ளேக்கும் நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகனே மேன்ஷன்லைஃப் கொல்லுதே நான்செட்டிலாகப் பெண்பார்த்துத் தா
*
நேரம் காலம் கிடையாது
எப்போ வருமோ தெரியாது
என்றாலும்
மழையின் வருகையை
மயில் அறியும்
மெட்ரோ வாட்டர் வருவது
என்
மனைவிக்குத் தெரியும்
*
திரியும் வண்டெல்லாம்
திருட்டு வண்டுகள்தான்
அதில்
சில வண்டுகள் மட்டும் ஏன்
சிறைப்படுகின்றன
கொட்டைக்குள் வண்டுபோல்
குடைகிறது கேள்வி
*
மொத்தமாய் அமைந்தால்
சிறகு
ஒத்தையாய்க் கிடந்தால்
இறகு
முன்னது பறக்க உதவும்
பின்னதால் காது குடையலாம்
*
அவளை
திங்கள் கிழமை பார்த்தான்
செவ்வாய்க் கிழமை கவனித்தான்
புதன்கிழமை சபலப்பட்டான்
வியாழக்கிழமை தீர்மானித்தான்
வெள்ளிக்கிழமை கடிதம் கொடுத்தான்
சனிக்கிழமை அவளுடைய அண்ணனிடம்
அடிவாங்கி அவமானப்பட்டான்
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை...
*
எத்தனை ஓட்டைகள் இருந்தாலும்
புல்லாங்குழலிலிருந்து
ஒழுகித் தீர்ந்துவிடுவதில்லை
இசை
(அபாரம் கவிஞரே..!)
*
'யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்"
''யாரிங்கே வரப் போகிறார்கள்?"
இதே வசனம் கேட்டு
நுரைப்புன்னகை பூக்கிறது
நூறுகோடி நூறுகோடி
காதலரைக் கண்ட கடல்!
43 comments:
அருமையான
கவிதைகளின் தொகுப்பு
வாழ்த்துகள்
அபாரம்! நன்றி!
பரிசலாரே.. இந்த வாரத்தையும் மிக நன்றாக துவக்கியிருக்கிறீர்கள்
அந்த உப்பே இல்லாத சுண்டல் கவிதை.. எத்தனை கோணங்களை தருகிறது.. எத்தனை சூழலை உணர்த்துகிறது..
கிழஞ்செழியா.. கவிதைகளின் வளஞ்செழிய இன்னும் எழுதுய்யா..
நர்சிம்
இந்நிகழ்ச்சியின் நடுவராக (நாட்டமையாக) இருக்கும் நெல்லை கண்ணனுக்கான ஒரு பதிவு
http://mathimaran.wordpress.com/2008/03/12/articale-s/
சூப்பரா இருக்கு பரிசல்...
நல்ல தொகுப்புகள். தேடிப்பிடித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வதற்கு நன்றிகள் பல.
அருமையான கவிதைகள்
:-)...
விஜய் தொலைக்காட்சி வழங்கும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி இது.
விஜயன் தான் முதலிடம் வருவார். இருந்தாலும் மற்றவர்களும் திறம் பட பேசுகிறார்கள்.
விஜயன் கடினமாக உழைக்கிறார். வைகோ போலவே சொல்லாடல், உடல் மொழி என அனைத்திலும் முயற்சி செய்கிறார்.
இறுதி போட்டியில் வைகோ போலவே விஜயன் வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை, கருப்பு துண்டு அணிந்து வருவார் என நம்புகிறேன். நெல்லை கண்ணன் வலை பதிவில் கேட்டு உள்ளேன்
குப்பன்_யாஹூ
கிழிஞ்செழியனின் கவிதைகளை வாசிக்க கொடுத்தத்ற்கு, உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!!!:-))
நல்ல தொகுப்பு பரிசல்.. அதிலும் அந்த மாமி கவிதை சூப்பர்..
கே கே கவிதை எல்லாம் அருமையாக இருக்கிறது, இதை நான் பார்க்க வில்லை பகிர்ந்தமைக்கு நன்றி.
