Saturday, January 31, 2009
நாகேஷுக்கு இதயாஞ்சலி :-(
அவர் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு நடிக்கப் போக முடிவெடுக்கிறார்.
“நீ கைகாட்டினா ரயிலே நிக்கிதுய்யா. அத விட்டுட்டு சினிமாக்கு நடிக்கப் போறியா?” எனக் கேட்கிறார் மேலதிகாரி.
“இப்போ நான் கைகாட்டினாத்தான் நிக்கிது. நான் பெரிய ஆளா வந்து எனக்காக ட்ரெய்னை நிக்க வைப்பேன்” என்கிறார் அவர். அப்படியே நடக்கவும் செய்தது பின்னாளில்.
அவர் நாகேஷ்!
************************************
‘என்ன சார் மிகக் குறைஞ்ச டைம் ஆயுளிருக்கற நீர்க்குமிழிய டைட்டிலா வெச்சிருக்கீங்க?” என்று பாலச்சந்தரிடம் நாகேஷ் கேட்டபோது “ஆனா சினிமால நீ ரொம்ப வருஷம் இருப்பய்யா” என்றாராம். இருந்துகாட்டினார் இவர்!
என்ன எழுதவென்றே தோன்றவில்லை.
எப்பேர்ப்பட்ட நடிகன்! பேச்சில்லாமல் நடித்து பேர் வாங்கலாம். பேச்சுமூச்சில்லாமல் நடித்து மகளிர் மட்டுமில் பேர் வாங்கிய மனுஷனல்லவா இவர்!
கமலஹாசனின் வலதுகரம் போன்றவர். அவருக்கு இது பேரிழப்பு.
நீர்க்குமிழி
எதிர்நீச்சல்
சர்வர் சுந்தரம்
அனுபவி ராஜா அனுபவி
தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல்
அபூர்வ சகோதரர்கள்
மகளிர்மட்டும்
அவ்வை சண்முகி
தசாவதாரம்
ப்ச்!
Friday, January 30, 2009
முத்துக்குமரா... என்ன செய்து உன்னை மீட்க?
அன்பின் முத்துக்குமரா...
அந்த எரிபொருளுடன் நீ முடிவெடுத்து சென்றுகொண்டிருக்கையில் தமிழர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்துகொண்டிருந்திருக்கக் கூடும்.
சிலர் அவர்களின் மேலதிகாரிகளின் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடும்.
சிலர் தொலைக்காட்சிமுன்னும், சிலர் பெரியதிரைகள் முன்னும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கக் கூடும்.
சிலர் தங்கள் துணை நலம் குறித்தும், சிலர் தங்கள் பணநலன் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடும்.
சிலருக்கு தங்கள் எதிர்காலம் குறித்தும், பலருக்கு தங்கள் நிகழ்காலம் குறித்தும் கவலைகள் இருந்திருக்கக் கூடும்.
சிலருக்கு உன்னைப் போலவே நம் இனம் அழிதல் கண்டு வெஞ்சினம் இருந்திருக்கக் கூடும்.
ஒரு கணத்தில் உன் செயலால் எல்லார் சிந்தனையையும் ஒன்றாக்கி விட்டாயே சகோதரா!
இந்த அரசியல்வியாதிகள் மீதும், வெற்றறிக்கைகள் மீதும் உனக்கிருந்த கோபம் புரிகிறது.
வெக்கங்கெட்டு அரசியல் செய்யும் பலரும் சிரித்துக் கொண்டிருக்க, நீ மட்டும் கருகிப் போனாயே சகோதரா...
என்ன செய்து உன்னை மீட்க?
**********************************************************************
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
பதிவுலக நண்பர்கள் இதை வெளியிடுங்கள். மற்ற நண்பர்கள் இதை மெயிலில் பரப்புங்கள். குறைந்த பட்சம் இதை முழுமையாகப் படியுங்கள்.
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
ஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 1
சனிக்கிழமை இரவே நானும், வெயிலானும் திருப்பூரிலிருந்து புறப்பட்டு கோவை சென்றோம். கடைசி நேரத்தில் டூரிலிருந்து ஜகா வாங்கினார் தொழிலதிபர் சஞ்சய். கோவத்தில் அவருக்கு அறை விடலாம் என்றால், அவர் அறையை எங்களுக்கு விட்டுத் தந்து இரவு தங்க உதவினார்.
தமிழ்ப்ரியனைச் சந்தித்தது இன்ப ஆச்சரியம். கார்க்கி, கும்க்கி, அண்ணாச்சியெல்லாரும் காத்திருந்தனர்.
சனிக்கிழமை இரவு சஞ்சயின் வீட்டில் சீட்டுக் கச்சேரியும், (நல்லாப் படிங்கப்பா.. சீட்டுக் கச்சேரி.. சிட்டுக் கச்சேரியில்ல!) பேச்சுக் கச்சேரியுமாய் ஆரம்பித்தது.
கார்க்கி ஹேக் ஆன ப்ளாக்கர் கணக்குகளைக் கண்டுபிடித்துக் கொடுத்துக் கொடுப்பதில் உள்ள நுண்ணரசியலைப் பற்றிப் பேசும்போது தமிழ்ப்ரியன் ஒரு பிட்டைப் போட்டார். ஒருவேளை நீங்க்ளே ஹேக் பண்ணி, கண்டுபிடிச்சுத் தர்றீங்களோ? என்று கேட்டார் கார்க்கியிடம்!
(கார்க்கி இந்த இடத்துல ஒரு தகவல்: நீங்க எழுதின சிறுகவிதைக்கு இது இன்ஸ்பியரேஷனோ? – பொத்திவெச்ச மல்லிகைப் பொட்டு பாட்டுல வர்ற ‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ வரிகள்!)
கும்க்கி இங்கேயே தனது தீவிர வாதத்தை (தீவிரமான வாதம்க! தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது!) ஆரம்பிச்சார். திருமங்கலத்துல 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் மீட்கப் பட்டிருப்பதாய் வெயிலான் சொன்னபோது சிவக்க ஆரம்பித்த அவர் கண்கள் அப்போதே எங்களை எச்சரித்தது. ‘அங்கே ஆன செலவைப் பத்திதான் எல்லாரும் பேசறீங்க. அதுக்குப் பின்னாடி இருக்கற பாலிடிக்ஸ் பத்தி யோசிங்க” என்றார். அப்ப எலக்ஷன் என்ன விளையாட்டு செய்தியா? பாலிடிக்ஸுக்குப் பின்னாடி இருக்கற பாலிடிக்ஸைப் பத்தி பேசறீங்களா. ‘சரி பேசுங்க’ என்றோம் ஆனால் பேசவே இல்லை. (எங்க பேச விட்டீங்கன்னு அவரு கேட்கறது இங்கே என் காதுல விழுது)
காரசாரமான விவாதம் நடந்துகிட்டிருக்கறப்போ, தமிழ்ப்ரியன் ஒண்ணுமே பேசல. அண்ணாச்சி சொன்னார்: “நாங்க இங்கே பதிவாப் போட்டுட்டு இருக்கோம். நீங்க பின்னூட்டமாவது போடுங்க” அதுக்கும் தமிழ்ப்ரியன் வெறும் ஸ்மைலிதான் போட்டார். சாருவைப் பற்றியும் பேச்சு வந்தது. சாருவை படிக்காம ஒதுக்க முடியாது. படிச்சுட்டு ஒதுக்கணும் என்று கருத்து வந்தது. அப்போ ஒருத்தர் சொன்னார்: ‘கோணல் பக்கங்கள் 1, கோணல் பக்கங்கள் 2, கோணல் பக்கங்கள் 3 இந்த நாலு புக்கையும் நிச்சயமாப் படிக்கணும்” என்றார். மூன்று புத்தகங்களைச் சொல்லி, நாலு புத்தகம் என்று சொல்வதிலிருந்து அளவு தெரிந்து, அதோடு நிறுத்திக் கொண்டு சீட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.
காலை எழுந்தபோது, சஞ்சயைக் காணவில்லை. எஸ்கேப் ஆகியிருந்தார்.
காலை எழுந்து நானும், அண்ணாச்சியும், தமிழ்ப்ரியனும் இரயில்வே ஸ்டேஷன் சென்று தாமிராவை அழைத்து வந்தோம். தமிழ்ப்ரியன் அங்கேயே வடை ச்சே... விடை பெற்றுக் கொண்டார். பயணத்தில் கலந்து கொள்ளாவிடினும், எங்களைச் சந்திக்க நேரமொதுக்கி வந்த அவர் அன்புக்கு கண்ணீர் மல்க நன்றிகூறி.. (சரி.. சரி.. எனக்கே ஓவராத்தான் இருக்கு! விடுங்க) அறைக்கு வந்தபோது செல்வேந்திரனும் வந்து சேர்ந்திருந்தார்.
எல்லாரும் குளித்து (கார்க்கியைக் காட்டிக் கொடுக்க மனமில்லை) கிளம்பினோம். ஒன்றுமே பேசாவிட்டாலும் தானொரு சரக்குள்ள ஆசாமி என்பதை கும்க்கி நிரூபித்த தருணங்கள் அவை.
ஊட்டிக்கு செல்லும் வழியில் ஒரு வ்யூ பாய்ண்டில் ஆரம்பித்த எங்கள் விவாதம் எதுவரை சென்றது?
தொட்டபெட்டாவில் தாமிரா எடுத்து நாங்கள் ரசித்த அந்த இயற்கை அழகின் ரகசியம்
அங்கே எங்களைச் சந்தித்த லதானந்த் அங்கிள் அளித்த பரிசு என்ன?
மசினகுடி காட்டேஜுக்கு அருகில் இருந்த வோடஃபோனிலிருந்து வந்த இளம்பெண்கள் அறையில் நடந்தது என்ன?
இன்னும் முக்கியமாக எங்கள் விவாதத்தின் மூலம் நாங்கள் இந்த நல்லுலகுக்குச் சொல்லும் சேதி என்ன? (ம்க்கும்!)
அடுத்த பார்ட்டில் (‘யி’ இல்ல) பார்க்கவும்!
Thursday, January 29, 2009
அவியல் - ஜனவரி 29 2009
வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?
என்று காய்களையும் சேர்த்து கவி படைத்திருக்கிறார்!
வெள்ளரிக்காயா: வெள்ளரி = வெண்மை நிறமுடைய அரி (திருமால்) நரசிங்கமாய்த் தோன்றியபோது அவரது தாய் அவர் தோன்றிய தூண்தானே? அந்தக் காதலி தூணைப் போல நின்றுகொண்டிருந்தாளாம்!
விரும்புமவரைக் காயா: விரும்புவோரை இயல்பாகக் கோபம் கொள்ளுபவளா நீ? (காயா – கோபமா?)
இப்படி அர்த்தத்தோடு சேர்த்திப் படிக்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது.
இதே தொகுப்பில் ‘தாயோடு அறுசுவைபோம்’ என்ற பாடலில் பொற்றாலியோடு எவையும்போம் = பொன்தாலி அணிந்த மனைவி போனால் எல்லா நலனும் நீங்கிவிடும் என்றெழுதிய அவ்வையாரே... யார் யாரை எங்கெங்கே புகழ வேண்டும் என்றெழுதிய ‘நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்’ என்ற பாடலில் ‘மனையாளைப் பஞ்சணையில்’ என்றெழுதியது ஏனென்று புரியவில்லை. மனைவியைப் பஞ்சணை மெத்தையில் புகழவேண்டும் என்பதில் எனக்குடன்பாடில்லை.
மனைவிகளுக்கு அவர்கள் அழகைப் புகழ்வதில் மகிழ்ச்சியுண்டு எனினும், அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். மனைவிமார்களுக்கு அவர்கள் சமையலைப் புகழ்கையில் அதே அளவு மகிழ்விருப்பதைக் கண்டிருக்கிறேன்/கேட்டிருக்கிறேன்.
************************
இதேபோல பாடல்களில் புரியாத வரி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது... ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே’ பாடலில் வரும் ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ எனும் வரி. இதற்கு நல்லதொரு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாக இதன் அர்த்தம் அறிய ஆவல். மழைத்துளி கன்னிமையை எப்படிக் கண்டறியும்? ஏதோ ஒரு குறும்பான அர்த்தத்தில்தான் கவிஞர் இதை எழுதியிருப்பார். அதை அறிய ஆசையாய் இருக்கிறது! வைரமுத்துவை நேரில் கண்டால் கேட்க விரும்பும் கேள்விகளில் இது ஒன்று. தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்!
***************************
ஊட்டி சுற்றுலா போகுமுன் கோவை ஹோட்டல் ஒன்றில் காலை டிஃபனுக்காகப் போனோம். மசால்தோசை ஆர்டர் செய்த அண்ணாச்சி (வடகரை வேலன்) சர்வரிடம் சொன்னார்:
“வேகமா கொண்டுவாங்க. கால் மாத்திடாதீங்க”
எனக்குக் குழப்பமாக இருந்தது. கால் மாத்திடாதீங்கன்னா? அண்ணாச்சியிடமே கேட்டேன்...
“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”
வேகாம.
