Tuesday, December 1, 2009

சிந்தை இரங்காரடீ



ந்த நண்பர் திருப்பூரில் 12 வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டில் வசித்து வருகிறார். மகன், மகளது படிப்பு மீது அவருக்கு மிகுந்த அக்கறை. தினமும் எட்டு, எட்டரைக்குத்தான் பணியை விட்டு வருவாரென்றாலும் வாரிசுகளின் பள்ளி டைரியை பார்வையிட்டு, கையெழுத்துப் போட்டு, வீட்டுப் பாடத்தை பரிசீலித்து எதிலாவது அவர்களுக்கு சந்தேகமென்றால் விளக்கி, அதன்பின்னரே சாப்பிடவே அமர்வார். இந்த வேலைகள் முடியும் வரை வேறெதிலும் கவனம் கொள்ளமாட்டார். கண்டிப்புடன் இருக்கும் அதே சமயம் க்ரியேட்டிவாக மகன்/மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்கவும் தவறமாட்டார்.

மின்சார கணக்கெடுக்க மூன்று வீடுகளுக்கு ஒரு மீட்டர் என்றமைக்கப்பட்டிருந்த்து அந்தக் குடியிருப்பில். சென்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி – வியாழன் - இவர் அலுவலகம் கிளம்பும்போது கரண்ட் இல்லை. சரி, இரவுக்குள் வந்துவிடும் என்று இருந்தவருக்கு, இரவு வீட்டுக்குப் போகும்போதும் இல்லாதிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இவரது வீடு உட்பட மூன்று வீடுகளுக்கு மட்டும் கரண்ட் இல்லை. தன் அலைபேசியில் இருந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைத்திருக்கிறார். ஐந்தாறு முறை அழைத்தும் எடுக்காததால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அடுத்தநாள் – வெள்ளி.

அலுவலகம் கிளம்பும்போது அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். இரண்டாவது முறை எடுத்து விட்டார். விஷயத்தை சொல்லி, விலாசம் சொல்கிறார். ‘சரிங்க.. மதியத்துக்கு மேல வந்து பார்க்கறேன்’ என்கிறார். மாலை மனைவியை அழைத்துக் கேட்கும்போது யாரும் வந்து பார்க்கவில்லை என்றறிகிறார். இவரும் அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். ‘The number you’re trying to reach is currently switch off’ என்ற பதில்தான் வருகிறது. வீட்டுக்கு வந்து, திங்கள் 2nd Midterm தேர்வுகள் என்பதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பாடங்கள் சொல்லித் தருகிறார். இன்றைக்கு மனநிலை சோர்வாக உணர்கிறார்.

சனிக்கிழமை:
அதேபோல லைன்மேனின் எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார். பத்துமணிக்கு லைனில் வருகிறார் லைன்மேன். நேற்று வராதது பற்றிக் கேட்க, ‘சொன்னீங்களா? எப்ப?” என்பது போல கேள்வி வருகிறது. ஒருவாறு கெஞ்சி, ‘இன்றைக்காவது பார்த்துவிடுங்கள்’ என்கிறார்.

ஆனால் அன்றைக்கும் இவர் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. மற்ற இரண்டு வீடுகளில், ஒன்றில் ஒரு பேச்சிலர். இரவு ஏதாவதொரு நேரத்திற்கு வந்து உறங்கி, காலை போய் விடுவார். இந்த மின்சாரமின்மை அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மற்றொரு வீட்டில் இருப்பவர் இந்த நண்பர் ஏதோ முயற்சியெடுத்து செய்து கொண்டிருக்கிறார் என்று அமைதியாகவே இருக்கிறார். எதுவும் முயலக் காணோம்.

ஞாயிற்றுக் கிழமை முழுவதும் இவரால் அந்த லைன்மேனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இவரது எண்ணிலிருந்து அழைப்பு போனால் எடுக்காமல் இருந்து, பிறகு லைன் போகும்போதே அழைப்பைத் துண்டிப்பது என்று உதாசீனப்படுத்தப்படுகிறார். வேறு எண்ணிலிருந்து அழைத்தாலும், நோ ரெஸ்பான்ஸ். சைக்கிள் எடுத்துக் கொண்டு பார்பர் ஷாப், டீக்கடை, டாஸ்மாக் என்று அவரைத் தேடி இவர் அலைந்ததும் வீணாயிற்று. நண்பர்கள் ‘நாளைக்கு பவர்ஹவுசுல போய் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதுல எழுதிட்டு வாங்க’ என்கிறார்கள்.

