Saturday, June 26, 2010

'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்

நேற்று முன்தினம் நண்பர்கள் முரளிகுமார் பத்மநாபன், பேரரசன் செந்தில்நாதன் அடங்கிய 'குழு' செம்மொழி மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது ரைட்டர் பா.ரா-வைச் சந்தித்திருக்கிறார்கள். சும்மாயிராமல், 'நீங்கதான் பேயோன்-ன்னு பரிசல் சொல்றாரே' என்றிருக்கிறார்கள். அவர் உடனே எனக்கு அலைபேசி 'யோவ்.. உன்னை திட்டத்தான் கூப்ட்டேன்.. நான் உனக்கு என்னய்யா பாவம் பண்ணினேன்' என்று திட்ட 'சார்.. திட்டாதீங்க.. நாளைக்கு உங்கள வந்து பாக்கறேன்' என்றேன் சிரித்தபடி. நேற்று (வெள்ளிக்கிழமை) போக முடிவு செய்தேன். சங்கத் தலைவர் வெயிலான் உட்பட எல்லாருமே பிஸியாக இருந்தனர். வெயிலானிடம் பேசியபோது 'சிவகுமார்-ன்னு நம்ம நண்பர்.. அவரும் பிளாக்கர்தான். புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு பா.ரா-வைப் பாக்கனும்னு ரொம்ப ஆவல். ரெண்டு பேருமா போங்களேன்.." என்றார். சிவகுமாரை அழைத்து என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்லிவிட்டு, அவர் வர இருவருமாய் அவர் பைக்கிலேயே கிளம்பினோம். 'ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போறது இதுதான் முதல் தடவைங்க' என்று அவர் படபடத்தபடி சொன்னபோது 'அதான் பத்து நிமிஷம் முன்னாடியே சந்திச்சுட்டீங்கள்ல. ரிலாக்ஸா இருங்க' என்றது அவருக்கு புரியவில்லை. என்ன கொடுமைடா.. என்று என் நிலைமையை நானே நினைத்தபடி விரைந்தேன்.

*************************

கோவை குதூகலத்துடன் இருந்தது. எங்கெங்கு காணிடும் முகங்களடா' என்பதாய் மக்கள் அலை. நடக்கும்போது தலையை வலது இடதுபுறங்கள் திருப்பக் கூட முடியாத அளவு ஜன நெருக்கடி. அலைபேசி அலறியபோது பாக்கெட்டில் கை விட்டு அதை எடுக்க முடியவில்லை.

இருவருமாய் புத்தக கண்காட்சி நடக்கும் CIT வளாகத்தை அடைந்தபோது மணி எட்டரை. பா.ரா-சாரை அழைத்தபோது 'நான் இணைய அரங்கத்துல இருக்கேன் கிருஷ்ணா.. அங்கிருந்து மூணு கிலோமீட்டர் நீங்க நடந்து வரணும்' என்றார். அதற்குள் 'வருங்கால பிரதமர்' சஞ்சய் காந்தி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார். 'இந்தக் கூடத்துல இவ்ளோ லேட்டா என் மாம்ஸ் வந்தீங்க?' என்று கேட்டார். நான் சிவகுமாரை அறிமுகப்படுத்தி "ரைட்டர் பா.ரா-வைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார்.. அதான் லேட் ஆனாலும் பரவால்லை-ன்னு கூட்டிட்டு வந்தேன் சஞ்சய்" என்றேன். அவருடன் பேசிக் கொண்டே நடந்தபோது யுவகிருஷ்ணாவும் எங்களோடு வந்து கலந்து கொண்டார். 'மூணு நாலா கிட்டத்தட்ட ஆறு லட்சம் மூஞ்சிகளைப் பார்த்துட்டேன். மைண்ட் பூரா ஒரே முகங்களா இருக்கு கிருஷ்ணா' என்று அவர் சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. நடுநடுவே நம்ம சிவகுமார் 'ஏங்க.. ரைட்டர் பா.ரா-வை எப்ப பாப்போம்?' என்று ஆவலாய்க் கேட்டுக் கொண்டே இருந்தார். 'அவரு வெளில வந்துட்டாரு. ஆனா எங்கயோ கூட்டத்துல மாட்டிகிட்டாரு' என்றார் யுவா. சிவகுமாரோ ஆர்வத்தை அடக்க மாட்டாமல் இருந்தார். நான் அவரை ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தேன்.


புத்தக கண்காட்சியில் மனுஷ்யபுத்திரனைக் கண்டோம். அவரோடு ஆசையாய்ப பேசினார் சிவகுமார். இரண்டொரு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். மணி ஒன்பதை நெருங்கியது. கண்காட்சி அடைக்கப்பட்டது. நாங்கள் பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்.


"லேட்டாகுதுங்க.. பா.ரா-வைப் பாக்க முடியாதா" - மறுபடி கேட்டார் சிவகுமார். 'எனக்கொண்ணும் பிரச்சினை இல்லைங்க.. 3, 4 கிலோ மீட்டர்னாலும் பரவல்ல.. கொடீசியா-வுக்குள்ள போலாம்க' என்றார்.


"அதுக்கில்லை சிவா. அவரு வெளில வந்துட்டு இருக்காரு. நாம உள்ள போய் யூஸ் இல்ல. அவரு எங்கயோ கூட்டத்துல மாட்டிக்கிட்டிருக்காரு. வரட்டும்" என்று நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம்.


நேரம் ஆக ஆக இனி அவரைச் சந்திப்பது கடினம் என்று புரிந்தது. காரணம் எல்லா மக்களும் வீடு போகும் அவசரத்தில் கலையத் துவங்கியிருந்தனர். ஜனத்திரள். நிஜமாகவே கடல் போன்ற கூட்டம் என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. புறப்படுவது என்று முடிவானதும் சிவகுமார் மனது ஒடிந்து போனார். "ரைட்டர் ப.ரா-வைப் பார்க்க முடியாதா அப்ப?" என்று அவர் கேட்டதைப் பார்க்க பாவமாக இருந்தது. 'கவலைப் படாதீங்க சிவா. ரெண்டு மூணு மாசத்துல திருப்பூர் கூப்ட்டுவோம். ஏற்பாடு பண்ணலாம். அப்படி இல்லேன்னா நான் உங்கள சென்னை கூட்டிட்டு போய் அவரை சந்திக்க வைக்கறேன்' என்றேன். சமாதானமாகாமல் அரைகுறை மனதோடு கிளம்பினார்.


வழியில் ஒரு ஹோட்டலில் உணவருந்த நிறுத்தினோம். உணவருந்திவிட்டு கிளம்பும்போது மறுபடி கேட்டேன்.


'அது ஏங்க ரைட்டர் பா.ரா.மேல அவ்ளோ ஆர்வம் உங்களுக்கு?' "எனக்கு எழுத்தாளர்கள்-னாலே பிடிக்கும்க. அதுவும் பா.ரா மாதிரி ஒருத்தர் எனக்கு வந்து பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்கப்படுத்தும்போது அவரை சந்திக்கணும்ன்னு தோணாதா?'


'என்னது.. பா.ரா. பின்னூட்டம் போட்டாரா? எந்த பா.ரா-வைச் சொல்றீங்க?'


"என்னங்க எந்த பா.ரா-ன்னு கேட்கறீங்க? பா.ரா. தெரியாதா உங்களுக்கு? கருவேல நிழல்-ன்னு புக் எல்லாம் போட்டிருக்காருங்க. பா.ராஜாராம்"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........


*

Friday, June 25, 2010

அந்தரங்கம்

புதன் இரவு. டெலிவிஷனில் சானல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்த நிகழ்ச்சி.

ஓர் இளம்பெண் ஜீன்ஸ், டாப்ஸுடன் மாடர்னாக அந்த ஒளிபரப்புக் கூடத்தில் நுழைகிறாள். அவளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்துனரான இளைஞன் ‘நீங்கள் தயார்தானே? ரிலாக்ஸாக இருக்கிறீர்களா?’ என்றெல்லாம் கேட்கிறான். அந்தப் பெண்ணும் தலையாட்டுகிறாள். அப்படி என்ன நிகழ்ச்சி என்று நானும் ஆவலாய்ப் பார்க்க ஆரம்பித்தேன்.

இருவருமாய் ஒரு பெரிய வெண்திரை முன் அமர்கிறார்கள். இளைஞன் ரிமோட்டை செலுத்த திரை ஒளிர்கிறது. அதில்..

ஒரு இளைஞன், இளம்பெண் ஒருத்தியுடன் காஃபி டே போகும் காட்சி. மறைந்திருந்து எடுக்கப்பட்டது போல தெளிவில்லாமல் தெரிகிறது. அவன் அந்த யுவதியுடன் பேசுவதில் குழைவும், நெருக்கமும் தெரிகிறது. அடுத்த க்ளிப்பிங்கில் அந்த இளைஞன், யுவதியுடன் கார் அருகே வருகிறான். காரில் ஏறும் முன் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிடுகிறான்.

இங்கே ஸ்டூடியோவில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் லேசாக துணுக்குறுகிறாள். காரணம் திரையில் காண்பிக்கப்படும் இளைஞன் இவளின் பாய் ஃப்ரெண்ட். அவனுடன் இருக்கும் பெண், தொலைக்காட்சி நிறுவனத்தால் அவனது நேர்மையை சோதனை செய்ய அனுப்பப்பட்ட மாடல் பெண்.

இப்படியாக ஒவ்வொரு footage ஆக காண்பிக்கப்பட காண்பிக்கப்பட , பார்த்துக்கொண்டிருக்கும் பெண் கொஞ்சம் கொஞ்சமாக உணர்சிவசப்படுகிறாள். அழத் தொடங்குகிறாள் . நிகழ்ச்சி நடத்துனர் அவரை தேற்றுகிறார். இந்தப் பெண் கேவியபடி அழுதுகொண்டிருக்கிறாள் . சிறிது நேரத்துக்குப் பின் , இன்னும் கொஞ்சம் ஆதாரங்கள் இருக்கிறது .. காண்பிக்கவா என்று கேட்கிறார் நடத்துனர் . அவள் சரியென்று தலையாட்டுகிறாள்.

