Thursday, February 12, 2009

பின்நவீனத்துவப் பித்தனானேன்!



கொஞ்ச நாள் நல்லாத்தாங்க போய்ட்டிருந்தது... ஏதோ ரெண்டு படம் பார்த்தமா.. விமர்சனம்கற பேர்ல என்னமோ சினிமாவையே கண்டுபிடிச்சவன் மாதிரி அது சொத்தை, இது நொள்ளைன்னு விமர்சனம் போட்டமா, நாலைஞ்சு பதிவர்கள்கூட சந்திப்பைப் போட்டு அதைப் பதிவாப் போட்டமா, அவியல், பொரியல்ன்னு எதுனா செஞ்சு வெந்தும் வேகாமக் குடுத்து படிக்கறவங்கள நொந்து நூடுல்ஸ் ஆக்கினோமான்னு ஒரு மாதிரிப் போய்ட்டிருந்தது.

நேத்திக்கு அந்த நண்பனைப் பார்த்ததிலேர்ந்துதாங்க இந்தப் பிரச்னை. 'ஒன்னைப் பார்க்க ஆஃபீஸ் வரணும்டா'ன்னான். வாடா-ன்னேன். ஏதோ கொஞ்ச நேரம் பேசினோமா, அவியலுக்கு ரெண்டு மேட்டர் தேத்தினோமான்னு போகும்ன்னு நெனைச்சுதான் வரச் சொன்னேன். வந்தான்.

வந்து ஆஃபீஸ்ல ஒக்கார்ந்தான். ஆஃபீஸ் பாய்கிட்ட காபி சொன்னேன். அவன் 'இவரு வேலை செய்யணும்னு ஒக்கார்றதே இந்த ரெண்டு மணிநேரம்தான். அதுக்கும் ஒரு ஆள் வந்து ஆப்பு வெச்சுட்டாண்டா' –ங்கறாமாதிரி என் நண்பனை ஒரு பார்வை பார்த்துட்டு நகர்ந்தான்.

"சொல்லுடா" ன்னேன்

"கொஞ்சநாளா உன் வலைப்பூவை படிச்சிட்டிருக்கேண்டா"

ஆஹா.. அச்சடா! அதுதான் மூஞ்சிய இப்படி வெச்சுட்டு வந்தானா..

"என்னடா எப்பப் பார்த்தாலும் உன் வலை நண்பர்கள் பத்தியே எழுதற? உன் ப்ளாக்கை ஒரு நாளைக்கு 1000 பேர் படிச்சாங்கன்னா அதுல வலையில எழுதாத, வெறும் வாசகர்கள்தான் 80% இருக்காங்க. அவங்களுக்கு இது அந்நியமாப் படும் இல்லையா?"

"அந்நியமாப் படலாம். அநியாயமாத்தான் படக்கூடாது"

அவன் குனிஞ்சான். செருப்பை எடுக்கறானோன்னு பயந்து.. "இரு முழுசா சொல்லிடறேன். சுஜாதா பாலகுமாரனைப் பத்தி எழுதினா சூப்பர்னு ரசிக்கறோம். ரஜினி கமலைப் பத்திப் பேசினா 'ஆஹா'ன்னு பார்க்கறோம். அதே மாதிரி என் துறை நண்பர்களைப் பத்தி நான் சொன்னா ஏன் பிடிக்கலங்கற?"

"பிடிக்கலன்னு சொல்லல.. சரி... நீ ஏண்டா பின்நவீனத்துவ பாணில எழுதக் கூடாது?"

இங்கதாங்க விதி விளையாட ஆரம்பிச்சது.

"பின்நவீனத்துவம்னா என்னடா"ன்னு நான் கேட்டேன்.

"எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"

"நீ சொல்ற மாதிரி பார்த்தா 'இப்படித்தான் இருக்கணும் என் எழுத்து'ன்னு நீ நெனைக்கறப்ப நான் என் இஷ்டத்துக்கு எழுதிகிட்டிருக்கேனே.. நான் பின்நவீனத்துவவாதியா?"

மறுபடி குனிஞ்சான்.

"சரி... சொல்லு"ன்னேன்.

