Monday, August 31, 2009
நானும் என் பேனா மோகமும்!
எல்லோருக்கும் போலவே எனக்கும் முதன் முதலாக பள்ளிக்கூடம் படிக்கும்போது (அல்லது போகும்போது) பலப்பம் எனப்படும் சிலேட்டுக் குச்சியும் சிலேட்டும்தான் தரப்பட்டது. ஒரு நீளமான சிலேட்டுக் குச்சி ஒன்றை வாங்கி, அதை நான்காக உடைத்து ஒன்றை என்னிடம் தந்தார் என் தந்தை. முழுசாத் தந்தா என்ன என்று நினைத்திருக்கக் கூடும் நான் அப்போது. எழுதுபொருட்கள் மீது எனக்கிருந்த ஆசை அத்தகையது.
நினைவடுக்குகளில் விரல்களால் துழாவும்போது ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. எப்போதோ ஒரு முறை வெள்ளை நிற ஒல்லியான - நீளமான - முழு சிலேட்டுக் குச்சி ஒன்றை தந்தையிடம் சொல்லி (ஓரியாடி?) வாங்கி பத்திரமாக பள்ளிக்குக் கொண்டு சென்று, பெருமையாக எல்லாருக்கும் முன் எழுதி, எழுதி பார்வைப் பொருளாக்கிப் பெருமை பட்டுக் கொண்டிருந்தபோது சுப்புலட்சுமி டீச்சர் “இவ்ளோ பெரிசா வெச்சு எழுதாதே” என்று வெடுக்கெனப் பிடுங்கி மூன்று துண்டுகளாக்கி ஒன்றை என்னிடம் கொடுத்து ”ரெண்டை பத்திரமா பையில வெச்சுக்க” என்றபோது துடிக்கும் உதடுகளோடு, வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டதும், அப்போது ஆனந்தி என்னை சிரிப்பாக பார்த்த பார்வையும் இன்னும் நினைவிலிருக்கிறது.
ஐந்தாவது வகுப்பில்தான் பேனா அனுமதி. அதுவும் பால் பாய்ண்ட் பேனாக்களுக்கு அனுமதியில்லை. இங்க் பேனா என்றால் கேமலின் பேனாதான் உச்சம். அதி உச்ச நட்சத்திரம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்த ஹீரோ பேனா!
கேமலின் பேனா வாங்குமளவெல்லாம் வசதியிருக்கவில்லை அப்போது. வேறேதோ (வாட்டர்மென் என்று ஞாபகம்) பேனாதான் வாங்கித் தரப்பட்டது எனக்கு. கேமலின் பேனாவில் மூடியின் முடிவில் சில்வர் கவர் செய்யப்பட்ட பேனாவொன்று தான் எப்போதும் என் தந்தை வைத்திருப்பார். அதன் மீது எனக்கு அலாதி பிரியம். ஏழாவது வகுப்பு போனபோதுதான் அதே போன்றவொன்றை வாங்கித்தந்தார் அவர்.
அப்போதும் ஹீரோ பேனா மீதான மோகம் அப்படியேதான் இருந்தது. ‘அதெல்லாம் நமக்கு கிடைக்காதுப்பா’ என்று அந்த ஆசையை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். அதிலும் எட்டாவது படிக்கும்போது சரவணமூர்த்தி என்ற மாணவன் ஹீரோ பேனாவிலேயே மேலும் கீழும் தங்கமாய் ஜொலிக்கும் ஒரு பேனாவை வாங்கி வந்து மாணவர் மத்தியில் திடீர் பிரபலமனான். எங்கோ வெளிநாட்டில் வசிக்கும் அவனது சொந்தக்காரர் வாங்கி வந்தது என்று சொன்னதாக ஞாபகம்.
ஒன்பதாவது படிக்கும்போது என் மாமா ஒருவர் எனக்கு ஹீரோ பேனா பரிசாய் அளித்தார். (எதற்கு என்று நினைவிலில்லை) அந்த ஒரு வாரத்துக்கு என் எழுத்து அழகானது. என் வீட்டுப் பாடங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. அடித்தல் திருத்தல்கள் குறைந்தன. எல்லாம் பேனா மீதான ஆசைதான்.
