Wednesday, March 3, 2010
ஹ..ஹ...ஹ.... ஹா.... ஹா....ஹாக்கி!
அப்போதெல்லாம் அரசுப்பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். பத்தாவது வரைக்குமா, பனிரெண்டாவது வரைக்குமா என்று சரியாக நினைவில்லை. பூப்பந்து, கைப்பந்து என்று ஒரு சில விளையாட்டுகள் இருந்த நிலையில் P.T. Period போரடிக்க, எங்கள் பி.டி. மாஸ்டர் ஹாக்கி விளையாடலாம் என்றார். எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் விளையாடி ஹாக்கியின் மேல் கொஞ்சம் பிடிப்பு வந்திருந்த சமயம்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விளையாட்டின் போது கால் எலும்பில் எதிராளி வேண்டுமென்றோ/வேண்டாமென்றோ அடித்ததில் மரண வலி. கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு ஹாக்கியென்றாலே தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன். பிறகு விளையாட ஆரம்பத்த போது அதே ‘நண்பன்’ அதே மாதிரி தாக்கினான். இந்தமுறை ‘ஸாரிடா.. வேணும்னு பண்ணல. உன்னை சும்மா பயப்படுத்த வீசினேன். பட்டுடுச்சு’ என்றான். ‘சரி.. நான் பாலை பாஸ் செய்கையில் எனக்கெதிராய் ஹாக்கி மட்டை உயர்த்தப்படும்போதே எனக்கு பயம் வர ஆரம்பிக்கிறது இது சரியில்லை’ என்று அந்த விளையாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, முற்றிலுமாக விளையாடுவதே இல்லை!
************************
ப்ளஸ் டூ விடுமுறை. நண்பர்களுடன் ஒரு கேரம் க்ளப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். மாலை ஆறரை/ஏழு இருக்கும். கரண்ட் கட்டானதில் ஒரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன் கோவத்தில் மிகக் கடுமையான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்க்கிறான். உடனே க்ளப்பில் பணிபுரியும் ஒரு சிறுவன் ‘ண்ணே.. வார்த்தை பேசாதீங்ணே.. ’ என்கிறான். ‘நீ மூடிகிட்டு இருடா #@$#@$” என்று அவனுக்கும் ஒரு கெட்ட வார்த்தை பார்சல் செய்கிறான். வேறொரு போர்டில் விளையாடிக் கொண்டிருந்தவர் இடையில் புகுந்து ‘இத்தனை பேர் இருக்கோம்.. க்ளப்புக்குள்ள வார்த்தை பேசறது சரியில்லைன்னு பையன் சொல்றான். அவனையும் திட்டறான் பாரு.. யார்யா அது?’ என்கிறார். அவர் அந்த க்ளப்பின் ரெகுலர் வருகையாளர். நான் பார்த்ததுண்டு. முகம் முழுதும் காதல் தண்டபாணி போல பள்ளங்களாக இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு சின்ன சிரிப்பு சிரிப்பார். அவர் போர்டில் ஸ்டரைக்கரை வைத்தவுடன் சடாரென சுண்டி காய்ன்களைப் பாக்கெட்டில் தள்ளுவதை வியப்போடு பார்ப்பதுண்டு.
அவர் அப்படிச் சொன்னதும் கெட்ட வார்த்தை சொன்னவனுக்கு கோவம் சுர்ரென்று வருகிறது. ‘அது யாருடா நாட்டாமை?’ என்கிறான். போதையில் இருந்தான் என்பது பின்னர் தெரியவந்தது. அவன் அப்படிக் கேட்டதும் ‘வெளில வாடா’ என்றபடி அந்த ரெகுலர் ப்ளேயரும், அவர் நண்பர்களும் அவனைக் காலரைப் பிடித்து இழுக்க, அவனது நண்பர்கள் தடுக்க.. எல்லாருமாய் வெளியில் ஓடுகிறார்கள்.
பயந்தபடி அமர்ந்திருந்த நானும் எனது நண்பர்களும் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு வெளியில் போய்ப் பார்த்தபோது, ஒரு சில மண்டைகள் தாக்கப்பட்டு ரத்தச் சிதறல்களோடு முகங்கள் தெரிய நான்கைந்து பேரின் கைகளில்....... ஹாக்கி மட்டைகள்!
அன்றிலிருந்து இன்று வரை பல இடங்களில், சீரியல்களில், திரைப்படங்களில் பார்த்துவிட்டேன்.. ஹாக்கி மட்டையை அடியாட்களின் ஆயுதமாகவேதான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு ஹாக்கி மீது பெரிய ஆர்வமோ, பற்றோ வரவில்லை. அவ்வப்போது ‘இது நம் தேசிய விளையாட்டு’ போன்ற பூர்ஷ்வாத்தனங்களால் பார்க்கத் தோன்றும். ஆனாலும் மனது ஒட்டாது!
