Sunday, January 23, 2011

அவியல் 24 ஜனவரி 2011

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொருட்களைப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருக்கும்போது, முன் சென்ற ஒரு குடும்பத்தில் நடந்தது:

“ஏங்க.... சாம்பார்த் தூள் ரெண்டு பாக்கெட் எடுத்து கூடைல போடுங்க”

கணவன் இரண்டு பாக்கெட் சாம்பார் தூளை எடுத்துப் போடுகிறார்.

“என்னங்க... ஒண்ணு ஆச்சி மசாலா, இன்னொண்ணு சக்தி மசாலா? ஒரே ப்ராண்ட் எடுங்களேன்..”

“ஆச்சி மசாலா வாங்கலைன்னா ஆச்சி கோச்சுப்பாங்கள்ல?”

“அப்ப சக்தி மசாலா?”

கணவன் வழிந்தபடி சொன்னார்: “ஹி..ஹி.. அது தமன்னாவுக்காக..”

------------------

ண்பன் கூப்பிட்டான்: “டேய்... சரக்கு வாங்கலாம்னு டாஸ்மாக் போனேண்டா.. சரியான கூட்டம்..”

“டாஸ்மாக்ல கூடறதுன்னா அது தப்பான கூட்டம்டா.. அதெப்படி சரியான கூட்டமாகும்?”

ஃபோன் என்பதால் அடிக்க வரவில்லை. இந்த சரியான என்பதை எங்கெங்கே பயன்படுத்துகிறோம் என்று யோசித்தேன். சரியான கோவம் வந்தது.

“அவளைப் பார்த்தன்னு வையி... சரியான ஃபிகர்டா!”

“மேனேஜர்கிட்ட சொன்னேன். கேட்கவே இல்ல. சரியான முசுடு அந்தாளு..”

“உன்கிட்ட போய்ச் சொன்னேன்பாரு.. சரியான ஆளுடா நீ!” - இதே வேறு அர்த்தத்தில்... “உன்கிட்ட சொன்னதுனால ஆச்சு.. நீதாண்டா சரியான ஆளு”

இதே போல சம்பந்தமே இல்லாமல் நடுவே சேர்த்திக் கொள்கிற இன்னொரு வார்த்தை - பயங்கரம்!

“ப்பா.. பயங்கரக் கூட்டம்டா பஸ் ஸ்டாண்ட்ல”

“நீ பயங்கரமான ஆளுடா..!”

“சாம்பார் பயங்கர காரமா இருந்துச்சு” இதே வேறு விதமாய்.. “சாம்பார் பயங்கர டேஸ்ட்மா!”

இப்படி வார்த்தைகளை சம்பந்தமில்லாம பயன்படுத்தற யோசிச்சா சரியான கோவம் வருகிறது என்றேனா.. இப்ப பயங்கரமா கோவம் வருது!

----------------------------------

கோ பாடல்கள். சிடி கவர் பின்னால் பாடல்கள் / பாடியவர் / எழுதியவர்களைக் குறிப்பிட்டிருக்கும் ஐடியாவுக்கு ஒரு பூச்செண்டு!

கார்க்கி சொல்லியிருக்கற மாதிரி யுவனை முந்துகிறார் ஹாரிஸ். ஒரு கன்ஸிஸ்டென்ஸி இருக்கிறது. எனக்கு அமளிதுமளி அவ்வளவு பிடித்தது. நடுநடுவே வரும் ‘யய் யவ்டதை யவ்டதை யய்யே’ சூப்பர்! (அதுக்கென்ன பேரு... கொன்னக்கோல்.. சரிதானே?)

அப்பறம் அகநக பாடலில் பெண்குரல் ராப்பும் கவர்கிறது! என்னமோ ஏதோ பாடல் - காதை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் ஹாரிஸ் பாட்டு என்று!

சரி.. ஒரு புகார்:

எங்கேயும் காதல், சிறுத்தை, ஆடுகளம்.. இப்ப இதுன்னு வர வர யாரும் லிரிக் புக் அட்டாச் பண்றதில்லை.. ஏற்கனவே ஒரிஜினல் சிடி வாங்கறவங்க கம்மி.. இப்படி பண்ணா சரியில்லை.. சொல்லீட்டேன் ஆமா..


----------------------------------------



நண்பர் பகிர்ந்துகொண்ட இந்தப் போஸ்டரைப் பார்க்க கடுப்பாக இருந்தது. +2, 10வது மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி என்று மாணவர்களிடையே அரசியலைக் கலக்குவது வருத்தத்துக்குரிய விஷயம்.