ஹோட்டல் என்பதால் அவர் காலில் விழ முடியவில்லை!
***************************
நண்பர் எம்.எம்.அப்துல்லா எல்லாரையும் ‘அண்ணே’ என்றழைப்பது நாடறிந்த விஷயம். நான் ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அப்துல்லாவுக்கு கான்ஃபரன்ஸ் கால் போடச் சொன்னார். போட்டபோது, இவர் கேட்டார்:
“அப்துல்லா.. உங்களுக்குக் கூப்பிட்டபோது உங்க அண்ணன்னு யாரோ பேசினாங்க நேத்து. ஆனா அது உங்க குரல் மாதிரிதான் இருந்தது. யார் அது?”
நான் இடைமறித்துச் சொன்னேன்...
“இவராத்தான் இருக்கும். பழக்கதோஷத்துல தன்னையே அண்ணன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு!”
எல்லாரும் கைதட்டீங்களா? வெரிகுட்!!
********************
திருப்பூரில் ஒரு வீட்டிற்கு திருடன் வந்திருந்து, திருட முயன்றிருக்கிறான். பலமணிநேரத் தேடலில் ஒன்றும் சிக்கவில்லை. கடுப்பாகிப் போன அவன் வீடு முழுவதும் மலஜலம் கழித்து, பான்பராக் கறைகளாலும் அசிங்கப் படுத்திவிட்டுப் போய்விட்டானாம்.
இதைத் தினசரியில் போட்டிருந்தார்கள். சரி. முடிக்கும்போது ஒரு வரி...
“வீட்டுக்காரரின் சமயோசிதத்தால் 40000 ரூபாய் தப்பியது. அவர் குப்பைக் கூடைக்குள்ளும், அரிசிப் பானையிலும் பணத்தை ஒளித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”
தேவையா இது?
***************************
காதலில் விழுந்தேன் படம் பற்றி ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“படமாங்க அது. ச்சே. செத்துப்போன காதலியோட பாடியை வெச்சுட்டு சுத்தறானாம் ஹீரோ” என்றொருவர் சொல்ல நான் கேட்டேன்.
“ச்சீ! பாடியை வெச்சுட்டா? அசிங்கம். அசிங்கம்” ன்னேன்.
ஒரு நிமிஷம் யாருக்கும் ஒண்ணும் புரியல. புரியறதுக்குள்ள நான் அங்கிருந்து சிரிச்சுட்டே வெளிய வந்துட்டேன்!
*********************
போன வார ஜீ.வி-யில் பார்த்திபனின் டைமிங்கூ நல்லா இருந்தது.
‘எது நடந்ததோ
அது ஏழாயிரமாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது ‘சத்திய’மாகவே நடக்கிறது
எது நடக்குமோ
அது ஜாமீனாகவே நடக்கும்!'
'இடையிடையே
தேர்தல் போதும்
தமிழக கிராமங்கள்
தன்னிறைவடைய...'
இப்படி நாலைந்து.
எனக்குப் பிடித்த காசி ஆனந்தனின் ஒரு நறுக்கு
ஏடுகளில் முன்பக்கம்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கம்
அடுக்களையில்
தலைப்பு: பெண்கள்.
.
Tuesday, January 27, 2009
செல்வேந்திரன்!
“சார்.. இங்க வண்டியை நிறுத்தி, சிகரெட், வாட்டர் பாட்டில்ன்னு குப்பை போடாதீங்க சார். ஊட்டியே காணாமப் போயிடும் இப்படி எல்லாரும் பண்ணினீங்கன்னா. நீங்க போடற குப்பையை நாலாங்க்ளாஸ், அஞ்சாங்களாஸ் பசங்க பொறுக்கறாங்க சார்... இந்த ஊரை சுத்தம் பண்ண ஜப்பான்காரன் காசு தர்றான்.. கேவலமா இல்லையா... அவன் சுத்தமா வெச்சுக்கடான்னு காசு தர்றப்ப நாம இப்படி குப்பை போடறது” என்றபடி பேசவே முடியாதபடி சில வாதங்களை எடுத்துவைக்கிறார். எல்லாரும் ‘சாரி’ கேட்டுக்கொண்டு வண்டியில் ஏறினாலும், “நம்மளைக் கேள்வி கேட்கத்தான் அவனால் முடியும். இதவிட பெரிய தப்பு பண்றவனையெல்லாம் விட்டுடுவாங்க” என்ற பேச்சு எழும்பியபோது பயணத்தில் வந்த ஒருவர் சொல்கிறார்:
“அம்பது ரூபா, நூறு ரூபா குடுன்னு தலையைச் சொறிஞ்சுகிட்டு நிக்காம குப்பை போட்டதைத் தட்டிக் கேட்கணும்ங்கற உணர்வு இருக்கற இந்த மாதிரி காவலரைப் பாராட்டத்தான் முடியலீன்னாலும், அவர் மாதிரி ஆளுககிட்ட சண்டை போட்டு, அவன் வீரியத்தைக் குறைச்சுடாதீங்க.”
அவர்தான் செல்வேந்திரன்!
இந்தப் பதிவுக்கு ‘செல்வேந்திரன்’ என்றுதான் முதலில் தலைப்பிட்டேன். பிறகுதான் ‘செல்வேந்திரன்!’ என்று மாற்றினேன். பெயருக்குப் பின்னால் ஆச்சர்யக்குறி போடும் அளவுக்கு எல்லாரிடமிருந்து வித்தியாசப்பட்டு, எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர் என்பதால். செல்வேந்திரர் என்று ‘ர்’ விகுதியில் எழுதவேண்டிய அளவுக்கு உயர் பண்புடையவர் இவர்.
முட்டை சைவமானது போல, கெட்ட பழக்கங்கள் என்று வரையறைப் படுத்தும் பல பழக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் நல்ல பழக்கங்கள்தான் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்ட போதிலும், எந்தத் தீய பழக்கத்தையும் பழகாமல், ஒரு தபஸ்வியின் வாழ்வுக்குச் சமமான ஒழுக்கத்துடன் இருக்கிறார் இவர்.
எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன் நான். இவரோ, அதைத் தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் செய்வதால் என்னை பிரமிக்க வைக்கிறார்.
பயணம் முழுவதும் எல்லாருமே ‘ஹ்யூமர்’ சென்ஸோடு பலவிஷயங்களைப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தோம். ‘ஹ்யூமன்’ சென்ஸோடு சிந்தித்துக் கொண்டும் வந்தவர் இவர் மட்டும்தான்.
பணியின் நிமித்தம் தவறுகள் நடக்கும் துறைகளுக்கெல்லாம் செல்ல வேண்டியிருப்பினும், பொது இடத்தில் குப்பை போடும் சாமான்யன் முதல், நாட்டையே நாசமாக்கும் பலதரப் பட்ட மக்களைச் சந்தித்தாலும் எதிலும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் தன்னிலையில் வாழும் ஒருவராய் இவர் இருப்பதில் இவர் எங்கோ உயர்ந்து நிற்கிறார்.
இவரது பதிவுகள் இவரது திறமையைத்தான் வெளிக்காட்டும். பழகிப் பாருங்கள்.. இவரது மனிதத்தை நீங்கள் உணரமுடியும்.
இவரை இவ்வளவு நான் சிலாகிக்கக் காரணம், பல இடங்களில் பல பொழுதுகளில் நம்மை ரௌத்ரப் படுத்தும் நிகழ்வுகள் நடக்கையில் மனதிற்குள் வெம்பி, விம்மி அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் என் எண்ணமொத்த நண்பர்களோடு பகிர்ந்து கொள்பவன். இவரோ, அதை அங்கேயே தட்டிக் கேட்டு செயலில் இறங்க முயற்சிப்பவர்.
எல்லாருக்கும் பல விஷயங்களுக்காக ‘நாம் நல்லவன்தான்’ என்ற எண்ணமேற்படும். அப்படி என்னை நானே நல்லவன் என்று சொல்லிக் கொண்டால், நான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை இவரோடு இருந்த இரு நாட்களில் உணரமுடிந்தது.
தனிமனித ஒழுக்கத்தால் தேசத்தில் மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கிருக்கும் நம்பிக்கையில் எப்போதும் மாற்றமில்லை. ஆனாலும் அவ்வப்போது, அங்கங்கே நடக்கும் சில ஒழுக்க மீறல்களும், அந்த ஒழுக்க மீறல்களில் சேராமல் ஒதுங்கி நாம் நிற்கையில் வேற்றுகிரக வாசியைப் போல நம்மீது வீசப்படும் பார்வைகளும் என் நம்பிக்கையின் ஆணிவேரை கொஞ்சம் அசைத்துப் பார்க்க முற்பட்டிருக்கிறது. ஆனால் செல்வேந்திரனைப் போல ஒருவரைப் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை பலப்பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார் தேசத்தை மாற்ற. அந்த நூறு இளைஞர்களிடம் இருக்க வேண்டிய கனல், இவர் ஒருவரிடமே உண்டு. ஆனால் காலம் மாறிவிட்டதல்லவா... இப்போது இவரைப் போல நூறு இளைஞர்கள் தேவையாயிருக்கிறது இந்த தேசத்தை மாற்ற.
இவற்றைத் தவிர இவரொரு சிறந்த படிப்பாளி, படைப்பாளி. விகடனில் இவரது படைப்பான ‘முடியலத்துவம்’ பல வாரங்கள் வந்துகொண்டிருந்தபோது, வாங்கியவுடன் படிக்கும் பக்கமாக அது இருந்தது. இவரெழுதிய ‘செல்லெனப்படுவது’ எனும் கதையா... கட்டுரையா என்ற கட்டுக்குள் அடங்காத படைப்பொன்று சுஜாதாவால் கவரப்பட்டு ‘யார்யா அவன்? இந்த மாதிரி ஆட்களை என்கரேஜ் பண்ணுங்கப்பா’ என்று அவர் அழைத்துச் சொல்லும் வண்ணம் அமைந்தது.
நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிப் படிக்கிறார். பாராட்டுகிறார். ‘நிறைய கவிதைத் தொகுப்புகள் வெளிவருவதை நான் தடுத்திருக்கிறேன்’ என்று இவர் சொல்வதன் மூலம், பிடிக்காத படைப்புகளை காலில் போட்டு நசுக்கத் தயங்காத ஆண்மை இவருக்குண்டு என்பதையும் அறிந்தேன்.
நானெல்லாம் ஏதாவது எழுதவேண்டியிருந்தால் மனதிற்குள் எழுதிப்பார்த்து, கணினியில் ட்ராஃப்ட் எழுதி, படித்துத் திருத்தி வெளியிடுவேன். இவர் பேசுவதெல்லாமே ஒரு படைப்புக்குரிய தகுதியோடுதான் இருக்கின்றன.
ஒருமுறை ‘இப்படிப்பட்ட அறிவியல் சாதனம் வராதா’ என்று ஓரிரு சாதனங்கள் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா... ‘ஹியரிங் ரைட்டர்’ மாதிரி நாம் பேசினாலே கிரகித்துக் கொண்டு எழுத்துக்களாய் எழுதிவிடும் ஏதேனும் கண்டுபிடிப்பு வந்தால் (வந்துடுச்சா?) இவருக்குப் பரிசளிக்கலாம். எக்கச்சக்க படைப்புகளை எதிர்பார்க்கலாம்.
யாரோடாவது ஏதாவது கூட்டுவிவாதம் நிகழ்த்தும்போது ‘இல்லல்ல.. அது அப்படியில்ல’ என்று எதிர்வாதம் வருவது வழக்கம். இவர் பேசும்போது மட்டும், நாங்கள் கேட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது.
என் நண்பன் செந்தில் ஒருமுறை என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். அதாவது ‘திடீரென்று நீங்கள் பெண்ணாக மாறிவிடுகிறீர்கள் என்றால் உங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களில் யாரைக் காதலிப்பீர்கள்?’ என்று. அப்போதைக்கு அப்படி யாருமே இல்லை என்றேன். இப்போது என்னால் சொல்லமுடியும்!
‘இரண்டுநாள் எங்கே போனீர்கள்’ என்று கேட்பவர்களிடமெல்லாம், டூருக்கு, ஊட்டிக்கு என்பதையெல்லாம் விடுத்து, இவரைச் சந்தித்ததைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்வின் எந்தச் சூழலிலும், எந்த நிலையிலும் இப்போது இருக்கும் வீரியம் குறையாதிருந்து தன்னாலான மாற்றத்தை இந்த இளைஞர் ஏற்படுத்துவார் என்பதை நினைக்கையில் மிகப் பெருமிதமாய் இருக்கிறது.
பயணத்தில் பல முறை நாங்களெல்லாம் பயன்படுத்திய வார்த்தை ‘ச்சான்ஸே இல்ல!’ ஆனால் இவரைப் பார்த்தபின் தோன்றுகிறது.. சான்ஸ் இருக்கு!
