
எந்தக் கலைஞனுக்கும் அவன் மனதுக்கு ஒத்த சக கலைஞனின் ஆரோக்யமான தோழமை கிடைப்பின் ரசிகர்கள் பாக்யவான்களாவார்கள். வைரமுத்து-இளையராஜா பிரிவை இன்றும் ஏமாற்றமாய்ப் பேசுகிற பலர் இருக்கிறார்கள். கலையுலகில் இந்த மாதிரிக் கூட்டணிகள் இருப்பது ஆரோக்யமான போக்கு. இளையராஜா-வைரமுத்துவிற்குப் பிறகு ரசிகர்கள் இந்த மாதிரி கூட்டணி எதிர்பார்த்துப் பேசியது மணிரத்னத்தில் இயக்கத்தில் பி சி ஸ்ரீராமின் காமிரா என்று நினைக்கிறேன். இப்போது பலரையும் அப்படிப் பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரையின் வரிகள் என்று சாதாரண ரசிகனினும் ஒருபடி நிலை தாண்டி, இவற்றையெல்லாம் கவனிக்கிற ரசிகர்கள் கூட்டத்திற்கு ராதாமோகன்-ப்ரகாஷ்ராஜ் கூட்டணி இதுவரை குறைவைத்ததில்லை. இந்த விமர்சனத்தை இவர்களிருவரில் யாரேனும், அல்லது அவர்களுக்கு நெருக்கமான எவரேனும் வாசிக்க நேர்ந்தால், யாரிடமேனும் சொல்லி, இருவரையும் கூட்டாக நிற்கவைத்து திருஷ்டிகழியுங்கள். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனினும் – நல்லவை சிலவற்றிக்கு நம்பிக்கை அவசியமில்லை.
த.செ.ஞானவேல். ஈஷா விழா சம்பந்தமாக ப்ரகாஷ்ராஜ் திருப்பூர் வந்திருந்தபோது, உடன் வந்திருந்தார். ஏற்கனவே நண்பர் செல்வேந்திரன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன் அவர் மீது. அப்போது சந்தித்தவரின் பேனா இப்படியெல்லாம் எழுதுமென்று எள்ளளவும் நினைக்கவில்லை. குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்றெல்லாம் இல்லை. இந்தப்படத்தின் வசனம் பல தலைமுறை அனுபவஸ்தன் எழுதியாற்போலே அவ்வளவு நேர்த்தி. ஒரு வார்த்தை அதிகமில்லை. ஒரு வார்த்தை குறைவில்லை. இது ஞானவேலுக்கு எத்தனையாவது படமென்ற புள்ளிவிவரமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நபரிலிருந்து, பால்கனியில் அமர்ந்திருக்கும் நபர் வரை அனைத்துத் தரப்பினரும் புரிந்து வியந்து கைதட்டக்கூடிய வசனங்கள். ஞானவேல்தான் படத்தின் நாயகன். நாகார்ஜூன், பிரகாஷ்ராஜெல்லாம் கதாபாத்திரங்கள்தான். ஞானவேல் – உங்களுக்கு என் அன்பு.
வசனங்களை எழுதியது ஞானவேல்... இந்த இடத்தில் இந்த மாதிரியான வசனம் வரவேண்டும் என்று சொல்லியிருப்பது ராதாமோகனாக இருக்கக் கூடும். அவரை நேரில் பார்த்தால் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, ‘நீங்க பக்கோடா சாப்பிடுங்க சார்’ என்றொரு வசனம் வருகிறது. ப்ரகாஷ்ராஜ் சொல்கிறார். நன்றாக திரையில் கவனியுங்கள். அது சொல்லப்பட்ட காட்சி, சொல்லப்பட்ட நேரம் என் கைகளைத் தட்டித் தட்டிச் சிவக்க வைத்துவிட்டது. போலவே பல வசனங்களும். எழுத வேண்டாமென்று விட்டுவிடுகிறேன்.
