Monday, August 31, 2009

நானும் என் பேனா மோகமும்!


ல்லோருக்கும் போலவே எனக்கும் முதன் முதலாக பள்ளிக்கூடம் படிக்கும்போது (அல்லது போகும்போது) பலப்பம் எனப்படும் சிலேட்டுக் குச்சியும் சிலேட்டும்தான் தரப்பட்டது. ஒரு நீளமான சிலேட்டுக் குச்சி ஒன்றை வாங்கி, அதை நான்காக உடைத்து ஒன்றை என்னிடம் தந்தார் என் தந்தை. முழுசாத் தந்தா என்ன என்று நினைத்திருக்கக் கூடும் நான் அப்போது. எழுதுபொருட்கள் மீது எனக்கிருந்த ஆசை அத்தகையது.

நினைவடுக்குகளில் விரல்களால் துழாவும்போது ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. எப்போதோ ஒரு முறை வெள்ளை நிற ஒல்லியான - நீளமான - முழு சிலேட்டுக் குச்சி ஒன்றை தந்தையிடம் சொல்லி (ஓரியாடி?) வாங்கி பத்திரமாக பள்ளிக்குக் கொண்டு சென்று, பெருமையாக எல்லாருக்கும் முன் எழுதி, எழுதி பார்வைப் பொருளாக்கிப் பெருமை பட்டுக் கொண்டிருந்தபோது சுப்புலட்சுமி டீச்சர் “இவ்ளோ பெரிசா வெச்சு எழுதாதே” என்று வெடுக்கெனப் பிடுங்கி மூன்று துண்டுகளாக்கி ஒன்றை என்னிடம் கொடுத்து ”ரெண்டை பத்திரமா பையில வெச்சுக்க” என்றபோது துடிக்கும் உதடுகளோடு, வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டதும், அப்போது ஆனந்தி என்னை சிரிப்பாக பார்த்த பார்வையும் இன்னும் நினைவிலிருக்கிறது.

ஐந்தாவது வகுப்பில்தான் பேனா அனுமதி. அதுவும் பால் பாய்ண்ட் பேனாக்களுக்கு அனுமதியில்லை. இங்க் பேனா என்றால் கேமலின் பேனாதான் உச்சம். அதி உச்ச நட்சத்திரம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்த ஹீரோ பேனா!

கேமலின் பேனா வாங்குமளவெல்லாம் வசதியிருக்கவில்லை அப்போது. வேறேதோ (வாட்டர்மென் என்று ஞாபகம்) பேனாதான் வாங்கித் தரப்பட்டது எனக்கு. கேமலின் பேனாவில் மூடியின் முடிவில் சில்வர் கவர் செய்யப்பட்ட பேனாவொன்று தான் எப்போதும் என் தந்தை வைத்திருப்பார். அதன் மீது எனக்கு அலாதி பிரியம். ஏழாவது வகுப்பு போனபோதுதான் அதே போன்றவொன்றை வாங்கித்தந்தார் அவர்.

அப்போதும் ஹீரோ பேனா மீதான மோகம் அப்படியேதான் இருந்தது. ‘அதெல்லாம் நமக்கு கிடைக்காதுப்பா’ என்று அந்த ஆசையை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். அதிலும் எட்டாவது படிக்கும்போது சரவணமூர்த்தி என்ற மாணவன் ஹீரோ பேனாவிலேயே மேலும் கீழும் தங்கமாய் ஜொலிக்கும் ஒரு பேனாவை வாங்கி வந்து மாணவர் மத்தியில் திடீர் பிரபலமனான். எங்கோ வெளிநாட்டில் வசிக்கும் அவனது சொந்தக்காரர் வாங்கி வந்தது என்று சொன்னதாக ஞாபகம்.

ஒன்பதாவது படிக்கும்போது என் மாமா ஒருவர் எனக்கு ஹீரோ பேனா பரிசாய் அளித்தார். (எதற்கு என்று நினைவிலில்லை) அந்த ஒரு வாரத்துக்கு என் எழுத்து அழகானது. என் வீட்டுப் பாடங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. அடித்தல் திருத்தல்கள் குறைந்தன. எல்லாம் பேனா மீதான ஆசைதான்.

அதன்பிறகு பல எழுதுகோல்கள் பற்றி கேள்விப்பட்டு, சிலதை வாங்கவும் செய்திருக்கிறேன். என் நண்பனொருவன், தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு ஃபாரின் பேனா இருப்பதாகவும் அதில் ஒரு பெண்ணின் படம் இருக்குமெனவும், மை குறையக் குறைய அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை!




ஒருமுறை விடுமுறைக்கு சென்னையில் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னோடு என் கஸினும் இருந்தான். என் உறவினர் ஒரு பேனாவையும், பாக்கெட் கால்குலேட்டரையும் வாங்கி வந்து யாருக்கு எது வேணும்?’ என்று கேட்டார். என் கஸின் அவசரமாக ஓடி “எனக்கு கால்குலேட்டர்” என்று எடுத்துக் கொண்டான். எனக்கு சிரிப்பாக வந்தது.. எனக்கு பேனாதாண்டா பிடிக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறே அதை எடுத்துக் கொண்டேன்.

பலவகையான பேனாக்களை வாங்குவதில் இப்போதும் எனக்கு ஆர்வம் அதிகம். மூன்று நிறங்களில் எழுதும் பால்பாய்ண்ட் பேனா ஒன்றை வெகுகாலமாக வைத்திருந்தேன். அதன் சிறப்பு என்னவென்றால் பேனாவின் மேலே பக்கவாட்டில் கருப்பு, சிவப்பு, நீலம் என புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்தப் புள்ளியை நீங்கள் உங்கள் எதிர் பக்கம் நோக்கிவைத்து எழுதுகிறீர்களோ அந்த நிறத்தில் எழுதும். அதாவது நீலத்தில் எழுத நீலப் புள்ளி உங்களுக்கு எதிரிலிருப்பருக்குத் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும். (இதுபோன்ற டெக்னிகலான பேனாக்களை பிரித்து மேய்வதிலும் விருப்பமுண்டு.)

பேனா இரவல் வாங்குவதும், கொடுப்பதும் நமது தீராத வியாதிகளில் ஒன்று. மூடியோடு பேனாவைக் கொடுத்தால் திருப்பித்தர/திரும்ப வாங்க மறந்துவிட நேர்கிறதென்பதால் மூடியை கழட்டி வைத்துக் கொண்டு பேனாவை இரவல் கொடுக்கும் வழக்கம் உடைய ஒருத்தன் வீட்டில்- அப்படிக் கொடுத்துக் கொடுத்து – மூடிகள் மட்டும் நிறைய சேர்ந்ததென்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியும் யாரும் திருப்பித் தருவதில்லையாம்! நான் பேனாவை இரவல் வாங்கினாலோ, அல்லது யாராவது மறந்துவிட்டுச் சென்றாலோ கூப்பிட்டுக் கொடுத்துவிடுவது வழக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் அதிகமான என் பேனாக்கள் தொலைவதில்லை என்று ஒரு நம்பிக்கை! அதேசமயம் யாராவது வைத்திருக்கும் பேனா மிகப் பிடித்தமானதாக இருந்தால் ‘வெச்சுக்கட்டுமா’ என்று கேட்டு எடுத்துக் கொள்ளவும் தயங்கியதில்லை!