காரில், பெட்ரூமில் என்று அவர்கள் முத்தமிடுவதையும் , சல்லாபிப்பதையும் காண்பிக்கிறார்கள். (அப்படியாக நாம் கொள்ள வேண்டி இருக்கிறது . காரணம் அந்த காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது)

மீண்டும் அவள் அழுகை , இவர் தேற்றல்…

நடுநடுவே அந்தப் பெண்ணிடம் இப்போது என்ன உணர்கிறீர்கள் என்று வேறு கேட்டுக் கொள்கிறார். அவள் அவரா இப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருந்தார் இத்தனை நாள் மனதில் என்றெல்லாம் புலம்பியபபடி இருக்கிறாள். அதன்பிறகும் காட்டப்பட்ட ஒளிபரப்பில் அவன் அந்தப் பெண்ணுக்கு எதையோ பரிசளிக்கிறான். அவள் ‘உங்கள் கேர்ள் ப்ரெண்ட் எப்படி இருக்கிறாள்’ என்று கேட்கும்போது கூடிய சீக்கிரம் அவளை வெட்டி விட்டு விடுவேன். நீ தங்கம், வைரம். அவள் பித்தளை என்பதுபோன்ற வசனங்கள் பேசுகிறான். அத்தனையும் தெளிவாக பதிவாகியிருக்கிறது மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களில்.

சில SMS களும் , உங்கள் பாய் Friend அவளுடன் பேசிய ரெகார்டிங்கும் இருக்கிறது. என்றுவிட்டு அதையும் கொடுக்கிறார். காதலும், காமமும் கலந்த SMSகள் பேச்சுகள் …

சிறிது நேரம் கழித்து இப்போது அவர் எங்கே என்று பார்க்கிறீர்களா என்று கேட்கிறார் நடத்துனர். ஆம் என இவள் சொல்ல திரை ஒளிர்கிறது...

அதில் இவளது காதலனும், அந்தப் பெண்ணும் காருக்குள் பின் சீட்டில் முத்தம் இட்டபடி இருக்கிறார்கள். நடத்துனர் சொல்கிறார் 'இது லைவ்' என்று. கூடவே 'நாம் இருக்கும் இந்தக் கட்டிடத்தின் பேஸ்மெண்டில் தான் இந்தக் கார் நிற்கிறது போய்ப் பார்க்க நீங்கள் தயாரா என்று கேட்கிறார். அவள் சரி என சொல்ல, கேமரா குழு தொடர அவர்கள் லிஃப்டில் இறங்குகிறார்கள்.

சடாரென இவள் கார் கதவு திறந்து காதலனை அட்டாக் செய்கிறாள். அவன் முதலில் தவித்து பிறகு தன் தரப்பை நியாயப் படுத்துகிறான். ஒரு கட்டத்தில் இவள் கோவமாய் மோதிரம், இடுப்பில் இருந்து ஒரு அரைஞாண் கயிறு இரண்டையும் கழற்றி அவனிடம் வீசுகிறாள். அவன் அதை கண்டே கொள்ளாமல் 'போ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு' என்ற முக பாவத்துடன் போகிறான். இந்தப் பெண்ணை இப்போது உங்கள் முடிவு என்ன என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க ‘இனி அவனுக்கு என் வாழ்வில் இடமில்லை’ என்கிறாள் இவள்.

இறுதியில் நிகழ்ச்சியை நடத்துபவர் 'இது மாதிரியான ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு பிடித்து தோலுரிப்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்’ என்று உரை நிகழ்த்துகிறார்..

என்னாங்கடா இது!




UTN Bindass ன் “Emotional Atyachaar” என்னும் ரியாலிட்டி ஷோவாம் அது. எனக்கென்னமோ எல்லாமே ட்ராமாவாகத்தான் தோன்றியது. நேற்றைக்கு கூகுளாண்டவரிடம் இது பற்றி ஆராய, UTVயின் வெப்சைட்டில் இதற்கு REGISTRATION FORM எல்லாம் இருக்கிறது.. யாராவது அவர்களின் பார்ட்னரை சந்தேகப்பட்டால், அவர்களுக்கு எழுதிப் போடலாம். அவர்கள் வந்து பார்ட்னர் போகுமிடமெல்லாம் ஒரு மாடல் குட்டியையும் அனுப்பி, குட்டி குட்டி கேமராவையும் வைத்து அவரை தோலுரிப்பார்களாம். ‘ஆஹா பெண்ணினக்காவலர்களடா’ என்று சரியாக அஞ்சு நிமிஷம் புளகாங்கிதமடைந்தபோது இப்படி பிற ஆண்கள் பின்னால் அலைந்த பெண்கள் சிலரும் அந்த நிகழ்ச்சி மூலம் மாட்டியிருக்கிறார்களாம். அதுவும் ட்ராமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. (காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!)

இந்த நிகழ்ச்சி பற்றி வந்த செய்தி ஒன்றின்கீழ் பல வாசகர்கள் ‘இதில் எப்படி எங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்?’ என்று முட்டி மோதிக் கொண்டு கேட்டிருப்பதைப் பார்த்தபோது சமூகமாவது கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றியது!

ஒன்றிரண்டாவது இதில் உண்மையாகவே ஸ்பை கேமராக்கள் வைத்து பதிவு செய்து ஒளிபரப்பினார்களா? சட்டம் அனுமதிக்குமா? யாருக்காவது இதுகுறித்த மேல் விபரங்கள் தெரியுமா?


.

Thursday, June 24, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

'நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது’ என்ற இந்த வரியை இந்த ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் பேராவது சொல்லக் கேட்பீர்கள் (அ) எழுத படிப்பீர்கள். அப்படித்தான் இருக்கிறது.

நேற்று முன்தினம் (22.06.10) அவினாசி சாலை வழியாக செல்ல வேண்டியிருந்தது. பத்தடிக்கு ஒரு போலீஸ் குழு. அங்கங்கே வாகன பரிசோதனைகள். விழா நடக்கும் கொடிசியா அரங்கம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.

நல்லதொரு விஷயம்: எங்குமே கட்சிக்காரர்களின் ஜால்ரா பேனர்களைப் பார்க்க முடியவில்லை. விசாரித்த வரையில் கலைஞரே அதெல்லாம் வைக்காதீங்கப்பா என்று வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல்.

சாலையில் இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்கள் எல்லாம் புதிதாய் வண்ணம் அடிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. எல்லாரும் தத்தமது கட்டிடங்களில் வண்ண வண்ண சீரியல் பல்புகளை தொங்கவிட்டிருந்தனர். இரவில் ஜெகஜ்ஜோதியாய் இருந்திருக்கும்.

*************************************





நேற்று (23.06.2010) மாநாடு தொடங்கியபின் மாலை நடக்கும் இனியவை நாற்பது அணிவகுப்புக்குச் செல்லலாம் என்று புறப்பட்டேன். பல்லடத்தில் கழக உடன்பிறப்புகளால் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை எல்லாம் கழட்டிக் கொண்டிருந்தார்கள். ஆளில்லாத இடங்களில், பேனர் ஒருபுறம் கிழிக்கப்பட்டு, மடக்கி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்திக் கேட்டதுக்கு ‘பேனர் வெச்சதுக்கு திட்டு விழுந்ததுதாங்க மிச்சம். கட்சி பேர்ல வைக்க இது கட்சி மாநாடான்னு கேட்கறாங்க. பொதுவாத்தான் வைக்கணுமாம்’ என்றார் ஒருவர். மகிழ்ச்சியாக இருந்தது. (ஒன்றிரண்டு இடங்களில் மாநாட்டுக்கு வருகை தரும் ஜி கே வாசனை வரவேற்று பேனர்கள்!)

சூலூரில் ஆரம்பித்தது போலீஸ் படை. நகரெங்கும் காக்கிகள்தான். எந்த ஊரிலிருந்தோ வந்து இங்கு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் பாவம் என்று தோன்றியது. அதுவும் ஒண்டிப்புதூர் பாலத்தில் ஒரு போலீஸ்காரர் தனியாளாய் பாலத்தின் நடுவில் இருந்த வானுயர்ந்த ஸ்ட்ரீட் லைட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த கோலம்.... பரிதாபத்தின் உச்சம்.

ராமநாதபுரத்திற்கு சற்று முன் வலதுபுறம் திருப்பிவிடப்பட்டு, மசக்காளிபாளையம் வழி அவிநாசி சாலையை அடைந்து கிடைத்த இடத்தில் பைக்கைப் போட்டு அவிநாசி சாலைக்குப் போனால்............

தலைகள்... தலைகள்.. தலைகள்.... அத்தனை கூட்டம்.

ஒருவழியாக ஒரு இடம் தேர்ந்தெடுத்து எல்லாருமாய் உட்கார்ந்து பார்க்கலாம் என்று உட்கார்ந்தோம். முக்கால் மணி நேரம் கழித்து, பேரணி நாங்கள் இருக்கும் இடம் நெருங்கியதும் எங்கிருந்தோ வந்த ஒரு காமன்சென்ஸ் இல்லாத ட்ரெய்னி போலீஸ் ஒருவர் ‘பக்கத்துல வந்துடுச்சு.. எல்லாரும் எழுந்திருங்க’ என்றதுதான் தாமதம்... உட்கார்ந்தவர்கள் உட்கார்ந்தே அழகாய் பார்த்திருக்கலாம்.. அவர் சொன்னதும் முட்டாள்தனமாய் சடாரென்று எழுந்திருக்க, பின்னால் நின்றவர்கள் முட்டித்தள்ள உட்கார்ந்திருந்திருந்தவர்களில் இருந்த குழந்தைகள் நிலைமை பரிதாபம்.