----------------------

லொ
ன்வபோ சொட்சொபி.

திட்டறேன்னு நெனைக்காதீங்க.. முடிஞ்சு போன சௌத் ஆஃப்ரிகா சீரிஸ்ல பிரகாசமான பௌலர். முதல் ஒன் டேல சச்சின் விக்கெட்டை எடுத்தவர்கிட்ட “சச்சின் விக்கெட்! எப்படி ஃபீல் பண்றீங்க?”ன்னு கேட்டிருக்காங்க. மனுஷன் வெவரம். “ஒண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணி பேசி அவர் கோவத்துக்கு ஆளாக விரும்பல”ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம். அப்பறம் ஒலங்காவுக்கு ஆன கதிதான்னு நெனைச்சிருப்பாரு!

ஓகே.. இன்னைக்கு மேட்ச்ல தோத்தாலும் நல்ல ரன்ரேட். அவங்க 46 ஓவர்ல 250. 5.43 RR. நாம 40.2 ஓவர்ல 234. RR - 5.80. என்ன விக்கெட் இல்லாமப் போச்சு, யூசுஃபோட ஃபார்ம் நல்ல விஷயம். பார்த்திவ், ரோகித்ன்னு இன்னைக்கு ஓபனிங் பண்ணவங்களுக்கு பதிலா உலகக் கோப்பைல காம்பீர், சேவக்ன்னு இறங்கும்போது பொறி பறக்காது? மிடில் ஆர்டர்ல ரெய்னாவோட அவுட் ஆஃப் ஃபார்ம்தான் கொஞ்சம் பயமுறுத்துது. டவுன் ஆர்டர்ல - லான்ஸ் க்ளூன்ஸ்னர் ஒருக்கா செஞ்ச மேஜிக்கை இந்த உலகக் கோப்பைல செய்ய யூசுஃப் பதான் இருக்காரு. போதாததுக்கு ஹர்பஜன் / ஜாகீர் நல்லா பார்ட்னர்ஷிப் தர்றாங்க.. அப்பறமென்ன?

Get Ready Folks!

---------------------------------

ன்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்ப்பார்க்கிறாய்

காதலையா?


-சுகிர்தராணி


.

Thursday, January 20, 2011

அவியல் 20 ஜனவரி 2011

பொங்கல் விடுமுறை முடிந்து நண்பர் பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார். டிக்கெட் எடுக்கும்போது, இவருக்கு முன் சீட்டில் தன் ஐந்து -ஆறு வயது மதிக்கத்தக்க மகனுடன் அமர்ந்திருந்த குடும்பத்தலைவர் இரண்டரை டிக்கெட் என்று கேட்டிருக்கிறார். கண்டக்டர் ‘மூணு டிக்கெட்டா எடுத்துட்டீங்கன்னா பையன் நல்லா உட்கார்ந்துட்டு வரலாம். அரை டிக்கெட் எடுத்தீங்கன்னா இன்னொருத்தரை உட்கார வைக்க வேண்டிவரும். இல்லீன்னா செக்கிங் இன்ஸ்பெக்டருக்கு நான் பதில் சொல்லணும்’ என்றிருக்கிறார்.

அவ்வளவுதான். பயங்கரமாகக் கத்த ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. ‘அத்தனை லட்சம் கொள்ளையடிக்கறாங்க... இந்த அரைடிக்கெட்லதான் நாட்டைக் காப்பாத்தப் போற நீ’ என்று ஒரே அர்ச்சனையாம். சகட்டு மேனிக்கு அரசியல் பேச ஆரம்பித்துவிட்டாராம் அந்தப் பயணி. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து ‘அரை டிக்கெட்டு என்னாய்யா இந்தாளு கவுன்சிலர்லேர்ந்து ஒபாமா வரைக்கு எல்லாரையும் இழுக்கறாரு?’ என்று பிற பயணிகளும் சலசலக்க ஆரம்பிக்க அவர் மனைவி படாரென எழுந்து ‘இப்ப அவரு சொன்னமாதிரி டிக்கெட் எடுங்க.. இல்லைன்னா கம்னு உட்காருங்க.. என்னாத்துக்கு இந்த வாயி?” என்று கத்த பொட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டாராம் அந்தப் பயணி.

சம்சாரம் அது மின்சாரம்!

----------------------------------

துவும் பஸ்ஸில் (கூகுள் பஸ் அல்ல. பேருந்து!) நடந்த விஷயம்.

