புதியதாய் ஒரு புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்க்கும் அதே சந்தோஷம் புதியதாய் வெளியாகும் படப்பாடல் சி.டி.யை வாங்கி கவரைப் பிரித்து, பாட்டு எழுதியவர்கள், பாடியவர்கள் என்று பார்க்கும்போதும் அப்படியே இருக்கிறது. அந்த உற்சாகம் மட்டும் எனக்கென்னவோ குறையவே இல்லை.
அந்த வகையில் எனக்கு சென்ற வாரம் நல்ல வேட்டை. விண்ணைத்தாண்டி வருவாயா, கோவா, தமிழ்படம் என்று மூன்று சி டிக்கள்.
கோவா பாடல்களில் முதல் பாடல் மாஸ் ஹிட்டாகப்போவது உறுதி. ‘ஏழேழு தலைமுறைக்கும்’ என்று ஆரம்பிக்கும்போதே அடி அமர்க்களப்படுத்துகிறார் யுவன். இது அவர்களின் குடும்பப்பாடலாக ஒலிக்கிறது. ஒரே ராஜா வீட்டுப் புராணம்தான். தவிரவும், யுவன் மட்டும் ‘ஏலேலு தலைமுறைக்கும்’ என்கிறார். (சி டி கவரிலும் YEZHEZHU என்று போடாமல் YELELU என்றுதான் போட்டிருக்கிறார்கள்.) கோவாவில் இளையராஜாவை அப்படியே ஃபாலோ செய்திருக்கிறார். தீம் சாங்கில் மட்டும் யுவன் டச்.
விண்ணைத்தாண்டி வருவாயா - எல்லாராலும் எதிர்பார்கப்பட்ட ஹோசானா - மாஸ் பீஸ். பாடலின் ஆரம்பவரிகளில் தாமரை இவ்வாறு எழுதியிருக்கிறார்.
“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே!”
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சுவாரஸ்யமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அவனுக்கு எப்படி இரண்டு இதயங்கள்? அவளுடைய இதயத்தையும் சேர்த்து இரண்டா? இப்படி அப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
மற்ற பாடல்களில் ஓமனப் பெண்ணே பிடித்தது.
Dark Horse என்பார்களே.. அப்படி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்தது தமிழ்படம் பாடல்கள். இசை கண்ணன் என்று ஒருவர்.
‘பச்ச மஞ்ச கருப்புத்தமிழன் நான்’ என்றொரு ஹீரோ இண்ட்ரோ சாங்.
‘சுனாமியின் பினாமியே
குள்ளநரிகளை ஒழிக்க வந்த நல்ல நரியே
கன்னி கழியாத கவர்ச்சிக் கண்ணனே
நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்
ஒரப்பனுக்குப் பிறந்த ஆம்பளை’ என்று ஆரம்பமே படு அமர்க்கள்ம்.
‘ஆஸ்கார் எல்லாம் எனக்கு அம்பாசிடர் காருடா
ஸ்லம்டாக் கூட எனக்கு சப்ப மேட்டர்டா’ - வரிகள் ஒவ்வொன்றும் அதிரடி. இந்தப் பாடலைக் கேட்டபின் யாரும் தன்னை பச்சைத்தமிழன் என்று பறைசாற்றிக் கொள்வார்களா என்பது சந்தேகமே.
வரிகளைக் கூர்ந்து கவனிக்கும் என் போன்றவர்களுக்கு ஜாக்பாட் ஹரிஹரன், ஸ்வேதா மோகனுடன் சேர்ந்து பாடியுள்ள ‘ஓ மகஸீயா’ பாடல். இத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை ஒட்டுமொத்தமாக ஒரே பாடலில் கடந்த வருடங்களில் நான் கேட்டதேயில்லை. பாடல் எழுதியவர் என்று அமுதன் & சந்துரு என்று பெயர் போட்டிருக்கிறார்கள்! எத்தனை சிரமப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் தெரிகிறது. அற்புதமான மெலடி! அதுவும் ஹரிஹரன் அவ்வளவு சிரத்தையுடன் இதைப் பாடுகையில்... கலக்கல்!