இந்தப் பதிவைப் பார்த்தும் அவர் கோபப்படுவார். ‘எதுக்கு இவ்ளோ பாராட்டணும்’ என்பதான கோபமாக அது இருக்காது. ‘ஒருத்தன் எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கறது பாராட்டுக்குரிய விஷயமா மாறிவிடுகிற அளவுக்கு ஆய்டுச்சே’ என்பதான கோபமாகத்தான் அது இருக்கும்.
அதுதான் செல்வேந்திரன்!
*
படங்களுக்கு நன்றி: தாமிராவின் காமிரா
*
Saturday, January 24, 2009
இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு!
மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அந்த நிறுவனத்தினர், ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இயந்திரத்தை இவருக்கு அளித்தபோது ஒரு விஷயம் சொன்னார்களாம். ஜெர்மனியில் அவர்களது நிறுவன முதலாளியின் அறையில் அந்த ஒரு லட்ச ரூபாய் செக் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டதாம். உருவத்தை, உடையை வைத்து எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக.
அவர்.. அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டல்ஸ் – தாமோதரசாமி.
**************************
லண்டனில் ஒரு நிறுவனத்திற்கு ஜப்பானிலிருந்து ஒரு இயந்திரம் வாங்கப்பட்டது. மிக விலையுயர்ந்த அந்த இயந்திரத்தில் ஏதோ கோளாறு. சரி செய்ய மெக்கானிக்கை அனுப்பச் சொல்ல, ஜப்பானிலிருந்து 22, 23 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வருகிறார். ஏர்ப்போர்ட்டிலிருந்து வந்ததும் தங்கும் அறைக்குச் செல்லாமல் நேராக அந்த நிறுவனத்திற்குப் போய் என்ன குறை என்று பார்க்க விழைகிறார். நிறுவன அதிகாரிகள் ‘இந்தச் சின்னப் பையனா ரிப்பேர் பண்ணப் போறான்’ என்று நினைத்தபடி என்ன குறை என்பதை விளக்குகிறார்கள். இவன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, இவனுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்த லிஸ்ட்டை அவர்களிடம் குடுத்து ஓய்வெடுத்து விட்டு நாளை வருவதாய்ச் சொல்லிச் செல்கிறான்.
நிறுவனத்திலிருப்பவர்கள் ஜப்பானில் அந்த இயந்திரம் வாங்கிய அலுவலகத்திற்கு இவ்வளவு மதிப்பு வாய்ந்த இயந்திரத்தை ஒரு கத்துக்குட்டி கைவைப்பதா என்று தங்கள் அதிருப்தியை ஃபேக்ஸில் வெளிப்படுத்த, அவர்கள் உணர்வை மதித்து நாளையே வேறொரு ஆளை அனுப்புவதாய் பதிலளிக்கிறார்கள்.
அடுத்தநாள் 45 வயதுள்ள ஒருவரோடு அந்த இளைஞனும் வந்து சரி செய்கிறார்கள்.
எல்லாம் முடிந்து அந்த நிறுவன அதிகாரி இளைஞரிடம் “தப்பா நெனைக்கக் கூடாது. ரொம்ப அருமையான கண்டுபிடிப்பான இந்த இயந்திரம் பழுதாகக் கூடாதுன்னுதான் ஒரு சீனியரை அனுப்பச் சொன்னோம்” என்கிறார்கள்.
உடனே சொல்கிறார் அந்த சீனியர்.. இளைஞரைக் காட்டி..
‘அருமையான கண்டுபிடிப்புன்னா அதுக்கு இவரைத்தான் பாராட்டணும். அவர்தான் அந்த டீமோட R & D சீஃப். தன்னோட மிஷின்ல குளறுபடியான்னு நம்பாமத்தான் தானே போய்ட்டு வரேன்னு கிளம்பினார். நான் ரிப்பேர் பண்ற மாதிரி நடிச்சேனே தவிர, இவர்தான் எல்லாம் பண்ணினார்”
நிறுவன அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.
****************************
பெர்னாட்ஷா ஒரு பழைய புத்தகக்கடையில் தேடுதலில் இருந்தபோது, அவர் எழுதி கையொப்பமிட்டு தன் நண்பனுக்குக் கொடுத்த புத்தகம் அங்கே இருப்பதைக் கண்டார். என் கையெழுத்துக்கு அவனவன் ஆலாய்ப் பறக்கிறான். இவன் வாங்கி, பழைய கடைக்குப் போட்டிருக்கிறானே என்று நினைத்த அவர், அதை வாங்கி மறுபடி அவனுக்குக் கொடுத்து அவன் மூக்குடைக்க வேண்டும் என்று நினைத்து, கடைக்காரனிடம் விலை கேட்டார்.
“20 டாலர் வரும். மொத பக்கத்துல எவனோ கையெழுத்துங்கற பேர்ல கிறுக்கிவெச்சுட்டான். அதுனால 15 டால்ர் குடுங்க போதும்”
******************************
சாக்ரடீஸ் அவசர அவசரமாக அந்த டாக்ஸியை அணுகினார். அவருக்கு இன்னும் 20 நிமிடங்களில் ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டி இருந்தது. அங்கே அவரது உரைக்காக காத்துக் கொண்டிருப்பர்கள்.
“சவாரியெல்லாம் வரமுடியாதுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ரேடியோல சாக்ரடீஸ் பேசுவாரு. அதக் கேட்கணும். அதுனால இந்த நேரத்துல அங்கயும் போக மாட்டேன்” என்கிறார் ட்ரைவர்.
சாக்ரடீஸூக்கு பூரிப்பு தாங்கவில்லை. ‘அட!’ என்று மகிழ்ந்தவாறே ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போல ஒரு தொகையை பையிலிருந்து எடுத்து நீட்டி ‘அந்த சாக்ரடீஸ் நான்தான்ப்பா’ என்று சொல்ல எத்தனித்தார். காசைப் பார்த்ததுமே கண்கள் விரியச் சொன்னார் டாக்ஸி ட்ரைவர்.. “சரி... நூறு ரூபா தர்றீங்க... வாங்க. சாக்ரடீஸாவது ஒண்ணாவது... பொழப்பைப் பார்க்கலாம்”
*******************************
(நியூட்டனா, தாமஸ் ஆல்வா எடிசனா என்று ஞாபகமில்லை. நியூட்டன் என்று வைத்துக் கொள்வோம்....)
தனது அறிவியல் சாதனம் ஒன்றின் கண்டுபிடிப்பைப் பற்றி
ஒவ்வொரு ஊராக தனது காரில் போய் விளக்கமளித்துக் கொண்டே வருகிறார் நியூட்டன். இப்போது போல தகவல் தொழில்நுட்பம் அப்போது இல்லை. இவரே ஊர் ஊராகப் போய் இவரது கண்டுபிடிப்பைப் பற்றிப் பேச வேண்டும். ஒரு கட்டத்தில் சோர்ந்து போகிற நியூட்டன் தனது ட்ரைவரிடம் “இந்த ஊர்ல நீயே பேசு. இங்க என்னை யாருக்கும் தெரியாது. இத்தனை தடவை நான் பேசினதைக் கேட்டில்ல.. பேசிடுவதானே?” என்கிறார். ட்ரைவரும் சம்மதிக்கிறார்.
அதேபோல ட்ரைவர் அந்தக் குறிப்பிட்ட கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கம் அளித்துவிட்டு, போக முற்படுகையில் ஆளாளுக்கு சந்தேகம் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் போகிறது. காரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் நியூட்டனுக்கு பதட்டமாகிறது. டக்கெனச் சொல்கிறார் ட்ரைவர்
“பல ஊர்களுக்குப் போய் வந்ததால் மிகவும் களைப்பாக உணர்கிறேன். உங்களது இந்தச் சின்னச் சின்னச் சந்தேகங்களை என் ட்ரைவரே தீர்த்து வைப்பார்”
****************************
இது ரொம்ப லேட்டஸ்ட்....
புனேவில், ரயில் நிலையத்தில் ஒரு ஷூட்டிங். ஹீரோவுக்கான ஷாட்கள் முடிந்துவிடவே, ‘நீங்க கேரவனுக்குப் போங்க’ என்று சொல்கிறார் டைரக்டர். ஹீரோ கையில் ஒரு புத்தகத்தோடு நகர்கிறார். ஒரு சில ஷாட்கள் முடிந்து பேக்கப் சொல்லிக் கிளம்பும்போது ஹீரோவைக் காணவில்லை. தேடுகிறார்கள்.. போர்ட்டர்களிடம் விசாரிக்க, அவர்கள் ஒரு தூணின் மறைவைக் காட்டுகிறார்கள். ஒரு போர்ட்டரிடமிருந்து வாங்கிய துண்டை மடித்துத் தலையணையாக்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அந்த ஹீரோ. டைரக்டர் பதட்டமாகி... “என்ன சார் இது” என்று கேட்க... “நோ.. நோ... கொஞ்ச நேரம் பார்த்துட்டுப் போலாம்னு நெனைச்சேன்.. அப்படியே தூங்கிட்டேன்.” என்கிற அவரது எளிமையைக் கண்டு யூனிட்டே பிரமிக்கிறது.
டைரக்டர் – ஷங்கர்.
படம் – சிவாஜி.
ஹீரோ..... வேற யாரு!
*
Friday, January 23, 2009
ஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்
அவன் ஒரு குடிகாரனல்லன். ஆனால் அவ்வப்போது குடிப்பான்.
டாஸ்மாக் பார்களைப் பொறுத்தவரை அதன் ஒழுங்கின்மை அவனுக்கு மிகவும் பாதிப்பைத் தரும். ஆனால் ஒரு சில சிறப்பானவைதான்.
பொள்ளாச்சியில் ஒரு டாஸ்மாக் பார். (அப்போது ஏது டாஸ்மாக்? செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா? ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம். இன்று வரை அவனுக்கு அந்த சுகம் வேறெங்கும் கிட்டவில்லை.
சாம்பார் வடை என்றதும் அவனுக்கு வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருமுறை அவன் திண்டுக்கல்லோ, ஒட்டன்சத்திரமோ போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாம்பார் வடை கேட்டான். சர்வர், “சாம்பார் இருக்கு, வடை இருக்கு. ரெண்டையும் தர்றேன் சாப்பிடுங்க” என்றிருக்கிறான். இவன் “இல்லீங்க உளுந்து வடையை சாம்பார்ல ஊறவெச்சிருப்பாங்க. அதுதான் சாம்பார்வடை” என்றிருக்கிறான். சர்வரோ விடாப்பிடியாய் ‘நான் முப்பது வருஷமா பல ஊர்ல பல ஹோட்டல்ல சர்வர் வேலை பாத்தவன். சாம்பார் வடைன்னு ஒண்ண நான் கேள்விப்பட்டதே இல்ல’ என்றிருக்கிறான். இவனுக்கு கோவம் வந்து வாக்குவாதமாகி, கவுண்டர் ஆசாமி வந்து சமாதானப் படுத்தி.... ப்ச்.. அது தனிக் கதை! (அதுதான் சொல்லீட்டில்ல! அப்பறம் என்ன!!)
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆங்... டாஸ்மாக் பார்களைப் பற்றி...
சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது். டாஸ்மாக் பார்களில் இருக்கும் எந்தவிதக் கூச்சல், குழப்பமோ, பீடி, சிகரெட் குப்பைகளோ, சர்வரின் அலம்பல்களோ அங்கே பார்க்க முடியவில்லை. ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு பணிவிடை இருந்ததாம். ‘இல்லீன்னா நாங்கல்லாம் இங்க வருவோமா?’ என்று அவன் நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவனிடம் இதைச் சொன்னபோது நம்பவே இல்லை. 'மொதல்லயே அடிச்சுட்டுப் போயிருப்ப. டாஸ்மாக் பார் ஏ.ஸியாம்... பெரிய ஸ்க்ரீன்ல படமாம்' என்று கிண்டலடித்தான். ஒருமுறை அவனை அங்கே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.
தனியார் பார்களில் சைட் டிஷ்களுக்கு ஆகும் நேர விரயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஒருமுறை நண்பர்களோடு சென்றிருந்தபோது ‘பள்ளிபாளையம்’ என்று அவர்கள் ஆர்டர் செய்தார்கள். ‘அதென்னடா’ என்று விசாரிக்க (நண்பனுக்கு நான்வெஜ் பரிச்சயமில்லை) ‘சிக்கனை அந்த ஊர் ஸ்டைலில் செய்வார்கள்’ என்று பதில் வந்தது. அந்த பள்ளிபாளையம் வர ‘கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று அவர்கள் சொல்ல இவன் ஸ்போர்க்கால் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ எனச் சொல்ல ‘நீ எடுத்தது தேங்கா. சிக்கனைச் சாப்பிடு’ என்று மிரட்டப் பட்டிருக்கிறான்.