அதிகாலை ஐந்து மணிக்கு புறப்படத் தயாராக நிற்கிற பேருந்தில் ஏறுகிறார் அவர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. நெற்றியில் பட்டை. ‘அன்பர்களே.. நான் சிங்காரச் சென்னையிலிருந்து பழனி செல்வதற்காக வந்திருக்கிறேன். அங்கங்கே உங்களைப் போன்றவர்கள் செய்யும் தானத்தைப் பெற்று முருகனை தரிசிக்கப் போகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. தானம் இடுபவர்கள் இடலாம்’ என்று கம்பீரமாக அறிவித்துவிட்டு ஒவ்வொருத்தர் அருகிலும் போய் நிற்கிறார். அருகில் நிற்கும்போதுதான் அவர் சுவாசத்தில் டாஸ்மாக் வாசனை ரொம்பவே ஓவராக இருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். ஒருவரும் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. நடந்து நடந்து பின் படிக்கட்டுக்கு வந்தவர் சத்தமாகச் சொன்னாராம்:

“ஒருத்தரும் போடலியா? சரி.. சரி.. பார்த்துப் போங்க.. சபரிமலை ஞாபகமிருக்கில்ல? அந்த மாதிரி ஆகாம இருந்தாச் சரி”

அடப்பாவிகளா..!

-----------------------

ட்விட்டரில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டது கீழே உள்ள புகைப்படம்:




(பெரிதாகப் பார்க்க: http://www.ibelieveinadv.com/commons/enjoy-the-wait.jpg)

காத்திருக்கும் நேரத்தை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்கள். பலே யோசனை இது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கீழிருந்து ஒரு கதை ஆரம்பித்து மேலே முடிவது போலிருக்கும் அந்த ஐந்தாவது யோசனை ஆஹா! எத்தனை இடைவெளிவிட்டு அழகாக நகரும் க்யூ!

இந்தியாவுலயும் ஆராச்சும் செய்ங்கப்பா இந்த மாதிரி யோசனையெல்லாம்!

-------------------------------------------

ரு டெக்னிகல் மேட்டர்: ட்விட்டரில் பலர் அடிக்கடி வந்து ‘இங்க்லீஷ்ல டைப்புங்க. நான் மொபைல்ல படிக்கறேன். தமிழ்ல அடிச்சா படிக்க முடியாது’ என்கிறார்கள். நீங்கள் ஓபரா மினியில் உலவுபவராக இருந்தால் தமிழில் படிக்க முடியும்..

ஓபரா மினி அட்ரஸ் பாரில் www எல்லாம் இல்லாமல் டைரக்டாக config: என்று டைப்பி ஓகே கொடுக்கவும். செட்டிங்ஸ் பகுதி வரும். அதில் கடைசியாக 'use bitmap fonts....' என்று முழ நீளத்துக்கு ஒரு கேள்வி இருக்கும். அது ‘NO’ என்றிருக்கும். அதை ‘YES’ என்று மாற்றுங்கள். இனி நீங்கள் உங்கள் வலை, ட்விட்டர், மின்னஞ்சல்களை தமிழிலேயே படிக்கலாம்!

------------------------------

மொபைல் நம்பரை மாற்றாமல் சர்வீஸ் ப்ரொவைடரை மாற்றும் வசதி இன்னும் கொஞ்சநாட்களில் வரவிருக்கிறது. 19 ரூபாய்க்கு ஓர் எஸ்ஸெம்மெஸ் தட்டிவிட்டால் நீங்கள் வேறு நெட்வொர்க்குக்குத் தாவலாமாம். ஆனால் முக்கிய விஷயம் பழைய நெட்வொர்க் கணக்கில் உங்களிடம் பாக்கி ஏதும் இருந்தால் அது புது நெட்வொர்க்கில் கணக்கில் வராது.

வரவர இந்த மொபைல் ஃபோன்காரர்கள் - சிம்கார்டு விற்பவர்கள் என்று இவர்களது வளர்ச்சி ஏகபோகமாய் ஏறிக்கொண்டிருக்கிறது. அன்றொருநாள் புதுப்பட இசைத்தட்டு ஒன்று வாங்க அலைந்து கொண்டிருந்தேன். அவிநாசியில். ஒரு சி.டி கடைகூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளிலும் ஒரிஜினல் ஆடியோ சி.டி இல்லை. ‘அதெல்லாம் வருதா இப்ப?’ என்று ஒரு கடைக்காரர் கேட்டது அதிர்ச்சி!அதே நேரம் பத்து கடைகளுக்கு ஒரு கடை சிம்கார்டு, செல்ஃபோன் கடையாக இருந்தது.