போங்கடா நீங்களும் உங்க காவலும் என்ற கோவத்துடன் திரும்ப, எங்களுக்குப் பின்னால் விஐபி கார்கள். பார்த்தபோது, கனிமொழி எம் பி போய்க் கொண்டிருந்தார். என் அருகில் குழந்தைகளோடு அமர்ந்திருந்தவர் ‘போலீஸ் சரியில்லை மேடம்... சரியா கட்டுப்படுத்தவே தெரியல.. அழகா உட்கார்ந்திருந்தோம்.. எந்திருக்கச் சொல்லி சொதப்பீட்டாங்க’ என்று கண்ணாடி வழியே தெரியும் அவர் முகம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டதோ, கேட்கவில்லையோ.. ‘என்ன என்ன?’ என்று புருவமுயர்த்தி கேட்டபடியே அவர் சென்றது அழகாய் இருந்தது. பேரணி அந்த இடத்தை தாண்டுவதற்குள் அவர் சென்றமரும் மேடை நோக்கிப் போகும் அவசரம் அவருக்கு!

திரும்பி வந்து மிகச் சிரமட்டு பைக்கை எடுத்துக் கொண்டு விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

எப்படி இருக்கிறது கோவை?

சரியாகப் பார்த்தால் தமிழகம் கோவை இருக்கும் பக்கம் கொஞ்சம் சாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம். கார்கள். எல்லாவற்றிலும் கட்சிக் கொடி. வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களில் நூற்றுக்கு 99 சதவிகிதம் பேர் உற்சாக பானத்தின் பிடியில் இருந்தார்கள். பீளமேடில் ஒரு டாஸ்மாக்கில் திங்கள் - செவ்வாய் - புதன் மாலை வரை இரண்டரை தினங்களின் விற்பனை, அதற்கு முன் மூன்று மாத ஒட்டுமொத்த விற்பனைக்கு சமமாய் இருக்கிறதாம்.

சாலை உள்ளிட்ட எல்லா பணிகளும் அவசர கதியில் நடந்தேறியிருக்கிறது. ஹோப் காலேஜின் ஒரு பக்க பாலம் இரண்டாண்டுகளாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதன் மற்றொரு பக்க பாலம், க்யூரிங் கூட சரியாக ஆனதா என்று தெரியவில்லை.. இரண்டே மாதங்களில் முடுக்கிவிடப்பட்டதாம்.

மாநாடு முடிந்தும், விட்ட பணிகளை தொடர்ந்து முழுமையாய் முடித்து, கோவையில் நடத்தியதற்கு கோவைக்காரர்களை பெருமைப்பட வைப்பார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

(இதே போன்றதொரு கட்டுரையை வித்தியாசமான நடையில் படிக்க இங்கே க்ளிக்குங்கள்...)

.

Monday, June 21, 2010

ராவணன் - 15

தை - எல்லா பதிவுகளிலும் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் இராமயணம் தெரிந்திருக்கும். விமர்சனமும் நிறைய படித்திருப்பீர்கள். படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் நிச்சயம் எப்படியாவது பார்த்து விடுவீர்கள். என்னாத்துக்குப் பார்த்துட்டு என்று நினைப்பவர்கள் என் விமர்சனம் பார்த்து ஒன்றும் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என்று தோன்றவில்லை. ஆகவே விமர்சனம் என்று முழுதாக இல்லாமல் ராவணன் சம்பந்தமான என் எண்ணச் சிதறல்கள்....

*************************************************

1) திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டரில் பையாவிற்குப் பிறகு சுறாவை திரையிடவில்லை. சக்தி ஃப்லிம்ஸ் அதிபர் திரு. சுப்ரமணியத்தின் தியேட்டர். கையச் சுட்டுக்கறதுதான் மிச்சம் என்று நினைத்திருப்பதாக கேள்வி. மொழியாக்கப் படங்களை இரண்டு வாரமாக திரையிட்டவர்கள் ராவணனை நம்பி எடுத்திருந்தார்கள்.


2) ஆன்லைனில் வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்கெல்லாம் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது. சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு சென்றோம். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் மணிரத்னபுராணம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

3) தியேட்டர் வாசலில் விக்ரம் ரசிகர் மன்ற கட் அவுட்கள். சற்றுத் தள்ளி நாப்பது அடிக்கு நீஈஈஈளமாக ஒரு கட் அவுட் இருந்தது. யாருக்கு என்று பார்த்தேன். ‘நவரச நாயகன் கார்த்திக்’ பல வேடங்களில் இருந்தார்.





4) விக்ரம் ப்ருத்வியின் மனைவி ஐஸ்வர்யாராவைக் கடத்துவதற்கான பின்னணியான ஃப்ளாஷ்பேக் எந்தவித சலனத்தையும் பார்வையாளார்களிடையே ஏற்படுத்தவில்லை. ஷங்கரின் இந்தியன் கஸ்தூரி மரண ஃப்ளாஷ்பேக்கையும், ஜீன்ஸின் நாசர்-கீதாவை ராதிகா சந்தேகித்து வசவும் ஃப்ளாஷ்பேக்கையும் உதாரணமாகச் சொல்லலாம். (சட்டென்று நினைவுக்கு வருகிறது. தட்ஸ ஆல்)

5) மேக்கிங்- அபாரம். ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாய் இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை பிரமாதப்படுத்தியிருப்பவர்கள் காமிராமேன்கள் சந்தோஷ் சிவனும், மணிகண்டனும்தான். எந்தகாரணம் கொண்டும் சின்னத்திரையில் பார்த்துவிடாதீர்கள்.


6) வசனம் – சொதப்பல். சுஜாதாவை மிஸ் செய்கிறோம் என்பது தெரிகிறது.

7) பின்னணி இசையில் புதிய உத்திகளை ரஹ்மான் பரீட்சித்திருக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது. இசைக்கருவிகள் என்றில்லாமல் கோரஸை வைத்து அதிக இடங்களில் பின்னணி இசை கோர்க்கப்பட்டிருந்தது கவர்ந்த்து. அதுவும் அரேபிய பாணியில் பெண் குரல் ஒன்று பாடுமே, மிகவும் அருமை.

8) ராவணன், ராமன், சீதா, லஷ்மணன், அனுமார், விபீஷணன் எல்லாரையும் வேறு வகைகளில் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் புராதனமான கதையை நவீனமாக்குகிறேன் பேர்வழி என்று சொதப்பியிருக்கிறார்கள். சீதை பாதியில் ராவணனிடம் சலனப்படுவது போலவே பொதுஜனங்கள் நினைக்கும் வண்ணம் ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் குழப்புகிறது.

9) பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் குறையில்லை. ஆனால் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த ‘உசுரே போகுதே’ தவறான இடத்தில் வருகிறது. இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கலாம். அந்த இடத்தில் ‘கோடு போட்டா’ பாடலை நுழைத்திருக்கலாம்.


10) ‘சோத்துல பங்கு கேட்டா இலையப் போடு இலையை
சொத்துல பங்கு கேட்டா தலையைப் போடு தலையை’

‘வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குப் புரிகின்றது
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குப் புரிகின்றதா?’

வைரமுத்து = வைரமுத்து!

11) ஆர்ட் டைரக்டர் படம் நெடுக வியாபித்து உழைத்திருக்கிறார். அவருக்கும் ஷொட்டு. ப்ரியாமணி கல்யாணம் நடைபெறும் இடம், கோடு போட்டா’ பாடல் நடைபெறும் இடம் எல்லாம் ஆர்ட் டைரக்‌ஷனா லொகேஷனா என்று தெரியவில்லை. லொகேஷன் ஒவ்வொன்றும் மிகப் பிரமாதம். கண்ணிலேயே நிற்கிறது.

12) போலீசாக ப்ருத்விராஜ். அப்படி என்ன விக்ரம் தப்பு செய்தார் என்று இவர் துரத்துகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவரி வசனத்திலாவது போலீஸ் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அதனால் விக்ரம் மீது பரிதாபமோ, ஹீரோயிஸமோ ஒன்றுமே பார்வையாளனுக்குத் தோன்றவில்லை. அதேபோல அவனைப் பிடிக்கப் பாடுபடுகிறாரே எஸ்.பி என்று ப்ருத்விராஜ் பக்கமும் பார்வையாளன் சாயமுடியவில்லை. கிடைத்த கேப்பில் ஐஸ்வர்யா ராயை ஸ்க்ரீனில் சைட்டடித்துத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. (இது பொதுக்க்ருத்து. எனக்கு ஐஸ் மாதிரியான அழகு ‘பொம்மைகள்’ பிடிப்பதில்லை!)

13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.

14) விக்ரம், பிரபு, கார்த்திக் என்று ஒவ்வொருவரும் முதலில் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும்போது கைதட்டல் பெறுகிறார்கள். ஆனால் மூன்றோ நான்கோ சீன்களில் வந்தாலும், வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா.

15) விக்ரம் – நடிப்பு வழக்கம்போல அபாரம். மணிரத்னத்தின் சிரமப்படலும் படம் முழுக்கத் தெரிகிறது. ஆனால் நாங்கள் - அட்லீஸ்ட் நான் - மணிரத்னத்திடம் அடுத்ததாக எதிர்பார்ப்பது தமிழுக்கான தமிழ் ரசிகர்களுக்கான ABC செண்டர்களுக்கான ஒரு படம். செய்வீர்களா?


ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.

.

கொசுறு:- படம் ஆரம்பிக்குமுன் மக்களிடையே மணிரத்னபுராணம் என்று சொன்னேனல்லவா? படம் முடிந்தபிறகு ஓர் இளம்பெண் சொன்னது: ‘விக்ரம், ஐஸு, ப்ருத்விராஜ்ன்னு மூணு பேரை வெச்சுகிட்டு ஒரு ரொமாண்டிக்கான படம் எடுக்காம என்ன படம் எடுத்திருக்காங்க?’

.

Friday, June 18, 2010

அவங்க கேட்பாங்களாம். இவர் சொல்வாராம்.

 

சுஜாதா ஒரு தடவ எழுதி இருந்தாரு, கேள்வி கேட்கிறதுல 4 வகை இருக்குன்னு.

”சமீப” கேள்விகள்,

சமீபத்தில் நீங்க பார்த்த படம்?
சமீபத்தில் நீங்க அடிவாங்கிய இடம்?

”ஒப்பிடுக” கேள்விகள்

ரஜினி –விஜய்,
ராஜா-ரகுமான் ஒப்பிடுக.

