Wednesday, September 29, 2010

ஸ்ஸ்ஸ்...ப்ப்பாஆஆஆஆஆ..

ன்னை எழுத அழைத்த அன்னுவிற்காக....

*********************************


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பரிசல்காரன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. காரணம் ஏற்கனவே கூறியதுதான்.. இங்கே படித்தால் தெரியும்..

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இதற்கும் இரண்டாவது பதிலில் குறிப்பிட்டிருக்கும் இணைப்பைக் க்ளிக்கினால் போதுமானது. (அதுக்காக காலடி எடுத்து வைக்கறதெல்லாம் பெரிய வார்த்தைங்க.. தவிரவும்... வலைப்பதிவுன்னா கைவிரலடிதானே எடுத்து வைக்கணும்??)


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ம்க்கும்..

முதலில் அப்போதைய அமெரிக்க ப்ரசிடெண்ட் GEORGE W BUSHஷிடம் என் வலைப்பூவைப் பிரபலமாக ஆக்க, அவரை இந்தியா -சிங்கப்பூர் - இங்கிலாந்து - பாரீஸ் - லண்டன் - நார்வே - ஃப்ரான்ஸ் என்று என் வாசகர்கள் வசிக்கும் மூலை முடுக்கிற்கெல்லாம் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் மறுத்ததால் அடுத்து நடந்த தேர்தலில் அவருக்கெதிரான டெமாக்ரடிக் கட்சிக்கு நான் ஆதரவளித்து ஒபாமாவை ப்ரசிடெண்ட் ஆக்கிய விபரம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அடுத்ததாக.. சச்சின் டெண்டுல்கரை எனது வலைப்பூவின் ப்ராண்ட் அம்பாசிடராக ஆக்கும் முயற்சிகள் மேற்கொண்டேன். அவர் ‘ ப்ராண்ட் பி எம் டபிள்யூவாகவோ, ப்ராண்ட் புகாட்டியாகவோ வேண்டுமானால் வருவேன், ப்ராண்ட் அம்பாசிடராக வரமாட்டேன்’ என்று வட்டதிட்டமாகக் கூறியதால் எங்களிருவருக்கும் லேசான மனக்கசப்பு நேர்ந்து அப்போதைய காலகட்டத்தில் இது குறித்து BARஆளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

மேலும்..

என்னது போதுமா? சரி.. சரி..


5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


1) என் மனைவி, மகள்களின் பெயர்களை அப்படியே குறிப்பிடுவேன். விளைவு என்றால் எல்லாருடைய அன்பும், யார் அழைத்தாலும் உமா, மீரா, மேகா எப்படி இருக்காங்க என்ற விசாரிப்பு கிடைப்பதும்தான்.

2) முன்பெல்லாம் மகள்களின் ஃபோட்டோஸ் போடுவேன்.. சென்னை சென்றபோது ஒருமுறை ‘என் மருமகள்கள் ஃபோட்டோஸ் போட்டா மண்டைலேயே குட்டுவேன்’ என்று அப்துல்லா மிரட்டல் விடுக்கவே அதைக் குறைத்துக் கொண்டேன்..


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நான் எழுதாவிட்டால் இந்த தமிழையும் தமிழ் உலகத்தையும் காப்பாற்ற யாருமில்லையே என்ற ஆற்றாமையில் பதிவெழுதுகிறேன்.

(யாருய்யா இந்தப் பதிலுக்குச் சிரிக்கறது.. சீரியஸா சொல்றேனாக்கும்.. ஆமா..)

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு வலைப்பூவுக்கே போதும் போதும்ங்க தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறாங்க.. இதுல மொழிவாரி வலைப்பூக்களா? கிழிஞ்சது போங்க..


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

எல்லார் மேலயும் பொறாமை உண்டு. ஏதாவது ஓர் பதிவில் அவர்கள் தொட்டிருக்கும் விஷயம் + அதை எழுதியிருக்கும் விதத்தைப் படித்து ‘நாம் எழுதினால் இப்படி வந்திருக்காதே’ என்று பொறாமைப் பட்டிருக்கிறேன்..

கோபம்? To Be Honest... ஒருவர் மீது வந்ததுண்டு..! ஏன் எதற்கு என்பது வேண்டாமே...


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

‘தொடர்புகொண்டு’ மீன்ஸ், பின்னூட்டங்களில்லாமல் அலைபேசியில் அல்லது நேரில் என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். அப்படியானால் என் கஸின் க்ரேசி கிரி.

படித்துவிட்டு அவன் சொன்னது: ‘வேணாண்ணா.. விட்டுடலாம்.. ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டுட்டா பின்னாடி சரிபண்றது ரொம்பக் கஷ்டம்’

ப்ச்.. நல்ல விஷயத்தைச் சொல்லி எவன் கேட்டிருக்கான் சொல்லுங்க...?


10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தெரியவேண்டியவை அனைத்தும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.. அதுனால இந்தக் கேள்வியை சாய்ஸ்ல விட்டுடலாம்.

இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது...



































ஹலோ.. ஹலோ... ப்ச்.. உங்களைத்தாங்க.. நில்லுங்க.. எங்க ஓடறீங்க?..

ச்சே.. யாரையும் காணோமே......




.

டிஸ்கி: எல்லா கேள்விகளுமே ஏற்கனவே நான் எழுதிட்ட மாதிரியே இருக்கு. அப்படி எழுதியிருந்து, மெனக்கெட்டு தேடி அதைக் கண்டுபிடிச்சு ‘அன்னைக்கு அப்படிச் சொல்லிருக்கீங்களே.. இன்னைக்கு இப்படிச் சொல்லிருக்கீங்களே’ன்னெல்லாம் கேள்வி கேட்டு கோர்ட்டுல நிக்க வெச்சீங்கன்னா.. பிச்சுப்புடுவேன் பிச்சு.. ஆமா..




.

Tuesday, September 28, 2010

28 செப்டம்பர் 2010



நிறுவனத்தின் வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை ட்ராஃபிக் போலீஸ் பிடித்து ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அவரும் காண்பித்திருக்கிறார். காண்பிக்கும்போது ‘டைமாச்சு சார்.. கொஞ்சம் டெலிவரி அர்ஜெண்ட்’ என்று ஏதோ பேசியிருப்பார் போல. சார்ஜெண்டுக்குக் கோவம் வந்து ‘உன் மேல கேஸ் போடாம விடக்கூடாதுய்யா' என்று வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்து எதையெதையோ குறிப்பெடுத்துக் கொண்டாராம். ட்ரைவர் மறுபடியும் ‘என்னத்தை சார் தேடறீங்க.. எல்லாம் கரெக்டாதானே இருக்கு’ என்று கேட்கவும் ‘எங்க கரெக்டா இருக்கு? நீ ஷேவிங் பண்ணாம வந்திருக்கியே’ என்று சொன்னாராம். கடைசியில் விளக்கு முகப்பில் கறுப்பு ஸ்டிக்கர் இல்லாததற்கு ஃபைன் கட்டச் சொன்னாராம்.

அலுவலகத்தில் இதுபற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்கையில், காவலர் செய்தது சரிதான் என்றும்... வாகனம் ஓட்டுகையில் ட்ரைவர் முகச்சவரம் செய்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துச் சட்டம் சொல்கிறது என்றும் சொன்னார் சக நண்பர் ஒருவர். அப்படியா? யாருக்காவது இதுபற்றித் தெரியுமா?

*** *** *** *** ***

வி


ஒரு நண்பர்.. ஒரு வாக்கியத்தில் இரண்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ என்ற பதத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது எண்ணினேன்.. பதினைந்து நிமிடப் பேச்சில் பதினெட்டு முறை ‘வந்து பாத்தீங்கன்னா’ வந்துபோனது. ‘அதை மட்டும் சொல்றதை நிறுத்தினீங்கன்னா உங்க எனர்ஜி நிறைய சேவ் ஆகும் சார்’ என்று அவரிடமே கூறினேன்.

‘கரெக்ட்தான் கிருஷ்ணா.. ஆனா அது.. வந்து பாத்தீங்கன்னா.. அப்படி சட்னு ஆகறதில்லை. ஏன்னு.. வந்து பாத்தீங்கன்னா.. எனக்கே தெரியாம அது வருது.. வீட்ல.. வந்து பாத்தீங்கன்னா.. அவங்களும் இதைச் சொல்லுவாங்க.. ஆனா.. வந்து பாத்தீங்கன்னா..’

‘கொஞ்சம் வேலையிருக்கு சார். இப்ப வந்துடறேன்’ என்று வந்துவிட்டேன். பிறகு வந்து பார்க்கவேயில்லை அவரை!

நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை ‘சரியா’ அல்லது ‘புரிஞ்சுதா’. என் நண்பன் ஒருவர் ‘பக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். இன்னொருவர்.. ‘சான்ஸே இல்ல’. அதிகம் பேர் இந்த சான்ஸே இல்லையைத்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். சகா கார்க்கி இந்த சான்ஸே இல்லையை அழகாக ‘வாய்ப்பே இல்ல சகா’ என்பான்.

நீங்க எந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

*** *** ** *** *** ***



ரசித்த எஸ்ஸெம்மெஸ்:

‘நேத்து ஒரு பொண்ணை ரேப்லேர்ந்து காப்பாத்தீட்டேண்டா..’

‘வெரிகுட்ரா! எப்படி?’

‘செல்ஃப் கண்ட்ரோல் மச்சி.. செல்ஃப் கண்ட்ரோல்!’



ரசித்த கேள்வி பதில்:

‘சூர்யா – கார்த்தி இருவருக்குமான போட்டியில் ஜெயிப்பது யார்?’

‘சிவகுமார்’

(தினகரன் – நாட்டாமை பதில்கள்)

ரசித்த பதிவு:


ரமேஷ் வைத்யாவின் ‘ஐயடிகள் காடவர்கோன் தொடர்கதை’


ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்:


‘இறகைப் போலே அலைகிறேனே’ – நான் மகான் அல்ல


ரசிக்கும் விஷயம்:

எங்கள் சவால் சிறுகதைப் போட்டிக்கு நண்பர்களின் ஆர்வமான பங்களிப்பும் அவர்களின் வித விதமான வித்தியாசமான கதைகளும்!


ல்


ட்விட்டர் அப்டேட்ஸ்:

# கிருஷ்ணஜெயந்திக்கு அவரை வீட்டுக்கு அழைக்கிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு அவரை கடலில் போடுகிறார்கள். பாச்சுலர்ஸை யாருமே மதிக்கறதில்லைப்பா!

# பொண்ணுக்கு 25க்கு மேல இருந்தா கல்யாணம் என்றார். வயசு ஜாஸ்தியா இருக்கே என்றேன். நான் சொன்னது சம்பளம் என்கிறார். #பேராசை

# செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது. ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.

# ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க’ என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்

# திருமணநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்த நண்பர் சொன்னார்: ‘உனக்கு வாழ்த்துக்கள்.. சிஸ்டருக்கு ஆறுதல்கள்’ #தெளிவாத்தான் யோசிக்கறாங்கப்பா..!

# அசின் நீச்சலுடையில் நடிக்கிறார் என்று நினைத்து விட்டேன். ‘அரசின் சிக்கன நடவடிக்கை’ என்பதை ”அசின்” சிக்கன நடவடிக்கை என்று படித்து...

# திரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்? ச்சே!

# ராஜபக்‌ஷே அத்தனை குண்டு வீசி அத்தனை பேரோட ஆயுளைக் குறைச்சப்ப வராத கோவம் ரந்தீவ் ஒரு நோபால் வீசி ஒரு செஞ்சுரியைக் குறைச்சதுக்கு வருது!


***************************************************

வேண்டுகோள்:

கேபிள் சங்கரின் இந்தப் பதிவில் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் விஷயத்திற்கு உதவப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் நன்றி!


.

Tuesday, September 21, 2010

1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....

டந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டதால் இந்த அவரச உலகில் இது கொஞ்சம் பழைய செய்திதான்.

சென்ற பதிமூன்றாம் தேதி. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியின் காலையில், பள்ளியிலிருந்து வெளியே வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சுரேஷ் என்பவர், வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

உடனே கூடிய கிராம மக்கள் – வெளியே நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து, பள்ளித் தாளாளரின் இன்னோவா கார் ஆகியவற்றைக் கொளுத்தியும் வெறி அடங்காமல் பள்ளி கட்டடம் முழுவதையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். சான்றிதழ்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
கூட்டத்தினரின் மற்றொரு பகுதியினர், மூன்று கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளித் தாளாளரின் வீடு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் வந்து கொண்டிருந்த மற்றொரு பள்ளிப் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை இறக்கி அதையும் கொளுத்தினர். தாளாளரின் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருந்த பேருந்தையும் கொளுத்தி, அவரது வீட்டையும் அடித்து நொறுக்கினர்.

இந்த உக்கிரத்துக்கு என்ன காரணம்?

சுரேஷ், பள்ளிக்குச் செல்லும்போது விபத்து நடக்கவில்லை. பள்ளிக்குச் சென்றிருக்கிறார். நோட்டு வாங்க 2500 ரூபாய் செலுத்த கடைசி நாள் என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்பா பணம் கொண்டு வருவார்’ என்றிருக்கிறார் சுரேஷ். ஒத்துக் கொள்ளாத ஆசிரியர்கள் அவரை வகுப்பறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, திரும்ப வரும்போதுதான் நுழைவாயிலில் விபத்து நடந்து இறந்திருக்கிறார்.

அந்த மாணவன் காசில்லாமல் வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள். வலிக்கவில்லை?

அந்த மக்களின் கோபம், அந்த ஒரு நாள் கோபமல்ல. வெகுநாள் ஆத்திரம் அடக்கி வைத்திருந்து அடக்கி வைத்திருந்து அன்றைக்கு வெளிப்பட்டு விட்டது.

அரசு நிர்ணயித்த கட்டணம் எந்தப் பள்ளியில் வாங்குகிறார்கள்? ம்ஹூம். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்து, தடை வேறு வாங்கிவிட்டார்கள்.

இதேபோல..

திருப்பூரில் ஒரு பள்ளியில் ஈட்டி எறிதலில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது நடந்து வந்த மற்றொரு மாணவனின் தலையில் ஈட்டி பாய்ந்தது.

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவன் பெயர் கோகுல். கராத்தே சாம்பியன். சர்வதேச அளவில் விளையாடுபவன். இதுவரை 144 பதக்கங்களைக் குவித்துள்ளான். முதல்கட்டமாக 1.75 லட்சம் வரை செலவானதில் 75 ஆயிரம் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டதாக தினசரி சொல்கிறது.

75ஆயிரமும் பள்ளி நிர்வாகமா கொடுத்தது?

“இருநூறு ரூபாயாவது கொடுங்கம்மா என் கூடப் படிக்கறவங்க 500, ஆயிரம்னு கொண்டுவரப்போறாங்களாம்” – இது என் மகள் அம்மாவிடம் சொன்னது.

ஆம். அது என் மகள் படிக்கும் பள்ளியில் நடந்த சம்பவம்தான். 6ம்வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களிடம் வசூல் நடத்தி, அதையும் சேர்த்து மருத்துவமனைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். தவறேதும் இல்லை. ஆனால் நிர்வாகம் கொடுத்தது எவ்வளவு, மாணவர்களிடம் வசூலித்தது எவ்வளவு என்று எங்காவது கணக்கு காண்பிக்கக் கூடாதா? கேட்டால்தான் சொல்வீர்களா? தேர்வுக் கட்டணம், பேருந்துக் கட்டணத்திலெல்லாம் நயா பைசா பாக்கி என்றாலும் டைரியில் எழுதி அனுப்புகிறீர்களே ஐயா?

அந்த மாணவன் இன்னும் ஆறு மாசத்துக்கு ஒய்வெடுக்க வேண்டுமாம். இனி போட்டிகளில் பங்கேற்க இயலாதாம். ஈட்டி துளையிட்ட இடத்தில் எலும்பு வளர ஓராண்டாகும். அதன்பிறகே உயர் சிகிச்சை குறித்து முடிவு செய்ய இயலுமாம்.
ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு கிட்டத்தட்ட தேர்வான கராத்தே சாம்பியன் அவன். அவன் எதிர்காலத்துக்கு என்ன பதில்?