"சாருவோட ஜீரோ டிகிரி படிச்சிருக்கியா"ன்னான்.

நான் குமுதம் அரசு மாதிரி ஹி..ஹின்னு சிரிச்சு, ராஜேந்திரகுமார் பாணில 'ஙே'ன்னு முழிச்சேன்.

"சொல்லுடா"ன்னான்.

நான் ரொம்ப சன்னமான குரல்ல "படிச்சேன்"ன்னேன்.

"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் நெளியற?"

"சொல்ல வந்ததச் சொல்லீட்டுக் கெளம்பு. என்னை வம்புல மாட்டிவிடாதே."

"அது பார்த்தீன்னா எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காது. அந்த மாதிரின்னு வெச்சுக்கலாம்"

"ஓ அதுதான் போஸ்ட் மார்ட்டனிஸமா?"

"போஸ்ட் MODERNISM. போஸ்ட் MORTERNISM இல்ல"

"ஓ! அது மார்டனிஸமா? நான் படிச்சவனுக்கு ஒண்ணும் புரியாம செத்து சுண்ணாம்பாகறதால போஸ்ட் மார்ட்டனிஸம்ன்னு நெனைச்சுட்டேன்!"

மறுபடி குனிஞ்சான். இனிமே ஆஃபீஸ்க்கு வரவங்க செருப்பை வெளிலயே விட்டுட்டு வரச் சொல்லணும்டா'ன்னு நெனைச்சுகிட்டேன்.

"இதுக்கு அடுத்தது இது. அதுக்கு அடுத்தது அதுன்னு நாம ஒரு பிம்பம் வெச்சிருப்போம். அந்த பிம்பங்களை உடைத்தெறிந்து, ஒரு பிரதிக்குள்ளிருந்து இன்னொரு பிரதியைப் பகடி செய்ய.."

இப்போ நான் குனிஞ்சேன். "டேய்.. ஒழுங்காத்தாண்டா பேசிகிட்டிருந்த?"ன்னு கேட்டேன்.

"இதுதான் உன்னை மாதிரி ஆளுகளுக்கு புரியவும் செய்யாது. சொன்னாலும் கேட்க மாட்டீங்க" னான்.

"சரி சொல்லு"

"இப்போ ஒரு படம் இருக்கு. நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்ய மாட்டான். அப்போ அது பின்நவீனத்துவப் படமாகுது"

"உதாரணம்?"

"நான் கடவுளை எடுத்துக்கலாம்"

"அதான் ஏற்கனவே எடுத்துட்டாங்களே"

"மூடிட்டு கேளுடா.."

"என்னடா.. நீ சொல்றப்ப சும்மா கேட்டுட்டிருந்தா நான் சாதாரண ஆளு. நான் என்ன சொல்லணும்ன்னு நீ நெனைக்கறப்ப நான் வேற சொல்றேனே.. நான் பின்நவீனத்துவவாதியாகிட்டு வரேண்டா"

"நாசமாப் போ. நான் சொல்லிடறேன். அதுல ஆர்யா அம்மாவைப் பார்க்கும்போது இத்தனை வருஷம் கழிச்சுப் பார்க்கறோமேன்னு எந்த டயலாக், உணர்ச்சிவசப்படுதல்னு எதுவுமே இல்ல. வழக்கமா ஹீரோ கால்ல, ஹீரோயின் விழுந்தா எடுத்து ஆரத்தழுவற சீன் எதுவுமே இல்ல. அதுதான் பின்நவீனத்துவம்"

எனக்கு கோவம் வந்துச்சு. "டேய் லூஸு. அப்படிப் பார்த்தா அவன் அம்மா சாதாரண அம்மா மாதிரி உருகிட்டுதானே இருக்காங்க. அதே மாதிரி நீ பூஜாவை ஏன் ஹீரோயின்கற? ஒரு பின்நவீனத்துவவாதியாப் பார்த்தா அவ ஹீரோயினே இல்ல. நீ சொல்றா மாதிரி சாதாரணமா நடக்கறத காட்டாம வேறுபடுத்திக் காட்டறது பின்நவீனத்துவம்ன்னா ராமநாராயணனும், பேரரசுவும்தான் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள். பாம்பு லெட்டர் படிக்கும்.. ஒருத்தன் ஸ்க்ரீன்ல இருக்கற நூறு பேரையும் ஸ்க்ரீனுக்கு முன்னாடி இருக்கற 1000 பேரையும் ஒருசேரக் கொல்லுவான்"

“ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. பின்நவீனத்துவத்தைப் புரிஞ்சுக்கணும்னா நீ ஒரு பின்நவீனத்துவவாதியா மாறணும். அப்போதான் இதெல்லாம் ஒனக்குப் புரியும். தெரியும்”

“புரியறதுக்கும் தெரியறதுக்கும் என்னடா வித்தியாசம்?”

“அங்க பாரு அது என்ன?”

“பேப்பர் வெய்ட்”

“அது ஒனக்குத் தெரியுதா?”

“தெரியுது?”

“அது பேப்பர் வெய்ட்னு தெரியுது. ஆனா அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரியுமா?”

“புரியல..”

“ஆங்... அதுதான் மேட்டர். அது பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா தெரியுதுன்னு சொல்லலாம். அது ஏன் பேப்பர் வெய்ட்னு தெரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லலாம்”

“புரியல”

“நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”

“சரி... ரெண்டும் வேண்டாம். இப்போ நீ அடுத்து என்ன சொல்லணும், என்ன செய்யணும்னு எந்தக் கட்டுக்குள்ளும் உன்னை அடைக்க முடியாம நீ ஆய்ட்டீன்னா நீ பின்நவீனத்துவவாதி”

“அப்ப அந்தப் படத்துல ஆர்யா பின்நவீனத்துவவாதி. கரெக்டா?”

“ஆங்... இப்பதான் நீ ஓரளவு புரிஞ்சுட்டிருக்க”

ஓரளவுக்கே காசி கஞ்சாவை ஒசில அடிச்ச மாதிரி இருக்கேன்னு மெரண்டு ஒக்கார்ந்திருந்தேன். அவன் “அப்ப நான் கெளம்பறேன்”ன்னான்.

“கெளம்பறதுன்னா கெளம்பு. இல்லீன்னா என்னமோ பண்ணி நாசமாப் போ. எனக்கென்ன?”ன்னேன்.

”வெரிகுட். இதான்.. இப்படித்தான்”னுட்டே போய்ட்டான்.

அப்போ டம்ளர் எடுக்க வந்த ஆஃபீஸ் பாய்கிட்ட “எனக்கு இன்னொரு காஃபி”ன்னேன்.

“சார்.. சும்மா சும்மா உங்க இஷ்டத்து காபி கேட்காதீங்க. என்னால போட்டுட்டு வரமுடியாது” னான் அவன்.

ஆஹா.. இத்தனை நாள் இவன் இப்படிப் பேசினதில்லையே.. ஒருவேளை ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டானோன்னு, இவனும் பின்நவீனத்துவவாதி ஆகறானோன்னு நான் யோசிச்சுகிட்டிருப்பவே எங்க எம்.டி வந்தார்.

“கிருஷ்ணா... அந்த ரிப்போர்ட் ரெடியா?”ன்னு கேட்க..

“அது இன்னும் முடியல. எப்ப முடியும்னு சொல்ல முடியாது”ன்னேன்.

அவரு சிரிச்சுகிட்டே போக.. ‘ஊரு நாடெல்லாம் ரிஸஷன் பேய் பிடிச்சு ஆட்டிகிட்டிருக்கு. நாம இப்படி ஒரு பதிலைச் சொல்லியும் கோவப்படுவார்னு பார்த்தா.. சிரிச்சுட்டுப் போய்ட்டாரே.. இப்படி எதிர்பார்க்காததச் செய்யறதால இவரும் பின்நவீனத்துவவாதியா?’ன்னு ஒரு சிந்தனை எனக்குள்ள ஆரம்பிக்க.. என் ஃபோன் ஒலிச்சது.

மனைவி calling....

‘ஆஹா.. சாப்பிட ஏன் இன்னும் வரலன்னு திட்டுவாளே’ன்னு நான் எடுக்க...

