Tuesday, June 30, 2009
ஜெனிஃபர்
“எடிட்டர் அரைமணிநேரமா உங்களைக் கேட்டிட்டிருக்காரு” என்ற வனிதாவின் குரலை அவளின் அழகான உதட்டசைவில் கேட்பதற்காகவே நாளைக்கும் லேட்டாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எடிட்டரின் அறைக்குள் நுழைந்தேன்.
வழக்கம்போலவே குளிர்சாதனத்தை அணைத்துவிட்டு மின்விசிறியை சுழல விட்டிருந்தார். வெளிச்சத்தில் அதன் இறக்கை நிழல்கள் உட்கார்ந்திருந்த அவர் இடது தோளில் ஆரம்பித்து தலை, வலது தோள், ஒன்றின் மேலொன்றாய் போடப்பட்ட கால்கள் என மாறி மாறி வந்து வந்து போவதை கார்ட்டூனிஸ்ட் கதிரேசன் பார்த்தால் அழகாக வரைந்து கொடுப்பான் எனத் தோன்றியது.
“இன்னைக்கு ஜூன்.30. ஞாபகமிருக்குல்ல?” – என்ற அவரது குரல் எரிச்சலை மூட்டியது. இன்றைக்கென்ன ஆளாளுக்கு கழுத்தில் காலண்டர்
மாட்டிக்கொண்டது போலத் திரிகிறார்கள் என்று தோன்றியது.
“இன்னைக்கு நீ ஸ்ரீதரோட அபார்ட்மெண்ட்ல நடக்கற பார்ட்டிக்கு போகணும். சாயந்திரம் அஞ்சு மணிக்கு. ஞாபகமிருக்குல்ல?” – இந்த ‘ஞாபகமிருக்குல்ல’ இவர் ரத்தத்திலேயே இருக்கும்போல.
“நிச்சயமா ஞாபகமிருக்கு சார்.” என்றேன் நான். “அந்த நியூஸுக்காக ஒருமாசம் சிரமப்பட்டிருக்கேன். எனக்குத் தெரியாதா?” – இது அவரிடம் கேட்டதல்ல.. மனசுக்குள் நினைத்தது.
“அப்ப என்ன பத்தரைக்கு வர்ற? ஆரம்பத்திலேர்ந்து அதைப்பத்தி எழுத ஆரம்பி. சாயந்திரம் நடக்கறதையும் சேர்த்து நைட்டுக்குள்ள குடு. காலைல ரெடிபண்ணி இந்த வார இஷ்யூல ரெண்டு மூணு பேஜுக்குப் போடணும்”
“சரிங்க சார்” என்ற என் குரலில் சலிப்புதான் தென்பற்றிருக்க வேண்டும் அவருக்கு. “இரு.. காஃபி வரும். சாப்ட்டுட்டு போ” என்றார் தொடர்ந்து.
காஃபி வரும் இடைவெளியில் அந்த சம்பவத்தை எப்படி ஆரம்பிக்க என்று அசைபோட ஆரம்பித்தேன்.
ஸ்ரீதர் எங்கள் பத்திரிகையின் புகைப்படக்கலைஞன். கலைஞன் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவன். அண்ணா சாலையில் இருந்து பத்து நிமிடப் பிரயாணத்தில் அவன் குடியிருக்கும் நுங்கம்பாக்கம் மூகாம்பிகா அபார்ட்மெண்ட்சுக்குப் போய்விடலாம். 30 வயது பாச்சிலர். கோவையில் அவனது வீட்டினர் தீவிரமாக இவனைத் திருமணவாதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவன் திருவல்லிக்கேணி ஜாகையை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றி, மூகாம்பிகா அபார்ட்மெண்டில் மூன்றாவது ஃப்ளோரில் அழகான ஒரு ஃப்ளாட்டை சொந்தமாக்கிக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறான்.
அலுவலகத்தில் எல்லாருக்கும் இனியவன் அவன். எனக்கு இன்னும் அதிக நெருக்கம். வாரத்துக்கு இரண்டு நாட்களாவது அவனது ஃப்ளாட்டில் நானும், அவனும், கிங்ஃபிஷரும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படி ஒரு சனிக்கிழமையில் தான் ‘ஜெனிஃபர் மேடம்’ பற்றிய பேச்சு வந்தது.
ஸ்ரீதரின் ஃப்ளாட்டுக்குப் போக லிஃப்டில் ஏறினால் மூன்றாவது ஃப்ளோரில் லிஃப்ட் நிற்கும் இடத்துக்கு பக்கத்து ஃப்ளாட் ஜெனிஃபருடையது. பலமுறை ஜெனிஃபருக்கு சிரிப்பை உதிர்த்துவிட்டுத்தான் ஸ்ரீதர் ஃப்ளாட்டுக்குள் நுழைந்திருக்கிறேன். அழகான ஆன்ட்டி. ஸ்ரீதர் சொல்லும் வரை ஜெனிஃபர் வயது 46 என்பதை நம்பமுடியவில்லை.
“என்னடா நான் ஏதோ முப்பது முப்பத்தஞ்சு இருக்கும்ன்னு நெனைச்சேன். நாப்பத்து ஆறுங்கற?”
“போடா.. “ என்றான் ஸ்ரீதர். மூன்றாவது பீரைத் திறந்தபடி. “அவங்க ஒரு டைம் எதுக்காகவோ என்கிட்ட ப்ரூஃபுக்கு பான் கார்ட் குடுத்தாங்க. அப்பதான் எனக்கே தெரியும் அவங்க வயசு.”
“அந்த ஃப்ளாட்ல அவங்க தனியாவே இருக்காங்களே? மேரேஜ் ஆகலியா?”
“இல்ல.. அது ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஸ்டோரி..”
நான் ரோஸ்ட் பார்சலைப் பிரித்தபடி அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
“இவங்களுக்கு பதினேழு வயது இருக்கறப்போ இவங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கற ஒரு பையன்கூட லவ்ஸ். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் விடாம காதலிச்சிருக்காங்க. அந்தப் பையன் ஹிண்டு. ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கல. இவங்க ரொம்பப் பிடிவாதமா இருந்தும் ஒத்துக்கல. அதுனால கல்யாணமே பண்ணிக்கல.”
“அடப்பாவமே... சரி.. இவங்க அப்பாம்மா..”
“அப்பா ஜெனிஃபருக்கு 30 வயசு இருக்கும்போதே தவறிட்டாராம். அம்மாகூடதான் இந்த ஃப்ளாட்டுல இருந்தாங்க. அம்மாவும் ரெண்டு வருஷம் முன்னாடி போய்ட்டாங்க. ஒரே ஒரு அண்ணன் நைஜீரியால செட்டிலாய்ட்டான்.”
