.
2154ல் நடக்கும் கதை. பண்டோரா எனும் கிரகத்தில் இருக்கும் ஒரு கனிமத்தை கைப்படுத்த மனிதர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக டி.என்.ஏ. கலப்பு செய்து பண்டோரா கிரகத்தின் நவி மனிதர்களைப் போல, மனிதர்களை மாற்றி ஊடுருவ வைக்கிறார்கள் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர். அப்படிச் செல்லும் ஒருவன் இறந்துவிட, ஒரே ஜீன் உள்ள அவன் சகோதரனின் டி.என். ஏ- தான் ஒத்துப்போகும் என்று அவனுக்காக அவன் சகோதரன் அனுப்பப்படுகிறான். விஞ்ஞானக் கூடத்திற்கு அந்தச் சகோதரனின் எண்ட்ரியுடன் தான் படம் ஆரம்பமாகிறது.
அந்த கிரகத்தில் நவி மனிதனாக நுழைந்தவுடன் அதன் இயற்கை அமைப்பு, வாழ்வியல், அவர்களின் பழக்கங்கள் நாயகனை மிகவும் கவர்ந்துவிட, அவர்களில் ஒருவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான். இடையே நவி இனப் பெண்ணோடான காதலும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் முழுமையாக பண்டோரா கிரகத்தின்மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் போரைத் தொடுக்க ஆரம்பிக்க, நவி இனத்தினருக்குத் தலைமை தாங்கி போரிடுகிறான்.
இறுதியில் – வென்றது யார் என்பதே அவதார்.
‘மேக்கிங் மேக்கிங்’ என்று சொல்வார்களே அப்படியென்றால் என்னவென்பதை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் ஓடுகிறார்கள். காமெரா கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் அவுட் ஆகிறது. அப்போதுதான் நமக்குத் தெரிகிறது – அவர்கள் ஓடுவது ஒரு மரக்கிளையில்!
சொல்லப்போனால் – ஒரு மசாலாப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு வந்திருக்கிற அவதார் நிச்சயமாக கமர்ஷியல் படம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு, ஒரு காரணம் என்று நம்பவைத்திருக்கிறார்கள்.
பண்டோரா கிரகத்தின் மனிதர்கள் மட்டுமல்ல மரம், செடி, கொடிகள், விலங்குகள்கூட நாயகனை ஏற்றுக் கொள்ள தாமதமாவதையும், கொஞ்சம் கொஞ்சமான பழக்கத்துக்குப் பிறகு அவை ஏற்பது போலவும் சித்தரித்திருப்பது அழகு.
பண்டோரா கிரகம்! அத்தனை அழகு! ஃப்ளோரசெண்ட் செடி-கொடிகள், கலாச்சாரம், விலங்குகளின் உணர்வுகள், செடி கொடிகளுக்கும் அந்த கிரகத்தினருக்கும் இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதுவும் பண்டோரா கிரகத்தினரின் மொழியை தனியாக ஒரு பேராசியர் குழு வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. (நாம் பன்ச் டயலாக்குகளுக்கு எடுக்கும் சிரமத்துக்கு கிஞ்சித்தும் குறையாதது அது!)
நவி இன மக்கள் – நீள உடல். நீல நிறம். நடை, பேச்சு, உடல்வாகு எல்லாவற்றிலும் ஒரே மாதிரி எல்லா நவி கதாபத்திரங்களையும் நடிக்கவைத்திருக்கிறார்கள்.
நான் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனியாக பூச்செண்டு கொடுக்க நினைப்பது – பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம்: ஹீரோவின் சீனியரான பெண் அதிகாரி முதலில் அவரைப் புரிந்து கொள்ளாமல், பிறகு புரிந்து கொண்டு அவருடன் நவி இன மக்களுக்காக போராடுகிறார்.
போர் விமான பைலட்களில் மற்ற எல்லாரும் குண்டு மழை பொழிய, ஒரே பெண் பைலட் – மனமில்லாமல் திரும்புகிறார். பின்னர், விஞ்ஞானக் குழுவால் நாயகன் அடைத்து வைக்கப்படும்போது அவர்தான் காப்பாற்றுகிறார்.
அதேபோல நவி இனத்தின் தலைவன் மகள் இவரை பஞ்சாயத்துக்கு (அப்படித்தான் தெரிகிறது) கொண்டு செல்லும்போது அவருக்கும், தலைவிக்கும் நடக்கும் வாக்குவாதத்தின்போது சும்மாதான் இருக்கிறார் தலைவர்! தங்களுக்காக போராடிய இருவர் உயிருக்கு ஆபத்து நேரும்போது நடக்கும் பிரார்த்தனைக்கும் தலைவிதான் தலைமை. இப்படி கிடைக்கும் இடங்களிலெல்லாம் பெண்மையைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குனர்.