இரண்டாவது முறை அந்த பள்ளிபாளையத்தை ஆர்டர் செய்து அரை மணிநேரம் கழித்து வந்தபோது உப்பு அதிகம் என்று சொல்லி திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட அந்த பள்ளிபாளையம் அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடுசெய்யப் பட்டு எந்த மாறுதலுமின்றி வந்தபோது ‘ஆங்.. இது ஓக்கே’ என்று நண்பர்களால் பாராட்டப் பட்டு உட்கொள்ளப் பட்டபோது இவன் எந்த வித்தியாசமுமறியாமல் சர்வரைக் கேட்டபோது ‘மாஸ்டர் கால்மணிநேரம் கழிச்சு இதையே குடுன்னு குடுத்தார். மப்பு ஏறியிருக்கும்ல.. அதான் ஒண்ணும் வித்தியாசம் தெரியல’ எனச் சொல்லப்பட்டான்.
அவனை நான் மதிக்கக் காரணம் குடித்துவிட்டு உளறவோ, கூத்தடிக்கவோ அவனுக்குத் தெரியாது. அதிக பட்சம் அவன் குடித்துவிட்டுச் செய்யும் கொடுமை என்னோடு பேசிக் கொண்டிருப்பதுதான்.
“டேய்.. நீ பெரிய எழுத்தாளனாடா?”
எனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....
“எழுத்தாளன்னெல்லாம் இல்லடா. ஏதோ கிறுக்கீட்டிருக்கேன்”
“அப்ப நான் சொல்றத எழுதுடா”
“சொல்லு”
“நேத்து என் கம்பெனில ஒரு நாதாரி என்ன பண்ணினான் தெரியுமா?”
“தெரியாது... சொல்லு”
“அவனுக்குக் கீழ வேலை பாக்கற ஒரு பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல. காய்ச்சல்-ன்னு லீவு கேட்டிருக்கு. இவன் வேணும்னே அவ கழுத்துல கை வெச்சுப் பார்த்து, ‘காய்ச்சலெல்லாம் இல்லியே’ ன்னுருக்கான்.அதுக்கு அந்தப் பொண்ணு ‘உள் காய்ச்சல் இருக்குங்க’னிருக்கு. அதுக்கு இந்தக் கம்மனாட்டி என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?”
“...........”
“’உள் காய்ச்சல்ன்னா.. உள்ள கை வெச்சுப்பார்க்கவா’ ன்னிருக்கான்”
“அவனைச் செருப்புல அடிக்கலியா நீ?”
“எனக்கு மேல வேலை செய்யற நாயி அவன். ஒண்ணும் பண்ண முடியல. இப்படித்தான் போன மாசம் என்னாச்சுன்னா..”
இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.
அது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்....
Wednesday, January 21, 2009
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்... – Part 2
என்னடா இது நாம ரொம்ப பிரியமா பூச பண்ற ரங்கநாதரைக் கேட்டுட்டாரே’ன்னு பிரம்மர் தடுமாறினப்போ ரங்ஸ் வந்து ‘என் அர்ச்சை பூமிக்குச் செல்லவேண்டியது அவசியம்’னாராம்.
அர்ச்சை?
பகவானுக்கு ஐந்து நிலைகள் இருக்காம். பரம், விபவம், வியூகம், அந்தர்யாமி, அர்ச்சை.
பரம் – வைகுண்டத்துல காட்சி தர்ற வடிவம்
விபவம் – ராமர், கிருஷ்ணர் மாதிரியான அவதாரங்கள்
வியூகம் – ஸங்கர்ஷன், பிரத்யும்னன், அநிருத்தன் மாதிரியான திருமேனிகளுடன் பகவான் காட்சி தர்றது
நம்ம மனசுல நினைச்சு வணங்கறது – அந்தர்யாமி
நெக்ஸ்ட் – இப்போ சிலாரூபமா வணங்கறோமே.. அதான் அர்ச்சை.
சரி.. 'பகவானே சொல்லீட்டாரே’ன்னு பிரம்மா அந்த ரங்கநாதரை இஷ்குவாகு கிட்ட குடுத்துடறாரு.
இஷ்குவாகுவோட பரம்பரைல அடுத்தடுத்து வர்ற எல்லாருமே அதை வணங்கீட்டு வர்றாங்க.. யார் யாரு...?
பகீரதன், ரகு, திலீபன், அஜன், தசரதன்.. நெக்ஸ்ட் நம்ம ராமன்.
இந்த ராமன் என்ன பண்றாரு.. தன்னோட பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு அந்த ரங்கநாதரை கிஃப்டா குடுத்துடறாரு.
விபீஷணன் அதை எடுத்துக்கிட்டு இலங்கைக்கு ரிட்டர்ன் போறப்போ காவிரிக்கரைல அதை வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்தாராம். மறுபடி எடுக்க ட்ரை பண்ணினப்போ அது நகரவே இல்லையாம்! விபீஷணன் மகா டென்ஷனாய்ட்டாராம்! ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் லங்காவாய்ட்டாராம்.
அப்ப, அந்த வழியா வந்த சோழமன்னன் தர்மவர்மா “சார்.. இப்ப இன்னாத்துக்கு இந்த பீலிங்கு? இங்கனயே இருந்துட்டுப் போகட்டுமே? ரங்ஸுக்கு வேணுங்கற பூஜையை நான் செய்றேன்’ங்றாரு. விபீஷணன் வெக்ஸா இருக்கறப்போ ரங்கநாதர் வந்து ‘விபீஷணா.. டோண்ட் வொர்ரி. நான் இங்கதான் இருக்கணும்கறது நியதி. அது ஏன்னு அடுத்த பாரால பரிசல்காரன் எழுதியிருக்கான் படிச்சுக்கோ. உன் வருத்தத்தைப் போக்க நீ இருக்கற இலங்கை உள்ள தெற்கு நோக்கிப் பார்த்தபடி நான் இருப்பேன்’ ன்னாராம்.
அது ஏன் தர்மவர்மா அரசாண்ட காவிரிக்கரையில் நிலை கொண்டது. அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு. (எனக்கு புராணக் கதைல பிடிச்சதே இதுதான். எல்லாத்துக்கும் ஒரு லிங்க் இருக்குது!) தசரதர் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்துல எல்லா நாட்டு மன்னர்களும் கலந்துகிட்டபோ தர்மவர்மாவும் கலந்துகிட்டாரு. அப்போ தசரதர் வெச்சிருந்த இந்த ரங்கநாதரை பார்த்த தர்மவர்மா ‘ஷோக்காகீதே.. இது என்னாண்ட இருந்தா டெய்லி பூஜை பண்ணி கும்பிடலாமே’ன்னு மனசுல நினைச்சு சந்திரபுஷ்கரணி-ங்கற தடாகத்தின் கரையில் தவமிருந்தானாம். அப்போ சில ரிஷிகள் வந்து ‘யெஸ்.... இட் வில் ஹேப்பன்!’ என்று சொல்லீட்டுப் போனாங்களாம். அத நம்பி தவத்தை முடிச்சுகிட்டாராம். அதான் இப்போ விபீஷணன் மூலமா நிறைவேறுது.
அப்படி தன்னிடத்துக்கு வந்த ரங்கநாதனுக்கு தர்மவர்மா கோயில் கட்டினாலும், ஒரு முறை காவிரில வெள்ளம் வந்து கோயிலை முழுமையா மூடிடுச்சாம். பின்னால வந்த கிள்ளிவளவன்ங்கற மன்னன் ஒருதபா காட்டுக்குப் போனப்போ ஒரு கிளி திரும்பத் திரும்ப சில செய்யுள்களைச் சொல்லிகிட்டிருந்ததாம். அது சொன்னதிலிருந்து அங்க எங்கியோ ரங்கநாதர் இருக்கார்ன்னு கண்டுகிட்ட அவர் பூமியை தோண்டி ,மணலையெல்லாம் அகற்றி ரங்கநாதரைக் கண்டுபிடிச்சு, கோயிலை சீரமைத்தாராம்.
கிளிசொன்னதால கன்டுபிடிக்க்கப்பட்டதால் இந்தக் கோயில்ல கிளிமண்டபம்னு ஒண்ணு ஸ்பெஷலா இருக்கு!
இந்தக் கதைகளை நான் சொல்லி முடிக்கும்போது, க்யூவில் முன்னால் இருக்கறவங்க வெளியேற ஆரம்பிச்சாங்க. என்னடான்னு விசாரிச்சா ‘4 மணிக்குத்தான் கதவு திறக்குமாம். மணி ரெண்டுதான் ஆகுது’ ன்னு சொன்னாங்க. நாமளும் போலாமான்னு நெனைக்கறப்போ உமா ‘வேண்டாங்க. இன்னைக்கு தரிசனம் பண்ணாமப் போறதில்ல’ன்னு சொல்ல, போறவங்களுக்கு வழிவிட்டு நாங்க க்யூவுல முன்னாடி முன்னாடி போய்ட்டே இருந்தோம்.
கதவுலேர்ந்து 25,30வது ஆளா நாங்க முன்னேறினப்போ டக்னு கதவு திறந்து விட்டாங்க. அப்பத்தான் எவனோ புரளியைக் கிளப்பியிருக்கான்னு தெரிஞ்சது.
உள்ளபோய் ஸ்பெஷல் டிக்கெட் வாங்கீட்டு, நல்ல திவ்ய தரிசனம்! முடிச்சுட்டு பரமபத வாசல் வழியா வெளில வந்தோம்!
*******************
சரி... இனி சில கொசுறுத் தகவல்கள்...
கர்ப்பகிரகத்துக்குள்ள இருக்கற ரங்கநாதரை தரிசிக்கறப்போ காலிலிருந்து தலையைப் பார்க்கணுமாம். அதாவது நாம நிக்கற நிலையிலேர்ந்து வலதுபுறமா இருக்கற அவரோட காலை முதல்ல பார்க்கணுமாம். அப்படிப் பார்க்கறப்போ பக்கத்துல நிக்கற கோயில் ஆசாமிகள் நம்மளை இழுத்து இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்றப்போ அப்படியே தலைநோக்கிப் பார்த்தவாறே வெளியேறலாமாம்.
ஸ்ரீரங்கம் பக்கத்துல இருக்கற குணசீலம் சிறப்பு வாய்ந்ததாம். அதாவது திருப்பதிக்கு வர்றேன்னு நீங்க வேண்டிகிட்டா, அங்க போக முடியலீன்னாலும், குணசீலம் போனா உங்க வேண்டுதல் நிறைவேறினமாதிரிதானாம். ஆனா அதே சமயம் குணசீலம் வர்றேன்னு வேண்டிகிட்டு, திருப்பதி போனா அக்சப்டட் கிடையாதாம்.
கோயில்களைச் சுத்தியும் கடைகள் இருக்கறது ஓக்கே. நேத்து யாரோ சொன்னமாதிரி அவங்களுக்கு வியாபாரம் ஆகணுமே. ஆனா, ராஜகோபுரத்துகிட்டயே ‘அவ்ளோதான் இனி உள்ள செருப்போட போக முடியாது. இங்கயே விடுங்க. பூஜை சாமான் வாங்கீட்டுப் போங்க’ன்னு நச்சரிக்கற கும்பலைத்தான் தாங்கவே முடியல.
விசேஷ நாட்கள், கூட்டமிருக்கற நாட்கள்ல பூஜைக்கு தேங்காய், பழம், பூ வாங்கீட்டுப் போறது வேஸ்ட். அப்படியே பையை வாங்கி தட்டத்துல வெச்சு டக்னு மறுபடி எடுத்து கைல குடுத்துடறாங்க. அவங்களைச் சொல்லி குத்தமில்ல. அந்தக் காசை கோயிலைச் சுத்தி இருக்கற கையேந்தி நிக்கற முதியவர்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடுக்கலாம்.
கோயிலுக்குள்ளும் மனுஷனால விடமுடியாத விஷயம் செல்ஃபோன். எங்க பார்த்தாலும் செல்ஃபோன் ரிங்டோனைக் கேட்க முடிஞ்சுது. கொடுமையான சினிமாப் பாட்டெல்லாம் கோயிலுக்குள்ள கேட்டுது! (நான் சைலன்ஸ்ல வெச்சிருந்தேன். மெய்ன் சந்நிதானத்துக்குள்ள ஆஃப் பண்ணீட்டேன்!) அதுவும் ரங்கநாதர் சந்நிதிக்குள்ள ஒரு ஃபோன் அடிக்கவும், எங்கடா ரங்கநாதர் சாய்ச்சுப் பிடிச்சிருக்கற கையை எடுத்து ‘யெஸ்... டெல் மீ ஆண்டாள்..’ ம்பாரோன்னு நெனைச்சேன். நல்லவேளை அப்படி நடக்கல. (அப்படி நடந்தாதான் நல்லவேளை இல்ல!?!)
வெளில உட்கார்ந்துகிட்டிருக்கறப்போ ஒருத்தர் பேசிகிட்டிருந்தார். கையை தலைக்கு சாய்மானம் குடுத்தபடி இருக்கற ரங்கநாதரோட சிலைல, கை கொஞ்சம் கொஞ்சமா இறங்கீட்டே வருதாம். முதல்ல எல்லாம் வலது கண்ணை ஒட்டி கை, காதை மூடியபடி இருக்குமாம், இப்போ கை அப்படியே பிடரிப்பக்கம் போய்டுச்சாம்.
நான் ஒண்ணும் சொல்லல.