ஐட்டம் சாங்கான ‘குத்துவிளக்கு’ பாண்டி படத்தின் ‘குத்துமதிப்பா’வின் நோட்ஸ்களோடு ஒத்துப் போயிருக்கிறது. அடுத்த பாடலான ‘ஒரு சூறாவளி கிளம்பியதே’ சபதப்பாடல். எப்படித்தான் சங்கர் மகாதேவன் சிரிக்காமல் பாடினாரோ என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. ஜனவரி 29க்காக காத்திருக்கிறேன். அன்றுதான் படம் ரிலீஸாம்.
ஆஃபீஸுக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்தாலும் பார்ப்பேன். அவ்வளவு ஆவலாய் இருக்கிறேன்.
******************************
பொங்கல் விடுமுறைக்கு மதுரை-திருச்செந்தூர் பயணித்தேன். (நன்றி: சீனா ஐயா) மதுரையில் இருந்தபோது சூரிய கிரகணத்தால் கோவில்களுக்கு விடுமுறை. வீதிகளில் அங்கங்கே CM அழகிரிக்கு வாழ்த்து போஸ்டர்கள். (பக்கத்தில் சென்றபோதுதான் அது Chemical Minister என்று தெரிந்தது) மதுரையில் திருமலைநாயக்கர் மஹால் சென்றேன். சென்ற முறையை விட அதி சுத்தமாக இருந்தது.
மதுரை டூ திருச்செந்தூர். நெல்லைக்கு அப்புறம் திருச்செந்தூர் வரை சாலையில் இருபக்கமும் பசுமை கண்ணைக் கொள்ளை கொள்கிறது.
திருச்செந்தூர். கோவிலில் ஒரு பாதுகாப்புமில்லை. நிறைய பேர் க்ளாக் ரூமைப் பயன்படுத்தாமல் தாங்கள் கொண்டு வந்த சூட்கேஸ், பேக்குகள் சகிதம் ஆலயத்தினுள் பிரவேசித்துக் கொண்டிருந்தனர். சுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்ளேயும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் இருந்தது. திடீரென்று பத்து பேரை நடுவில் ராஜமரியாதையோடு கொண்டு சென்றார்கள். திடீரென்று லைனில் நிற்பவர்களை பின்னுக்குத் தள்ளினார்கள். ஒரு வரைமுறையோ, மண்ணாங்கட்டியோ எதுவுமே இல்லை. பத்து லட்சம் கொடுத்தால் ஒரு மணி நேரம் சிலையை வைத்துக் கொண்டு பீச்சில் விளையாடிவிட்டு வரலாம் என்று அறிவிக்காத குறை.
எனக்கு கடல் அருகில் இருப்பதால் திருச்செந்தூர் பிடிக்கும்.
திருச்செந்தூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, ஆதியை அழைத்தேன். ‘வர்ற வழில வனத் திருப்பதின்னு ஒரு கோயில் இருக்கு மிஸ் பண்ணீடாதீங்க’ என்றார். தேடிப் பிடித்து போனேன்.
கோவிலுக்கு முன்னால் செல்லும்போதே காரை நிறுத்திய செக்யூரிடி அலுவலர் ஒருவர் கார் நம்பரைக் குறித்துக் கொண்டு, நிறுத்த இடம் தேடி விசிலடித்து பார்க் செய்ய உதவுகிறார். நீஈஈஈஈஈளமான க்யூ. ஆனால் அமைதியாக வரிசையாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு குப்பை இல்லை. சத்தம் இல்லை. நேரமின்மையால் கோயிலுக்குள் செல்லவில்லை. ஆனால் ஊழியர்கள் எல்லாரையும் அமைதியாக வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். பொதுமக்களும் சீரான இடைவெளியில் சென்று கொண்டே இருந்தார்கள். தரிசனம் முடித்து வெளிவரும் எல்லாருக்கும் அன்னதானம். இவ்வளவு நேர்த்தியாய் இருப்பதுதான் தனியார் வசம் கோயில்கள் இருப்பதன் சிறப்பு என நினைத்துக் கொண்டேன்.
