
இந்தக் காமன்மேனுக்கும், கமலஹாசனின் காமன்மேனுக்கும் சம்பந்தமில்லை. இவர் சம்பளத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாமான்யன். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஹீரோவாக ஆகிவிடுவார். அரசியல், சினிமா, விளையாட்டு, வாணிகம் என்று எந்த டாபிக் எடுத்தாலும், தெரிந்ததையோ தெரியாததையோ தைரியமாகப் பேசி எதிராளியை சமாளிப்பதில் வல்லவர்.
இந்த வாரம் இவரைப் பற்றிய 25 விஷயங்கள்...
************************
எந்த ஒரு அவசர வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும் சரி, ஐந்துபேரைக் கொண்ட - ‘கூட்டம்’ மாதிரியாக - ஏதாவது சாலையில் தென்பட்டால் நின்று வேடிக்கை பார்த்துப் போவது இவரின் தலையாய பழக்கம். என்னவென்று தெரிந்துகொண்டு ஒரு ***ம் **ங்கப் போவதில்லையென்றாலும், வேடிக்கைப் பார்ப்பதில் இவருக்கிருக்கும் சுதந்திரத்தை என்றுமே விட்டுத் தரமாட்டார்.
எல்லா நாளுமே, அடுத்தநாள் பள்ளிக்கு/கல்லூரிக்கு/ஆஃபீஸுக்கு நேரமாகக் கிளம்பி, ரிலாக்ஸாகப் போகவேண்டுமென்று நினைப்பார். ஆனாலும் அந்த அடுத்தநாளும் அப்படியேதான் தொடரும் இவருக்கு.
மணமான ஆண்களுக்கு மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம். என்னதான் தன் திருமணவாழ்க்கை வெற்றிகரமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், திருமணம் செய்துகொள்வதாய் சொல்பவர்களிடம் ‘மாட்டிக்கிட்டியா?’ என்று பயமுறுத்துவதில் ஆண் பெண் இருவருமே சரிசமம்தான்.
நாடு, அரசியல் தலைவர்கள், தன் குடும்ப மூதாதையர் பற்றித் தெரிந்து கொள்வதை விட, தனக்குப் பிடித்த நடிகரின் படங்கள், சாதனைகள்., பிடித்த விளையாட்டு வீரரின் ரெகார்டுகளை மனனம் செய்து வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.
கிரிக்கெட்டில் தன் நாடு தோற்றால் கேவலமான ஒரு கமெண்ட்டும், ஜெயித்தால் அவர்களைக் கடவுளாக்கி ஒரு கமெண்ட்டும் கொடுக்கத் தவறமாட்டார். இது மாறி மாறி நடந்து கொண்டிருந்தாலும், இவர் மாறுவதில்லை.
தன் பிரச்சினைக்கு யாரும் வரவில்லையென்ற ஏக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் பிறருக்கொரு பிரச்சினையென்றால் 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்குவதை நியாயம் கற்பிப்பார்.
எந்தக் கெட்ட பழக்கமுமில்லாமல் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாக, ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு உதாரணமனிதனாய் வாழ்ந்து வருபவர்கூட, காக்கிச் சட்டையைக் கண்டால் எட்ட ஒதுங்கிவிடும் பயந்தாங்கொள்ளி ஆகிவிடுவார். இந்த காமன்மேனுக்கு மட்டும், காவல்துறை என்றாலே ஆகாது.
வருடாவருடம் காலண்டர் வாங்கினால் விடுமுறை தினங்கள் எந்தக் கிழமையில் வருகிறதென்பதைப் பார்ப்பது இவரது தவறாத பழக்கம்.
‘எதற்காகவும் கவலைப்படமாட்டேன் நான்’ என்பவர் இவர். ஆனால் தன்னைப் பற்றிய கவலை உள்ளூர இருந்து கொண்டேயிருக்கும் இவருக்கு.
இந்தக் கணினி யுகத்தில் டைரி எழுதும் பழக்கத்தை விட்டவர். இருந்தாலும் ஓசி டைரி வராதா என வருடத் துவக்கத்தில் எதிர்ப்பார்க்கும் வழக்கத்தை இன்னும் கைவிடவில்லை.