திங்கள்கிழமை, காலை அலுவலகத்துக்குப் போய் ஒரு மணிநேரம் அனுமதி வாங்கிக் கொண்டு, பவர் ஹவுசுக்கு செல்கிறார். அங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். ‘கம்ப்ளெய்ண்ட் ரிஜிஸ்டரா? அதெல்லாம் இப்ப யார் எழுதறாங்க? உங்க வீட்டு லைன்மேனுக்கு அடிக்க வேண்டியதுதானே?’ என்கிறார்கள். இவர் கடந்த ஐந்து நாட்களாக பட்ட அவதியைச் சொல்கிறார். ‘ஐய... அந்த லைன்மேனுக்கு ப்ரமோஷன் கன்ஃபர்ம் ஆயிடுச்சுங்க.. ஆனா இன்னும் போஸ்டிங் போடல. அதுனால லைன்ல சரியா வேலை செய்யறதில்லை. அடிக்கடி நம்பரை மாத்தீடுவான். இந்த மாசத்துல மட்டும் மூணுவாட்டி மாத்தீட்டான்’ என்றார்கள். ‘சரி.. அந்த ரிஜிஸ்டரைக் குடுங்க. அட்ரஸ் எழுதி குடுத்துட்டு போறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க’ என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தேடியும் அந்த ரிஜிஸ்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து இவரும் தேடுகிறார். ம்ஹூம். பயனில்லை. ‘விடுங்க.. நாளைக்கு வந்து ஏ.ஈ-ஐப் பாருங்க. அவரு கூப்ட்டு ரெண்டு வாங்கு வாங்கினாருன்னா டப்பியைக் கட்டீட்டு வந்துடுவான்’ என்கிறார்கள் அவர்கள். அப்படியானால் இன்றைக்கும் சரியாகாதா என்று மிகுந்த மனவேதனையோடு திரும்புகிறார்.

செவ்வாய்க்கிழமை.
பவர்ஹவுஸ் சென்று, ஒருமணிநேரம் காத்திருந்து ஏ.ஈ தரிசனம் பெற்று ஆறு நாட்களாக வீட்டில் மின்சாரமில்லை என்பதையும், வாரிசுகள் தேர்வுக்குப் படிக்க இயலாத நிலையையும் சொல்கிறார். ‘இன்னைக்கே அவனை வந்து பார்க்கச் சொல்றேன்’ என்கிறார். வேறு லைன்மேன்கள் இல்லையா என்று இவர் கேட்டதற்கு ‘இன்னைக்குதானே என்கிட்ட வந்திருக்கீங்க? நைட்டுக்குள்ள சரியாய்டும் போங்க.. என்னாத்துக்கு வேறலைன்மேன்களை தொந்தரவு பண்ணிகிட்டு’ என்றிருக்கிறார்.

இரவுக்குள் ஒரு மாற்றமுமில்லை. புதன் காலை, கவுன்சிலரை சந்தித்து அழமாட்டாத குறையாக புகார் தெரிவிக்க, அவர் மனது வைத்து முயன்று, அன்று மாலை லைன்மேன் ஒருவன் வந்து ‘என்னா தருவ?’ என்ற டிமாண்டோடு சரிசெய்துவிட்டுப் போயிருக்கிறான்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் –ஆறு நாட்கள். ஒரு தனிமனிதன் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது என்பதற்கு சாட்சியாய் கடந்திருக்கிறது.

நேற்று என்னைச் சந்திக்க அவர் வந்திருந்தபோது, என் நேற்றைய காமன்மேன் பதிவை படித்துக் கொண்டிருந்தோம். ‘ஒரு சாமான்யனால எதுவுமே செய்ய முடியாது கிருஷ்ணா’ என்று நீர் தளும்பும் கண்களோடு இதை அவர் விவரித்தபோது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

உலகத்தைப் புரட்டும் நெம்புகோல், ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமென்று நம்புகிறவன்தான் நான். ஆனால், அந்த நெம்புகோலால், என் சக மனிதன் என்னைக் குத்துகிறானே என்கிற அவரது வருத்தம், விடையில்லா கேள்வியாய் நிற்கிறது. ‘எல்லாரையும் விடுங்க. அந்த லைன்மேன் என்னை மாதிரி ஒரு சாமான்யன் தானே.. அவனுக்கு கூட இரக்கம்கறது இருக்காதா? இதே ஒரு பணக்கார வீட்டுலயோ, பெரிய நிறுவனத்திலயோ நடந்திருந்தா இப்படி அலட்சியமா இருப்பானா? என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர, நைட் கொசுக்கடியில்லாம என் குடும்பம் தூங்க நான் பட்ட கஷ்டத்த விட இந்த சம்பவங்கள் என் மனசுல தந்திருக்கற வலி அதிகம் கிருஷ்ணா. இந்த மாதிரி கரண்ட் போனா என்ன பண்ணனும்.. நான் பண்றது சரியா? என் முயற்சிகள் தப்பானதாலதான் பலனில்லாம போச்சா.. முதல் நாளே பவர் ஹவுசுக்கு போகணுமா.. ஓரளவு உலகம் தெரிஞ்ச எனக்கு இப்படீன்னா என்னை விட அசட்டுத் தனமா இருக்கற மனுஷன் இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாதவனா..’ என்று துவங்கி அவர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் என்னை இரவு என் உறக்கத்தைக் கலைத்தன.