இதை அந்தப் பள்ளியில் சென்று கேட்டேனா? ம்ஹூம். இல்லையே. முடியவில்லையே.. எனக்கு என் குடும்பம், மகள் படிப்பு எல்லாம் முக்கியம். இதே மிடில்க்ளாஸ் மனநிலையில்தான் பெரும்பான்மையோர் இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் அன்றைக்கு இந்த மிடில்க்ளாஸ் மனநிலைக்காரர்களின் கொந்தளிப்பே அப்படிப்பட்ட சம்பவத்திற்குக் காரணம். ‘சாது மிரண்டால்..’’‘ கதைதான்.

இனியாவது சுதாரித்துக் கொள்வார்களா தனியார் பள்ளி நிர்வாகத்தினர்?

எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலாம்! பெற்றோரோ, பொதுமக்களோ பள்ளிகளுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட, கூட தடை விதிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது.

எதனால் இந்த ஆர்பாட்டங்கள்.. கூட்டங்கள் என்று யோசித்து அதைக் களையாத வரை பொதுமக்கள் மனதில் இருக்கும் அக்னிக் குஞ்சு பெருந்தீயாய் மாறும் சூழலைத் தவிர்க்க முடியாது.





.

Monday, September 20, 2010

சிகரெட் (சிறுகதை)

ரயில் நாப்பத்தைந்து நிமிடம் தாமதம் என்று அறிவிப்பு சொன்னது. கணேஷ் நீண்ட பெருமூச்சொன்றை விட்டவாறு அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

“ஒரு தம்மிருந்தா குடு மாப்ள. முக்கா மணிநேரம் ஆவுமாமே” அருகிலிருந்தவன் நண்பனிடம் கை நீட்டிக் கொண்டிருந்தான்.

கணேஷூக்கு - ஆறு ஆண்டுகளுக்குப் பின் - அன்றைக்கு சிகரெட் பிடிக்கும் ஆவல் எழுந்தது.

மெதுவாக எழுந்து அருகில் ஏதாவது கடையில் சிகரெட் கிடைக்கிறதா என தேடத் தொடங்கினான். ‘ஆறு வருஷமாச்சா நான் சிகரெட்டை விட்டு’ என்று எண்ணிக் கொண்டான்.

ம்ஹூம்.. இந்த சிகரெட்டை விட்டாத்தான் கிஸ்’ நர்மதா சொன்னது இன்னமும் அவன் காதில் ஒலிப்பது போலத் தோன்றியது.

“ஏய்.. ப்ளீஸ்ப்பா... நான் உன்னைப் பார்க்க வர்றப்ப அடிக்கறதில்லைல்ல? அப்பறம் ஏன் இப்படி கொடுமை பண்ற? ப்ளீஸ் அதைக் குடேன்..” கணேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது அவள் முத்தத்துக்கு அல்ல.. அவள் கையில் இருந்த கிங்க்ஸ் பாக்கெட்டுக்கு. பீச்சில் தோளில் சாய்கையில் அவன் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டாள். எடுத்து பைக்கில் வைக்காமல் வந்ததற்காக நொந்துகொண்டான். கையில் சல்லிக்காசு இல்லை. ஒரு தம் அடிக்காமல் வீடுவரை போகவும் முடியாது.

“சரி.. இன்னைக்குத் தான் லாஸ்ட். அதுல ரெண்டே ரெண்டு சிகரெட்தான் இருக்கு. அதை மட்டும் போறப்ப அடிச்சுக்கறேன் நர்மி. குடேன்” - எத்தனையாவது முறை இப்படி கெஞ்சுகிறான் என்பது அவனுக்கே நினைவில்லை. வேறு வழியுமில்லை.

“போடா பொறுக்கி. நூறு தடவை இப்படிச் சொல்லிருப்ப. ஒரே வாரத்துல மறுபடி ஆரம்பிப்ப. உன்னை நம்ப முடியாது. லாஸ்டாம் லாஸ்ட்..” - கொஞ்சம் குரலுயர்த்தியே திட்ட ஆரம்பித்தாள், கடந்து சென்ற ஒரு ஜோடி திரும்பிப் பார்த்தபடி சென்றதையும் பொருட்படுத்தாமல்.

“கத்தாதடி. ஆஃபீஸ்ல ஆயிரம் டென்ஷன். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் குடிச்சிட்டிருந்தேன். இப்ப ஒரு பாக்கெட்டுக்கு மாறிருக்கேன். கொஞ்ச நாள்ல நிறுத்திடுவேன்ப்பா. எத்தனை வருஷத்துப் பழக்கம். டக்னு விடமுடியுமா?”

“விடறதுன்னா டக்னு விடலாம். கொஞ்சம் கொஞ்சமா விடறதெல்லாம் கதை. ஒண்ணு வேணாம்னு நினைச்சா டக்னு அதை விட்டுடணும்”

அப்படித்தான் செய்தாள் கணேஷின் காதலை விடும்போது. சின்னச் சின்ன சண்டைகள்தான். இந்த சிகரெட் விடாததில் ஒன்று. அலுவலக தோழியை அவள் வீட்டில் விடும்போது, எதிர் சிக்னலில் ஸ்கூட்டியில் வந்த நர்மதா கணேஷைப் பார்த்தபோது இன்னொன்று என்று இரண்டொரு சண்டைகள். ஆனால் அதெல்லாம் காரணமில்லை என்றே சொல்ல வேண்டும்.

எல்லாவற்றையும் சமாதானம் செய்தும், சமாளித்தும் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனால் நர்மதா இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது எனுமளவுக்கு அவள் மீதான காதல் இருந்தது.

ஆனால் நர்மதா ப்ராக்டிகல். வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததையும், மாப்பிள்ளை இவனை விட இரண்டு மடங்கு சம்பாதிப்பதையும் சொன்னபோது அவளுக்கும் அதில் சம்மதம் என்பதறிந்து உடைந்துபோனான். அழுதான். ஓடிச் சென்று பைக்கில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவள் முன்னால் கீழே போட்டு மிதித்து ‘இனி சிகரெட்டே பிடிக்க மாட்டேன் நர்மி. ப்ராமிஸ் நர்மி. உனக்கென்னென்ன பிடிக்காதோ எதுவும் பண்ணமாட்டேன்ப்பா.. ப்ளீஸ்..’ என்று கிட்டத்தட்ட மனநிலை தவறியவனாய்ப் பிதற்றினான். ஆனால் அவள் சொன்னபடி டக்கென்று இவனை, இவன் காதலை அறுத்தெறிந்து போனாள்.

அன்றைக்கு சிகரெட்டை விட்டவன் தொடவே இல்லை. அவளும் இரண்டொரு மெய்ல்கள் அனுப்பி, அவள் செய்தது நியாயம் என்பது போல சொல்லியிருந்தாள். இவனால் எதையும் தாங்க முடியவில்லை. மூன்று மாதங்கள் பித்துப் பிடித்தவன் போலிருந்துவிட்டு, தானாக கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு, மாற்றலாகிப் போய்விட்டான்.

‘ஹலோ சார்... பார்த்து போங்க.. குழந்தை வர்றதுகூட தெரியாம’ -யாரோ திட்டியபோது நினைவு கலைந்தான் கணேஷ்.

“இங்க எங்கயும் சிகரெட் கிடைக்காதுங்க.. வெளிலதான் போகணும்” - முதல் மூன்று ஸ்டால்களில் கிடைத்த பதில்தான் நான்காவது ஸ்டாலிலும் கிடைத்தது. ஆனால் இந்த முறை அருகில் இருந்த ஒருவர் “என்ன பாஸ்... தம் வேணுமா” என்று கேட்டு அவரிடம் இருந்த சிசர்ஸ் பாக்கெட்டை நீட்டினார்.

கொஞ்சம் தயக்கமாய் அவரைப் பார்த்தான். “ப்ச்.. எடுத்துக்குங்க பாஸ்... சென்னை ட்ரெய்ன் முக்கா மணிநேரம் லேட்டுன்னு நானும் உங்களை மாதிரி சிகரெட் தேடி வெளில போய் வாங்கிட்டு வந்தேன்”

ஒரு சிகரெட்டை மட்டும் உருவிக் கொண்டான்.

“மை நேம் ஈஸ் ஈஸ்வர். நீங்க?”

“கணேஷ்” என்று நீட்டிய அவரது கையைப் பற்றிக் குலுக்கினான். “இருங்க.. லைட்டர் வைஃப்கிட்ட இருக்கு” என்று இரண்டடி இடது புறம் நடந்து அங்கு அமர்ந்திருந்த அவரது மனைவியை அழைக்க அங்கே அமர்ந்திருந்த நர்மதா திரும்பினாள்.

ஒரு சேர ஈஸ்வரையும், தன் முன்னாள் காதலன் கணேஷையும் பார்த்தாள். சலனமற்ற பார்வை. கண்கள் ஓரிரு நொடிகள்தான் கணேஷிடம் நிலைத்தது. பிறகு ஈஸ்வரின் கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டிற்குப் போனது.

“ப்ச்.. சிகரெட் வாங்கத்தான் போனீங்களா? இதென்ன புதுசா சிசர்ஸ் வாங்கிருக்கீங்க? உங்க ப்ராண்ட் கிடைக்கலியா?” என்றவள் அவர் கையிலிருந்த சிசர்ஸ் பாக்கெட்டை வாங்கி மூடி தன் பேகைத் திறந்து அதற்குள் போட்டபடி “என்கிட்ட கேட்டுட்டுப் போயிருக்கலாம்ல. இல்லாம இருக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சு மணி கடைல கேட்டு வாங்கி வெச்சிருந்தேன்” என்று சொன்னபடி தன் பையிலிருந்து பிரிக்காத வில்ஸ் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்துக் கொடுத்தாள்.

வாங்கி, சற்றுத் தள்ளி வந்து கணேஷிடம் லைட்டரை நீட்டினார்.

“இல்லைங்க வேணாம்” என்று தன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு நகர்ந்த கணேஷை விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வர்.




.

Friday, September 17, 2010

யூகமும் உண்மையும்

ரு நல்ல விஷயம் பேசினால் ஆதரிக்க எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று என்னை பிரமிக்க வைத்தது நேற்றைய என் கடைசி பத்திக்கான உங்கள் ஆதரவு.

உண்மை, யூகம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்வது பற்றி பேசினோம் நேற்று. (அடக்கடவுளே.. ஏதோ ப்ரொஃபசர் பேசற மாதிரியே இருக்கு... ம்ஹும்.. இது சரிப்பட்டு வராது நமக்கு!)

அந்த சம்பவம்:


சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.

யூகம்.

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.

யூகம். மீட்டிங்கிற்குதான் அழைக்கப்பட்டான். அங்கே அஷோக் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் இருவரும் சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி.

உண்மை. சொல்லப்பட்டுவிட்டது. மீட்டிங் ஆரம்பித்த நேரம் பத்து மணி என்று சொல்லியிருந்தால் இதே வரி யூகமாக மாறியிருக்கும்! யோசியுங்கள்!

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.

யூகம். எவரோ என்றுதான் சொல்லியிருக்கிறேன். (எவரோ பின்னூட்டத்தில் சொன்னது போல ஆடு மாடு அல்ல. அவற்றை எவரோ என்று விளிக்க முடியாது) ஒருவன் என்பது ஒருத்தியாகவும் இருக்கலாம் என்பதே இந்த வரியை யூகம் என ஆக்குகிறது.

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

யூகம். பொதுமக்கள் உதவியுடன் தான். அவர்களே சேர்த்திருக்க வேண்டியதில்லை.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

யூகம். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. பேசியது மருத்துவமனையின் நர்சாகக் கூட இருக்கலாம்.

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.

உண்மை. மருத்துவர் தெரிவித்தது என்பதே வரி. ‘சேகருக்கு கவலை கொள்ளும் படி ஏதுமில்லை’ என்று நான் கொடுத்திருந்தால் இதே வரி யூகமாக மாறியிருக்கும்! வித்தியாசம் புரிகிறதா?

சரி..

இந்த உண்மையையும் யூகத்தையும் பிரித்தறிவதில் என்ன சுவாரஸ்யம் அல்லது என்ன சவால்?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது, நீங்கள் அந்த நிறுவனத்தில் வேறு ஒரு பிரிவுக்கு சென்று ஆய்வு நடத்த நேரிடும்போது இந்த உண்மை / யூகம் பிரித்தறியும் திறன் சரியாக வேலை செய்ய வேண்டும். காரணம் நீங்கள் ஆய்வு நடத்தும் பிரிவின் பொறுப்பாளர் உங்களுக்குத் தெரிந்தவராக இருப்பார். அவரைப் பற்றித் தெரியும் என்றாலும் எந்த முன் முடிவுகளுக்கும் வராமல் உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்பதே சவால்.

இந்தப் பத்தியைப் படியுங்கள்.

ரஜினியும் கமலும் திரை நட்சத்திரங்கள். கமலுடன் ரஜினி நாயகன் படத்துக்குப் போய்ப் பார்த்துவிட்டு, கமலிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்துவிட்டார். அடுத்த நாள் அதிகாலை கமல் வீட்டிற்குப் போன ரஜினியை ஸ்ருதி வரவேற்றார். ஆளுயர மாலையோடு போன ரஜினி, கமலுக்கு அதை அணிவித்து ‘என்னால நேத்து பேசவே முடியல கமல். ரொம்ப அருமையா பண்ணிருக்கீங்க’ என்று பாராட்டினார். கமல் ரஜினியின் பாராட்டும் குணம் கண்டு வியந்து நின்றார்.


இப்போது இந்தப் பத்தியில் உண்மை / யூகம் கண்டு பிடிப்பதன் சவாலை முயன்று பாருங்கள்.

(கமலும் ரஜினியும் நண்பர்கள். ஸ்ருதி கமலின் மகள்.... இப்படியாக... )

ஆனால் இவற்றில் அறுதியான பதில் உங்களுக்குத் தெரியவரும்போது அதைத்தான் நீங்கள் எழுத வேண்டும்!!!



ரொம்பவும் போரடிக்கிறேன் இல்லையா?

சரி ரிலாக்ஸுக்காக இரண்டு கேள்விகள்.

1) ஒரு ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஓடும்போது இரண்டாவதாக வருபவரை முந்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?


2) விடை சொல்லியாச்சா? குட். இப்போது அதே ஓட்டப்பந்தயத்தில் கடைசியில் வருபவரை முந்தினால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?






.

Thursday, September 16, 2010

அவியல் 16.09.2010


ந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பான அன்று க்ரேசி கிரி அழைத்துக் கேட்டான்: ‘ஏண்ணா.. இந்தப் படத்துக்குப் போஸ்டர் ஒட்டறதையும் விழாவா எடுத்து அதையும் ஒளிபரப்புவாங்களா?’

நான் சொன்னேன்: ‘அதையும் அதற்குப் பிறகுபோஸ்டர் ஒட்டும் விழா உருவான விதத்தையும் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் ட்ரெய்லர் மிரட்டுகிறது. நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் கண்ட அளவுக்கு க்ராஃபிக்ஸ் கலக்கல்.

விழாவில் வைரமுத்து சொன்ன ரஜினி-அபிதாப்-ஒபாமா-போப்பாண்டவர் கதை கேட்டீர்கள்தானே? கேட்டிருப்பீர்கள்.. அதனால் இங்கு வேறு ஒரு கதை சொல்கிறேன். எழுத்தாளர் சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது:

ஒரு பணக்காரன், ஒரு கவிஞனிடம்என்னைப் புகழ்ந்து பாடுஎன்றானாம். கவிஞன்சும்மா பாடச் சொன்னால் எப்படி?’ என்று கேட்க பணக்காரனும்சரி என் சொத்தில் 20 சதவிகிதம் உனக்கு.. இப்போது பாடுஎன்றானாம். கவிஞன் மறுத்துச் சொன்னானாம். ‘இப்படிக் கிள்ளிக் குடுக்கும் உன்னை வள்ளல் என்றெப்படிப் பாட?’

பணக்காரன் விடவில்லை: ‘சரி.. என் சொத்தில் பாதி உனக்கு.. எங்கே பாடுஇப்போது கவிஞன்இப்போது நீயும் நானும் சரி நிகர் சமானமாகிவிட்டோம். எதற்குப் பாட வேண்டும்?’ என்றானாம் இறுமாப்போடு. பணக்காரன் உடனே.. ‘சரி என் சொத்து முழுவதையும் தருகிறேன்.. என்னைப் புகழ்ந்து பாடுஎன்றான்.

கவிஞன் சொன்னானாம்:

அப்படியானால் இப்போது நீயல்லவா என்னைப் பாடவேண்டும்?”

