அவர் என் பதினைந்து வருடகால நண்பர். முகம்மது உசேன் அவர் பெயர். உடுமலைப்பேட்டையில் வ.ஊ.சி. வீதியில் ‘கனலி கலைக்கூடம்’ என்ற பெயரில் ஆர்ட்ஸ் நடத்தி வந்தார். மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பெரியாரின் கொள்கைகளில் பிடிப்பானவர். கனலி என்றுதான் அவரை அழைப்போம்.
சின்னக் கடை. ஆனால் எங்கள் நட்பு வட்டாரத்திற்கு விசாலமான இடமாக அந்தக் கடை இருந்தது. கனலி நிஜமான ஒரு கலைஞன். மனிதன். ரசிகனாய் வாழ்க்கை நடத்தி வந்தார். நான், செந்தில், செந்தில்குமரன் என்று எங்களைச் சார்ந்த யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சலோ, சங்கடங்களோ இருப்பின் அவரைத் தேடி ஓடுவோம்.
"வாங்க கிருஷ்ணா.. பாட்டு கேக்கலாமா?" என்பார். இரண்டு பெரிய ஸ்பீக்கர் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட ப்ளேயர் வைத்திருந்தார். எங்களுக்கென்றே ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் வைத்திருப்பார். ‘ஆலோலம் பாடி..’ என்று இசைஞானியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் எங்கள் உலகம் வேறு திசை நோக்கி பயணிக்கும். இசை குறித்த கலந்துரையாடலில் ஆரம்பித்து உலகின் எல்லா சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராய்வோம். ஏதேனும் போர்டு வரைந்து கொண்டே எங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார் கனலி.
படம் வரைவதிலோ, போர்டுகள் எழுதுவதிலோ இறங்கிவிட்டால் முழு மனதுடன் பணி புரிவார். எளிதில் திருப்திப்பட மாட்டார். அவரது சொந்தக் கடை விளம்பர போர்டு வைப்பதற்கு என்ன அக்கறை எடுப்பாரோ அதே அக்கறையை ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வரும் முகம் தெரியாத ‘திருவிழா வருதுங்க. நம்ம ரசிகர் மன்றம் சார்பா ஒரு தட்டி வைக்கணும்’ என்று வரும் ஆர்டர்களுக்கும் காட்டுவார். நான் குற்றங்கள் கண்டுபிடித்தே பழக்கப் பட்டவன். நான் போகும்போது என்ன எழுதி/வரைந்து கொண்டிருந்தாலும் சரி நான் ஏதாவது சொல்வேனா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.
ரேட்டில் கறாராக இருப்பார். ‘மத்த பக்கம் இப்படி அப்படி’ என்று வாடிக்கையாளர்கள் சொல்லும்போது சின்ன புன்னகையோடு தலையாட்டுவார். சொன்ன நேரத்திற்கு ஆர்டரை முடிப்பது, பில் கொடுப்பது, ஒரு ஆர்டருக்கான படங்களுக்காக பழைய புத்தகக்கடைகளில் அலைந்து படம் தேர்வு செய்வது என சின்னத் தொழிலானாலும் ஒரு கார்ப்பரேட் அம்சங்களுடன் நடத்துவதில் அவருக்கு பிரியம் அதிகம்.
கடைக்கு காலை பத்து மணிக்குத்தான் வருவார். தனது டி.வி.எஸ்-சில் கூலிங்க்ளாசுடன் வந்து கடைதிறந்து அன்றைய வேலைகளைத்திட்டமிடுவார். தனது வண்டியை அப்படி பார்த்துப் பார்த்து வைத்திருப்பார். தினமும் துடைத்து பளபளப்பாயிருக்கும். வெளியில் வேலை என்றால் கடைமுன் வைத்திருக்கும் சின்ன கருப்பு போர்டு ஒன்றில் எங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எத்தனை மணிவரை அங்கிருப்பார் என்று எழுதிவைத்துவிட்டு தான் கிளம்புவார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கானது. கேரம்போர்டில் உட்கார்ந்தால் மாலை வரை விளையாடுவார். ஏதாவது படத்திற்கு ஈவ்னிங் ஷோ போகாமலிருக்க மாட்டார்.
இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன் "ப்ளக்ஸ் பேனரெல்லாம் வந்துடுச்சு கிருஷ்ணா. இனி இந்தத் தொழில்ல காலத்தை ஓட்டறது கஷ்டம்தான். நானும் திருப்பூர் வர்லாம்னு இருக்கேன்" என்றார். கடையை மூடிவிட்டு குடும்பத்தோடு திருப்பூர் வந்தார். சொந்தக்காரர் ஒருவரின் மீன் கடையில் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தார். ஒரு முதலாளியாக கடை நடத்திக் கொண்டிருந்தவரை கொதிக்கும் எண்ணைச் சட்டி முன் கரண்டியோடு தினமும் பார்ப்பது கொடுமையான விஷயம். அவருக்கு ஏற்ற வேலை தேடிக் கொடுக்க எனக்கு சிரமமாக இருந்தது. பெரிய நிறுவனங்களில் சேர்த்துவிட்டால் ஏதேனும் ஒரு இன்சார்ஜுக்கு கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சின்னதொரு கம்பெனியில் முதலாளிக்கு அடுத்து இவர் இருக்கும்படியான ஒரு போஸ்ட்டில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மாறி இப்பொழுது சின்னதொரு பிரிண்டிங் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
அவர் கடை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது `dr ஆர்ட்ஸ்' (இவரும் எங்கள் நண்பர்தான்!) நடந்துவருகிறது. கம்ப்யூட்டர் ஒன்று வைத்து, ப்ளக்ஸ் போர்டு டிசைன் செய்து வருகிறார் DR. கனலி இருக்கும்போது ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஒரு பெரியாரின் படத்தை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது மலேசியா முருகன் ப்ளக்ஸில் பிரம்மாண்டமாய் நிற்கிறார். (‘பில்லா படத்துக்கு வெச்சதுங்க’)
சில மாதங்களுக்கு முன் செந்திலுடன் வீட்டிற்கு வந்தார் கனலி. பேசும்போது அவரைப்பற்றி சொன்னார்..
"எப்படி இருந்தேன் கிருஷ்ணா நான்? ஒரே மாசத்துல புரட்டிப்போட்ட மாதிரி ஆய்டுச்சு என் வாழ்க்கை. நான் சொல்றத மட்டும்தான் நான் கேட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படி முடியல கிருஷ்ணா. எல்லார்கிட்டயும் பொறுமையா இருக்கவேண்டியதாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. பிரிண்டிங் ஆர்டர் எடுத்துட்டு அம்பது கிலோ, அறுபது கிலோ மூட்டையை என் வண்டில வெச்சுட்டு ஓட்ட முடியாம ஓட்டி, இந்த ரெண்டு வாரத்துல மூணு தடவை விழுந்துட்டேன். வண்டி எப்படி வச்சிருந்தேன்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க. முன்னாடி டயர்ல உள்ள இருக்கற ட்யூப் தெரியுது. மூட்டையை சுமந்துட்டு மாடில இருக்கற பிரிண்டிங்குக்கு தனி ஆளா ஏறி கொண்டுபோறேன்.. மூவாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம். அதுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வாழ்ந்துட்டிருக்கேன். சினிமாக்கு போறதில்லை, பாட்டு சி.டி. வாங்கறதில்ல, புத்தகமெதுவும் வாங்கறதில்லை, மனைவி, குழந்தைகளை வெளில கூட்டிப் போறதில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட எனக்காக ஒதுக்க முடியல. ஒரு கலைஞனா இருந்த நான், இப்படி இருக்கேன். மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்."
செந்திலும், நானும் அவருடன் கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கனலியை அனுப்பிவிட்டு வரும்போது எப்போதும் கண்ணில் படும் சில ப்ளக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டது.
இப்போது அவை வேறு மாதிரி தெரிந்தது.
.
30 comments:
மாற்றம் ஒன்றே நிலையானது.. அதன் போக்கை உணராமல் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்களூக்கு மாற்றம் எல்லாரையும் கீழே புரட்டித்தான் செல்லும் :(((
//மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்//
நம்பிக்கைதானே வாழ்க்கை
எறும்பு சொன்னதையும் ஒரு ரிப்பீட்டு..:))
கேபிள்,எறும்பு - ரிப்பீட்டு.