“பற்றி” கேள்விகள்

உலகத் தமிழ் மாநாடு பற்றி?
தோழி அப்டேட்ஸ் பற்றி?

“உண்டா” வகை.

மழையில் நனைந்தபடியே ஐஸ்க்ரீம் சாப்பிட்ட அனுபவம் உண்டா?
அனுஷ்கா போஸ்டரை பார்த்துக் கொண்டே மோதிய அனுபவம் உண்டா?

   டோண்டூ ராகவனும், லதானந்தும் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் களம்.நாமும் இறங்கணுமான்னு யோசித்தேன். இரண்டு நாட்களுக்குப் பதிவு எழுத மேட்டர் கிடைக்கும் போது என்ன கவலை? இன்றும், திங்கள் வெளியாகவிருக்கும் பதில்களையும்தான் சொல்கிறேன்.

உடனே பேனா எடுத்து, கேள்வியை எழுத தேவையில்லை. மெயில் திறந்து டைப்பினால் போதும். நிபந்தனைகள்ன்னு பெருசா எதுவும் இல்ல. பிரச்சினை எதுவும் வராம(எனக்கு) , பதில்கள் சுவாரஸ்யமா இருக்கும்படியான(அது உன் கைல இருக்குடான்னு சொல்றிங்களா.. சரி) கேள்விகள்

நல்ல கேள்வி கேட்பவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு.அதுக்குன்னு பரிசல் நீங்க நல்லவனா, இல்ல ரொம்ப நல்லவனா டைப் கேள்விகள் வேண்டாமே.

பரிசு என்னன்னா. என் பதில்கள். கூடவே சர்ப்ரைசாக வேறு எதுவும் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

ரெடி ஜூட். kbkk007@gmail.com

Thursday, June 17, 2010

அட்வைஸ்கள் இலவசம்

யாராவது எனக்கு அட்வைஸ் பண்ணினா - சரின்னு கேட்டுக்குவேன். ஃபாலோ பண்றேனோ இல்லையோ என்பது ரெண்டாவது விஷயம். சின்ன வயசுலேர்ந்து இப்ப வரைக்கும் டக்னு ஞாபகம் வர்றதுல சிலது இன்னைக்கு எழுதலாம்னு உட்கார்ந்தேன். டக்னு டைரில பார்த்தா ஃப்ரெண்டு அனுப்ச்ச லெட்டர்ல இருந்த க்ரீட்டிங்ல எல்லாமே நல்ல நல்ல விஷயமா இருந்தது... அதுல சில...


சிரியுங்கள்:

ஒரு நாளைக்கு பலபேரோடு பழகுகிறோம். நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரே தடவை பார்ப்பவரைப் பார்த்ததுமே இதயத்திலிருந்து ஒரு புன்னகையை வழங்குவோம். அவர் உங்களைப் பார்க்க வந்த நண்பராய் இருக்கலாம். அலுவல் விஷயமாக வந்தவராய் இருக்கலாம். அல்லது நீங்கள் போய் பார்க்கும் நபராய் இருக்கலாம். Etc.. etc.. ஆனால் உங்கள் மனைவியைப் பார்த்து அப்படி சிரிப்பை உதிர்த்திருக்கிறீர்களா? உங்களோடே பணிபுரியும் ஒருவரைப் பார்த்து சிரிக்கும்போது அதே மலர்ச்சியோடு சிரித்திருக்கிறீர்களா? உங்களுக்கு சல்யூட் அடிக்கும் செக்யூரிடியைப் பார்த்து சந்தோஷத்தை முகம் முழுதும் செலுத்திச் சிரித்திருக்கிறீர்களா? இல்லை வெற்று குட் மார்னிங்கை மட்டும் கொடுத்திருக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள். ‘இவனைத்தான் இன்னைக்குப் பூராவும் பார்க்கப் போறோமே’ என்ற எண்ணம்தான் எல்லாருக்கும் இருக்கிறது. நம்முடனே இருப்பதை, உடனடியாகக் கிடைப்பதை நாம் மதிப்பதில்லை. அப்படி இருக்காதீர்கள். அவர்களுக்கும் இதயத்திலிருந்து ஒரு புன்னகையை பரிசளியுங்கள்.


கேளுங்கள் – 1:

உங்கள் அஸிஸ்டெண்ட், நண்பன் யாரிடமும் ஒரு வேலையைச் சொல்லும்போது கேள்வியாக கேளுங்கள்: உதா: ‘கணேஷ்.. அதை எடுத்துக் கொடு’ என்பதற்குப் பதில் ‘ஒரு நிமிஷம் கணேஷ்... அதை எடுத்துத் தர்றியா’ நாளைக்குள்ள அதை முடி’ என்பதற்குப் பதில் “நாளைக்குள்ள அதை முடிக்கணும். முடியும்லப்பா?”

கேளுங்கள் – 2:

எந்த முக்கியச் செயலையும் செய்யுமுன் அதோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு ஆலோசனை செய்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் அது உங்கள் முழு அதிகாரத்துக்குட்பட்ட செயலாக இருந்தாலும். ஏதேனும் சிறு தவறு நேர்ந்து, அது அந்த சம்பந்தப்பட்டவருக்குச் செல்லும்போது அவர் அவரது அதிகாரத்தின் எல்லைக்குள் அதை சரி செய்ய முயல்வார். (நம்மகிட்ட சொல்லிட்டுதானே செஞ்சான்.. பாவம்..) அதுவுமில்லையா.. பிரச்சினை வரும்போது நமக்கு சப்போர்டாக நாலு வார்த்தை பேசுவார்.


மௌனமாயிருங்கள் - 1:


ஒருவர் பேசும்போது நடுவே பேசாமல் மௌனமாயிருங்கள். அவர் முழுதும் பேசி முடிக்கும்வரை உன்னிப்பாக கவனியுங்கள். அவர் பேசும்போது அது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் தோன்றினாலும் இடைமறிக்காதீர்கள். ஒருவனை மிக எரிச்சலூட்டும் விஷயம், அவன் பேசும் சுவாரஸ்யத்தை, இடைமறித்துக் கெடுப்பதுதான்.


மௌனமாயிருங்கள்-2:


ஏதேனும் மேலதிகாரி சொல்வதில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். எதிர்கருத்துச் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ளாதவராய் இருக்கலாம். மௌனமாய் இருங்கள். சொல்லற்க பயனிலாச் சொல். நீங்கள் சொல்லியும் பயனில்லாத இடத்தில், ஏதும் சொல்லி எந்தப் பயனுமில்லை. அப்படி அவர் ஏற்கிறவராய் இருந்தாலும் அவர் பேசும்போது எதுவும் பேசாதீர்கள். அதற்காக அவர் முடித்த பின்னர் ‘என்ன முடிச்சுட்டீங்களா... இப்ப நான் பேசவா?’ என்று ஆரம்பிக்காதீர்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் உங்கள் தரப்பைச் சொல்லுங்கள்.


தனியாக சாப்பிடாதீர்கள்:


இது உங்கள் சாப்பாட்டை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுங்கள் என்றர்த்தமல்ல. சாப்பிடும்போது வீட்டிலிருந்தால் குடும்ப உறுப்பினர்களுடன், அலுவலகமென்றால் நண்பர்களுடன் அமர்ந்து உண்ணுங்கள். மகிழ்ச்சியோடு சாப்பிட்டால் உடலுக்கும் மனதுக்கும் நலம்.


பெயர் மிக முக்கியம்:

ஒருவனை அவர் பெயரிட்டே அழையுங்கள். நிறைய பேர் பணி புரியும் சூழலில் பெயர் தெரியவில்லையென்றால் – கவலைப்படாதீர்கள். கேளுங்கள்.

‘உன் பேரென்னப்பா’

‘குமார் சார்’

‘இங்க பாரு குமாரு...’ என்று ஆரம்பியுங்கள். அந்த சம்பாஷணை முடியும் வரை, நான்கைந்து முறை அவன் பேரை உச்சரியுங்கள். நான் ஹோட்டலுக்குப் போனால் சர்வர், ஆட்டோவில் போனால் ட்ரைவர் என்று முடிந்தவரை பேரைக் கேட்டுக் கொள்வேன்.

நெகடீவ் + பாஸிடிவ்:

எந்தச் செயலிலும் இறங்குமுன் நெகடிவ் எனர்ஜியை அண்ட விடாதீர்கள். நிச்சயம் இது என்னால் முடியும் என்ற பாஸிடிவ் எனர்ஜியோடே இருங்கள். அதே சமயம் முடியாவிட்டால் என்ன என்று யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். அது வெறும் முன்னேற்பாட்டுக்காகத்தானே ஒழிய, அதையே நினைத்துக் கொண்டிராதீர்கள்.

இன்றைக்கு இவ்வளவுதான். நாளைக்கு இது தொடரலாம்.. அல்லது வேறொரு நாளில் தொடரலாம்..


.

Wednesday, June 16, 2010

தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழியாஆஆஆம்..

செம்மொழிப் பாடலை நேற்றுதான் முழுவதுமாகக் கேட்டேன். யூ ட்யூபில். எல்லாரும் சொல்வது போல் பிசிறில்லாமல் கணீரென்று ஆரம்பிக்கிறது டி எம் எஸ்ஸின் குரல். தொடர்ந்து ஏ. ஆர்.ஆர், ஹரிணி, சின்மயி என்று பயணித்து ஸ்ருதி ஹாசன் வரை - ஸ்ருதியின் அந்த ‘தமிழ்மொழி, தமிழ்மொழி, தமிழ்மொழியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்’ - அபாரம். ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கிறது - அற்புதமான பாடலாக வந்திருக்கிறது. நடுவே ப்ளாசேயின் ராப்புக்கு முன் வரும் நாதஸ்வர பிட் கவர்கிறது. கடைசியில் வரும் அந்த பாட்டிம்மா குரலும் எக்ஸ்ப்ரஷனும் நன்றாக இருக்கிறது. ஆருங்க அது?

இந்த முக்கியமான வீடியோவில் எங்கே என் SPB?