அதெல்லாம் சரி கே கே இந்த நெல்லை கண்ணன் (அவர் சிறப்பாக செய்தாலும்) இம்சை தான் தாங்க முடியலை..இடையிடையே பேசுவர்களை இடைமறித்து ஏதாவது கருத்து கூறுகிறார், அவர்கள் பேசி முடித்தவுடன் தன்னுடைய கருத்தை கூறினால் சிறப்பாக இருக்கும்.
பெரும்பாலும் தொலைக்காட்சில நல்ல நிகழ்ச்சிகள் வர்றதில்லன்னுதான் எல்லாரும் சொல்லுவாங்க. நானும் அப்பாடி தமிழ் டீவி இங்க இல்லாதது நல்லதாப்போச்சுன்னு நெனச்சுக்குவேன். இப்படி நல்ல நிகழ்ச்சிகளும் வருதா, நண்பர்கள் கிட்ட சொல்றேன்.
நல்ல கவிதைகளைப் படிக்கத் தந்ததற்கு நன்றி பரிசல்.
தல நம்ம பக்கம் வந்து உங்க கருத்தை தெரிவியுங்க.. உங்க கருத்துக்காக வெயிட்டிங்..http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_09.html
மொத்தமாய் அமைந்தால்
சிறகு
ஒத்தையாய்க் கிடந்தால்
இறகு
முன்னது பறக்க உதவும்
பின்னது கிறங்க உதவும்
-என்று மாற்றினால் நன்றாக இருக்குமே
-கிருஷ்ணா சேகர்
நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு சிறப்பாக எழுதி இருக்க மாட்டேன். பதிவிற்கு நன்றி....
யார் எழுதினால் என்ன? திகட்ட திகட்ட விருந்து வைத்தமைக்கு ஒரு பெரிய ஓ பரிசலுக்கு போட்டே ஆக வேண்டும்.. கலக்கல் சகா..
இரண்டு பதிவாக போட்டிருக்கலாமோ என நினைத்தேன்..? உங்களுக்கென்ன பதிவெழுத மேட்டர் இல்லையா என்ன? நீங்க எழுதலாம் சகா..
இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சி எழுதறிங்க? :((((
கிழஞ்செழியனின் அனைத்து கவிதைகளும் அருமை.! ஆனால் தமிழ்ப்பேச்சு கவிதைகளை ரசிக்கமுடியவில்லை. மொக்கையாக இருந்தன. ஒருவேளை கேட்கும் போது நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நிகழ்ச்சி என்னவோ நல்லநிகழ்ச்சிதான்.!
கே.கே.
ரமேஷ் வைத்யா/சோமா/கிழஞ்ச்செழியன் கவிதைகள் ஒவ்வொன்றும் பிரமாதம். அவர் இன்னும் நிறைய எழுதலாமே.
மின்வெட்டு பற்றி வந்த கவிதைகைளில் சமீபத்தில் சிறந்தது முகுந்த் நாகராஜ் எழுதியது. வேலன் அவர் பதிவில் எழுதியிருந்தார். உயிர்மையில் வந்தது.
திருப்பூரிலும் ஒரு நாளுக்கு 24 மணிநேரம்தானா அல்லது 48 ஆ? எங்கிருந்து அய்யா கிடைக்கிறது இவ்வளவு நேரம் - அலுவல்/வாசிப்பு/TV நிகழ்ச்சி/பதிவுகள் மற்றும் குடும்பத்திற்கு! Hats off !
அனுஜன்யா
தொகுப்பு நன்றாயிருக்கிறது.
சில கவிதைகளை மேலும் வாசிக்கத் தூண்டுகிறது.
நல்லதொரு பதிவு.
க்ருஷ்ணா... உங்கள் கவிதை வாசிப்பு ப்ரமிப்பா இருக்கு... கவிதையோடு ரசித்த அனுபவத்தையும் அப்படியே பகிர்ந்து கொள்வது ஆச்சரியமா இருக்கு.. கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு :))
அந்த புல்லாங்குழல் கவிதை அட்டகாசம்.. அதிலுள்ள செய்தி வாழ்க்கையில் எதனுடன் ஒப்பிட்டு பார்த்து அனுபவிக்க முடியும்.. என்னை மாதிரி ஞான சூனியங்களுக்கு இது மாதிரி கவிதை தொகுப்பு (anthology) அப்பப்ப போடுங்க.. நன்றி.