“உள்ள உண்டியல்கூட இல்ல” என்று பேசிக்கொள்வது கேட்டது.
விசாரித்தேன். யாரிடமும் நன்கொடை வாங்குவதில்லையாம். தனியார் நடத்தும் கோயிலான இங்கு எல்லா செலவும் அவர்தான் செய்கிறாராம். 2009 ஜூன் அல்லது ஜூலைதான் கும்பாபிஷேகம் நடந்ததாம்.
யாரென்று கேட்டேன். சொன்னார்கள்.
“சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்”
**************************************
போகும் வழியில் (ஜனவரி 16 அன்று) பார்த்தேன் இந்தப் போஸ்டரை. டிசம்பர் 18 ரிலீஸான இந்தப்படம் ஜனவரி 16 அன்று 40 நாட்களைத் தொட்டிருக்கிறது. சபாஷ்!
‘காலத்தை வென்றவன் நீ’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம்.
‘இதைப்போய் வேலை மெனக்கெட்டு ரோட்ல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு..’ என்று உமா திட்டினார்.
இன்று காலை அண்ணாச்சி (மேல சொன்ன அண்ணாச்சி இல்ல, நம்ம அண்ணாச்சி வடகரைவேலன்) மெயிலில் என்ன கொடுமை இது?’ என்று கோவையில் எடுத்த இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்!
ஒண்ணும் தப்பில்லைங்கறேன்...
.
40 comments:
நைஸ் கலவை பரிசல்.
வேலன் சாரும் வீட்டுல திட்டு வாங்கினாரா இல்லையான்னு கேட்டு எழுதி இருக்கலாம் :)-
//Labels: Goa , கோவா , தமிழ்படம் , திருச்செந்தூர் , வனத்திருப்பதி , விண்ணைத்தாண்டி வருவாயா //
லேபலில் வேட்டைக்காரன் இல்லாததை மென்மையாக கண்டிக்கிறேன்.
40வது நாளை விடுங்க பரிசல்.. ஆத்துரில் இதுக்கு முன்னாடி எந்த படமாவது 30 நாள் ஓடுச்சான்னு கேட்டிங்களா?
//இந்தப்படம் ஜனவரி 16 அன்று 40 நாட்களைத் தொட்டிருக்கிறது.//
:)
@ மணிகண்டன்
இல்லையாம்!
@ அறிவிலி
200 Characterக்கு மேல லேபிள் எடுத்துக்கல பாஸ். அவரு எல்லாருக்கும் தெரிஞ்ச கேரக்டர்தானேன்னு விட்டுட்டேன்!
@ கார்க்கி
அதுக்கு?
@ சின்ன அம்மணி
:-))
//காலை அண்ணாச்சி (மேல சொன்ன அண்ணாச்சி இல்ல, நம்ம அண்ணாச்சி வடகரைவேலன்) மெயிலில் என்ன கொடுமை இது?’ என்று கோவையில் எடுத்த இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்!//
எல்லோரும் மெயிலில் அனுப்புவோம்
\\“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே!”
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சுவாரஸ்யமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன். \\
ஒண்ணியுமில்ல..பைபிள் ரீமிக்ஸு..!
“ஒரு கன்னத்துல அறைஞசாக்கா, மறுக்கா மறு கண்ணத்தைக் காட்டு மாமேய்..”
:-)
/ஒண்ணும் தப்பில்லைங்கறேன்...
//
அதானே அப்புறம் நாம ஏதாவது சொல்லி நம்மை காச்சறதுக்கா..:)
ஆஃபீஸுக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்தாலும் பார்ப்பேன். அவ்வளவு ஆவலாய் இருக்கிறேன்//
இதெல்லாம் உண்டா?
எங்க ஊர் (நெல்லை) தாண்டி போனீங்களா? வன திருப்பதியும் நவ திருப்பதியும் ஒண்ணா தெரியல. யாராவது நெல்லை bloggers காண்டாக்ட் பண்ணி பார்த்திருக்கலாமே?
பொறப்பதற்குப் பிறந்த ஆம்பளை//
ஒரு அப்பனுக்கு பிறந்த ஆம்பளை..