Tuesday, January 20, 2009
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1
‘எனக்கு ரொம்ப நாளா ரங்கநாதனைப் பார்க்கணும்னு ஆசைங்க’ என்று உமா சொன்னபோது கொஞ்சம் பயந்துதான் போனேன். அவரது ஒன்றேமுக்கால்விட்ட தம்பி ரங்கநாதன் என்று ஒருத்தர் புனேவில் இருக்கிறார். அடடா.... இந்தப் பொங்கலுக்கு செலவுதான் போல என்று நினைக்கும்போது ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று விளக்கமாய்ச் சொன்னபோதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
‘அவரு யாருப்பா’ என்று குழந்தைகள் கேட்கவே தசாதவதாரத்தை விளக்கி (புராணக்கதை இல்லீங்க.. கமலோட தசாவதாரம்) அதுல ஒரு சிலையைக் கடல்ல போடுவாங்கள்ல அதுதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று சொல்ல அவர்களுக்கும் ஆவல் தொற்றிக்கொண்டது.
திருப்பூரில் பஸ் ஏறியபோதே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம். பஸ்ஸில் ‘குருவி’ டிவிடி ஓடிக்கொண்டிருந்தது. கண்டக்டரிடம் பேசி வேறு படம் போடச் சொல்லி தாஜா செய்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்த இரண்டு இளைஞர்கள் ‘இத மாத்தாதீங்க’ என்று சொல்லவே ‘சரி... உங்க தலையெழுத்து’ என்றவாறு அமர்ந்தேன். (லிஃப்டுடன் பூமிக்கடியில் சென்று ஆற்றுக்குள்ளிருந்து விஜய் வெளிவரும் காட்சியில் வேண்டுமென்றே எழுந்து அவர்களை திரும்பிப் பார்க்க... “ஸாரிங்ணா.. இந்தளவுக்கு எதிர்பார்க்கல” என்றார்கள்.)
************************
எனக்கு ஸ்ரீரங்கம் மிகப் பிடிக்கும். ரங்கநாதரைத்தவிர இரண்டு ரங்கராஜன்களின் ஊர் என்பதால். எப்போதோ சின்ன வயதில் பெற்றோர்களோடு வந்த நினைவு லேசாக இருக்கிறது.
இரவு திருச்சியில் தங்கி, காலை ஸ்ரீரங்கம் பயணித்தோம். வழியில் அகண்ட காவிரியைப் பிரமிப்பாய்ப் பார்த்தவாறே.
அந்த 236அடி ராஜகோபுரத்தை அடையும்போது லேசான மழைத்தூறல் எங்களை வரவேற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப் பெறாதிருந்த இந்தத் தெற்கு ராஜகோபுரம் அகோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டதாம். ஆசியாவேலேயே மிக உயரமான கோபுரமான இதன் ஆறாவது நிலைக்கு நன்கொடை அளித்திருப்பவர் இசைஞானி இளையராஜா என்பது உட்பட பல விபரங்களை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு சந்திதியாக தரிசனம் முடித்து, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க அவரது மூலஸ்தானம் நோக்கி செல்லும்போது பிரகாரக் கதவுகள் அடைக்கப் பட்டிருந்தன.
“அவரு குதிரை வாங்கப் போயிருக்காரு. ஆயிரங்கால் மண்டபம் போனீங்கன்னா அவரைப் பார்க்கலாம்” என்று உற்சவமூர்த்தி ரவுண்ட்ஸில் இருப்பதாகச் சொன்னார்கள். சரி என்று ஆயிரங்கால் மண்டபத்தை தேடிப் போவதற்குள் ‘அடடா.. இப்போதான் இங்கேர்ந்து கிளம்பறார்ங்க. முன்னாடி இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்குல்ல? அங்க போய் நின்னீங்கன்னா அந்த வழியாத்தான் வருவார்’ என்றார்கள்.
மறுபடி அங்கேயிருந்து அவர் குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து போனபோது “இந்த இடத்தை அவர் க்ராஸ் பண்ணி 10 நிமிஷம் ஆச்சு. பிரகாரத்துக்குள்ள போயிருப்பாரு. 11.30க்கு மூலஸ்தான வாசல் திறப்பாங்க. உள்ள போயிடுங்க. 1 மணிக்குள்ள தரிசனம் முடிஞ்சு சொர்க்க வாசல் வழியா வந்துடலாம்” என்றார்கள்.
‘இதென்னடா.. அப்பல்லோ ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் மாதிரி அப்பாய்ன்மெண்டே தரமாட்டீங்கறாரே’ என்று நினைத்தவாறே மூலஸ்தானத்திற்குள் போக நின்றிருந்த நீ............ண்டதொரு க்யூவில் நிற்கும்போது மணி 11. என்னப்பா இன்னைக்கு இவ்ளோ கூட்டம் என்றால் சொர்க்கவாசல் அடுத்த நாள் மூடிவிடுவார்கள். பிறகு அடுத்த வைகுண்ட ஏகாதசிக்குத்தான் திறந்துவிடுவார்களாம். அதனால்தான் கூட்டமாம்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கிறதே.. இந்தக் கோயிலின் பரப்பளவு எத்தனை என்று விசாரித்தபோது பிரமிப்பாய் இருந்தது. மொத்தம் 156 ஏக்கரில் அமைந்துள்ளது இந்தக் கோயிலின் பரப்பு. ஏழு பிரகாரங்கள், ஒன்பது தீர்த்தங்கள், 21 கோபுரங்கள், 13 கலசங்கள் என்று பிரம்மாண்டமான கோயில்தான்.
மணி 11.30...
12....
12.30....
1.....
கதவுகள் திறந்தபாடில்லை. கூட்டம் முட்டித்தள்ள ஆரம்பித்தது. கொஞ்சம் முன்னால் இடையில் தடுப்பை மீறி சிலர் செல்ல ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகிப் போய் அவர்களை ஒழுங்குபடுத்தி சத்தம் போட்டு எல்லோரையும் பின்னுக்கு வரச் செய்து, ‘முன்னாடி எவனாவது புகுந்தா பக்கத்துல இருக்கறவங்க தட்டிக் கேட்டாத்தானே ஆகும். அங்கேர்ந்து நான் வரணுமா.. என்ன சார் இது’ என்று நியாயம் கேட்டுவிட்டு மீண்டும் நான் நின்றிருந்த இடத்துக்கு வந்தபோது ‘யோவ்.. ஒழுங்கா லைன்ல வா’ என்று நாலைந்து குரல் கேட்டது. ‘வாங்கய்யா... தர்மவான்களா.. இவ்ளோ உடனே அட்வைஸை ஃபாலோ பண்றாங்கய்யா’ என்று நினைத்தவாறே அவர்களுக்கு விளக்கமளித்து மீண்டும் லைனில் நின்றேன்.
1.30.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையிழந்தது. சிலர் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். திடீரென்று ‘பக்தா... உன் பக்தியை மெச்சினோம். பொறுமையாகக் காத்திருந்தது மட்டுமில்லாமல் கூட்டத்தையும் நெறிப்படுத்திய உமது பண்புக்குப் பரிசாய் உனக்கு எமது விஸ்வரூபத்தைக் காட்ட சித்தமானோம்’ என்று ரங்கநாதர் வந்து உள்ளே கூப்பிட்டால் என்னென்ன வரம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே....
“அப்பா.. இந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்கப்பா” என்று மீரா சொல்ல..
மொத்தக் கூட்டமும்... (சரி.. சரி... பக்கத்துல இருந்த நாலைஞ்சு பேர்னு வெச்சுக்கங்க!) கவனிக்க நான் ஆரம்பித்தேன்....
Monday, January 19, 2009
அவியல் – ஜனவரி 19 ‘2009
கோயிலின் க்யூவில் நிற்கும்போது மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு குழந்தையிடம் அப்பா கேட்டார்.
“நீ என்ன பாப்பா வேண்டிக்கப்போற?”
அவள் கன்னத்தில் கைவைத்து யோசித்தவாறே, “என்ன வேண்டிக்கறது?” என்று திருப்பிக் கேட்டாள்.
“அப்பா கொஞ்சம் ஒல்லியாகணும். நீ கொஞ்சம் குண்டாகணும்ன்னு வேண்டிக்க” என்றார் அவர்.
இவள் சரி என்று கம்பிமேல் ஏறி விளையாடி விட்டு, ஐந்து நிமிட இடைவெளியில் கேட்டாள்..
“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”
சுற்றி இருந்தவர்களெல்லாம் பிரமித்துப் போக, அவள் அப்பாவின் கண்களில் பெருமிதம்!
**************
கோயிலை ஒட்டிய பெட்டிக் கடை ஒன்றில் அறிவிப்பு.
எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.
எச்சரிக்கை 2: நாளை வரலாம்.
துக்ளக் பாணியிலேயான இந்த அறிவிப்பை வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எழுதிய கடைக்காரருக்கு கைகொடுத்துப் பாராட்டியபோது ‘ஒவ்வொரு தடவையும் இப்படித்தாங்க எழுதுவேன்” என்றார் அவர்.
பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!
**************
யானைகளுக்கு காசும், தேங்காயும் கொடுத்தால் பாகனிடம் கொடுத்துவிடுகிறது. பழம் கொடுத்தால் 'லபக்’கென்று வாயில் போட்டுக் கொள்கிறது. எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டிருக்கும்போதே பாகன் அடுத்து நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..
“ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா காயினாக் குடுங்க. ஒரு ரூபா காயினைப் பாத்தா கோவப்படும்”
அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.
நல்லாக் கெளப்புறாய்ங்கய்யா பீதிய!
**************
குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள். நன்றி குமுதத்துக்கும் உங்களுக்கும். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கம்பனை எழுதினாலும், காளை பிடி பற்றி எழுதினாலும் மிரட்டும் நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் என்று சிலரின் எழுத்துக்கள் ‘டேய்... ஜாக்கிரதை’ என்று பயமுறுத்துகின்றது. தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
இந்த நேரத்தில் நான் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்லாயிருப்பதை நல்லாயிருக்கு என்றும், ‘புகழ்தலின் வைதலே நன்று’ என்று நாலடியார் சொன்னது போல, கேவலமாக இருப்பதை ‘இதுக்கு நீங்க இன்னைக்கு லீவு விட்டிருக்கலாம்’ என்றும் இடித்துரைக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நான் சீரழிந்திருப்பேன்.
*************
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகப் பரவலான பேச்சு இருக்கிறது. இங்கே எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் ‘சார்.. அஞ்சாயிரம் தர்றேங்கறாரு சார். எங்க வீட்டு ஓனர். எங்க வீட்ல நானும் என் வொய்ஃபும் போனா பத்தாயிரம் சார்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். ‘லீவு தரமாட்டாங்களே’ என்று கேட்டதற்கு ‘சார்.. ரெண்டு மாச சம்பளம் ஒரே நாள்ல கெடைக்குது சார். லாஸ் ஆஃப் பே-ன்னாலும் பரவால்ல.. போகணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
எனக்குள் இருந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிச கிருஷ்ணகுமார், அவர் வீட்டு ஓனரைப் பார்த்து இதெல்லாம் நிஜம்தானா என்று விளக்கமாய்க் கேட்கச் சொல்லிக் கொண்டே இருந்தான். சரி என்று அவரிடம் பேசியதற்கு அடுத்த நாள் அவரது வீட்டுக்குப் போனேன்.
பயில்வான் ரங்கநாதனுக்கு அண்ணன் போல பெரிய மீசையோடு ஒருத்தர் கதவு திறந்து தடித்த குரலில் ‘என்ன வேணும்’ என்று கேட்க ‘இது பதினஞ்சாம் நம்பர் வீடுதானே’ என்று கேட்டு ஓடி வந்துவிட்டேன்!
****************
இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ பாடல்கள்தான் இப்போதைய என் ஃபேவரைட். (இன்னும் நந்தலாலா கேட்கவில்லை) மாதா உன் கோயிலில் பாட்டை, மெட்டெல்லாம் மாற்றாமல் அழகாக ரீ-மிக்ஸில் தந்திருக்கிறார். அது எப்படி இவர் இசையில் ஒலிக்கும் தபேலா மட்டும் அப்படிப் பேசுகிறதோ! அந்தப் பாடலின் புதிய வெர்ஷனான 'அம்மா உன் பிள்ளை நான்' பாட்டில் எந்த இடத்தில் ராஜா BEATஐ ஆரம்பிக்கிறார் என்பதை முதல்முறையிலேயே ஊகிக்க முடிந்தால் நீங்கள் க்ரேட்!
பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடல் ஏற்கனவே ராஜாவின் ரமண மாலை-யில் இளையராஜாவின் குரலிலேயே கேட்ட பாடல். அற்புதமான பாடல். ராஜாவின் அருமையான வரிகள். இதில் கே.ஜே.யேசுதாஸ்... ச்சே... மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் எனக்கு இரண்டு கேள்விகள்...
ரமணமாலையில் தான் பாடும்போது பிட்ஷைப் (BITSHAI) பாத்திரம் என்று பாடியவர் மது பாலகிருஷ்ணனை பிச்சைப் (PICCHAI) பாத்திரம் என்று பாடவிட்டது ஏன்?