ஆம், ராஜ்மோகன் கவிதைகள் அட்டகாசம். மிக உன்னிப்பாக கவனித்து இருக்கீங்க பரிசல்.
//அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.
//
மின்சார கம்பியில் கொடிக்கு பதில் துணி காயப்போடுவதுக்கு ஐடியா கொடுத்து முன்பு காமெடியாக எழுதினேன். இப்பொழுது ஒருவர் கவிதையாகவே எழுதிவிட்டாரா!!!
நன்றி பரிசல். பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டீர்கள். பாராட்டிய நண்பர்களுக்கும் என் நன்றிகள். திட்டியவர்களுக்கு 'க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'! :-)
அதிலே விஜயனின் பேச்சாற்றல் பிரமிக்க வைக்கும்.
நெல்லைக் கண்ணனே ஒரு முறை கண் கலங்கினாரே? குட்டியாய் இருப்பவனும் குட்டித் தனம் பண்ணுவான், பேச்சில்.
அழகானப் பதிவு.
எனக்கு ராஜ்மோகனோட வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்தது:):):)
மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.
அருமையான படைப்பு.
தொகுத்தமைக்கு நன்றி.
நல்ல தொகுப்பு!
very nice.....
பரிசலாரே, அருமையான பதிவு!
நிகழ்ச்சியைப் பார்த்ததும் நானும் ஒரு பதிவு போடலாம்னு பார்த்தேன். ஆனா நீங்க பயங்கர சுறுசுறுப்பு!
ராஜ் மோகனைப் போலவே, அருள் பிரகாஷ், விஜயனின் கவிதைகளும் சூப்பர்.
உங்கள் பதிவை என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.
நிகழ்ச்சி பற்றிய எனது பதிவு:
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - கவிதைச் சுற்று
அண்ணே, கலக்குங்கண்ணே... ஞாயிறு காலை 9 மணிதான் எனக்கு வாராந்திர துணி துவைக்கும் நேரம்ணே... நீங்க ஜாலியா டிவி பாக்கறீங்க..... :-)))
தேடிப்பிடித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வதற்கு நன்றிகள் பல.
விஜய் எங்க வீட்டுல தெரிவதில்லை.. நன்றி பகிர்ந்து கொண்டதற்கு..
ஆனா எப்படி இப்படி கவிதைகளை நினைவு வச்சுக்கிட்டா எழுதினீங்க..இல்ல ரெக்கார்ட் செய்துட்டு எழுதினீங்களான்னு ஒரே குழப்பமான ஆச்சரியம்.
பகிர்ந்தமைக்கு நன்றி பரிசல்
அருமையான தொகுப்பு... நன்றி பரிசல்
கலக்கலான கவிதைகள் பரிசல்.. எப்படி டிவியில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளீர்கள்? கையில் பேப்பர் பேனாவோடு டிவி பார்த்தீர்களா? இல்லை மனதிலிருந்தா?
கவிதை தொகுப்பிற்க்கு நன்றி!
அதானே கவிதைகளுக்கு
ஒரு நல்ல கவிஞரை தமிழுலகம் கவனிக்காமலேயே வைத்திருக்கிறது.
இம்முறை சென்னை செல்லும் பொழுது செமத்தியாக கவனிக்க வேண்டும்.
/
*
புத்தரும் மகாவீரரும் கூட
நடுராத்திரியில்
சொல்லாமல் கொள்ளாமல்தான்
வெளியேற வேண்டியிருந்தது
எவ்வளவு பெரிய ஆளுக்கும்
கஷ்டம்தான் மனைவியை
கன்வின்ஸ் செய்வது
/
wow
சூப்பரா இருக்கு பரிசல்..
Post a Comment