“சரி.. ஒனக்கெப்படி இவ்ளோ தகவல் தெரியும்? ஆங்...? ஏய்ய்ய்ய்....” என்று நான் இழுத்ததில் இருந்த கேலிக்கேள்வியை மண்டையில் தட்டி நிறுத்தினான். “போடா லூசு.. என்கிட்டன்னு மட்டுமில்ல.. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாங்க. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கற எல்லா குழந்தைகளுக்கும் ஜெனிஃபர் மேடம் ஃப்ளாட்தான் பார்க் மாதிரி. எல்லார்கிட்டயும் அவ்ளோ சகஜமா பழகுவாங்க. இவங்க தம்பி - சித்தப்பா பையன் - சார்லஸ் எல்.ஐ.சில வேலை செய்யறாரு. இந்த ஃப்ளாட் வாங்கறப்போ லோன் விஷயமா அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசுவேன். அவர்தான் ஜெனிஃபரோட கதையைச் சொன்னார்”
“சரி... இவங்க லவ் பண்ணின பையனுக்கு கல்யாணம் பண்ணிகிட்டானா?”
“அது தெரியல. ஆனா சார்லஸ் சொல்லுவாரு... ‘இப்போ எதிர்க்கறதுக்கு யாரும் இல்ல. ஜெனிஃபர் கல்யாணம் பண்ணிகிட்டா அவங்க கடைசி காலத்துல துணையா இருக்கும்’ன்னு”
இந்த சம்பாஷணை முடிந்து இரண்டு வாரத்திற்கெல்லாம் ஸ்ரீதர் உற்சாகமாக ஒரு விஷயம் சொன்னான். “டேய்.. ஜெனிஃபர் லவ் பண்ணினவர் பேர் கிருஷ்ணன். சாலி கிராமத்துல இருக்காரு.”
“அதுக்கு ஏன் இவ்ளோ எக்ஸைட்மெண்ட் ஆகற?”
“இதக்கேளு. இவங்க எப்படி இங்க இருக்காங்களோ அதே மாதிரி அவரும் ஒரு ஃப்ளாட்ல தனியாத் தான் இருக்காரு. கல்யாணம் பண்ணிக்கல.”
எனக்கு அவன் சொன்ன செய்தியில் சுவாரஸ்யம் வர ஆரம்பித்தது. என் மண்டையில் ஒரு பல்ப் பளீரிட்டது. இதில் எங்கள் பத்திரிகைக்கு ஒரு தீனி கிடைக்கும் என்று மனது சொல்லியது. எடிட்டரிடம் பேசியபோது அவரும் உற்சாகமானார்.
அதற்குப் பிறகு நானும், ஸ்ரீதரும் கிருஷ்ணன் சாரைப் பார்த்துப் பேசியபோது அவர் சொன்ன விஷயங்கள் இன்னும் படு சுவாரஸ்யம்.
“ரகு... நீங்க நெனைக்கற மாதிரி ஜெனிஃபரும் நானும் சந்திக்காம இல்ல.. மாசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ சந்திச்சுக்குவோம்”
“என்ன சார் சொல்றீங்க?” ஸ்ரீதர் உச்சஸ்தாயில் கேட்டான். “எங்க சந்திப்பீங்க?”
“எனக்கோ, அவங்களுக்கோ தனிமையா உணரும்போது ஃபோன் பண்ணுவாங்க. காஃபி டேல போய் ரெண்டு மணிநேரம் பேசுவோம். இல்ல சிட்டி செண்டர்.. பீச்.. ஆனா இதுவரைக்கும் அவ ஃப்ளாட்டுக்கு என்னைக் கூப்டதில்ல. நான் என் ஃப்ளாட்டுக்குக் கூப்டுவேன். வரமாட்டா..”
“சரி சார்... இப்பவும் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை உங்களுக்கு இருக்கா?”
“இல்லாம இருக்குமா ரகு?” அவர் குரலில் காதல் இருந்தது. 29 வருடக்காதல்.
“ஜெனிஃபர்கிட்ட பேசும்போது கேட்டிருக்கீங்களா?”
“ம்ஹூம். அந்த தைரியம் இல்லப்பா”
“என்ன சொல்றீங்க சார்?”
“ஆமா. ரெண்டு பேர் விட்லயும் சம்மதிச்சாத்தான் கல்யாணம்கறது நாங்க லவ் பண்ணும்போது பேசிகிட்டது. ரெண்டுபேர் வீட்லயும் சம்மதிக்காம நாங்க வீட்டை மாத்திகிட்டுப் போய்ட்டோம் அப்போ. எங்க வீட்ல அதுக்கப்பறமா – எனக்கு முப்பத்தாறு முப்பத்தேழு ஆகறப்போ- சம்மதிச்சாங்க. ‘அப்போ நீங்க ஒத்துக்கலியே’ன்னு ஒரு வீம்புல வேண்டாம்ன்னுட்டேன். என் தங்கச்சிக்கு கல்யாணமாகி அவளும் பாம்பேல செட்டிலாய்ட்டா. எனக்கு ஒரு துணை இருந்தா நல்லதுதான். ஆனா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க தயக்கமா இருக்குப்பா. என்னான்னு தெரியல.”
அதற்குப் பிறகு நானும், ஸ்ரீதரும் சார்லஸை சந்தித்துப் பேசி ஜெனிஃபருடைய சித்தப்பாவை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர்களும் சந்தோஷப்பட்டு.. “ஜூன் முப்பது ஜெனிஃபரோட பர்த்டே. அன்னைக்கு ஒரு பார்ட்டி மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. நாம ஒரு பத்து பதினைஞ்சு பேர் போதும். ஜெனிஃபர்கிட்ட சொல்லலாம். ரொம்ப சந்தோஷப்படுவா.” என்றார் சித்தப்பா.
நாங்கள் ஸ்ரீதரின் அபார்ட்மெண்டை நெருங்கியபோது மணி ஐந்து. ஜெனிஃபர் வழக்கம்போலவே உற்சாகமாக இருந்தார்.
“ஸ்ரீதர் எல்லாம் உன் வேலையா? பர்த்டேன்னா நான் அபார்ட்மெண்ட்ல இருக்கற அஞ்சாறு வாண்டுகளைக் கூப்ட்டுட்டு வெளில சுத்தீட்டு வருவேன். நீதான் என்னமோ பார்ட்டி வைக்கறேன் அது இதுன்னு பெரிசு பண்ற..” ஜெனிஃபர் இவ்வளவு பேசி இப்போதுதான் கேட்கிறேன். வெறும் ஹலோ, ஹாய்தான் இதற்கு முன். கிருஷ்ணன் இவருக்காகக் காத்திருந்ததில் தப்பே இல்லையென்று தோன்றியது.