** ** ** ** ** **

மஹா RX100 வைத்திருக்கும் நண்பரை ஞாயிறன்று சந்தித்தேன். பளபளவென்றிருந்தது வண்டி. ‘போனவாரம்தான் 28000 ரூவா செலவு பண்ணினேன்என்றார் மிக சந்தோஷமாய். நானெல்லாம் டூ வீலர் கற்றுக் கொண்டது யமஹாவில்தான். வாங்கினால் இதைத்தான் வாங்க வேண்டும் என்று நினைத்தது ஒரு காலம்.

யமஹாவின் சைலன்சரிடமிருந்து வரும் சத்தத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் (லோயர் எண்ட் டூவீலர்களில் சொல்கிறேன்.. புல்லட் போன்றவை அடுத்தபட்சம்) இருசக்கர வாகனம் வைத்திருப்போரில் யமஹா RX100 சொந்தக்காரர்களைப் போல பெருமைப் பட்டுக் கொள்பவர்கள் யாருமில்லை. அதனை பார்த்துப் பார்த்து பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.

** ** ** ** ** ** **

ற்பல வருடங்களுக்கு முன்... உடுமலையில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் எடுத்தது போக, பாக்கெட்டில் கொஞ்சம்தான் காசு இருந்தது. அது கோவையிலிருந்து மதுரை செல்லும் பேருந்து. ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கிறது. பக்கத்தில் ஒரு டீக் கடையில் ஏசுதாஸின் குரல். கேட்டதுமே இறங்கி நின்றுவிட்டேன்.

‘பிறக்கும்போதும் பேரில்லை..
இறக்கும்போதும் பேரில்லை..
இடையில்தானே குழப்பங்கள்..
வாழ்க்கையோடு வழக்குகள்..

சோகமென்ன தோழனே..
சூழ்ச்சி வெல்வாய் வீரனே..
எதிர்த்து நின்று போரிடு..
இன்று ஓய்வெடு...’

வரிகளை நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். என்னவோ செய்தது அந்தப் பாடல். என் கண்முன்னே நான் போக வேண்டிய பேருந்து போவதைக் கண்டும் என்னால் நகர முடியவில்லை. அங்கேயே நின்று முழுப்பாடலையும் கேட்கிறேன். முடிந்தபிறகும் அந்தப் பாடலுக்காக பேருந்தை விட்டதைப் பெருமையாக அந்த டீக்கடைக்காரரிடம் சொல்லி ‘இன்னொரு வாட்டி போடுங்க அந்தப் பாட்டை’ என்று கேட்கிறேன். அவரும் சம்மதித்து போடுகிறார்..


‘என்ன தேசமோ.. இது என்ன தேசமோ..’

இதேபோலத்தான். உடுமலையிலிருந்து பேருந்து ஏறுகிறேன். கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும் நான். பேருந்து ஏறிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பாடல் ஒலிபரப்பாகிறது. இளையராஜா என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன படம் என்று தெரியவில்லை. கேட்டேன். சந்திரலேகா என்றார்கள். முதல் பாட்டு முடிந்து இரண்டாம் பாட்டு ஆரம்பிக்கிறது. ‘அரும்பும் தளிரே.. தளிர்தூங்கிடும்..’ அருண்மொழி குரல். பாடல் பாதிதான் முடிந்திருக்கும். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது.

ஆனால் நான் இறங்கவில்லை. அந்தப் பாடல் முழுவதையும் கேட்க ஆவலாயிருந்தேன். அதனால் அந்த நிறுத்தத்தில் இறங்காமல், மறுபடி டிக்கெட் வாங்கி தேவையில்லாமல் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி இறங்கினேன்.

அதேபோல பலவித மனக்கவலைகளோடு பயணம் செய்துகொண்டிருந்த என்னை ’புன்னைவனத்துக் குயிலே..’ பாடல் ஆற்றியிருக்கிறது. இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள்தான். இப்படி எத்தனையெத்தனையோ...

இதெல்லாம் நினைவுக்கு வரக்காரணம் -

பின்னணி இசைக்கான தேசிய விருது பழசிராஜா படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பிரிவு இந்த வருடம்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் விருது ராஜாவுக்குதான்.

நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா!

** ** ** ** ** ** ** ** ** ** * ** **

நிஜம், யூகம் - இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டியது மிக அவசியம்.

கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்:

சேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.

இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:

1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.

2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.

3) மீட்டிங் நேரம் பத்து மணி.

4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.

5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.

7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.

** ** ** ** ** ** ** ** **



.

Tuesday, September 14, 2010

சவால் சிறுகதை

ட்டுரைகளுக்கு அடுத்தபடியாக அல்லது இணையாக என்னைக் கவர்பவை சிறுகதைகள். ஆனால் யதார்த்த, சோக வகைகளல்ல. சுவாரஸ்யமானதாகவும், கதையின் இறுதியில் என்னை ஓர் ‘அட!’ போட வைப்பதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

சுஜாதா அதில் விற்பன்னர். அவரது ‘சசி காத்திருக்கிறாள்’ அதில் மாஸ்டர் பீஸ்.

சரி.. இனி விஷயத்துக்கு வருவோம்.

மினி & யாமினி தொடர்களுக்குப் பிறகு நானும் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தபோது எல்லாருக்கும் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தாலென்ன என்று பேச்சு வந்தது..

அதன் விளைவாகவே சனிக்கிழமை என் பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். இங்கே அதை விரிவாக வெளியிடுகிறேன்.

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, பிளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

*** *** *** *** *** ***

கேள்விகள்:

கதையை என் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாமா?

லாம். ஒரே விஷயம் நீங்கள் வைக்கும் தலைப்புக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் ‘சவால் சிறுகதை’ என்று குறிப்பிடவும்.

வலையில் மட்டும் வெளியிட்டால் போதுமா?

போதாது. என் மின்னஞ்சல் முகவரிக்கு - kbkk007@gmail.com - கதை வந்த உங்கள் வலைப்பூ பக்க முகவரியையும், கூடவே முழுக்கதையையும் அனுப்ப வேண்டும்.

முழுக்கதையுமா? ஏன்?

நடுவர்களுக்கு உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் உங்கள் கதையை மட்டுமே அனுப்ப. அவர்கள் பதிவுகளைப் படிப்பவர்கள்தானெனினும் பதிவின் தலைப்பில் சவால் சிறுகதை என்றிருக்கும் கதைகளை அவர்கள் படிக்க மாட்டார்கள்.

நடுவர்கள்?

மூன்று பேர் கொண்ட குழு. (நான், ஆதி இல்லை அதில்)

இறுதித் தேதி?

கதை எழுத அக்டோபர் 15. முடிவுகள் அதிக பட்சம் நவம்பர் 15க்குள்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் அனுப்பலாமா?

அனுப்பலாம்.

பரிசு?

மூன்று பரிசுகள். முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்துவதா, அல்லது பரிசுக்குரிய மூன்று கதைகள் என்று தேர்வு செய்வதா என்பது நடுவர்களின் கையில். மொத்தமாக ரூ. ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

என்ன புத்தகங்கள்?

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைத தொகுப்புகள். பிரபலம் என்றால் பிரபலம். சுஜாதாவாக இருக்கலாம்.


எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட வரைமுறை ஏதுமில்லை. ஆனால் சிறுகதை, சிறுகதையாக இருந்தால் நலம்!

விஞ்ஞானம், க்ரைம், குடும்பம், காதல்.. என்ன வகைக் கதையாக இருக்க வேண்டும்?

எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். இந்தப் போட்டி பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி கலந்து கொள்ளச் செய்யவும்.

நன்றியும் வாழ்த்துகளும்!


.

Monday, September 13, 2010

புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்


பு
திதாய் பதிவெழுத வருபவர்களுக்கும், எழுத்தின் மூலம் பிரபல்யத்தை அடைவது எப்படி என்று வடக்கு பார்த்து யோசித்துக் கொண்டிருப்பவர்களும் என் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.

எந்த இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக - ஒரு வேள்வி போல - இந்தப் பதிவைப் படித்து இடையிடையே நான் கொடுத்திருக்கும் டிப்ஸ்களைக் கவனித்துக் குறிப்பெடுத்துக் கொண்டால் 30 நாட்களில் பிரபலமாவது உறுதி.


முதல் விதி:

ஆரம்பம் மேலே உள்ள முன்னுரை போல இப்படித்தான் - நமக்குத்தான் தெரியும் என்பது போல - ஆரம்பம் இருக்க வேண்டும். நிச்சயமாக நமக்கு எதுவும் தெரியாது என்பதை கட்டுரையின் முடிவில் அவர்கள் கண்டுகொள்வார்கள் எனினும் நாமாக நமக்கு ஒரு ஒளிவட்டத்தை செட்டப் செய்து கொள்வதில் தவறொன்றுமில்லை. காசா பணமா?

இரண்டாம் விதி:

முதல் விதியின் முதல் வரிபோல ஏதாவது வார்த்தைப் பிரயோகப் பிழைகள் இருக்க வேண்டும். அந்த வரியில் ஆரம்பம் என்ற வார்த்தை இரண்டு முறை வந்திருப்பதை கவனியுங்கள். இது கிட்டத்தட்ட ஒரு பின்னூட்டத்தை வரவைக்கும் தூண்டில். அப்படிப் பின்னூட்டம் வந்த பிறகு அதைத் திருத்தி, அந்தப் பின்னூட்டம் போட்டவருக்கு நன்றி சொல்வதன் மூலம் இரண்டாவது பின்னூட்டத்திற்கும் வழிசெய்துகொள்ளலாம். தவிரவும் அந்தப் பிழையை சுட்டிக் காட்டியவருக்கு நாம் மரியாதை செய்த மாதிரியும் ஆச்சு. போலவே எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள் இன்னபிற... (டிப்ஸ் 1: இந்த மாதிரி நமக்கே தெரியாமல் நேர்ந்துவிட்ட பிழைகளையும் கட்டுரைக்கான உத்தி என்று மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் மிகமுக்கியம்)

மூன்றாவது... கண்டெண்ட்:

தமிழில் சொல்ல வேண்டுமானால்.. இருங்கள் இந்த டிக்‌ஷ்னரி எங்கே வைத்துத் தொலைத்தார்களோ தெரியவில்லை.. ஆங்... உள்ளீடு. எதை எழுதுவது என்பது. இது கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டிய விஷயம். (டிப்ஸ் 2: எப்படி இந்தக் கட்டுரையை இழுக்கிறேன் பார்த்தீர்களா..? இது ஒரு உத்தி)

பதிவில் எது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்பதால் எதையும் நீங்கள் எழுதலாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு என்ற பின்னூட்டத்துக்கு இந்த வரி உத்தரவாதம் தருகிறது) ஆனாலும் இவற்றை மட்டுமே எழுதலாம் என்று சிலபலவற்றை தீர்மானித்தால் கொஞ்ச நாளைக்கு ஒப்பேத்தலாம். அவற்றில் முக்கியமானது நிகழ்வானுபவங்கள். (டிப்ஸ் 3: வார்த்தை புதிதாக இருக்கிறதா? ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வுதானே, அனுபவம்? அதையெதற்கு இப்படிச் சொல்லித் தொலைக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அதனாலென்ன? இப்படித்தான் போட்டுத் தாக்க வேண்டும். கேட்க ஆளே இல்லாதபோது தமிழ் விளையாட வேண்டும்)

நிகழ்வுகள் என்பது வேறொன்றுமில்லை. என்னுடைய அவியல் மாதிரிதான். (டிப்ஸ் 4: வெளம்பரம்!) நீங்கள் ஒரு இளநிக்கடையில் இளநி குடித்துக் கொண்டிருக்கும்போது தூரத்தில் யாராவது சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். உடனே உங்களுக்குள் பொங்கி எழுகிற சிறுநீரை.. ச்சே.. மன்னிக்கவும்.. சமூக அக்கறையை ஒரு பத்தியாக சுருக்கி எழுத வேண்டும். போலவே, டூ வீலர் ஒட்டும்போது நீங்கள் அடுத்தவனுக்குச் செய்யும் இம்சையை அடுத்தவன் உங்களுக்குச் செய்ததாகப் பொங்கி எழ வேண்டும். சென்னை போன்ற பெருநகரப் பதிவர்களுக்கு இருக்கும் சிரமம் உங்களோடு வருபவனும் பதிவனாய் இருப்பான். ‘டேய்.. இது நீ பண்ணின அக்கிரமம் ஆச்சே.. அடுத்தவன் பண்ணின மாதிரி எழுதிருக்கியே?’ என்று பொங்கி எழுந்து ‘மிஸ்டர் எக்ஸ் பதிவில் எழுதியது சுத்தப் பேத்தல். அவனொரு கபடநாடகவேஷதாரி என்பதை இன்று கண்டு கொண்டேன்’ என்று ஆரம்பித்து ஒரு பதிவெழுதி அவர்கள் பதிவுக்கு மேட்டர் தேற்றிவிடுவார்கள். வெளியூர்ப்பதிவர்களுக்கு இந்தத் தொல்லை, ஒப்பீட்டளவில் குறைவே.

அப்புறம் இருக்கவே இருக்கிறது டி வி நிகழ்ச்சிகள்.. அதில் ஏதாவது ஒரு கருமாந்திரத்தைப் பற்றி ஒரு பத்தி. பிறகு உங்களைச் சுற்றி அலுவலகத்தில் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றிரண்டு சேர்த்து கடுகு, கருவேப்பிலை கலந்து தாளித்து இறக்கினால் நிகழ்வானுபவ மிக்ஸிங் பதிவு ரெடி.

இம்மாதிரியான பதிவு எழுத அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பாவம் உங்கள் வாசகர்கள்.. அவர்களைத் திருப்திப்படுத்தவியலாமற்போய்விடும். (டிப்ஸ். 5: அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு வார்த்தைகளை இடைவெளியின்றி எழுதி வாசிப்பவர்களை வறுத்தெடுப்பது இலக்கிய அல்லது பதிவுலகில் உங்களை ஒரு ட்ரெண்ட் செட்டர் அல்லது தாதாவெனக் காட்டிக் கொள்ள உதவும்)

அடுத்தது: சினிமா விமர்சனங்கள். வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ ஒரு படம் ரிலீஸாவது உறுதி. அதற்காகவே காத்திருந்து (என்ன ‘காத்திருந்து?’ எப்படியும் ஏழு நாட்களுக்கொரு முறை வரத்தான் செய்கிறது) படம் பார்த்து ஒரு விமர்சனத்தை எழுதிப் போட்டால், உங்கள் ரசிகக்கண்மணிகள் படித்துப் பயனடைவார்கள். கேபிள் சங்கர் மாதிரியான (டிப்ஸ். 6: பதிவின் ஆங்காங்கே இதுபோன்ற சீனியர் பதிவர் பெயர்களை அள்ளித் தெளிப்பது அவர்களை ஆராதிப்பவர்களையும் நம் பக்கம் இழுக்க உதவும். போலவே அவர்களது நட்பும் நமக்கு கிடைக்கும்) திரைத்துறையிலேயே ஊறியவர்கள் காமிரா கோணம், எடிட்டிங்கில் இருக்கும் தவறுகள் என்று பீராய்வது சுலபம். நாமெப்படி அலசுவது? ஒன்றும் பிரச்சினையில்லை. சீன், திரைக்கதை, எடிட்டிங், லாங் ஷாட், க்ளோஸப், பின்னணி இசை போன்ற ஆதார வார்த்தைகளை அங்கங்கே தூவி விட்டால்போதும். ரொம்ப டீப்பான ஆசாமியாக நம்மைக் காட்டிக் கொள்ள மாண்ட்டேஜ், ஃபுட்டேஜ், கட் ஷாட், ஜிம்மீப் ஷாட், ட்ரக் இன், வைப்பிங், ஷார்ட் கட், வார்ம் டோன், செஃபியா டோன், பானிங் இன்னபிறவற்றை சேர்த்துக் கலக்கி தாளித்து இறக்கவும்.

பதிவிற்காக இந்த வார்த்தைகளைச் சொல்லித் தந்த கேபிள் சங்கருக்கு நன்றி. (டிப்ஸ். 7: டிப்ஸ் 6ன் மரூஉ. கேபிள்சங்கரும் நானும் ஃப்ரெண்டாக்கும் என்று எப்படி மறைமுகமாக பீற்றிக் கொண்டேன் பார்த்தீர்களா?)

சரி பதிவெழுதியாயிற்று, சொச்ச ஃபாலோயர்கள், சராசரியாக ஒரு பதிவிற்கு இத்தனை என்று பின்னூட்டங்கள் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. மென்மேலும் பிரபலமடைய என்ன செய்ய வேண்டும்?