ஒரு கதையெழுதுகையில் ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். படத்திற்கும் அப்படித்தான். இந்தப் படத்தின் ஆரம்பம் நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், அவர்களின் மனநிலையும் படத்தின் முதல் சில நிமிடங்களில் காட்டி, நம்மையும் அவர்களுடன் அந்த விமானப்பயணத்தில் இணைக்கிறது ராதாமோகனின் திறமை.
ராதாமோகனுக்கு சராசரித் தமிழ்ப் படங்களின் மீதுள்ள கோபம் படம் நெடுகத் தெரிகிறது. இதற்காக அவர் திரையுலகில் சிலரின் எதிர்ப்பையும், முணுமுணுப்பையும் இந்நேரம் பெற்றிருக்கக் கூடும். ஆயினும் திரையரங்கில் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குகளின் போதும் ஒலிக்கிற கைதட்டல் ஒலி, ரசிகர்களும் ராதாமோகன் பக்கம்தான் என்று பறைசாற்றுகிறது. அவர்களும் இந்தக் க்ளிஷேப் படங்களிலிருந்து மீள நினைக்கிறார்கள்தான். ஆனாலும், சரியான நேரத்தில், க்ளைமாக்ஸில் ஒரு காட்சி மூலம் ஹீரோக்களின் கோவத்திலிருந்து தப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கையில் வழக்கமான தமிழ்ச்சினிமா விதிகளிலிருந்து ராதாமோகனும் தப்பமுடியாது என்று நினைத்துக் கொண்டேன்!
எத்தனை சீரியஸான படம்! ஏறக்குறைய உன்னைப் போல் ஒருவன். ஆனால் குறிப்பிட்ட இடைவேளைகளில் கைதட்டலும், வெடிச்சிரிப்புமாய்த்தான் இருக்கிறது தியேட்டரில். சில வசனங்கள் (குறிப்பாக ப்ருத்விராஜிடம், அவர் ரசிகனான சாம்ஸ் பேசும் காட்சிகள்) கைதட்டல் ஒலியினால் கேட்கவே இல்லை.
சின்னச் சின்னக் காட்சிகளில் கதை சொல்வது ராதாமோகனின் ஸ்பெஷாலிட்டி. இதிலும் அதைப் பல இடங்களில் செய்திருக்கிறார். எவையெவை என்று விவரிக்க மனம் மறுக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.
அந்த சர்ச் பெல். ரொம்பச் சின்ன விஷயம்தான். பாலசந்தர் அதில் விற்பன்னன். படத்திற்கு சம்பந்தமில்லாத எதையும் காட்ட மாட்டார். காட்டினால் எங்காவது அதைச் சம்பந்தப்படுத்தி அட போட வைப்பார். ராதாமோகனும் அவ்வாறே. சர்ச் பெல் கேட்டதும், அருகில் சர்ச் இருக்கிறது என்று பாதிரியார் ப்ரார்த்தனையில் ஈடுபடுவதோடு நின்று விடாமல், அதை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து இணைத்த விஷயத்தில் ராதாமோகன் என்னைக் கவர்கிறார். அதேபோல டி ஆர் பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் செய்யும் வேலைகளைத் துகிலுரித்ததிலும் இயக்குனர் ஜொலிக்கிறார்.
கதாபாத்திரங்கள்? ப்ரகாஷ்ராஜ், நாகார்ஜூன், எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், தலைவாசல் விஜய், ப்ருத்விராஜ், ப்ரம்மானந்தம், மோகன்ராம், படவா கோபி, மனோபாலா, சாம்ஸ் கோஷ்டிகளையெல்லாம் விடுங்கள். விமானத்தின் டாய்லெட்டை சுத்தப்படுத்துகிற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருக்கிறார். ஏர்ஹோஸ்டஸாக ஒரு பெண். காக்காவலிப்பு வருகிற ‘ஜூனியர் ஆர்டிஸ்ட்’ கேரக்டரில் ஒருவர் நடித்திருக்கிறார்.