என்ன செய்ய வேண்டும் நாம்?


சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ
-பாரதியார்

.

45 comments:

Mahesh said...

என்னங்க இது..... முன்ன இருந்த கம்ப்ளைண்ட் புக்கிங் சிஸ்டமே தேவலை போல இருக்கே... இது கொடுமையால்ல இருக்கு :(

பீர் | Peer said...

ஏழாவது நாளாவது இணைப்பு கிடைத்ததற்கு நண்பர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். எனக்கு இதைவிட மோசமான அனுபவம் உள்ளது :(

கார்க்கிபவா said...

யாராவ்து இருந்தா மன்னிச்சுக்கொங்க..

இந்த அரசாங்க ஊழியர்கள் கிட்டத்தட்ட 99% இப்படித்தான் சகா.. ரேஷன், ரிஜிஸ்டர் ஆஃபீஸ், தாலுகா ஆபீஸ், போலிஸ்ன்னு எல்லோஒருமே பிரிடிஷ்காரனுங்கள விட மகா மட்டமானவங்க. எனக்கு என்னவோ இப்பவெல்லாம் பி.எஸ்.என்.ஏல் காராங்க எவ்ளோ பரவாயில்லைன்னு தோணுது. காரணம் சொன்னா கும்க்கியண்ணே கோவப்படுவாரு. அரசாங்க ஊழியர்களை கண்டாலே நான் மதிக்க மாட்டேன். என் மாமா, மற்றும் பல உறவினர்கள் உட்பட..

Romeoboy said...

ஒருத்தன் தவறு செய்வதால் ஒரு டிபார்ட்மென்ட் எப்படி எல்லாம் அசிங்க படவேண்டியது பாருங்க. இவனுக்கு எல்லாம் promotion கிடைச்சு என்னது கிள்ளிக்கபோறன். லைன் மேன் என்றாலே எதாவது தேறுமான்னு தான் பார்காங்க. கிராமத்துல தான் இந்த தொலை இருக்குன்னு பார்த்த திருப்பூர் மாநகராச்சியா ஆனா பிறகும் இந்த கொடுமையா?

துளசி கோபால் said...

அடப் பாவி...... இப்படியெல்லாமா இருக்கு இந்தியாவிலே!!!!

என்னமோ 'ஒளிருது'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க!

எல்லாரும் அமைச்சர்வீட்டுக்கு அடுத்தவீட்டுலே குடி இருக்கனுமோ என்னவோ!

க‌ரிச‌ல்கார‌ன் said...

இவ‌னுக‌ திருந்த‌வே மாட்டானுங்க த‌ல‌
நான் 1 வ‌ருஷ‌ம் இவ‌னுக‌ கூட‌ ட்ரெயினியா குப்பை கொட்டியிருக்கிறேன்
காலையில‌ வந்த உட‌னே எங்க‌ போனா எவ்ளோ கிடைக்கும்னுதான் பேசிக்குவானுங்க

மாதேவி said...

"ஏழாவது நாளாவது இணைப்பு கிடைத்ததற்கு நண்பர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். எனக்கு இதைவிட மோசமான அனுபவம் உள்ளது:(" என்ன கொடுமை.

க‌ரிச‌ல்கார‌ன் said...

இவ‌ங்க‌ இம்சை தாங்க‌ முடியாம‌த்தான் எங்கூர்ல‌ நாங்க‌ளே ஃபியுஸ் போட்டுப்போம்
இதுக்காக‌வே ஊர்ல‌ நால‌ஞ்சு எல‌ந்தாரி ப‌ய‌லுக‌ள‌ நேர்ந்து விட்டுருக்கோம்

அன்பேசிவம் said...

/////‘எல்லாரையும் விடுங்க. அந்த லைன்மேன் என்னை மாதிரி ஒரு சாமான்யன் தானே.. அவனுக்கு கூட இரக்கம்கறது இருக்காதா? இதே ஒரு பணக்கார வீட்டுலயோ, பெரிய நிறுவனத்திலயோ நடந்திருந்தா இப்படி அலட்சியமா இருப்பானா? என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர, நைட் கொசுக்கடியில்லாம என் குடும்பம் தூங்க நான் பட்ட கஷ்டத்த விட இந்த சம்பவங்கள் என் மனசுல தந்திருக்கற வலி அதிகம் கிருஷ்ணா. இந்த மாதிரி கரண்ட் போனா என்ன பண்ணனும்.. நான் பண்றது சரியா? என் முயற்சிகள் தப்பானதாலதான் பலனில்லாம போச்சா.. முதல் நாளே பவர் ஹவுசுக்கு போகணுமா.. ஓரளவு உலகம் தெரிஞ்ச எனக்கு இப்படீன்னா என்னை விட அசட்டுத் தனமா இருக்கற மனுஷன் இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாதவனா..’ என்று துவங்கி அவர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் என்னை இரவு என் உறக்கத்தைக் கலைத்தன.