அதன்பிறகு பல எழுதுகோல்கள் பற்றி கேள்விப்பட்டு, சிலதை வாங்கவும் செய்திருக்கிறேன். என் நண்பனொருவன், தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு ஃபாரின் பேனா இருப்பதாகவும் அதில் ஒரு பெண்ணின் படம் இருக்குமெனவும், மை குறையக் குறைய அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை!
ஒருமுறை விடுமுறைக்கு சென்னையில் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னோடு என் கஸினும் இருந்தான். என் உறவினர் ஒரு பேனாவையும், பாக்கெட் கால்குலேட்டரையும் வாங்கி வந்து யாருக்கு எது வேணும்?’ என்று கேட்டார். என் கஸின் அவசரமாக ஓடி “எனக்கு கால்குலேட்டர்” என்று எடுத்துக் கொண்டான். எனக்கு சிரிப்பாக வந்தது.. எனக்கு பேனாதாண்டா பிடிக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறே அதை எடுத்துக் கொண்டேன்.
பலவகையான பேனாக்களை வாங்குவதில் இப்போதும் எனக்கு ஆர்வம் அதிகம். மூன்று நிறங்களில் எழுதும் பால்பாய்ண்ட் பேனா ஒன்றை வெகுகாலமாக வைத்திருந்தேன். அதன் சிறப்பு என்னவென்றால் பேனாவின் மேலே பக்கவாட்டில் கருப்பு, சிவப்பு, நீலம் என புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்தப் புள்ளியை நீங்கள் உங்கள் எதிர் பக்கம் நோக்கிவைத்து எழுதுகிறீர்களோ அந்த நிறத்தில் எழுதும். அதாவது நீலத்தில் எழுத நீலப் புள்ளி உங்களுக்கு எதிரிலிருப்பருக்குத் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும். (இதுபோன்ற டெக்னிகலான பேனாக்களை பிரித்து மேய்வதிலும் விருப்பமுண்டு.)
பேனா இரவல் வாங்குவதும், கொடுப்பதும் நமது தீராத வியாதிகளில் ஒன்று. மூடியோடு பேனாவைக் கொடுத்தால் திருப்பித்தர/திரும்ப வாங்க மறந்துவிட நேர்கிறதென்பதால் மூடியை கழட்டி வைத்துக் கொண்டு பேனாவை இரவல் கொடுக்கும் வழக்கம் உடைய ஒருத்தன் வீட்டில்- அப்படிக் கொடுத்துக் கொடுத்து – மூடிகள் மட்டும் நிறைய சேர்ந்ததென்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியும் யாரும் திருப்பித் தருவதில்லையாம்! நான் பேனாவை இரவல் வாங்கினாலோ, அல்லது யாராவது மறந்துவிட்டுச் சென்றாலோ கூப்பிட்டுக் கொடுத்துவிடுவது வழக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் அதிகமான என் பேனாக்கள் தொலைவதில்லை என்று ஒரு நம்பிக்கை! அதேசமயம் யாராவது வைத்திருக்கும் பேனா மிகப் பிடித்தமானதாக இருந்தால் ‘வெச்சுக்கட்டுமா’ என்று கேட்டு எடுத்துக் கொள்ளவும் தயங்கியதில்லை!
என்னிடம் கையெழுத்து (AUTOGRAPH அல்ல. அலுவல் ரீதியான SIGN!) கேட்டு வருபவர்கள் நல்ல பேனாவைத்திருந்தால் சிரித்தபடி போட்டுக் கொடுக்கிறேன். கையெழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பேனாவை ஒருமுறை உற்றுப் பார்த்தால் “வெச்சுக்கோங்க சார்” என்று சொல்லப்பட்டிருக்கிறேன். (ஆனால் சிரித்தபடி திருப்பிக் கொடுத்துவிடுவேன்) அப்படியொரு பேனா மோகம்.
நான்கைந்து முறை எனக்கு Parker பேனா பரிசாய் வந்திருக்கிறது. ஆனால் அதன் பெயருக்கும், புகழுக்கும் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவே இல்லை. அப்படியொன்றும் எழுதினால் மகிழ்ச்சியாயிருக்குமளவு ஒன்றும் நன்றாக எழுதுகிற பேனாவல்ல அது. பார்க்கரில் ஒரே ஒரு மாடல் மட்டும் ஓரளவு வழுக்கியவாறு எழுதும். அதற்கு Uniball எவ்வளவோ மேல்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL!) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!