வீடியோவில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் சேரும்போது அருகிலிருக்கும் மாணவன் பெயர் கேட்கிறான். உச்சரிப்பை வைத்துப் பார்க்கும்போது அவன் ‘ஆதவன்’ என்று பதில் சொல்வதாய் தெரிகிறது. நீங்கள் சரிபார்த்துச் சொல்லுங்களேன்...

கௌதம் மேனனின் டைரக்‌ஷன். ஆங்கிலம் இல்லாமலா? வீட்டுச் சுவற்றில் மகள் வரைந்து கொண்டிருக்க, உள்ளே வரும் மனைவியை ‘COME' என்றுதான் அழைக்கிறான் கணவன். அதையும் சரிபார்த்துச் சொல்லுங்கள்! (வீடியோவில் 4:06 டூ 4:07 நிமிடங்களில்)

இதெல்லாம் சும்மா சொல்கிறேனே தவிர அவ்வ்வ்வளவு பிடித்திருக்கிறது ஏ ஆர் ஆரின் இந்தப் பாடல். Hats off to you Brother!








இந்தப் பாடலின் வரிகளை பாடியவர்கள் யார் யாரென்ற விளக்கத்துடன் சரவணகுமரன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். படியுங்கள்.

.

Monday, June 14, 2010

அவியல் 14.06.2010

ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் என்றால் இந்த செல்ஃபோன் கம்பெனிக் காரர்களுக்கு அப்படி என்ன இளப்பம் என்று தெரியவில்லை. ஏர்டெல், ஏர்செல் என்று எல்லாரும் ஒரே கதைதான். (இதில் ஏர்செல், ஏர்டெல்லை விட மிக மோசம் என்று கேள்விப்பட்டேன். அனுபவித்தும் இருக்கிறேன்) திடீர் திடீரென்று நீங்கள் இதற்கு சப்ஸ்க்ரைப் செய்துள்ளீர்கள் அதற்கு சப்ஸ்க்ரைப் செய்துள்ளீர்கள் என்று காசைக் கழித்து விடுகிறார்கள். புகார் செய்ய கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால்.. நாம் கூப்பிடுகிற நேரத்தில்தான் உலகத்தில் எல்லாரும் கூப்பிடுகிறார்களாம். பிஸியாம். எப்போதுமே லைன் கிடைப்பதில்லை. உடனேயே வேறொரு போஸ்ட் பெய்ட் கனெக்‌ஷனிலிருந்து அழைத்தால் மிக மரியாதையாக எடுத்து பொறுப்பாக பதில் வருகிறது.

ப்ரீபெய்டிலிருந்து கஸ்டமர் கேர் எக்ஸிக்யூடிவிடம் பேசினால் மூன்று நிமிடத்திற்கு ஐம்பது காசு. போஸ்ட் பெய்டில் ஃப்ரீ.

ஒரு கஸ்டமர் கேர் அதிகாரியிடம் கேட்டேன்: ‘நாங்கள் முன் பணம் கொடுத்து உங்கள் சேவையை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். போஸ்ட் பெய்ட் சேவையை உபயோகப்படுத்துபவர்கள் இன்னும் பணம் கட்டாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இந்த மரியாதை? ப்ரீ பெய்ட் கஸ்டமர்களை ஏன் இப்படி இழிவாய் நடத்துகிறீர்கள்?’

‘நன்றி கிருஷ்ணா. உங்களுக்கு வேறு ஏதாவது உதவிகள் தேவையா?’

‘இல்லைங்க மேடம்.. நான் என்ன கேட்கறேன்னா...’

‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’

‘வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லும்மா’ என்றுவிட்டு கட் செய்தேன்.

*******************************

ண்பன் வீட்டுக்கு அலைபேசினேன். சினிமாவுக்குப் போயிருக்காருங்க என்றான் அவரது மகன். என்ன படத்துக்கு போயிருக்காரு எனக் கேட்டேன்.

“தெரியலைங்க. சிங்கம்தான். வெறும் சிங்கமா, பெண் சிங்கமா, முரட்டு சிங்கமான்னுதான் தெரியல”


**********************************

ண்பன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கூட இருந்த ஒருவன் குடித்து விட்டு உளறிக் கொண்டே வந்திருக்கிறான். இவன் ‘பேசாமப் படுங்க. யாராவது கம்ப்ளெய்ண்ட் பண்ணிடப் போறாங்க.. குடிச்சிருக்கீங்கன்னு’ என்றிருக்கிறான். அவன் சொன்னானாம்: ‘அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுங்க. பப்ளிக்ல செக்ஸ் வெச்சுக்க கூடாது. வீட்ல வெச்சிட்டு வெளில வந்தா எவன் கேட்பான்? அத மாதிரி பப்ளிக்லதான் குடிக்கக் கூடாது. வீட்ல குடிச்சுட்டு வந்தா எவனுக்கென்ன?’

மேற்கொண்டு அவனுக்கு விளக்கி வாங்கிக் கட்டிக் கொள்ள தயாரில்லாததால் போத்திக் கொண்டு படுத்து விட்டானாம் இவன். (எழுத்துப் பிழை ஏதுமில்லை!)

*******************************************

ட்விட்டர் மோகம் அதிவேகமாகப் பரவுகிறது. முன்புபோலல்லாமல் அடிக்கடி OVER CAPACITY என்று பதில் வருகிறது. அதுவும் நமீதா ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்தது குறித்து வெள்ளை மாளிகையில் ஒபாமா அறிக்கை விடாதது ஒன்றுதான் குறை. சிம்பு முதல் கமல்ஹாசன் வரை எல்லார் பெயரும் இருக்கிறது ட்விட்டர் அக்கவுண்டில். அது உண்மை எது டுபாக்கூர் என்றுதான் தெரியவில்லை.

ட்விட்டரில் அதிஷா கேட்டது: ‘அல்லாரும் என்னை எதோ ஒரு காரணத்துக்கு பாய்காட் பண்ணுங்கறாங்க. எனக்கு ஜெஃப்ரி பாய்காட்டைத்தான் தெரியும். அவரை என்ன பண்றது?’

*******************************

வாசகர் (சத்தியமாங்க. பெயர் - ஐன்ஸ்டீன், மதுரை) ஒருவர் எஸ்ஸெம்மெஸ்ஸினார்:

“Is it parisalkaaran @ luckykrishna?"

நான் பதில் சொன்னேன்:-

"I'm parisalkaaran, I'm lucky and My name is Krishna. But I'm not luckykrishna"

**********************************

ரோடு புத்தகத் திருவிழா 2005ன் ஆடியோ சிடி கேட்டுக் கொண்டிருந்தேன். கவியரங்கம். பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, விவேகா மற்றும் பலர்.

நெல்லை ஜெயந்தா பாரதி பற்றி பாடுகையில்:

‘எமன்
மனிதர்கள் என்றால் கயிறுடன் வருவான்
இவன் - மகாகவி என்பதால்
களிறுடன் வந்தான்’ என்றது கவர்ந்தது.

அதேபோல விவேகா எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் குணசேகரன் என்பவர் அவையில் அமர்ந்திருந்தார். விவேகா சொல்கிறார்:-

‘ஸ்டாலின் குணசேகரனுக்கும், ஸ்டாலின் உரிமையாளர்களுக்கும் வணக்கங்கள்’

அது கேட்டது. பார்த்தது முதல்வன் பட டிவிடி. இறுதியில் அர்ஜூன் ரகுவரனை சுடும்போது, இறக்கும் தருவாயில் ரகுவரன் சொல்வார்: ‘It was a Good Interview' எனக்கு ஏனோ ஆதிமூலகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தார்!

*******************************************

‘ஜீனியஸ் இன் கார்ப்பரேட் கம்பெனி’ என்று ஒரு மெய்ல் வந்தது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரிகிற கம்ப்யூட்டர் ஆசாமி (ஆமாம்!) கன்சல்டன்சியின் just ask சேவைக்கு மெய்ல் அனுப்பி கேட்டிருக்கிறான்.

‘என்னுடைய முதலாளி எல்லா பேப்பரின் இரண்டு புறமும் ப்ரிண்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். நான் மைக்ரோசாஃப்ட் எம் எஸ் வேர்ட் பயன்படுத்துகிறேன். ஒரு பக்கத்தை முடித்ததும் நேரடியாகவே அது இரண்டாம் பக்கத்துக்குச் சென்று விடுகிறது. முதல் பக்கத்தின் பின்புறம் டைப்படிக்க நான் என்ன செய்ய வேண்டும்?’

இதைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அவர்கள் சந்தித்த ஜீனியஸ்கள் பற்றி சொன்னது அதைவிட சுவாரஸ்யம்:

ரெண்டு கம்ப்யூட்டர் வேண்டும் என்றிருக்கிறார் ஒரு கல்லூரி HOD. எதுக்குங்க என்றால் ‘இண்டர்நெட் பார்க்க ஒண்ணு, ஈமெய்ல் பார்க்க ஒண்ணு’ என்றிருக்கிறார்.

CPU வில் உள்ள காஃபி ஹோல்டர் காஃபி கப் வைத்ததும் உள்ளே போய்விடுகிறது என்று ஒரு கம்ப்ளெய்ண்ட். அதுல எங்கடா காஃபி ஹோல்டர் என்று போய்ப் பார்த்தால் அவன் காட்டியது டிஸ்ட் ட்ரைவ்.

சிடியை அஞ்சாறு கவர் போட்டு வைத்திருந்திருக்கிறார் ஒருவர். எதுக்குங்க என்று கேட்டதற்கு சொன்னாராம்: ‘வைரஸ் வராம இருக்கத்தான்’

********************************************

ண்பன் கேட்ட கேள்வி:-

‘ஒரு பெண் காது கேட்காது, வாய் பேச மாட்டார், கண்ணும் தெரியாது. அவளிடம் காதலை ஒருவன் எப்படித் தெரிவிப்பான்? ஒரு நிபந்தனை: அவளைத் தொடக்கூடாது’

யோசித்து, தயங்கித் தயங்கி விடை சொல்லி விட்டேன். நீங்களும் ட்ரை பண்ணுங்களேன்...