என்ன செய்ய வேண்டும் நாம்?////\

தலைவரே! மகாநதி பூர்ணம் விஸ்வநாதன் நினைவிருக்கு வருகிறார், ஏன்னு கேட்காதிங்க
காமன்மேன் பதிவில் நீங்க சொன்னபடி சாமானியனால் லஞ்சம் கொடுப்பது சரியென அங்கிகரிக்கப்பட்டது போல இந்த பிரச்சனைகளும் நாளடைவில் அங்கிகரிக்கப்படும். முதலில் கரண்ட் கட் ஆனால் கொதிப்படைந்த சாமானியன் போகப்போக கரண்ட் இருப்பதற்காக சந்தோசப்படும் நிலைக்கு முன்னேறியிருப்பதை போல.

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

மிக முக்கியமான பதிவு பரிசல்.

நல்லவனாக இருப்பதை விட காரியம் சாதிப்பவனாக இருப்பவனே வெற்றி பெறுகிறான்.

அதற்குத் தேவையான குறைந்த பட்ச தகிடுதத்தங்களைக் கற்றுக் கொள்ளாதவன் இதைப் போல சிரமம்ப் பட வேண்டியதுதான். தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விசேச நாட்களில் அவர்களைக் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவன் மாறிப் போனாலும் அடுத்தவனிடம் சொல்லிச் செல்வான். அநேகம் பேர் தொடர்பற்று இருப்பதால்தான் இந்தச் சிக்கல்.

இன்றைக்கெல்லாம் சம்பளம் வாங்குவதாலேயே ஒருவன் வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சம்பளம் அவன் வேலைக்கு வருவதற்குல் வேலை செய்தால் எனக்கென்ன கிடைக்கும் என்ற மனநிலைக்கு ஏறக்குறைய எல்லோரும் வந்து விட்டனர்.

என் அச்சகத்தினுள் வைத்திருந்த மீட்டர் புகைந்து விட்டது. பிராப்பர் சேனலில் சென்று கேட்டதற்கு புது மீட்டர் மாட்ட வேண்டும் 4000 ரூபாய் ஆகும் ஒரு வாரம் ஆகும் என்றார்கள்.

என் லைன் மேனைப் பிடித்து உண்டானதென்னவோ அதை வாங்கிக் கொள்ளப்பா யாருக்கு என்ன வேண்டுமோ சரி என்றவுடன் அன்று மாலையே மீட்டர் மாட்டப் பட்டது. செலவு வெறும் 900 ரூபாய்தான்.

இது சரியா தவறா என்பது போய் அவசியமா இல்லையா என்ற கட்டத்திற்கு நகர்ந்து விட்டோம்.

Survival of the FITTEST. தமிழ சொன்ன பாம்புக்கறி திங்கிற ஊருக்குப் போனா நடுக்கறி நமக்கு. அம்புட்டுத்தேன்.

முடிந்தால் நெற்றிக் கண் படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அதில் பெரிய ரஜினி பேசும் வசனங்கள் முக்கியமானவை. அவரது பாத்திரப் படைப்புடன் மாற்றுக் கருத்திருந்தாலும் அவர் சொல்வதெல்லாம் உண்மை.

DGFT, EB, Sales Tax, BSNL, LAbour Office, Helath dept, ESI, PF போன்றவைகளைக் கையாளும் உங்களுக்கும் இந்தக் குணம் மிக முக்கியம்.

Anonymous said...

Survival of the FITTEST. தமிழ சொன்ன பாம்புக்கறி திங்கிற ஊருக்குப் போனா நடுக்கறி நமக்கு. அம்புட்டுத்தேன்.//

நானும் அண்ணாச்சி கட்சிதான், கோடிகளில் பெரியவர்கள் புழலும் போது இது போன்றது தவிர்க்க முடியாதது.. எல்லா ஊரையும் விட திருப்பூரில் இது ரொம்பவும் அதிகம். :(

உங்க நண்பரை ஒரு எமெர்ஜென்சி விளக்கு வாங்கி வைக்க சொல்லுங்கள்.

Cable சங்கர் said...

பரிசல்.. உங்கள் நண்பர் மிக பாவம் அதான் அவர் யார் எது சொன்னாலும் கேட்டு கொண்டு வந்துவிடுகிறார். நானெல்லாம் அப்படியில்லை.. நம் ஒவ்வொருவருக்கு உரிமை உள்ளது அதை பயன் படுத்த தெரியவேண்டும். சும்மா புள்ள பூச்சி கணக்கா தலை ஆட்ட்டிட்டு வந்தா படுக்க வச்சு புல்டோஸரை ஏத்திவிட்டுருவானுங்க.. ஆமா..

anujanya said...

Power without money corrupts. பெரும்பாலான பிரச்சனைகள் இதிலிருந்தே துவங்குகின்றன. எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது ஒரு jinx. அவர்களிடம் உள்ள அதிகாரத்திற்கும் அவர்கள் சம்பளத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதைக் காணலாம். அதனால் ஊழல் உள்ளே நுழைந்து, ஆட்டம் போடுகிறது.