என் நண்பர் ஒருவர் புத்தாண்டு அன்று way to smsலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘இன்று முதல் நான் அலைபேசி உபயோகிப்பதிலை என்று முடிவு செய்திருக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி இது:........................ நான் தங்களைத் தொடர்புகொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் way to sms இருந்து தொடர்பு கொள்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதேனும் சொல்ல விரும்பினால் ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள்’ என்று.

பொறாமையாக இருந்தது அவரெடுத்த முடிவு கண்டு!

-----------------------------------

மெக்கானிக் ஷாப் ஒன்றில் கண்ட வாசகம்:

மாதா, பிதா, ஸ்குரு, தெய்வம்.

----------------------


.

Monday, January 17, 2011

காவலன்-ஆடுகளம்-சிறுத்தை: ஒரு மிக்ஸிங் ரிப்போர்ட்

பொங்கலுக்கு வந்துள்ள படங்களில் எல்லோரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் இந்த மூன்று படங்களுக்கும் சம இடமுண்டு.

எனின் – இந்த மூன்றில் எது டாப்? கதையைப் பொறுத்தவரை காவலனும், கதைக்களத்தைப் பொறுத்தவரை ஆடுகளமும், கமர்ஷியலுக்கு சிறுத்தையும் என மூன்றுமே ஜாக்பாட் அடித்திருக்கின்றன.

சிறுத்தை - கல்லாவை மட்டும் குறிவைக்கும் கமர்ஷியல் மசாலா. கார்த்தி தூள் கிளப்பியிருக்கிறார். அதுவும் ரத்னவேல் பாண்டியனாக வெறிக்கும் கண்களும், முறுக்கிய மீசையுமாய் அவர் பார்க்கும் பார்வையில் கனகச்சிதமாய்ப் பொருந்தியிருக்கிறார். அண்ணனை விட அந்த உடுப்புக்கு இவரே பொருத்தம்.

தமன்னா - வாங்கிய சம்பளத்தில் 30% தானும் நடித்து, 70% இடுப்பையும் நடிக்க வைத்திருக்கிறார்.

சந்தானம் - படத்தில் செகண்ட் ஹீரோ. பல இடங்களில் வயிறு நோகச் செய்யும் சிரிப்பு வெடிகள்.


ஆடுகளம் - அட்டகாசம்.

எடுத்துக் கொண்ட கதைக்களனுக்கு வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. சேவல் சண்டையில் ஊரே வியக்கும் நபரான பேட்டைக்காரனின் பாத்திரப்படைப்பும், அதில் நடித்துள்ள கவிஞர் ஜெயபாலனின் உடல்மொழியும், அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியின் உழைப்பும் - ஒன்று சேர்ந்து மனசை அள்ளுகிறது. அந்தக் காதல் படத்தோடு ஒட்டவில்லை. ஒரே ஒரு ஃபோன் போட்டு பேட்டைக்காரன் குறித்து தனுஷிடம் சொல்லும் சீன் தவிர அந்தக் காதலால் என்ன பயன்.. ஆங்.. ரெண்டு அருமையான பாடல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆத்தி ஆத்தி & அய்யய்யோ. ஆத்தி ஆத்தி ஹிட்.. SPB தன் மகனுடன் பாடிய ஐயையோ நெஞ்சு’ பாடலைக் கேளுங்கள். ஏதோ போகிற போக்கில் ஜாலியாகப் பாடியிருக்கிறார் மனுஷன்.

தனுஷ்! என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இப்படி ஒரு உடல்மொழி எந்த நடிகருக்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. அதை அருமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். உட்காரும் ஸ்டைலாகட்டும், ஏண்ணே இப்படிச் செஞ்ச என்று பேட்டைக்காரனிடம் மருகும் இடமாகட்டும், பாரில் நண்பன் பேட்டைக்காரனைப் பற்றித் தவறாகச் சொல்ல, கோவப்படும் இடம் என்று பல இடங்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

இடவேளைக்கு முன் வரும் சேவல்சண்டை - இதயத்துடிப்பை எகிறச் செய்கிறதென்றால் அதற்கான முழுப் பாராட்டும் வெற்றிமாறனையும், சேவல் சண்டைக்கு கிராஃபிக்ஸ் அமைத்த குழுவுக்கும்தான். சபாஷ்!

