டாப் 5ன்ன உடனே உலகம் பூராவும் நடந்ததோட டாப் ஃபைவ்ன்னு நினைச்சு வந்துடாதீங்க. என் லைஃப்ல நடந்த டாப் 5.
.
என் புத்தக வெளியீடு. நான் எழுதிய கதைகளைத் தொகுத்து ஒரு மகராஜன் புத்தகமாய் போட, அது ஃபிப்ரவரி 14ம்தேதி, வெளியிடப்பட்டது. வாசகர் கடிதம், துணுக்கு, கேள்வி என்று ஆரம்பித்து இந்த நிலைவரை வந்தது ஆச்சர்யம்தான். இதற்கான தகுதி இருக்கிறதா என்ற வாதத்திற்கெல்லாம் வராமல், கடலோரக் கிளிஞ்சலைப் பொறுக்கி முத்தென நினைத்து குதூகலப்படும் குழந்தையின் மனப்பாங்குடன் அதை அள்ளியெடுத்து வாசித்துப் பாராட்டி, விமர்சித்து, குட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு.
விபத்து. ஃபிப்ரவரியின் ஒரு சனிக்கிழமை நேர்ந்தது அந்த விபத்து. காரில் சீட் பெல்ட் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. தலையில் பெரும் காயத்தோடு, பத்துக்கும் மேற்பட்ட தையல்கள். விபத்து நடந்த கணத்திலிருந்து மீண்டும் அன்றாட நிகழ்விற்குத் திரும்பும் வரை உற்சாகமோடே இருந்த என் மனநிலையை -வேறு வழியின்றி - நானே மெச்சிக் கொள்கிறேன். என்னவாயிற்று என்று பதறிய நட்புகளுக்கு நானெழுதிய பதிவிற்கு, நான் மிக மதிக்கும் பல பெரிய பிரபலங்களிடமிருந்து பாராட்டுகள் கிடைத்தன. சுஜாதாவின் எழுத்தை நினைவுபடுத்தியது என்று மிகப்பிரபலம் ஒருவர் சொன்னதை சுஜாதா கேட்டால் சிறு புன்னகையுடன் கடப்பார். எனக்கது புக்கர்.
வேலைமாற்றம். பத்து முழு வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து தனிப்பட்ட சில காரணங்களுக்காக அந்நிறுவனத்தை விட்டு புதிய இடத்தில் சேரும்போது, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணின் மனவலியை உணர்ந்தேன். ஆறு மாதங்கள் ஆனது மனதளவில் அதை ஏற்க. புதிய இடம், புதிய வேலை தந்த சவால்கள் பிடித்திருந்தது. என்னை நானே உணர முடிந்தது. COMFORT ZONEலிருந்து தாவுவதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்ததன் மூலம் என்னை நானே மெருகேற்றிக்கொள்ள இந்த மாற்றம் உதவியது. என் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. அலுவகத்தில் நல்ல நண்பர்கள் என்று நினைத்து நட்பு பாராட்டிய சிலரின் நிறங்கள் வெளுத்தன. என்னையும் அவ்வாறே அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். பத்து வருடங்கள் பழகிய ஒருவனை, ஒரே வாரத்தில் மறக்கும் வரம் கிடைக்கப் பெற்ற மாமனிதர்கள் புண்ணியாத்மாக்கள் என்பதைத் தவிர சொல்வதற்கொன்றுமில்லை. வியாபாரக் கண்ணோட்டம் என்பது வியாபாரத்திற்கு மட்டுமல்ல நான் கொண்டாடும் நட்புகளுக்கும்தான் என்று சொன்னார்கள் சிலர். நீ என் மகன், நீ என் தோழன், நீ என் சகோதரன், நீ என் எல்லாம் என்றவர்களெல்லாம் ‘ஹலோ.. ஐ’ல் காண்டாக்ட் யூ லேட்டர்’க்கு மாறினார்கள். பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்தபோதும் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லா தெய்வப்பிறவிகள் என்னைச் சுற்றி இருந்திருக்கிறார்கள், அவர்களைச் சுற்றி நானும் அளவளாவி நடந்திருக்கிறேன் என்பன போன்று பல உண்மைகள் எனக்குத் தெரிவித்தது இந்த வேலை மாற்றம்.