பெரிய கேக் வைக்கப்பட்டிருக்க நான், ஸ்ரீதர், சார்லஸ், ஜெனிஃபரின் சித்தப்பா சித்தி மற்றும் நான்கைந்து பேர் மட்டுமே இருந்தோம். அதுபோக அபார்ட்மெண்ட் குழந்தைகள் பத்துபேராவது இருப்பார்கள். வீட்டையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.
“சரி... கேக் வெட்டுங்க ஆன்ட்டி” என்றொரு வாண்டு கெஞ்ச, “நீயே வெட்டும்மா” என்று சொன்னார் ஜெனிஃபர்.
“ஒரு நிமிஷம் மேடம். ஒரு முக்கியமான கெஸ்ட் வரணும்” ஸ்ரீதர் சொல்ல ‘யார்’ என்பதாய் புருவமுயர்த்தினார் ஜெனிஃபர்.
“வெய்ட் அண்ட் சீ” என்று சொல்லிய ஸ்ரீதரின் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்து ஸ்க்ரீனைப் பார்த்து “வந்துட்டார்...” என்றான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவைத் திறந்தபடி கிருஷ்ணன் வர ஜெனிஃபரின் கண்களில் மின்னல்.
“வாவ்... கிருஷ்! வாட் எ சர்ப்ரைஸ்! கம்..கம்..” என்றபடி உற்சாகமாய் நடந்து சென்று கிருஷ்ணனைக் கட்டி அணைத்து வரவேற்றார்.
“பாருடா கிட்டத்தட்ட முப்பது வருஷக் காதல்” காதில் கிசுகிசுத்தான் ஸ்ரீதர்.
“அவங்க கண்ல பார்த்தியா.. அழுதுட்டாங்கன்னு நெனைக்கறேன்” என்று நான் சொன்னதுக்கு “போடா உடனே எக்ஸ்ட்ராவா நீயே அதையும் இதையும் சேர்த்து -எழுதறமாதிரியே - யோசிப்ப..” என்று திட்டினான்.
கேக் வெட்டி, எல்லாருக்கும் கொடுத்து அண்டை வீட்டாரெல்லாம் போய்விட குழந்தைகளெல்லாம் ஹாலில் விளையாடிக் கொண்டிருக்க.. உள் அறையில் ஜெனிஃபர், அவரது சித்தப்பா, சித்தி, சார்லஸ், ஸ்ரீதர் நான் ஆகியோர் மட்டுமே அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். கிருஷ்ணன் சார் வீட்டை நோட்டமிட்டபடி ஹாலில் குழந்தைகலோடு இருந்தார். (நீங்க பேசுங்க.. நான் வர்ல.. ஒரு மாதிரி ஹெசிடெண்டா இருக்கு)
எங்களில் யார் ஆரம்பிப்பது என்று தெரியாமல், வெட்டிப் பேச்சுகளால் அரைமணி நேரம் கழிய சார்லஸ்தான் உடைத்தார்.
“ஜெனி.... எவ்ளோ நாள்தான் இப்படி ஒண்டிக்கட்டையா இருப்ப? உனக்கு ஒண்ணுன்னா யாராவது வேண்டாமா?” - என்று ஆரம்பித்தவர் என்ன நாடகத்தனமா ஆரம்பிச்சுட்டோமோ என்பதுபோல நிறுத்தி எங்களைப் பார்த்தார்.
ஜெனிஃபர் எங்கள் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து “என்ன சார்லஸ்..? என்னமோ இண்ட்ரஸ்டிங்கா ஆரம்பிச்ச? சொல்லு.. சொல்லு..” என்றார்.
“இல்ல.. உனக்குத் தெரியும்.. கிருஷ்ணன் சாரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காமதான் இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுல யாருக்கும் எந்த சங்கடமும் இல்ல. அவருக்கும் துணையாச்சு.. உனக்கும் துணையாச்சு..” - மேற்கொண்டு சார்லஸ் தொடர முடியாமல் இடைமறித்தார் ஜெனிஃபர். “ஏய்.... யார் போட்ட ஐடியா இது? ஆங்? ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றார் கிண்டலான தொனியில்.
இப்போது ஜெனிஃபரின் சித்தப்பா தொடர்ந்தார்.. “ஜெனி்.. அவன் சொல்றதுல என்ன தப்பு? கல்யாணம் பண்ணிகிட்டா ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கலாம்ல?”
“இல்ல சித்தப்பா... அப்படி இல்ல” தீர்க்கமான குரலில் மறுத்தாள் ஜெனிஃபர்.
“நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.. ‘எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சது’ன்னு சில பேர் சொல்றத. என் காதல் முடியக்கூடாது.. அதுனால எனக்கு கல்யாணம் வேண்டாம். கல்யாணம் ஆச்சுன்னா எனக்கு குழந்தை வேணும்னு தோணும். நாளைக்கு என் வீட்ல இருக்கற விளையாட்டுப் பொருளெல்லாம் அவனோ அவளோ மட்டும்தான் உபயோகிக்கணும்னு தோணும். ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா குழந்தைகளையும் பார்த்து இப்போ என்னால சிரிக்க முடியுது. எல்லாரையும் என் குழந்தையா நெனைக்க முடியுது. ஒரு குழந்தைக்கு மட்டும் அம்மாவா என்னால மாற முடியாது”
“குழந்தைக்காக சொல்லல ஜெனி... உனக்கு அவரும் அவருக்கு நீயும் ஒருத்தருக்கொருத்தர்..”
“இப்போ அப்படித்தான் இருக்கோம் சித்தப்பா. கல்யாணமானா நிச்சயமா அப்படி இருக்க மாட்டோம். சமூகத்துக்காகத்தான் கல்யாணம். ஒரே வீட்டுக்குள்ள என் ரசனைக்கு அவரு தலையாட்டுவாரு.. அவர் ரசனைக்கு நான் தலையாட்டணும். விட்டுக் குடுத்து வாழறதுல சுகம்னு டயலாக் பேசணும்... அது எனக்கு வேண்டாம். எனக்கு கிருஷ்ணனைப் பார்க்கணும்ன்னா ஒரு ஃபோன் போட்டு கூப்ட்டு எங்காவது அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பேசிட்டிருப்போம். அந்த அரைமணி நேரம் எனக்கு தர்ற திருப்தியை 24 மணிநேரம் அவர் கூட இருந்தாலும் வராது”
"இப்படியே இருந்தா உனக்கு ஒண்ணுன்னு வரும்போது..”