பின்னணி இசையில் ஒருபடி மேலேறிவிட்டார் ஜி வி ப்ரகாஷ். ஏதோ கத்தியை சீவுவதைப் போல ஒரு வித ஒலி அங்கங்கே வருகிறது. மிகவும் அருமை.


காவலன்:

விஜய் படங்களிலேயே என் ஃபேவரைட் படமான வசீகராவுடன் இதுவும் லிஸ்டில் சேர்ந்துவிட்டது. விஜய் படத்துல கதையே இருக்காது என்று சொல்பவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும். அரசியலெல்லாம் வேண்டாம் விஜய். ரெண்டு கமர்ஷியல் குடுங்கள், நடுநடுவே இப்படி ஒரு படம் கொடுங்கள்.. நாங்கள் இருக்கிறோம் உங்களைக் கொண்டாடுவதற்கு!

எத்தனை நாளாயிற்று இப்படி அருமையான முடிச்சுகளுடன் கதையுள்ள படங்களைப் பார்த்து! சபாஷ் சித்திக்!

விஜய் - பெர்ஃபார்மென்சில் கலக்குகிறார். பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். தன் காதலியை சந்திக்க பார்க்குக்கு போக ஆரம்பிக்கும் சீனில் துவங்கி, பார்க் சீன் முடியும் வரை அவரது நடிப்பு - பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடிதடி, ஏஏஏஏஏஏஏஏஏஏய், பஞ்ச் டயலாக்ஸ், உயிர்த்தெழுதல் ஏதுமில்லாத விஜயையும் நன்றாகவே ரசிக்க முடிகிறது!

வடிவேலு - வழக்கம்போல்.

ஒரே குறை, படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகும் நீட்டிக் கொண்டே போனது பிடிக்கவில்லை. மாது ரயிலில் கட்டிப் பிடித்த இடத்திலேயே படம் முடிந்துவிட்டது - பிறகு மீராவைச் சேர்த்துவைக்க வேண்டும் என்பது யார் இட்ட கட்டளை? புரியவில்லை.

பாடல்களில் ‘யாரது... யாரது’ சொல்லாமல் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது! டிபிகல் வித்யாசாகர் மெலடி. இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்!

மூன்று படங்களிலும் முதலிடத்துக்கான என் ஓட்டு - அருமையான கதை + அதைத் தேர்ந்தெடுத்து நடித்த விஜய்க்காக - காவலனுக்கு. ஆடுகளம் - அதேதான். இடைவேளைக்குப் பின் கொஞ்சம் ஸ்லோ ஆகிவிட்டதால் -ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் இரண்டாமிடம்.

நான் பார்த்த மூன்று தியேட்டர்களிலும், மூன்று படங்களைப் பற்றிய நெகடீவ் & பாசிடீவ் கமெண்டுகளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் மூன்று படங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மக்களைக் கவரவே செய்திருக்கிறது. நல்ல கதைக்களன் கொண்ட ஆடுகளமும், காவலனையும் நீங்கள் கொண்டாடாவிட்டால் இழப்பு உங்களுக்கில்லை. மறுபடியும் அடுத்த படத்தில் விஜய் மண்ணுக்குள் புதைந்து, சட்டை கலையாமல் வெளியே வருவார். அதையும் திட்டத் தயாராக இருங்கள்.


.

Tuesday, January 4, 2011

தமிழ் எழுத்தாளனின் அவல நிலை!

மிழகத்தின் எழுத்தாளனுக்குத்தான் இந்த நிலைமையெல்லாம் என எண்ணிப் பார்க்கும்போது இதயம் வலிக்கத்தான் செய்கிறது. வேறு வழியில்லை.. சொல்லித் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நான் இணையத்தில் எழுதுவதற்கு எப்பேர்ப்பட்ட விஷயங்களையெல்லாம் தியாகம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை சொன்னால் இன்று முழுவதும் போதாது. அப்படி இப்படி ஆஃபீஸில் ஓபியடித்து, வீட்டில் விளக்குமாற்றால் அடிவாங்கி என்று பல குட்டிக்கரணங்களைப் போட்டு தமிழுக்குச் சேவையாற்றிக் கொண்டிருந்த கட்டகாலத்தில்.. மன்னிக்கவும் காலகட்டத்தில் நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகப் போட ஒருவர் முன்வந்தார்.

சிறுகதைத் தொகுப்பு குறித்த பேச்சு ஆரம்பிக்கும் பொழுதே நான் அவரிடம் கேட்டது: “தொலைபேசியில் அழைத்து அனுமதி கேட்கிறீர்களே... ரஜினிகாந்திடம் இதே போல அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்புப் போட ஃபோனில்தான் அனுமதி கேட்பீர்களா?”

அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. ஃபோன் கட்டானது. சரி.. பேலன்ஸ் இல்லாமலிருந்திருக்கலாம். அது இல்லை என் விசனம். என்னைப் பார்த்து இப்படி போகிற போக்கில் கேட்டுவிட்டாரே என்பதுதான்.

அவர் செய்த அந்த அவமானத்தையும் மறந்து புத்தகம் போட அனுமதி அளித்தேன். வெளியீட்டு விழா நடத்தும் பேச்சு வந்தபோது நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான் ‘எந்தக் காரணம் கொண்டும் என் புத்தக வெளியீடு கலைஞருக்கோ, ரஜினிக்கோ தெரியக்கூடாது’ என்பதே அது. அவர்களுக்குத் தெரிந்தால் அனைத்து அலுவல்களையும் ஓரங்கட்டி விட்டு என்மீதும், என் எழுத்தின் மீதிருக்கும் அன்பிற்காக ஓடோடி வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.

புத்தகம் வெளியானது. பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள். அந்த நேரத்தில் செல்வேந்திரன் என் புத்தகத்தைக் காட்டமாக விமர்சித்து ஒரு பதிவு எழுதுகிறார். வெலவெலத்துப் போகிறேன் நான். ஒரு நாளின் 26 மணி நேரத்தையும் எழுத்துக்காக அர்ப்பணித்தவனுத்துக்கு இவர்கள் தரும் பரிசு.. கிண்டலும் கேலியுமா?

இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஊட்டி மசினகுடிக்கு அருகே தெரியும் ஒற்றையடிப்பாதை வழியே சரியாக நாற்பத்தி ஆறேகால் நிமிடம் நடந்தால் தெரியும் பழங்குடியினரிடம் என்னுடைய எழுத்தைப் பற்றிக் கேட்டால் சொல்வார்கள் ‘க்க்வா ச்சா ம்மா ச்சே க்கீ க்கூ’ என்று. எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த சந்ததி அவர்களுடையது. இன்றைக்கும் அவர்களுடைய ஒவ்வொரு முக்கியமான பிரச்சினைகளுக்கும் என்னை அழைக்காமல் விட்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் என் எழுத்தை மதிக்க நாதியில்லை. நாற்பத்தி எட்டாயிரம் ஓவாய்க்கு ஒரு கைக்கடிகாரம் அணிந்து கொண்டு அடுத்த வேளைச் சோற்றுக்குப் பிச்சை எடுக்கும் தலையெழுத்து தமிழ் எழுத்தாளனுக்கு மட்டுமே வாய்த்திருக்கும்.

இதையெல்லாம் இங்கே சொல்லக் காரணம்?

நேற்றைக்கு என் பதிப்பாளர் அழைத்தார். எனக்கும் அவருக்குமான உரையாடல்:




“சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது”

“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறதா?”

“ஆமாம் பரிசல்.. ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது. ஆனால் இதை நீங்கள் உங்கள் பதிவில் போடவேண்டாம்”

எனக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் கேட்டேன்.

“நான் எழுதிய டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் சிறுகதைத் தொகுப்பு ஸ்டால் எண் 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதை ஏன் எழுதவேண்டாம் என்கிறீர்கள்?”

“புத்தகக் கண்காட்சி 17ம் தேதி வரைக்கும்தான் நடக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் ஸ்டால் எண்: 448 மற்றும் 176ல் கிடைக்கிறது என்பதைப் பதிவில் எழுதினால் அசுர கதியில் அவை விற்றுத்தீரும் பட்சத்தில் உடனடியாக அடுத்தடுத்த பதிப்புகள் போட முடியாதே அதனால்தான் சொன்னேன்”

நான் ஃபோனை அணைத்துவிட்டேன். என்ன கொடுமை பாருங்கள்.

சிலி நாட்டின் MEKRE TOZXCO (இதை மெக்ரே டோழ்ஸ்கோ என்று உச்சரிப்பார்கள் சிலர். ஆனால் இவர் பெயரை கேம்சே ஓஸ்கோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று நான். இன்னொன்று அவரது அம்மா) புத்தகம் வெளியானபோது வெளியான அன்றே விற்றுத்தீர அந்நாட்டின் அதிபர் தலையிட்டு ஒரே நாளில் தலா 5 பிரதிகள் கொண்ட நாற்பது பதிப்புகளை அச்சிட்டுக் கொடுத்தாராம். இங்கேதான் இந்தநிலை!