என்னிடம் கையெழுத்து (AUTOGRAPH அல்ல. அலுவல் ரீதியான SIGN!) கேட்டு வருபவர்கள் நல்ல பேனாவைத்திருந்தால் சிரித்தபடி போட்டுக் கொடுக்கிறேன். கையெழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பேனாவை ஒருமுறை உற்றுப் பார்த்தால் “வெச்சுக்கோங்க சார்” என்று சொல்லப்பட்டிருக்கிறேன். (ஆனால் சிரித்தபடி திருப்பிக் கொடுத்துவிடுவேன்) அப்படியொரு பேனா மோகம்.

நான்கைந்து முறை எனக்கு Parker பேனா பரிசாய் வந்திருக்கிறது. ஆனால் அதன் பெயருக்கும், புகழுக்கும் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவே இல்லை. அப்படியொன்றும் எழுதினால் மகிழ்ச்சியாயிருக்குமளவு ஒன்றும் நன்றாக எழுதுகிற பேனாவல்ல அது. பார்க்கரில் ஒரே ஒரு மாடல் மட்டும் ஓரளவு வழுக்கியவாறு எழுதும். அதற்கு Uniball எவ்வளவோ மேல்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL!) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!

உபரித்தகவல்: இப்போது நான் உபயோகித்துவருவது REYNOLS நிறுவனத்தின் TRIMAX எனும் Fluid Ink பேனா. தொடர்ந்து மூன்று பேனா வாங்கிவிட்டேன். அவ்வளவு பிடித்திருக்கிறது!


.

Monday, August 24, 2009

தினமும் ஒரு பதிவு போடுவது எப்படி?

எந்தவிதமான நக்கலோ, நையாண்டியோ, குசும்போ, மொக்கையோ இல்லாமல் சீரியஸாக உங்களுக்கு சில யோசனைகள் சொல்லலாமென்றிருக்கிறேன். (சீரியஸாவா? நீயா? – ன்னெல்லாம் கேக்கப்படாது!)

என்னிடம் பேசும் சில நண்பர்கள் `சூரியன் உதிக்குதோ இல்லையோ, தினமும் ஏதாவதொரு பதிவு போட்டுடறியே, எப்படி?’ என்று கேட்பதுண்டு. எப்படி என்று நான் யோசித்தபோது..

1) தமிழில் தட்டச்சு செய்ய, NHM Writer போன்ற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்துவைத்துக்கொண்டு எம். எஸ். வேர்ட் ஃபைலில் தட்டச்சு செய்யவும்.

2) ப்ளாக்கரில் போய் தட்டச்சு செய்வதால் எரிச்சல்தான் மிஞ்சும்! நாம் திருத்தம் செய்வது ஒருபுறமும் அந்தத் திருத்தங்கள் வேறெங்கோ போய் உட்காருவதும் நடக்கும்.

3) பதிவு எழுதும்போது, ஏதேனும் விளக்கங்களுக்காக நீங்கள் இணைய உதவியை நாடி, இணையத்தை திறக்க நேர்ந்தால் அதை மட்டும் பார்த்துக், குறிப்பெடுத்துக் கொண்டு, இணையத் தொடர்பை துண்டித்துவிடவும்.

4) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது, யாருடைய வலைப்பக்கத்தையும் திறந்துவைத்துக்கொள்ளாதீர்கள்! உங்கள் வலைப்பக்கம் உட்பட! Reference-க்காக என்றால், ஏற்கனவே சொன்னபடி, அதை முடித்துக்கொண்டு உடனடியாக மூடிவிடவேண்டும்.

5) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது கூகுள் டாக் போன்ற ச்சாட்டிங்கை திறக்காதீர்கள்.

6) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது உங்கள் மின்மடலைத் திறக்காதீர்கள்.

7) சுருக்கமாக, இணையத்தொடர்பின்றி எழுத ஆரம்பித்து, எழுதி முடித்தால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

8) குறைந்தது மூன்று நாட்களுக்கான பதிவாவது (இரண்டு நாளைக்கானதாவது....) என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள்.

9) உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் தோன்றின், அதை ஒரு குறிப்பேட்டில், குறிப்பெடுத்து வைத்துக் கொண்டே வரலாம்.

10) அந்தப் பதிவை எப்படி ஆரம்பித்து, எப்படிக் கொண்டுசெல்லப் போகிறீர்கள் என்று மனதில் அசை போட்டுக் கொண்டேயிருங்கள்.

11) முடிந்தால் பதிவெழுத உட்காரும்போது, அலைபேசியை அணைத்துவிடுவது உசிதம்.

12) பதிவெழுதி முடித்து, சரிபார்த்து திருத்தங்களை செய்துமுடித்த பின், இறுதியாக உங்கள் வலைப்பக்கத்தைத் திறந்து புதிய பதிவிடுவதற்கான பெட்டியைத் திறக்கவும்.

13) எழுதிய பதிவை, அதில் பிரதியெடுத்து வைத்துக்கொண்டு, இடைவெளிகளெல்லாம் சரியாக வரவில்லையென்றால் EDIT HTML என்கிற OPTION போய் FORMATTING செய்துகொண்டு, POST OPTIONல் எப்போது பதிவை வெளியிட நினைக்கிறீர்களோ அந்த நாள், நேரத்தை குறிப்பிட்டுவிடவும். (உதாரணமாக வரும் ஆகஸ்ட் 15-க்காக ஏதேனும் பதிவு வெளியிட வேண்டுமென்றால் இப்போதே அடித்து, POST OPTIONல் ஆகஸ்ட் 15 தேதியையும், 9:00 AM என்றும் குறிப்பிட்டால், அந்த நேரத்தில் வெளியாகிவிடும்.)

14) இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இப்போது மணி வியாழன் இரவு 11.45. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இதை முடித்து, நாளை காலை 8:30 என்று POST OPTIONல் குறிப்பிட்டால், அது நாளை காலை வெளியாகிவிடும். ஒருவேளை நான் இணையத்தை திறக்க முடியாவிட்டாலும், தமிழ்மணத்தில் வெளியிட, எனது நண்பர்கள் யாரிடமாவது, தமிழ்மண முகப்பில் இருக்கும் ‘இடுகையைப் புதுப்பிக்க’ என்ற பத்தியில் இணைய முகவரியை அடிக்கச் சொல்லி, அந்த இடுகையை வெளியிட்டுக் கொள்ளலாம்.

15) பதிவெழுத எந்த யோசனையும் இல்லாத போது, அலட்டிக்கொள்ளவே வேண்டாம்! ஏதாவது யோசனை இருந்து அதை எப்படி எழுத்தில் வடிப்பது என்பதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம். யோசனையே இல்லாமல் இருக்கும்போது, திடீரெனத் தோன்றும் சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்!


இப்போதைக்கு இவ்வளவுதான். உண்மையாகச் சொல்வதென்றால் இன்று மட்டும்தான், நான் பதிவெழுதும் போது இவற்றையெல்லாம் கடைபிடிக்கிறேன். இத்தனை நாளாக இந்தமாதிரியெல்லாம் கடைபிடிக்கவேண்டும் என்று நினைத்ததோடு சரி! இன்று இணையத்தைத் திறக்காமலே இந்தப் பதிவை அடித்ததால் வெறும் 27 நிமிடங்களில் இதை அடித்துமுடித்தேன். சாதாரணமாக ஒரு பதிவெழுத இதற்கு முன்பு நான் எடுத்துக் கொண்ட நேரம் குறைந்தது 2 மணிநேரங்கள்!

ஆகவே, இது ஒரு சோதித்துப் பார்த்து சொல்லப்பட்ட யோசனைகள்.

