சேம் பின்ச்
என் உடை நிறமும்
உன் உடை நிறமும்
ஒன்றென சாக்லெட் கேட்கிறது
அகதி முகாம் குழந்தை.
****************
அவர்கள் அழுகையை
உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
காரணம்
விமானம் பறக்கும்போது
மேலே பார்த்தால்
உங்களுக்கு சுவாரஸ்யம்
அவர்களுக்கு மரணபயம்.
**********************
உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.
*********************
அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.
*********************
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.
******************
எங்கள் எல்லாருடைய
ரேஷன் கார்டிலும்
இருந்தது ஒரு பெயர்.
‘இறந்துவிட்டார்
எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’
என்கிறார்கள்.
இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.
போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்.
*************************
தீபாவளிக்கு
வெடித்த வெடிகுண்டை
பீதியுடன் பார்க்கிறது
அகதிமுகாம் குழந்தை.
அவர்களுக்கு
அருகில் இருப்பவர்களாவது
வெடிக்காமல் கொண்டாடுவோம்.
******************
‘நீங்க தமிழா’ என்று
அகதிமுகாமிலிருந்து
ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு
பதில் வந்தது
‘யெஸ்’என்று.
********************
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.
இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.
*************************
ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.
*******************
நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.
********************
இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.
********************************************
.
42 comments:
ethuvum solla iyalavillai...
/இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து./
யாராவது வன்னி வதைமுகாமிலிருந்து அஞ்சல் அனுப்பி நேயர்விருப்பமாகக் கவிதை கேட்டார்களா என்ன?
ஆச்சரியப்பட ஏதுமில்லை.
உங்களுக்குக் கவிதைக்குக் கவிதை. பதிவுக்குப் பாடுபொருள்.
இந்தியாவிலும் எவ்விதச்சிக்கலும் தரமாட்டார்கள். புரட்சியின் சிகரமே வாழ்க. நெகிழ்ந்து போகிறேன்.
இப்படியே ஒரு முப்பது எழுதினீர்களென்றால், சூட்டோடு சூடாக அச்சிட்டு விற்கப் பதிப்பகங்களுக்கும் கண்காட்சிகளுக்குமா தமிழ்நாட்டிலே பஞ்சம்?
கவிதை என்று பார்க்கையில் மிகவும் அருமை
வரிகளில் தெரியும் வலி
ஒன்றும் சொல்ல விடவில்லை ...
:(
காலம் தாழ்ந்து வந்தாலும், காலத்திற்கு நிற்கும் கவிதைகள்.
வலி புரிகிறது.
நெகிழவைக்கும், தலைகுனிய வைக்கும் கவிதைகள்.
//போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்//
These words are excellent.
//அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.//
படித்தேன் - வலிக்கிறது
//நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.//
தல, போதும். மனசுல குத்துது.
ம்ம்
அனைத்தும் அருமை.
உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.
ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.
'வலி' மிகுந்த வரிகள்
வெட்கப் படுகின்றேன்...!
எல்லாமே மனசைத் தொட்டது பரிசல். என்ன சொல்லனு தெரியல.
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.
இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று. //
இந்த வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டன.
//ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.//
உருக்கமான வரிகள் பரிசல்.. :-(
எல்லா வரிகளுக்கு மனதை வறுத்தெடுக்கும் வரிகளாக இருக்கின்றன. ஆனாலும் அவர்களுக்காக நம்மால் என்ன பண்ண முடிகிறது. இது போல கவிதை எழுதவும், அதுக்கு விமர்சனம் செய்யவும் தான் முடிகிறது.
ம்.ப்ச்.
வரி வரியாய் வலி.இயலாமை இன்னொரு வலி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
வலியும், இயலாமையும் நிறைந்த வரிகள்
வலி மிகுந்த வரிகள். வெட்கப்படுவதை தவிர என்ன செய்ய
:( வேறென்ன சொல்ல?
கவிதைகள் அனைத்தும் நெகிழச் செய்வனவாய் உள்ளன!
உணர்வுள்ளக் கவிதை, மனதுக்குள் செல்லடிப்பதாய் உணர்ந்தேன்!
இவர்களுக்கு என் பங்கு என்ன..?
"உச்" கொட்ட மட்டுமே முடிகிறது.
என்ன சார்? அமெச்சூராக இருக்கே. எதிர்பார்த்து வந்து ஏமாந்த மாதிரி ஆகிப்போச்சே!
வேதனையான கவிதைகள்.
மௌனம் கூட அலறுவ்து போலிருக்கிறது படித்தவுடன்.
வலிகள் நிறைந்த வரிகள்
கவிதைச்சுவையில் மகிழமுடியாத படிக்கு நமது சோகத்தையே எழுதியிருக்கிறீர்கள்.
//இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.//
நறுக்
http://nilamagal-nila.blogspot.com/2009/03/blog-post_16.html
வலியை விளக்கும் போது, அதை பாராட்ட விரும்பவில்லை.சில வரிகளை படிக்கும் போது, உள்ளத்தில் முள் தைக்கிற உணர்வு...
நாங்களும் ரவுடிதான்னு எப்படி காட்டுறது,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எங்கய்யா இருந்தீங்க ? இவ்ளோ நான் ?
பரிசல் > ஏன், வீட்லதான் ?
கவிதை உண்மையிலேயே நல்லாருக்கு ஆமாம் சொல்லிப்புட்டன்
:((
ப்ச்
காலம் தாழ்ந்து வந்தாலும் நல்ல கவிதை.
இது போல ஈழ இனப்படுகொலை பற்றி கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார், அது பின்வருமாறு...
இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம் இருட்டுக் காடுகளுக்கு வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள் சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம் அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்
இதோ தேவவேடம் போட்ட சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!
இதோ இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!
இதோ சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில் ராகப் பிழை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்!
இதோ வெள்ளைக் கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை உருவிக் கொண்டிருக்கிறார்கள்!
அன்று அசோகன் அனுப்பிய போதிமரக் கன்று ஆயுதங்கள் பூக்கின்றது, இன்று
அசோகச் சக்கரத்தின் குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது!
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!
-கவிக்கோ அப்துல் ரகுமான்
எப்ப எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு!!!
எப்ப எழுதினா என்ன பாஸ்..?
இப்பவும் வீரியம் இருக்கு!!!
உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.
இந்த வரிகளில் நான்
வீழ்ந்துவிட்டேன்
தமிழ்நாட்டில் நிறையப்பேர்
செம்மொழி என்றும், நாங்களெல்லாம்
பச்சைத் தமிழன் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
உண்மையான தமிழன் யாரென்று தெரியாமல்
உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.
இந்த வரிகளில் நான்
வீழ்ந்துவிட்டேன்
தமிழ்நாட்டில் நிறையப்பேர்
செம்மொழி என்றும், நாங்களெல்லாம்
பச்சைத் தமிழன் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
உண்மையான தமிழன் யாரென்று தெரியாமல்
கண்கள் கலங்கி விட்டன
நன்றிகள் உங்களுக்கு!
Post a Comment