இதைப்பற்றி மேலும் பேசி என் இதயத்துடிப்பை அதிகரித்துக் கொள்ள விருப்பமில்லை. இரவு ரெண்டு இட்லி வாங்க வழியில்லை. கிம் கி டுக்கின் திருட்டு டிவிடியை நண்பர் பார்க்கக் கூப்பிட்டிருக்கிறார். அவரது பி எம் டபிள்யூவுக்காக வெய்ட்டிங். பிறகு சந்திக்கிறேன்.


.

Monday, January 3, 2011

அவியல் 03.01.2011

கோவையில் டிச. 19 அன்று விஷணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அ.மாதவனுக்கு பரிசளித்த விழாவிற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே வெயிலான், கோபி ராமமூர்த்தி, நண்பர் சௌந்தருடன் சென்றேன். ஜெயமோகனும், மணிரத்னமும் ஒரு ஃப்ளாட்டில் இருக்க சுற்றிலும் வாசகர் கூட்டம். ராமசந்திர ஷர்மா எனும் இளைஞர் கர்நாடக சங்கீதத்தில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். அருகில் சென்றமர்ந்தோம்.

மணிரத்னத்தின் அருகில் அமர்ந்திருந்த நண்பர் சுரேஷிடம் சிலர் ‘நீங்களும் பாடுவீங்கள்ல.. பாடுங்களேன்’ என்று சொல்ல அவர் ‘ஐயையோ.. எனக்கு அவரை கர்நாடக சங்கீதமெல்லாம் பாட வராதுங்க.. சாதாரண சினிமாப்பாட்டுதான் தெரியும்’ என்று சொன்னார். உடனே நிஜமான ’திடுக்’கிடலோடு சிரித்துக் கொண்டே கேட்டார் மணிரத்னம். “என்னது? ‘சாதாரண’ சினிமாப்பாட்டா?’.

அறையிலிருந்தோர் சிரிப்பை நிறுத்த அரைநிமிடமானது.

அங்கே இருந்த இரண்டு மணி நேரத்தில் மணிரத்னம் இரண்டாவது முறை பேசியது நான் கேமராவின் லென்ஸை கழட்டாமல் ஃபோட்டோ எடுக்க முயல ‘லென்ஸ்’ என்று என்னைப் பார்த்துச் சொன்னது. யாரோ ‘ட்விட்டர் உங்களுக்காகத்தான் வந்திருக்கும் போல’ என்றபோதுகூட சிரிப்புதான். எல்லாரும் எழுதுவதும் சொல்வதும் நூறு சதம் நிஜம். அளவாகத்தான் பேசுகிறார். ஆனால் எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனிக்கிறார். ஜெயிக்க வேண்டுமென்றால் அவரை மாதிரி பேசாமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டதை, அடுத்த நாள் முதல் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் மாய்ந்து மாய்ந்து பேசியபடியே இருந்தேன்.

மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மொபைலில் அலுவலக நண்பனிடம் காண்பித்தேன். சிலிர்த்துப் போனவன், கொஞ்ச நேரத்தில் அருகில் வந்த மற்றொருவரிடம் சொன்னான். “ஹேய்.. இங்க பாரு.. நேத்து பாலசந்தரைப் போய்ப் பார்த்துட்டு வந்திருக்காரு..” நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

இதை இங்கு சொல்லக் காரணம் அவன் தந்தை பிரபல தியேட்டரொன்றில் ஆபரேட்டர் வேலையை மனமுவந்து செய்கிறவர்!

-----------------------------------------

ஜெ
னரல் மோட்டார் கம்பெனி, ஆசிய மார்க்கெட்டைக் கைப்பற்ற ஷாங்காயில் ஒரு ப்ரமோ-ஈவெண்ட் நடத்தியது. அதிகம் விற்பனையாகும் தன் கெடில்லாக் ப்ராண்ட் கார்களை வைத்து. V-Day என்றழைக்கப்பட்ட அந்த நாளின் நடந்த நிகழ்வின் வீடியோ பதிவு கீழே. தவறாமல் முழுமையாகப் பார்க்கவும். நான் மிக ரசிக்கும் வீடியோக்களில் ஒன்று..




என்ன.. பார்க்கும்போது ஒருமுறையேனும் இதயத்துடிப்பு அதிகரித்ததா இல்லையா? Great Na?

