“என்ன போஸ் குடுத்துட்டிருக்க? எப்ப பேசுவ?”
“ஐ.. ஷர்ட் சூப்பர்”
“கிருஷ்ணா.. இது லைவ்வா? நீ சென்னைல இருக்கியா?”
“ஹலோ சார்.... நீங்களா அது? நீங்களா.. நீங்கதானா? ரொம்ப குண்டா இருக்கீங்க சார்..”
ஒரு ஒன்றரை மணிநேர ப்ரோக்லாம்ல மூணு நாலு வாட்டி டிவில மூஞ்சி வந்ததுக்கு எத்தனை ஃபோனு.. எத்தனை எஸ்ஸெம்மெஸ்ஸு.. என்னென்ன க்ரிடிக்ஸு.. பாராட்டு.. கிண்டலு..... அப்ப்பப்பப்பா... ரஜினிகாந்தையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடணும்டா சாமி!
** ** ** **
போன வியாழக்கிழமை செல்வேந்திரன்தான் கூப்ட்டார். விஜய்லேர்ந்து அழைப்பு வரும்ன்னு. கொஞ்ச நேரத்துல வந்துச்சு.. ‘வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு வாங்க. 4 மணிக்கு ஷூட்’னாங்க.. ஏற்கனவே போன நம்ம மக்கள்ஸ்.. ‘மூணு மணின்னா ஆரம்பிக்கவே எட்டாகும்’னாங்க. நான் அன்னைக்கு நைட் கிளம்பியே ஆகணும். அதுனால போவோம்.. 9க்குள்ள ஷூட் முடியும்னா கலந்துப்போம்.. இல்லைன்னா வந்துடலாம்னு போனேன்.
அஞ்சரைக்கு ஷூட் ஆரம்பிச்சு, எட்டேமுக்காலுக்கெல்லாம் முடிச்சுட்டாங்க..
புதிய பண்டிகை நாட்கள் தேவையா இல்லையாங்கறதுதான் தலைப்பு. பண்டிகை நாட்கள்னா ஃப்ரெண்ட்ஷிப் டே, வாலண்டைன் டே, மதர்ஸ் டே... இப்படி...
தேவையில்லைங்கற டாபிக்ல நான்.
இளையராஜாவுக்கு முதல்ல கரண்ட் போச்சாம், சச்சின் ஃபர்ஸ்ட் மேட்ச்ல டக் அவுட்டாம்.. அதே மாதிரி நான் செட்டுக்குள்ள போனதும் இருந்த ஒரு பெரிய இடைவெளில தொபுக்கடீர்ன்னு விழுந்தேன். (நான் உட்கார்ந்திருக்கறதுக்கு முன்னாடி கருப்புல தெரியறது குழி..! தரை இல்ல..)
சரி.. இனி சில கணக்கு. இது தோராயக் கணக்குதான்...
மொத்த ஒளிபரப்பு நேரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். அதுல கோபிநாத் பேசறது அரை மணி நேரம் வரும். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம்.
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ஒரு 45 பேர் இருப்பாங்க. ஆக, ஒரு நிமிஷம் பேச சான்ஸ் கிடைச்சா நீங்க போன ஜென்மத்துல யாரோ வயசானவங்களுக்கு ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம்.
இதுல ஏன் பேசல ஏன் பேசலன்னு கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல?
எனக்கு அஞ்சு வாட்டி சான்ஸ் கிடைச்சுது. நானும் பேசினேன். ரெண்டு எடிட்டிங்ல போக, மூணு வாட்டி பேசினதைக் காமிச்சாங்கன்னாங்க. (நான் பார்க்கல... ட்ராவல்ல இருந்தேன்) அது போக ரெண்டு மூணு வாட்டி க்ளோஸப்ல காட்டினாங்க... இதுக்கு மேல அடிக்கடி என்கிட்ட மைக்கைக் குடுத்துப் பேச்ச் சொல்ல நான் என்ன அன்னைக்கு வந்த ரேடியோ ஜாக்கி சிவசங்கரி மாதிரி KNOWN FIGURE ஆ?
:-)
ஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்காம உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.
ஆகவே நண்பர்களே...
**** ***** ******
# எந்த டாபிக் சொல்லி பேசக் கூப்டாலும், அதுல உங்களுக்கு உடன்பாடா இல்லையான்னு யோசிச்சு ஒத்துக்கோங்க. நான் “ஸ்பெஷல் டேஸ் தேவையில்லைன்னு பேச வர்றீங்களா’ன்னு கூப்டதுக்கு சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆக்சுவலா என் போன்ற கொண்டாட்ட மனநிலை கொண்டவனுக்கு (நன்றி: சாரு) இந்த நாட்களை ஆகோஷிப்பது பிடிக்கவே செய்கிறது. (ஆதாரம்: இதோ)
அந்த மாதிரி நமக்கு மனதளவில் உடன்படாத பக்கத்துக்குப் போய் உட்கார்ந்தா இப்படி சரியானபடிக்கு பேச முடியாமப் போகலாம்.
# முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....
என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்.
# ஆடத் தெரியாதவனுக்கு’ன்னு நெனைக்காதீங்க. இதையும் மீறி என்னாகுதுன்னா, எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.
அதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.
இந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்துட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன்.
# டிஃபன், டீ, காஃபி, கேசரி, சுண்டல் எல்லாமே தர்றாங்க. நல்லாருக்கு.
# அங்க போய் உங்க மேதாவித் தனத்தைக் காட்டறத அவங்க விரும்பறதே இல்லை. போனமா, பேசினமா வந்தமான்னு இருக்கணும். ஒருத்தன் கோபிநாத்கிட்ட ட்ரெடிஷனல் டே பத்திப் பேசி ‘நீங்களே வேட்டி கட்டறதில்லையே’ன்னு கேட்டு எடிட்டிங்ல மாட்டிகிட்டான். தேவையா இது?
# டைரக்டர் ப்ரேக் டைம்ல வந்து டிப்ஸா தர்றாரு. அவரோட டெடிகேஷன் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
# போன வெள்ளிக்கிழமை ஷுட் பண்ணினது, அஞ்சாறு வாரம் கழிச்சு வரும்ன்னு நெனைச்சேன். ஞாயிறன்னைக்கே போட்டுட்டாங்க..!
மறுபடியும்...
அழைத்துப் பேசிய, காலாய்த்த, எஸ்ஸெம்மெஸ்ஸிய, மெய்ல் அனுப்பிய, பாராட்டிய, திட்டிய அனைவருக்கும் நன்றி.
----------------------
நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.
‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’
--------------------------------------------
நிகழ்ச்சியின் லிங்க் இங்கே.
*** *** ***