வேறு வழியே இல்லை. ரியல் பதிவுலக தாதாவாக உருமாற வேண்டும். ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் பதிவுலகில் சண்டை, சச்சரவு, காற்றிலேயே வாள் சுழற்றுதல், களறிப்பயிற்று, நீயா நானா என்று பலதும் நடக்கும். இரண்டு தரப்பையும் படித்தால் இருக்கும் முடியும் கொட்டிப் போய் சட்டையைப் பிய்த்துக் கொள்ளும் சூழல் வரலாம். நமக்கு அந்தச் சூழல் நடக்கும் முன், நம்மைப் படிப்பவர்களுக்கு அதை அள்ளித்தரும் விதமாக சடாரென்று - தீர்க்கமாக யோசித்து - தீர ஆராய்ந்து என்றெல்லாம் இல்லாமல் பூவா தலையா போட்டு ஏதாவது ஒரு தரப்பிற்கு ஆதரவாக நீங்கள் களமிறங்க வேண்டும். உங்கள் ஆதரவை எந்த மாங்கா மடையன்கூட கேட்க மாட்டானெனினும் பிரபலமடைய வேறு வழியே இல்லை. களமிறங்கி எதிர் அணியில் எழுதியவர் பதிவில் லே அவுட் மிஸ்டேக் என்ன, அவர் பெயரில் நியூமராலஜிப்படி என்ன குறை, அவர் பெயர் எக்ஸில் ஆரம்பிக்கிறதென்றால், எக்ஸில் பெயர் ஆரம்பிக்கும் உங்கள் நண்பன் உங்களுக்கு என்ன தீங்கு செய்தான் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் போட்டுத் தாக்கி எல்லாரையும் சாகடிக்க வேண்டும். வரும் பின்னூட்டங்கள் உங்களை நோகடிக்கலாம். இருக்கவே இருக்கிறது கமெண்ட் மாடரேஷன். அப்படி நோகடிக்கும் வகையிலான பின்னூட்டங்கள் வருவதே நீங்கள் பிரபல்யமடைந்ததற்கான முதல் அறிகுறி.

சரி.. நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என்கிறீர்களா? கவலையே படாதீர்கள். ‘இவன் அவனுக்கு சப்போர்ட் அதுனாலதான் ஒண்ணும் சொல்லாம வேடிக்கை பாக்கறான்’ என்று இரு தரப்புமே உங்களைத் திட்டித் தீர்ப்பார்கள். இரண்டு தரப்பும் இல்லாமல் பொதுத்தரப்பு ‘ஒரு கருத்தும் சொல்லாமல் நடுநிலைவாதிமாதிரி நாடகம் போடறான் பாரு’ என்று திட்டுவார்கள். அது போதாதா பிரபலமாக?



அப்புறம் இந்தக் கவிதை, கதை என்று மற்ற கந்தாயங்கள்.

இதில் கவிதை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இந்தியன் பீனல் கோடில் இன்னமும் கொலைக்கான காரணியாக இன்னமும் கவிதைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதால் நீங்கள் எந்த பயமுமில்லாமல் அடித்து ஆடலாம். ரொம்பவும் புரிகிற மாதிரி எழுதினால் விளக்கம் கேட்டுத் தொலைப்பார்கள். ஆகையால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பற்று எழுதினால் நலம். ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்குமே தொடர்பற்று எழுதுவதும், ஓர் எழுத்துக்கும் அடுத்த எழுத்துக்கும் தொடர்பற்று எழுதுவதும் அடுத்தடுத்த படிநிலைகள். அவை இப்போதைக்கு வேண்டாம். நாடு தாங்காது.

அதிக பின் தொடர்பவர்களைப் பெறுவது எப்படி?

ஓசியில் கிடைக்கும் ட்விட்டர், ஃபேஸ் புக், பஸ்ஸ் (இப்படித்தான் அதுல ரெண்டு Z போட்டிருந்ததுங்க, அதுனால இங்க ரெண்டு ஸ்!) போன்ற சமூக வலைப்பின்னல்களில் கால்பதித்து பீடுநடை போடுவதெப்படி? போன்றவைகளும், இன்னபிறவும் இதேபோல பதிவெழுத மேட்டரில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் மற்றொரு நாளின் பின்மாலையில் உட்கார்ந்து யோசித்து எழுதிப் பதிவேற்றப்படும்.

நன்றி.



.

Saturday, September 11, 2010

மினி.. யாமினி. இனி... காமினி..!

தொடர்கதை எழுதுவது கஷ்டமான காரியமா? தெளிவாக திட்டமிடாவிட்டால் நிச்சயம் கஷ்டம்தான் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்புத் தந்தது ‘யாமினி’ – மினி தொடரெழுதிய அனுபவம்!

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் ‘என்ன செய்யப்போகிறாய் மினி?’ என்றொரு தொடரெழுதிவிட்டு நான் தொடர்வேன் என்று குறிப்பிட்டார். அவரெப்படிக் குறிப்பிடப் போச்சு என்று கேட்க முடியாது. ஒரு மின்னஞ்சல் உரையாடலின்போது ‘உங்க தொடர் விறுவிறுப்பா போகுதுங்க.. எனக்கும் இந்த மாதிரி எழுத ஆசையா இருக்கு. முடிவுல அதைச் சொல்லிடுங்க’ என்று சொன்னது அடியேன்தான்.

ஆயிற்றா? அவரும் கொடுத்துவிட்டார். ஒருநாள் முழுதும் யோசித்தும் என்ன கருவில் எப்படி எழுத என்று ஒரு வெளிச்சமும் கிடைக்கவில்லை. அப்போதுதான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்த யாமினி என்ற கதை ட்ராஃப்டில் கிடந்தது நினைவுக்கு வந்தது.

ஏப்ரல் 2009ல் எழுதப்பட்டது இந்த யாமினியின் முதல் அத்தியாயம். இப்படி ஒரு ஆரம்பம் கொடுத்து நண்பர்கள் ஐந்து பேரை அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதச் சொல்லி, ஒரே நாளில் எல்லாருமாக அதை பதிவில் போடுவது என்ற எண்ணத்தில் ஆரம்பித்து எழுதிய அத்தியாயம். நான்கு அத்தியாயம் எழுதப்பட்டாலும் ஒரு சில காரணங்களால் இறுதிப்பகுதி எழுதப்படாததால் அப்படியே கிடப்பில் இருந்தது. ஆதி எழுத அழைத்து உடன் எழுத ஆரம்பிக்காவிட்டால் அதன் ஆரம்ப எதிர்பார்ப்பு வடிந்துவிடும் என்று ஏதோ ஒரு தைரியத்தில் அந்த முதல் அத்தியாயத்தை எடுத்துப் போட்டுவிட்டேன்.

சரி... இப்படி ஒரு தொடர் ஆதி ஆரம்பித்தது எப்படி?

“உங்களிடமிருந்து இப்படி ஒரு தடாலடி க்ரைம் த்ரில்லரை நான் எதிர்பார்க்கவில்லை உங்களுக்கு த்ரில்லர் எழுதுவது பிடிக்குமா என்ன?” கேட்டேன்.

ஆதி: “எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் தொடர்கதைகள். ஏனெனில் சஸ்பென்ஸ் எனக்குத் தாங்காது, எரிச்சலாகிவிடுவேன். ஆனால் பிளாக் எழுதத் துவங்கியதிலிருந்து நம்மால் முடியுதோ, இல்லையோ எல்லாவிதமான எழுத்து வகைகளையும் முயற்சித்துவிட வேண்டும் என நான் நினைப்பதுண்டு. அனுபவங்கள், கவிதை, கதைகள், விமர்சனம், பேட்டிகள் (அவ்வ்வ்) இன்னும் என்ன கழுதை குதிரைகள் உண்டோ எல்லாவற்றையுமே முயற்சித்திருக்கிறேன். அவற்றில் என்ன இருக்கிறதோ இல்லையோ.. குறைந்த பட்சமாக நகைச்சுவையோ, என்னளவில் தேவையான லாஜிக்குகளோ, எனக்குப் திருப்தியாகும் வரையான பர்பக்ஷனோ இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

இந்த அழகில் இந்தத் தொடர்கதையை மட்டும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் சமீபத்தில் ஏற்பட்டது. அதற்குக் காரணமும் ஒரு பத்திரிகை பிரபலம் என்றாலும் அது ரகசியம், விட்டுத் தொலையுங்கள். எழுதுவதென்று முடிவாகிவிட்டது ஸ்மார்ட் கதைகள் எழுதுவதை விட கிரைம், திரில்லர் எழுதிவிடலாம் என்று முடிவுசெய்தேன். பேய்க்கதை போல துவங்கி வேறு லாஜிக்கல் காரணம் இருக்கலாம் என்பது போல நடித்து, கடைசியில் நான் எப்போ சொன்னேன், இது பேய்க்கதைதான் என முடித்துவிடலாம் என பிளான் பண்ணினேன்”

"இதற்கென்று ஏதாவது ஹோம் வொர்க்?” - நான்.

ஆதி: “இல்லாமலா? கதை ரியலாக வரவேண்டும் என கொஞ்சம் மெனக்கெடுவதுண்டு. அவன் பணக்காரன் என்பதால் அவன் எந்தக் கார் பயன்படுத்துவான், அவன் போன் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரிச் நண்பர்களை ரெஃபர் செய்தேன். முதல் காட்சியில் ஹோட்டல், அதன் பாரின் பெயர், அதன் இண்டீரியர் எப்படியிருக்கும் என்பதெல்லாம் நெட்டை ரெஃபர் செய்தேன். கதையில் வருகிறதோ இல்லையோ குடும்பம், ஆட்கள், அலுவலகம் எங்கிருக்கிறது? வீடு எங்கிருக்கிறது? காரில் பயணித்தால் எவ்வளவு நேரமாகும்? என பல விஷயங்களை முன்பே உருவாக்கினேன். கால்வனைஸிங் ஃபாக்டரி எப்படியிருக்கும்? அதன் தொட்டிகளின் அமைப்பு எப்படியிருக்கும்? போன்றவற்றை என் அனுபவத்தில் இருந்து பயன்படுத்தினேன்.

கெமிகல் விஷயத்தில்தான் கொஞ்சம் சொதப்பிவிட்டேன். முதலில் அது என்ன கெமிகல் என்பதை முடிவு செய்யாமல் ஹார்ம்ஃபுல் என்றுமட்டும் முடிவு செய்து ஆரம்பித்துவிட்டேன். அடுத்து வந்தது சிக்கல். கடைசியாக 2 மணி நேர பயங்கர ஆராய்ச்சிக்குப் பிறகு (பரிட்சைக்குக் கூட இப்படி படித்திருக்கமாட்டேன்), DDT என முடிவு செய்தேன், இப்போது DDTக்கான உபயோகம் பிளாக் மார்கெட்டிலாவது இருக்கிறதா எனத் தெரியாமலே இருக்கிறது என டுபாகூர்விட்டு கதையை ஒரு வழியாக முடித்தேன். சினிமாவுக்கு மட்டும்தானா இப்படியெல்லாம் லாஜிக்ஸ் தேவைப்படுகிறது. சாதாரணக் கதையாக இருந்தாலும் குறைந்தபட்சம் இவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, அது நியாயமானதே எனக் கருதுகிறேன்” என்று தொடர்ந்த ஆதி நிறுத்தினார்.

“சரி பரிசல் உங்கள் விஷயத்தில் எப்படி?”

“நான் முதல் அத்தியாயம் எழுதியது இப்படித்தான். சென்ற வருடத்தின் ஒரு நாள் இரண்டாம் அல்லது மூன்றாம் வாசிப்பாக சுஜாதாவின் தலைமைச் செயலகம் வாசித்துக் கொண்டிருந்தபோது மூளையின் செயல்பாடுகள் குறித்து அவரது விளக்கங்களைப் படித்து, ஒரு வேளை இந்த அமைப்புகளை செயற்கையாக மாற்றப்படும் வாய்ப்புகள் இருந்தால்?’ என்று சிந்தித்ததன் விளைவே முதல் பாகத்தில் விஞ்ஞானியின் சம்பாஷணைகள். அதன் பிறகு போஸ்ட் மார்ட்டத்திலும் மாட்டிக் கொள்ளாத விஷம் எது என்று இரண்டாம் அத்தியாயம் எழுதி முடித்த போது யோசித்து தேடி ஒரு புத்தகத்தில் கண்டு கொண்டதுதான் அகோனைட் விஷம் பற்றிய தகவல்”

“அப்படியென்றால் அது உண்மையா?”

“ஆமாம்.. அகோனைட் விஷத்துக்கு ‘ஸ்டெப் மதர் பாய்ஸன்’ என்றொரு பெயரும் உண்டு. மற்ற எந்த விஷத்தில் ஒருவர் இறந்தாலும் அவரை எரித்த சாம்பலை வைத்துக்கூட இறந்தது எந்த விஷத்தால் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அகோனைட் அப்படியில்லை. பெற்ற தாயின் அன்பைப் புரிந்து கொள்ளலாம் ஆனால் மாற்றாந்தாயின் அன்பைப் புரிந்து கொள்ளவே முடியாது என்ற அர்த்தத்தில்தான் அந்தப் பெயர். சரி ஆதி.... இந்தந்த அத்தியாத்தில் இது என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தீர்களா?”

“ஆமாம்.. முதலிலேயே முதல் மூணு எபிசோடுகளில் மூணு கொலை, நான்காவதில் கதைக்கான விளக்கம், சஸ்பென்ஸ்களை உடைப்பது, இறுதியில் எக்ஸிகியூஷன் என தெளிவாக பிளான் செய்துகொண்டேன்.. நீங்கள்?”

“இல்லவே இல்லை. அதுதான் கொஞ்சம் சொதப்பி விட்டது. ஒவ்வொரு அத்தியாயமும் அன்றன்றைக்கு யோசித்து எழுதியதுதான். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்கிறேன். இப்படி ஒரு தொடர் எழுத இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமேயானால் இந்தத் தவறை செய்யவே மாட்டேன்”

“ஆனாலும் சமாளித்துவிட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் கதையில் உள்ளேயே நீங்களும் ஒரு கதாபாத்திரமாகப் போனது நல்ல உத்தி”


“இதை மட்டும் முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்தேன். அதே போல சில பதிவர்களுக்கு லிங்க் கொடுத்து அவர்களையும் இணைத்ததும் முன்னமே முடிவு செய்யப்பட்ட ஒன்று. சமீபத்தில் எழுத ஆரம்பித்து தினமும் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கும் கோபிக்கு மட்டும் லிங்க் கொடுக்க விட்டுப் போயிற்று. அதையும் இன்று நிவர்த்தி செய்துவிட்டேன்!”

ஆதியிடமிருந்து பேசியதில் இருந்து அவரின் உழைப்பும் திட்டமிடும் நேர்த்தியும் நிஜமாகவே பிரமிக்க வைத்தது.


சரி... இனி?


ஒரு சவால்!


நாங்கள் இருவரும் பேசிக் கொண்டதில் இருந்து ஒரு விஷயம் தெரிந்தது. எங்களுக்குப் பின்னூட்டம், மின்னஞ்சல் அனுப்பிய பலருக்குள்ளும் கதை சொல்லும் திறன் மிளிர்கிறது. ஆனால் அவர்கள் பிறர் கதைகளுக்கு விமர்சனம் செய்வதோடு நின்று விடுகிறார்கள் என்று நினைக்கிறோம். ஆகவே உங்களுக்கு ஒரு சவால்.

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, ஃப்ளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

நீங்கள் எழுதிய கதையை உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம். வலைப்பூ இல்லாதவர்கள் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வலைப்பூவில் வெளியிட்டாலும் லிங்கை மட்டும் எனக்கு அனுப்பாமல் மொத்த கதையையும் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். (kbkk007@gmail.com) க்ரைம் கதைகளில் அதிக பரிச்சயம் உள்ள, கதை எழுதத் தெரிந்த, கதைகளை துல்லியமாக அலசத் தெரிந்த நமது நண்பர் ஒருவர் உங்கள் கதைகளில் சிறந்ததை தேர்வு செய்வார்.

அந்த சிறந்த கதைக்கு என்+ஆதியின் சார்பாக ஒரு சிறு பரிசு உத்தரவாதமாகக் காத்திருக்கிறது. ஒரே கண்டிஷன்: பரிசு இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.

UPDATE:-

நண்பர்களின் ஊக்கத்தைத் தொடர்ந்து ஒரு பரிசு என்பது மூன்று பரிசுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நடுவர் என்பதற்கு பதிலாக மூன்று பேர் கொண்ட நடுவர் குழு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்.