3 டி-யில் பார்ப்பது சிறப்பு. நாமே அவர்களின் கிரகத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஒரு தியேட்டர் (Kanagadara) தவிர வேறெங்கும் 3 D இல்லை என்று கேள்விப்பட்டேன். எப்படியேனும் நிச்சயமாகப் பார்த்துவிடுங்கள். தவிர்க்கக்கூடாத படம் இது!
அவதார் – பிரமிப்பு!
.
28 comments:
நல்ல அலசல் ஆனா கொஞ்சம் தாமதமாக!
//தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஒரு தியேட்டர் (Kanagadara) தவிர வேறெங்கும் 3 D இல்லை என்று கேள்விப்பட்டேன். //
இல்லைங்க.மதுரையில குரு தியேட்டர்ல 3-D தான்.
ஹையா மீ தி பஸ்ட்டு!!!
//நாம் பன்ச் டயலாக்குகளுக்கு எடுக்கும் சிரமத்துக்கு கிஞ்சித்தும் குறையாதது அது!//
:)))))
இரண்டாம் நாளே பார்த்துட்டோம்ல...
இந்தியக் கலாச்சார பாதிப்பு இருந்ததைச் சொல்லாம விட்டுட்டீங்களே!. வசனத்தில்( விவேகானந்தர்),ஒப்பனையில்
(நாமம், கொஞ்ச டிசைனா ) இருக்கிறது.
உண்மையிலே அற்புதமான படைப்பு. இங்கே லண்டனில் இன்னும் ஹவுஸ்புல் தான். எல்லோருமே விமர்சனங்களுக்கு அப்பால் கொண்டாடுகிறார்கள். எனது இந்திய நண்பர் சொன்னார் ராமாயணத்தில் இருந்து அனுமார் வாலையும், மகாபாரதத்தில் இருந்து கிருஷ்ணன் நிறத்தையும், முருகன் மயிலில் ஏறி பறப்பதையும் சுட்டுவிட்டார்கள் என்று. கிட்டதட்ட ஒத்துபோகிறது அவரின் ஒப்பீடு. நான் இரண்டு தடவை பார்த்தும் ஒன்ச்மொர் கேக்கிறது என் மனசு.
3d லதான் பாக்கணும்..! அடுத்தவாரம் பாத்துருவோம்..!
மதுரை குரு தியேட்டரில் புத்தம் புதிய SONY 4K PROJECTOR தொழில்நுட்பம் தமிலகத்திலயே மதல் முறையாக பயன்படுதப்படுள்ளது.
@ வெற்றி
3 இடியட்ஸுக்கு முன்பே பார்த்திருந்தாலும், வேறு பதிவுகள் இருந்ததால் தாமதமாயிற்று!
மதுரையில் 3 டியா! இது மாதிரி தகவல்கள் வரவேண்டுமென்பதால்தான் அந்த வரியையே எழுதினேன். மிக்க நன்றி நண்பா! (கோவையில் இரண்டு வாரங்களுக்கு ஹவுஸ்ஃபுல் என்று எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னிடம் இருந்த ஃப்ரீ ஃப்ளைட் டிக்கெட்டை இதற்க்காக ஹைதராபாத் சென்று இந்தப் படம் பார்த்தார்!)
@ அரங்கப்பெருமாள் & கேதாரன்
இந்தியப்பாதிப்பு மிக அதிகம். நாயகனின் நெற்றியில் நாமம் கூட இருக்கும். யோகாவை சரியாகப் பயன்படுத்தினால் உயிரைக் காப்பாற்றலாம் என்பதையும் காட்டியிருப்பார்கள்!
@ சுரேகா
:-)
@ ஐன்ஸ்டீன் ரவி
ஓ... நன்றி!
ஹைதராபாத்தில் ஐமேக்ஸ்.. பரிசல் அது இதிலெலலம் உச்சம்.. ம்ம்.. எப்படியாவது ஒரு டிஸ்கஷன் டீமை பிடிச்சு ஹைதை போய் பார்த்திரணும்..
@ கேபிள் சங்கர்
சொல்லுங்கய்யா...
கொடுத்துவெச்ச ஆசாமிங்க... போய்ப் பார்த்துத் தொலைங்க...
ரொம்ப தான் “அவதார்” பத்தி பேசறீயளே... அது நம்ம இளைய தளபதி (தலைவலி) நடித்த (???!!!) “வேட்டைக்காரன்” படத்தை விட நல்லா இருக்கா தல??
கோபி வாழ்க..