தண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு க்ரஷ் செய்ய வேண்டுமென்பதுதான் முறையென்றாலும், இதுவரை என்றுமே அப்படிச் செய்யாமல் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்.
துணிக்கடைகளில் பிக்ஷாப்பர் பைகளுக்கு சண்டை போடுவார். கொடுக்காத கடைகளுக்கு அடுத்த வருடம் போகவும் மாட்டாத ரோஷக்காரர் இவர்.
படம் பார்த்துவிட்டு, மீண்டும் பார்க்க வந்து முன்பின் இருக்கைகளுக்கு கேட்கும் வண்ணம் கதை சொல்லி கழுத்தறுப்பது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.
செல்ஃபோன் வைத்திருப்பது இவருக்கு பெருமையான ஒன்று. அதை அடுத்தவருக்குத் தெரியும்வண்ணம் வைத்திருப்பதும், உரக்கப் பேசுவதும் இவரது உடன்பிறந்த பழக்கம்.
ட்ராஃபிக் சென்ஸ் என்பது இவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அடுத்தவரைப் பற்றிய கவலையின்றி வாகனத்தைப் பார்க் செய்வதில் தொடங்கி, போக்குவரத்தின் போது இவர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இருப்பதில்லை. வைத்திருப்பது பைக், கார், சைக்கிள் என்று எதுவாகவிருப்பினும் இதில் மாற்றமில்லை.
பொதுக் கழிவறைகளைச் சுற்றி சிறுநீர் கழிப்பது, குப்பைத் தொட்டிகளின் வெளியே குப்பைகளைக் கொட்டுவது என்று துவங்கி, செய்யாதே என்றறிவிக்கப்பட்டவற்றை செய்து பார்ப்பதில் இவருக்கு த்ரில் அதிகம்.
முன்னே செல்லும் பெண்ணை, பின்னாலிலிருந்து பார்த்தபிறகு அவரை முந்திச் சென்று முகம்பார்ப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வம் ஆண்டாண்டு காலமாய் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவே பெண்களுக்கோ ஆணைப் பார்த்துவிட்டாலும், பார்க்காதமாதிரி போவதில் ஒரு இன்பம்.
லஞ்சம் என்பதை ஏறக்குறைய அங்கீகரித்துவிட்டார் இந்தக் காமன்மேன்.
தான்போகும் பேருந்து மெதுவாகச் செல்வதாய்க் குறை பட்டுக் கொள்வார். அதுவே, ஏதாவது பேருந்து வேகமான தாண்டிச் சென்றால், ‘ஓவர்ஸ்பீடுப்பா’ என்று சபிப்பார்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவது இவரது நெடுநாளைய பலவீனம்.
பக்தி என்பது இவருக்கு சீஸனுக்கு மட்டும்தான் வரும். அப்போதெல்லாம் தன் தேவைக்குத் தகுந்த மாதிரி, ஆன்மிக விதிகளைத் தளர்த்திக் கொள்வார் இவர்.
இவரது சமீபத்திய பழக்கம், ‘ஓட்டுப் போட எவ்வளவு கிடைக்கும்?’ என்று எதிர்ப்பார்ப்பது. ஆனால், வாங்கிய காசுக்கு சொன்னமாதிரி ஓட்டுப் போட்டு, தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதால் அரசியல் கட்சியினரிடையே இவருக்கு டிமாண்ட் அதிகம்.
வாரிசுகள் பிறந்த உடனே ‘தன் மகன்/மகள் இப்படி ஆகவேண்டும்’ என்று ஏதாவதொரு கனவையும் கூடவே வளர்த்துக் கொள்வார். அதற்கு மாறாக நடந்துவிட்டாலும், ‘அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று விட்டுக் கொடுப்பதில் இவருக்கு எப்போதுமே நற்பெயர்.
அறிவுரை சொல்வதும் இவருக்குப் பிடித்தமாதிரி பொழுதுபோக்குகளில் ஒன்று. ‘அதுபோல நீ நடந்து கொள்கிறாயா’ என்று கேட்டால் மட்டும் இவருக்குப் பிடிக்காது.
சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று நெருங்கியவர்களாலும், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.
.