**********************************

.

Tuesday, June 8, 2010

பேயோன் 1000

ல வருடங்களுக்கு முன் எல்லாரும் திருட்டு விசிடியை எதிர்த்தபோது கமலஹாசன் ஒன்று சொன்னார். ‘அறிவியலின் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து உங்கள் கலைகளை கொண்டு செல்லாவிட்டால் உங்களுக்குத்தான் கஷ்டம்’ என்று. இன்று வரை திருட்டு விசிடியை ஒழிக்க முடியவில்லை. அது திருட்டு டிவிடியாக வளர்ந்துதான் இருக்கிறது.

எழுத்திலக்கியம் கணினிக்குள் வந்து வலையுலகம் வாயிலாக பரந்து விரிந்து கொண்டிருக்க வந்தது ட்விட்டர். எனக்கு ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் ஓசியில் கிடைக்கும் எதையும் விடாத நான் அதையும் விடாமல் ஒரு கணக்கைத் தொடங்கினேன். கொஞ்ச நாளைக்கு ஒன்றுமே புரியவில்லை. (இப்போது ஒன்றாவது புரிந்திருக்கிறது) தினமும் என்னை ஃபாலோ செய்வதாக பலரும் வர கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்தேன்.

ஒரு விஷயம் - அதில் கொஞ்சம் கொஞ்சமாய் அல்ல, கொஞ்சமேதான் எழுத முடியும். 140 எழுத்துகளுக்குத்தான் அனுமதி. இப்படியாகப்பட்ட கால கட்டத்தில் தமிழ் ட்வீப்பிள்ஸையெல்லாம் கவர்ந்தார் ஒருவர்.

ரைட்டர் பேயோன்.

தன்னை எழுத்தாளர் என்று தானே விளித்துக் கொள்கிறார். வசனகர்த்தா, முன்னணி எழுத்தாளர் என்று சொல்கிறார். யாரென்று யாருக்குமே தெரியவில்லை. இன்று வரை. ஆனால் அவர் நிச்சயமாக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர்தான் என்பது அவரது ட்வீட்களிலிருந்து புலனாகிறது.

‘வித்தியாசமாக பண்ண வேண்டும் என லிங்குசாமி சொல்கிறார். ஹிட்ச்சாக் டிவிடி தொகுப்பை வாங்கிச் சென்ற நண்பரோ இன்னமும் திரும்பத் தரவில்லை. தவிக்கிறேன்’ - இதுதான் இவரை நான் கண்ட முதல் ட்விட் என்று நினைக்கிறேன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும், சமயத்தில் எள்ளலாய் எழுதிக் கொள்வதும், உலக சினிமாவை 140 வார்த்தைகளில் விமர்சிப்பதும், ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கவிதை எழுதுவதும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ரைட்டர் பேயோன்.

இவரது ட்விட்கள் ஆயிரம் சேர்ந்ததும் புத்தகமாக வரவிருக்கிறது என்று செய்தி பரவத் தொடங்கியதுமே எனக்கு ஆர்வம் அதிகமானது. இரண்டு நாட்கள் முன் சென்னை சென்றிருந்த போது கடை கடையாய் விசாரித்து, ஒரு வழியாய் வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் வடிவம், உள்ளே உள்ள எழுத்துரு, அட்டைப்படம் எல்லாமே கவர்கிறது. இதிலும் பேயோன் யாரென்று சொல்லாமல் பின்னட்டையில் அவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆனால் ‘இரண்டாயிரம் ஆண்டு கால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறை’ என்பதெல்லாம் ஓவர். ட்விட்டர் வந்து இரண்டாயிரம் ஆண்டா ஆகிறது? ஒருவேளை இதையும் பகடியாக பேயோனே எழுதிக் கொடுத்திருக்கலாம்)

புத்தகத்துக் கொடுத்த காசு அந்த முன்னுரைக்கே சரியாகப் போய்விட்டது. வாய்ப்பே இல்லை. முன்னுரைக்குப் பதிலாக, முன்னுரையில் ‘முன்னுரைக்குப் பதிலாக’ என்று ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி? என்ற தலைப்பில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனுஷன்.

‘முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக் கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிச் சொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக..’ என்று ஆரம்பித்து சிக்ஸராக அடித்துத் தள்ளியிருக்கிறார்.

ட்வீட்கள்?

பல ஆகா அபாரம்களும், சில ஏமாற்றங்களும்.

49 ட்வீட்கள் முடிந்ததும் ஐம்பதாவதாக ஒரு ட்வீட். ‘எனது ட்விட்டரை தொடங்கியபின் 49 ட்வீட்களை எழுதிவிட்டேன். இன்றிரவுக்குள் 50 ட்வீட்களை எட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறேன்’ என்பதையே 50வது ட்வீட்டாய் தருகிறார். உத்தி ரசிக்க வைக்கிறது. ஆனால் அதையே நூறாவதுக்கும், இன்னோரிரு இடங்களிலும் தருவது அயர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. போலவே சுவாரஸ்யமற்ற காலை வணக்கங்களை தவிர்த்திருக்கலாம். இரவு வணக்கங்களை கவிதை கலந்து தருவதால் ரசிக்க வைக்கிறது.

இரண்டொரு ட்வீட்கள் மறுபடி அச்சாகியிருக்கிறது. அவரே ஒரு ட்வீட்டில் ‘வெளியிடுவதற்கு முன் முகமன்கள், context இல்லா மறுமொழிகள், நன்றிகளை நீக்கினால் மின்னூல் முழுமையாக இருக்கும்’ என்றிருக்கிறார். ஆனால் பதிப்பாகும்போது அதைச் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் சில ட்வீட்கள் குபீர் சிரிப்பையும் சில ட்வீட்கள் !ஐயும் வரவைக்கிறது.

‘பொதுவாக என் பத்திகளை என் வீட்டு வாட்ச்மேனிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன். அவருக்குப் புரியவில்லை என்றால்தான் பிரசுரத்திற்கு அனுப்புவேன்’

‘ஜப்பானியப் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாயகன் நாயகியுடன் உடலுறவு கொள்கிறானா அவளது அம்மாவுடனா எனத் தெரியாமல் எழுதுவது சிரமம்’

‘இயக்குனர் பியரி பலர்டியு இறந்துவிட்டார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ. அவரைப் பற்றி அறிந்தபின் 2002லேயே அவர் படங்களை பார்த்ததுபோல் எழுதவேண்டும்’

‘சென்னையில் அன்னா அக்மதோவா, அன்னா கரீனனா, அன்னா கிரிகோரிவ்னா (கிரிகோர்வினா) எல்லோருக்குமாக சேர்த்து ஒரு அன்னா அறிவாலயம் எழுப்பப்பட வேண்டும்

‘நேற்றிரவு தூங்கப் போனபோது நல்ல இருட்டு. காலை எழுந்து பார்த்தால் நல்ல வெளிச்சம். இடைப்பட்ட நேரத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது’

‘1. ஆஸ்கார் ரவிச்சந்திரன் கதை சொல்ல அழைத்திருந்தார். நான் கதை சொல்ல துவங்கியதும் தூங்கிவிட்டார். 2. அவரது மேஜையில் கிடந்த ப்ரிஸ்கிரிப்ஷனில் என் பெயரைப் பார்த்ததும்தான் எனக்கு விஷயமே புரிந்தது’

‘படிப்பது என்றால் மற்றவர்கள் எழுதியதை படித்தல். வாசிப்பது என்றால் எனது படைப்புகளை படித்தல்’

‘ஜெயமோகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்று புரிந்தது. தஸ் புஸ் என்று பேசினால் ஆங்கிலம். தஸ்ய புஸ்ய என்று பேசினால் சமஸ்கிருதம்’

‘தன்னடக்கத்தில் எனக்கு நிகர் நானேதான்’

‘எனது புத்தகம் ஒன்றை ஒரு இந்தி பேராசிரியரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்தேன். ‘பஹூத் போர் ஹே’ என்றார். போர்ஹேயுடன் ஒப்பிடுகிறார்’


‘போலான்ஸ்கியை சிறையில் தள்ளிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். ஒரு கலைஞன் குற்றம் செய்தால் குற்றமாகுமா? குற்றவுணர்வு தரும் தண்டனை போதாதா?’

இவை ஒரு சில.

யார் இந்த பேயோன் என்று தெரியாவிட்டாலும் எஸ்.ராவாக இருக்கும் என்பது என் அனுமானம். அதை உறுதிப்படுத்துவதாக பல தகவல்கள். பெண்களைக் குறிப்பிடும்போதெல்லாம் துப்பட்டா பற்றி எழுதுகிறார். விகடனில் எழுதுகிறேன் என்கிறார். என் தொடர் ‘இன்னும் பரவும்’ என முடிக்கிறேன் என்கிறார். (விகடனில் வரும் எஸ்.ரா-வின் சிறிது வெளிச்சம் அப்படித்தான் வாரா வாரம் முடிகிறது) அலைதலே தேசாந்திரிக்கு வித்திட்டது என்கிறார்.

யுவகிருஷ்ணாவோ, எஸ் ரா என்று தன்னை எல்லாரும் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதுகிறார் என்கிறார். நமக்கு உள்ள ஹீரோவைக் கொண்டாடும் மனப்பான்மை, அவராக நான்தான் அது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாமல் பேயோன் யாரென்று தெரியாமல் இருப்பதன் ரசிப்பில் மூழ்கி அதிலிருந்து வெளிவர விரும்பாமல் தடுக்கிறது. அதை அவர் புரிந்து கொண்டு புகுந்து விளையாடுகிறார் என்கிறேன் நான்.

பேயோன் எஸ்.ரா. இல்லையென்றால் நிச்சயமாக அது பா.ரா-தான் என்பது என் அனுமானம். ஏனென்றால் பேயோன் பா.ரா இல்லை என்று இரண்டு பேர்தான் சொல்கிறார்கள். 1) பா.ரா. 2) யுவகிருஷ்ணா.