“மணி என்னாச்சு? ஒங்க இஷ்டத்துக்கு வருவீங்க. நான் ஒக்கார்ந்து சோறு போடணுமா”ன்னு ஆரம்பிச்சு கன்னா பின்னான்னு அர்ச்சனை ஆரம்பிச்சது.

அப்பத்தான் புரிஞ்சது... பின்நவீனத்துவக் கட்டுடைத்தலில் கொஞ்சமும் மாற்ற முடியாமல் இருப்பது மனைவிகளைத்தான் என்பது.

59 comments:

Mahesh said...

இந்தப் பதிவுக்கெல்லாம் Post Mortem கிடையாது. சூப்பரா சிரிச்சுட்டு... கண்ணுல வழியற தண்ணியத் தொடச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்

தராசு said...

தலைவா,

வயிறு வலிக்க சிரிச்சேன்.

ஆமாம், தெரியாமத்தான் கேட்கிறேன்.

பிரபஞ்சத்தின் பிரளயங்களில் ஒளிந்திருக்கும் வண்ணக்கலவைகளின்
கருவறையில் மறைந்திருக்கும் சூட்சுமங்களின் முனைதேடி
பிரசவிக்காத பிறைநிலவின்
கூரிய முனையெடுத்து
காலடியில் நழுவிச்செல்லும்
பூமிப்பந்தில் வகிடெடுத்து
ஆழத்தின் அசைவுகளில்
அழியாது அமர்ந்திருக்கும்
வார்த்தைகளில் பதிவுகளாய்
வார்த்தெடுக்க எப்படி முடிகிறது உங்களால்???

அய்யோ, அய்யோ அடிக்க வராதீங்க.

SPIDEY said...

FINAL PUNCH SUPER
ஒரு வேலை இத தான் பெண் புத்தி பின்(நவினத்துவ)புத்தி அப்படின்னு சொல்றாங்களோ?

SPIDEY said...

தராசு said...

//பிரபஞ்சத்தின் பிரளயங்களில் ஒளிந்திருக்கும் வண்ணக்கலவைகளின்
கருவறையில் மறைந்திருக்கும் சூட்சுமங்களின் முனைதேடி
பிரசவிக்காத பிறைநிலவின்
கூரிய முனையெடுத்து
காலடியில் நழுவிச்செல்லும்
பூமிப்பந்தில் வகிடெடுத்து
ஆழத்தின் அசைவுகளில்
அழியாது அமர்ந்திருக்கும்
வார்த்தைகளில் பதிவுகளாய்
வார்த்தெடுக்க எப்படி முடிகிறது உங்களால்???//

இது பின்(நவினத்துவ)னூட்டம்

ராஜ நடராஜன் said...

முத இடத்துக்கு துண்டு போடலாமுன்னு வந்தா அதுக்குள்ள முந்திக்கிறாங்கய்யா.

anujanya said...

மனைவி பிம்பம் அல்ல கட்டுடைக்க - நிஜமாவே இல்ல இருக்காங்க! ஒண்ணும் செய்ய முடியாது :(

வேணா அவங்க நம்மள 'கட்டி உதைக்கலாம்' - நாம 'கட்டி அணைக்கலாம்'.

நல்ல பகடி (இதுகூட பி.ந.பிரயோகம் - 'நகைச்சுவை' என்றால் out of fashion).

அனுஜன்யா

ராஜ நடராஜன் said...

//"எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"//

சிரிப்பு.

வெண்பூ said...

செம நக்கல் பரிசல்...

//
"டேய்.. அதுக்கேண்டா ஏதோ செக்ஸ் புக்கைப் படிச்சவனாட்டம் நெளியற?"
..
ஓ! அது மார்டனிஸமா? நான் படிச்சவனுக்கு ஒண்ணும் புரியாம செத்து சுண்ணாம்பாகறதால போஸ்ட் மார்ட்டனிஸம்ன்னு நெனைச்சுட்டேன்!"
..
ஒருத்தன் ஸ்க்ரீன்ல இருக்கற நூறு பேரையும் ஸ்க்ரீனுக்கு முன்னாடி இருக்கற 1000 பேரையும் ஒருசேரக் கொல்லுவான்
..
அப்பத்தான் புரிஞ்சது... பின்நவீனத்துவக் கட்டுடைத்தலில் கொஞ்சமும் மாற்ற முடியாமல் இருப்பது மனைவிகளைத்தான் என்பது.
//
கலக்கல்.....