“அப்பவும் நான் கிருஷ்ணனைக் கூப்பிட முடியுமே.. இல்லைன்னா இதோ ஸ்ரீதர் மாதிரி நாலஞ்சு நல்லவங்களை நானும் சம்பாதிச்சு வெச்சிருக்கேன் சித்தப்பா. அதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்கறது எனக்கென்னமோ முட்டாள்தனமா படுது. ஒரு மாசமா நான் கேக்கற ம்யூசிக், படிக்கற புக், பார்க்கற சினிமான்னு அவரைப் பார்க்கறப்போ புதுசா பகிர்ந்துக்க பல விஷயங்கள் இருக்கறது எவ்ளோ சுவாரஸ்யம் தெரியுமா? ஒரே வீட்ல இருந்தா இதெல்லாம் சாத்தியமே இல்ல. இப்போ அவர் வந்தப்போ அத்தனைபேர் முன்னாடி அவரைக் கட்டிப்பிடிச்சு என்னால அன்பைக் காமிக்க முடியுது. உங்களுக்கு இது சாத்தியமா? அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா அவர் வேற ஒரு பொண்ணைப் பார்த்தா எனக்கு கோவம் வரலாம், அத பொஸஸிவ்ன்னு அவர் பெருமைப்படலாம். ஆனா நாளாக நாளாக அது அவருக்கு கோவமா மாறலாம். நான் என் வாழ்க்கையையும் அவர் அவர் வாழ்க்கையையும் வாழ்ந்துட்டே ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கோம் இப்போ.. அத கெடுக்கணுமா?”
“வேண்டாம் ஜெனி. யு ஆர் ரைட்” என்றபடி கிருஷ்ணன் அறைக்குள் நுழைய “ஹேய்... இதுல உன் பங்கும் இருக்கா கிருஷ்?” என்று கேட்டார் ஜெனிஃபர்.
“எனக்கு உன்னை மேரேஜ் பண்ணிக்கணும்னு இண்ட்ரஸ்ட் இருந்தது. ஆனா இப்போ இல்ல”
“வெல்.. யூ அண்டர்ஸ்டெண்ட் மீ.. ஐ லவ் யூ கிருஷ்” என்றபடி கிருஷ்ணனை அணைத்தபடி என்னைப் பார்த்தார் ஜெனிஃபர்.
“தப்பா ரகு?”
“இல்ல மேடம்.. நீங்க க்ரேட்” என்று நான் சொன்னபோது எடிட்டரின் அழைப்பு வந்தது செல்ஃபோனில்.
“என்னாச்சு?” என்றார் அவர் எதிர்முனையில்.
“வந்து சொல்றேன் சார். கவர் ஸ்டோரியாவே போடலாம்”
.
இது உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை
.
Monday, June 22, 2009
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புகள்
தமிழ்சினிமாவில் இந்தி படங்களை ரீமேக் செய்வது குறைவு. இந்தப் படம் JAB WE MET என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் ரீமேக். பரத் - தமன்னா நடிக்கும் இந்தப் படம் கதை விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது. (பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)
ஆர்யா நடிக்கும் இந்தப் படம் 1940களின் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
தனுஷ் ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம். ஆனால் செல்வராகவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக இந்தப் படம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம். சிம்பு-த்ரிஷா நடிப்பில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வரவிருக்கும் படம்.
சென்னை 600028 மற்றும் சரோஜா பட வெற்றிக்கூட்டணி.
ஐந்தாம் இடத்தை இரண்டு ‘ஆ’ படங்கள் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவது தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ஆடுகளம். பொல்லாதவன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!
அடுத்தது ஆதவன். கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் நம்பர் ஒன் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம். சூர்யா படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புள்ள அம்சமாக இருக்கிறது.
சரணின் இயக்கத்தில் அஜீத்!
விஜய்...!
A WEDNESDAY என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக். கமலுடன் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ளார்.
என்ன சொல்ல?
.
(thanks for the images: sify, galatta, behind woods... )
Saturday, June 20, 2009
முத்திரை - விமர்சன்ம்
படம் ஆரம்பிக்கும் காட்சியில் நிதின்சத்யாவை அவரது அம்மா துரத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊரார் எல்லாம் கம்பும், கடப்பாரையும் வைத்துக் கொண்டு அவரைத் துரத்துகிறார்கள்.
அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று.. எங்கே புரிந்தது மரமண்டைக்கு!
ஊர்க்காரர்களால் துரத்தப்பட்ட நிதின்சத்யா, சென்னையில் (சென்னைதானேப்பா? ஒரு மண்ணும் ஞாபகமில்ல) டேனியல் பாலாஜியைச் சந்திக்கிறார். நிதின் சத்யாவைப் போலவே டேனியல் பாலாஜியும் ஒரு பொறம்போக்கு என்பதால் இருவரும் ஃப்ரெண்டாகி விடுகிறார்கள். டேனியல் பாலாஜி லக்ஷ்மி ராயைக் காதலிக்கிறார். அவருக்கு உதவ டேனியலின் அறைக்கு லக்ஷ்மி ராயை அழைக்க, அங்கே எதிர் அறையில் இருக்கும் சேத்தனைத் தேடி கமிஷனர் கிஷோர் வர.. தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்றெண்ணி நிதின், டேனியல் மற்றும் அவர்களது இரு காதலிகளும் ஓட.. சேத்தன் தனது லேப்டாப்பை இவர்கள் காரில் போட்டுவிட்டு ஏற முயலும்போது போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார்.
அந்த லேப்டாப்பில் பொன்வண்ணன், தனது அண்ணன் சரவணனைக் கொன்றது பதிவாகி இருக்கிறது. முதலமைச்சராக ஆகப்போகும் முயற்சியில் இருக்கும் பொன்வண்ணனும்..
போங்கப்பா சொல்ற எனக்கே இவ்ளோ போரடிக்குது. படிக்கற உங்களுக்கு என்ன கொடுமையா இருக்கும்னு தெரியுது!
பாலிவுட் ஸ்டைலில் படமெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். குழப்பமான திரைக்கதையால் கோட்டை விட்டுவிட்டார்கள்.
அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ஆனந்த், பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, நிதின் மாறி மாறிப் பேசும்போது திரையக் கிழித்து விடலாமா என்று தோன்றுகிறது!
லக்ஷ்மிராயை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் T 20 ல் இந்தியா செமி ஃபைனலுக்குப் போகாமல் திரும்பியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. சரியான ஸ்ட்ரக்சர் என்பதை மறுப்பதற்கில்லை.