முக்கியப் பின்குறிப்பு: இதிலிருக்கும் பல விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்கலாம். பல விஷயங்கள் `இதெல்லாம் நான் எப்பவோ பண்ணினதுதானே’ என்று இருக்கலாம். நான் வலையெழுத வந்தபோது, நிறையத் தட்டுத் தடுமாறி, பலரது அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். (இப்பவும் கூட!) அதுபோல புதிதாக வருபவர்களுக்கு இது உதவலாமே??

இதைவிடவும் வேறு சில யோசனைகளிருப்பினும் சொல்லவும். எல்லாவற்றையும் தொகுத்து, ஒரு கையேடு போல தயாரித்து (வடகரைவேலன் ஆப்செட் ப்ரஸ் வெச்சிருக்காருல்ல?) ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும், கோவைப் பதிவர்கள் சார்பாக வழங்கலாம் என்றொரு யோசனையுள்ளது. உங்கள் ஆதரவு தேவை!

********

பின் பின் குறிப்பு:- இந்தப் பதிவு போன வருடம் ஜூலையில் எழுதியது. இப்போது எனக்கே தேவைப்படுவதால் இந்த மீள்பதிவு!


.

Saturday, August 22, 2009

கந்தசாமி – விமர்சனம்



யாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து...

பிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.

ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.

ஸ்ரேயா – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரேயா! அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது! அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்!



பாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது! ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை! ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்!

வடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம்! குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி! மற்றவை சுமார்.

டைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.

பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.

கிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.

க்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி......
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
என்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம்! அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்......

கந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..


பி.கு: இனி இந்தக் கதையை வேறு விதங்களில் படமாக எடுத்தால் அந்த டைரக்டருக்கும், நடித்தால் நடிகருக்கும் (Mostly விக்ரம்தான் நடிப்பார்!) ரெட்கார்டு போடவேண்டும் என்று கந்தசாமி கோயில் மரத்தில் கடிதமெழுதிக் கட்டப் போகிறேன்!



.

Friday, August 21, 2009

வடிவேலு டயலாக்ஸ்!

டிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனங்கள் எல்லா தட்டு மக்களிடமும் நீக்கமற நிறைந்து புழங்கிக் கொண்டு வருகிறது. ஒரு தமிழன் இருக்கிறார் - அவர் கைவண்டி தள்ளுபவராயினும், கார்ப்பரேட் ஆஃபீஸ் சீஃப் ஆக இருப்பினும் ஒரு நாள் ஒரு முறையேனும் அவர் வடிவேலுவின் வசனமேதாவதைப் பேசாமலிருப்பாரென்றால், அவர் பேசாதவராயிருப்பாரென்பதே நிஜம்!

இன்றைக்கு ஒரு சில வசனங்களைப் பற்றிப் பார்ப்போம்..

******************

ஆணிய புடுங்க வேண்டாம்...!


ஃப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற வசனமிது. வடிவேலு, ரமேஷ் கண்ணாவையும், அப்பிரசண்டிகளாக (!!!) வேலைக்குச் சேர்ந்த விஜய்-சூர்யாவையும் கண்டு எப்போதும் கடுப்பிலிருப்பார். மூவரையும் அழைத்து, அதில் ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ மேல போய் தேவையில்லாத ஆணியையெல்லாம் புடுங்கு’ என்பார். (ஒரு வீட்டு Renovation வேலைக்கான காண்ட்ராக்ட் எடுத்திருப்பார்) ரமேஷ் கண்ணாவுடன், இவர்கள் இருவருமே மாடியில் ஏற ‘ஏய்.. நீ எங்க போற.. நீ எங்க போற.. நீ எங்க போற..’ என்று சூர்யாவின் தோளில் Bagஆல் தட்டி திட்டுவார். உடனே விஜய் ‘நீங்கதானே ஆணியப் புடுங்கச் சொன்னீங்க?’ என்று கேட்பார். உடனே வடிவேலு ‘நான் சொன்னது அவன.. ‘ என்று விட்டு ‘ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்பார். மூவருமே இறங்கிவிடுவார்கள். மறுபடி ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ ஏண்டா வர்ற?’ என்று கேட்பார். ‘நீங்கதானே ஆணியப் புடுங்க வேண்டாம்னீங்க?’ என்பார். மறுபடி வடிவேலு ‘டேய்.. நான் சொன்னது இவனுகள.. நீ போய் தேவையில்லாத ஆணியவெல்லாம் புடுங்கு’ என்பார். அப்போது ரமேஷ் கண்ணா கேட்கும் ஒரு கேள்வியும் அதற்கு வடிவேலுவின் பதிலும் சரித்திரப் புகழ் வாயந்தது!

ரமேஷ் கண்ணா: “தேவையிருக்கற ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?”


வடிவேலு: ‘நீ புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான்’

இந்தப் படத்திற்குப் பிறகு ஆணி பிடுங்குதல் என்றால் வேலை செய்வது என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆஃபீஸ்ல ஆணி அதிகம் என்றால் வேலை அதிகம். ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்றால் நீ சும்மா இருந்தாலே போதும். ஒண்ணும் பண்ணவேணாம் என்றர்த்தம்!


நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்

தலைநகரம் என்ற படத்தில் இடம்பெற்றது இது.

இந்தப் படத்தில் சுந்தர்.சி. ஒரு ரௌடியாக இருந்து, பின் திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பார். வடிவேலு அவர் ஏரியாவில் தனக்கு ‘நாய் சேகர்’ என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு தானும் ஒரு ரௌடி என்று பறைசாற்றிக் கொண்டிருப்பார். ஒருமுறை டீக்கடை ஒன்றின் முன் நிஜமாகவே ரௌடிகள் பலருடன் வடிவேலு வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார். அப்போது போலீஸ் ஜீப் வரும். ‘புதுசா வந்த இன்ஸ்பெக்டர் எல்லா ரௌடிகளையும் கூட்டீட்டு வரச் சொன்னார்’ என்று கான்ஸ்டபிள் எல்லாரையும்-வடிவேலுவைத் தவிர்த்து- ஜீப்பில் ஏறச் சொல்வார். இவர் ஏறப்போக ‘யோவ்.. நீ எங்க போற?’ என்று கான்ஸ்டபிள் கேட்பார். ‘நானும் இந்த ஏரியால ரௌடின்னு ஃபார்ம் ஆய்ட்டேன்யா.. இப்ப நான் வரலைன்னா என்னை எவனுமே மதிக்க மாட்டான்யா’ என்று கொஞ்சுவார். ‘நீ ரௌடின்னு நான் எப்படி நம்பறது’ என்று கேட்க.. ‘எல்லா ரௌடிக கூடயும் சரிக்கு சமமா நின்னு பேசிக்கிட்டிருந்தேனே.. பார்க்கலியா’ என்று ரகளை செய்து எப்படியோ கிளம்பும் ஜீப்பில் பின்னால் தொத்திக் கொள்வார். அப்படித் தொத்திக் கொண்டபின் வெளியே பார்த்து அவர் சொல்லும் டயலாக்தான்.. ‘எல்லாரும் பார்த்துக்கங்க... நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்’

ஆஃபீசில் நம்மை யாராவது பெரிய ஆள்போலப் பார்த்தாலோ, நம்ம பதிவை யாராவது சூப்பர்ன்னாலோ, நம்ம பதிவை யாராவது காப்பி அடிச்சு போட்டாலோ, நம்ம பதிவு பிரபல பத்திரிகைகள்ல வந்தாலோ நாமளும் இதைச் சொல்லிக்கலாம்!


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா

வின்னர் படத்தில் இடம்பெற்றது இது.