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் ட்விட் தொகுப்பு என்ற பெருமை பெற்ற இந்தப் புத்தகத்தில் என் பெயரும் மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பதால் இந்த விமர்சனம் அவசியமாகிறது. போலவே நீங்கள் வாங்க வேண்டும் என்பதும்.

பேயோனைட்விட்டரில் பின் தொடர:- இங்கே க்ளிக்கவும்.

என்னை ட்விட்டரில் பின் தொடர இங்கே க்ளிக்கவும். (நெல்லுக்கிழைத்த நீர்....)

பேயோன் 1000
ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு
விலை: ரூ.60
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை,
யுனைடட் இந்தியா காலனி
கோடம்பாக்கம், சென்னை - 24
044-237202939

.

ஆன்லைனில் வாங்க:- இங்கே க்ளிக்கவும்.



*

Monday, June 7, 2010

நிராகரித்தலின் வலி

(தலைப்பைப் பார்த்து ஏதோ பெரிய இலக்கியம் எழுதப் போவதாக நினைத்து ஏமாந்துவிட வேண்டாம். இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்.... )

நட்பும் நண்பர்களுமே என் வாழ்க்கை என்று கங்கணம் கட்டிக் கொண்டெல்லாம் நான் பிறக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியான பல கட்டங்களில் அவர்கள்தான் ஆறுதலாயிருந்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் புன்னகைக்கிறேன். அவர்கள்தான் எனக்கு அன்பை வழங்கியிருக்கிறார்கள்.. வழி நடத்தியிருக்கிறார்கள்.

இந்த நட்பின் தேடல் எப்போது ஆரம்பித்தது என்று சரிவர நினைவில்லை. ஏழாவது படிக்கும்போது ஜெயக்குமார் என்ற மாணவன் எங்கள் வகுப்பில் வந்து சேர்கிறான். கண்ணாடி அணிந்திருக்கிறான். எனக்குப் பின் பெஞ்சில் அமர்கிறான். தேர்வில் அதுவரை முதல் ரேங்க் எடுக்கும் நான், இரண்டாவது ரேங்க் எடுக்கிறேன். அவன் முதல் ரேங்க். எனக்கு அவனை மிகப் பிடித்துப் போகிறது. நட்பாகிறேன். அவனும்.

எட்டாவதில் இருவரும் ஒரே பெஞ்ச். தினமும் அவன் வீட்டிற்குப் போனபிறகுதான் என் வீட்டிற்குப் போகிறேன். ஒவ்வொரு நாள் அவன் என் வீட்டுக்கு வந்து விட்டுச் செல்வான். அவன் என் வீட்டுக்கு வரும்போதோ, நான் அவன் வீட்டுக்குச் செல்லும்போதோ ஒன்று நடக்கும். வீடுவரை வந்து பையை வீட்டில் விட்டெறிந்துவிட்டு, வீட்டின் முன் நின்று இருவரும் பேச ஆரம்பிப்போம். ஏழு மணி - இருட்டு கட்டியபிறகு அம்மா வந்து திட்டிய பிறகுதான் அவரவர்கள் வீட்டிற்கு ஓடுவோம். ஒன்றுமில்லாமல் அப்படி என்ன பேசினேன் என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும், இடைவேளைகளில் என்று எப்போதுமே ஒன்றாகத் திரிந்தோம். எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் நட்பு பிரசித்தமாக இருந்தது. எட்டாவது முடிகிறவரைதான் இது.

ஒன்பதாவது வகுப்பில் சென்று அமரும்போது நான் வழக்கம்போல முதல் பெஞ்சில் அமர, அவன் எனக்குப் பின் ஒரு பெஞ்ச் தள்ளி மூன்றாவதில் வேறு ஒரு நண்பனோடு அமர்ந்தான். கேட்டதற்கு ‘இல்லடா இங்கயே இருக்கேன்’ என்றான். அவனோடு உட்கார்ந்திருந்தவனும் எங்கள் நண்பன்தான். பெயர்கூட நினைவில் இல்லை. அவன் ஒரு மாதிரி என்னைப் பார்த்து புன்னகைத்தான். உன் நட்பை நான் வாங்கிவிட்டேன் என்பதாய் இருந்தது அந்தப் புன்னகை. என்ன எதற்கு என்றே புரியாமல் நிராகரிக்கப்பட்டதன் வலியை அன்றைக்கு உணர்ந்தேன். இரண்டொரு சப்ஜெக்ட் முடிந்தபிறகு கணக்கு பாடம் எடுக்க EPK Sir எனப்படும் கிருஷ்ணன் சார் வந்தார். என்னைப் பார்த்த கண்களால் அவனைத் தேடினார்.

‘ஜெய் எங்கடா..’ என்றவர் அவனைப் பார்த்து ‘ஏன் அங்கபோய் உட்கார்ந்திருக்க?’ என்றார். அவனோடு இருந்த அவனின் புதிய நண்பன் ‘இல்ல சார்.. அவன் இங்கயே உட்கார்ந்துக்கறனாம்’ என்றான். ஈபிகே சார் அவனை முறைத்து அமரவைத்து ‘ஜெய் என்னாச்சுடா’ என்றான். அவன் ‘ஒண்ணுமில்ல சார்.. இங்கயே உட்கார்றேன்’ என்றான். அவர் என்னை எழுப்பி ‘என்னாச்சு கிருஷ்ணா’ என்றார். ‘தெரியல சார்..’ என்ற நான் சடக்கென்று அழுதுவிட்டேன். ‘ரெண்டு பேருக்குள்ளயும் ஏதாவது சண்டையா’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்’ என்றான் ஜெய். நானும். ‘சரி...’ என்று அந்தப் பிரச்சினையை விட்ட அவர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அவர் பிரியட் முடிந்ததும் என்னை அழைத்தார். ‘விடுப்பா.. அவன் பேசலைன்னா என்கிட்ட சொல்லு’ என்றார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு பயமாகப் போய்விட்டது. ஒருவேளை பேசாமல் போய்விடுவானோ. பெஞ்ச்தானே மாறி உட்கார்ந்திருக்கிறான்.. என்று நினைத்தேன். ஆனால் பயந்தமாதிரியே உணவு இடைவேளையில் என்னோடு வரவே இல்லை. நான் எதுவோ கேட்க வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டுப் போனான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்றைக்கு மாலை பள்ளிவிட்டதும் அவன் அவசர அவசரமாக வெளியேற, ‘என்னாச்சுடா..’ என்று கேட்டபடியே போனேன். ‘போடா எங்கிட்ட பேசாத’ என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டான்.

அடுத்த நாள், அடுத்த நாள் என்று இரண்டொரு நாட்கள் அவன் என்னிடம் பேசவே இல்லை. எதற்கென்றே தெரியவில்லை. ஒருவாரம் கழித்து சயின்ஸ் வாத்தியார் என்னையும் அவனையும் வகுப்பில் அழைத்தார். ‘ஒரு வாரமா பார்க்கறேன்... உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்னடா பிரச்சினை?.. நல்லா ஃப்ரெண்ட்ஸாத் தானே இருந்தீங்க?’ என்றார். எங்கள் இருவருக்குமே கால் நடுங்க ஆரம்பித்தது. காரணம் அவர் ஒரு அதிரடி வாத்தியார்.

நான் ‘எனக்கொண்ணுமில்லை சார்.. அவன் என்னான்னே தெரியல என்கிட்ட சரியா பேசறதில்ல’ என்றேன். அவன் கொஞ்ச நேரத்துக்கு எதுவம் பதில் சொல்லவே இல்லை. பிறகு அவர் ஒரு அதட்டல்போடவே ‘ஃபர்ஸ்ட் நாள் சும்மாதான் பெஞ்ச் மாறி உட்கார்ந்தேன். ஈபிகே சார்கிட்ட என்னமோ சொல்லிட்டான் இவன்.. அவர் வந்து சத்தம் போட்டாரு.. அதுனால இவனை எனக்குப் பிடிக்கல’ என்றான்.

சயின்ஸ் மாஸ்டர் உடனே ஒரு மாணவனை அழைத்து பக்கத்து வகுப்பில் இருந்த ஈபிகே சாரை வரச் சொன்னார். அவர் வந்ததும் விஷயத்தைக் கேட்டு ஜெய்க்குமாரை முறைத்து ‘அவன் ஒண்ணும் என்கிட்ட சொல்லலடா.. நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாருக்கும் தெரியும். மாறி மாறி ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவீங்க.. ஒண்ணாவே சுத்துவீங்கன்னு நாந்தான் கேட்டேன்’ என்றவர் ‘அன்னைக்கு எங்கடா சத்தம் போட்டேன்? இவன் அழுதானேன்னு வெளில கூட்டீட்டுப் போய் சரியாப் போய்டும்டா... பேசுவான்’ன்னேன். அவ்ளோதான்” என்றார்.

சயின்ஸ் வாத்தியார் ஜெய்யிடம் ‘அவன்கிட்ட பேசமாட்டியா?’ என்று கேட்க அவன் மிக உறுதியாக ‘மாட்டேன்’ என்று தலையசைத்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘கிருஷ்ணாவுக்கு சப்போர்ட் பண்றீங்கள்ல.. என்ன ஆனாலும் அவன்ட்ட நான் பேசப்போறதில்ல’ என்ற முடிவில் அவன் இருந்திருக்க வேண்டும்.

பிறகு இருவருமாக ஏதோ முடிவு செய்தவர்களாய் ‘ரெண்டு பேரும் கையைக் கோர்த்துட்டு க்ளாஸுக்கு வெளில மண்டி போட்டு நில்லுங்க. ரெண்டு பேரும் பேசிக்குவோம்னு சொன்னப்பறம்தான் உள்ள வரணும்’ என்றார்கள். அப்படியே நின்றோம். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரம். மதிய உணவு இடைவேளை முடிந்து வந்தும் நின்றோம். அவன் அசையவே இல்லை.

திடீரென அந்த வழியே வந்த ஹெட்மாஸ்டர் என்ன ஏது என்று கேட்டு ‘என்னமோ பண்ணீட்டு போறாங்க.. நமக்கென்ன சார்’ என்று சயின்ஸ் மாஸ்டரிம் பேசி எங்களை உள்ளே அனுப்பினார்.