நான் கூட மின்வாரிய அலுவலகம் சென்று ரிஜிஸ்தர் புத்தகத்தில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஒரு தனி ஆளின் மொபைல் எண்ணைப் பிடித்து கெஞ்சுவதில் தான் விஷயம் என்பது ஆச்சரியம். By the way, லைன்மேன் ப்ரோமோஷன் கிடைத்தால், என்ன வேலை அது?

Good post KK

அனுஜன்யா

ஜிகர்தண்டா Karthik said...

கேபிள் அண்ணே...
இவரு அங்க புள்ள பூச்சி மாதிரி இருந்ததால ஏழு நாளுல வேல நடந்துச்சு..
இல்லாட்டி அப்படியே அவரு ஒரு லோட் மெழுகுவர்த்தி வாங்கி வெச்சுருக்கணும்.
நாம பாஸ்போர்ட் ஆபிஸ்ல இவனுங்க பண்ற அலும்பு இருக்கே...
செவப்பு சட்ட போட்டவனுகெல்லாம் பாஸ்போர்ட் தர முடியாதுங்கற ரேஞ்சுக்கு பேசுவாங்க.
பாக்கெட் ல பணம் இருக்கு சார் அப்படின.. அத வெளிய இருக்கற நம்ம ஆளுகிட்ட குடுன்னு சொல்லுவாங்க.

இதுக்கெல்லாம் அந்த எடிசன சொல்லணும்... அவருனாலதான் பிரச்சினையே...

பரிசல்காரன் said...

@ Mahesh

ரொம்ப கொடுமைதாங்க...

@ பீர்

அவரும் இதைத்தான் சொன்னாருங்க...

@ கார்க்கி

சேம் ப்ளட்

@ ரோமியோபாய்

//திருப்பூர் மாநகராச்சியா ஆனா பிறகும்//

காலக்கொடுமைங்க... திருப்பூர் இப்ப மாவட்டம்!

@ துளசிகோபால்

எல்லாம்தாங்க ஒளிருது.. ஆனா அதுக்கு ‘கொடுத்து’ வெச்சிருக்கணும்.

damildumil said...

தப்பு உங்க நண்பர் மேல தான் முதல் தடவை ஃபோன் பண்ணும் போதே 'வந்து சரி பண்ணிட்டு ஐம்பது ருபாய் வாங்கிட்டு போப்பான்னு" சொன்னா அடுத்த பத்து நிமிசத்துல நாய் மாதிரி ஒடி வருவான் பல்லை இளிச்சுட்டு

நான் ஏண் கொடுக்கனும் இருக்கிற நான் கொடுத்தா இல்லாதவன் என்ன பண்ணுவான்னு இந்தியன் டயலாக் பேசினா காரியம் நடக்காது. அடுத்தவன் கஷ்ட்டப் படுவான்றதுக்காக நானும் சேர்ந்து கஷ்ட்டபடுவேண் சொன்னா இங்க காரியம் நடக்காது. இந்த நாடு நம்ம காலத்துல திருந்த போறதில்ல அதனால நமக்கு காரியம் ஆகனும்னா சமயத்துல நாய் வேஷமும் போடனும் நரி வேஷமும் போடனும்.

இப்படிக்கு
காமன்மேன்

பின்னோக்கி said...

பல வருடங்களுக்கு முன், ஒலியும் ஒளியும் ஆரம்பிக்கும் முன் எங்கள் தெருவில் கரெண்ட் போய், நிகழ்ச்சி முடிந்தவுடன் வரும். இது பல மாதங்களுக்குத் தொடரவே, லைன் மேனுக்கு பணம் தரவில்லை என்ற காரணம் தெரிந்து, பணம் குடுத்தப்பின், ஒலியும் ஒளியும் நன்றாக தெரிந்தது.

☼ வெயிலான் said...

வீட்டில் மின்சாரம் துண்டித்திருக்கும் போது, முதல் நாள் புகார் புத்தகத்துல எழுதி வைத்தாயிற்று.

ம்ஹீம்.......

ரெண்டாவது நாள் லைன்மேனுக்கு போன். அவருக்கு ஒரு உதவியாளர். அது அவர் பையன்!?!

உதவியாளருக்கு தொலைபேசிய போது, சரி பண்ணீட்டு ஆபீஸ்க்கு வந்து என்னை பாருங்கனு சொன்னேன்.

மதியம் திரும்பவும் நினைவுபடுத்தலாம் என தொலைபேசிய போது, உங்களுக்கு தான் சரி பண்ணிட்டிருக்கேனு மின்கம்பத்திலிருந்தபடியே பேசினார்.

பின்னூட்டமெல்லாம் பார்த்தப்போ, புகார் பெட்டி மாதிரி இருந்தது :)

நர்சிம் said...