டேனியல் பாலாஜி தனது மாடுலேஷனையும், பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரே ரிப்பீட்டடாக இருக்கிறது.
நிதின் சத்யா மட்டும் ஆறுதலளிக்கிறார். சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது ‘குச்சி ஐஸா.. கோன் ஐஸா’ என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது.
யுவனின் மகுடத்தில் இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். இதுவரைக்கும் பாடல் காட்சிகளில் கொத்துக் கொத்தாக இப்படி ஆட்கள் எழுந்து போவதைப் பார்த்ததே இல்லை. மூன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!
மொத்தத்தில் முத்திரை - ஆள வுடு சாமி!
Friday, June 19, 2009
ஆஸ்பத்திரி நாட்கள்
போதிமரமெல்லாம் தேவையேயில்லை. புத்தனிருந்தால் சொல்வேன்.. மருத்துவமனைக்குப் போவென்று. அதுவும் சின்னச் சின்னக் குழந்தைகள் அட்மிட் ஆகியிருக்கும் பிரிவில் ஒரு வாரமிருந்தால் யாரும் எந்த நிலையில் இருந்தாலும் ஆடும் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும்!
சமீபத்தில் உமாவின் அண்ணன் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமமேற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒன்றரை வயது. தனக்கு என்னவென்றுகூட சொல்ல இயலாத குழந்தையை பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு மூச்சுக்குழாய் சுருங்கியிருக்கலாம் என்று கூறி அவன் மூச்சிவிட சிரமப்படும்போதெல்லாம் Nebulizer மூலமாக ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று விளையாடுவான். இரண்டு, மூன்று மணிநேரங்களுக்குப் பிறகு மூச்சு விட மிகுந்த சிரமப்படுவான்.
எக்ஸ்ரே, டிஜிடல் எக்ஸ்ரே என்று என்னென்னவோ எடுத்துப் பார்த்தும் ஒரு வாரமாக ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்கேனில் எதுவோ அடைபட்டிருக்கிறது என்று அரைகுறையாக தெரிந்ததாக டாக்டர்கள் சொன்னார்கள்.
அடுத்த நாள்..
ரேடியாலஜி மூலம் அவனது சுவாசக்குழாயில் ஏதோ அடைபட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.
“அது என்னான்னு தெரியல. ஆனா நிச்சயமா ஆபரேஷன் பண்ணி ஆகணும். எண்டோஸ்கோபிதான் பண்ணணும். அப்போ உள்ள என்ன இருக்கும்னு தெரியும். அதுமூலமாவே அந்தப் பொருளை எடுக்கணும்.. உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கறேன். சுவாசக்குழாய்ல ட்யூப் விட்டு...”
“எப்ப டாக்டர் ஆபரேஷன்?” மேற்கொண்டு அவர் விளக்குவதைக் கேட்க மனமில்லாமல் இடைமறித்தோம்.
“காலைல எட்டரைக்கு. நைட் பத்து மணிக்கு மேல அவனுக்கு எதுவும் குடுக்க வேண்டாம்”
எத்தனையோ பேப்பர்களை நீட்டி தாய் தந்தை இருவரிடமும் கையெழுத்து மேல் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். ஒன்றரை வயதுக் குழந்தை என்பதால் எதுவும் உறுதியில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
எல்லாரும் உயிரோடிறந்த நாள் அது! (எழுத்துப் பிழை ஏதுமில்லை முந்தைய வரியில்!)
எதுவும் அறியாமல் வார்டில் இருந்த மற்ற கட்டில்களைச் சுற்றி வந்து விளையாடிக்கொண்டிருந்தான் அவன். திடீரென்று மூச்சு விடச் சிரமப்பட்ட போதெல்லாம் பதைபதைத்து ஐ.சி.யூவுக்குள் கொண்டு சென்று நெபுலைசரில் ஆக்ஸிஜன் கொடுத்துக் கொண்டிருந்தோம். படுக்க வைத்தால் மிகச் சிரமப்பட்டான். எனவே ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சாய்த்துக் கொண்டோம்.
மாலை ஏழுமணிக்கு மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள சின்ன பூங்காவிற்கு அவனைத் தூக்கிக் கொண்டு போனேன். அவன் சிரிக்கச் சிரிக்க விளையாடினான். எதைப் பற்றிய கவலையும் அவனுக்கிருக்கவில்லை. அவனைப்பற்றிய கவலை தவிர வேறெதுவும் எங்களுக்கு இருக்க வில்லை.
அடுத்த நாள்...
9 மணிக்கு ஆபரேஷன் ஆரம்பமானது. நம்பிக்கையோடிருக்க மனது சொல்லியது. இருக்கும் சூழலும், சுற்றியிருப்போரின் வாடிப்போன முகமும் அந்த நம்பிக்கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டிருந்தன.
அவனது அன்னையைத் தவிர யாரையும் ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை. அவனது அன்னைக்கோ கண்ணீரைத்தவிர வேறெந்த மொழியும் அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஆபரேஷன் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கெல்லாம் ஒரு மருத்துவர் வெளியே வந்து “கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமா இருங்க!” என்று சிரித்த முகத்தோடு வந்து சொல்லிப் போனார். (மருத்துவர்கள் தெய்வத்துக்கு சமம் என்றுணர்ந்த சமயம் அது!)
அடுத்த ஒரு மணிநேரத்தில் எல்லாம் சுபமென்றாகிப் போனது. அவனது அன்னை அப்போதும் அழுதுகொண்டுதான் இருந்தார்.
விஷயம் இதுதான்.
விடுமுறைக்கு ஊருக்கு சென்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த நிலக்கடலையை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இவனது ஆறு வயது அக்கா அதை உரித்துத் தின்று அந்த தொப்பையைக் கீழே போட்டிருக்கிறாள். அதை இவன் எடுத்து முழுங்கியிருக்கிறான். முக்கால் இஞ்ச்சுக்கு ஒன்று, அரை இஞ்ச் அளவுக்கு ஒன்று என்று இரண்டு கடலைத் தொப்பை இவனது நுழையீரலுக்குள் சென்று அடைபட்டிருக்கிறது. அவை ஒருபுறமாக திரும்பும்போது இவன் சிரமப்பட்டிருக்கிறான்!