வடிவேலு ரியாஸ்கானிடம் அடிவாங்கி விட்டு வந்திருப்பார். (மிகப் புகழ்பெற்ற காட்சியிது) கன்னாபின்னாவென அடிவாங்கிவிட்டு வந்து பாலமொன்றின் மீது அமர்ந்திருப்பார். அப்போது அங்கே வந்து கொண்டிருக்கும் ஊர்க்காரர்கள் இரண்டு பேரில் ஒருவர் “அடிச்சுட்டு வந்த கைப்புள்ளைக்கே இவ்ளோ ரத்தம் வருதுன்னா.. அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கறியா நீ?’” என்று உடன் வருபவரைப் பார்த்து கேட்ட வண்ணம் வடிவேலு க்ரூப்பை கடந்து செல்வார். இதைப் பார்த்து டரியலாகும் வடிவேலு தன் சகாக்களைப் பார்த்து இந்த வசனத்தைச் சொல்வார்.

நம்மைப் பார்த்து ‘நீங்க அழகா இருக்கீங்க.. யூத்தா இருக்கீங்க... சூப்பரா எழுதறீங்க’ என்றெல்லாம் யாராவது சொன்னால், தாராளமாக நாம் இந்த டயலாக்கை சொல்லிக் கொள்ளலாம்!

*****************************************************

ஒரு முறை நண்பர் ஒருவர் நீங்க ஆணி ஆணின்னு பேசிக்கறீங்களே அப்படீன்னா என்ன என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினார். ஆகவேதான் இதுபோன்ற வாசகங்களுக்கான மூலமான வசனங்கள் குறித்து பதிவெழுதுகிறேன். மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்குவதாக எண்ண வேண்டாம்! :-)))))

வடிவேலு உபயோகிக்கும் டயலாக்குகள் ஒரு கடல். இப்போதைக்கு மூன்று முத்துகள் மட்டும். அப்பப்போ இது தொடரும்!

Thursday, August 20, 2009

ச்சின்னதாய் ஒரு கதை

“யெஸ் சார்.. வெல்கம்” - யூனிஃபார்ம் அணிந்த இளைஞன் புன்சிரிப்போடு கண்ணாடிக் கதவு திறந்து வரவேற்றான்.

அது ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் கிளைபரப்பி, புதியதாக எங்களூருக்கு வந்திருக்கும் ஃபேமலி ப்யூட்டி சலூன்.

உள்ளே சென்றதும் சுற்று முற்றும் பார்த்தேன். உயரமான நாற்காலி ஒன்றில் உட்காரவைக்கப்பட்ட குழந்தையொன்று சிரித்தபடி கண்ணாடி பார்த்துக் கொண்டிருக்க அதற்கு வலிக்காமல் முடி வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.

“வாட் கேன் வி டூ ஃபார் யூ சார்?”

முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை. அங்கங்கே ஆங்கில இதழ்கள். மெலிதான இசை கேட்டுக் கொண்டிருந்தது.

“ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணனும்”

“ஷ்யூர் சார். ஐ’ல் ப்ரிங் த புக்லெட்” என்றபடி என்னை அமரச் செய்துவிட்டு போனான்.

எனக்கு சின்ன வயது ஞாபகம் வந்தது.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே முடிவெட்டிக் கொள்ள நான் செல்வது பழனியண்ணன் சலூன்கடைதான். அவரும் எவரெஸ்ட் சலூன், ஹாலிவுட் சலூன், ஸ்டார் ஹேர்லைன்ஸ் என்று என்னென்னவோ பெயர் மாற்றியிருக்கிறார். ஆனாலும் அது எங்களுக்கு பழனியண்ணன் கடைதான். முடிவெட்டிக் கொள்ள என்றில்லாமல் நண்பர்கள் அவ்வப்போது கூடுமிடமாகவும் அது இருந்தது.

முடிவெட்டிக் கொள்ள போகும்போது கூட்டம் அதிகமாக இருந்தால் அவரே
“குமாரு.. எட்டரை மணிக்கு வர்றியா? சரியா இருக்கும்” என்பார்..

எட்டரை மணிக்குப் போனாலும் ஐந்தாறு பேர் அமர்ந்திருப்பார்கள். பழனியண்ணன் கண்ணால் ஒரு சைகை காண்பிப்பார். ‘கொஞ்சம் பொறுடா’ என்றர்த்தம் அதற்கு. அங்கிருக்கும் பெஞ்சில் அமர்வேன்.

அனைத்து தினசரிகளும், நாளிதழும் இருக்கும். சுவற்றில் பாம்பே டையிங் காலண்டரில் முன்னணி நடிகை சிரித்துக் கொண்டிருப்பாள். அனுராதா, டிஸ்கோ சாந்தி வகையறா ஒட்டப்பட்டிருக்காது எனினும் நிச்சயமாக நடிகைகளின் ப்ளோ அப்புகள் சுவற்றில் இருக்கும். கண்ணாடியில் மூலைகளில் சில விசிட்டிங் கார்டுகள் சொருகப்பட்டிருக்கும். ஒரே ஒரு கண்ணாடிக்கு நேர் எதிர் சுவற்றில் மற்றொரு கண்ணாடி மாட்டியிருப்பார். ‘இன்னொரு கண்ணாடி வாங்கணும் குமாரு. எங்க.. வர்றது கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு’ என்பார்.

வாரமலரின் குறுக்கெழுத்துப் புதிரை நான் முடிப்பதற்குள் எனக்கான முறை வந்துவிடும்.

முடிவெட்டி முடித்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். ஓரிரு முறை ஒன்றும் கொடுக்காமலே ‘சினிமா போகணும்னே... அப்பா கேட்டா தரமாட்டாரு’ என்று அந்தக் காசை கமிஷனடித்திருக்கிறேன். ஒன்றுமே சொல்ல மாட்டார்.

நடுவில் நாங்கள் சொந்த வீடுகட்டி ஏரியா மாறிய பிறகு அவருடனான தொடர்பு குறைந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகு அவரோடான தொடர்பு முற்றிலும் அற்றுப் போனது.

“எக்ஸ்யுஸ்மி சார்” - புக்லெட்டுடன் வந்த இளைஞன் என் ஃப்ளாஷ்பேக்கைக் கலைத்தான். “ ஃபோர் ஹண்ட்ரட் வரும்சார். உங்க ஃபேஸ் கட்டுக்கு இதோ இந்த நாலு ஸ்டைலும் பொருந்தி வரும் சார்” என்றான்.

“எவ்வளவு நேரமாகும்?”

“ஒன் ஹவர்” என்றான்.

சம்மதித்து கிங்க்ஸ் என்றெழுதப்பட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப் பட்டேன். ஷாம்பூ வாஷ் என்று ஈஸி சேர் ஒன்றில் படுக்க வைத்து குளிக்க வைக்கப்பட்டேன். முடித்ததும் தலையை கருப்பு பூத்துவாலையால் துடைத்துவிட்டார்கள். எனக்கு மறுபடி பழனியண்ணனும் அவர் தோளில் கிடக்கும் ஈரிழைத்துண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

அரைமணி நேரம் தலையை என்னென்னவோ செய்தார்கள். நான் போட்டிருந்த டீ ஷர்ட் கொஞ்சமும் கசங்காமல் மென்மையாக என்னைக் கையாண்டார்கள். இடையே சில நிமிடங்கள் என் தலை காய அமரவைக்கப்பட்டபோது தடிமனான சில புத்தங்கங்கள் தரப்பட்டது. எதுவும் பழனியண்ணன் கடை வாரமலருக்கு ஈடாகுமாவெனத் தோன்றியது.