உபரித்தகவல்: இப்போது நான் உபயோகித்துவருவது REYNOLS நிறுவனத்தின் TRIMAX எனும் Fluid Ink பேனா. தொடர்ந்து மூன்று பேனா வாங்கிவிட்டேன். அவ்வளவு பிடித்திருக்கிறது!
.
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
me the 1st
நான் சின்ன வயசில் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து ஒரு ஜெல் பேனா வாங்கினேன் .... அப்பொழுது எல்லாம் ஜெல் பேனா பிரபலம் இல்லை ; ரொம்ப விலை ஜாஸ்தி ...... 40 அல்லது 50 ரூபாய் இருக்கும் .....
அவ்வளவு காசு கூடுது பேனா வாங்கினதுக்கு வீட்டில் செம திட்டு வாங்கினேன்
"அப்போதும் ஹீரோ பேனா மீதான மோகம் அப்படியேதான் இருந்தது. "
உண்மையை சொல்ல வேண்டுமானால் .... எனக்கு இன்று வரைக்கும் ஹீரோ பேனாவில் எப்படி ink போடுவது என்று தெரியாது .... அதனால் நான் அந்த பக்கமே போனது இல்லை
"இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL!) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!"
நண்பர்களுக்கு பேனா தர கூடாது என்று ஒரு நம்பிக்கை இருக்கு சார் ....
உங்களை மாதிரி அறிவாளிங்க எல்லாம் பேனாவை தான் விரும்புவாங்க .... இது நீங்க சொல்லி தான் தெரிய வேண்டுமா ????
சார் ...... சோழர் காலத்து பேனா எங்கே கிடைக்கும் என்று தெரியுமா ????
அப்படியே திருவள்ளுவர் மாதிரியே உணர்ந்து இருக்கீங்க .......
என்ன அவருக்கு எழுத்தாணி ....உங்களுக்கு பேனா
5000 rupaai pena ontrai parthen sir... athai neenga vangi enakku gift yaga thanga
@ டம்பீமேவீ
சரி
@ டம்பீமேவீ
சின்ன வயசுலன்னா.. பத்துக்குள்ளயா.. அந்த வயசுல 50 ரூவா ஓவர்தான்! நான் இப்ப 50 ரூவா பேனா வாங்கினாலும் வீட்ல திட்றாங்கப்பா!
@ டம்பீமேவீ
இந்த பாய்ண்டைக் குறிப்பிட மறந்துட்டேன். ஹீரோ பேனால முழுசா இங்க் நிரப்பறதும் முடியாத ஒரு கலை!
@ டம்பீமேவீ
அதெல்லாம் சும்மா.. எனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஏதாவது ஸ்பெஷலைஸ்ட் பேனாதான் தருவேன். வலையுலகுக்கு வந்து நான் முதன்முதல்ல ஒருத்தருக்கு குடுத்தது பேனாதான். நட்பு அப்படியே இன்னும் தொடருது!
@ டம்பீமேவீ
அப்டியா?
@ டம்பீமேவீ
தெரியாதுபா.. வாங்கிக்குடுங்களேன்..
@ டம்பீமேவீ
ஐய!
@ டம்பீமேவீ
ம்ஹூம்! அத நீங்க எனக்கு செய்யுங்க!
டம்பி மேவீ அண்ணா
முடிச்சிட்டீங்களா இன்னும் பாக்கி இருக்கா :))))
நான் யாரைவது பார்க்க போனால் .... புத்தங்கள் பரிசாய் தருவேன் ..... பேனாவை எல்லாம் தர மாட்டேன் .... பேனா வாங்கினால் எனக்கு பிறருக்கு தர மனசு வராது
/அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை!//
நான் பாத்திருக்கிறேன்.
"நிகழ்காலத்தில்... said...
டம்பி மேவீ அண்ணா
முடிச்சிட்டீங்களா இன்னும் பாக்கி இருக்கா :))))"
profile ல உங்க வயசை பார்த்தேன்..... நீங்க தான் எனக்கு அண்ணா.....
(ச்சே ..... இந்த அங்கிள்கள் தொல்லை தாங்க முடியல ... ஹி ஹி ஹி ஹி)
"Cable Sankar said...
/அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை!//
நான் பாத்திருக்கிறேன்."
அதற்க்கு சிங்கப்பூர் பேனா என்று பெயர் .....
யாருங்க அது ..... எது கிடைத்தாலும் அதில் ஒரு தத்துவத்தை சொல்லிட்டு போறாங்க .... முடியல ....
சார் உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு
சிலேட்டுப்பலப்பம் நான் நிறைய தின்னிருக்கேன். அதோட வாசமும், ருசியும் தனி. பின்னாடி தான் தெரிய வந்தது கால்சியம் கம்மியா இருந்தா அவங்க எல்லாம் பலப்பம் சாப்பிடுவாங்கன்னு.
எனக்கும் பேனா பிடிக்கும். ஆனா, இந்த அளவுக்கு இல்லப்பா.. :))
//சின்ன அம்மிணி said...
சிலேட்டுப்பலப்பம் நான் நிறைய தின்னிருக்கேன். அதோட வாசமும், ருசியும் தனி. பின்னாடி தான் தெரிய வந்தது கால்சியம் கம்மியா இருந்தா அவங்க எல்லாம் பலப்பம் சாப்பிடுவாங்கன்னு.//
ரிப்பீட்டு.. ;))
1. எத்தினி விஷயத்துக்குதான் சேம் பிளட் சொல்வது அல்லது நினைத்துக்கொள்வது? குறைந்த பட்சம் கறுப்பு நிறத்துக்காவது சேம் பிளட் சொல்லலைன்னா தூக்கம் வராது.
2. வயசு கரெக்டா 36 சரியா.?
3. இன்னிக்கு நம்ப கடையில் விசேஷம், தவறாமல் வரவும். இங்கே விளம்பரம் போட்டுக்கறேன்.. அனைவரும் வாங்க..
பேனா பிடிச்சதால தான் 'எழுத்தும்' பிடிச்சிருக்கு.
ம்ம். ஹீரோ பேனா? அப்பவே சினிமா மோகம்? ரைட்டு
நானும் பல்பம், அதான் சிலேட்டு குச்சி சாப்பிடற ஆளுதான் (நோட்: சாப்பிடற, சாப்பிட்ட இல்ல)
@ நிகழ்காலத்தில்
நல்லா கேளுங்க சிவா..
@ கேபிள் சங்கர்
ஐ! வாங்கி வைங்க... 13ம்தேதி பார்க்கலாம்!
@ சின்ன அம்மணி
அப்படியா சேதி!
@ ஸ்ரீமதி
நன்றிப்பா!
@ ஆதி
யாருய்யா ஒன்ன வயசெல்லாம் கேட்டாங்க?
@ வெயிலான்
ரொம்ப புகழாதீங்க எசமான்.. கூச்சமா இருக்கு...
@ கார்க்கி
எதுக்காக சாப்பிற சகா?
"2. வயசு கரெக்டா 36 சரியா.?"
app profile la irukkira photo chinna vayasila yeduthathaa???
சிலேட்டு குச்சிய மொத தடவ எடுக்கும் போதே முடிவு பண்ணிட்டிங்க போல மரண மொக்க போடறதுன்னு...
எனக்கு ஹீரோ பேனா பிடிக்காது. இங்க் ஊத்த சங்கடபட்டுகிட்டே அது உபயோகிக்கறது இல்லை. இப்ப வரைக்கும் பைலட் பேனாதான் :). அதுலதான் எழுத்து ஒரளவுக்கு நல்லா இருக்கறது போல எனக்கு ஒரு நினைப்பு
எனக்கு ஒரு பேனா ஒரு மாதம் சட்டை பையில் தங்குவதே கடினம், எப்படியாவது யாரிடமாவது போய் விடும் திரும்ப கிடைக்காது.
நீங்கள் கிரி வழியாக எனக்கு அளித்த பேனா இன்னும் சட்டை பையில் இருப்பது பெரும் வியப்பு தான்.
@ இளவட்டம்
பி.போ.இ!
@ தாரணிபிரியா
அதுவும் நல்லா எழுதும்..
@ கோவி.கண்ணன்
அந்த மாதிரி பேனாக்களுக்கு ரீஃபில் கிடைக்கறது கஷ்டமான சமாச்சாரமாச்சே!