இந்த விஷயம் அறிந்து ஒருமாதிரி ஆகி.. நண்பர்களோடு பகிர்ந்து கொண்டபோது.. எத்தனை ஆறுதல்கள்! சாய்ந்து கொள்ளத் தோளிருந்தால் தோல்விகூட சுகம்தான். ஆறுதல் சொல்ல ஆளிருந்தால் அழுவது கூட ஆனந்தம்தான். எத்தனையோ கிலோமீட்டர் தூரத்திருப்பவர்களெல்லாம் அழைத்து “பணத்துக்கு என்ன பண்ணினீங்க? அக்கவுண்ட நம்பர் சொல்லுங்க” என்றெல்லாம் மிரட்டியபோது உலகமே எனதாய் உணர்ந்தேன். ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் அலைபேசி என்னைப் போலவே பதை பதைத்துக் கொண்டிருந்ததும்.. நல்லபடியாய் ஆனபோது அவர்கள் பெருமூச்சு விட்டதும் என்னால் உணரமுடிந்தது. என்ன மாதிரியான நட்பையெல்லாம் சர்வ சாதாரணமாக நான் பெற்றிருக்கிறேன் என்று கர்வமாகக் கூட இருந்தது.
இத்தனை ஆறுதல்கள் எனக்கிருப்பதை நினைத்து கர்வப்பட வைக்க அங்கிருந்த சிலரது சூழலும், நான் பார்த்த ஒன்றிரண்டு பேரின் கதையும் காரணம்.
அவை.... பின்னர்...
.
Thursday, June 18, 2009
அவியல் 18.06.2009
“குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ?”
ரொம்பக் குசும்பு பிடிச்ச பதிவர்யா அவர்!
******************
சமீபத்தில் அண்ணாச்சி வடகரை வேலன் ஒரு அருமையான விஷயம் சொன்னார்.. ‘நாட்ல மக்கள் தொகைப் பெருக்கத்தை கம்மி பண்ணினதுல கல்வி நிறுவனங்களோட பங்கு பாராட்டத்தக்கது’ன்னார். ‘என்னண்ணா சொல்றீங்க’ன்னு கேட்டா.. “அவனுக வாங்கற ஃபீஸ் வகையறாவையெல்லாம் பார்த்து ஒரு குழந்தை பெத்துகிட்டு கரையேத்தறதே பெரிய விஷயம்ன்னு முடிவுக்கு வந்துடறாங்களே’ன்னார்.
சரிதான்!
********************
திருப்பூரின் வரலாற்றின் முதல்முறையாக வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டிவிட்டார்கள் திருப்பூர் வலைப்பதிவாளர்கள் பேரவையின் தலைவர் வெயிலானும், பொருளாளர் சாமிநாதனும். சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்த வடகரை வேலனுக்கு நன்றி. முதல் மீட்டிங் என்பதால் திருப்பூர் பற்றிய பிரச்சினைகளே அதிகம் அலசப்படட்து. ஓரளவு அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டியதும் அடுத்த சந்திப்பில் இலங்கைப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினைகளை எல்லாம் அலசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சாருவின் நெருங்கிய நண்பரான திருப்பூர் சிவா (நிகழ்காலம்) வந்து சாருவைப் பற்றி ஒன்றுமே பேசாமல் போனது அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.
சிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....
****************************
எழுத்து என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பைப் போல, ஒரு மலரின் இதழ்விரிதல் போல.. சரி விடுங்க... அப்படி இருக்க வேண்டுமென நினைப்பதால் நிறைய எழுதுவதில் ஒரு சுணக்கம் வந்து விடுகிறது. மன உளைச்சல்கள், வேலைப்பளு, நேரமின்மை, சிஸ்டம் வைரஸ் பிரச்சினை என்று சாத்தான்களின் துரத்துதல்களுக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். இடையில் நேரமிருக்கும்போது வார்த்தைகள் வந்துவிழாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றிற்கிடையிலும் ‘ஏன்ப்பா எழுதல’ என்று கேட்கும் நண்பர்களால் உயிர்ப்போடிருக்கிறேன்.
***************************
கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
********************************
மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.
அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!
உண்மையா ஆபீசர்ஸ்?
**********************
ஜூனியர் விகடனில் ஒரு சாமியார் பற்றிய கட்டுரை வந்திருந்தது. ரமேஷ் என்ற எனது நண்பர் ஒருவர் அந்த சாமியாரை சந்தித்து எக்குத்தப்பாக கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரைச் சென்று சந்தித்திருக்கிறார். “என்ன என்னைக் கிண்டல் பண்ண வந்தியா?” என்று இவரைப் பார்த்த மாத்திரத்தில் கேட்டிருக்கிறார். (‘இல்லை.. அடுத்ததா பரிசல் எப்போ பதிவு போடுவார்ன்னு கேட்க வந்தேன்’ என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்!) இவர் அதிர்ந்து போய் ‘இல்ல.. உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றிருக்கிறார். உடனே அந்த சாமியார் “அதுக்கு நீ நேரடியாவே போய்க் கடவுளைப் பாரு” என்று சொல்லியிருக்கிறார். “எங்க போய்ப் பார்க்க?” என ரமேஷ் கேட்க.. “வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”ன்னு சொல்லியிருக்கிறார்.
இவர் பயணித்து வீட்டுக்குள் போக கேட்டை திறக்கும்போது.. பின்னாலிலிருந்து வந்த அவரது அம்மா “டேய் கடைக்குப் போய்ட்டு வரேன். உனக்கு உப்புமா செஞ்சு வெச்சிருக்கேன். போய் சாப்பிடு” என்றிருக்கிறார்.
“எனக்கு Mystic விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை கிருஷ்ணா. ஆனா இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல” என்றார் ரமேஷ்.
(இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்!)
Tuesday, June 9, 2009
தற்கொலை செய்ய க்யூ!
அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை செய்து கொள்ள 800 பேர் காத்திருக்கிறார்களாம்! அதை குறிப்பிட்டிருந்த வாசகர் “நீங்கள் இதை கற்பனை செய்து ஏற்கனவே உங்கள் வலையில் எழுதியிருந்தீர்கள் என்று ஞாபகம். அதை தேடினேன் கிடைக்கவில்லை..” என்று வருந்தியிருந்தார்! (?!?)
வேலைப்பளுவில் எழுத நேரமில்லாமல் இருக்கும் எனக்கு இந்த மெயில் தெய்வம் போல கண்ணில் பட்டது. ஆகவே அவருக்காக இதோ போன வருடம் எழுதிய ’க்யூவுல நின்னு சாவுங்க’ என்ற பதிவின் மீள்பிரசுரம்!
*************************
சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.
ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.
இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)
-------------------------------
ஊட்டி.
தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...
“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”
“அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”
“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”
“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”
“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”
“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”
இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..
“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”
“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.
இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.
”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”
”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.
“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”
“அதுதான் எங்க ஓனர்!”
“ஓனர் உயிரோட இல்லையா?”