கார்க்கிபவா said...

ங்கொய்யால.. இதெல்லாம் ஒரு பதிவு? தூத்தெறி,.... எப்படிங்க உங்களயெல்லாம் டாப் 10ல போட்டாங்க? படிக்க ஆரம்பிச்சா எப்படா முடியும்னு இருக்கு. நான் குனிய மாட்டேன். ஏன்னா ஷூ போட்டு இருக்கேன்..

உருப்படியா எழுத முடியலன்னா போய் வேலைய பாருங்க.. எங்க உயிர எடுக்காதீங்க

கார்க்கிபவா said...

வழக்கம் போல கலக்கல் சகான்னு போடுவேன்னு நினைச்சிங்களா? நாங்களும் பின்நவீனத்துவவாதி ஆயிட்டோமில்ல...

வெண்பூ said...

சந்தடி சாக்கில் உண்மை பேசிய "விகடன் புகழ்" எழுத்தாளர் கார்க்கி வாழ்க..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

நந்து f/o நிலா said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுய்யா..

//ராமநாராயணனும், பேரரசுவும்தான் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள். பாம்பு லெட்டர் படிக்கும்.. ஒருத்தன் ஸ்க்ரீன்ல இருக்கற நூறு பேரையும் ஸ்க்ரீனுக்கு முன்னாடி இருக்கற 1000 பேரையும் ஒருசேரக் கொல்லுவான்"//

இது சூப்பரப்பு. பின்ன இது ஒரு கட்டுடைப்பு இல்லையா?

அப்புறம் இன்னொரு வார்னிங்

எவன் பேச்சையாச்சும் கேட்டுகிட்டு பின்புண்நவீனத்துவம்ன்னு எதாச்சும் எழுதினா அம்புட்டுத்தான். சொல்லிட்டேன்

அருண் said...

சூப்பர், பின்றீங்க பரிசல்.

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))

☼ வெயிலான் said...

:)

வால்பையன் said...

பயங்கர சிரிப்பு

அந்த பிரண்டை கொஞ்சம் ஈரோட்டுக்கு அனுப்புறிங்களா!

நந்து அண்ணாவுக்கும்,எங்க பாஸ் கார்த்திக்கும் பின்நவினத்துவன்னா என்னான்னு தெரிஞ்சுக்கனுமாம்

narsim said...

//நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

இந்த வரிகள் வரை லேசான புன்னகையோடு படித்து வந்தேன்.. ஹஹஹஹா.. இந்த இடத்தில் சத்தமாக சிரித்துவிட்டேன் தல.. கலக்கல்..

அந்த கடைசி வரிகள் யாருக்கோ???(சா?) !!!!!!

முரளிகண்ணன் said...

முடிவு தாமிரா ஸ்டைல்ல இருந்தது

நையாண்டி நைனா said...

/*அப்பத்தான் புரிஞ்சது... பின்நவீனத்துவக் கட்டுடைத்தலில் கொஞ்சமும் மாற்ற முடியாமல் இருப்பது மனைவிகளைத்தான் என்பது.*/

முயற்சி பண்ணுனீங்க...!!!??? அப்புறம் பின் மண்டையிலே கட்டுடையவாதியா ஆகிருவீங்க.

Cable சங்கர் said...