மிக நல்ல பதிவு பரிசல்.

Vadielan R said...

இதே இவர் முதல் நாள் நேரா பார்த்து கைல அழுத்தியிருந்தா முடிஞ்சுருக்கும். ம்ம்ம் நேரம் அவனுங்களுக்கு அப்படி வேலை செய்றது அவங்களுக்கு ரொம்ப நாள் தாக்குபிடிக்காது எங்காவது கரண்ட்ல கை வைக்கும் போது அந்த கரண்டே தூக்கி கடாச போவுது பாருங்க

Saminathan said...

பரிசல்,

அண்ணாச்சி சொல்வதே மிகச்சரி..

அப்புறம் காமன் மேன்கள் எல்லாம் அப்பாவி கணக்கா இருந்தா கேபிள் சொன்ன மாதிரி புல்டோசர் ரோடு ரோலர் எல்லாம் ஏத்திருவானுங்க...

இந்த மாதிரி பிரச்சனைகள் மறுபடியும் வரும்போது,

1). EB ஆபீஸுக்கு காலை பத்து மணிக்கு முன்னால் போனால் எல்லா லைன் மேன்களையும் அவர்களின் கைத்தடிகளையும் பார்க்கலாம்..
திருப்பூரில் காமன் மேன் வீடுகளில் ஃப்யூஸ் போட லைன் மேன் வரமாட்டார் ; ஏனென்றால் வீடுகளில் 25 ரூபாய் தான் தருவார்கள் !

எப்போதும் அவர்களின் உதவியாளர்களையே நாடுங்கள் ! ( ஆனால் அவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்ல ! )

2). பெரிய மூங்கில் கழி ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் ; இந்த மாதிரி ஃப்யூஸ் போகும்போது இரவு நேரங்களில் அதை எடுத்துக்கொண்டு போய் மின் கம்பத்தில் உள்ள அணைத்து இணைப்புகளையும் ஒரு போடு போடுங்கள் ; அடுத்த நாள் எல்லா வேலையும் ஜரூராக நடக்கும் ! ):

பரிசல்காரன் said...

@ கரிசல்காரன்

அதானேங்க பொழப்பு...

@ மாதேவி

நன்றி.

@ முரளிகுமார் பத்மநாபன்

உங்க பின்னூட்டத்தை படிச்சப்பறம், மறுபடி அந்தப் பத்தியை படிக்கும்போது எனக்கும் விஸ்வநாதன் ஞாபகத்துக்கு வந்தார்.

@ வடகரைவேலன்

மிக்க நன்றி அண்ணாச்சி.

//இது சரியா தவறா என்பது போய் அவசியமா இல்லையா என்ற கட்டத்திற்கு நகர்ந்து விட்டோம்.//

முகத்திலறையும் உண்மை!

@ மயில்

சரிதான்!

@ கேபிள்சங்கர்

உங்க ஒடம்புக்கு நீங்க பண்ணலாம் பாஸு. தெலுங்குப் பட வில்லன் கணக்கால்ல இருக்கீங்க...

@ அனுஜன்யா

நன்றி கவிஞரே. ப்ரமோஷன் மேட்டர் யோசிச்சு/விசாரிச்சு சொல்றேன்..

@ கார்த்திக் விஸ்வநாதன்

சரியாச் சொன்னீங்க பாஸ்..



அனுஜன்யா

பரிசல்காரன் said...

@ DAMALDUMIL

//வந்து சரி பண்ணிட்டு ஐம்பது ருபாய் வாங்கிட்டு போப்பான்னு" //

அவர் ஒன்றும் இந்தியன் டயலாக்கெல்லாம் பேசவில்லை. கொடுக்கத்தயாராய்த்தான் இருந்திருக்கிறார். அது பற்றியெல்லாம் தெரியும் அவருக்கு. வந்தால்தானே கொடுக்க?

@ பின்னோக்கி

இப்பவும் அப்படித்தான் பல இடங்களில் நடக்குது. அப்ப ஒ/ஒ. இப்ப கிரிக்கெட் மேட்ச்.

@ வெயிலான்

உங்க ‘பவர்’ அப்படீங்க. நீங்க சொல்லிட்டு சரி பண்ணாம அவரு வேலைல இருந்துட முடியுமா? கலெக்டர் வரைக்கும் ஃப்ரெண்டு புடிச்சு வெச்சிருக்கீங்களே..

@ நர்சிம்

நன்றி நண்பா! (btw, இன்னைக்கா?)

@ வடிவேலன்

நோ டென்ஷன் ப்ளீஸ்.. சாபமெல்லாம் வேண்டாங்க..

@ ஈரவெங்காயம்

தொழிலதிபரே... உங்க ரெண்டாவது பாய்ண்டை ரொம்ப பாராட்டறேன். (அப்ப அதே கைத்தடியை வெச்சுகிட்டு நம்மளை யாரும் போட்டுட மாட்டாங்களா?)