போட்டி முடிவு தேதி, இன்ன பிற விஷயங்கள் ஓரிரு தினங்களில் என் வலைப்பூவில் பதிவாக வெளியிடப்படும்.




டிஸ்கி:


http://www.mediafire.com/?l0kqfdpli9jl5eg இதில் உள்ள HTMLஃபைலை ஓபன் செய்தால் ஆதியின் ‘என்ன செய்யப்போகிறார் மினி?’ தொடரின் மின்புத்தகத்தைப் படிக்கலாம்.


http://www.mediafire.com/?clv5l39mn8vo453 இதில் உள்ள HTMLஃபைலை ஓபன் செய்தால் எனது யாமினி தொடரின் மின்புத்தகத்தைப் படிக்கலாம்.



இந்த மின் புத்தகத்தை உருவாக்கிக் கொடுத்த நண்பர் மின்னுது மின்னலுக்கு நன்றி!



.

Friday, September 10, 2010

யாமினி PART – 5 (இறுதிப் பகுதி)

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


** ** ** ** **


பகுதி - 5


“உங்க வாக்குமூலத்துக்கு ரொம்ப நன்றி குணா” – தெளிவாகக் கேட்டது சப் இன்ஸ்பெக்டர் அஷோக்ராஜாவின் குரல்.

குணா பதட்டமாய் நிமிர்ந்தார். ஆனால் திமிரான குரலில் தொடர்ந்தார்: “எனக்குத் தெரியும் அஷோக்.. நீ என்னை மோப்பம் பிடிச்சுடுவன்னு.. உன்னை
ஏமாத்தறதுக்காகத்தான் என் ஃப்ரெண்டை விட்டு நான் உன்கூட இருக்கறப்பவே உனக்கு மிரட்டல் விடுத்தேன். ஆனா நீ எப்படியோ என்னைத் தொடர்ந்து வந்துட்ட.. சரி.. அப்படியே நில்லு. உனக்கும் எமலோகம் போற நேரம் வந்தாச்சு” என்று கையிலிருந்த பிஸ்டலை அஷோக்கை நோக்கி நீட்டினார்.

கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான் அஷோக். “என்ன குணா.. உண்மையான பிஸ்டலை உன்கிட்ட கொடுக்க நானென்ன முட்டாளா...? அது டம்மி துப்பாக்கி.. அதிலேர்ந்து வந்தது டம்மி புல்லட்”

அஷோக் சொல்ல “என்னது?” என்று பெரிய எழுத்தில் அதிர்ச்சிகாட்டிய குணா விழுந்து கிடந்த என்னைப் பார்த்தான்.

நான் எழுந்தேன். மார்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்து சிந்தப்பட்ட செயற்கை ரத்தத்தால் உடல் முழுவதும் பிசுபிசுப்பாக இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு மினி ரெகார்டரை எடுத்து அஷோக்ராஜா கையில் ஒப்படைத்தேன்.

எல்லாவற்றையும் அதிர்ச்சி விலகாத கண்களில் கவனித்துக் கொண்டிருந்தான் குணா. அஷோக்ராஜாவின் கையில் முளைத்திருந்த துப்பாக்கி அவனை அசையவிடாமல் செய்தது.

“என்ன குணா.. அப்படிப் பார்க்கறீங்க? உங்க மேல சந்தேகப்புள்ளி எங்க விழுந்தது தெரியுமா? காலேஜ் பையன் இறந்தப்ப நாம அந்த பீடா கடைல நின்னு விசாரிச்சுகிட்டிருந்தோம். அப்ப அந்த கடைக்காரன் யூனிஃபார்ம்ல இருந்த என்னை விட்டுட்டு உனக்கு விஷ் பண்ணினான். நான் அதை சாதாரணமாத்தான் எடுத்துகிட்டேன். நீங்க இறந்தவனோட பாடிகிட்ட போனப்ப ‘அவரை உனக்கு முன்னாடியே தெரியுமா’ன்னு கேட்டதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடி நீங்க அங்க பீடா வாங்கிச் சாப்டதா சொன்னான். எனக்கு எங்கயோ நெருடலா இருந்தது.

அப்ப உங்க பின்னணியை விசாரிச்சப்ப நீங்க டெல்லிலேர்ந்து விருப்பமா ட்ரான்ஸ்ஃபர் கேட்டு இங்க வந்திருக்கறது தெரிஞ்சது. அந்தப் பையனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீணா நான் குழப்பிக்கறேன்னு விட்டுட்டேன்..

கடைசியா பார்க்ல அந்த டாட்டூ குத்திருந்தவன் கொலையைப் பத்தி விசாரிச்சப்ப அவன் தங்கியிருந்த ரூம்ல அவன் இதுக்கு முன்னாடி டெல்லிலயோ, பாம்பேலயோ இருந்தவன்னு சொன்னாங்க. ஆனா யாருக்கும் தெளிவா தெரியல. நீங்க வேற டெல்லில இருந்தீங்களா.. உங்களைப் பத்தி இன்னும் டீடெய்ல்டா விசாரிச்சப்ப உங்க தம்பி ஆக்ஸிடெண்ட்ல இறந்த விஷயமும் வெளில தெரிஞ்சது.. உடனே நான் பரிசல்கிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னேன்..”

நான் தொடர்ந்தேன்..

“அவர் என்கிட்ட கண்டிப்பா இந்தக் கொலைகளுக்கும் குணாவுக்கும் ஏதோ லிங்க் இருக்கு. ஆனா என்னான்னு தெரியல. நீங்க யாமினி விஷயத்தையும், இதையும் லிங்க் பண்ணி தொடர் மாதிரி எழுதுங்க.. அதை எப்படியாவது குணா பார்வைல பட வெச்சுடறேன். அதுக்கப்பறம் அவர் ரியாக்‌ஷன் என்னான்னு பார்க்கலாம்னு சொன்னார்”

“முட்டாள்தனமா இருக்கு நீ சொல்றது.. நான் உன்கிட்ட நடந்த்தையெல்லாம் சொன்னது நேத்துதான். நீ அதுக்கு முன்னாடியே யாமினியை ஒருத்தன் வந்து கொலை பண்ணினதா சொன்னியே அதெப்படி?”

“அது என் யூகம் குணா” அஷோக்ராஜா இடைமறித்துச் சொன்னான். “இந்த மூணு கொலைகள்லயும் அகோனைட் என்கிற விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு டாக்டர் என்னிடம் சொன்னார். அகோனைட் விஷத்தால் ஒருவர் இறந்தால் எந்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாதாமே? ஆக, அதே விஷத்தால் யாமினி இறந்தாள் என்று எழுதினால் உன்னிடமிருந்து என்ன ரியாக்‌ஷன் வருமென்று பார்க்க அப்படி எழுதச் சொன்னேன்”

குணா குரல் உடைந்தபடி சொன்னான்: “யாமினி இறந்தது உண்மை. ஜெய் இறந்த மறுநாள் வசந்த் ஆதிமூலம் கெஸ்ட் ஹவுஸில் நானே அவர்கள் பேசுவதைக் கேட்டேன். ஆனால் எப்படிக் கொன்றார்கள் என்று தெரியவில்லை..”

“ஓகே குணா... அமைதியான முறையில் சரணடைவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை” என்ற அஷோக் குணாவை முன் நடத்தி நின்று கொண்டிருந்த போலீஸ் படையிடம் ஒப்படைத்தான்.

பிறகு என்னிடம் திரும்பி “என்ன பரிசல்.. எப்படி ஃபீல் பண்றீங்க?” என்றான்.

“எப்படி உணர்கிறீர்கள் பரிசல்?”னு கேளுங்க. அப்பறம் யாராச்சும் வந்து என்ன நெனைச்சா சுத்தத்தமிழ், நெனைச்சா வழக்குத் தமிழான்னு கேள்வி கேட்டு வைப்பாங்க” என்றேன் நான்.

அஷோக் சிரித்துக் கொண்டிருக்கும்போதே ஃபோன் அடிக்க எடுத்தான்.

“ஹலோ.. நான் சுசி பேசறேன்”

“எந்த சுசி?”

“எந்த சுசி? நார்வே சுசியா?”

“அட.. உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“பரிசல் சொல்லிருக்காருங்க.. அதுவும் ப்ரொஃபைல்ல Industry: Bankingன்னு போட்டு Occupationல நீங்க போட்டிருக்கற விஷயத்துக்கு நான்தான் உங்களைத் தேடி வரணும்..”

“ஐயையோ.. அது சும்மா போட்டதுங்க..”

“சரி..பரிசல்கிட்ட பேசணுமா?””

“இல்லை. அவர் ஃபோன்ல கூப்டப்ப உங்ககூட இருந்தாலும் இருப்பாருன்னாங்க. ஆக்சுவலா நான் பேச நினைக்கறது உங்ககூடதான்”

“சொல்லுங்க..”

“ஏன் குணா, அந்தக் கொலைகாரன், இதோ இந்தப் பார்ட்ல நீங்க எல்லாரும் இப்படி விளக்கம் கொடுத்து கழுத்தறுக்கறீங்க?”

“வேற என்ன பண்றது சுசி? அவரென்ன முழுநீளத் தொடர்கதையா எழுதறாரு? அவரே எப்படியாவது முடிச்சா சரின்னு இருக்காரோ என்னமோ”

“சரி.. இன்னொரு கேள்வி..”

“இருங்க பரிசல்கிட்டயே தர்றேன்” என்று ஃபோனை நீட்ட ‘நான் பாட்டுக்கு அவியல் பொரியல்னு எதையாவது எழுதிட்டு போய்ட்டே இருந்திருப்பேன்யா.. இப்படி மாட்டிவிட்டுட்டயே..’’ என்று மனதுக்குள் சலித்தவாறே.. என்ன கேட்கப் போகிறார்களோ என்று சற்றே பயந்தவாறே... “ஹலோ...” என்றேன்.


(முற்றும்)

. . . .




.

Thursday, September 9, 2010

யாமினி - PART 4

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

** ** ** ** ** ** ** ** **

பகுதி - 4

“ஸா
ரி யாமினி.. உன்னைக் கொல்லச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.. அதை இன்றே இப்பொழுதே நிறைவேற்றியாக வேண்டும் நான்” என்றான் பீரோ மறைவிலிருந்து வெளிப்பட்டவன்.

“நீ.. நீ.. நீ யார்?” வறண்ட குரலில் கேட்டாள் யாமினி.

“ம்ஹ்ம்.. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்..? சரி இருந்தாலும் சொல்கிறேன்.. வசந்த் ஆதிமூலத்தின் பாலின மாற்று அறுவை சிகிட்சையை நம்புகிறாயா நீ?”

“நம்பாமல் என்ன? அவர் எத்தனை பெரிய விஞ்ஞானி என்பது உனக்குத் தெரியுமா?”

“ஹஹ்ஹஹ்ஹா... அதுமட்டுமா.. அவர் எவ்வளவு பெரிய தேசத்துரோகி என்பதும் எனக்கு தெரியும்”

“தே.... தேசத்துரோகியா?”

“தேசத்துரோகிதான். நடக்கவே நடக்காத சாத்தியமே இல்லாத ஒன்றைச் சொல்லி அரசாங்கத்தை ஏமாற்றி, வெளிநாட்டு விஞ்ஞானிகளை இந்தியாவுக்கு வரச்சொன்னது எதற்கு என்று நினைக்கிறாய்?”

“எதற்கு?”

“நம் நாட்டு விஞ்ஞான ரகசியங்களை பரிமாறிக்கொள்ள.. விஞ்ஞானிகள் என்ற பெயரில் வந்திருக்கும் அயல்நாட்டு தேசவிரோத சக்திகள் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் பணம் பலகோடி..”

“அதற்கும் என்னைக் கொல்வதற்கும் என்ன சம்பந்தம்?”

“முட்டாள் பெண்ணே.. நாளை நீ ஆணாக மாறவேண்டாமா? உன்னைக் கொன்று உன் நிறத்தில் உன் உயரத்தில் இருக்கும் எங்களில் ஒருவனை நீ என அறிமுகப்படுத்துவோம். அதை வைத்து அரசாங்கத்தை கொஞ்ச நாள் எங்கள் விஞ்ஞானிகள் குழு ஏமாற்றும். அதற்குள் எங்கள் ரகசிய பரிமாற்றங்களும் முடிந்துவிடும். அதன்பிறகு அவனையும் கொன்றுவிட்டு நாங்கள் ஆளுக்கொரு தேசத்துக்குப் பறந்து சென்றுவிடுவோம்”

“அ... அதற்கெதற்கு என்னைக் கொல்ல வேண்டும்? யார் கொல்லச் சொன்னது”

“கொல்லாமல்? அப்புறம் நீ இந்த ஆராய்ச்சி பொய் என்று உளறிவிட்டால்? உன்னைக் கொல்லச் சொல்லது உங்கள் பாஸ் வசந்த் ஆதிமூலமேதான்.. இந்த எஸ் எம் எஸ்ஸைப் பார்..” என்று வசந்த் ஆதிமூலம் அனுப்பிய
குறுஞ்செய்தியைக் காண்பித்தான்.

“ஏதோ RED RUM ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார்...” குரலில் தெரிந்த நடுக்கம் இப்போது அவள் உடலிலும் தெரிந்தது.

“அதைத் திருப்பிப் படி.. “

யாமினி அந்த வார்த்தைகளைத் திருப்பி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே அவன் கைகளில் பீடா போன்ற ஏதோ ஒரு வஸ்து முளைத்தது.

திமிறத் திமிற, அவளது வாயினுள் பீடாவை நுழைத்தான் அவன். மூக்கினை அழுத்தப் பிடித்துக் கொண்டதில் வேறு வழியில்லாமல் அதை முழுங்கினாள்.
சொற்ப நிமிடங்களில் மேலோகம் சென்றவளின் உடலை கொண்டு வந்திருந்த பெரிய சூட்கேஸினுள் அடக்கி, ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு லிஃப்டிலிறங்கி தன் காரை நோக்கி நடந்தான்.

போகும் வழியிலேயே தன் செல்லில் வசந்த் ஆதிமூலத்தை அழைத்தான்.

“சார்... முடிஞ்சது..”

“குட். சத்தமில்லாம பாடியை டிஸ்போஸ் பண்ணீடு..”

“அந்த ஜெய்...”

“அவனை கூலிப்படைகிட்ட சொல்லி ஆக்ஸிடெண்ட்ல போட்டுத் தள்ளச் சொல்லியாச்சு... இந்நேரம் அவன் பைக் ஏதாவது லாரிக்கடில சிக்கி அவன் சட்னியாகிருப்பான். இவளுக்கு அவனைத் தவிர வேற யாரும் இல்லைங்கறது நமக்கு வசதியாப் போச்சு“

சொன்ன வசந்த் ஆதிமூலம் தொடர்ந்தான்: “சரி.. நீ, நான், அந்த 15 பேர் தவிர நம்ம டீம்ல இருக்கற யாருக்கும் நம்ம விஷயம் எதுவும் தெரியாது. நாளைக்கு நம்ம பதினேழு பேர் மட்டும் கிளம்பி நம்ம கெஸ்ட் ஹவுஸ் போய் சில திட்டங்கள் தீட்டணும். அதுனால நைட்டுக்குள்ள அவ பாடியை டிஸ்போஸ் பண்ணிட்டு காலைல ஒம்பது மணிக்கு என்னை வந்து பாரு”

“சரி சார்” சொன்னவன் அந்த சூட்கேஸை சிரமப்பட்டுத் தூக்கி டிக்கிக்குள் சொருகினான். சொருகும்போது சூட்கேஸ் சரியாக மூடப்படாத்தைக் கவனித்தான். திறந்து, இறந்து போன யாமினியின் கைகளை மடக்கும் போதுதான் உற்று கவனித்தான். போட்டிருந்த்து ஸ்லீவ்லெஸ் ஆகையால் அவள் புஜத்தில் இருந்த டாட்டூவில் எழுத்துகள் தெரிய... ஒவ்வொன்றாய் படித்தான்..

Y - A - M - I - N - I

************ ******* ******* ********** ********** ************
“என்னாச்சு குணா?” என்றான் அஷோக்ராஜா.

“தெரியல சார்.. ஏதோ குழந்தைதான் ஃபோனை எடுக்குது. ஒண்ணும் பேச மாட்டீங்குது. சிரிப்பு சத்தம்தான் கேட்குது..”