தவிரவும் அதன் ஒளிபரப்புக் குழப்பங்கள். முதல் பாக்-இந்திய மேட்சில் இந்தியா போட்ட நான்கு கோல்களை எத்தனை முறை பார்த்தாலும் பந்து கண்ணில் படவே இல்லை. இதுவே கிரிக்கெட்டில் தெள்ளத்தெளிவாகக் காட்டப்படுகிறது. இதில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரீப்ளேக்கள் இல்லை. வர்ணனை ஜாலங்கள் இல்லை. (இதன் பின்னே உள்ள அரசியலை அழகாக எழுதியிருக்கிறார் சீனியர் பதிவர் தராசு! இங்கே போய்ப் படியுங்கள்)
போதாக்குறைக்கு பாஸ்கரன் போன்ற இந்திய கோச்களின் பேட்டிகள் வேறு எரிச்சலூட்டுகின்றன. ‘இந்தியா ஜெயிப்பதற்கான வாய்ப்பே இல்லை’ என்பதை பேட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லிவிட்டு இறுதிப்பத்தியில் ‘இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று மனசு சொல்கிறது’ என்று போனால் போகட்டும் பாணியில் சொல்லியிருக்கிறார். இவரை வைத்துக் கொண்டு ஜெயிப்பதா.. ம்ஹூம்!
இதில் அரசியல்கள் வேறு... யாராவது கொஞ்சம் விளையாடி பேர் வாங்கினால் சஸ்பெண்ட்! சம்பளப் பிரச்சினை. வீரர்களும் முழுவெறியோடு விளையாடுகிறார்களில்லை. நேற்றைய போட்டியின் ஆரம்பம் முதலே மந்தம்தான். ஆஸிக்காரர்களின் கோல் போஸ்ட் இருக்கும் திசையையே பந்து பார்க்கவில்லை. கொஞ்சம் அந்தப் பக்கம் போவது போல இருந்தாலும் நான்கைந்து பேர் சூழ, விரட்டி அடிக்கிறார்கள். பரிதாபமாக இருந்தது. (ஆமா.. அந்தப் போட்டில ஆஸிக்காரர்கள் வாயில் கறுப்பாய் எதையோ வைத்தபடி விளையாடினார்களே.. அடிபடாமல் இருக்கத்தானே.. அதெல்லாம் நம்மாளுக கிட்ட இல்லையா?)
இத்தனை பிரச்சினைகள் இருக்க.. இன்னமும் ஏன் ஹாக்கியை தேசிய விளையாட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? அதைக் கிரிக்கெட்டுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கிறதா?
ஐயகோ.. என்ன இது?’ என்று கூச்சல் போடாதீர்கள்.
தியான் சந்தைத் தெரியுமா?
பத்மபூஷன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர். 1926ல் நியூஸீலாந்தில் நடைபெற்ற ஹாக்கி சீரிஸில் 21 போட்டிகளில் 18ல் இந்தியாவுக்கு வெற்றி. மொத்தமாய் இந்திய அணி போட்ட 192 கோல்களில் 100 கோல்கள் தியான்சந்த் போட்ட கோல்கள். லண்டனில் 1927ல் நடந்த தொடரில் மொத்த கோல்கள் 72. தியான்சந்த் போட்டவை 36! 1928ல் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம். அந்த ஃபைனலில் 3ல் இரண்டு கோல் தியான்சந்த் போட்டார். 5 மேட்ச்களில் தியான்சந்த் போட்டவை 14 கோல்கள்!
அதே போல 1932ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்கிலும் ஹாக்கிக்கான தங்கம் இந்தியாவுக்கு. (ஒலிம்பிக்கிற்குப் பிறகு இங்கிலாந்து, ஹாலந்து ஜெர்மனி என்று அந்தப் பயணத்தில் அவர்கள் விளையாடியது 37 போட்டிகள். 34ல் இந்தியா வெற்றி. 2 டிரா. 1 போட்டி கைவிடப்பட்டது!)
1934ல் நியூஸிலாந்து, சிலோன், ஆஸியுடனான டூரில் 48 போட்டிகள். எல்லாவற்றிலும் வெற்றி. மொத்தம் 584 கோல். (வாங்கியது வெறும் 40 கோல்!) அதில் 201, தியான்சந்த் போட்ட கோல்கள்!
1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ்ஃபைனலில் இடைவேளை வரை ஒரே கோல்தான் ஜெர்மனிக்கு எதிராக. இடைவேளையின்போது தனது ஷூவைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கால்களோடு ஆடுகிறார் தியான்சந்த். எட்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்துகிறது இந்தியா. அந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே இந்தியாவுக்கு எதிராக விழுந்த ஒரே கோல் ஃபைனலில் ஜெர்மன் போட்ட அந்த கோல் மட்டும்தான்!