கணினி கொலை செய்த கலைஞர்கள் ஏராளம்...
இது போல் ஆர்டிஸ்டாக இருந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் சிதைந்தவர்கள் நிறையப் பேர் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள்..
கையாள் அச்சுக் கோர்த்ததை இன்று கணினியால் கோர்க்கிறோம்... கையாள் அச்சுக்கோர்த்த ஆள் +2 படிச்சிட்டு DTP படிச்சு 3 மாதத்தில் வடிவமைக்கும் நபர்போல் தன்னை அப்டேட் செய்து கொள்ள முடியவில்லை...
இது தலைமுறை இடைவெளி எனும் சாபமே..
கேபிள், எறும்பு, கேபிள் மறுபடி, நம்ம ஊரு அண்ணன் அப்துல்லா, ஈரோடு கதிர் - ரீப்பீட்டு...:D
வருத்தமாக உள்ளது. எங்க ஊரில் எனக்கு தெரிஞ்ச பெயிண்டர்கள் இப்போ என்னா செய்வார்கள் என்ற யோசனையும் வந்தது
நல்ல பதிவு அண்ணா
சிலர் எந்த வேலை செய்தாலும் சொந்த வேலை போல செய்வார்கள். ஒரு நேர்த்தி, அழகு படுத்துதல் இருக்கும். மொத்தத்தில் உயிர் இருக்கும். இப்போ எல்லா வேலைகளும் இயந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. global warming க்கு முக்கிய காரணமே கணினிகள் அதிகரித்ததுதான்.
அனைவரும் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம். விழிப்பார்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மாற்றம் வரும் தல.
:-(
பரிசல், உண்மையை சொல்லுங்கள்.. இது ஏற்கனவே தங்கள் வலையில் படித்த பதிவு. தன் சொந்த முன்னாள் பதிவை உறுவி புதிய பதிவாய் வெளியிடுவதை, தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் செயல், என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. வருடத்திற்கு 365 பதிவு எழுதுவது மட்டுமே குறிக்கோள் எனில், இனி புதிய பதிவு எதுவும் எழுத தேவையில்லை. இருக்கும் பதிவையே புதிய படைப்பாக தினம் தினம் சமர்ப்பிக்கலாம்..
புத்திசாலி தனமாய் பழைய பதிவை அகற்றியது வேறு விஷயம்..
அப்படி என்ன சீப் போட்டியோ, தமிழ் பதிவர்களுக்குள்..
@ ராஜீவ்
ஏற்கனவே என் வலையில் எழுதிருக்கேன். வாரத்துக்கு ஒண்ணாவது பழைய பதிவைப் போடுவேன்னு. படிக்காம சும்மா இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!!
//புத்திசாலி தனமாய் பழைய பதிவை அகற்றியது வேறு விஷயம்..//
btw, பழைய பதிவு அங்கேயேதான் இருக்கு. நீங்க சொல்ற புத்திசாலித்தனமெல்லாம் காட்டல!!!!
தேவையில்லாத கோபம் உங்களுடையது. படிக்காதவர்கள் படிக்கத்தான் மீள் பதிவு. படித்தவர்கள் புன்னகையுடன் கடந்து செல்லலாம்!
பரிசல் ரொம்ப கஷ்டமாயிருக்கு இந்த பதிவை படித்தவுடன்.
எதாவது செய்யுங்க பரிசல் குறைந்தபட்சம் நம்ம வடகரை வேலன் அண்ணாவிடம் சொல்லி நல்ல வேலையில் சேர்க்க முடியுமா என்று பாருங்க
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
இதே போன்று எங்களூரில் கொடிகட்டிப் பறந்த “சூப்பர் ஆர்ட்ஸ்” என்ற ஓவியக்கூடத்தின் நிலையையும் அடர்கருப்பு காமராஜ் எழுதியிருந்தார்.
http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_11.html
எனக்கு வரையனும்கிற ஆசை ஏற்படுத்திய, பென்சில எப்படி புடிக்கனுன்னு சொல்லிகொடுத்த நண்பன் பாபு, நியாபகம் வருகிறது, தல.
