பேய், பிசாசு, ஆவிகள் இதன் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை - காரணம் இதுவரை இவற்றில் எதையும் கண்டதில்லை, உணர்ந்ததில்லை.
இதில் ஆவி மட்டும் அவ்வப்போது என் சந்தேகத்தை கிளப்பிச் செல்லும்.
இரண்டொரு வருடங்களுக்கு முன் என்னுடம் பணி புரிந்த நண்பர் ஒருவரது மகள் கொஞ்ச நாட்களாகவே ‘எனக்கு கப்பக்கிழங்கு வேணும்’ ‘டீ வேண்டாம். கட்டங்காபி போதும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள். பத்தாவது படிக்கும் அவளுடைய இந்த நடவடிக்கை மாறுதல்களைப் பார்த்து நண்பர் புலம்ப ‘கூட படிக்கற பொண்ணுக யாராவது மலையாளீஸ் இருப்பாங்க. அவ வீட்டுக்குப் போய் பழகியிருக்கலாம்’ என்று சமாதானப் படுத்தினோம்.
அடுத்த ஒரு சில நாட்களில் நண்பருக்கு அவரது மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. போய்ப் பார்த்ததில் மதிய உணவுக்கு உட்கார்ந்த மகள் தட்டில் இருந்த சோறை வீசி எறிந்து ‘எனக்கு புழுங்கலிரிசிதான் பிடிக்கும்னு ஒனக்குத் தெரியாதா? எத்தனை நாளா இந்த கேடுகெட்ட சாப்பாட்டை சாப்பிடறது?’ என்று கத்தியிருக்கிறாள். கத்தியது சுத்தமான மலையாளத்தில். நண்பருக்கோ, அவரது வீட்டாருக்கோ மலையாளம் தெரியவே தெரியாது. குரல் வேறு அடியோடு மாறிவிட்டிருந்தது.
உடனே பயந்து போய் அவர்கள் வீட்டாரும், அக்கம்பக்கத்தவரும் என்னென்னவொ சொல்ல நாங்கள் ‘நல்ல சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட கூட்டீட்டுப் போங்க’ என்று அட்வைஸினோம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று க்ளூக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கும்போது (அந்தப் பெண் மயங்கிவிட்டிருந்தாள்) திடீரென விழித்துக் கொண்ட அவள் ‘அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு. அவனை உள்ள வரவேண்டாம்னு சொல்லு’ என்று கூச்சல் போட்டாள். (Again மலையாளத்தில்தான்)
என்னவென்று நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது நண்பரின் நண்பர் சர்ச்சிலிருந்து பாதிரியாரை அழைத்து வந்திருந்தார். பாதிரியாரும் அறையினுள் காலடி எடுத்து வைக்க மறுத்து (ரொம்ப கெட்ட சாத்தான் அவகிட்ட இருக்கு. நீங்க சாயந்திரமா ஜெபக்கூட்டத்துக்கு அவளை எப்படியாவது கூட்டீட்டு வாங்க) திரும்பச் சென்று விட்டார்.
அதற்குப் பிறகு நாங்கள் விசாரித்ததில் வந்த பேயின் பெயர் மிஸ்டர்.ராஜன். பூர்வீகம் கோழிக்கோடாம். அவர் காதலித்த பெண்ணை வேறு யாருக்கோ கல்யாணம் செய்து வைத்ததால் மிஸ்டர்.ராஜன் சார் தற்கொலை செய்து கொண்டாராம். இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மிஸ்டர். ராஜன் சாரின் முன்னாள் காதலியும், அன்னாள் யாரோவின் மனைவியுமான அந்த அபலைப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாளாம். தற்கொலை செய்து கொண்ட தனது முன்னாள் காதலியைத் தேடி மிஸ்டர்.ராஜன் சார் ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறாராம். நண்பரின் மகள் சற்றேறக்குறைய மிஸ்டர்.ராஜன் சாரின் முன்னாள் காதலியின் சாயலை ஒத்து இருப்பதால் கொஞ்ச நாள் தங்கிவிட்டுப் போக வந்தாராம்.
“‘ஏண்டா டோங்கிரி.. காதலியை வாழ விடாம முட்டாள் தனமா தற்கொலைக்குத் தூண்டி சாகடிச்சுட்டு, ஆவியான பின்னாடியும் கள்ளக்காதலாடா?’ என்று கேட்டீர்களா அவனை?” என்று கேள்வி கேட்டபோது டரியலாகிப்போன பாதிரியார்..
“அப்படிச் சொல்லி சாத்தானை நாம் உசுப்பேற்றக் கூடாது. ‘இதோ பார்.. இந்தப் பெண் உன் காதலியின் சாயலில் இருக்கிறாளல்லவா.. இவளை நீ இப்படித் துன்புறுத்தலாமா’ என்று கேட்டு சாந்தப்படுத்தி அனுப்பினோம்” என்றார்.
.
’டீ காபி குடுத்து அனுப்ச்சீங்களா’ என்று கேட்க நினைத்து எதுக்கு வம்பு.. அந்த காதலியின் புருஷன் என் சாயலில் இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்காமல் வந்துவிட்டேன்.
இன்னொரு சம்பவம் மிகச் சமீபத்தில் நடந்தது.