வர வர இந்த பின்னவீனத்துவ காரங்களோட பிரச்சனை பின்னாலேயே துரத்துப்பா.. பின்னாலதான் அவங்கன்ன முன்னாடி முன் நவீனத்துவக்காரங்க வேற முறைக்கிறாங்க.. அதனால் நான் நடுந்வினத்துவ பாணியை பின்பற்றுகிறேன், .உஙகளுக்கு எதாவது புரிஞ்சிசின்னா.. நான் நடு நவினத்துவக்காரன். புரியலைன்னா.. பின்நவினத்துவகாரன். புரிஞ்ச்ம் புரியாம இருந்துச்சின்னா முன்நவினத்துவக்காரன். இதை பத்தி ஸெத்ரோ ஃபூஸியஸ் த ஸ்டோரி ஆப் பின்& முன் நவினத்துவம்ன்னு ஸ்பானிஷ்ல ஒரு புக் எழுதியிருக்காரு. அதில என்னன்னா..? சே அதெல்லாம் உங்களுக்கு எங்க புரியபோவுது.. நடு நிலைத்துவகாரங்க.. இதே கட்டுரையை நான் பின்னூட்டம் போடாம மலையாளத்துல வெளியிட்டிருந்தேன்னா.. தலை மேல தூக்கி வச்சி ஆடியிருப்பாங்க..

சென்ஷி said...

//நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

Excellent :-))

I really enjoyed ur humour

Anonymous said...

அப்ப திருப்பூர் தண்ணி லாரி டிரைவர் ஒரு பி ந வாதியா?
நிக்க வேண்டிய இடத்துல பிரேக் பிடிக்காது. நிக்கக் கூடாத இடத்துல நிக்கும். பெரும் பாலும் பிளாட்பாரத்துலயும், ரோட்டோரத்துலயும்தான் ஓடும். எப்பவாவது ரோட்டுலயும் ஓடும்.

SK said...

தலை, ரொம்ப நாள் கழிச்சு மிகவும் கலக்கலான நடையில் உங்கள் பதிவு. :)

சங்கணேசன் said...

எல்லாமே நல்லாத்தானே போயிட்டிருந்துச்சு......இப்ப எல்லாமே மாறுதே.... ம்ம்ம்... பின்(பெண்)நவினத்துவம்...

கார்க்கிபவா said...

// முரளிகண்ணன் said...
முடிவு தாமிரா ஸ்டைல்ல இருந்த//

அப்ப பரிசலயும் மொக்கைனு சொல்றீங்களா? ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்(மடை..) அடிச்சத கண்டிக்கிறேன்..

// SK said...
தலை, ரொம்ப நாள் கழிச்சு மிகவும் கலக்கலான நடையில் உங்கள் பதிவு.//

அப்ப இவ்வளவு நாள் போட்டத எல்லாம் வேஸ்ட்டுனு சொல்றீங்களா?

என்னப்பா எல்லோரும் சேர்ந்து சகாவ இப்படி காய்ச்சறீங்க.. பாவம்ப்பா அவரு

Thamira said...

நீ சொல்றா மாதிரி சாதாரணமா நடக்கறத காட்டாம வேறுபடுத்திக் காட்டறது பின்நவீனத்துவம்ன்னா ராமநாராயணனும், பேரரசுவும்தான் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள்./// இது சூப்பரு..

கிளைமாக்ஸ் கலக்க்க்கல்.!

Thamira said...

கார்க்கி said...
// முரளிகண்ணன் said...
முடிவு தாமிரா ஸ்டைல்ல இருந்த//

அப்ப பரிசலயும் மொக்கைனு சொல்றீங்களா? ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்(மடை..) அடிச்சத கண்டிக்கிறேன்..

///

ஏதோ காண்டுல இருக்கான்னு நினைக்கிறேன்.. போட்டு மொத்திரலாமா?

வல்லிசிம்ஹன் said...

உங்க மனைவிதான் பின்ன்நவீனத்துவ பட்டதுக்க்கு உரியவராகிறார்..

நவீனமா எழுதறவரோட பலமாக இருந்து உற்சாகப் படுத்துபவரை அப்படித்தானே சொல்ல வேண்டும்:)))

Unknown said...

Fantastic Parisal!!!Am still laughing :)

Guru.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவா இது..ஒரே சொதப்பல்...தலைவலி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பரிசல்..நான் ஒரு பி.ந..,சரிதானே

பரிசல்காரன் said...

பின்னூட்டக் கயமைத்தனம்

பரிசல்காரன் said...

//கார்க்கி said...