“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”
“அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.
“டிக்கெட் எவ்வளவுப்பா?”
“ஒண்ணு ஏழரை ரூவா”
“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”
“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”
“50% தள்ளுபடியா?”
“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”
“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.
“யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”
“இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”
“சரி.. இந்தா”
“என்ன 50 காசு குறையுது?”
“வரும்போது வாங்கிக்கயேன்”
“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”
“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”
“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..
“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”
அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.
“ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”
போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”
"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”
“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)
கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....
“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”
“உயிர வாங்காமப் போறியா?”
அப்போது தூரத்தில் ஒரு பெண்....
“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.
உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..
“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.
“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..
“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட் வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”
கல்லா ஆசாமி சொல்கிறான்...“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”
*
Monday, June 8, 2009
அரசியல்!
“அதெல்லாம் ****கிட்ட குடுத்தாச்சுப்பா.. நீ.. நீங்க தனியா வேற வாங்க வந்துருக்கீங்களா?”
“அவங்ககிட்ட குடுக்கறது நேரா தலைமைக்குப் போகும். நீங்க இருக்கற ஏரியாவுல இருக்கப்போறது நாங்கதான். இங்க செலவு பண்ண நீங்கதானே குடுக்கணும்? இந்த பத்து வருஷத்துல கம்பெனி எப்படி மாறிப்போச்சு! ரோட்ல நின்னு பார்த்தா ஆஃபீஸ் கண்ணாடி பளபளக்குதே...”
மறைமுகமாக ஆரம்பித்து நேரடியாகவே மிரட்ட ஆரம்பிக்கிறான்.வேண்டா வெறுப்போடு ஒரு தொகை கொடுத்து அனுப்புகிறார் நண்பர்.
இது தேர்தலன்று நண்பரின் நிறுவனத்தில் நடந்த சம்பவம். ஒவ்வொரு நிறுவனமும் கட்சிக்காரர்களிடமிருந்து பல்வேறு வகையிலான மிரட்டல்களோடு வசூலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. வேறொரு நண்பரின் நிறுவனம் இருப்பது கோவை பாராளுமன்றத் தொகுதியில். ஆனால் இருப்பது திருப்பூர்தான். எல்லை அருகே. அவரிடமிருந்து திருப்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்களும், கோவை தொகுதியைச் சேர்ந்தவர்களும் மாற்றி மாற்றி அழைத்து வசூலில் இறங்கியதில் நொந்துபோயிருக்கிறார் அவர்.
எங்களிடம் இரண்டு மூன்று முறை அலைந்து வசூல் கேட்டவர்களிடம் மாறி மாறி வெவ்வேறு காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ‘குடுக்கறதும் குடுக்காததும் உங்க இஷ்டம். ஆனா உங்க மொதலாளிகிட்ட சொல்லுங்க. எங்க ஏரியாவுலேர்ந்து முப்பது நாப்பது பேர் உங்ககிட்ட வேலைக்கு வர்றாங்க. அத ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்கிறார் அவர். முப்பது பேரில் நாலைந்து பேரை மூளைச் சலவை செய்து நிறுவனத்தில் பாலிடிக்ஸ் ஏற்படுத்துவது சுலபம். ஆகவே வேறு வழியில்லாமல் அவரையும் கவனித்து அனுப்பினோம்.
தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு நான் கண்ட காட்சி... திருப்பூரின் முக்கியப் பகுதியில் அமைந்த ஒரு கட்சி அலுவலகம். மனைவி காய்கறி வாங்கிக் கொண்டிருக்க பதிவுக்கு ஏதாவது தேறுமா என்று பாராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். அந்தக் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கரைவேட்டியுடன் ஒருவர் (ன்?) “சொன்னதக் குடுக்கறியா இல்ல வேட்டியக் கழட்டட்டுமா?” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான். ‘கழட்டீட்டுப் போ’ என்று அவனுக்கெதிரிலிருந்த மீசை வைத்த ஆசாமி சொல்லிக் கொண்டிருந்தான். இவன் கொஞ்ச நேரக் கத்தலுக்குப் பிறகு நட்ட நடுரோட்டில் அந்த வேட்டியைக் கழட்ட எவனோ ஒருவன் “இந்தாண்ணே” என்று பேண்ட் ஒன்றை நீட்ட அதை ரோட்டிலேயே அணிந்தான். “இனிமே உன்கட்சி வேட்டியக் கட்ட மாட்டேன்... நாளைக்கு எப்படி ஆளைக் கூட்டுவன்னு பார்க்கறேன்” என்று கத்தியபடியே பேண்ட் கொடுத்த ஆசாமியுடன் மொபட்டில் பறந்தான்.மீசைக்காரரை ஒன்றிரண்டு பேர் “குடுத்துத்தொலைக்க வேண்டியதுதாண்ணே..” என்று கடிந்துகொள்ள “கேட்டதவிட எச்சா குடுத்தாச்சுய்யா.. சும்மா சும்மா கேட்டா.. ஒரு அர்த்தம் வேண்டாம்? இன்னும் ஒரு வாரத்துக்கு வெச்சு செலவு பண்ணணுமில்ல?” என்று நியாயம் பேசினார்.
இதையெல்லாம் சொல்லி புலம்பினால்.. ஒரே பதில்தான்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....
அப்படியா?
சரி.... இதெல்லாம் சாதாரணம்தான்.. ஜெயித்தபிறகு இவர்கள் செய்வதென்ன? பிறரிடம் இப்படி வாங்கி வசூலித்ததை ஏதோ உழைத்து சம்பாதித்து செலவு செய்தது போல “சும்மாவா? எவ்ளோ செலவு பண்ணினோம் தெரியுமா? அதையெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேண்டாமா?” என்றபடி மீண்டும் வசூல்வேட்டையில் இறங்குவது.. அதைவிடக் கொடுமை!
யாரைச் சொல்லியும் குற்றமில்லை!
Tuesday, June 2, 2009
யப்பா.. சாமீ.. முடியல...
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எந்தப் பெயரைக் கேட்கிறீர்கள்? பரிசல்காரனா.. கிருஷ்ணகுமாரா? பரிசல்காரன் வந்த காரணம்... இதோ இங்கே இருக்கிறது. கிருஷ்ணகுமார்.. ம்ம்ம்.. குருவாயூர் கோவிலில் சோறு கொடுத்துவிட்டு, பழனி வந்து எனக்கு மொட்டையடித்தார்களாம்... அப்போது கிருஷ்ணன்+குமார் என்று முடிவு செய்து கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்தார்களாம். (வரலாறு முக்கியம் அமைச்சரே!) இரண்டுபெயர்களும் மிகப்பிடிக்கும்!