எல்லாம் முடிந்து என்னை சரிபார்த்துக் கொண்டே முன்னறையில் வந்து அமர்ந்தேன்.

பில் கொண்டு வரப்பட, காசை எடுத்து வைத்து விட்டு வாசல் நோக்கி நடந்தேன்.

கதவருகே வந்த இளைஞன் ‘தேங்க்யூ சார்’ என்று கண்ணாடிக் கதவைத் திறந்தான். வெளியே இன்னோவா ஒன்று வந்து நிற்க.. அந்த இளைஞன் ‘பாஸ் வந்துட்டாரு’ என்று உள்ளே திரும்பி குரல் குடுத்தவாறு எனக்கு புன்னகையைச் சிந்தினான். தூரத்தில் நின்ற இன்னோவாவிலிருந்து கதர் வேட்டி சட்டையோடு யாரோ இறங்குவது தெரிந்தது.

என் காரருகே செல்லும்போதுதான் இன்னோவாவிலிருந்து இறங்கி என்னைக் கடந்து செல்லும் நபரைப் பார்த்தேன்..

தோளில் அதே ஈரிழைத்துண்டோடு - பழனியண்ணன்.



.

Wednesday, August 19, 2009

அவியல் 19.08.09

விஜய் டி.வி-யில் பாட்டுப் பாடவா என்றொரு நிகழ்ச்சி. கலந்து கொள்பவர் தேர்ந்தெடுக்கும் பாடலின் வரிகள் எதிரே ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருக்க. பங்கேற்பாளர் பாடிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் வரிகள் நிறுத்தப் படுகிறது. அங்கே வரும் வார்த்தைகளை பாடுபவர் மனதிலிருந்து நினைவு படுத்திப் பாடினால் அடுத்த கட்டம்... இப்படி..

நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.

யாராவது சொல்லுங்கப்பா...

**********************

கிரிக்கெட்டில் பங்களாதேஷின் அதிரடியை எத்தனை பேர் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா செய்ததை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுடன், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வந்தார்கள். (ஒரே ஒரு 20-20 மட்டும் விண்டீஸ் வென்றது) என்னதான் சீனியர்ஸ் இல்லையென்றாலும் சொந்த மண்ணில் இப்படியா மண்ணைக் கவ்வுவார்கள்? அடுத்ததாக ஜிம்பாப்வேயுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கில் வென்றிருக்கிறார்கள். அதுவும் ஒரு போட்டியில் 312ஐ சேஸ் செய்து வென்றிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் CK Coventry 154 பந்துகளில் 194 ரன்கள் எடுத்து சயித் அன்வர் நமக்கெதிராக எடுத்த சாதனையை சமன் செய்து சாதனை படைத்தாலும், சேஸ் செய்த பங்களாதேஷின் தமீம் இக்பாலின் 154 ரன்களால் ஜிம்பாப்வே தோல்வியே அடைந்தது!

பங்களாதேஷுக்கு நல்லதொரு எதிர்காலம் தெரிகிறது!

*************************

ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா?) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.

************************************

கள்கள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 15 விழாவுக்கு அழைத்திருந்தார்கள். போனால் ஒரு அருமையான தேசபக்திப் பாடலை கொஞ்சமும் சத்தமே வராத சவுண்ட் சிஸ்ட்த்தில் போட்டு, மைதானத்தில் ஆடும் குழந்தைகளுக்கு வரியும் இசையும் கேட்காமல் அவர்களை வெயிலில் நெளிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அந்த ரிப்பேரான மைக் பிடித்து கேட்காத ஸ்பீக்கரில் ‘இந்த 63 வருடத்திலே நம் முன்னேற்றம் எங்கு சென்றிருக்கிறது என்றால்’ என்று ஆரம்பித்து பே-சி-க்-கொ-ண்-டி-ரு-ந்-தா-ர்-க-ள். பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் இருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.

************************

தே விழாவில் பேசிய ஒருவர் அப்துல்கலாம் இந்தியாவை வல்லரசாக்க ஏன் 2020ஆம் வருடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று விம் பார் போட்டு விளக்கினார். அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.

சரிங்...
***********************

நேற்றைய தினமலரில் முதல்பக்க நியூஸில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் வாக்காளர்களுக்கு வெறும் 200 ரூபாய்தான் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும். இதனால் வாக்காளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும் செய்தி போட்டிருந்தார்கள். அப்படியே இருந்தாலும் வாக்காளர்களின் வருத்தம் நியாயமானதுதானே என்ற அனுதாப தொனியில் செய்தியிட்டது எனக்கென்னவோ பிடிக்கவில்லை.

உண்மையை ரசிக்கமுடியவில்லை.
***************************

ந்தசாமி பாடல்களை பிட்டு பிட்டாகக் (ச்சே.. அதில்லப்பா...) காண்பித்தார்கள். ஸ்ரேயாவின் சேஷ்டைகள் அட்டகாசமாக இருந்தது. விக்ரமிற்காக 50%, பாடல்களுக்காக 30%, ஸ்ரேயாவிற்காக 20% என்றிருந்த எதிர்பார்ப்பில் ஸ்ரேயாவிற்கான சதவிகிதம் கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். பாடல்கள் என்றதும் இன்னொன்று ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஆதவன் (சூர்யா-நயன்தாரா-கே.எஸ்.ரவிகுமார்) பட பாட்டை நாலுவரி ட்ரெய்லர் போடுகிறார்கள். அஞ்சனா அஞ்சனா என்றொரு பாடல். நாலுவரியே பித்துப் பிடிக்கவைக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ்! இன்றைக்கு இசை ரிலீஸாம். முதல் ஆளாக வாங்க ஆசை!

******************************

எப்படி இப்படியெல்லாம்...

வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?

பார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்!

(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது!)


.

Tuesday, August 18, 2009

கவிதைகளைப் பின்வைத்து ஒரு வி(தண்டா)வாதம்

நேற்றைக்கு நள்ளிரவில் நாளைக்கு என்ன செய்யலாம் என்று இன்றைய பதிவிற்காக மூளையைக் கசக்கி, புத்தியைச் சுருக்கி, புருவமத்தியில் கவனத்தைக் குவித்து யோசித்துக் கொண்டும், நல்லதொரு கருவை யாசித்துக் கொண்டுமிருக்கையில் வந்தார் கவிஞர் கோலகொப்பறக் கொய்யான்.

“நாளைக்கு என் செய்யவென
இன்றைக்கு நினைக்கிறான்
நாளைக்கு இருப்போமாவெனத் தெரியாத இவன்”

“ஐ! கோலக் கொய்யா... என்ன அதிசயம் சாட்டுக்கு வர்றீங்க?”

“இல்ல உங்க ஸ்டேடஸ் மெசேஜ்ல நாளைக்கு என்ன எழுதன்னு போட்டிருந்ததப் பார்த்து சும்மா வந்தேன்”

“ஆமாங்க.. நான் இருக்கற வேலைப் பளுல...”

“மூடு.. இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லுவ? வேலை இப்படியேதான் பிஸியாவேதான் இருக்கும். இருந்தாலும் நேரமொதுக்கி எழுதி உன்னை நம்பி படிக்க வர்ற கோடிக்கணக்கான”

“யோவ் மரியாத கெட்டுடும்”

“சரி.. லட்சக்கணக்கான..”

“என்னது?”

“சரி ஆயிரக்கணக்கான?”

“வேணாம்”

“சரி நூத்துக்கணக்கான.. இல்லைனா என் ஒருத்தனுக்காகவாவது நீ ஏதாவது எழுதித்தானே ஆகணும்?”