ங்கொய்யால.. இதெல்லாம் ஒரு பதிவு? தூத்தெறி,.... எப்படிங்க உங்களயெல்லாம் டாப் 10ல போட்டாங்க? படிக்க ஆரம்பிச்சா எப்படா முடியும்னு இருக்கு. நான் குனிய மாட்டேன். ஏன்னா ஷூ போட்டு இருக்கேன்..

உருப்படியா எழுத முடியலன்னா போய் வேலைய பாருங்க.. எங்க உயிர எடுக்காதீங்க//

சகா.. நீ இப்படித்தான் போடுவன்னு தெரியும் சகா.. இப்படிப் போடாம இருந்தாத்தான் நீ பி.ந,வாதி!

SK said...

கார்க்கி, ஏன் இப்படி :)

SK said...

பரிசல் அங்கே போய் பதிவை படிங்க... கார்க்கி பதிவை :)

மாதவராஜ் said...

நண்பா!

இப்பத்தான் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்தேன். ஒங்க பதிவு, களைப்பையெல்லாம் போக்கி உற்சாகமாக்கியது. பின்னூட்டங்களும் நன்றாக இருந்தன. வேலன் அவருக்கே உரிய பாணியில்....

நீங்க எழுதியிருந்ததைப் படிச்சு முடிக்கும் போது, இந்த டிரைவர்களெல்லாம் பின்நவீனத்துவ வாதிகளாய் இருந்தால்...

கோள்கள் பின்நவீனத்துவாதிகளாயிருந்தால்...
என்று கன்னா பின்னாவென்று நினைப்புகள் எகிற, அப்கீரென்றது.

கார்க்கிபவா said...

//சகா.. நீ இப்படித்தான் போடுவன்னு தெரியும் சகா.. இப்படிப் போடாம இருந்தாத்தான் நீ பி.ந,வா//

நான் எப்பவுமே மொக்கசாமி

குசும்பன் said...

//புரியல”

“நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

செம கலக்கல் பரிசல்:)))

(எங்கேடா பினா வானாவா ஆயிட்டீங்களோன்னு நினைச்சு பயந்துக்கிட்டே வந்தேன்)

உங்களை எல்லாம் எங்க ஊரு பினா வானா அய்யனாரையும் உங்களை ஒரே ரூமில் வெச்சு பூட்டிவைக்கனும்!

Anonymous said...

நன்றாகச் சிரித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ narsim said...
//நான் கடவுள்..”
“டேய்... வேற பேசு”
“சாருவோட..”
“இதுக்கு அதையே பேசு”//
இந்த வரிகள் வரை லேசான புன்னகையோடு படித்து வந்தேன்.. ஹஹஹஹா.. இந்த இடத்தில் சத்தமாக சிரித்துவிட்டேன்//

ரிப்பீட்டே.. :))))))

உயிரோடை said...

why this kolai veri?

சின்னப் பையன் said...

முடியல சாமி... சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... :-)))

ரவி said...

Super !!!!!!!!!!!!!!!

:)))))))))))))))))

பாலராஜன்கீதா said...

//மனைவி calling....

‘ஆஹா.. சாப்பிட ஏன் இன்னும் வரலன்னு //
வழக்காமாகப் பெயரைத்தானே எழுதிவீர்கள்.

//"பின்நவீனத்துவம்னா என்னடா"ன்னு நான் கேட்டேன்.

"எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"

"நீ சொல்ற மாதிரி பார்த்தா 'இப்படித்தான் இருக்கணும் என் எழுத்து'ன்னு நீ நெனைக்கறப்ப நான் என் இஷ்டத்துக்கு எழுதிகிட்டிருக்கேனே.. நான் பின்நவீனத்துவவாதியா?"//

சந்தேகமேயில்லை.
:-)))

Maniz said...

good one :)

Natty said...

:D

Natty said...

49

Natty said...

அய்ம்பது....

உண்மைத்தமிழன் said...

பரிசலு..

அனுபவிச்சு எழுதுறீங்கப்பா..

கோர்வையான வார்த்தைகள் சரளமா வந்து விழுகுது..

நன்றாக இருந்தது..