இவர்களையெல்லாம் இப்படி நடிக்க வைக்க முடிவது இயக்குனரின் திறமையன்றி வேறென்ன. டீலா நோ டீலா ரிஷி, சனா கான் இவர்களெல்லாம் இப்படியும் நடிப்பார்களா என்ன? ராதாமோகன் – You are Rocking Man!
நான் டிக்கெட் முன்பதிவு செய்கையில், இருவர் ‘படம் எப்படின்னு தெரியலயே’ என்று யோசித்துக் கொண்டிருக்க.. ‘நம்பிப் போலாம்க’ என்றேன். இடைவேளையின்போது அவர்களிருவரும் என்னைப் பார்த்து நன்றி சொன்னதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. ‘செம ஜாலியாப் போவுதுங்க’ என்று ஒரு சீரியஸ் ஜானர் படம் பெயர் வாங்குவதென்பது நான் இதுவரை கேட்டிராதது!
ஒவ்வொரு படத்திலும் புதிய கருவை எடுத்துக் கொண்டு அதை செவ்வனே செதுக்கி கச்சிதமாக நமக்கு விருந்து வைப்பதில் ராதாமோகன் ஜெயித்துக் கொண்டே வருகிறார். வழக்கமான படங்கள் எத்தனை வந்தாலும் - பாடல்களின்றி, பறபறக்கும் சண்டைக் காட்சிகளின்றி, தொப்புள் தெரியும் நாட்டியமின்றி மாறுபட்டு படமெடுக்கும் இவரது படங்களை வெற்றி பெற வைப்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் அல்லது நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் கூட்டணி - வெற்றி, தோல்விகளைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. இந்நேரம் அடுத்த படைப்புக்கான தேடலில் இறங்கியிருப்பார் ராதாமோகன். ஆனால் இதுபோன்ற படமெடுப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமளிப்பது நம் கடமை என்று நம்புகிறேன் நான்.
என் சார்பாக படக்குழுவினருக்கு – பல நூறு பூங்கொத்துகள்.
.
23 comments:
கார்க்கியின் பதிவு பார்த்தவுடன் பரிசலும் போடுவார் பாரேன் என்று பட்சி சொல்லியது. உங்கள் ப்ளாக் பிரேக் ஐ பிரேக் செய்த விதத்திற்கு பயணத்திற்கு நன்றி. எழுதுங்களேன் நிறைய..
நல்லாத்தேன் அலசுறிங்க
ஒரு சீரிய ரசிகனின் ரசிப்பு தன்மை உங்களின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன..
தள்ளடாத பரிசல் நினைவுக்கு வந்தது..
ராதாமோகனின் பயணம் தேடி மக்கள் பயணம் போவது திண்ணம்....
அருமையான விமர்சனம். பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டியுள்ளது.
// எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.//
ரொம்ப நன்றி. இருந்தாலும் உங்கள் எழுத்தில் படித்திருந்தாலும் பரவாயில்லை என்று படம் பார்த்திருப்பேன்.
அருமையான விமர்சனம் பரிசல்.
ratha sarithiram gnavael vasanam thaan...
natraaj. :)))
sura & vettaikaaran padam maathiri vara mudiyuma? mokkai vijay mokkai vijay thaan
இதற்க்கு முன் பல விமர்சனங்களை படிக்க நேர்ந்த போது ஏறக்குறைய அணைத்து விமர்சனங்களிலும் 'spoilers' இருக்கும். அது துளி கூட இல்லாமல் இதை எழுதியதை மிக ரசித்தேன்.
அருமையான பகிர்வு! பார்க்கணும்!
நல்ல பகிர்வு.கண்டிப்பா பார்க்கணும்
அலசல் அருமை வாழ்த்துக்கள்..
கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..