“ஒக்கார்ந்தா டக்னு ஒண்ணுக்கு மாதிரி வர்றது கவிதைதான்னு அதையாவது எழுதலாம்னா.. எங்க நான் எழுதி நாளைக்கு நோபல் பரிசு வாங்கீடுவேனோன்னு பயந்து கவிதை எழுதினா ஒதப்பேங்கறாங்க”

“அதுக்கெல்லாம் பயப்பட்டா காலம் தள்ள முடியாது. நானெல்லாம் கவிதை எழுத கை காலெல்லாம் ரத்தம் வர அடிவாங்கிருக்கேன்”

“சரி.. டக்னு ஒரு தலைப்பு சொல்லுங்க கவிதை ட்ரை பண்றேன்”

“ம்ம்... இல்லாள்”

“இல்லாள் செல்லாளாய் இருக்கிறாள் - ஒருமினிட்
கல்லாளாய் இருந்தால் பொறுக்கிறாள் - இல்லையேல்
கல்லால் அடிப்பேன் என்கிறாள் ஐயகோ
நல்லா நமச்சிவாயனே கேள்!”

“அதென்னய்யா நடுவுல ‘ஒரு மினிட்’?

“அது அடுத்த அடியை யோசிக்க எடுத்துட்ட நேரம். அதைக் கூட மறைக்காமல் சொல்கிற நேர்மையாளர் இந்தக் கவிஞர்-ன்னு காட்டறோம் நாம!”

“மொத அடியை மட்டும் நீ எழுதினா போதும்.. அடுத்த அடியை படிக்கறவன் கொடுப்பான்”

“என்னது?”

“ஒண்ணுமில்ல விடு.. இந்த நமச்சிவாயம், நல்லாவெல்லாம் வேண்டாம்லே.. நாட்டுல பட்டினத்தாரைப் படிச்சவன் கல்லால அடிப்பான்”

“வேற எப்படி எழுத?”

“தமிழ்நாட்டுலயே மத்தவங்களுக்கு புரியற மாதிரி எழுதறது நானும், ஜீவசுந்தரமும்தான்னு ஒனக்கு தெரியும்ல?”

“உங்களைத் தெரிஞ்சதுக்கே இந்தப் பாடு.. யாரது ஜீவசுந்தரம்?”

“விடுய்யா.. கேள்வி கேட்டுட்டு. அது ஒரு கற்பனை காதாபாத்திரம். நான் மட்டும்தான்னா ஆணவம்னு சொல்லுவானுகன்னு அந்தப் பேரையும் சொல்லிகிட்டிருக்கேன்.. நானொரு கவிதை சொல்றேன் கேளு....

“பொண்டாட்டி ஒதச்சா அழுவாத
கொண்டாட டாஸ்மாக் ஓடாத
**********************************
எந்நாளும் தேடி ஓடாதே”

(அவர் சாட்டில் சொன்ன மூன்றாவது வரியை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தனி மின்னஞ்சலில் வேண்டுவோர் தொடர்பு கொள்க!)

“இதை கவிதைகள்னு போட முடியாது. கழிப்பறைக் குறிப்புகள்னு வேணும்னா போடலாம்”

“அட! அருமைய்யா... அதுவும் நல்லாத்தான் இருக்கு”

“ஓஹோவெனப் பாராட்டினான் என் கவிதையை
சரியென்று சொல்லிவிட்டு
தேநீருக்கு காசு கொடுக்கச் சொன்னேன்
முறைத்துவிட்டு எழுந்துபோனான்
ரெண்டு ரூபாய்க்குக் கூட உதவாத கவிதை!’ – இது எப்படி இருக்கு?”

“இதேபோல ஏற்கனவே ஒரு கவிஞர் எழுதிட்டாரு...

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.”

“ஆனா அந்தக் கவிஞர் டீக்காசுன்னு ஆங்கிலத்துல எழுதினதால அதை நாம புறக்கணிச்சு என்னோடதை ஏத்துப்போமே...”


“கிழிஞ்சது போ.. கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.. அதையும் கவிதையாவே சொல்றேன்”

“சொல்லும்”



“விருத்தக் கவிதைகள் எழுதச் சொன்னால்
வருத்தக் கவிதைகள் எழுதுகிறாய்
அவை எவ்வகைக் கவிதைகள்
என்பதில் இல்லை என் வருத்தம்

அதை நீ கவிதைகள் என்பதுதான் வருத்தம்”

**************************


முக்கியக் குறிப்புகள்:
1) இந்தப் பதிவு அவரையோ, இவரையோ அல்லது எவரையுமோ குறிவைத்துக் குறிப்பிட்டு எழுதியதல்ல. அப்படியெவரையேனும் இது குறிப்பிடும்படி இருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானதே.

2) இதை நவீன கவிதைகளை முன்வைத்து சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஆவணமாக பயன்படுத்த விழைவோர் எனது முன்னனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

3) பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.

4) விவாதத்தின்போது நடுவே வந்துவிழுந்த கவிதை ஒன்றை எட்டி உதைக்க மனமில்லாமல் மெல்ல எடுத்து மேசை மேல் வைத்தபோதுதான் கவனித்தேன். அது பெருங்கவிஞர் செல்வேந்திரனார் எழுதியது. அவருக்கும் அவரது அழியாப் படைப்பான முடியலத்துவத்துக்கும் நன்றி. அந்தக் கவிதையை எதுவென்று சொல்லச் சொல்லி உங்களுக்கு போட்டியெல்லாம் வைப்பதாயில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.. ச்சே.. கொள்ளுங்கள்.

5) அந்தக் கவிதையை நான் இங்கே பயன்படுத்தியதை உரிமைமீறலாக அவர் கருதுவாரேயானால் அந்த கவிதையை மட்டும் கைவைத்து மறைத்துக் கொண்டு முழுப்பதிவையும் படிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

6) பதிவைவிட பின்குறிப்பின் நீளம் அதிகரிப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.




.

Wednesday, August 12, 2009

அவியல் 12.08.09

தய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.

அவர் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!

******************

ந்தப் பள்ளி இசைப் போட்டி விழாவுக்குப் பரிசளிக்க வந்திருந்தார் பாடகி எஸ்.ஜானகி. நீங்கள் தேர்வு செய்த மூவரையும் எனக்கு முன்னால் பாடச் சொல்லுங்கள் என்கிறார் எஸ்.ஜானகி. பாடுகிறார்கள். மூன்றாவதாக தேர்வாகியிருந்த மாணவனின் பாடல் திறனைப் பாராட்டிய எஸ்.ஜானகி அவருக்கே முதல் பரிசு என அறிவித்தாராம்!

அவர்தான் பின்னாளில் எஸ்.ஜானகியுடன் பல பாடல்கள் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியன்!

************************************
ங்கோ படித்தது அல்லது கேட்டது.. (எதுதாண்டா உன் சொந்தச் சரக்குன்னு கேட்கப்படாது!)

ஒரு இஞ்சினியரிடம் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மேஸ்திரி ஒருவர், ‘அவ்வளவுதான். என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. வேலையிலிருந்து நின்று கொள்கிறேன்’ என்கிறார். இஞ்சினியரோ.. ‘சரி.. இன்னும் ஒரு ஆறு மாதம் வேலை செய். ஒரு வீட்டு வேலை இருக்கிறது. அதை நீ முடித்துக் கொடுத்தபின் நின்றுவிடு’ என்கிறார்.