-------------------------------------------------

2011ல் என்ன சபதம் என்று ட்விட்டர்லும், சாட்டிலும் சில நண்பர்கள் கேட்கிறார்கள். சபதம் எடுப்பதில் அபத்தமே அதிகம் என்று நினைக்கும் கட்சி நான். எடுக்கும் சபதமெதுவும் பின்பற்ற முடிவதில்லை.

இந்த வருஷம் ஒரே விஷயம். வாங்கியவை, ஓசியில் வந்தவை என்று பல புத்தகங்கள் சேர்ந்து விட்டன. ஒரு மாதமாக எழுதாமல் இருந்த காலத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இந்த வருட முற்பாதிக்குள் இப்போது வரை படிக்காமல் வைத்திருக்கும் சில புத்தகங்களை படித்து முடிக்கப் போகிறேன். அதற்குப் பிறகுதான் புதிய புத்தகங்கள் வாங்கப்போகிறேன்... ‘வாங்கினால் அடிவிழும்’ என்று மிரட்டல் வீட்டில். பார்ப்போம்! இது சபதமெல்லாம் இல்லை சாமி!

டிக்‌ஷ்னரி வாங்கி முப்பது வருஷத்துக்கு மேலாகிவிட்டது.. அதையெல்லாம் படிச்சியா என்ன என்று கேட்காதீர்கள். ஐ’ம் பாவம்!

--------------------------------------------------

பாருங்களேன்.. போன பாராவை எழுதி முடித்தது நேற்று. இன்று காலை புத்தக ஸ்டால் வைத்திருக்கும் நண்பரிடமிருந்து ஃபோன். ‘வாலி 1000 வந்துடுச்சு’ ரெண்டு தொகுதி 440/-. எனக்கு இத்தொகுப்பு வெளியாகிறது என்ற செய்தி கேட்ட நாளிலிருந்தே வாங்க ஆசை. பல பாடல்கள் வாலியா, கண்ணதாசனா என்று குழம்பிக் கொண்டிருப்பேன். போலவே, வைரமுத்துவும் ஆயிரம் பாட்டுக்களைத் தொகுத்துவிட்டார்.

சபதமாவது மண்ணாங்கட்டியாவது, வாங்கித்தான் ஆகவேண்டும். போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் புத்தகக் கண்காட்சி வருகிறது திருப்பூரில்! நம்மெல்லாம் என்னைக்குச் சொல்பேச்சு கேட்டிருக்கோம்.. ஹூம்!

---------------------

Twitter Updates:

ன்னைப் பின் தொடரும் 2322 (Twitterல் 1058, Blogல் 882, BUZZல் 382) பேருக்கும் (கட்சி ஆரம்பிச்சுடலாம் போலிருக்கே) புத்தாண்டு வாழ்த்துகள்!

மொத்த க்ரிக்கெட் ராமாயணத்தில் ராமர் சச்சின்தான். ஆனால் டெஸ்ட்டில் மட்டும் லட்சுமணன்தான் ராமர்!


லாண்ட்க்ரூஸரில் ஒருத்தர். அருகில் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு ஒரு மினிடோர். எது விலையுயர்ந்த வண்டி என்பதில் குழப்பமேற்படுகிறது எனக்கு.


பாஸுடன் டின்னர் சாப்பிடுகையில், ஆனியன் ரோஸ்ட் ஆர்டர் செய்ய பயமாயிருக்கிறது. ரொம்பப் பணக்காரன் என்று நினைத்துவிடுவாரோ என்று..

காதலிக்கும்போதும் தூக்கம் வருவதில்லை. கல்யாணம் ஆனபிறகும் தூக்கம் வருவதில்லை. ஆனால் இரண்டுக்குமான காரணங்கள்தான் வேறு வேறு..

நாளை கார்த்திகையாம். தீபமேற்றமேண்டுமாம். கண் சிமிட்டாமல் இருக்கச் சொல்ல வேண்டும் தோழியை.

த்தன் டாடா DOn't COme for MOre-ன்னு ராசாகிட்ட சொன்னதுதான் DO CO MO -வோ?


வேலை தேடும் இளைஞர்களை சி.பி.ஐ-க்கு சேர்த்து விடுங்கள். அவ்வளவு ஆட்கள் தேவைப்படுமளவு ஊழல்கள் பெருகிவிட்டன. (அதுக்கும் லஞ்சம் கேட்பாங்களோ?)


நூல் விலையுயர்வைக் கண்டித்து நாளை உண்ணாவிரதம். நானும் கலந்து கொள்ளப்போகிறேன் என்றேன் ‘ லஞ்ச் என்ன செய்ய?’ என்கிறாள் மனைவி.

--------