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இரண்டாவது கேள்வியே பவுன்ஸராக இருக்கிறது... சமீபத்தில் அழுதது என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அது சர்வம் படத்திற்குப் போகலாம் என்று நண்பன் அழைத்தபோது!
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
Signatureஆ? Handwritngஆ?
Handwritng முதலில் அழகாக இருந்தது. இப்போது இல்லை. Signature முதலில் என்னமோ மாதிரி இருப்பதாகப் பட்டது. இப்போது இல்லை. இரண்டாவது பிடிக்கும். ஏனென்றால் முதலில் அது Signatureஆக இருந்து, இப்போது அதைப் போட்டால் பலர் Autograph என்பதால். (ச்ச்ச்ச்சே!)
4).பிடித்த மதிய உணவு என்ன?
ஹையோ! உணவு குறித்த கேள்வின்னாலே அலர்ஜிங்க எனக்கு.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அலைவரிசையைப் பொறுத்து.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டிலுமே நனையப் பிடிக்கும்.
(இந்தக் கேள்விக்கு குளிக்க’ என்கிற பதம் தவறென்று நினைக்கிறேன். இவற்றில் குளிப்பதைவிட நனைதலைத்தான்தான் மிக விரும்புவார்கள்... இல்லையா? அருவி ஒருபடி மேல். (அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்!)
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
வாட்ச். என்னுடைய வாட்ச்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
டித்த – எதுவுமே இல்லையோ என்று இந்தக் கேள்விக்கு அரைமணிநேரமாக யோசித்துக்கொண்டிருப்பது.
டிக்கா – கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குகூட கோபப்டாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டு GOODDY GOODY இமேஜுக்காக ரோஷமற்றிருப்பது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
டித்த: – எனக்கு அவரை எத்தனை சதவிகிதம் பிடிக்கிறதோ அதைவிட ஒருசதவிகிதமாவது அதிகமாக அவருக்கு என்னைப் பிடிக்கிறது என்பது.
டிக்கா: என் பி - டித்த, டிக்காதவை பற்றி எழுத எனக்கிருக்கும் உரிமையைவிட, என் சரிபாரிதியின் பி-டித்த, டிக்காதவை பற்றி எழுத அவர் எனக்குக் கொடுத்திருக்கும் உரிமையை மிக மதிப்பதால்... இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
இளையராஜாவின் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்தறேன்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இப்போது இரவு 2.33. வீட்டில் மேலாடை ஏதுமில்லை. கீழாடை பெர்முடாஸ். பிஸ்கெட் கலர். (ஐயா.. இந்த தொடரை ஆரம்பிச்ச கேள்வித் திலகமே.. இந்தக் கேள்வியின் மூலம் தாங்கள் எம்மை வாசிக்கும் வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் சேதி என்னவோ?)
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இப்போது ஏதுமில்லை. அடிக்கடி கந்தசாமி படப்பாடல்கள்.. அனைத்தும்.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளிப்புற வர்ணமா.. எழுதும் வண்ணமா? எப்படியிருந்தாலும் நல்ல பேனாவாக எழுதும் வண்ணம் இருத்தல் பிடிக்கும். (11வது கேள்வியின் ப்ராக்கெட் வாசகங்கள் இதற்கும் பொருந்தும்)
14.பிடித்த மணம்?
பவிழமல்லிப் பூவாசம்.
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
வடகரை வேலன்: ஒருவர் குறித்த குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும், நிறைகளை பிறரிடம் சொல்லும் இவரது குணம்.
எம்.எம்.அப்துல்லா: தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், பிறரது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் வித்தியாசம் இருப்பினும், பிறருடன் பழகுகையில் அவர்களுக்கு விருப்பு வெறுப்புகளை உணர்ந்து அவர்களுக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் பாங்கு. (இதுக்கு ஸ்டேட் பாங்கு-க்கும் எந்த சம்பந்தமில்லை)
பைத்தியக்காரன்: இவரது வாசிப்பனுபவம்.
மூவரையும் அழைக்கக் காரணம் அடுத்து அவர்கள் எழுதட்டுமென்றுதான். சரியா?16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
இந்தத் தொடருக்கு அழைத்த இனியவனின், இந்தத் தொடர் குறித்த கேள்வி பதிலின் 15வது கேள்வியின் முதல் பதிலின் இரண்டாவது வரி மிகப்பிடித்திருப்பதால்....
அவரது எல்லா பதிவும் பிடிக்கும்! (நல்லவேளை சுஜாதா இல்லை....)
(அந்த பதிலிலிருந்தே அவர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என அறியலாம்!)
17. பிடித்த விளையாட்டு?
மூன்று குழி வெட்டி, அதில் கோலிக் குண்டை கடத்திக் கடத்தி ஒரு விளையாட்டு விளையாடுவோம்.. சிறுவயதில். அதற்கிணையான சுவாரஸ்யம் இதுவரை வேறெந்த விளையாட்டிலும் நான் அடையவில்லை.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை! (ஐயா சாமீ... கேள்வியின் நாயகா... முடியல.)
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவை கலந்த செண்டிமெண்டான சண்டையிருக்கும் காதல் த்ரில்லர் படங்கள். (காதலே த்ரில்தானே?!?)
20.கடைசியாகப் பார்த்த படம்?
ராஜாதிராஜா எனும் லோ க்ளாஸ் கிங் காவியம்.
21.பிடித்த பருவ காலம் எது?
பருவகாலம் என்றாலே படமும் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
திசை அறியும் பறவைகள்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
தெரியவில்லை. (யப்பா சாமீ!)
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
டித்த: உங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு எனும் போஸ்ட்மேனின் குரல்.
டிக்கா: சாலையில் தேவையில்லாமல் கேட்கும் ஹாரன் சத்தம்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யோசிச்சுச் சொல்றேன்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இல்லை. எனக்கிருக்கும் எந்தத் திறமையுமே, உலகில் ஏதோவொரு மூலையில் வேறு யாருக்காவது இருக்கும்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
மனைவி, குழந்தைகள் சுமையுடன் நடக்க கணவன் சிகரெட் பிடித்தபடி முன்னே நடக்கும் காட்சி.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கோவா. (இதுவரை போனதில்லை. கேள்விப்பட்டவரை..)
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படியும் என்றில்லாமல் இப்படித்தான் என்று இருக்கவேண்டுமென்று ஆசை.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
வலைமேய்தல். அலைபேசல். (மனைவி இல்லதப்போ இவற்றை நான் செய்தால் அவர்களுக்குப் பிடிக்கும்!)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
LIFE IS BEAUTIFUL
.