பாடலில் பிழை உள்ளது புலவரே!
// இத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை ஒட்டுமொத்தமாக ஒரே பாடலில் கடந்த வருடங்களில் நான் கேட்டதேயில்லை. பாடல் எழுதியவர் என்று அமுதன் & சந்துரு என்று பெயர் போட்டிருக்கிறார்கள்! எத்தனை சிரமப்பட்டிருக்கிறார்கள்///
அண்ணே இது "தமிழ் படம்"...இதெல்லாம் சகஜம்....
பரிசல் மற்றும் அனைவருக்கும்,
லேபிள் என்பது குறிச்சொல் என்பது போல் ஒரு கருத்து நிலவுகிறது. கோவா என்று லேபிள் வைத்தால் கூகிளில் தேடிபவர்களுக்கு நம் பதிவு தெரிய அவ்ருமென்று நினைக்கிறார்கள். பதிவில் கோவா என்று இருந்தாலே போதும். லேபிள் நம் பிளாகில் உள்ள பதிவுகளை தொகுக்க பயன்படுத்தலாம்.
இப்போ பரிசல் எழுதிய சிறுகதைகளை ஒன்றாக வாசிக்க நினைப்பவர்களுக்கு அந்த சுட்டி கிடைக்காது. ஏதாவ்து ஒரு சிறுகதையை தேடி அதில் இருக்கும் லேபிளை க்ளிக் செய்து போக வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட லேபிள்களை வைத்துக் கொண்டு அதற்கான லிங்கை சைடு பாரில் கொடுத்தால் நல்லா இருக்கும். என் பிளாகில் பாருங்கள்..
எந்தப் பதிவு எழுதினாலும் அங்கிருக்கும் லேபிளகளில் அடங்கிவிடும். நிறைய லேபிள் போடுவதால் ஒரு பயனும் இல்லையென நினைக்கிறேன். அபப்டி ஏதாவ்து இருந்தால் பகிரவும்
கார்க்கி கருத்தை ஆமோதிக்கிறேன்!!
\\காலத்தை வென்றவன் நீ’ என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடலாம்//
:)
\\ஆஃபீஸுக்கு லீவு போட்டுவிட்டுப் பார்த்தாலும் பார்ப்பேன். அவ்வளவு ஆவலாய் இருக்கிறேன்//
இதென்ன ப்ரமாதம்.. நான் இங்க இருந்து தமிழ்நாடு வந்து பர்ஸ்ட் ஷோ பாக்கற அளவு தமிழ்படம் ஆர்வத்தை கிளப்பிவிட்டுருக்கு.. ;))
திருச்செந்தூர்ல வள்ளி பதுங்கி ?? இருந்த குகைன்னு இருக்கு. பார்த்தீங்களா ?
உண்டியல் ஒரு கோயிலில் வைத்தால், அது அறநிலைத் துறை வசம் சென்றுவிடும் என்று கேள்வி.
//40வது நாளை விடுங்க பரிசல்.. ஆத்துரில் இதுக்கு முன்னாடி எந்த படமாவது 30 நாள் ஓடுச்சான்னு கேட்டிங்களா?
//
கார்க்கி!
ரொம்ப கவலைப்படாதீங்க. நம்ம உள்ளகரம் குமரனிலேயே 5வது வாரமா வேட்டைக்காரன் ஓடிக்கிட்டிருக்கான். பொங்கலுக்கு புதுப்படம் ரிலீஸ் பண்ணாம ஓடிக்கிட்டிருக்கிற படத்தையே கண்டினியூ பண்ணுறது உள்ளகரம் குமரன் வரலாற்றில் இதுதான் முதல்முறை :-)
//வரிகளைக் கூர்ந்து கவனிக்கும் என் போன்றவர்களுக்கு ஜாக்பாட் //
நீ வரியை மட்டும்மா கூர்ந்ந்ந்ந்ந்ந்ந்து கவனிப்ப ராசா?:) ஜாக்பாட் குஷ்..விடு நான் ஒன்னும் சொல்லவில்லை!