சரணத்தில்
அம்மையும் அப்பனும் தந்ததால் – இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
என்பதில் ஒவ்வொரு வரிகளின் முடியும் ‘ல்’ மது பாலகிருஷ்ணன் பாடும்போது சரியாகக் கேட்கவே இல்லை. அதுவும் ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் என்பது சூழ்ந்ததா என்றுதான் முடிக்கிறார். ராஜா பாடும்போது அழுத்தமாக அந்த ‘ல்’ல்லை பாடியிருப்பார்.
இதிலென்ன பெரிய தவறு என்று தோன்றுகிறதா? இம்மையை நான் அறியாததால் என்பதில் அடக்கமும், இம்மையை நான் அறியாததா என்பதில் இறுமாப்பும் தெரிகிறதே!!!
நிச்சயமாக ராஜா இதைக் கண்டுக்காமல் விட்டிருக்க மாட்டார். முதலாவது பிட்ஷை, பிச்சையானது எல்லோருக்கும் புரியட்டும் என்பதால் இருக்கலாம். இரண்டாவது... என் சிற்றறிவிற்கு எட்டவில்லை!
ஆனால் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிற பாடல்.
Saturday, January 17, 2009
படிக்காதவன் – விமர்சனம்
விஜய்க்கு போக்கிரி ஹேங் ஓவர் போல தனுஷின் டீமுக்கு பொல்லாதவன் ஹேங் ஓவர்.
படிக்காத ஹீரோ, படித்த பெண்ணை காதலித்து அவரை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளும், இடைவரும் இடையூறுகளை வெல்வதும்தான்... ஹாஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... படிக்காதவன்.
படிக்காத தனுஷ், அவர்கள் வீட்டினரிடம் நல்லபேர் வாங்கிக் கொண்டு அப்பா பிரதாப்போத்தனிடம் திட்டு வாங்கும்போது ‘ஆஹா’ படம் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் அந்தப் படம் போல் அப்பாவுக்கு அடங்கியிராமல் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுகிறார். ‘ஒண்ணு அவன் வீட்டில் இருக்கணும். இல்ல நான் இருக்கணும்’ என்று (எல்லா தனுஷ் பட அப்பாக்கள் போலவே) பிரதாப்போத்தன் சொல்லும்போது அம்மா மீராகிருஷ்ணனிடம் ‘அப்பாவைப் போகச் சொல்லும்மா’ என்பதிலிருந்து ஒவ்வொரு முறையும் அவரை டீஸ் செய்கிறார். படிக்காதவன் என்று திட்டுவதால் ரோஷம் வந்து டிகிரி வாங்க டுடோரியல் காலேஜ் போய், காலேஜை மூட வைக்கிறார்.
“நீ ஒரு பொண்ணைக் காதலிக்கற. அவ பேர் கீதான்னு வெச்சுக்க. அவள நீ கல்யாணம் பண்ணிகிட்டு அவ ஐ.ஏ.எஸ். படிச்சா கீதா ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ன்னு போடுவாங்க. அப்போ, நீ படிக்காமயே உம் பேருக்குப் பின்னாடி டிகிரி வருமில்ல?” என்று அசத்தலான ஐடியா தருகிறார்கள் நண்பர்கள். (சபாஷ்: வசனகர்த்தா சுராஜ்)
அதன்படி தமன்னாவைக் காதலித்து பல கஷ்டங்களுக்குப் பின் (அவருக்கல்ல.. நமக்கு!) கைபிடிக்கிறார்.
சிம்புபோல ஓவர் பந்தா விடாமல் ‘நான் சின்னப்பையன்ணா” என்று சொல்லிகொண்டே ஃபைட் செய்வதிலிருந்து பல விஷயங்களை தனுஷிடம் ரசிக்க முடிகிறது. பல இடங்களில் அவரது எக்ஸ்ப்ரஷனுக்கு கைதட்டல். டான்ஸிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
தமன்னா. கேடியிலும், வியாபாரியிலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளதை தியேட்டர் கரகோஷங்களில் உணரமுடிகிறது. ஸ்ட்ரெக்ச்சர் மெய்ன்டெய்னில் ஸ்ரேயாவை விட ஒரு பாய்ண்ட் முன்னே நிற்கிறார். ஒரு சில ஆங்கிளில் சிம்ரனை நினைவுபடுத்துகிறார். (முகத்தில் அல்ல. உடலில்) முயற்சித்தால் பெரிய ரவுண்ட் வரலாம்.
காஃபி ஷாபில் வில்லன்கள் தனுஷை அடிப்பதுபோல காட்டி, அது தமன்னாவின் ஆட்கள் என்று தனுஷ் நினைப்பது போல ஒரு ஸ்க்ரீன்ப்ளே பண்ணியிருக்கலாமே, அதைவிடுத்து அவரே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும் அரதப்பழசான ஐடியாவை ஏன் எடுத்தார்கள் என்று சலித்துக் கொண்டிருக்கும் நமக்கு இடைவேளையின் ட்விஸ்ட் உண்மையிலேயே சூப்பர். ஆனால் இடைவேளைக்குப் பின் படத்தை ஆந்திராவுக்குக் கொண்டுபோய், நமக்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். இடைவேளைக்குப் பின்தான் விவேக் என்ட்ரியே என்பதால் படம் தொய்வில்லாமல் போகும் என்று நினைத்தால் அதிலும் மண். தன் பாணியில் அட்வைஸ் சொல்வதா, வடிவேலு பாணியில் அடிவாங்கிச் செல்வதா என்று விவேக் தடுமாறிக் கொண்டிருக்கிறார். செல் முருகா.... ப்ளீஸ்... காப்பாத்து!
பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாமே இடைவேளை வரை ஓடினால் போதும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எடுக்கப்பட்டதா?
யப்பா.... டைரக்டர்களா.. ஒரு வில்லன் போதும்ப்பா.. வர வர எல்லாருமே ரெண்டு மூணு வில்லன்களைக் காமிச்சு, ஹீரோவை டார்ச்சர் பண்றதுக்கு பதிலா எங்களை டார்ச்சர் பண்றீங்கப்பா.. அதுவும் எல்லாருக்குமே திடீர்னு தெலுங்குப் பாசம்வேற.. முடியல!
சுமனுக்கும், சாயாஜி ஷிண்டேவுக்குமான சண்டை எதற்கு என்பது ‘நீ என் பையனைக் கொன்னுட்ட’ என்று ஒரு வரியில் சொல்லப்பட்டதால் ரசிகர்களிடம் அதற்கான பதற்றம் இல்லை. எப்போதும் அவர்கள் ஆட்கள் பார்த்துக் கொண்டாலும் ரமானந்த் சாகரின் ராமாயண சீன் போல எதிரெதிராக மோதிக் கொள்ளும் (மோதிக் கொல்லும்) அளவுக்கான பகையை ஒன்றிரண்டு சீன்கள் மூலம் ரசிகர்கள் மனதில் கொண்டுசெல்லத் தவறிவிட்டார் டைரக்டர். அதேபோல சுமனை நல்லவன் என்று காட்ட டைரக்டர் முயற்சிப்பது ஏனென்று புரியவில்லை. படம் முடிந்த மாதிரி இருக்கும்போது, அடுல் குல்கர்ணியைக் கொண்டுவந்து தனுஷையும், படம் பார்க்கும் நம்மையும் அநியாயத்துக்கு சோதிக்கிறார்.
வழக்கமான தனுஷ் படம்போலவே, அவருடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டையிட்டு ஜெயித்து... படம் முடிஞ்சுடுச்சா என்று நாம் நினைக்க நினைக்க படம் முடிந்துவிடுகிறது.
படிக்காதாவன் – இடைவேளைக்குப் பின் பிடிக்காதவன்.
Wednesday, January 14, 2009
பொங்கலில் பொங்கிய மகிழ்ச்சி!
என்னிடம் நண்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது ‘பொங்கல்தான் ஸ்பெஷல்’ என்பேன். காரணம் அதென்னவோ நம் மனசோடு ‘அட... இது நம்ம விசேஷம்’ என்ற உணர்வு வளர்ந்திருப்பதும் ஒரு காரணம்.
அதுவுமில்லாமல் மற்ற பண்டிகைகளின்போது வரும் எந்த காண்ட்ரவர்ஸியும் தாக்காத பண்டிகை பொங்கல். ‘தீபாவளியா.. பட்டாசு வைக்காதீங்க. சுற்றுப்புறத்துக்கு கெடுதல்’, புத்தாண்டு கொண்டாட்டமா.. ‘தமிழா.. நீ ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா..’ இப்படி எந்தச் சிக்கலிலும் சிக்காத சேஃபஸ்ட் ஃபெஸ்டிவெல் பொங்கல்.. (யோசிச்சுப் பாருங்க.. பொங்கலுக்கு பொங்கல் வைக்காதீங்கன்னு யாரும் சொல்லமாட்டாங்க!)
சரி.. ஒரு வாதத்துக்கு ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை சொல்லலாம். அது பொதுவானதல்லவே. எல்லா ஊர்லயும், எல்லாக் குடும்பத்துலயும் இதுனால உற்சாகம் குறையறதில்லயே!
எனக்குத் தெரிந்து திருப்பூர்வாசிகளுக்கு தீபாவளி, பொங்கல் ஆகிய இரண்டு பண்டிகைகளுமே விசேஷம் வாய்ந்தது. காரணம் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் ஊருக்குப் போய்விட்டால் குறைந்தது ஒரு வாரம், பத்து நாள் திரும்ப மாட்டார்கள். என்னதான் சர்குலர் போட்டு, மீட்டிங் போட்டு MOTIVATE செய்தாலும் அவர்கள் திட்டப்படிதான் திரும்புவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த சமயங்களில்தான் குடும்பத்தினரோடு ஒன்றாய்த் தொடர்ச்சியாய் சிலநாட்கள் இருக்க முடியும். இந்தப் பண்டிகைகளின்போது பஸ் ஸ்டாண்ட் பக்கம் வாகனங்களே செல்லமுடியாத அளவுக்குக் கூட்டம் அம்மும். அதேபோல திரும்பி வரும்போது தஞ்சாவூர், திருச்சி, மதுரையில் திருப்பூர் பஸ் பயணிகளால் வழிந்து இருக்கும். நிறைய நிறுவனங்கள் அவர்களாகவே பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்து ஊழியர்களை அழைத்துச் சென்று, வருவதுண்டு.
பொங்கல் விடுமுறைக்கு முன்தினம் இரவெல்லாம் கடுமையான வேலை இருக்கும். எப்போது ஆட்கள் திரும்புவார்கள் என்பதால் முடிந்தவரை வேலைகளை முடித்து அனுப்புவார்கள். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கமின்றியெல்லாம் பணி புரிவார்கள்.
அப்படித்தான்....
2001ம் வருடப் பொங்கல். ஜனவரி 13. போகி. உமா கர்ப்பமுற்றிருந்தார். உடுமலையில் அவர் வீட்டில் இருந்தார். எனக்கு திருப்பூரில் வேலை முடிய இரவு 10 மணியாகிவிட்டது. 10.35க்கு உடுமலைக்கு கடைசி பஸ். நானும் நண்பர் முருக கணேஷும் (நண்பா.. இதைப் படிச்சிட்டிருக்கீங்களா?) அவசர அவசரமாய்க் கிளம்பி பல்லடம் பஸ் ஸ்டாண்ட் போய் கடைசி பஸ்ஸுக்காக காத்திருந்தோம். அப்போது அங்கே குடித்துவிட்டு வந்த மூன்று ரவுடிகள் எங்களை வேறு யாரோவென நினைத்து சின்ன சண்டை. பஸ் வர தொத்திக் கொண்டு கிளம்பி, வீட்டிற்குப் போனபோது மணி இரவு 12.30க்குப் பக்கம் ஆகியிருந்தது. இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக, சரியான உறக்கமின்றி வேலை பார்த்த களைப்புடன் போனதுமே படுத்துத் தூங்கிவிட்டேன்.
காலை ஏழோ, எட்டோ சரியாக நினைவில்லை.
என் ப்ரதர்-இன்-லா பாபு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
“உமாவுக்கு அஞ்சு மணிக்கு நல்லா வலியெடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போனோம். ஆறரைக்கு உனக்கொரு பொண்ணு பொறந்திருக்கா” என்றார்.
(இந்தச் சம்பவத்தை பிற்பாடு உமாவிடம் சொன்னபோது “‘ஏன் என்னை எழுப்பல’ன்னு நீங்க சண்டை போடலியா” என்று கேட்டார். அவர் எழுப்பியிருப்பார்... நான் தூங்கின தூக்கம் எனக்குத்தானே தெரியும் என்று நினைத்துக் கொள்வேன்!)
அவசர அவசரமாக எழுந்து அனிதா மருத்துவனைக்குப் போனேன். ஊரே பொங்கலின் மகிழ்ச்சியில் இருக்க.. எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் – மேகா பிறந்தாள்!