“சரி.. இனி நேரமில்லை நமக்கு.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. க்ரீன் பார்க் ரெஸ்டாரண்ட் போய் கிருஷ்ணாவைப் பாருங்க. நான் லேப்டாப்பை ஆன் பண்ணி அவரோட ப்ளாக்ல ஃபோன் நம்பர் கிடைக்குதான்னு பார்க்கறேன்.. பார்த்துட்டு பின்னாடியே வர்றேன்.. இப்ப நமக்கு நேரமில்ல. நீங்க சீக்கிரம் கிளம்புங்க.”

“ஓகே அஷோக்.. “ என்று கிளம்பிய குணாவை இடைமறித்தான் அஷோக் ராஜா.

“எதுக்கும் சேஃப்டிக்கு இதை வெச்சுக்கோங்க”என்று அவன் கொடுத்தது... சைலன்சர் பொருத்தப்பட்ட 0.32 ரக பிஸ்டல்.

*********** ************* *************** .

றந்து வைத்துவிட்ட ஃபோனை எடுக்கும் நேரம் நேராக க்ரீன்பார்க்குக்கே சென்று விடலாம் என்று முடிவெடுத்து, பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

க்ரீன்பார்க்கை அடைந்தபோது மணி ஆறைத் தொட்டிருந்தது. அங்கங்கே சிறு சிறு குடில்களாக பிரிந்திருக்க, ஒரு குடிலில் சென்று அமர்ந்த பத்து நிமிடங்களில் அவர் வந்தார்.

“கிருஷ்ணகுமார்?”

“மை நேம் ஈஸ் குணா... ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்”

“வணக்கம் சார்.. எஸ். ஐ. அஷோக்ராஜா கூப்டிருந்தார்..”

“அவர் பின்னாடி வர்றார்... அதுக்கு முன்னாடி சில கேள்விகள்.. டெல்லில நடந்த யாமினி கொலை பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஐயோ.. அது சும்மா கற்பனைல எழுதினது. ஒரு விஞ்ஞானக் குழுவைச் சேர்ந்தவங்களும், வெளிநாட்டுக்காரர்களுமா மொத்தம் பதினேழு பேரும் சாலை விபத்துல இறந்தாங்கள்லியா? அப்ப நியூஸ் சேனல்ஸ்ல அவங்ககிட்ட வேலை பார்த்த யாமினிங்கறவளையும் காணோம்னு நியூஸ் போட்டாங்கள்ல? அதையும், சமீபத்துல இங்க இறந்தவனோட கைல யாமினின்னு டாட்டு குத்தியிருந்த்தையும் வெச்சு சும்மா எழுதினேன்..”

“பதினேழு பேரும் இறக்கல பரிசல்.. ஒருத்தன் தப்பிச்சுட்டான் அப்ப..”

“எ.. என்ன சொல்றீங்க?”

“ஆமாம்.. அவங்களால கொல்லப்பட்ட ஜெய்யோட ஒரே அண்ணன் நான்.. ஆக்ஸிடெண்ட்ல ஜெய் இறக்கறதுக்கு முன்னாடி யாமினியைப் பத்தியும் அவ வேலை செய்யற இடத்துல ஏதோ ரகசியமா நடக்கறதா அவன் சந்தேகப்படறதாவும் சொன்னான். அதுனால அடுத்தநாள் அங்க நான் யாருக்கும் தெரியாம போனப்ப அவங்கதான் யாமினியைக் கொன்னதுன்னு தெரிஞ்சுது. உடனேயே அவங்க வெளில போறதுக்குள்ள அவங்க போற வேன்ல சில சில்மிஷங்களைச் செஞ்சு அவங்களை பரலோகத்துக்கு அனுப்ப நினைச்சேன்.. அதுல ஒருத்தன் மட்டும் தப்பிச்சுட்டான்”

“யார் அது?”

“அடுத்தநாள் யாமினியா நடிக்கறதுக்காக அவள மாதிரியே டாட்டூவெல்லாம் குத்திட்டிருந்த ஒருத்தன்”

“அப்படீன்னா...”

“ஆமா.. அவன்தான் அங்க இங்க சுத்தி திருப்பூர்ல வந்து இருந்தான். போட்டுத் தள்ளீட்டேன். நான் குடுத்தது அகோனைட் விஷம். எந்த போஸ்ட் மார்ட்ட்த்துலயும் எந்த ரிப்போர்ட்லயும் கண்டுபிடிக்க முடியாத விஷம். சந்தேகம் வர்றதுக்காக நானே அவங்க உடம்பிலேர்ந்து கொஞ்சம் ப்ளட் எடுத்து அங்கங்க தெளிச்சுடுவேன்..”

“அப்ப அந்த டாக்டர்.. காலேஜ் பையன்..”

“ரெண்டுமே என் கைங்கர்யம்தான். அந்த டாக்டர் டெல்லில இருந்தவர். ஜெய்யோட கேஸ் அட்டெண்ட் பண்ணினப்ப யாரோ அவருக்கு லம்ப்பா பணம் கொடுக்க, கொஞ்சம் முயற்சி பண்ணி பிழைக்க வைக்கறதுக்கு பதிலா அவனை சாகடிச்சவர்”

“காலேஜ் பையன்..?”

“அவன் பாவம். பீடா வாங்கி அதுல கொஞ்சம் அகோனைட் கலந்து இந்த டாட்டூ ஆசாமியைக் கொல்ல ப்ளான் பண்ணிருந்தேன். அன்னைக்கு பீடா வாங்கி, கைல இருந்த அகோனைட்டை யாரும் பார்க்காதப்ப கலந்துட்டு என் பர்ஸை எடுக்கும்போது பணம் கீழ விழுந்து பறந்துடுச்சு. அதை எடுக்கற ரெண்டு செகண்ட்ல கடைக்காரன் அகோனைட் கலந்த பீடாவை அந்தப் பையனுக்குக் குடுத்துட்டான்..”

“நீங்க காப்பாத்திருக்கலாமே?”

“சான்ஸே இல்லை.. அகோனைட் சாப்ட்டா அதிக பட்சம் ரெண்டு நிமிஷத்துக்குள்ள உயிர் பரலோகத்துக்கு பார்சலாய்டும்...” சொன்ன குணா

“அதுசரி.. உங்களுக்கு இந்த ரெண்டு கேஸுக்கும் முடிச்சிருக்குன்னு சொன்னது யாரு?”

“யாருமில்லை சார்.. நான் சும்மா கற்பனை பண்ணி எழுதினதுதான்..” இப்போது என் குரலில் பயம் அப்பட்டமாக எனக்கே தெரிந்தது.

“என்னை நம்பச் சொல்றியா? இதை எழுதின உன்னையும் நோண்டி நோண்டி விசாரிச்சிட்டிருக்கற அஷோக்ராஜாவையும் தீர்த்துட்டு சத்தமில்லாம் வேற எங்கயாவது ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய்டுவேன்” குணாவின் குரலில் அதுவரை வராத வில்லத்தனம் வந்திருந்தது.

“சா.. சார்... என்னதிது..” என்றேன் அவர் கையில் முளைத்த பிஸ்டலைப் பார்த்து வியர்த்தபடி “என்னை எதுக்குசார் கொல்றீங்க?”

“பின்ன? உன்னைக் கொன்னா இதுக்கு மேல எழுதவோ, நாளைக்கே கோர்ட்டுக்கு கேஸ் வந்தா உனக்கு இது எப்படித் தெரிஞ்சுதுன்னு சொல்லவோ இருக்க மாட்டியில்ல? அதுமில்லாம ப்ளாக் எல்லாம் எத்தனை பேர் படிக்கறாங்க? அதிகபட்சம் உன்னோடத ஐநூறு பேர் படிப்பாங்களா? ஹும்....”

“சத்தியமா இது கற்பனையா எழுதினதுதான் சார்... ப்ளீஸ் நம்புங்க..”

“அப்படீன்னா உன்னைக் கொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்ல..” சொன்ன குணா, பிஸ்டலை என்னை நோக்கி நீட்டி ட்ரிக்கரைச் சுண்ட சீறிப்பாய்ந்த குண்டு இதயப் பகுதியில் இறங்க ரத்தம் தெறிக்க விழுந்தேன் நான்.


(இறுதிப் பகுதி நாளை... )

** ** ** **



.

Wednesday, September 8, 2010

யாமினி - PART 3

பாகம் 1

பாகம் 2

************************
பாகம்: 3

-ஃபோன்ல யாரு அஷோக்? என்றார் குணா.

-தெரியல சார். எவனோ விளையாடறானா நெஜமான்னு தெரியல. மூணு கொலை முடிஞ்சிருக்கு. இன்னும் ரெண்டு பேர் பாக்கிங்கறான்.

-எ.. என்ன சொல்றீங்க அஷோக்.. இன்னும் ரெண்டு கொலையா?

-ஆமா.. சரி.. நீங்க என்ன விஷயமா வந்தீங்க?

-சொல்றேன்... உங்களுக்கு கிருஷ்ணகுமார்ன்னு யாரையாவது தெரியுமா?

-தெரியாதே.. யார் அது?

-ப்ளாக் எல்லாம் எழுதுவாரு.. இன்னைக்கு காலைல அவருக்கு உங்ககிட்டேர்ந்து ஒரு லெட்டர் போயிருக்கு.

-என்கிட்டேர்ந்தா? என்ன சொல்றீங்க?

-ஆமா.. அவரை க்ரீன் பார்க் ரெஸ்டாரண்டெக்கு வரச் சொல்லி நீங்க அவருக்கு ஏதாவது லெட்டர் எழுதினீங்களா?

-நான் ஏன் லெட்டர் எழுதறேன் குணா?

குணா பதட்டமானார். ‘நெனைச்சேன்’ என்று முணுமுணுத்தார்.

’என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க குணா’ என்றான்.

-கிருஷ்ணகுமார்ன்னு ஒருத்தர். பரிசல்காரன்ங்கற பேர்ல ப்ளாக் எழுதுவாரு. ஃப்ரான்ஸிஸ்ன்னு நம்ம டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தருக்கு அவர் ஃப்ரெண்டு. நம்ம மண்டைய உடைச்சுகிட்டிருக்கற இந்த கேஸைப் பத்தி அவர்கிட்ட சொல்லிருக்காரு.. அவரும் ஏதோ ஆர்வத்துல அதை கதை மாதிரி தன்னோட ப்ளாக்ல எழுதிட்டாரு...

-இந்த பத்திரிகைக்காரங்கதான் நடக்கறதையெல்லாம் அப்படியே எழுதறாங்களே... இதுல இவங்க வேறயா?

-இவர் பத்திரிகைச் செய்திகளையும், அவர் ஃப்ரெண்டுகிட்ட கேட்டதையும் வெச்சு எழுதிருக்கார். முக்கியமான விஷயம் இந்தக் கொலைல அவன் கைல யாமினின்னு டாட்டு குத்திருந்தது இல்லையா?

-ஆமாம்.

-அந்தப் பெயரைப் பார்த்ததும் சுவாரஸ்யத்துக்காக ரெண்டு வருஷம் முன்னாடி டெல்லில நடந்த ஒரு சில சம்பவங்களைத் தொகுத்து தன்னோட வலைல எழுதிருக்காரு.

-என்ன எழுதிருக்காரு?

-சொல்றேன்.. அதுக்கு முன்னாடி அந்த கிருஷ்ணகுமார் இப்ப எங்க இருக்காருன்னு பார்க்கணும்..

-சரி.. என் லெட்டர் பேட்ல இருந்து என்ன லெட்டர் அவருக்கு போயிருக்கு?

-அவரை க்ரீன்பார்க் ரெஸ்டாரெண்டுக்கு வரச் சொல்லி நீங்க எழுதினதா அதுல எழுதிருக்கு. அவர் தன்னோட ஃப்ரெண்டுகிட்ட கேட்டிருக்காரு. அந்த ஃப்ரெண்டு உங்ககிட்ட நேரடியா கேட்க பயப்பட்டு நான் கூட இருப்பேன்னு எனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன்னான். நீங்க அஞ்சு மணிக்கே கிளம்பினதா ஸ்டேஷன்ல சொன்னாங்க. அதான் நான் இங்க வந்தேன்..

-சரி.. இம்மீடியட்டா அந்த கிருஷ்ணகுமாரைக் கூப்ட்டுங்க.. அவர் எங்க இருக்காரோ அங்க போகலாம்.. கிளம்பிக்கொண்டே சொன்னான் அஷோக்ராஜா.

-ஒரு நிமிஷம்..

குணா தன் அலைபேசியிலிருந்து தன் நண்பருக்கு அழைத்தார்.

-ஃப்ரான்ஸிஸ்.. நாம நினைச்ச மாதிரியே இதுல ஏதோ விவகாரம் இருக்கு. நான் இப்ப எஸ்.ஐ. வீட்லதான் இருக்கேன். சார் யாருக்கும் லெட்டர் தரலை. இம்மீடியட்டா கிருஷ்ணகுமாரோட நம்பர் கொஞ்சம் குடுங்க. அவரை க்ரீன்பார்க் போகவிடாம தடுக்கணும்...’

எதிர்முனையில் இருந்து வெறும் சிரிப்புச் சத்தம்தான் கேட்டது..

*************************************

யாமினி சிவப்பாய் இல்லை. யாமினி கருப்பாய் இல்லை. மாநிறத்தில் இருந்தாள். வேண்டிய இடத்தில் வளைவுகளும், நெளிவுகளுமாய் பார்ப்பவர்களின் அரை நிமிடத்தை அபரித்துக் கொள்ளும் அழகாய் இருந்தாள்.
கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். கொண்டிருக்கும்போதே அலைபேசி அழைத்தது.

‘வந்துட்டேன்.. வந்துட்டேண்டா தடியா..’ செல்லமாகச் சொல்லிக் கொண்டே ஃபோனை ஆன் செய்யாமல் ஓடினாள். அவசர அவசரமாக தன்னுடைய ஃப்ளாட்டைப் பூட்டிவிட்டு அறைவிட்டு லிஃப்டிறங்கி ஓடினாள்.

அபார்ட்மெண்ட் வாசலில் பைக்கில் அமர்ந்திருந்தான் அவன்.
“எவ்ளோ நேரம் மேக்கப் போட? வர்றவன் போறவன்லாம் என்னைப் பார்த்துட்டுப் போறான்” – சலிப்பாய் சொன்னான் அவன்.

அவன்?

ஜெய் .யாமினியின் காதலன். கம்ப்யூட்டர் வல்லுநன். இரண்டு வருடங்களாக யாமினியைக் காதலித்துக் கொண்டிருக்கிறான். அவள் விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்திடம் சேர்ந்து டெல்லிக்கு மாற்றலாகி வந்ததும், இவனும் எப்படியோ மாற்றல் வாங்கிக் கொண்டு டெல்லி வந்துவிட்டான்.

அவள் பில்லியனில் ஏறியதும் “போலாமா?’ என்று கேட்டு பைக்கை ஸ்டார்ட்டினான்.

பைக் நேராக அந்த பார்க்கினுள் நுழைந்தது. ஆங்காங்கே அமர்ந்திருந்த ஜோடிகளைத் தாண்டி, தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

“யாமினி... எங்க போகப்போற? ஒரு வாரத்துக்குப் பார்க்க முடியாத அளவுக்கு?”

“எங்கயும் இல்ல.. ஃபாரின்லேர்ந்து சில சயிண்டிஸ்ட்ஸ் வந்திருக்காங்க.. அவங்களுக்கு எங்க ஆராய்ச்சிகள் பத்தி ப்ராக்டிகலா சிலதை விளக்க வேண்டியதா இருக்கு. ரொம்ப கான்ஃபிடென்ஷியல்.. அதுனால ஒரு வாரம் அந்தக் காம்பவுண்டை விட்டு யாருமே வெளில வரமாட்டோம். எங்க மொத்த டீமும் உள்ளதான் இருக்கும்”

“ப்ச்.. எனக்கு இது பிடிக்கவே இல்லை யாமினி..”

“என்ன பண்றது ஜெய்.... எனக்குப் பிடிச்சிருக்கே... இந்த ப்ராஜக்ட் சக்ஸஸ் ஆச்சுன்னா அப்பறம் நான் வேலைக்கே போகல.. போதுமா?”

ஜெய் சிரித்தான். “அதெல்லாம் வேண்டாம் யாமினி.. உன் இஷ்டம் என்னமோ அதைச் செய்.. வீணா எனக்காக உன் லட்சியத்தை கைவிட வேண்டாம்...”

பிறகு கொஞ்ச நேரம் இருவருமாக பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.