உங்க பரிசல கொஞ்சம் நம்ம பக்கமும் ஓட்டுறது>>>!
பேனாக்களை விரும்புகிறவர்கள்.. எப்பொழுதும் கூட உள்ளவர்களை சந்தோஷமான வைத்திருப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்! வாழ்க உங்களது பேனா மோகம்.. வளர்க உங்களது அன்பு!! (அந்த அன்புல எனக்கும் கொஞ்சம் கொடுங்க பாஸ்!!)
Pierre Cardin ஸ்டைல் ரோலர் பேனா எனக்கு பிடித்த ஒன்று! சந்திக்கும்போது உங்களுக்கு நிச்சயம் உண்டு!
உங்கள் கவிதைகள் இந்த வார விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்
1) படைப்புகளை பேனாவால் பேப்பரி எழுதி போஸ்ட் செய்கிறீர்களா இல்லை யுனிகோடில் தமிழில் மின்னஞ்சலில் அனுப்புகிறீர்களா ? பணம் சரியாக அனுப்புகின்றனரா ?
2) உங்கள் கவிதை வெளியான பக்கத்தில் லே அவுட்டில் ஒரு பெண்ணின் படம் வெளியாகியுள்ளதே ? அந்தப் படத்தை ஒரு 5 நிமிஷம் தொடர்ந்து பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றியது :-)
@ பிரபா
வர்றேன் நண்பா!
@ கலையரசன்
Pierre Cardin ஆ? எப்ப பாஸ் வர்றீங்க?
@ Sambar Vadai
உங்கள் கவிதைகள் இந்த வார விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்
நன்றி!
1) படைப்புகளை பேனாவால் பேப்பரி எழுதி போஸ்ட் செய்கிறீர்களா இல்லை யுனிகோடில் தமிழில் மின்னஞ்சலில் அனுப்புகிறீர்களா ?
மின்னஞ்சல் - யுனிகோட்.
பணம் சரியாக அனுப்புகின்றனரா ?
மிகச் சரியாக.
2) உங்கள் கவிதை வெளியான பக்கத்தில் லே அவுட்டில் ஒரு பெண்ணின் படம் வெளியாகியுள்ளதே ? அந்தப் படத்தை ஒரு 5 நிமிஷம் தொடர்ந்து பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றியது :-)
அடுத்த ஐந்து நிமிடமும் உற்றுப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது.
பேனா பத்தி ஒரு தனி பதிவே போடலாம்.
அந்தளவிற்க்கு நினைவலைகளை கிளப்பவல்லதாயிருக்கிறது இந்த பதிவு.
மொதல்லயே தெரிஞ்சிருந்தா ஒரு கோணி முழுக்க பேனா கொனர்ந்திருப்பேனே........
பதிவை படிக்கும் பொழுது பள்ளிகூடத்துல பேனாக்கள் சுட்ட நெனைவுகள் வந்து சென்றது.
ஹீரோ பேனா வைத்திருப்பவர்களை ஹீரோ வொர்ஷிப் செய்த அனுபவம் எனக்கும் உண்டு.
@ கும்க்கி
இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போகல தோழரே!
@ ஜானிவாக்கர்
நன்றி (செம கிக்கான பேரு தல!)
@ அறிவிலி
வெரிகுட்!
பேனா பதிவு நல்லாருக்கு..நானும் ஒரு பேனா பைத்தியம்! நம் கையெழுத்தை தீர்மானிப்பது பேனாக்கள்தானே?
மீண்டும் ஆச்சரியம். பள்ளி நாட்கள் வரை அனைத்தும் பொருந்துகிறது குறிப்பாக மாமா கொடுக்கும் பேனா, camilin, Hero, Uniball. சென்ற முறை கூட என் பெண்ணிற்கு Hero & Uniball தான் வாங்கி கொடுத்தேன்.
பள்ளி நாட்கள், நண்பர் வட்டம், பிடித்த சினிமா உட்பட (அன்பே சிவம்) இசை (இளையராஜா) இன்னும் எவ்வளவோ.
நான் எழுதாத என்னுடைய டைரி உங்களிடம் இருப்பதாக உணர்கிறேன்.
இந்த பேனா மோகம் போன ஜெனரேசன் எல்லாருக்கும் ஒன்னாதான் இருக்கும் போல.இப்ப உள்ள பால் பாயிண்ட்டுக்கு புரியாது இந்த கதை எல்லாம்.
இதுவரை என்னிடம் கடைசி வரை நிலைத்த பேனாக்கள் ரொம்ப குறைவு..
கல்லூரியில் படிக்கும்போது நிறைய ball-point பேனாக்களை ஆட்டைய போட்டுருக்கேன்.. இப்போ என்னிடம்..
அன்பின் கிருஷ்ணா
வழக்கமாக நான் ரொம்ப லேட்டா கமெண்ட் போடுவதால், உங்க பதில் கிடைப்பதில்லை (அதுக்குள்ள அடுத்த பதிவுக்கு போயிடறீங்க - நான் அவ்வளவு ஸ்பீடு)
நானும் ஒரு பேனா பைத்தியம் (ஷைலஜா அக்கா நீங்களுமா??)
எனக்கும் Hero பேனா பிடித்தது, ஆனால் அந்த இங்க் போடும் மேட்டரில் பிடிக்காமல் போனது.
சில வருடங்களாக என்னுடைய சாய்ஸ் Pierre Cardin Jotter பேனாதான். refill தீர்ந்து போனால், camlin bold black refill தான்.
எனக்கு பேனாவும் எழுத்துக்களும் குண்டாக இருக்க வேண்டும், உங்களுக்கும் அது பிடித்து இருந்தால், Pierre cardin உபயோகித்துப் பார்க்கலாம்.
இந்தியா வரும்போது ஒரு பேனா வாங்கி வருகிறேன்..
(நான் பேனா வாங்குவது இந்தியாவில்தான்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
@ ஷைலஜா
கரெக்ட்!
@ ரத்தினமுத்து
//நான் எழுதாத என்னுடைய டைரி உங்களிடம் இருப்பதாக உணர்கிறேன்.//
நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்!
@ சங்கரராம்
இந்தத் தலைமுறையை பால்பாய்ண்ட் என்று விளித்தது பிடித்திருக்கிறது!
@ பட்டிக்காட்டான்
அவரா நீங்க?
@ ஸ்ரீராம்
எல்லாரும் எனக்கு ஒரே பேனாதான் வாங்கித்தருவீங்க போல.. இதுக்கு முன்னாடி ஒருத்தரும் (கலையரசன்) Pierre Cardin தான் தர்றதா சொன்னாரு!
கிருஷ்ணா, என்னோட சாய்ஸ் pierre Cardin தான், ஆனா அதை நான் இங்கே US ல பார்த்தது இல்ல, இங்கிருந்து வாங்கி வந்தால், வேற பேனா வாக இருக்கும், அங்கு வந்து வாங்கினால் கண்ணும் கையும் தன்னிச்சையாக அந்த பிராண்டுக்குத்தான் செல்லும்.
NOt for Publishing
Krishna
உங்களுக்கு ஏதேனும் preference இருந்தால் தயங்காமல் nsriram73@gmail.com க்கு தனி மடலிடவும், எனக்கு எப்போதுமே surprise gift இல் நம்பிக்கை இருந்ததில்லை, விரும்பும் பொருளைக் சொல்லுமாறு கேட்டு விடுவேன்...
எனக்கும் பேனாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.( பைலட் பேனா ரொம்ப......)அதிலும் இங்க பேனாக்கள் மீது தனிக் காதல்.கல்லூரி சேர்ந்த பின் தான் பால் பாய்ண்ட் பேனாவே பயன் படுத்த ஆரம்பித்தேன். இன்றும் வித விதமான பேனாக்கள் என்னிடம் உண்டு.போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெறும் போது அது பேனாவாய் இருப்பின் மனது இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்ளும்.இந்தப் பதிவு என் காதலை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தி விட்டது!.......நன்றி பரிசல்!
நல்ல நினைவுணா..
இன்னிக்கு இந்த போனாவே இல்லாம, எவ்வளவோ இடுகை எழுதுறோம்..
பயங்கரமான மோகம் தான். பேனாவைப் பற்றி சொல்லி பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்துட்டீங்க. நல்லாருக்கு பரிசல்.
Nice
"இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL!) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!"
Post a Comment