வேண்டா வெறுப்பாக சரியெனச் சொல்கிறார் மேஸ்திரி. ‘நாமதான் நிக்கப்போறோமே’ என்கிற அலட்சியமும் சேர்ந்து கொள்ள முடிந்த வரை தரமில்லாத பொருட்களை வைத்து, கமிஷனும் அடித்து அந்த வீட்டை அரைகுறையாக முடிக்கிறார்.

ஆறுமாத முடிவில் வீடு தயாராகிவிட.. அந்த வீட்டுச் சாவியை இஞ்சினியரிடம் ஒப்படைக்கிறார். இஞ்சினியர் சொல்கிறார்.

“சாவியை நீயே வைத்துக்கொள். அந்த வீடு உனக்குத்தான். இத்தனை வருடங்கள் என்னுடன் உழைத்ததற்கான என் பரிசு”

************************************************
ரையாடல் சிறுகதைப் போட்டியை ஆரம்பித்தவுடனே ஒரு இதமான தென்றல் வீசியதைப் போலத்தான் இருந்தது. பிறகு அதுவே புயலாக சுழன்றடிக்குமளவு பதிவர்களின் எந்த உரையாடலிலும் இந்த உரையாடல் இடம்பெற்றது!

சிறுகதைப் போட்டி நடத்துவதென்பது சிறுகதை எழுதுவதை விடக் கஷ்டமான ஒன்று. இப்படித்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து.... சரி விடுங்க வேண்டாம். இருவது கதைல கூட ஒண்ணா தேறல.. இவன்லாம் பேசறான்’ என்று நீங்கள் எண்ணக்கூடும்.

பைத்தியக்காரனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் நடுவர்களாக இருந்திருந்தால் நான் அவர்களுக்குத் தகுந்தமாதிரி எழுதியிருப்பேன் என்று பலர் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனக்குத் தெரிந்து அப்படி ஒரு வட்டத்துக்குள்ளோ, கட்டத்துக்குட்பட்டோதான் அவர்கள் தேர்வு இருந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களின் வாசிப்பனுபவதுக்கு முன் யார் எழுதுவதும் அவர்களுக்கு யானைகண் எறும்பாகத்தான் பட்டிருக்கும். அவர்கள் தரத்திற்கு அல்லது அவர்கள் தரம் என்று நினைக்கும் எழுத்திற்கு பக்கத்தில் வந்தவற்றைத்தான் அவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடும். அதில் தவறேதுமில்லையே...

(அவர்கள் வாசிப்பனுபவம் என்று நான் குறிப்பிடக்காரணம்: பைத்தியக்காரன் தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்ட 10 புத்தகங்களை நான் படிக்கவே முடியவில்லை. அதாவது அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்களின் பெயர்களையே படிக்க முடியவில்லை என்னால்.. பின்னெங்கே அந்தப் புத்தகங்களைப் படிக்க!)

மற்றபடி அத்தனை கதைகளையும் படித்து ‘அடக்கடவுளே... இவர்களுக்கு உருப்படியாக சிறுகதை எழுதக்கூடத் தெரியவில்லையே’ என்று வருத்தப்பட்டதன் மூலம்தான் அடுத்ததாக சிறுகதைப் பட்டறை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கக் கூடும். அதற்குப் பின்னால் நானும் இருக்கிறேன் என்றெண்ணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது!

***********************

ண்புடனில் படித்தது...

மல் 78ல் ரோஜாக்களில் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சைக்கோ ராமன் எனப்படும் பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு கொலையாளி பிடிபட்டார். 1988ல் வேலையற்ற இளைஞனாக நடித்த படம் சத்யா வெளியானது. 89-90களில் நமது தேசம் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை சந்தித்தது. 1992ல் இரு சமுகங்களில் நடக்கும் கலவரம் சம்பந்தமான கதையான தேவர் மகன் என்ற படம் வெளியானது. 1993ல் தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் தோன்றின. 94ல் ஃபைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றி ஓடுவதாய் மகாநதியில் காட்டியிருந்தார்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகள் 1996களில் ஏமாற்றி ஓடியது எல்லாரும் அறிந்த ஒன்று.

2000ல் வந்த இந்து-முஸ்லிம் சச்சரவு பற்றிய படமான ஹேராம் வெளியானது, நாடே அதிர்ந்த கோத்ரா கலவரம் அரங்கேறியது, அதற்கு பின்பே. 2004 டிசம்பரில் வந்த பேரலைக்கு பின்பே சுநாமி என்ற வார்த்தை தமிழக மூலை முடுக்கெல்லாம் பரவியது, 2003ல் வந்த அன்பே சிவமில் சுநாமி பற்றி பேசி இருக்கிறார்.

இரட்டை சைக்கோ தொடர் கொலையாளிகள் பற்றிய படமான வேட்டையாடு விளையாடு. 2006ல் வந்த பின்பே மொனீந்தர் & சதீஷ் எனும் சைக்கோ தொடர் கொலையாளிகள் நொய்டாவில் பிடிபட்டனர்.

இதெல்லாம் பரவாயில்லை........

கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படமானதசாவதாரத்தில் அமெரிக்காவில் உலகையே அழிக்கும் ஒரு கிருமி உருவாக்கப்பட்டது போல் கதையமைக்கப்பட்டிருந்தது, இன்று இந்தியாவையே கலங்கடிக்கும் ஸ்வைன் ப்ளூ அமெரிக்காவில் இருந்துதான் பரவியதாம்.

என்ன கொடுமை கமல் இது!

****************************************

இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....?


அதிகமாக கண்ணம்மாவைப் பற்றி பாடிய பாரதியாரைப் புதைத்த இடம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு.

கடைசி காலத்தில் அதிகமாக கிருஷ்ணனைப் பற்றி எழுதிய கண்ணதாசனைப் புதைத்த இடம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு.



.

Tuesday, August 11, 2009

தென்றல் வந்து தீண்டும் போது...

சை மீது எனக்கிருக்கும் ஆர்வம் பற்றியோ, இளையராஜா பற்றியோ எழுத வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆவல். ஆனாலும் அப்படி ஒரு பதிவெழுதினால் எழுதிச் சொல்ல நினைப்பதைவிட எழுதாமல் விடுபவையே மிகுமென்பதால் எழுதாமலே நாள்கடத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த ஒரு பாடலைப் பற்றி கொஞ்சமேனும் எழுதாமல் போனால் நீயெல்லாம் என்னடாவென்று நானே என்னைப் பார்த்துக் கேட்டுக் கொள்வேனென்பதால்....

அவதாரம் படத்தில் இடம்பெற்ற பாடலிது. திரைப் படப்பாடல்களில் என்னுடைய டாப் டென்னைக் கேட்டீர்களானால் இதுதான் நம்பர் 1. அதில் எந்தவித சந்தேகமுமில்லை.

நாசரின் முதல் டைரக்‌ஷன். அவரே நாயகன். நாயகி ரேவதி. கண்தெரியாத நாயகிக்கு வண்ணங்களைப் பற்றிச் சொல்லும் பாடல்.

இளையராஜாவின் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம். கண் தெரியாதவர்கள் கேட்டால்? ண்ங்ளைப் பார்க்கலாம்!

தானத்தந்தம் தானந்தந்தா தானத்தந்தம் தானத்தான என்று ஆரம்பிக்கிறது பெண்களின் கோரஸ். இருமுறை இந்த வரிகள் வரும்போது எப்போது ஆரம்பிக்கிறது என்று நாம் உணராதபோதே ஆரம்பிக்கிறது இசை. இசை வரவர இளையராஜாவும் வருகிறார்.. அவரது குரலில்.