பாபு நீ எங்கடா இருக்க? எப்படிடா இருக்க? :-(
அருமையான இடுகை பரிசல். ரொம்ப கஷ்டமா உணரவைக்குது உங்க எழுத்து. அந்த நண்பர் விரைவில் நல்ல நிலைக்கு வரவேண்டும்.
:-(
Alice in Wonderland கதையில் ஒரு காட்சி வரும். ஆலிஸ்க்குக் கீழே ஒரு கன்வேயர் பெல்ட் மாதிரி ஓடிக் கொண்டிருக்கும். அந்த பெல்டின் மேல் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டுமென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். ஓடவும் மாட்டேன் இருக்கும் இடத்திலேயே இருக்கவும் வேண்டும் என்று இருக்க முடியாது...
அப்போ நீ சொல்றத பார்த்தா நாத்திகனுக்கு இது தான் நிலைமையா?
என்ன குத்தல் உனக்கு?நீ என்ன ஆகப்போறன்னு பாரு தம்பி.
@ சங்கமித்திரன்
அடங்கொய்யால! இதுக்கு இப்படி ஒரு அர்த்தமா!
நான் அவரை விடவும் பகுத்தறிவுவாதி தோழரே! அவரும் இப்போது நன்றாக இருக்கிறார், நானும்.
இதை, இப்படிச் சொல்லலாமே. அவர் நாத்திரகாக இருந்ததால் தன்மீதான நம்பிக்கையில் இன்னும் மேலே வந்து கொண்டிருக்கிறார், பிறரென்றால் ஜோசியம் அது இதுவென தங்களை அழித்துக் கொண்டிருப்பார்கள்!
சரியா?
நண்பர் கனலியை கேட்டதாக சொல்லவும்!
சில மாற்றங்கள், மனிதர்கள் வாழ்வை புரட்டி போடக்கூடியது தான்!
//மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்//
நம்பிக்கைதானே வாழ்க்கை...
//மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்//
நம்பிக்கைதானே வாழ்க்கை...!
உருக்கமான பதிவு. அக்மார்க் பரிசல் பதிவு.
அருமையான பதிவு நண்பரே.
-------------------------------------------------------
இதை, இப்படிச் சொல்லலாமே. அவர் நாத்திரகாக இருந்ததால் தன்மீதான நம்பிக்கையில் இன்னும் மேலே வந்து கொண்டிருக்கிறார், பிறரென்றால் ஜோசியம் அது இதுவென தங்களை அழித்துக் கொண்டிருப்பார்கள்!
சரியா?
-------------------------------------------------------------
எனக்கு சரியென்று தோன்றவில்லை பரிசல் ..ஆத்திகம் என்பது கடவுளே கதியென்று, ஒன்றுமே செய்யாமல் பலனை எதிர் பார்ப்பது அல்ல..அது சோம்பல் அல்லது முட்டாள்தனத்தின் அடையாளம்..அறிவுள்ள ஆத்திகர்களை நீங்கள் பார்த்ததே இல்லையா? ஆத்திகர்களிலும் நிறைய அறிவியல் அறிஞர்கள் உண்டு..
மனத்தை கனக்க செய்கிறது
மனம் கனக்கும் விஷயம்!
அவரது லயிப்பே பிழைப்பாக ஓட்டிக்கொண்டிருந்தபோது ரசனைக்கு வேலையிருந்திருக்கும்..!
ஆனால்..பிழைப்பு வேறு! லயிப்பு வேறு எனும்போது....வலிகள் மட்டுமே மிச்சமிருக்கும்!
பிழைப்புக்கும்....லயிப்புக்கும் எந்த ஒரு பாலத்தையும் இதுவரை மனிதம் கண்டுபிடிக்கவில்லை..!
கனலிக்கு என்றாவது கதவுகள் திறக்கும்!
கணினி கொலை செய்த கலைஞர்கள் ஏராளம்...
:(
நல்ல பெயர்.. கனலி.!
Post a Comment