அடால்ஃப் ஹிட்லர் இவரது ஆட்டத்தைக் கண்டு வியந்து இந்திய ராணுவத்தில் இவர் வகித்ததைப் போலவே பெரிய பதவியை ஜெர்மன் ராணுவத்தில் தருவதாய்ச் சொல்லி அழைத்தார். இவர் மறுத்துவிட்டார். டான் ப்ராட்மேன் ‘நான் கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்பதற்குச் சமமாய் ஹாக்கியில் கோல் போடுகிறார் இவர்’ என்று வியந்தார் தியான்சந்தைப் பார்த்து.
கடைசியில்?
1979ல் லிவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, பண உதவிக்கு அரசு கைவிரிக்க, சரிவர கவனிக்கவும் ஆளில்லாமல் புதுடெல்லியின் AIIMS மருத்துவமனை ஜெனரல் வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்!
ஹாக்கியாம் தேசிய விளையாட்டாம்.. ஊக்குவிக்கணுமாம்....
போங்கய்யா...
.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
பரிசல்,
1979 களில் இந்தியாவில் சோத்துக்கே பெரிய போராட்டம்.. அந்த நேரங்களில் எந்த ஒரு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியவில்லை..
எனக்கு தெரிந்து தாராளயமாக்கப்பட்ட உடன் தான் கிரிக்கெட் கூட பெரிய அளவில் விளம்பர தாரர்களால் பேணப்பட்டு போற்றப்படுகிறது.. அதுக்கு முன்னாடி எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் இதே நிலைமை தான்..
பாஸ்கரன் பேட்டி நானும் படிச்சேன், சைக்கலாஜிக்கலா நம்ம அணியை தோற்கடிக்கறதுக்கு வேற யாரும் தேவையில்ல, நம்மாளுங்களே போதும்
accident patri arindavudan tholaipesi yil pesi visarikka ninaithu, melum padithapin mail seyya ninaitahu, kadaisiyil kaditha kadi parthu mailaiyum niruthivitten.
udambu sariyayiduthu pola
ramani (balarajan anna)
எனக்கு ஹாக்கி பாக்குறது ரொம்ப பிடிக்கும் பரிசல்.. அந்த ஒன்றரை மணிநேரமும் ஒவ்வொரு நிமிசமும் டென்ஷனா போகும். ஐ பி எல் வருவதற்கு முன்னாலயே ஹாக்கியில் க்ளப் ஆரம்பித்து பி எச் எல் (ப்ரீமியர் ஹாக்கி லீக்) என்று ஒரு சில தடவை நடத்தினார்கள். ஹைதராபாத்தில் இருந்தபோது நேரிலேயே போட்டிகளை பார்த்திருக்கிறேன். அதன்பின் பி எச் எல் என்ன ஆனது என்று தெரியவில்லை.
பிரச்சினையே கிரிக்கெட் போல ஹாக்கியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பர இடைவேளை விட முடியாது என்பதுதான்.
survival of the fittest தான் சகா.. மகக்ளுக்கு எது பிடிக்குதோ அது எப்படியும் நிக்கும்..
இந்த போட்டியாளர்கள் செய்யும் வியாபாராத்தால் கிரிக்கெட் என்னும் விளையாட்டே ஏதோ ஹம்பக் ரேஞ்சுக்கு பலர் உணர்ச்சிவசபப்டுவது ஏன் எனத் தெரியவில்லை... 1990 வரை விளையாடியா கிரிக்கெட்ர்ஸ் பலரும் இன்னும் துயரமான நிலையிலே இருக்கிறார்கள்.. அதன் பின் வந்த காலம்தான் வீரர்களின் பொற்காலம். ஆனால் 90க்கு முன்பே நம்ம நாட்டுல ஹாக்கி கோமா ஸ்டேஜுக்கு போயிடுச்சு...
என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்தான்.. ஹாக்கி ஆபத்தான ஆட்டம்... பார்ப்பதை விடுங்கள்.. தம்மாத்துண்டு இடமும், ஒரு பிளாஸ்டிக் பாலும்,ஒரு மட்டையும் , இரண்டு பேரும் இருந்தால் டெஸ்ட் மேட்சே விளையாடுவோம் நாங்கள். ஹாக்கிக்கே எங்கே போவது?
ஹாக்கியை புகழ்வோருக்கு நான் சொல்வது, அதுக்கு ஃபுட்பால் much better.