Jaisakthivel said...

திருப்பூரின் நிலைமை இப்படி எனில்... சென்னையின் நிலைமை இன்னும் மோசம். வசிப்பது தான் தலைநகர்... ஆனால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். அடுக்கிவிட ஆசைதான்... தொடர் துயர பின்னூட்டங்கள் வேண்டாமே...ஒரு சராசரி குடும்பஸ்தன் படும் வேதனைகளும் வலிகளும் சொல்லி மாளாது?!

அத்திரி said...

நல்ல பதிவு பரிசல்.

ILA (a) இளா said...

மனசு ரொம்ப கனத்துப் போயிருச்சுங்க. அதுவும் முன் பதிவை தொடர்புபடுத்தி இருக்கிறதுல,,, ஹ்ம்ம்ம்.. நண்பரோட கடைசி... :(

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பதிவுண்ணா..

Kumky said...

ஈர வெங்காயம் said...


2). பெரிய மூங்கில் கழி ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் ; இந்த மாதிரி ஃப்யூஸ் போகும்போது இரவு நேரங்களில் அதை எடுத்துக்கொண்டு போய் மின் கம்பத்தில் உள்ள அணைத்து இணைப்புகளையும் ஒரு போடு போடுங்கள் ; அடுத்த நாள் எல்லா வேலையும் ஜரூராக நடக்கும் ! ):


பொருளாளரே சிரிப்பை அடக்க முடியல......

ஆனாலும் யதார்த்தம் அப்படித்தான் இருக்கு.
நானாக இருந்தால் லைன்மேனை ரெண்டு போடு போட்டிருப்பேன்.

Kumky said...

எல்லா பின்னூட்டங்களையும், (பதிவும்தான்) படித்தேன் கே.கே.

ஆக மொத்தம் எல்லா அரசு பணியாளர்களும் தமது கடமையை செய்வதில்லை.
லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.
எல்லோரும் அயோக்கியர்களே..
குறிப்பாக இந்த மின் துறை ஊழியர்கள் ஆளுக்கொரு உதவியாளர் வைத்துக்கொண்டு சொகுசாக வாழ்கின்றார்கள்...

கொடுமை...இதெல்லாம் சொல்லிக்கொண்டு அவர்களை கேட்க திராணியின்றி அனைவரும் லஞ்சம் கொடுத்துத்தான் தமது உரிமைகளை நிலை நாட்டிக்கொள்ளவேண்டியுள்ளது.

வாழ்க சனநாயகம்.

Kumky said...

கார்க்கி said...

அரசாங்க ஊழியர்களை கண்டாலே நான் மதிக்க மாட்டேன். என் மாமா, மற்றும் பல உறவினர்கள் உட்பட..

அண்ணா மண்ணிச்சுக்கங்னா...

அமுதா கிருஷ்ணா said...

போன் செய்து உடனே வராவிட்டால்..நேராக ஈ.பி க்கு என்ன டைம் என்றாலும் நான் என் பையனை கூட்டிக் கொண்டு போய் இருக்கிறேன். லைன் மேனை அனுப்புங்கள் நான் வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லி அங்கேயே காத்து இருந்து இருக்கிறேன்..பி.எஸ்.என்.எல் லைன் மேன்களும் இப்படிதான்...நிறைய பேருடன் சண்டை போட்டுதான் காரியம் சாதிக்கணும்....

Prakash said...

Single Phase மட்டும் காரைக்குடியில் எங்கள் தெருவில் போய்விடும் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கழித்திருக்கிறோம்.ஆனால் அக்கம் பக்கம் உள்ள கரண்ட் இல்லாத Single Phase சங்கத்தினர் அனைவரும் சேர்ந்து லைன் மேனுக்கு தொடர்ந்து பேசி வர வைத்து விடுவோம்.ஒருவருக்கு ஏற்பட்டால் சமாளிக்கவே முடியாது!

நல்ல பதிவு :)

Unknown said...

இதை படித்தவுடன் எனது மோசமான அனுபவம் ஞாபகம் வந்தது.. :-(

என் நடை பாதையில்(ராம்) said...

அரசு அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பெரும்பான்மையானோர் இப்படிதான் இருக்கிறார்கள். நான் நான்கு மாதமாக bsnl bill இன் குளறுபடியால் சில ஆயிரங்களை இழந்து வருகிறேன். திருப்பூர் bsnl அலுவலர்களும் சுத்த சோம்பேறிகள்தான்....

யாசவி said...

//2). பெரிய மூங்கில் கழி ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் ; இந்த மாதிரி ஃப்யூஸ் போகும்போது இரவு நேரங்களில் அதை எடுத்துக்கொண்டு போய் மின் கம்பத்தில் உள்ள அணைத்து இணைப்புகளையும் ஒரு போடு போடுங்கள் ; அடுத்த நாள் எல்லா வேலையும் ஜரூராக நடக்கும் ! )//

I love this option

:) thanks to eeravenkayam

பரிசல்காரன் said...