அதன்பிறகு அவன் என்னிடம் பேசவே இல்லை. அவன் அம்மாவை சந்தித்தபோது அவன் அப்படித்தாம்ப்பா.. நீ எப்பவும் போல வீட்டுக்கு வா’ என்றார். முழு ஆண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக பேசத் தொடங்கினான். ஆனாலும் முந்தைய பிடிப்பு எனக்கோ, அவனுக்கோ இருக்கவில்லை. பத்தாவதில் இருவரும் வேறு வேறு செக்‌ஷன். பதினொன்றாவதில் அவன் ஆங்கில மீடியம் மாற, அந்த நட்பு புதுப்பிக்கப்பட வாய்ப்பே இருக்கவில்லை.

பதினொன்றாவது அரையாண்டு முடிந்து அவன் பள்ளிக்கு வரவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் சொந்த ஊரில் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. அவன் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் போய்ப் பார்ப்பதற்காக புறப்பட்டனர்.

ஈபிகே சார் என்னை அழைத்தார். ‘போடா.. நீயும் போய்ட்டு வா’ என்றார். மிக உறுதியாக மறுத்தேன் நான்.

கடைசிவரை அவன் ஏன் என்னிடமிருந்து விலகி இருந்தான் என்பதற்கான விடை கிடைக்காமலே இருந்தது. இன்று வரை நட்புலகில் வெவ்வேறு விதமான நிராகரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரே வித்தியாசம் - இப்போதெல்லாம் விடை தெரிகிறது.

.

Saturday, June 5, 2010

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

ப்போதோ எழுதி, உடனே பதிவிட்ட கவிதைகள். ஒரு காரணத்திற்காக பதிவிட்ட நான்கைந்து நாட்களில் எடுத்து விட்டேன். மறுபடி ட்ராஃப்டிலேயே வைத்திருந்தேன்.

மறுபடியும் பதிவில் இருக்கட்டும் என்பதால் வெளியிடுகிறேன். ஆகவே இது ஒரு மீள்பதிவு என்று கொள்ளலாம்.

ஏற்கனவே படித்துவிட்டவர்கள் ஒரு திட்டு திட்டிவிட்டு கடந்துவிடவும்.

:-)

*****************************************






1)


தேடிக் கொண்டேயிருக்கிறேன்
தொலைத்தது எதுவென்று தெரியாமல்.

******************

2)

நியாய அநியாயம்

விழுந்த வெட்டில்
கால் துண்டாகிக் கிடந்தது.
தண்ணீருக்காக
தொண்டை தவித்தது தெரிகிறது.
கண்கள் யாரையோ தேடி
அலைபாய்கிறது.
காற்றில் துழாவும் கைகளைப்
பற்றிக் கொள்ள
எவரும் வரவில்லை.
தண்ணீர் கொடுக்க நெருங்கியவர்
என்ன காரணமோ தடுமாறுகிறார்.

கூடி நிற்கும் கூட்டம்
வேடிக்கை பார்க்கிறது.
கூட இருக்கும் அதிகாரிகளும்
அலட்சியமாய் நிற்கின்றனர்.

போயேவிட்டது உயிர்.

‘மனுசனுகளாடா நீங்க?’

அங்கே இருந்திருந்திருந்தால்
அவர்களில் ஒருவனாயிருந்திருக்கக்கூடிய
நான்
இங்கே இருப்பதால்
ஏ ஸி அறையில்
நிறுவன செலவில்
யூ ட்யூபில் பார்த்துத்
திட்டிக் கொண்டிருக்கிறேன்.

*****************************


3)


போட்ட கால்சட்டைக்கு
பொருத்தமான சட்டை தேடுவதைவிடவும்
சிரமமாக இருக்கிறது
எழுதி முடித்த கவிதைக்கு
தலைப்பு வைக்கும் வேலை.

**********************************

4)

ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

பச்சை ஆகாயம்
சிகப்பு நிலா
வைலட் பறவைகள்
மஞ்சள் மேகம்

‘புல்லு என்ன கலர்ப்பா’
கேட்கும் மகளுக்கு
நீலம் என்கிறேன்.

ஆகாயம் பச்சையாய் இருக்கும்போது
புற்கள் நீலத்தில் இருந்தாலென்ன?

அவர்கள் உலகில்
எல்லாமே அழகுதான்.

**************************

5)


முன்னும் பின்னும்


சாலையின் நெரிசலில்
நடக்கையில்
சற்று தூரத்தில்
அவனைப் பார்த்தேன்.
எங்கோ பார்த்த முகம்.
அவன் முகத்திலும்
அதே கேள்வி.
நெருங்கிக் கொண்டே இருந்தான்.
என்னுள் கேள்விச் சிக்கல்
அவிழாமல் முடிச்சாய்த்
தொடர்ந்தது.
கைக்கெட்டும் தூரத்தில் வந்து
கடந்து போனான்.
போனவனைத்
திரும்பிப் பார்த்து
கேட்டிருக்கலாமோவென
எண்ணினேன்.
ஆனாலும்
யாரென்று தெரியாமல்
அவனைப் பார்க்கும்போது
எனக்கிருந்த அன்பு
அறிந்து கொண்ட பின்
இருந்திருக்கும் அன்பைவிட
அதிகமாகத்தான் இருந்ததென்பதால்
விட்டுவிட்டேன்.

***************************


.

Wednesday, June 2, 2010

அவியல் 02.06.2010

திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28


இதெல்லாம் என்ன? கடைசியில் பார்ப்போம்.


************************************************************

சின்னவளுக்கு ஒரு ட்ரெஸ் எடுத்தோம். போட்டுப் பார்த்து ‘பிடிச்சிருக்கா.. பிடிச்சிருக்கா’ என்று மனைவி பலமுறை கேட்டார். அவளும் ஆமாமென்றாள். அடுத்தநாள் போட்டுக் கொள்ளச் சொன்னபோது முகம் சுழித்தாள். உனக்குப் பிடிச்சதாலதானே வாங்கினோம் என்றதற்குச் சொன்னாள்: “கைகிட்ட ரொம்ப பிடிச்சிருக்கும்மா”

******************************************************

வசரத்திற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வேண்டி வந்தது. உமாவிடம் ஏ.டி.எம். கார்டு கேட்டேன். பின் நம்பர் சொல்லி் - கொடுத்தார். பணம் எடுத்து வந்தேன்.

ஏ டி எம் கார்டை திருப்பிக் கொடுக்கும்போது கேட்டார். “பின் நம்பர் உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சே..”

“அதுனாலதான் பின் நம்பரை மாத்தீட்டேன். ஓகேவா?” என்றேன்.

“அப்படின்னா சரி” என்றவர் பத்து நிமிடங்கள் கழித்து “அதெப்படி சரியாகும்?” என்று யோசித்து முதுகில் குத்தினார்.

**************************************************

கொஞ்சம் சோகமான படங்களென்றால் தவிர்த்துவிடும் மிடில்க்ளாஸ் சராசரி நான். அந்தக் காரணத்திற்காகவே அங்காடித் தெருவை தவிர்த்து வந்தேன். ஆனால் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலும், ‘உன் பேரைச் சொல்லும்போதே’ பாடலும் மனதை விட்டு அகலாமல் படத்தைப் பார்க்கப் போறியா இல்லையா என்று மிரட்டிக் கொண்டே இருக்கிறது.

படத்தைப் பார்க்காமல் தவிர்க்க இன்னொரு காரணம், சில வாரங்களுக்கு முன் விகடனில் அந்தப் பட ஹீரோ மகேஷின் பெற்றோருடனான ஒரு பேட்டிக் கட்டுரை வந்திருந்தது. என்னவோ... படிக்கப் படிக்க தொண்டையெல்லாம் அடைத்து, கண்ணில் நீர் தளும்பி விட்டது.

அவர்களுக்காகவாவது நிச்சயமாக பார்க்க வேண்டும்.

***************************************

பள்ளிக் கூடம் திறந்தாகி விட்டது. ஃபீஸ் கட்டப் போனால் உட்கார்ந்திருப்பவர்கள் கைகளில் துப்பாக்கியோடும், முகமூடியோடும் இருப்பதாகவே கற்பிதம் செய்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நேற்றைய தினகரன் நாளிதழை கையில் வைத்துக் கொண்டே ‘ஃபீஸ் எவ்வளவு’ என்று கேட்டேன். (நாளிதழின் தலைப்புச் செய்தி: ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும்’) அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் காது குடைந்தவாறே வழக்கமான ஃபீஸையே சொன்னார். தயங்கித் தயங்கி பேப்பரை அவர்கள் கண்ணில் படுமாறு டேபிளில் வைத்து ‘இன்னும் முடிவாகலைன்னு சொல்றாங்களே?’ என்றேன்.

’கம்மியாச்சுன்னா அடுத்தடுத்த டேர்ம் ஃபீஸ்ல கழிச்சுக்கறோம்’ என்றார் அலட்சியமாய். அப்படி ஒரு நெனைப்பு வேற இருக்கா ஒனக்கு என்ற தொனி அதில் இருந்தது.

சரி என்று கட்ட முன்வந்தபோது காது குடையும் பேப்பரை விரித்து கீழே போட்டார். அப்போதுதான் கவனித்தேன். அதே தினகரனின் தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி!

***********************************

முதல் பத்தியில் பார்த்தது கும்பகோணத்தில் ஒரு கோயிலில் கண்ட அறிவிப்பு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட அளவு விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று இருந்தது. இரண்டு விஷயங்கள் புலனாயிற்று. ஒன்று - லஞ்சம் எங்கே ஆரம்பித்திருக்கிறது என்பது. இன்னொன்று - இருப்பதிலேயே அதிக விளக்கு எதற்கு என்று பாருங்கள். கடவுளுக்கே ஹை ரிஸ்கான விஷயம் அது என்பது தெரிந்திருக்கிறது!

*********************************

குறிப்பு: அந்தப் பள்ளிக்கூட காது குடைந்து பேப்பரை கீழே போடும் சீன் மட்டும் கற்பனை!


***