காஃபி ஷாப் போய்விட்டு நேராக யாமினி குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் அவளை இறக்கிவிட்டான் ஜெய். அவன் விடைபெற்றுச் சென்றதும் நேராக தன் அறைக்குச் சென்று திறந்தாள் யாமினி.

உள்ளே நுழைந்து திரும்பியவள் அதிர்ந்தாள்.

காவி நிறப்பற்களில் குரூரமான சிரிப்போடு பீரோவிற்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டான் உயரமான ஒருத்தன்.

*******************************

மூன்றாம் பாகத்தை எழுதி முடித்துவிட்டு SIGN OUT செய்ய எத்தனித்தபோது சாட்டில் வந்தார் அவர்.

‘நான் பாலா.. நேற்றைக்கு உங்களிடம் பின்னூட்டம் போட்டு கேட்டேனே.. நீங்கள் எழுதுவீர்களா என்று தெரியவில்லை. அதுதான் நானே உள்ளே வந்துவிட்டேன்..’

‘பரவாயில்லை பாலா.. உங்கள் ப்ரொஃபைலைத் திறக்கிற எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும்..’

‘என்னது அது பரிசல்?’

‘உங்கள் வலையைக் க்ளிக்கினால் எப்படி ஆதியின் வலைப்பூவுக்கு செல்கிறது என்று. பிறகுதான் பார்த்தேன். அது நீங்கள் பின் தொடரும் ப்ளாக். ஒரே ப்ளாக்கைத் தான் தொடர்கிறீர்கள் போல..’

‘ஆம் பரிசல்.. சரி அதைவிடுங்கள்.. யாமினி கதை நடப்பது டெல்லியில்.. கொலைகள் நடப்பது திருப்பூரில். இரண்டுக்கும் என்ன தொடர்பு?’

‘நாளை பாருங்கள்.. தெரியும்..’

‘ஏன் இன்றைக்குச் சொல்லுங்களேன்..’

‘இல்லை.. அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.. எஸ். ஐ. அஷோக்ராஜாவிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. வருகிறேன்’

சொல்லிவிட்டு, கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன்.

குளித்து உடைமாற்றி கிளம்பினேன்.

இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டியதும் ஃப்ரான்ஸிஸுக்கு ஃபோன் செய்யலாம் என்று பைக்கை ஓரங்கட்டி, பாக்கெட்டில் கைவிட்டபோதுதான் கவனித்தேன்..

ஃபோனை மறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்..


(தொடரும்)

**************

Tuesday, September 7, 2010

கால்களின் ஆல்பம்

அவ்வப்போது நான் எடுத்த கால்களின் சில புகைப்படங்கள்..

முதல் மற்றும் கடைசி புகைப்படங்களை என் பதிவில் முன்னரே பதிவேற்றி விட்டேன்..












































*

Monday, September 6, 2010

மிஸ்.யாமினி-Part 2

பகுதி - 1 இங்கே....

** ** ** ** ** ** ** ** ** ** **

பகுதி – 2

ஷோக்ராஜா வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அணிந்திருந்த காக்கி உடை என்றைக்கும் இல்லாத அளவு கசங்கியிருந்தது. அவிழ்த்து எறிந்தான்.

குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான்.

ஃபாரன்ஸிக் குணா கொடுத்த ரிப்போர்ட் படி, இந்தக் கொலையிலும் ஒரு தடயமும் சிக்கவில்லை. இது நகரத்தில் நடக்கும் மூணாவது கொலை. முதல் இரண்டு கொலைகளை அசைபோட ஆரம்பித்தான் அஷோக்ராஜா.

முதல் கொலை: ஒரு டாக்டர். அவரது பிரம்மாண்ட வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். சுற்றிலும் ரத்தத் திட்டுகள். தகவல் அறிந்து அஷோக்ராஜா போய்ப் பார்க்கும்போது டாக்டரின் மனைவி மயக்கமாய் இருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் எதனால் இறப்பு என்று தெரியவில்லை என்று வந்தது. ஒரே தகவல்: அவரது வலது புஜத்தில் ஊசி போடப்பட்டிருந்தது என்பது. ஆனால் எந்த விஷமும் ஏற்றப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. டாக்டருக்கு நகரத்தில் அவ்வளவாக நல்லபேர் இருக்கவில்லை. எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் வைத்தியம் பார்த்ததில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து அதன் காரணமான கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் டிபார்ட்மெண்டில் பேசிக்கொண்டார்கள். அஷோக்கிற்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் கொலை செய்கிறவர்கள் இவ்வளவு ப்ரொஃபஷனலாகச் செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது கொலை: ஒரு கல்லூரி மாணவன். மதியம் நண்பர்களோடு சாப்பிட்டு விட்டு மறுபடி கல்லூரி போக பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திருக்கிறான். அவன் சாப்பிட்ட உணவிலோ, சாப்பிட்ட பின் போட்ட பீடாவிலோ எதிலும் விஷமிருப்பதாக டாக்டர் ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. அவனோடு உணவருந்திய மற்ற நண்பர்கள் பூரண ஆரோக்யத்தோடுதான் இருந்தார்கள். அப்புறம் எப்படி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அஷோக்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் செல்ஃபோன் சிணுங்கியது.

எடுத்தான்.

-ஹலோ.. அஷோக் ஹியர்

-வணக்கம். என்ன அஷோக்.. ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்க போலிருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல உனக்கு செம டோஸாமே?

-நீ யாரு?

-அது இப்போதைக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.. அஷோக் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறைக்கதவு தட்டப்பட பேசிக் கொண்டே சென்று

-என்ன விஷயம் சொல்லு

கதவைத் திறந்தான். வெளியே ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் குணா நின்று கொண்டிருந்தார். சைகையாலேயே உள்ளே அழைத்தான்.

செல்ஃபோனை அவருக்குக் காட்டி ‘எதுவும் பேசவேண்டாம்’ என்றான்.

-அஷோக்.. மூணு கொலைலயும் சம்பந்தம் இருக்குங்கறதத் தவிர வேறெதுவும் உன்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கொரு குட் நியூஸ் இருக்கு.

-என்ன -இன்னும் ரெண்டு கொலை பாக்கி இருக்கு. முடிஞ்சா அதைத் தடுக்கப் பாரு..

தொடர்ந்து இவன் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்க, எதிர்முனை துண்டானது.

-ச்சே என்றபடி ஃபோனைத் தூக்கி எறிந்தான் அஷோக்.

*****************************

சந்த் ஆதிமூலம் சொன்னதும் நடுவில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள்.

எல்லாரும் ஒட்டுமொத்தமாய் கைதட்டிக் கொண்டிருக்க அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தபடி தன் சீஃப் வசந்த் ஆதிமூலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

“யாமினி ஈஸ் எ யங் அண்ட் ப்ரேவ் கேர்ள். எங்கள் டீமில் அவள் சேர்ந்து ஆறு மாதமாகிறது. இவளது அறிவியல் அறிவும் அயராத உழைப்பும் இந்தக் குறுகிய காலத்தில் இவளை எங்கள் டீமில் முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது”

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. எனக்கொரு சந்தேகம்..”

“சொல்லுங்கள் மிஸ்டர் ஆல்பர்ட்”

“இப்போது யாமினி உங்கள் மருந்தை உட்கொண்டு ஆண் போல மாறும்போது அவளது நினைவுகளில் பெண்ணாய் இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் இருக்குமா?”

“நினைவுகளில் எந்த மாறுபாடும் இருக்காது மிஸ்டர் ஆல்பர்ட்” சொன்ன வசந்த் ஆதிமூலம் அனைவரையும் நோக்கி தன் பார்வையை வீசினார்.

“வெல் ஃப்ரெண்ட்ஸ். இதோடு இந்த மீட்டிங் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் மாலை இந்த சோதனை முயற்சி தொடங்கும். அதற்கடுத்த நாள் யாமினி ஒரு ஆண்போல உங்கள் முன் இருப்பாள். இரண்டு தினங்கள் சோதனை முயற்சிக்குப் பின் மீண்டும் பெண்ணாக மாறுவாள். ஒரு முக்கியமான விஷயம். இந்த சோதனை முயற்சி மிக மிக ரகசியமானது. அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்களெல்லோரும் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதையே இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடருங்கள்”

மீட்டிங் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவராய் வந்து யாமினியின் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

‘யு ஆர் எ ப்ரேவ் கேர்ள்’

‘வாழ்த்துகள் யாமினி... ஒரு முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வில் நீங்கள் பெயர் பெற்றிருக்கிறீர்கள்..’

ஒவ்வொருவருக்கும் புன்னகையால் நன்றி சொல்லிக் கொண்டிருந்த யாமினியை அழைத்தார் வசந்த் ஆதிமூலம்.

“எஸ் சார்..”

“யாமினி... நாளை முழுதும் உனக்கானது. நாளை மறுநாள் காலை ஒன்பது மணிமுதல் நீ என்னோடு இருக்க வேண்டும். சில மருத்துவசோதனைகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு பரிசோதனை ஆரம்பமாகிவிடும். இரவு வழக்கம்போல அல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் நீ உறக்கத்துக்கு செல்ல வேண்டும். காலை எழும்போது நீ ஆணாக மாறியிருப்பாய்”

“எஸ் சார்.. நாளை என் உணவு முறையில் ஏதாவது மாற்றம் தேவையா?”

“இல்லை...” என்றவர் “இப்போது நீங்கள் கலையலாம்” என்று தன் குழுவினருக்குக் கட்டளையிட்டார்.

எல்லோரும் கலைந்து சென்றதும் வசந்த் ஆதிமூலம் தன் ப்ளாக்பெர்ரியை உசுப்பினார். மெய்ல் பாக்ஸைத் திறந்தார். ஒரு வரியில் டைப்பினார்.

அனுப்பினார்:

“ALL WELL PLANNED. ARRANGE FOR RED RUM TONIGHT.. CHEERS!”

*******************************

ந்த டிபார்ட்மெண்ட் வாசலை என் பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன்.

“ஹலோ... பரிசல்காரன்தானே..”

“ஆமாங்க... நீங்க?”

“வணக்கம்.. என் பேர் வினோத் ப்ரகதீஷ். வினுங்கற பேர்ல ப்ளாக் எழுதிட்டிருக்கேன்”

“தெரியும் வினு.. பார்த்திருக்கேன். சமீபத்துல கூட மகாபலிபுரத்தை ஃபோட்டோ எடுத்துப் போட்டீங்களே..”

“வாவ்.. ஞாபகம் வெச்சிருக்கீங்க போல.. நன்றி... ஆமா இரண்டாம் பாகம் எப்ப போடப்போறீங்க?”

“போட்டாச்சு.. படிச்சுக்கோங்க..”

“சரி.. எனக்கொரு சந்தேகம்.. வசந்த் ஆதிமூலம்தான் வில்லன்கறேன் நான். கரெக்டா?”

“தெரியல வினு.. அதை கதை எப்படிப் போகுதுங்கறதப் பொறுத்தது...”

“சரி.. முதல் பாகத்துல கொலை செய்யப்பட்டது யாமினியா இல்லையா.. அதையாவது சொல்லுங்க”

“அதுவும் தெரியல.. நாளைக்கு டாக்டர் ரிப்போர்ட் வந்தா தெரியும்..”

பேசிக் கொண்டிருக்கும்போதே “சார்... பைக்கை இன்னும் ஓரமா நிறுத்திட்டுப் பேசுங்க சார்.. இப்படி பாதி ரோட்லதான் நிறுத்துவீங்களா?” என்று போலிஸ்காரர் திட்டும் குரல் கேட்கவே இன்னும் ஓரம் கொண்டு போனேன் பைக்கை..

எதிர்முனையில் வினு “சாரி பரிசல்.. ட்ராஃபிக்ல இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. நான் அப்பறம் கூப்டறேன்’ என்று வைத்தார்..

என்னை விரட்டிய போலீஸ்காரர் என் பின்னால் மறுபடி வந்து நின்றார்.

“உங்க பைக்லேர்ந்து விழுந்தது பாருங்க.. இந்தாங்க” என்று ஒரு கவரை நீட்டினார்.

நான் அந்தக் கவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் வந்து நின்ற ஜீப்பில் ஏறி மறைந்தார்.

நான் கவரைத் திருப்பி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.

“From: Ashok Raja, Sub-Inspector of Police, Tirupur South" என்றிருந்தது.

** ** ** **

(தொடரும்..)

இந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது..


.

Friday, September 3, 2010

மிஸ்.யாமினி - Part 1

‘இன்ஸ்பெக்டர் காலிங்’ –ன அலைபேசித் திரை ஒளிர ஜீப்பை ஓரமாய் நிறுத்திவிட்டு பச்சை நிற பட்டனுக்கு உயிர்கொடுத்தான் அஷோக்ராஜா. சிட்டியின் துடிப்பான சப் இன்ஸ்பெக்டர்.

“எஸ் ஸார்”

“அஷோக்.. ஆர் யூ இன் ரவுண்ட்ஸ் நவ்?”

“எஸ் ஸார். இப்போ குமரன் ரோட்ல இருக்கேன்”

”எ பேட் ந்யூஸ் ஃபார் யூ. பார்க்ல ஒரு டெட்பாடி. உடனே போய்ப் பாருங்க”

”எஸ் ஸார்” - சொல்லிவிட்டு சடாரென தனது ஜீப்பை வலதுபுறம் திருப்பி பார்க்கை நோக்கிச் செலுத்தினான் அஷோக்ராஜா.

இங்கே அஷோக்ராஜாவைப் பற்றி சில குறிப்புகள்:

முப்பதைத் தொடாத வயது. இளம் வயதிலேயே தனது திறமை, உழைப்பின் மூலம் சப் இன்ஸ்பெக்டரானவன். பல கேஸ்களில் மூத்த அதிகாரிகள் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது கூப்பிடு அஷோக்கை’ என்று சலிப்போடு அழைக்கப்படுவான்.

சலிப்போடு?

இவன் மூக்கை நுழைத்தால் வேறு யார்பேச்சையும் கேட்க மாட்டான். சீனியர் அதிகாரி, அரசியல்வாதி என்று எத்தனை தலையீடுகள் வந்தாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் குற்றவாளியை நெருங்கும் வரை பாய்ச்சல்தான்.
அறிமுகம் போதும். இப்போது அஷோக்ராஜா பார்க்கை நெருங்கியிருந்தான்.

பார்க்கில் கூடியிருந்த சொற்ப கூட்டத்தை விலக்கி அந்த பிணத்தின் அருகே சென்றான்..





ஆண். வெற்றுடம்பு. பொட்டுத்துணி இருக்கவில்லை. குப்புற விழுந்த நிலையில் ஒரு கால் முற்றிலுமாக மடங்கியிருந்தது. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது. உடம்பைச் சுற்றி அங்கங்கே ரத்தக் கோலம். ஈக்கள் தங்கள் சொந்தபந்தக்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, அவனுடம்பில் பெரிய மாநாடே நடத்திக் கொண்டிருந்தன.

சுற்று முற்றும் நோட்டமிட்டான் அஷோக்ராஜா. இவன் திரும்பியதும் கூட்டம் ஓரிரு அடிகள் பின்வாங்கியது.

உடலில் ஒவ்வொரு இன்ச்சிலும் கண்களை ஓட்டினான். ஒன்றுமே பிடிபடவில்லை. ஒரு காயமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. ரத்தம் எங்கிருந்து வழிந்திருக்கிறது?

அஷோக்ராஜா பார்த்துக் கொண்டே இருந்த போதே ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் குழுவும், மோப்பநாயும் வந்து கொண்டிருந்தது.

“என்ன மிஸ்டர் அஷோக்ராஜா? அதே சீரியல் டைப்பா?” ஃபாரன்ஸிக் எக்ஸ்பெர்ட் குணா கேட்டதற்கு மௌனமாய் தலையசைத்தபடி சொன்னான். “போங்க குணா.. போய்ப் பாருங்க. இதோட மூணாவது கொலை. சிட்டில ஒரே வாரத்துல தொடர்ந்து மூணு டெட்பாடி கிடைச்சிருக்கு, என்னத்த ****றீங்கன்னு கேள்வி வரும். நீங்க பாருங்க. ரத்தம் எங்கிருந்து வழிஞ்சிருக்குன்னே தெரியலன்னு டாக்டர் ரிப்போர்ட் தரப்போறார். நீங்க ஒரு தடயமும் சிக்கலன்னு சொல்லப்போறீங்க. முந்தின ரெண்டு கொலைலயும் அதானே சொன்னீங்க?”