சவால் சிறுகதைப் போட்டி. தமிழுக்கு நம்மால் ஆன ஏதேனும் சிறு பங்காய் இருக்க வேண்டும் என்று கூட்டம் போட்டு, திட்டமிட்டு என்றெல்லாம் இல்லாமல் உங்களில் ஒரு.. மன்னிக்க இருவராய் நானும் ஆதியும் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி எங்கள் வலையின் ‘டாக் டாப் 2010’ ஆனது. சவால் சிறுகதை என்று தேடினால் கூகுளாண்டவரை லட்சத்துக்கு மேற்பட்ட முடிவுகளோடு வந்து நிற்க வைத்தது. வருடா வருடம் ஏதேனும் ஒரு போட்டி எங்களின் பங்களிப்பாய் இருக்க வேண்டும் என்று திட்டமிட வைத்தது. எங்கெங்கே சறுக்கினோம் என்பதுணர்ந்து சரி செய்து இன்னும் வேகமாய், திடமாய் போட்டி நடத்த அனுபவம் கொடுத்தது. சில விமர்சனங்கள், பல பாராட்டுகள் என எங்களைச் செலுத்திய இந்த அனுபவம் மறக்க முடியாத நிகழ்வு.
நீயா நானா பங்கேற்பு: திருச்சி ஹலோ எஃப் எம் நண்பர் ராஜா, திருநெல்வேலி ஹலோ எஃப். எம். எழுத்தாளர் தமயந்தி என சிலர் அவ்வப்போது அழைத்து என்னை பண்பலையில் பேச வைத்து பெரிய மனுஷனாக்குவதுண்டு. நானும் வெங்காய விலை முதல் ஒயிட் ஹவுஸில் வெள்ளையடித்த வரலாறு வரை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு சொதப்புவேன். இதையெல்லாம் கண்ட சின்னவள் மேகா ‘நீங்க எப்பப்பா டிவில வருவீங்க’ என்று கேட்டு வைத்தாள். ‘டி வி எஸ்-ஸில் வருவதென்றால் அன்றைக்கே வரலாம். டிவியிலா?’ என்று வழக்கம்போல மொக்கை போட்டேன். அவள் கேட்ட நேரம் அடுத்த நாளே விஜய் டிவியிலிருந்து அழைப்பு வர, சென்று வென்று வந்தேன். அந்தக் கதையை நீங்களும் படித்திருப்பீர்கள். மற்றபடி அதில் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.
2010ல் எனக்குக் கிடைத்து நான் பொக்கிஷமாய் வைத்திருக்கும் இரண்டு பொருட்கள்: நண்பன் ஒருவன் பரிசாய்த் தந்த பைனாகுலரும், பதிவர் கோபி தந்த 18000 பெறுமானமுள்ள (ஆம். பதினெட்டாயிரம் ரூபாய்!) MONTE BLANC (மா’ம் ப்ளா - என்றுதான் உச்சரிக்க வேணுமாமே?) பேனாவும்.
முக்கிய இந்த ஐந்து நினைவுகள் / இரண்டு பரிசுகள் தவிர்த்து, பிற வழக்கம்போல.
நீ எத்தனை முட்டினாலும் மோதினாலும் பெண்ணென்பது பெரும் சக்தி என்பது தெரிந்தது. அவளன்றி அணுவும் அசையாது, அசைக்க நினைத்தாலும் முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. நான் சொல்லும் அந்தப் பெண் மனைவி என்பது உ. கை நெ.கனி. சில பல வேளைகளில் மௌனமே ஆயுதம். பேசி ஒன்றும் ஆவதற்கில்லை என்பது உட்பட பல பால பாடங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்தது.
