
1960ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.
அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.
புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.
ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.
அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.
அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.

காலையில் வந்து பார்த்த நர்மென் பேட்ஸுக்கு அதிர்ச்சி. அவசர அவசரமாக எல்லா ரத்தக் கறைகளையும் துடைத்து விடுதியை சுத்தப்படுத்தி காரையும், இறந்த மரியானையும் ஒரு புதைகுழியில் தள்ளிவிட்டு எப்போதும் போல விடுதிக்கு வந்துவிடுகிறார்.
அங்கே மரியானைக் காணாத அவளது தங்கை லைலா (VERA MILES), மரியானின் காதலன் சாமிடம் அவள் போயிருக்கக்கூடும் என்று நினைத்து அவனைத் தேடிப் போகிறாள். அவள் காதலனுக்கும் ஒரு விபரமும் தெரியவில்லை. இடையில் ரூ.40000த்தை
தொலைத்த முதலாளி அனுப்பி வரும் ப்ரைவேட் டிடக்டீவ் ஆர்பகாஸ்ட் என்பவரும் தேடுதல் வேட்டையில் இறங்கி.. நார்மன் பேட்ஸின் விடுதிக்கு சென்று.. அவர் மீது சந்தேகம் கொண்டு – பேட்ஸின் வீட்டிற்கு செல்ல.. யாராலோ குத்திக் கொலை செய்யப் படுகிறார். பேட்ஸின் வீட்டிற்கு செல்லும் முன் லைலாவிற்கு தொலைபேசிய டிடக்டீவ் பேட்ஸின் வீட்டில் பேட்ஸின் வயதான தாயை மரியான் சந்தித்திருக்கக் கூடும் அங்கேதான் ஏதேனும் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தைத் தெரிவிக்கிறார்.

கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..
அங்கே....
வயதான தாயென்று யாருமே இல்லை.
அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?
அந்த வயதான தாய்தான். எப்படி?
படம் பாருங்கள்!
1960ல் வெளியான கருப்பு வெள்ளைப் படம். ச்சான்ஸே இல்லை. அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை (ஜோசப் ஸ்டெஃபானோ. ராபர்ட் BLOCHன் நாவலைத் தழுவி). நார்மென் பேட்ஸாக நடித்த ஆண்டனி பெர்கின்ஸ்-சின் நடிப்பு பிரமாதம். அதுவும் இறுதிக் காட்சியில் அவர் கண்களில் தெரியும் அமானுஷ்யம்... இன்னும் பயமுறுத்துகிறது!
அருமையான கேமரா கோணங்கள் (ஜான் ரஸல்) படம் ஆரம்பிக்கும்போதே அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகர் முழுவதும் பறவை போல பறந்து சாம்-மரியான் தங்கியிருக்கும் ஹோட்டலின் ஒரு ஜன்னலின் லேசாக திறந்திருக்கும் ஸ்க்ரீனின் கீழ்ப்பகுதியில்தான் உள்ளே போகிறது காமிரா. ங்கொய்யால 1960ல ஒரு மனுஷன் இப்படி சிந்திச்சிருக்கான் பாருடா என்று பிரமிக்கத் தோன்றுகிறது.
அதெபோல மரியானைப் பின்தொடரும் போலீஸ் கார் பாதை மாறுவதைப் பார்த்து அவள் முகம் நிம்மதி அடைவதை நமக்கு உணர்த்த காரோட்டும் அவள் முகத்தை நமக்கு காட்டி, அவள் பின்னால் தெரியும் காரின் பின்கண்ணாடியில் போலீஸ் கார் வேறு பாதைக்கு மாறுவதையும் நமக்கு காட்டி, இவள் அதை ரிவர்வ்யூ மிர்ரரில் பார்ப்பதையும் நமக்குக் காட்டி.... மூன்று கோணங்களில் எடுக்க வேண்டிய காட்சியை ஒரே கோணத்தில் அடக்கி.... ப்பா!
அதேபோல ஷவரை குளிப்பவரது கோணத்தில் எடுத்திருப்பது.. டிடக்டீவ் மாடிப்படி ஏறுகையில் கீழிருந்து மேல் இல்லாமல் மாடி ஏறும் அவர் காலில் முட்டிக்கு நேராக கேமராவைக் காண்பித்திருப்பது என்று காமிரா.. பல இடங்களில் சபாஷ் வாங்குகிறது.
அடுத்து முக்கியமானது – இசை: பெர்னார்ட் ஹெர்மான். துல்லியமான இசை. எங்கெங்கே மௌனம், எங்கெங்கே இசை என்பதை மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.
ஆல்ஃப்ரெட் ஹிட்ச்சாக்! என்ன ஒரு டைரக்ஷன். இரண்டாவது முறை பார்க்கும்போது மரியானின் முக பாவங்களிலேயே அவள் ஒரு முடிவுடன் இருக்கிறாள் என்பதை உணர்த்தியிருப்பார்.
மரியான் காரில் செல்லச் செல்ல அங்கே அவளது அலுவலகத்தில் அவள் குறித்து எடுக்கப் படும் நடவடிக்கைகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார். மறுபடி சொல்கிறேன்.. 1960!!!!
அவளது உடலை காருடன் புதைகுழியில் தள்ளியதோடு இல்லாமல், கார் உள்ளே செல்லச் செல்ல நார்மென் பேட்ஸ்சின் முக பாவங்களில் அவரது உணர்வைக் காட்டியிருப்பார்.
இறுதியாக நார்மென் பேட்ஸின் தாயார் குறித்தும், நார்மென் பேட்ஸ் குறித்தும் சைக்கியாட்ரிஸ்ட் பேசும் வசனங்கள் அத்தனை ஷார்ப்.
அதேபோல அந்த விசாரணை முடிந்து, நார்மென் பேட்ஸ் குளிருக்குப் போர்வை கேட்க... கொடுத்ததும், தேங்க்ஸ்’ என்கிறார்.. அவரது தாயார் குரலில்! என்ன ஒரு டைரக்டரய்யா இவர்!
இதுவரைக்கும் இந்த ஒரு படத்தில் பாதிப்பில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வந்தாயிற்று என்கின்றனர் உலக சினிமா ஆர்வலர்கள்.
எப்பாடு பட்டாவது தேடிப்பிடித்துப் பாருங்கள்...
சைக்கோ – ‘அந்நியனு’க்கு அப்பனுக்குத் தாத்தன்!