கொஞ்ச நேரத்தில் உடம்பைப் புரட்டிப் போட்டுவிட்டு பிதுக்கிய உதடுகளுடன் குணா வர, தயாராய் இருந்த ஆம்புலன்ஸில் இறந்தவன் ஏற்றப்பட்டான்.

“மற்ற இரண்டு பேருக்கும், இவனுக்கும் ஒரே வித்தியாசம்தான் அஷோக். இவன் வித்தியாசமான டிசைன்ல வலது கை புஜத்துல டாட்டூ குத்திருக்கான்”

உடனே சுவாரஸ்யமான அஷோக், இறந்தவனின் உடல் கிடத்தப்பட்ட ஆம்புலன்ஸில் ஏறினான்.

கன்னாபின்னாவென ஏதோ டிசைன் டாட்டூவாக உருமாறியிருந்தது.

சற்று நேரம் அதைப் பார்வையிட்டவன், சலித்தபடி கீழிறங்கப் போன விநாடி, திடீரென ஒளிர்ந்தான்.

“குணா.. இங்க வாங்க..”

“என்ன அஷோக்?”

“அந்த டாட்டூவை இந்த கோணத்திலிருந்து பாருங்க.. ஏதாவது எழுத்துகள் தெரியுதா?”

சில விநாடிகளில் “வாவ்.. எஸ் அஷோக்”

“ஒவ்வொரு எழுத்தா சொல்லுங்க..”

குணா சொன்னார்:

Y - A - M - I - N - I


*******************************************

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. நீங்கள் சொல்வது நம்பவே முடியாதது. இது எத்தனை சதவிகிதம் சாத்தியமானது?”

பதினைந்து விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அறையில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்தை நோக்கி சற்றே உயர்த்த குரலில் கேட்டார் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி இம்மானுவேல்.

வசந்த் ஆதிமூலம் தொண்டையை செருமிக் கொண்டார். தெளிவான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.

“என் அன்பு நண்பர்களே... மனித உடலில் மூளை என்பது மிகச் சிக்கலான ஆச்சர்யம். நமது எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் மூளைதான். ஒரு குழந்தை குழந்தையாய் இருக்கும் வரை உடலுறுப்புகள் தவிர வேறு ஆண் பெண் வேறுபாடுகள் தெரிவதில்லை. வயதுக்கு வந்த பின் ஹைப்போதாலமஸின் செயல்பாட்டால் ஆண் ஒரு மாதிரியும், பெண்கள் ஒரு மாதிரியும் நடத்தையில் வேறுபடுகிறார்கள். அவர்கள் மூளையின் வலது, இடது பாகங்களைப் பயன்படுத்துவதிலும் வித்தியாசம் உள்ளது. ஆண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த பெண்கள் ஆண்களுக்குரிய அம்சங்களோடும், பெண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த ஆண்கள் பெண்களுக்குரிய அம்சங்களோடுமிருப்பார்கள். உதாரணத்துக்கு பெண்களில் மூளையில் உள்ள ஆண்ட்ரோஜன், எக்ஸ்ரோஜன் சமாச்சாரங்கள் பெண்களிடமுள்ள மானோமைன் ஆக்ஸிடேலின் அளவைக் குறைப்பதால் அவர்கள் ஆண்களை விட அதிக பயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி பெண்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மூளையின் மடிப்புகளில் சுரக்கும் திரவ மாறுபாடுகளே காரணம், அதே போலத்தான் ஆண்களுக்கும்..”

இடைமறித்தார் இமானுவேல்..

“ஓகே வசந்த் ஆதிமூலம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஆணோ பெண்ணோ நினைத்த மாத்திரத்தில் தங்களை மாற்றிக் கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?”

“முதலில் என் கண்டுபிடிப்பைக் கூறிவிடுகிறேன். நானும் இதோ என்னுடன் அமர்ந்துள்ள இளம் விஞ்ஞானிகள் குழுவும் பல வருடம் ஆராய்ந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம். இதில் இரண்டு வெவ்வேறு மருந்துகள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உட்கொண்ட ஆறு மணிநேரத்தில் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாற்றமடையலாம். இரண்டுக்கும் வெவ்வேறு மருந்து வகைகள் உள்ளது. இந்தப் பேக்கில் உள்ளதில் ஒன்று உடல்ரீதியாக உங்களை ஆண் தன்மைக்கோ, பெண் தன்மைக்கோ மாற்றும். மற்றொன்று இன்ஜெக்‌ஷன். ஒரு பெண் அதைப் போட்டுக் கொண்டால் மூளை ஆண்களுக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, அவளை ஆணாகவே மாற்றிவிடும்”

“அதிலிருந்து அவள் மீண்டுவர நினைத்தால்?”

“மாற்று மருந்தான பெண்களுக்கான மருந்தை உட்கொண்டால் போதும்”

“உடல் தன்மையில்...”

“உடல் தன்மையில் மார்பகத்தை பெரிதாக்கவோ, இல்லாமல் சுருங்கச் செய்யவோ எனது மருந்து உதவும். ஆனால் ஜன்னேந்திரியத்தை மாற்றும் சக்தி என்னிடமில்லை. இப்படி பெண், ஆணாக மாறி அல்லது ஆண் பெண்ணாக மாறி நாட்டின் பாதுகாப்புக்காக உளவு பார்ப்பது உட்பட பல வேலைகளுக்கு பயன்படுத்த எண்ணி இதை சமர்ப்பித்தேன். எங்கள் அரசு இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க உலகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான உங்களிடம் இதை நிரூபிக்கச் சொல்லிவிட்டது”

“எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?”

“எங்கள் குழுவிலிருந்தே யாராவது ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதைக் கொடுத்து ஒரு மாதத்திற்கு நம்மோடு இருக்கச் செய்வேன். என்னென்ன பயன் என்பதை அப்போது உங்களுக்கு உணர்த்துகிறேன்.”

“யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?”

“எங்கள் குழுவின் ஏழு பேருமே இதற்கு சம்மதித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒருவர்தான் என்பதால் உங்கள் முன்னிலையிலேயே யாராவது ஒருவரை தேர்வு செய்யப் போகிறேன்...”

சற்று இடைவெளி விட்ட வசந்த் ஆதிமூலம் தனது குழுவின் ஏழு பேரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தீர்க்கமான குரலில் சொன்னார்:

“முடிவு செய்து விட்டேன் மிஸ்டர். இமானுவேல்”

“யார் அவர்?”

“மிஸ். யாமினி”

****************************************

வீட்டின் கதவு தட்டப்பட, கணினியில் அமர்ந்து டைப்படித்துக் கொண்டிருந்த நான் எழுந்தேன்.

“பரிசல்காரன்....” வந்தவர் ஒருவித சந்தேகத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நான்தான்.. உள்ள வாங்க” கதவை முழுவதுமாய்த் திறந்தேன்.

“வணக்கம். ஸாரி பரிசல். ப்ளாக்ல உங்க ஃபோட்டோஸ் பார்த்திருக்கேன். டக்னு அடையாளம் தெரியல. என் பேரு கோபிநாத். பெங்களூர்ல இருக்கேன். உங்க பதிவுகளை ரெகுலரா படிக்கறதுண்டு. ஒரு வேலை விஷயமா கோவை வந்தேன். போற வழில உங்களைப் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்..” சொல்லியபடியே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாவைப் பரிசாய் அளித்தார்.

“இது நாலாயிரம் ரூபா பேனா பரிசல். உங்களுக்குத்தான் பேனாக்கள்னா ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்..”

பிரமித்தபடி அதைப் பார்த்த நான் “நன்றிங்க கோபி” என்றேன்.

“பரவால்லைங்க...”

“ஸாரி.. வீட்ல வேற யாரும் இல்ல. நான் சுமாரா காஃபி போடுவேன். இருங்க” என்றபடி எழப்போனவனை கையமர்த்தினார்.

“அதெல்லாம் வேணாம்” என்றவரின் பார்வை உயிர்த்திருந்த கணினித்திரைக்குப் போனது.. “ஏதோ எழுதிகிட்டிருக்கீங்க போல”

“ஆமா கோபி. ஒரு மினி தொடர் எழுதின நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை அடுத்த தொடர் எழுதச் சொல்லிருந்தார். அவருக்காக ஆரம்பிச்ச தொடர் இது..”

“ஓ.. அவர் மினி.. நீங்க யாமினியா?”

மையமாய் சிரித்தேன்.. “ஆனா இந்த யாமினி தலைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்டது..” நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்கள் கணினியை முழுவதும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.

நான் காபி போட்டு வரலாம் என்று உள்ளே சென்ற சில நிமிடங்களில் என் பின்னால் வந்து ‘பரிசல்.. செமயான ஆரம்பம். ப்ளீஸ்... எனக்காக அடுத்த அத்தியாத்தைச் சொல்லுங்களேன்..” என்றார்.

“மன்னிக்கணும் கோபிநாத். அது எனக்கே தெரியாது... அடுத்த அத்தியாயம் வரும்போது படிச்சுக்கோங்க”

“எப்ப வரும்?” காஃபியை ருசித்துக் கொண்டே கேட்டார்.

“நாளைக்கு அல்லது திங்கள் வரலாம்”

ஒருவித ஏமாற்றத்தோடு அவர் கிளம்பிப்போக, அடுத்த அத்தியாயத்தை யோசிக்க ஆரம்பித்தேன் நான்.


.

நான்கு அல்லது ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் முதல் பகுதி இது.


.

Thursday, September 2, 2010

பிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்

பழைய (குப்)பையை கிளறியபோது கையில் சிக்கிய சில முத்துகள்... -

*************************************

18.9.92

அன்புமிக்க திரு. K.B. கிருஷ்ணகுமார்,

வணக்கம். தங்கள் விரிவான, வித்தியாசமான கடிதம் கண்டேன். தங்கள் உணர்ச்சிபூர்வமான பாராட்டுகளுக்கு என் இதய நன்றி.

உங்கள் கடிதம் உங்கள் ரசனையை உணர்த்திற்று. என் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது.

கதை எழுதத் தேவையான தெளிவான நடை உங்களிடம் தெரிகிறதே.. முயற்சிக்கலாமே..?

என் வாழ்த்துகள் – உங்கள் எல்லா நல்ல முயற்சிகளுக்கும்.

பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்


**********************************************

11.08.1993

இனிய கிருஷ்ணகுமார்

சில கடிதங்களைக் கண்டவுடன், ‘இது உடனே பதில் எழுதிப் போட வேண்டிய சமாசாரம் அல்ல. ஆர அமர உட்கார்ந்து யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக பதில் எழுத வேண்டும். எனவே இப்போது பதில் எழுத வேண்டாம்’ என நினைத்து நினைத்து பல கடிதங்களை DUEவில் போட்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று உங்களுடையது. எனவே இப்போது பதில் ஸாரி, கேட்க மறந்துவிட்டோம் பாருங்கள்!

நலமா? நாங்கள் நலம்.

தங்களுடைய பழைய கடிதங்கள் சிலதுகூட எங்களிடம் கைவசம் உள்ளது. அதில் நீங்கள் வரைந்து அனுப்பியிருந்த சில Strikes நன்றாக இருக்கிறது. அதுபோல் புதுமையாக நீங்களே யோசித்து வரைந்து பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே? இது ஒரு சிறிய ஆலோசனைதான்!

சில பல இதழ்களில் –உங்கள் ஜூனியர்-உங்கள் கதைகள் – ரசித்தோம், நன்றாயிருந்தது.

அடிக்கடி தங்கள் நலன் குறித்தும் எங்கள் நாவல் குறித்தும் கடிதம் எழுதுங்கள்.

அப்புறம்?
அப்புறமே!

With Love
சுபா

*********************************************

06.09.93
சென்னை-64

அன்புள்ள கிருஷ்ணகுமார்-----

கடிதம் கிடைத்தது. இந்த இதழ் உல்லாச ஊஞ்சலில் பிரசுரமான பரிசுக்கதை ‘முள்ளுக்கும் மலர் சூடு’ நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன்.

இதுதான்-

பஸ் – பயணி – கண்டக்டர் – சில்லறை போன்ற நாம் அனுதினமும் சந்திக்கிற, சாதாரணம் என்று நாம் ஒதுக்கி விடுகிற விஷயங்களை – சற்று நிதானமாய் கவனித்து அதனுடன் சிறிதளவு கற்பனை கலக்கும்போது கதை கிடைத்துவிடுகிறது.

அருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பலே!

எனது படைப்புகளை ஒன்றுவிடாமல் படித்து ’87 விகடன் சம்பவத்திலிருந்து ‘மல்லிகாவின் ப்ரெய்ன் ட்யூமர்’ வரை மானசீகமாய் உடன் வந்திருக்கிறீர்களே...

நிழலாய்த் தொடர்ந்து வந்த உங்கள் நட்பை மதிக்கிறேன். வரவேற்கிறேன்.

இத்தனை எழுத்து வசீகரம் கொண்ட நீங்கள் ஏன் விமர்சனக் கடிதங்களோடு நின்றுவிடுகிறீர்கள்?

வாருங்களேன்..

கதை உலகில் கைகோர்த்து நடக்கலாம். புதியவர்களுக்காக பத்திரிகையுலகம் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. மற்ற விஷயங்களை சற்றே ஒதுக்கிவிட்டு, கதைக் களத்தில் புது வாளேந்தி வாருங்கள்.

விரைவில்,

முன்னணிப் பத்திரிகைகளில் எல்லாம் உங்கள் (என்னுடையதும் கூட) படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்.

அன்புடன்
படுதலம் சுகுமாரன்

*************************************

15.12.93

அன்புமிக்க திரு.கிருஷ்ணகுமார்

வணக்கம்.

உங்கள் ஒவ்வொரு கடிதமும் உடனே பதில் எழுதத் தூண்டுவதென்னவோ உண்மைதான். ஆனால் படவா நிமிடங்கள் என்னை மிரட்டி விடுகின்றன.

உங்கள் நுணுக்கமான விமரிசனங்கள் தங்கள் ரசனையையும், திறமையையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை.

‘மனசுக்குள் நான் உன்னை...’ நாவலில் பன்னீர் செல்வம் சுத்தமானவன் என்பதைச் சொல்ல அத்தனை சம்பவங்களா என்று கேட்டிருக்கிறீர்கள். அழுத்தமாகப் பதிய வைக்க விரும்பும் விஷயங்களை இரண்டு வரிகளில் தாண்டக்கூடாது. நீங்கள் குறிப்பிட்ட சிறுகதையில் அவன் அப்பாவி என்பது கதைக்கு அவ்வளவு முக்கியமல்ல. மட்டுமல்லாமல் அது சிறுகதை. ஒரு காதலைச் சொல்லும்போதுகூட ராஜாவும் ரோஜாவும் காதலித்தார்கள் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லலாம். முன்னூறு பக்கங்களில் முப்பது சம்பவங்களை அடுக்கியும் அதைச் சொல்லலாம். கதையின் அவசியத்தைப் பொறுத்து அமைக்கும் விதத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

பிறகு?

நிறையப் படியுங்கள்.
நிறைய கவனியுங்கள்.
கொஞ்சமாய்ப் பேசுங்கள்.
நிறைய எழுதுங்கள்.

புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்
என்றாலும் பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்

*****************************************

07.04.94

அன்புமிக்க கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

உங்கள் கடிதங்களைப் பார்த்து வருகிறேன்.

பதில்தான் எழுத முடிவதில்லை.

விதைத்து மறுநாளே பூமியைக் கிளறி முளை விட்டிருக்கிறதா என்று பார்க்கிற அவசரமில்லாமல் நிதானமாக ஆனால் லட்சியத்தோடு செயல்பட்டு வாருங்கள். நாளைக்கு உங்கள் மரம் வளரும். பூக்கும். காய் தரும். கனி தரும். நிழல் தரும். சுகம் தரும்.

பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்.

***********************************

01.09.2010

அன்புள்ள பரிசலுக்கு

நான் உங்கள் வாசகி. லண்டனில் இருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள் என்றால் எனக்காக ஒரு லேப்டாப்பை அங்கிருந்து வாங்கி வர இயலுமா? யாரேனும் வருகிறார்கள் என்றால் சொல்லவும். மேலதிக விபரங்கள் தருகிறேன்.

அன்புடன்
ஒரு வாசகி



டிஸ்கி: கடைசி கடிதம் தேதி பார்க்கவும். நேற்றைய தேதி. நிஜமாகவே உதவி தேவைப்படுகிறது. நீங்களோ உங்கள் நண்பர்களோ வருகிறீ/றார்கள் என்றால் என் மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தொடர்பு கொள்ளவும்.


.