தந்ததன தான தான தான தான்னா தனனனா

தந்ததன தான தான தான தான்னா தனனனா

ஒரு சிறு மூச்சிழுப்புக்குப் பிறகு ராஜா தொடர்கிறார்.

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

தென்றல் வந்து என்று ஆரம்பிக்கும்போதே பீட் ஆரம்பித்துவிடும். ஆனால் மிக மெதுவான-இதமான பீட். மனசுல- நெனப்புல என்ற வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு சின்ன ஆர்க்கஸ்ட்ரைசேஷன் பண்ணியிருப்பார். ப்பா! வாய்ப்பே இல்லை!

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே

கிராமத்தானின் உச்சரிப்போடு ராஜா அந்த நானுஞ்சொன்னேனைப் பாடுவதை மீண்டுமொருமுறைக் கேட்டுப் பாருங்கள்.

சரணம் முடிந்ததுமே இசையா, கோரஸா என்பது தெரியாதவண்ணம் தும்தும்தும்தும் என்று ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து ஓஓஓ என்றும் பெண்களின் கோரஸ் தொடரும். கூடவே வயலினும் வர பல்லவிக்கும் சரணத்திற்குமான இடைவெளியில் கோரஸை முழுவதும் பயன்படுத்தியிருப்பார்.

பல்லவியில் சேர்கிறார் ஜானகி!

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட நீரோட இந்த உலகம் அதுபோல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

முதல் பல்லவிக்கு முன் கோரஸோடு இசையையும் கலந்த ராஜா, இந்த இரண்டாவது பல்லவிக்கு முன்னான BGMல் இசையை அதிகமாகக் கொடுக்கிறார்.

ஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அலபோலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா

கிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

இதில் கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே என்று பாடும்போது ராஜாவின் குரலில் வரும் எள்ளலை கவனியுங்கள்.

முழுப்பாடலின் வரிகள்:-

ராஜா:தந்ததன தான தான தான தான்னா தனனனா

தந்ததன தான தான தான தான்னா தனனனா

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே

ஜானகி: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது

ஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

ராஜா: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஜானகி: ஓட நீரோட இந்த உலகம் அதுபோல

ராஜா: ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல

ஜானகி: நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே

ராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ராஜா:ஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஜானகி: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அலபோல அழகெல்லாம் கோலம் போடுது

ராஜா:குயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா

ஜானகி: கிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா

ராஜா: கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

ஜானகி:: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ராஜா: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

ஜானகி: வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ராஜா: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

ஜானகி: உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

ராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஜானகி: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

எந்த இடத்தில் அசர வைக்கும் அடி இல்லை. உச்சஸ்தாயி இல்லை. மென்மையாக மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தாற்போல இசையும் வரிகளும் பாடலும் அமைந்தது இந்தப் பாடலின் சிறப்பு!


கடைசிவரும்போது “உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்

பொன்னம்மா சின்னக்கண்ணே” என்று ராஜா சரணத்தில் பாடிய வரிகளை கண்தெரியாத நாயகி பாடும்போது “உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன” என்று மாற்றி எழுதி வாங்கிய ராஜாவும், எழுதிய வாலியும் வெற்றிக்கூட்டணியல்லாமல் வேறென்ன?

இது என் நம்பர் 1 பாடலென்றால் நம்பர் டூ? – இங்கே போய்ப் பாருங்கள்!

இந்தப் பாடல் ராஜாவின் LIVE CONCERTல் காண இங்கே க்ளிக்குங்கள்.



.

Saturday, August 8, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி - முடிவுகள்

ல்லாரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகிவிட்டன!

பங்குபெற்ற 250 பேருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்.

இறுதிக்கட்டம் வரை வந்த 37 பேருக்கும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் வாழ்த்துகள்.

வெற்றி பெற்ற 20 பேருக்கும்...

வாழ்த்திருக்கட்டும்.. எப்ப ட்ரீட்? எங்க ட்ரீட்?


வெற்றி விபரங்களை ரசிக்க, ருசிக்க இங்கே செல்லுங்கள்.


உரையாடல் அமைப்பினர் திங்களன்று அறிவிக்கப்போகும் அடுத்த அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருப்போம்! ஊர்கூடித் தேரிழுப்போம்!!


.

Wednesday, August 5, 2009

எப்போதோ எழுதி வைத்த கவிதைகள்

சேம் பின்ச்

என் உடை நிறமும்
உன் உடை நிறமும்
ஒன்றென சாக்லெட் கேட்கிறது
அகதி முகாம் குழந்தை.

****************

அவர்கள் அழுகையை
உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
காரணம்
விமானம் பறக்கும்போது
மேலே பார்த்தால்
உங்களுக்கு சுவாரஸ்யம்
அவர்களுக்கு மரணபயம்.

**********************

உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.

*********************

அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.

*********************
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.

******************
எங்கள் எல்லாருடைய
ரேஷன் கார்டிலும்
இருந்தது ஒரு பெயர்.

‘இறந்துவிட்டார்
எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’
என்கிறார்கள்.

இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.

போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்.

*************************



தீபாவளிக்கு
வெடித்த வெடிகுண்டை
பீதியுடன் பார்க்கிறது
அகதிமுகாம் குழந்தை.

அவர்களுக்கு
அருகில் இருப்பவர்களாவது
வெடிக்காமல் கொண்டாடுவோம்.

******************
‘நீங்க தமிழா’ என்று
அகதிமுகாமிலிருந்து
ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு
பதில் வந்தது
‘யெஸ்’என்று.

********************
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.

இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

*************************



ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.

*******************

நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.

********************


இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.

********************************************



.

Tuesday, August 4, 2009

LOVE AAJ KAL - REVIEW



ஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்!

ஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

மீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு. (இதுவும் தீபிகா படுகோனே தான் என்று என் நண்பர் பெட் வைத்திருக்கிறார். யாராவது க்ளியர் பண்ணுங்கப்பா...)

இங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.

திருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்!)

ஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க!


இயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்!

வசனங்கள் - அற்புதம்!

உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!


.

Saturday, August 1, 2009

Hello Dear...

எனக்கு வந்த ஒரு கடிதம்............


Hello Dear


(ann_5owen@yahoo.com)

Greetings,

My name is Ann,

i saw your profile today at
(www.my-matrimony.com)and became intrested in you,i will also like to know you the more,and i want you to send an email to my email address so i can give you my picture for you to know whom i am.Here is my email address (ann_5owen@yahoo.com) i believe we can move from here!

(Remember the distance or colour does not matter but love matters a lot in life)

I will be happy to seeing a good responds from you

Thanks and remain blessed.

Your's in love Ann.

My email address (ann_5owen@yahoo.com


.

என்ன கொடுமைங்க இது?


.

சரி... ஒரு மீள் பதிவு...

************************************************

சமூகக் கடமை



"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு?"

"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

"ஸ்ரீராம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்"

"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம்!. என் blog எப்படி இருந்துச்சுண்ணா?"

"............"

"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க?"

"சங்கடப்படமாட்டியே?"

"சொல்லுங்கண்ணா.."

"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்"

"புரியலண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும்? நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது? அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது? அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம்? எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா? இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா? இது சரியா? இதை மாத்தப்போறது யாரு? நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்"

"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா..."

"ச்சே.. அப்படியெல்லாம் இல்லண்ணா.."

"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா?"

"என்னது திடீர்னு கிளம்பறீங்க? சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்! லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது! ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா.


(ஒரு வருடத்துக்கு முன்.. நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதியது)


.