பின்னூட்டமிடுபவர்களின் பெயர்கள் முதல் பக்கத்திலேயே தெரியற மாதிரி மாத்துனீங்கன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்..

கார்க்கிபவா said...

இந்த பரோட்டாவை ருசித்தவர்களே அபப்டியே கொத்து பரோட்டா ருசிக்க இங்கே வாருங்கள்..

http://www.karkibava.com/2009/02/blog-post_12.html

gayathri said...

said...
//நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

இந்த வரிகள் வரை லேசான புன்னகையோடு படித்து வந்தேன்.. ஹஹஹஹா.. இந்த இடத்தில் சத்தமாக சிரித்துவிட்டேன் தல.. கலக்கல்..

rrreeeeeeeppppppppeeeeeeeettttttttttttuuuuuuu

Vijay said...

இவ்ளோ பேரு சொல்லிட்டாங்க அப்டிங்கறதால நான் சொல்லாம விட்டுட்டா அது பின்னூட்ட கயமைதனம் ஆயிடும் பரிசல்....ரொம்ப ரசிச்சி சிரிச்ச வரிகள் அவை...

//நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

பின்னிட்டீங்க.!!!!

Suresh said...

//நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”//

Excellent :-))

Anonymous said...

ஓம் சாந்தி ஓம் படம்தான் இருக்கறதுலியே கிளாசிக்கான பின்நவீனத்துவ படம்னு சாரு சொன்னாரு...

நீங்க சொல்ற கணக்கை வெச்சி பாத்தா ஒரு கவிதை ஞாபகம் வருது...

நேர் பட பேசு
உன் வழியில் போ
உன் முடிவுகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே
உன் வாழ்க்கையை நீ தேர்ந்தெடு
இந்த உலகமே உன்னைப் பார்த்து சொல்லும்
போறான் பாரு தறுதலை!!!!

அப்ப தறுதலையா இருந்தா பின்நவீனத்துவ வியாதியா? ச்சீ பின்நவீனத்துவவாதியா?

karthi said...

tholare,
nalla pathivu. kadasi varai sirika mudinthathu.
pinkuripu 1:
tholar selventhiran pinnavinathuvathiyaka avarayum ariyamale murchithu varukirar. echarikavum.
pinkurippu 2:
mothamaka ore naalil pinnutam ituvatharku manikkavum. pala natkalaka unicode prachanaiyil thalladi tharpothuthaan sariyaki ullathu

நானாக நான் said...

“நான் கடவுள்..”

“டேய்... வேற பேசு”

“சாருவோட..”

“இதுக்கு அதையே பேசு”

Excellent... எவ்வளவு கடுப்புலே இருக்கீங்க அப்படிங்கறதுக்கு நல்ல சான்று. படிச்சு படிச்சு சிரிக்கிறதே தவிர வேறே எதுவும் தோணலே இப்போ. Excellent writing...

Rajan said...

சிரிப்ப அடக்க முடியாம நான் படர கஷ்டம் பார்த்து ஆபீஸ்ல பக்கத்துக்கு காபின்ல இருக்கவங்கல்லாம் என்ன ஒரு மாதிரி பாக்கிறாங்க!

/*அப்பத்தான் புரிஞ்சது... பின்நவீனத்துவக் கட்டுடைத்தலில் கொஞ்சமும் மாற்ற முடியாமல் இருப்பது மனைவிகளைத்தான் என்பது.*/

ஒரு வாசகம்னாலும் திருவாசகம்

Rathna said...

பின் நவீனத்துவம் பற்றி எழுதப் போகின்றீர்கள் தெரிந்து கொள்ளலாமே என்று படித்தேன், படித்து முடிக்கும் வரையில் சிரித்தேன், பின்னூட்டங்களை படித்த பின்னர்தான் தெரிந்தது நீங்கள் எழுதியவைகள் பின் நவீனத்துவத்துவத்தைப் பற்றிய விளக்கமல்ல நகைச்சுவை என்று, அப்படியானால் பின் நவீனத்துவம் என்றால் என்ன யாராவது ஒரு பதிவெழுத மாட்டார்களா.