கார்க்கி, இவங்களுக்கு வேட்ட..வேட்ட..
வேட்டக்காரந்தான் வரணும். எடுறா பொருள. விடுறா சுமோவ.
அனுஜன்யா
அனுஜன்யா
இவங்களுக்கு வேட்ட..வேட்ட..
வேட்டக்காரந்தான் வரணும்.//
அதுக்குதான் நீங்க வந்துட்டீங்களே:)
//எடுறா பொருள. விடுறா சுமோவ. //
கார்க்கி: இந்தா எசமான் பொருள்
அனு: என்னடா இது?
கார்க்கி: நீங்க எழுதின கவிதை பிரிண்டவுட் பேப்பரு எசமான், இத அப்படியே ராக்கெட் மாதிரி செஞ்சு மக்கள் மேல விட்டா அப்படியே கொத்து கொத்தா சாவானுங்க..
//பத்து லட்சம் கொடுத்தால் ஒரு மணி நேரம் சிலையை வைத்துக் கொண்டு பீச்சில் விளையாடிவிட்டு வரலாம் என்று அறிவிக்காத குறை//
:))))))))))
எல்லாஞ்சரி..
என் அப்பன் முருகன் என்ன சொன்னான்..?
//மதுரை டூ திருச்செந்தூர். நெல்லைக்கு அப்புறம் திருச்செந்தூர் வரை//
மதுரையிலிருந்து திருச்செந்தூர்க்கு மதுரை - அருப்புகோட்டை - தூத்துக்குடி - திருசெந்தூர் தன சார்ட் ரூட். நெல்லை வந்து போக வேண்டிய அவசியம் இல்லை. மதுரை மாட்டு தாவணியில் இருந்து திருச்செந்தூர்க்கு தூத்துக்குடி வழியாக நிறைய பஸ்கள் உள்ளன.
அப்புறம் அந்த 'வன திருப்பதி - ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்' கோவில் சென்ற ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. கோவில் இருப்பது திருச்செந்தூர்ல் இருந்து நாசரத் போகும் வழியில் உள்ள 'புன்னையடி கிராமம்'. இது தான் அண்ணாச்சி ராஜகோபாலின் சொந்த ஊர். அண்ணாச்சி அவர் மீதுள்ள வழக்குகளில் இருந்து விடுபட ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இந்த கோவிலை கட்டி உள்ளார் என்று ஊர் பக்கம் பேசுகிறார்கள்.
இந்த வனத்திருப்பதி கோயில் எங்கெங்க இருக்கு?...கொஞ்சம் ரூட் சொல்லுங்களேன்!.....நானும் போகணும்!
//கார்க்கி//ஆத்தூர்ல நிறய்ய படம் 50 நாள் தாண்டி ஓடிருக்கு!..கில்லி உள்பட!....
//டிசம்பர் 18 ரிலீஸான இந்தப்படம் ஜனவரி 16 அன்று 40 நாட்களைத் தொட்டிருக்கிறது. சபாஷ்!//
பரிசல் உங்கட்ட 600க்கு வாழ்த்துக்கள்ன்னு இப்போ சொன்னா அத வேணாம்னு சொல்வீங்களா?
அது மாதிரிதான் இதுவும்..
லேபிளை பற்றிய கார்க்கியின் கருத்து மிக சரி..நிறைய பேரு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க..நானும் முதல்ல அப்படிதான் நினைச்சேன்..அப்புறம் ஒரு சோதனை பண்ணி உண்மைய தெரிஞ்சுகிட்டேன்..
வோட்டைகாரன் மேட்டர் சூப்பர்
@ சுரேஷ்
நன்றி
@ ராஜூ
எங்களுக்கெல்லாம் ரெண்டு கன்னம் இருக்கு. ஒரு இதயம்தானே இருக்கு பாஸ். நீங்க சொல்ற லாஜிக் ஒத்து வரல!
@ கே சங்கர்
:-)
@ நா.மனசு
நவ திருப்பதி பார்த்தேன் (போர்ட்) டைமில்ல.