@ வானொலி

நன்றி. (கதிரில் உங்கள் பேட்டி படித்தேன். அந்தப் புகைப்படத்தில் என்னை விட வயதானவராகத் தெரிகிறீர்கள்!)

நன்றி அத்திரி.

@ இளா

இது பரவால்ல இளா. செத்த உறவோட பிணத்தைக் கொடுக்க காசு கேட்டு அலம்பல் பண்றதெல்லாம் நடக்குது! :-(

@ பிரியமுடன் வசந்த்

நன்றி!

மிகவும் நன்றி கும்க்கியண்ணா,

@ அமுதாகிருஷ்ணா

நீங்கள் செய்வதுதான் சரி.

@ ப்ரகாஷ்

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!

@ பட்டிக்காட்டான்

அதத்தான் சொல்லுங்களேன்..

@ ராம்

என்ன சொல்ல?

@ யாசவி

முயற்சி செய்தும் பாருங்கள்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மோசமான அனுபவங்களை பகிர்ந்துக்க பதிவாவது இருக்குதே.
லைன்மேனை நேரடியா கூப்பிடாம இருக்க இப்போ ஒரு வழி இருக்குது.
நெல்லையில் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் இருக்குது.0462-2562900 அதில் புக் பண்ணினால்லைன் மேனுக்கு நேரடியா ஆர்டர் பண்றாங்க. ரெகார்ட் ஆவதால் லைன் மேனும் கவனமாய் இருக்கிறார்கள். எல்லா பெரிய ஊர்களிலும் கண்டிப்பாக IVRS எண் இருக்கும். நமது வேலை அத்தாட்சியுடன் கண்காணிக்க படுகிறது என்றால் தான் நிறைய பேர் ஒழுங்காக வேலை பார்கிறார்கள். தகவல் அறியும் உரிமை, consumer foram என சாமானியர்களுக்காக பல வசதிகள் இருந்தாலும் சாமானியன் மட்டும் சந்தோஷமாக இல்லை.

பரிசல்காரன் said...

@ நாய்க்குட்டி மனசு

அரிய தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா..

Unknown said...

//.. @ பட்டிக்காட்டான்
அதத்தான் சொல்லுங்களேன்.. //

நேத்திக்கே சொல்லலாம்னு நினச்சேன், கொஞ்சம் பெரிசா இருக்கும்,

அதனால தனி இடுகையாகவே போட்டுட்டேன்..

http://pmtsampath.blogspot.com/2009/12/blog-post.html

பெசொவி said...

உண்மைதான்....பொதுஜன தொடர்புள்ள எல்லா அரசுத்துறையிலேயும் இப்படித்தான் நடக்குது. ஒரு சில நல்ல அதிகாரிகளைத் தவிர எல்லோருமே எக்ஸ்ட்ரா காசுக்குத் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒன்று, இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தபின், அதை முறையாகப் பயன்படுத்துவோருக்கு நிச்சயம் வசதியாகத் தான் இருக்கிறது. நானே, இம்மாதிரி அலுவலகத்துக்குப் போகும்போது, முதலில் "பார்மாலிட்டி எல்லாம் செஞ்சுடலாம் சார்" என்று உறுதிமொழி கொடுத்துவிட்டுதான் என் விண்ணப்பத்தை சொல்லுவது வழக்கம்.
"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

Thamira said...

வேதனையான பதிவு.

ஒவ்வொருவரின் கடமை தவறுதலுக்குப்பின்னும் இவ்வாறான பாதிப்பு நேரும். பலனை எதிர்பாராமல் நாம் நம் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதனை நினைவூட்டும் செயல்களே இது போன்ற சம்பவங்கள்.!

பட்டாம்பூச்சி said...

நல்ல பதிவு.

Unknown said...

நல்ல அரசு உழியர்கள் மன்னிக்கவும். இவனுகல எல்லாம் நாலு அப்பு அப்பனும் போல இருக்கு!!

TAMIL RTI HELP said...

என்க்கும் இது போன்ற‌ அனுபவம் உண்டு.நான் வசிப்பது காரைக்குடி அருகில் உள்ள கிராமத்தில்(இப்போ பொழப்பு தேடி மலேசியாவில்).எங்கள் வீட்டு தொலைபேசி அடிக்கடி பழுதாகும்.போன் பண்ணினால் எடுக்க மாட்டார்கள்.
புகார் செய்ய எளிதான வழி உள்ளது.198 என்ற எண்னுக்கு அருகிலுள்ள bsnl செல்போன் அல்லது தொலைபேசியில் அழைத்து புகார் செய்யுங்கள்.ஓடி வருவார்கள்.(or) வாடிக்கையாளர் சேவை மையம் 1500 க்கு அழைத்து புகார் செய்யுங்கள்.அதிக நாள் சரி செய்யாமல் இருந்தால்,கட்டண கழிவு பெறவும் வாய்ப்பு உண்டு.