பொங்கல் மாதிரியான ஒரு சிறப்பு தினத்தில் பிறந்தநாள் வருவது விசேஷம்தான். ஆனால் மேகாவுக்கு ஒரு சின்ன சங்கடம். ‘அப்பா.. பொங்கலன்னைக்கு பிறந்தநாள் வருது. மத்த நாள் வந்தா ஸ்கூலுக்கு கலர் ட்ரெஸ் போட்டுட்டுப் போவேன்ல’ என்று புலம்புவாள். போன வருஷத்துலேர்ந்து அதுக்கும் ஒரு ஐடியா பண்ணி பொங்கல் முடிஞ்சு வர்ற ஸ்கூல் டே அன்னைக்கு கலர் ட்ரெஸ் போட்டுட்டு சாக்லேட்ஸ் எடுத்துட்டுப் போக அனுமதி கொடுத்தாச்சு. அதுனால அவளுக்கு டபுள் சந்தோஷம்!
***************************
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
(தமிழ்புத்தாண்டு..... ம்ம்ம்ம். அதைப் பத்தி அப்பறமா பேசலாம்!!!)
.
Tuesday, January 13, 2009
வில்லு - விமர்சனம்
விஜய் பிரபுதேவா காம்பினேஷன். போக்கிரியின் ஹேங் ஓவர் இன்னும் போகவில்லை. கிட்டத்தட்ட அதே முகங்கள்.
ராணுவத்தில் மேஜரான தனது அப்பா விஜய்யை கொன்று தேசத்துரோகி பட்டம் கட்டிய பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட வில்லன் க்ரூப்பை மகன் விஜய் பழிவாங்கும் அக்மார்க் தெலுங்குக் கதை.
விஜய் தனது ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுகிறார். ப்ரூஸ்லியா, ஜெட்லியா என்று கேட்கும்போது ‘கில்லிடா’ என்று எகிறி அடிப்பது, வடிவேலுவிடம் லிஃப்ட் கேட்டு அவருக்கு ஆப்பு வைப்பது, நயன்தாராவை ஜொள்ளுவது, தன் அம்மாவைப் பார்த்து உருகுவது, பிரகாஷ்ராஜிடம் சரிக்கு சரி நிற்பது என்று தனக்கிட்ட பணியை தட்டாமல் செய்திருக்கிறார்.
ஆனால் அந்த மேஜர் விஜய்? சாரிங்ணா.. மைனராத்தான் இருக்கீங்க. மேஜர்லாம் உங்களுக்கு சரிவரலண்ணா...
தான் அமைக்கும் டான்ஸ் ஸ்டெப்களில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை அடிக்கடி காட்டும் பிரபுதேவா இதில் டைட்டில் சாங்கில் ஆரம்பித்து பல இடங்களில் தானொரு எம்.ஜி.ஆர்.ரசிகன் என்று பறைசாற்றியிருக்கிறார். (எம்.ஜி.ஆரைக் காட்டியதெல்லாம் பிரபுதேவா தானாகச் செய்ததா அல்லது எஸ்.ஏ.சியின் தூண்டுதலா என்பது டைட்டிலுக்கு முன் 'உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்' என்று நற்பணிமன்றக் கொடியைக் காட்டுவதால் சந்தேகம் வருகிறது.)
இடைவேளை வரை.. ஏன் அந்த ஃப்ளாஷ்பேக் முன்பு வரை நல்ல வேகம்தான். ஆனால் ஃப்ளாஷ்பேக்குக்கு அப்புறம் ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. குருவியில் மண்ணுக்குள் போன ஹீரோ ஆற்றுக்குள் இருந்து வருவது போல, இதில் புதையுண்ட பிறகு புயல் வந்து மண்ணை விலக்கி.. போதும்டா சாமி. ஏம்ப்பா.. இதையெல்லாம் விஜய் ரசிகர்களே ரசிக்க மாட்டாங்களேன்னு யூனிட்ல யாருமே யோசிக்கமாட்டீங்களா? கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணியிருந்தா கில்லியாகக் கூடிய கதையை எப்படிக் கொண்டு போக என்று தெரியாமல் சொதப்பிவிட்டார்கள். இடைவேளையின்போது நல்லாத்தானே இருக்கு என்று தோன்றிய படம் க்ளைமாக்ஸின் ஜவ்வால் ‘ஆளை விட்டாப் போதும்’ என்று சொல்ல வைக்கிறது.
நயன்தாரா-ளம். அவ்வப்போது சோர்ந்துவிடும் ரசிகர்களை உயிர்ப்போடு வைக்கிறார் நயன்தாரா. முகபாவனைகள், உடைக் குறைப்பு என்று இளைஞர்களைத் தாறுமாறாகப் பந்தாடுகிறார். போதாத குறைக்கு சரக்கடித்து விஜயுடன் மல்லுக்கு நிற்கிறார்.
வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்த அளவுக்கு சீன்கள் அமைக்க டைரக்டர் திணறியிருப்பது அந்த மாட்டு ஃபைட்டிலேயே தெரிகிறது. இடைவேளைக்கு முன் ஓரளவுக்கு இருந்தவரை இடைவேளைக்குப் பின் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.
படத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் இசை. பாடல்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் வழக்கமான தெலுங்குவாடை இருப்பினும் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் பல காட்சிகளில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பில்லாவை நினைவுபடுத்துகின்றன.
பீமன்கிட்ட கதையக் கேட்ட விஜய், பிரபுதேவாகிட்ட கதையையும் கேட்டு கொஞ்சம் மாத்தச் சொல்லியிருக்கலாம்.
எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)
வில்லு - குறி தவறிவிட்டது.
Monday, January 12, 2009
சுண்ணாம்பு கேட்ட இசக்கி
இதான் சும்மாக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி கதை.
*****************************
முனைவர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றியலின் ஆய்வாளர்களில் முன்னோடியான இவர் பதிப்பித்தது 14 புத்தகங்கள். எழுதியிருப்பது 33 புத்தகங்கள். நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள், தோல்பாவைக் கூத்து, கணியான் ஆட்டம் என்று பலவித தேடல்களை தனது கள ஆய்வின் மூலம் கண்டு, ஆய்ந்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளார். அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் சுண்ணாம்பு கேட்ட இசக்கி. (UNITED WRITERS வெளியீடு, 63, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14)
மேலே உள்ளது போல யாராவது பேச்சு வாக்கில் சொல்லும் சொலவடைக்குப் பின் இருக்கும் கதைகளை சுவாரஸ்யமாய்க் கேட்டு பதிந்திருக்கிறார். இசக்கியம்மன் என்ற கிராம தெய்வம் குறித்த கதைகளும் ஆச்சர்யமூட்டுபவையாய் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்த கிராமத்தில் கொலையுண்ட, அகால மரணத்தால் மறைந்த பெண்களே இசக்கியம்மனாய் வழிபடு தெய்வமாய் மாறிவிடுகின்றனர். அப்பெண்களைக் கொலைசெய்த குடும்பத்தினருக்கும் அவள் குலதெய்வமாகிவிடுவாள். இதனால் அவளது கோபத்தைத் தணித்து தெய்வகுற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது தென்மாவட்ட மக்களின் நம்பிக்கை.
அதேபோல தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில கிராமங்களில் கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டால் அவரது பிணத்தை எரிக்கும்போது வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் குழந்தையை எடுத்து தாய்க்கு அருகில் வைத்து பின் எரிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை உறுதி செய்ய வேண்டி ஆய்வுக்கு சென்ற இவரே, பிணத்தை இறுகப்பற்றிக் கொள்ள இறந்தவளின் வயிற்றைக் கீறிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோல்பாவைக்கூத்துக் கலைஞர்களுக்கு உரிய உரிமைகள் சில கிடைக்காமல் போகவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சாதி சங்கம் அமைக்கிறார்கள். பரமசிவராவ் என்ற தோல்பாவைக் கூத்தில் புகழ்பெற்றவரைத் தலைவராகக் கொண்டு.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று மாறி கலைஞரான அவர் தலைவராக மாறி விடுகிறார். பெருமாளை சந்திக்கும் அவர் சொல்கிறார்...
‘என் நெலம கடற்கரை நாயும் கரைக்கோட்டை நாயும் கத மாதிரி ஆயிடிச்சு’ என்று.
அது என்ன கதை?
கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு நாய் வசித்து வந்தது. அதன் நண்பனான ஒரு நாய் கரைக்கோட்டை என்ற ஊரில் இருந்தது. இந்த கன்னியாகுமரிக் கடற்கரை நாய், கரைக்கோட்டை நாயை விருந்துக்கு அழைச்சுதாம். கடற்கரைல எங்க போனாலும் மீன்தலை, குடல்வால், நண்டு ன்னு கெடச்சுதாம். அஞ்சாறுநாள் தங்கி, வயிறார சாப்ட்டு கடற்கோட்டை நாய் கெளம்பிச்சாம். கெளம்பும்போது ‘நீயும் எங்க கிராமத்துக்கு வா’ன்னு கடற்கரை நாய்க்கு அழைப்பு விடுத்துச்சாம்.
கொஞ்ச நாளைக்கப்பறம் கடற்கரை நாய் அங்க போச்சாம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு கடற்கரை நாய்க்கு பசியெடுக்க “சாப்பிடப்போலாமா”ன்னு கேட்டுச்சாம். கரைக்கோட்டை நாய் “ஓ! பேஷா”ன்னு நண்பனை ஒரு தெருவழியாக் கூட்டீட்டுப் போய் ஒரு வீட்டுப் பின்புறத்துல இருக்கற எச்சில் இலைகளைக் காட்டி “சாப்பிட்டுக்க” ன்னுச்சாம். அதுக்கு வயிறு நிறையவே இல்லை. சரின்னு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு... இது நமக்கு ஆகாதுன்னு கெளம்பும்போது ‘ஏன் இப்படி கஷ்டப்படற.. எங்கூட அங்க வந்துடலாம்ல”ன்னு கேட்டுச்சு. அதுக்கு இந்த நாய் "எங்கூட வா”ன்னு ஒரு வீட்டு முன்னாடி கூட்டீட்டுப் போகுது. அந்த வீட்ல வீட்டம்மா வூட்டுக்காரர்கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நடு நடுவே ‘எச்சக்கலை நாயே’ன்னு திட்டற சத்தம் கேட்குது. இன்னொரு வீட்டுக்குக் கூட்டீட்டுப் போகுது. அங்க மாமியார் மருமகளைப் பாத்து ‘தெருப்பொறுக்கி நாயே’ன்னு திட்டிகிட்டு இருந்தாங்க. இப்படியே ரெண்டு மூணு வீட்டுக்கு கூட்டீட்டுப் போய் காமிச்சு கரைக்கோட்டை நாய் சொல்லீச்சாம்.. “பாத்தியா மனுஷங்க திட்டறதுக்கு நம்ம சாதியத்தான் சொல்றாங்க. இந்தப் பேர், பதவிக்காகத்தான் நான் இங்க இருக்கேன். பேரு வேணும்னா எதையும் சகிச்சுக்கணும்”ன்னுச்சாம். கடற்கரை நாய் ஓட்டமா ஓடிச்சாம்!
இவர் கள ஆய்வின்போது சந்தித்த இன்னல்களையும் அங்கங்கே சொல்லியிருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு மிக உபயோகமாக இந்தப் புத்தகம் இருக்கும்.
ஒரேயொரு சம்பவத்தைச் சொல்லி முடிக்கிறேன்...
ஒரு கிராமத்தில் இவர் செல்லும்போது இரு வீட்டினரிடையே சண்டை. என்னவென்று விசாரிக்கிறார். ஒருத்தன் 500ரூபாய் பணத்திற்காக தன் மனைவியை ஒரு வார ஒத்திக்கு (LEASE) வைத்திருக்கிறான். பணத்தைக் கொடுத்து மனைவியைக் கேட்டால் ‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தர்றேன்’ என்றிருக்கிறானாம். அதற்குத்தான் சண்டையாம்.
கொடுமைடா சாமி!
.
Sunday, January 11, 2009
Saturday, January 10, 2009
அடுத்த மூணு விஷயம்....
சிலருக்கு செய்து கொண்டிருக்கும் வேலையை கிடப்பில் போட்டுவிட்டுப் போய் ஒரு தம் பிடித்து விட்டு வந்தால் உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிவிடும். சிலருக்கு பிடித்த கேர்ள் ஃப்ரெண்டை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடந்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். காதலி/காதலனுடன் ஒரு அலைபேச்சு பேசினால், கொஞ்சம் வெளியே காலாற நடந்தால், நண்பனோடு அரட்டையடித்தால் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று.
எனக்கு செய்யும் வேலையை விட்டு விட்டு ஒரு பத்து நிமிடம் வேறு வேலையைச் செய்வதோ, அல்லது வெளியே சென்று அண்ணாந்து வானத்தைப் பார்த்து ஏதேனும் சிந்திப்பதோ வழக்கம். ‘அண்ணாந்து வானத்தைப் பார்ப்பியா.. கி.கி.கி...’ என்று சிரிப்பு வருகிறதா...
வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்த்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’
என்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...
சிலர் சொல்வார்கள்.. உற்சாகம் குறைகிறதா.. கொஞ்ச நேரம் சும்மா இரு. அதுவும் நல்லதுதான். சும்மா இருத்தலே சுகம். எந்த சிந்தனையும் அற்று, எதுவும் செய்யாமல் சும்மா இருத்தல். (அதற்காக ஆஃபீஸில் மேலதிகாரி முன்னால் இப்படி உட்கார்ந்துவிட்டு மெமோ வாங்கினால் நான் பொறுப்பல்ல.)
பிடித்த புத்தகத்தை மேய்வதும் சிலருக்குப் பழக்கம். அதுவும் சிறந்ததே. நானும் அப்படிச் செய்வதுண்டு. ஆனால் அப்ப்டிப் பிடித்த புத்தகத்தை நாம் எப்போதும் நம் கையிலேவா வைத்திருக்க முடியும்?
**********************
இந்த வாரக் குமுதத்தில் வருங்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று ஒரு பகுதி வெளியிட்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நாளாக குறிப்பிட்ட இரண்டு கண்டுபிடிப்புகள் வந்தால் பரவாயில்லை என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.
கொஞ்சம் அதீதக் கற்பனைதான்.... நடந்தாலும் நடக்கலாம் என்பதால் சொல்கிறேன்.
ஒன்று ரீடிங் ஸ்க்ரீன்.
நாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை நகலெடுத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு, நம் எதிரில் உள்ள சுவரில், அல்லது டேபிளில் அதை ஒளிவடிவில் பிரதிபலிக்கச் செய்து படித்துக் கொள்ளும் முறை. அந்த ஸ்டோரேஜ் 512 எம்.பி, ஒரு ஜி.பி என்று மாறலாம். இதனால் புத்தகத்தைத் தூக்கிச் செல்லும் சுமை கொஞ்சம் குறையும். ஆஃபீஸில் புத்தகங்கள் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆடியோ புக் அவ்வளவாகத் திருப்தி இல்லை. சில வரிகளில் நிறுத்தி நம் சிந்தனைகளை ஓடச் செய்ய அது சிரமமாக இருக்கிறது. (டாய்லெட்களில் புத்தகங்கள் வைப்பதில் உள்ள சிரமமும் குறைவு!) இரவு பஸ் பயணத்தின் போது லைட்டை அணைத்துவிடும்போதும் இந்த ரீடிங் ஸ்க்ரீன் தரும் ஒளியில் படித்துக் கொள்ளலாம் என்பதால் உபயோகமாக இருக்கும்.
.
இரண்டாவது ஹேண்ட்ஸ்ஃபோன்.
ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஃபோன் அல்ல! ஹேண்ட்ஸ் ஃபோன். அதாவது கையுறை போல ஒரு செல்ஃபோன். மெல்லிதான உறை. கையில் மாட்டிக் கொண்டால் அவ்வளவாக தெரியக் கூடாது. உள்ளங்கையில் நம்பர்கள். விரல்கள் இருக்குமிடத்தில் ஸ்க்ரீன். நடுவிரல் முனையில் ஸ்பீக்கர். மணிக்கட்டு பகுதியில் மைக். எல்லாமே மிக மெல்லிதாக வெளியில் தெரியாவண்ணம் இருக்கலாம். கையுறை வடிவமென்பதால் வேண்டாமென்றால் கழற்றிவைத்துக் கொள்ளலாம். இடதுகையில் மாட்டிக் கொண்டால் வலதுகையால் எண்களை அழுத்தி கையைக் காதில் வைத்தபடி பேசிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ‘ஃபோன் பேசு’ என்று சொன்னால் குழந்தைகள் தரும் ரியாக்ஷன் என்னவோ அதை மெய்ப்பிப்பது! செல்ஃபோன் என்ற சுமை குறையும்.
பாருங்கள்.. கொஞ்சம் இப்படி மூளையை க்ரியேடிவாக செலுத்தினால்கூட ரீசார்ஜ் ஆகிறது உற்சாகம்!
*****************************
நாட்டார் வழக்காற்றியலின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா.பெருமாள் எழுதிய சுண்ணாம்பு கேட்ட இசக்கி என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான, பல தகவல்களை அடக்கிய புத்தகம். கள ஆய்வுக்கு செல்லும்போது தான் சந்தித்த மனிதர்கள், சம்பவங்களை மிக இயல்பாக எழுதியிருக்கிறார். 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறாராம். தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளும், போகிற போக்கில் சொல்லும் பழமொழிகளின் கதைகளும் புத்தகத்தை வைக்க முடியாமல் படிக்கச் செய்கிறது. நாளை முழுவதும் படித்துவிட்டு.. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் திங்களன்று.. (சந்தோஷமா கும்க்கி?)
************************
Monday, January 5, 2009
காதைக் கொண்டாங்க... மூணு விஷயம் சொல்றேன்..
பத்திரிகைகளுக்கு படைப்பு அனுப்பினா, திருப்பி அனுப்பப்படும்போது (ப்...ப.. சரியா இருக்கா...?) ஒரு குறிப்பு இருக்கும்.. ‘இதையே உங்கள் படைப்புக்கான இறுதி விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தொடர்ந்து முயலுங்கள்’ன்னு. அதே மாதிரி நான் வராதது உங்கள் மீது கோவம் கொண்டோ, படைப்பை பற்றிய மதிப்பின்மையோ அல்ல. நேரமின்மையே.
*************************
புத்தாண்டின் தொலைக்காட்சி நிகழ்சியின்போது அஞ்சாதே படத்தின் க்ளிப்பிங் போட்டார்கள். அதில் POLICE வேலை கிடைத்து ஆட்டோவில் ஹீரோ தாரை தப்பட்டை முழங்க வந்திறங்கி அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லாதபோது நண்பனிடம் ‘நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கச் சொல்லு. மாமூல் வரும்ல’ என்று சொல்வது போல காட்சி.
பார்த்துக் கொண்டிருந்த என் மகள் (6ம் வகுப்பு) கேட்டாள்.. “ஏம்ப்பா.. போலீஸ்காரங்களுக்கு சம்பளம் இல்லையா.. இந்த மாதிரிதான் வாங்கி செலவு பண்ணுவாங்களா?”
கொஞ்சம் விளக்கிவிட்டு அவள் இந்தக் கேள்வி கேட்பதற்கான மூலத்தை புலனாய்ந்த போது, அவ்வப்போது பார்த்த ஒன்றிரண்டு படக் காட்சிகள், பேப்பர் செய்திகள், அவள் முன் நாங்கள் நடத்திய உரையாடல்கள் என்று பலவும் கலந்து அவளை அப்படி நினைக்க வைத்திருக்கிறது என்பது தெரிந்தது.
*******************************
வீக் எண்ட் புதிர்கள் போடாததற்கு திட்டியவர்களுக்காக ஒரு அவசரக் கேள்வி...
ஒரு புத்தாண்டு கொண்டாட்ட பார்ட்டி ஹாலில் செக்யூரிட்டி ஏதோ சொல்ல, வந்தவர்கள் பதிலுக்கு ஏதோ சொல்ல அதைக் கேட்டு அவர்களை உள்ளே அனுப்புகிறார் செக்யூரிட்டி. ஒரு நண்பர் அதை ஒளிந்திருந்து கேட்டு நாமும் பதில் சொல்லி உள்ளே போகலாம் என்று திட்டமிட்டு, ஒளிகிறார்.
ஒரு ஆசாமி வர, செக்யூரிட்டி: “ட்வெல்வ்”
வந்தவன் யோசித்து.. “சிக்ஸ்”
செக்யூரிட்டி அவனுக்கு கதவு திறக்கிறார்.
அடுத்த ஆசாமியிடம் செக்யீரிட்டி: “சிக்ஸ்”
வந்தவன்: “த்ரீ”
அவனுக்கும் கதவு திறக்கப்படுகிறது.
ஒளிந்திருந்தவன் ‘இதென்ன ஜூஜூபி’ என்றவாறே செக்யூரிட்டி முன் நிற்கிறான்.
செக்யூரிட்டி: “டென்”
இவன்: “ஃபைவ்”
கழுத்தைப் பிடிக்காமல், வெளியே போகச் சொல்லிவிடுகிறார்கள்! இவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்.. ஏன்? விடை நாளைக்குச் சொல்லவா? ப்ளீஸ்...
Thursday, January 1, 2009
அட! (ஜனவரி 01 - 2009)
யானையா நாயா நீங்க-ன்னு கேட்டா… யானை-ன்னுதான் சொல்ல வரும். அது என்னமோ நாய்ன்னா கீழானதுன்ன ஒரு மனோபாவம் நமக்குள்ள. ஆனா நன்றியோட இருக்கறதுல நாய்தான் பெஸ்ட்ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்ல? பழகினவர்கிட்ட நட்பு பாராட்டறதுலயும் நாயைப் போல சிறந்ததில்லை.
பாகனைக் கொன்ற யானையோட எத்தனை சம்பவங்களை நாம பார்த்திருக்கோம்? ஆனா நாய் தன்னோட எஜமானோட பழகறவனைக் கூட ஒண்ணும் பண்ணாது. அந்தளவு நட்புக்கும், பழகறதுக்கும் முக்கியத்துவம் குடுக்கும் நாய்!
நட்பாராய்தல்ங்கற அதிகாரத்துல (203) நாலடியார் இதத்தான் சொல்றாரு...
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்ஐ கெழீஇக் கொளல்வேண்டும்-யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு நாய்
அதாவது எத்தனை நாள் பழகியிருந்தாலும் தனக்கு ஒரு சின்ன குற்றம் செஞ்சுட்டா கோவம் வந்து பாகனைக் கொன்றுடுமாம் யானை. ஆனா நாய் தன்னோடு பழகினவன் வீசின வாள் உடம்பில தைத்திருக்கும்போது கூட நன்றியோட வாலை ஆட்டிகிட்டு இருக்குமாம்!
இதைப் படிக்கும்போது எனக்கு இன்னொண்ணும் ஞாபகம் வந்தது. யாரோ சொன்னது... மிருகங்களின் சைக்காலஜிப்படி இத ஆராய்ஞ்சு கண்டுபிடிச்சாங்களாம்.. அதாவது நாய்க்கு நாம சோறு வைக்கறப்ப ‘அட.. என்னையும் மதிச்சு சாப்பாடு போடறாரே.. மனுஷன் எவ்ளோ உயர்ந்தவன்’ன்னு நெனைச்சுக்குமாம் நாய். ஆனா பூனைக்கு நாம சோறு வைக்கறப்ப ‘ஒரு மனுஷன் வந்து எனக்கு சோறு வைக்கறான்னா, நான் மனுஷனைவிட எவ்ளோ உயர்ந்தவனா இருக்கணும்’ன்னு கர்வத்தோடதான் சாப்பிடுமாம்! உண்மையான்னு தெரியல. டாக்டர்.ருத்ரன் சார் இதப் படிச்சார்ன்னா விளக்கம் சொல்வாருன்னு நெனைக்கறேன்!
************************************
குரங்கைப் பிடிக்கறவங்க எப்படிப் பிடிப்பாங்கன்னு தெரியுமா? சதுர வடிவிலான மரப்பெட்டியை குரங்குகள் வர்ற பகுதிகள்ல நிலத்துல, மரத்துல பதிச்சு வெச்சிருப்பாங்க. இழுத்தா எடுக்கமுடியாத மாதிரி. அதுல மேல்பகுதில குரங்கோட கை நுழையற அளவு ஒரு ஓட்டை இருக்கும். அதுக்குள்ள குரங்குகள் சாப்பிடற சில பழக்கொட்டைகள் இருக்கும்.
அந்தப் பக்கமா வர்ற குரங்குகள் வாசனையால கவரப் பட்டு, அதுக்குள்ள கைவிட்டு நாலைஞ்சு கொட்டைகளை எடுத்து, கையை வெளில எடுக்க முயற்சி பண்ணும். வெறும் கை நுழையற அளவுதான் அந்த ஓட்டை இருக்கும். பழக்கொட்டைகள் கைல இருக்கறப்ப அந்தக் கை ஓட்டையை விட்டு வெளில வராது. அதை விட்டுட்டா வெளில கையை எடுத்துடலாம்ன்னு யோசனை இல்லாம அப்படியே தவிச்சிட்டிருக்கும். அப்போ வேடர்கள் சாவகாசமா வந்து குரங்கை சங்கிலியால கட்டி, அந்த மரப்பெட்டியை பேர்த்து எடுத்து, குரங்கைப் பிடிச்சுட்டு போய்டுவாங்களாம்!
நாமளும் இப்படித்தான் சில விஷயங்கள்ல பிடிவாதமா இருந்து, அந்தப் பிடிவாதத்தை விட்டுட்டா ஜெயிக்கலாம்ன்னு தெரியாம தவிக்கறோம்.
*
இந்தப் புத்தாண்டு எல்லாருக்கும், உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த ஆண்டாக வாழ்த்துக்கள்!
*