ஒரு இனத்தின் வாழ்வியல் ஆதாரங்களைச் சுரண்ட நினைக்கும் சக்திவாய்ந்த ஒரு கூட்டம். அதை எதிர்த்து உணர்வுபூர்வமாக உயிரைக் கொடுத்துப் போராடும் ஒரு கூட்டம். ‘Let us fight terror with terror' என்கிற புகழ்பெற்ற ஏகாதிபத்தியங்களின் வசனம். அரசியலும் பேசியிருக்கிறாரோ கமரூன் என்று எண்ண வைக்கிற படம். இன்னும் கொஞ்சம் வன்மையாக அரசியல் பேசியிருக்கும் வாய்ப்புள்ள ஸ்கிர்ப்ட்டில் அடக்கி வாசித்திருக்கிறார். Sci-Fi படங்களுக்கு ஒரு புதிய உயரத்தைக் காட்டியிருக்கிறார்கள். 3-D ல வாயைப்பிளந்து பார்த்துவிடக்கூடிய படம்.
நண்பன் செழியனின் comment:
Its a light movie which does not give much work for our heart. Its a movie for young at heart.
ஹைதை ஐமாக்ஸில் இந்தப்படத்தின் முழுமையை உணரலாம். சென்னையில் அது போல ஒரு திரையரங்கம் இல்லாதது இழுக்கு.
அடுத்த வாரம் வம்படியாக ஹைதை சப்ளையர் விசிட் பிளான் பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். :-))
அருமையான விமர்சனம்
படம் நல்லாருக்கு
என்னது வேட்டைக்காரனை ஹைதராபாத் போய் ஐமேக்ஸ்ல பார்த்தாரா?
யாரந்த நண்பர்.....
அப்பாடா 2154 தான் ; 2012 னு ரொம்ப பயந்து இருந்தேன்
(ஹா ஹா சும்மா ஜோக் தான்.)
வளம் பல பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள் பரிசல்
நல்ல விமர்சனம்!!!
Wish you happy New year!!!
பார்த்தேன் வியந்தேன்...
@ Gopi
அது மாதிரியே இதுலயும் நீர்வீழ்ச்சில குதிக்கற சீனெல்லாம் இருக்கு!
@ கார்க்கி
ஆமாய்யா..
@ கிருத்திகன்
விரிவானதொரு அலசல்! பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.
@ ஆதி
நிச்சயமா போங்க பாஸு
@ ஸ்டார்ஜன்
நன்றி!
@ வெயிலான்
யோவ்.. தலைவர்னு பார்க்கறேன்...
@ நாய்க்குட்டி மனசு
நன்றி!
@ ப்ரியா
தேங்க்யூ! சேம் டு யூ!
@ முனைவர்
நன்றி ஐயா!
@ காவேரி கணேஷ்
பாஸூ.. நான் உங்க பக்கத்துலதான் படிச்சேன். நன்றிங்க..
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ இருக்கு...
//மதுரையில் 3 டியா!//
ஹலோ பாஸ் நாங்களும் ரவுடிதான்!!
சினிமால காட்டுற மாதிரிலாம் இல்ல..ரொம்ப நல்ல ஊரு..ஒரு தடவ வந்து பாத்துட்டு அப்புறம் பேசுங்க..
சில மாதங்களாக உங்கள் வலைப்பதிவுகளைப் படித்து வந்திருக்கிறேன்..இப்பொழுது தான் முதன்முறையாக பின்னூட்டம் இடுகிறேன். சென்ற வாரம் அவதார் பார்த்து விட்டு விமர்சனம் எழுத ஆரம்பித்து சில தடங்கல்களுக்குப் பிறகு இன்று தான் முடித்தேன்..அதை முடித்து விட்டு இங்கு வந்தால் உங்கள் விமர்சனம்!! நல்ல விமர்சனம். பெண்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி யாரும் இதுவரை கூறாத கண்ணோட்டத்தில் கூறியது அருமை.
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
உங்களுக்கு ஒரு மடல் அனுப்பி இருக்கிறேன்.பதிலை எதிர்பார்த்து,நன்றி
படித்தேன் அய்யா.
நன்று.
படமும் நல்லா இருந்தது.. விமர்சனமும் அருமை
டைட்டானிக்கை எடுத்த அதே டைரக்டர். மீண்டும் ஒரு வெற்றி சித்திரம். காண கண் கோடிவேண்டும். வியாழன் துபாயில் IBN BATTUTA MALL லில் உள்ள IMAX ல் (3D) பார்த்தேன்... அசந்து போய்விட்டேன். எல்லாமே இருக்கிறது... அந்த காதல் நம்மை ஒரு நிமிடம் கண் கசியவைக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத ஒரு படைப்பு. காண நண்பர்கள் உடனே காணுங்கள்.
அன்புடன்
கண்ணன், துபாய்
Post a Comment