ஒரு ஞாயிறு. நிறுவனத்தில் பணி புரியும் சௌந்தர்யா என்ற பெண் அவரது அறையில் திடீரென காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் அவசர அழைப்பு வரவே சென்றோம். அந்தப் பெண் சௌந்தர்யா அவளது அறை முன் நின்றுகொண்டு அவள் முன் நின்று கொண்டிருந்த அவளது துறை நிர்வாகியைப் பார்த்து... (விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்தார்)
“ஏண்டா.. சௌந்தர்யா லேட்டா வந்தாலோ, லீவு போட்டாலோ என்ன ஏதுன்னு கேட்காம திட்டுவியா நீ? என்னடா நினைச்சுகிட்டு இருக்க நீ? அவ என்கிட்ட எப்படி அழுதா தெரியுமா? அவளுக்காகத்தாண்டா நான் வந்திருக்கேன்” என்று ஏசிக் கொண்டிருந்தாள்.
அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஃப்ரெண்டு பேய் அமெரிக்கன் இங்க்லீஷில் ஏசியது. அந்தப் பெண் சௌந்தர்யாவுக்கோ ஏ,பி,சி,டியைத் தவிர ஈயிலிருந்து இசட் வரை ஒன்றுமே தெரியாது!
நான் போய் ‘வெல்கம் டூ திருப்பூர். நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா’ என்று கேட்டபோது
“என் பேர் சங்கவி சார். என்னை உங்களுக்குத் தெரியலியா?” என்றாள்/றது.
‘தெரியல’ என்று சொன்னல் என் மீது பாய்ந்து வந்து ’இப்பத் தெரியுதா’ என்று கேட்கும் அபாயம் இருந்ததால்..
“சரி.. நீ ஏன்ம்மா சௌந்தர்யாவுக்காக வந்த? விடு நாங்க பார்த்துக்கறோம்” என்றதுக்கு கன்னா பின்னான்னு எங்களையும் வறுத்தெடுத்தாள்/தது.
கொஞ்சம் ஆஜானுபாகுவாக இருக்கும் எங்கள் HR மேனேஜர் ஒரு மிரட்டு மிரட்டவே ‘சரி எனக்கு அரியர்ஸ் பணம் குடுங்க. அப்பத்தான் போவேன்’ என்றாள்/றது.
“எந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு? செக்கா குடுக்கலாமா?” என்று நான் கேட்டதற்கு.. மீண்டும் என்னை முறைத்தாள்/தது.
“அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம், நீ மொதல்ல வண்டில ஏறு” என்றதற்கு “சரி.. செட்டில்மெண்டாவது குடுங்க. நான் செட்டில்மெண்ட் வாங்காம போய்ட்டேன் அப்போ” என்று அவள் சொல்ல, மேலும் மிரட்டி காரில் ஏற்றி அவள் (சௌந்தர்யா) வீட்டில் கொண்டு போய் விட்டோம்.
அந்த ஃப்ரெண்டு பேய் சொன்ன க்ளூவை வைத்து இன்க்ரிமெண்ட் சமயத்தில் அரியர்ஸும் வாங்காமல், செட்டில்மெண்டும் வாங்காமல் நின்றவர்களில் சங்கவி என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(சங்கவி, சௌந்தர்யா என்ற பெயர்கள் மாற்றப்பட்ட பெயர்களே)
கொஞ்சம் கூட ஆங்கில அறிவே இல்லாத அந்தப் பெண் அமெரிக்கன் ஸ்லாங்கில் பேசியது எப்படி?
இதை எழுதும்போது கடந்த வருடம் நடந்த சம்பவம் ஒன்றும் ஞாபகத்திற்கு வருகிறது.
சென்னையோ, பெங்களூரோ சென்று விட்டு திருப்பூரிலிருந்து அதிகாலையில் நான் இருக்கும் இடத்துக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். திருப்பூரிலிருந்து 7, 8 கிலோ மீட்டர். வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்ததில்
“இந்த சவாரி முடிச்சுட்டு கோயமுத்தூர் அர்ஜெண்டா போகணும்க” என்றார்.
“ஏன்.. காலங்காத்தாலயேவா? அப்பறம் ஏன் சவாரி வந்தீங்க?” இது நான்.
“பல்லடத்துல ஃப்ரெண்டு வெய்ட் பண்றார்ங்க. உங்க ஏரியா வழியாத்தானே போகணும். அதான்...” என்றவரிடம் “கோயமுத்தூர்ல என்ன அர்ஜெண்ட் வேலை” எனக் கேட்க... சொன்னார்..
“எங்க பெரியப்பாகிட்ட பேசணும்”
“ஓ.. கோயமுத்தூர்ல அவர் எங்க இருக்கார்?”
“எங்க பெரியப்பா கோயமுத்தூர் இல்லைங்க. திருப்பூர்தான்”
“அங்க போயிருக்காரா?”
“இல்லைல்லங்க. எங்க பெரியப்பா செத்துட்டார்ங்க”
(சீரியலிலும், மர்மக் கதைகளிலும் தொடரும்போட கிடைக்கும் நல்லதொரு இடத்தை தவறவிடக்கூடாது. அதனாலும் ஆட்டோக்காரர் சொன்ன கதையை முழுவதுமாய் எழுதினால் ‘எனக்குப் போட்டியா?’ என்று உண்மைத்தமிழன் கோபித்துக் கொள்ளும் அளவு பெரியதாக வந்துவிடும் என்பதாலும்...)-நாளை தொடரும்