சில நட்புகள் காட்டிய அன்பின் ஆழம் இதயத்தை வருடியது. சுகம், சோகம் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கிடைத்த நட்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும். நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனேனும் உலகில் இருப்பான் என்பார்கள். எனக்கது ஒன்றுக்கு மேற்பட்டதாய் இருக்கிறது. அவர்களுக்கும் நான் அவ்வாறே என்பதில் ஒரு மகிழ்ச்சி.
இந்த வருஷத்தில் நீ கற்றுக் கொண்டதென்ன? புத்தாண்டில் என்ன உறுதிமொழி எடுக்கப் போகிறாய் என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொள்வதில்லை. புத்தாண்டென்றால் நான் எதிர்பார்ப்பது உறுதிமொழியோ, வோட்காவோ, பீரோ அல்ல.. தடித் தடியான டைரிகள். ஏனோ இந்த வருடம் அவை அதிகம் வரவில்லை.
இரண்டாயிரத்துப் பதினொன்று எல்லாருக்கும் இதமாய் அமைய...
பதிவர்களுக்கு: எழுத நினைத்தது உடனே வார்த்தைகளாய் வந்து விழ, எழுதிய பதிவுகள் உடனே ஹிட்டாக, வலைப்பூவின் ஹிட் கவுண்டர் நிரம்பி வழிய, பின்னூட்டங்கள் தேவையில்லை என்று நீங்கள் பெட்டியை மூடுமளவு பின்னூட்டங்கள் வந்து விழ, சைடு பார் முழுவதும் நிரம்பும் வண்ணம் ஆயிரமாயிரம் ஃபாலோயர்கள் வர, உங்கள் பெயர் பஸ், டிவிட்டர் உட்பட எங்கேயும் கிழிந்து தொங்கி பஞ்சராகாமல் இருக்க...
வாசகர்களுக்கு: படிக்கும் பதிவுகள் உங்கள் மனம் கவர, சோகமாய் இருக்கும்போது நினைத்துச் சிரிக்கும் பதிவுகள் வர, சண்டை சச்சரவுப் பதிவுகள்-பஸ்கள்-ட்விட்டர்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க, அப்படியே பட்டாலும் அவற்றைப் படித்து மண்டை குழம்பாமல் இருக்க, உங்களுக்குப் பிடித்த பதிவர்கள் இடைவெளியில்லாமல் எழுதிக் கொண்டே இருக்க (ஹி..ஹி..)
குடும்பஸ்தர்களுக்கு: புக்கிங் செய்ய அழைத்த உடன் கேஸ் கம்பெனிக்காரன் உங்கள் அழைப்பை அட்டெண்ட் செய்ய, உங்கள் நண்பனோடு ஒரு லார்ஜ் அடிக்க நினைக்கையில் மனைவி மனமார அனுமதி அளிக்க, முக்கியமான மேட்ச்களின் போது ரிமோட் உங்கள் ஆளுமையில் இருக்க, சேமிப்பென்று பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும் கடன் என்ற ஒன்றை நாடாமல் வாழ, மனைவி / கணவன் பரஸ்பரம் அன்பால் தங்களிணையை ஆள, உங்கள் குழந்தைகள் படிப்பின் நம்பர் ஒன் ஆகாவிட்டாலும் பண்பில் சிகரமாய்த் திகழ,
உத்தியோகஸ்தர்களுக்கு: பணி செய்யும் இடத்தில் நீங்கள் செய்த வேலைக்கு உங்களுக்கே பாராட்டுக் கிடைக்க, அப்ரைசலின் போது உங்கள் ஜாதகக்கட்டத்தில் சுக்கிரன் சிரிக்க, அட்டெண்டன்ஸ் ரிப்போர்ட்டில் LATE COMERSல் உங்கள் பெயர் வராமலிருக்க, கேட்டபோதெல்லாம் முகச் சுளிப்பில்லா பர்மிஷன்/லீவு கிடைக்க..........
