"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு..”
எந்த ஒரு தகப்பனுக்கும் இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவனை விட அதிர்ஷ்டக்காரன் யாருமிருக்கமுடியாது.
ஆண் குழந்தை பத்து வயதுவரை வீட்டுக்குக் கொண்டுவரும் பஞ்சாயத்துகள் எதையும் பெண்குழந்தைகள் கொண்டுவருவதில்லை. யார் வீட்டுக்கு உங்கள் பெண் குழந்தைகளை அனுப்பினாலும் “என்ன அமைதியா இருக்கா தெரியுமா உம் புள்ள. என் வீட்டுலயும் இருக்குதே ஒரு வாலு..” என்றுதான் கமெண்ட் வருகிறது.
பையனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன விளையாட்டுப் பொருள் வேண்டுமோ அதைக் கேட்டு வாங்குவதோ, போகும் சொந்தக்காரர் வீட்டில் அது இல்லாவிட்டால் “அது இல்லையா” என்று கேட்பதோ நடக்கிறது. அதுவே பெண் குழந்தைகளுக்கு ‘இதுதான் வேண்டும்’ என்று கேட்கும் மனோபாவம் இருப்பதில்லை. என்ன இருக்கிறதோ அதை வைத்து விளையாடுவதும், ஒன்றுமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவோ பழகிவிடுகிறார்கள்.
ஒரு பெண்குழந்தையை பலவித உடைகள் மாட்டி அழகு பார்ப்பதைப் போல, ஆண்குழந்தையை அழகு பார்ப்பதில்லை. ஆண் குழந்தைகள்... ‘அது ஒரு ஆண்குழந்தை’ என்ற ஊறிப்போன பொதுப்புத்தி சந்தோஷத்திலேயே மற்ற சந்தோஷங்கள் எதையும் அடையாமல் இருக்கிறது.
நீங்கள் எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பப்பா வருவீங்க” என்றும் மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை எதிர்கொண்டிருக்கலாம். பெண்கள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.
இங்கே திருப்பூரில் பணிபுரியும் பலரும் பெற்றோரை விட்டு பலமைல் தூரம் வந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகட்டும், பெண்களாகட்டும். ஆனால் பெண்கள் அவர்களின் பெற்றோரோடு உரிய கால இடைவெளியில் பேசிக்கொண்டும், சென்று பார்த்து நலம் விசாரித்துக்கொண்டும் இருப்பதைப் போல... ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!
திருமணமாய் தனிக்குடித்தனத்தில் இருக்கும் தம்பதிகளில் கணவன் தன் வீட்டிற்கு சென்று வருவதும், பெற்றோரைப் பார்த்து வருவதையும் விட மனைவிகள் தங்கள் பெற்றோரைத் தாங்குவது அதிகம்.
ஏதோ ஒரு பொது இடத்திலோ, திருமண மண்டபத்திலோ இருக்கிறீர்கள். உங்கள் வாரிசு ஏதோ ஒரு குறும்புத்தனம் செய்கிறது. மகன் என்றால் கூப்பிட்டு அதட்ட வேண்டியிருக்கும். மகள் என்றால் தூரத்திலிருந்து உங்கள் மிரட்டலான கண்பார்வையிலேயே அவள் சுதாரித்துக் கொள்வாள்.
உங்கள் விட்டிற்குள் நுழைந்தாலே உங்கள் குழந்தை மகனா, மகளா என்பதைச் சொல்லிவிட முடியும். மகள்கள் இருக்கும் வீடுகளின்முன் செருப்புகள் ஜோடியாகத்தான் இருக்கும். மகன்கள் இருக்கும் வீடுகளில் தாறுமாறாக அவை கழட்டிப் போடப்படும். (அப்படியும் நேராக இருந்தால் அம்மா எடுத்து வைத்திருக்கக் கூடும்!) மகள்கள் இருக்கும் வீடுகளில் கூடுமானவரை அவையவை அதனதன் இடத்தில் இருக்கும். மகன்கள் அடங்காமல் போட்டது போட்டபடி வைத்திருப்பார்கள்.
விவரம் தெரிந்தபிறகு மகள்கள் கூடுமானவரை அப்பா அம்மா சாப்பிட்டாச்சா என்று பார்த்தபிறகுதான் சாப்பிடுகிறார்கள். மகன்களை அந்தக் கவலையெல்லாம் ஆட்கொள்வதில்லை.
உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.
ஒருநிமிடத்திற்கு ஷாரூக்கானின் சம்பளத்தைவிட, ரஜினிகாந்தின் சம்பளத்தை விட, அமிதாப்பின் சம்பளத்தை விட, முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட... ஒரு பெண்ணான இந்திரா நூயி-யின் சம்பளம் அதிகம். பெண்கள் எந்த உயரத்தையும் தொட வல்லவர்கள்.
பெண்மையைக் கொண்டாடுவோம்!
****
முக்கியக்குறிப்பு: இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது. இதில் இருக்கும் கருத்துகள் யாவும் அலுவலக நண்பர்கள், தோழிகளோடு கலந்துரையாடி (வேலையே செய்யமாட்டியாடா நீ?) எழுதியவையே.
ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகப் பட்டால்....
விட்டுத்தள்ளுங்க பாஸு!
.