@ பப்பு
தப்பு. நான் சொன்னதுதான் சரி. நல்லா கேளுங்க பாஸ்.நீங்க சொல்றது சீரியஸ் மேட்டர். இது காமெடி பீஸ்!
@ செந்தில்நாதன்
நல்லாருக்கு பாஸ்.
@ கார்க்கி
அட. இது புரியாம இத்தனை நாள் கெடந்து மெனக்கெட்டு..
இப்ப நான் எல்லாத்துலயும் லேபிளை மாத்தலாமா?
@ மு. க
வந்துட்டுதான் போங்களேன். வொர்த்தா இருக்கும்.
@ பின்னோக்கி
ஓ! உண்டியலுக்குப் பின்னால் இப்படி ஒரு மேட்டர் இருக்கா! சபாஷு!
@ லக்கி
வரலாறா? அதுசரி!
@ குசும்பன்
இது MFM அல்ல!
@ அனுஜன்யா
பாருங்க.. அவன் பின்னாடியே வந்து தலையைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கறீங்களே சார்..
@ கண்மணி
நன்றி
@ உண்மைத்தமிழன்
உண்மைத்தமிழனை நாலு வரில ஒரு கதை சொல்லச் சொல்லுன்னான். நான் கெளம்பி வந்துட்டேன்!
@ எம் எஸ் குமார்
நான் கார்ல போனேன்,. இந்த ரூட் நல்லா இருந்ததால போனேன்.
ஜோசியர் ஆலோசனையா இருக்கும்னு நானும் நெனைச்சேன்.
@ நேசன்
மேலேயே பதில் இருக்கு பாருங்க. உங்க ப்ரொஃபைல் படத்துல அந்தப் பக்கமா பார்க்கறதால தெரியல.. அப்படியே இந்தப்பக்கம் திரும்புங்க தெரியும்!
@ வெற்றி
இந்த லாஜிக் சூப்பர்ங்க. பதிலே சொல்ல முடியல!
@ பி பிரபு
நன்றி.
வேட்டைக்காரன் போஸ்டர்... ஏங்க... ஏங்ணா உங்களுக்கு இந்தக் கொல வெறி?
@ கிருபாநந்தினி
நன்றீ!
@ பப்பு
சரிதாம்பா நீ சொன்னது. ஸாரி! மாத்திட்டேன்!!!
அந்த வேட்டைக்காரன் மேட்டர் அருமைங்க..
அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. :)
ரயில்லே செகண்ட் ஏசியில் போறார் டெலிபோன் கிளார்க் ஜெயமோகன்.
திருப்பூர் பனியன் கம்பெனியிலே வேலை பண்ணுறே நீங்கள் காரிலே ஊர் சுத்துறீங்க! ம்... நடத்துங்க!
உங்க பதிவு அருமை. குசும்பனின் கலாட்டா செமையாய் சிரிக்க வைத்தது
@ இரவுப்பறவை
நன்றி.
@ Raju
என்னுடன் உமாவின் அன்னையும் வந்திருந்தார். வயதான அவர் உடல்நிலை கருதியே காரில் சென்றோம். தேவைப்படும்போது நிறுத்திக் கொள்ளலாம் என்பதால். மற்றபடி நீங்கள் நினைக்கும் அளவு நான் ‘பெரிய’வனில்லை. பணத்தில்!
@ மோகன்குமார்
நன்றி பாஸ்!
வேட்டைக்காரனின் முகத் திரையை கிழித்தமைக்கு நன்றி. ஆனால் சினிமா பயித்தியம் பிடித்து தமிழ் நாடு உள்ள வரை இது போன்ற நிகழ்வுகள் நிற்கப்போவதில்லை
தமிழ் படத்தின் பாடல்கள் பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு நன்றி பரிசல் அவர்களே ,
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி உள்ளதோடு படத்தின் துணை
இயக்குனராகவும் பணியாற்றி உள்ளேன் . படம் நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும். ரிலீசுக்கு பிறகு ஒரு சக பதிவராய் உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி
அன்புடன்
கே.சந்துரு
தொடர்புக்கு :chandrumin@gmail.com
Post a Comment