“இனியாவது ஃபோன் பேசறதை கொறைங்க” என்றார் உமா. இரண்டு மூன்று நாட்களாக அணைத்தே வைத்திருக்கிறேன் அலைபேசியை.
இந்த நான்கு நாட்களில் படித்தது சாருவின் ‘அருகில் வராதே’, ஜெயந்தனின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள், எஸ்.ராவின் ‘நகுலன் வீட்டில் யாருமில்லை’ மற்றும் குமுதத்தில் வந்த வைரமுத்து கேள்வி பதில் தொகுப்பான பாற்கடல். இதில் நகுலன் வீட்டில் யாருமில்லை – குறுங்கதைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இரண்டாம் முறையாய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பாற்கடலும் பருகப் பருகச் சுவை தருகிறது!
**************************************
அழைப்பவர்களிடம் ‘ஃபோன் பேசினா அவருக்கு கவனமே இருக்கறதில்லைங்க’ என்று புலம்புகிறார் உமா. ஒன்றிரண்டு முறை அலைபேசியபடியே மூன்றாம் மாடியிலிருக்கும் எங்கள் வீட்டுக்குப் பதிலாக, இரண்டாம் மாடி வீட்டு முன் கதவு தட்டிக் காத்திருந்ததை வேறு சாட்சிக்குச் சொல்கிறார்.
வைரமுத்துவின் கேள்வி பதில் தொகுப்பில், பொன்மணி அவரிடம் ‘நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான். குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதாய்ப் படித்தபோது அதைக் காண்பித்தேன்.
‘நான் எல்லார்கிட்டயும் நீங்க ஃபோன் அதிகமா பேசறத குத்தமா சொல்றது உங்களைக் குத்தம் சொல்ல இல்ல. இனிமேயாவது அவங்க கூப்பிடும்போது பிரயாணத்துல இல்லையேன்னு உங்களைக் கேட்பாங்களேன்னுதான்.. கேட்கலைன்னா சொல்லாம பேசிட்டே இருப்பீங்க. இனிமே அவங்களும் உங்களைப் பார்த்துப்பாங்கள்ல’ என்கிறார்.
சரிதான்!
************************************
பிப். 14ல் என் டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு வெளியானதல்லவா? தொகுப்பை இயக்குனர் அமுதன் வெளியிடுவதாய் இருந்தது. அவர் சிறிது தாமதமாய் வரவே அகநாழிகை வாசுதேவன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா ஆகியோரால் வெளியிடப்பட்டது.
வெளியிட்டபிறகு அஜயன்பாலா பேசும்போது அமைதியாக புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். நான் சொல்வதாய் அமைந்திருந்த முதல் கதையில் வருகிறது இந்த வாசகம்:-
‘நான் அமுதனைக் கொல்லப் போகிறேன்’
படிக்கல... படிக்கலன்னாரே.. படிச்சிருப்பாரோ???
*****************************************
நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் எழுத்துப்பிழை கண்டால் கொதித்துப் போகிறார். அவரோடு பிழைகளைப் பற்றிப் பேசுவது ஒரு பேரனுபவம். சென்ற வாரத்தில் சமிக்ஞை என்ற வார்த்தை தவறு சமிக்கை அல்லது சமிஞ்ஞை - இந்த இரண்டும்தான் சரி என்றார். எங்கே சரிபார்க்கவென்று தெரியவில்லை. அதன் நீட்சியாய் வைரமுத்துவின் பாற்கடலில் சில பிழைகளைப் பற்றி கவிப்பேரரசு சொல்லியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.
பதட்டம் என்பது பிழை – பதற்றம் சரி
தூசி என்பது பிழை – தூசு சரி
வென்னீர், தேனீர் தவறு- வெந்நீர், தேநீர் சரி
'உடுத்தி' வந்தாள் தவறு – 'உடுத்து' வந்தாள் சரி
திருநிறைச்செல்வி பிழை – திருநிறைசெல்வி சரி
கோர்த்தான் பிழை – கோத்தான் சரி
சுவற்றில் தவறு – சுவரில் சரி
இவை தவறென்ற குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன் என்கிறீர்களா? இருங்கள்.. அங்கேதான் எனக்கு அதிர்ச்சி –
குற்றச்சாட்டு தவறு... குற்றச்சாற்று என்பதே சரி!
****************************************
ஆஸியுடனான 175ன்போதே 200ஐ தொடுவார் என்று டூ தவுசண்ட் வாலாவை பிரித்த எனக்கு அன்றைக்கு ஏமாற்றம். அதே டூ தவுசண்ட் வாலாவை வெடித்துக் கொண்டாடினேன் நேற்று முன்தினம். சர்ச்சைகளுக்கு ‘விளையாட்டாக’ பதில் சொல்வதில் சச்சின் – க்ரேட்! ரிடயர்மெண்ட்... ரிடயர்மெண்ட்... என்கிறார்களே.. அப்படீன்னா என்ன சச்சின்?
சச்சினின் இந்த சாதனைக்கு எழுத்தாளர் முகில் தன் வலையிலிட்டிருந்த புகைப்படமும் கமெண்டும் அசத்தல் ரகம். இங்கே போய்ப் பாருங்கள்!
*******************************************************
Yuvakrishana - Athisha - Parisal Krishna
திருமண வாழ்வில் ஐக்கியமாகிவிட்ட அதிஷாவுக்கு வாழ்த்துகள். பாருங்கள் தலையை எப்படி ஐடியா பண்ணி மறைத்துவிட்டார் என்று!
***************************************************************
இன்றைய விகடனில் என் இரு கவிதைகள் வந்துள்ளன. அனந்த்பாலா என்ற என் புனைப்பெயரில்.
இயந்திர அரசு
பிறப்பையும்
இறப்பையும்
பதிவு செய்யச் சொல்கிறது
அரசு.
இடையில் நேரும்
இன்ப துன்பங்களை
எங்கு பதிவு செய்ய?
**********************************
முகமன்
‘உங்க ஊர்ல தானிருக்கேன்’
வெகுநாள் கழித்த சந்திப்பென்று
அழைத்து வர கிளம்பினேன்
வரும் வழியில் பேச
நிறைய கதைகளோடு
கைகுலுக்கல்
கட்டியணைத்தலுக்குப் பிறகு
வீடு வரும் வரையில்
பேசிக்கொண்டே வந்தோம்
அவர் அலைபேசியில் அவரும்
என்னுடையதில் நானும்
**********************************
முக்கியக்குறிப்பு: மேலே உள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவைதான். ஆனால் இவையல்ல விகடனில் வந்தவை! அவற்றை விகடனில் படியுங்கள். அடுத்த வாரம் பதிவில் தருகிறேன்!
************************************
சன் ம்யூசிக்கில் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி நடிகை ஆடிக் கொண்டிருந்தார். கீழே நிகழ்ச்சியின் பெயரைப் போட்டார்கள். பார்த்தேன்: “ஹலோ குட்டீஸ்”
டவுட்: மடக்கிப் போட்டா கவிதையா வந்திருக்குமோ??
.