நல்ல படத்துக்கு ராதாமோகன் என்றால். சரியான விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டு இந்த விமர்சனம். எல்லாவற்றையும் விமர்ச்சித்தாலும் கதையை சொல்லவே இல்லை. இது பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
இதே படத்திற்கு இன்னொரு விமர்சனம் படிக்க நேர்ந்தது .
நல்லவேளை உங்களைப் படித்ததால் அதற்கு பரிகாரம் செய்தது போல் ஆகி விட்டது!
நன்றி பரிசல்!...
விமர்சனம் அருமை
ராதாமோகனின் படங்கள் மீது எனக்கும்
பெரிய எதிர்ப்பார்ப்பு உண்டு. அதை இந்த படத்திலும் பிரகக்ஷ்ராஜ் ராதாமோகன் கூட்டணி நிறைவேற்றி உள்ளனர். சிறப்பானதொரு விமர்சனம்.
தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களில் ராதாமோகனும் ஒருவர் . அவர்
படங்களில் நகைச்சுவை காட்சிக்கு காட்சி இழையோடி கொண்டிருக்கும் . பிரகாஷ்ராஜை வைத்து
"அனந்தக்ருஷ்ணா" என்ற ஒரு படம் தான் ராதாமோகன் முதன்முதலில் இயக்கியது .ஆனால்
அந்தப்படம் வெளிவரவேயில்லை.பிறகு இருவருக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாக
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் " அழகிய தீயே" படத்தை இயக்கினார் .
ilayaraja vairamuthu comparison -right words in right place
நன்றி பரிசில். பாத்துட்டு வந்து பேசறேன்.
நன்றி KKji;
இனிதொடர்வது நான் பா.ராகவன் பதிவிற்கு இட்ட பின்னோட்டம்:
அன்புள்ள பா.ரா.
ஒரு உண்மையான நேர்மையான விமரிசனத்திற்கு எனது நன்றி
இதைப்போல அருமையான விமரிசனம் பரிசல்காரன் எழுதியுள்ளார்.அவருக்கும் நன்றி.
நேற்று என் தாயார், மனைவி, மகள், சகிதம் இந்த திரைப்படத்தை கண்டு ரசித்தேன்.
இம்மாதிரி குடும்பததோடு தைரியமாக பார்க்கக்கூடிய ஒரு படத்தை உருவாக்கிய ராதா மோகனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
மற்றபடி பிரசன்னா மற்றும் ஏனையோரின் விமரிசனம் துவேஷமும் பொய்யும் நிறைந்தது.
அவற்றை ஒதுக்கிவிடலாம்
படத்தில் சில குறைகள் இருக்கலாம் இருக்கிறது ஆனால் படமே குறை என்று எழுதினால் நாம் ஜன்ம ஜென்மத்திற்கு குருவி,போக்கிரி,தசாவதாரம், பாபா போன்ற காவியங்களை கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான்
நன்றி
cc: Parisal blog
முதலில் உங்களுக்கு சுத்திப் போட வேண்டும்.. அருமையான விமர்சனம்..
எத்தனை ஆழ்ந்து ரசித்திருப்பீர்கள் என்று புரிகிறது.
ஒத்த சிந்தனையை மற்றொருவர் இடத்தில் காணுகையில் ஒருவித மகிழ்ச்சி மனதில் எழும்..
அத்தகைய மகிழ்ச்சியை உங்கள் பதிவு தந்துவிட்டது..
நெகிழ்ந்தேன். பாராட்டுகள் பரிசல்காரரே. :)
\\என் சார்பாக படக்குழுவினருக்கு – பல நூறு பூங்கொத்துகள்.\\
புதுசா வாங்கிக் குடுப்பீங்களா. இல்லை நம்ம காதுல வெச்சதையே திருப்பிக் குடுப்பீங்களா:-)
\\என் சார்பாக படக்குழுவினருக்கு – பல நூறு பூங்கொத்துகள்.\\
புதுசா வாங்கிக் குடுப்பீங்களா. இல்லை நம்ம காதுல வெச்சதையே திருப்பிக் குடுப்பீங்களா:-)
Post a Comment