நல்ல பதிவுங்க.... ஆஸ்திரேலியா ல ஒரு முறை போட்டியின் நடுவே ,அவரின் dribbling ஐ பார்த்து மிரண்டு போய் ஆட்டத்தை நிறுத்தி அவரின் stick ஐ செக் பண்ணிணாங்களாம்...இன்னும் மெல்போனில் தியானின் சிலை இருக்கிறது... இவர் தான் ஹாக்கியின் பிதாமகர் என அங்கு வரும் tourist இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியர்கள் சொல்லிகொடுக்கிறார்கள்...வாழ்க பாரதம்...ஆமா IPL என்னைக்கு ஆரம்பிக்குது ??
பரிசலாம், பதிவெழுதுறாராமாம் , படிக்கணுமாம்...
போங்கய்யா...
அப்படின்னு விட்டுட்டு போக முடியாம சிந்திக்க வைக்குது.
பரிசல், ஒலிம்பிக்கில்1948,52,56 மூன்று முறை இந்தியாவுக்காக விளையாடிய எனது தாத்தா(பாட்டியின் அண்ணன் ) பிரான்சிஸ் ரங்கநாதன் இறந்த பிறகு அரசால் அவர் மனைவிக்கு ஒரு கலர் டிவி கொடுத்தது தான் அதிகப்படியான பரிசு.
லியோ சுரேஷ்
சிந்திக்க வைத்து விட்டீர்கள்...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வர்த்தக நோக்கில்தான், கிரிக்கெட் மோகம் வளர்ந்துள்ளதே தவிர, சச்சின் தவிர்த்து, 1983க்குப் பிறகு, உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி பெரியதொரு சாதனையை செய்ய வில்லை.
இரு நாடுகள், மூன்று நாடுகள், நான்கு நாடுகள் போட்டி போன்றவற்றில் வேண்டுமானால் வெற்றி பெற்றிருக்கலாம். துணைக் கண்டத்தில், இவர்களே ஸ்பின் பெளலிங், பேட்டிங் பிச் செட் செய்து வெற்றிப் பெற்றதாக மாயையை ஏற்படுத்துவார்கள். வெளி நாடுகளில், வேகப் பந்து வீச்சு ஆடுகளில் நமது அணி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை.
20 20 கிரிக்கெட் மேட்ச்களை தரம் எல்லோருக்கும் தெரியும். அந்த உலகக் கோப்பை உட்டாலக்கடி வெற்றி பற்றி பேசினால், சர்ச்சைதான் வரும்.
உங்கள் கருத்துக்களுக்காக...
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
ஆனந்த் உலகளவில் கோப்பை வென்றபோது செஸ் வெகுவாகப் பேசப்பட்டது;அதுபோல், பி.டி.உஷா காலத்தில் நிறைய பேர் அத்லடிக்ஸில் விருப்பம் கொண்டார்கள்.
இதுபோல், இப்ப ஹாக்கியிலயும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் சாதித்தால் ஒருவேளை அதுவும் பிரபலமாகலாம். சாதிப்பதற்கும் ஹாக்கி வீரர்களுக்கு மக்களின், ஊடகங்களின் ஊக்கப்படுத்துதல் அவசியம்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
லிங்குக்கு டேங்சு.
அந்த போட்டோ என்கருந்து தல புடிச்சீங்க. டெரரா இருக்குது.
தியான் சந்த் - போற்றப்படவேண்டிய ஒருவர். ஆனா இந்த நேரத்துல பாருங்க தியானம் அப்படீன்னாலே நித்தி........ சரி வேண்டாம் விடுங்க.
எம்.எம்.அப்துல்லா :
பரிசலாம், பதிவெழுதுறாராமாம் , படிக்கணுமாம்...
போங்கய்யா...
அப்படின்னு விட்டுட்டு போக முடியாம சிந்திக்க வைக்குது.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
//பரிசலாம், பதிவெழுதுறாராமாம் , படிக்கணுமாம்...
போங்கய்யா...
அப்படின்னு விட்டுட்டு போக முடியாம சிந்திக்க வைக்குது.//
ஹா..ஹா..
உண்மை பரிசல் ஹாக்கி தேசிய அளவில் விளையாடின என் அத்தை பெண் மற்றும் சொந்தங்கள் இன்று வேலை தேடி அலைந்துகொண்டுருகிரார்கள் அவர்கள் வேலை கேட்டு போனால் நீங்க ஹாக்கி கூடைபந்து ,டென்னிஸ் ஆ இருந்தா பரவாஇல்ல னு சொல்றாங்களாம் .
உங்கள் கடைசி வரிகளில் உடன்பாடில்லை கிருஷ்ணா.
தியான் சந்தைத் தெரியுமா?//
தெரியாது.
தெரியப்படுத்தியதமைக்கு நன்றி.
இந்தியர்களால் குழு விளையாட்டுகள் விளையாட முடியாது..
Post a Comment