பொதுமக்களுக்கு: 2011 தேர்தல் சமயத்தில் கூம்பு வடிவ மைக்குகள் உங்கள் வீட்டருகில் கட்டப்படாமல் இருக்க, உங்கள் நேர்மையைச் சோதிக்கும் வண்ணம் கையூட்டுகள் உங்களைக் கவராமல் இருக்க, நீங்கள் செல்லும் வழியில் குண்டு குழியில்லாத சாலைகளிருக்க, அப்படியே இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லாமலிருக்க, அப்படியே இருந்தாலும் அப்போது வாகனமேதும் கடக்காமல் இருக்க, விலையேற்றம் என்பது தவிர்க்கவே முடியாது வேறு வழியே இல்லையென்பதை உணர்ந்து, இனிமேலும் நீங்கள் புலம்பாமல் நாட்களைக் கடத்த...
இன்னும்..
இன்னும்.. உயரங்கள் பல தொட
வாழ்த்துகள்!
.
(தொடர்புடைய பதிவு: சொல்லாததும் உண்மை. 2010 புத்தாண்டுக்கு எழுதியது)
.
29 comments:
புத்தாண்டு வாழ்த்துகள்.. :)
புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் பரிசல்
Congrats boss :) My good wishes to you...
வாழ்த்துக்கள் பரிசல்.. வித்தியாசமான டெம்ப்ளேட் டாப் 5 ஹிஹி...
அருமையான பதிவு.
புதியன பல கற்று, உயரங்கள் பல தொட்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .
சுவாரஸ்ய
சுவாரஸ்ய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நட்பு பாராட்டியவர்களின் நிறங்கள் வெளுக்கும்போது நினைத்தாலே வலிக்குது சார்..
//உங்களுக்குப் பிடித்த பதிவர்கள் இடைவெளியில்லாமல் எழுதிக் கொண்டே இருக்க //
நன்றி உங்கள் வாழ்த்துக்கு..
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
//சில நட்புகள் காட்டிய அன்பின் ஆழம் இதயத்தை வருடியது. சுகம், சோகம் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றிப் பேசக் கிடைத்த நட்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும். நீ உன்னைப் பற்றிய எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனேனும் உலகில் இருப்பான் என்பார்கள். எனக்கது ஒன்றுக்கு மேற்பட்டதாய் இருக்கிறது. அவர்களுக்கும் நான் அவ்வாறே என்பதில் ஒரு மகிழ்ச்சி.//
புத்தாண்டு வாழ்த்துகள்! பரிசல்...........
Sir,
Good piece of writing & your flow of languate is good.
I have a piece of correspondence with Sujatha. Kindly provide me your postal address to my email id: rathnavel_n@yahoo.co.in - and I will send to you by courier.
My Heartiest Blessings & New Year Wishes to you & your family members.
N.Rathnavel
Smt N.R.Uma Gandhi
ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்பபபபப நாளைக்கப்பறம் ரியல் பரிசல் டச் பதிவு...
நிறைய முதிர்ச்சி...
வாழ்த்துக்கள் !
இந்த வருட(மு)ம் உங்களுக்கு இனிதே அமைய வாழ்த்துக்கள் !
"உங்களின்" சென்ற வருடம் பற்றிய உங்களின் பதிவு சுவையாக இருக்கிறது, தொடர்ந்து வலையுலகில் எழுதுங்கள்.
வலையுலகத்தின் ஐகான் பரிசல்காரன் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்ல flow பாஸ்..உங்கள் சொந்த ஊர் கண்டிப்பாக திருப்பூராக இருக்க முடியாது (குத்துமதிப்பான கெஸ்) :)
வாழ்த்துக்கள் பரிசல்.
Good Touch thala.... Very Happy new year to you and your family.
:-)
புத்தாண்டை ஒட்டி வந்த ‘புத்தாண்டு’ இடுகைகளில் சிறப்பானது.
வாழ்த்துக்கள் பரிசல்! இன்னும் பல உயரம் போவீர்கள்
வாழ்த்துக்கள் பரிசல்! இன்னும் பல உயரம் போவீர்கள்
நல்லாருக்கு பதிவு கிருஷ்ணா. புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment