வலையுலகம் ஆரம்பித்த நாட்தொட்டு இருக்கிற தொடர்பதிவுகளில் இந்தப் பெயர்காரணம் தொடர்பதிவு முன்னிலை வகிக்கிறது. பன்னெண்டாயிரத்து நானூத்தி நாப்பேத்தேழாவது தடவையாக ஒரு பிரபல பதிவர் என்னை இந்தத் தொடர்ப்பதிவுக்கு அழைத்தது மட்டுமில்லாமல் ஃபோனில் கன்னா பின்னாவென்று திட்டு வேறு. ‘பெரிய ஆள்ன்னு நெனைப்பு அதுனாலதான் பதிவெழுதலயா’ என்று. ஐய.. அப்படியெல்லாம் இல்லீங் என்று அவரை சமாதானப்படுத்தி வேறு கதைகள் பேசி வைத்தாலும், அவர் அழைத்ததை உதாசினப்படுத்தியது (சி-யா சீ-யா?) தவறுதான்.நம்ம வாழ்க்கை வரலாறை பிச்சுப் பிச்சு அங்கங்கே ஏற்கனவே எழுதி இருக்கறவங்களையெல்லாம் ஏற்கனவே சோதிச்சுட்டதால - புதுசா மறுபடி எதுக்கு எழுதிட்டுன்னு அதையே இங்கன எடுத்துப் போட்டிருக்கேன்..
புட்ச்சுக்கங்க!
________________________
நானும், வலைப்பூவும் என் நண்பர்களும்
எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....
அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!
பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!
1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல போஸ்ட்டில் இருக்கிறேன்.
இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.
போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.
இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.
பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!
நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில். (கொஞ்சம் ஓவர்தான்ல? ஸாரி!)
அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!
ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!
புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!
எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!
என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!
.
25 comments:
பெயர்காரணம் பற்றி லேசாக கோடி காட்டிவிட்டு உங்களைப்பற்றி சொல்லி இருக்கீங்க. அதுவும் சுவாரசியமாகத்தன் இருக்கு.
ரொம்பவும் சுவாரசியமான பதிவு.
கூடவே, நிறையப் பேருக்கு தன் சுயத்தைத் தொலைக்க வைத்ததும் இந்த வலையுலகம்தான்.
Wow . . How to write like this . . . Very intersting
அந்த பயம் இருக்கட்டும்:-)
எழுதுகிற விஷயத்தில் மட்டுமல்ல எப்படி எழுதுகிறோம் என்பதிலும் அக்கறை எடுக்கிறீர்கள் பாருங்கள்.. அங்கே நிற்கிறீர்கள் (நான் நிச்சயம் அப்படி இல்லை. எழுதுகிற விஷயத்தில் மட்டுமே அக்கறை எடுக்கிறேன். ) உங்களை கண்டு வியக்கும் விஷயம் இது
`இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!//
மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
super.. nice
arumai.
// நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!//
?????????
அருமையான பதிவு நண்பரே
இது போன்ற பதிவை நாங்கள் எழுதினால் நிச்சயம் உங்கள் பெயரும் அதில் வரும்.
நாங்கள் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்ட போது, வாமு.கோமு. அவர்களின் நண்பர் மகேந்திரன் முதன்முதலில் உங்களைப்பற்றி கூறினார். உங்கள் வலைப்பூ பற்றிய குறிப்பு ஆனந்த விகடனில் வந்ததையும் குறிப்பிட்டார்.
ஆரம்ப நாட்களில், உங்களுக்கு லக்கி கிருஷ்ணா போல எங்களுக்கு நீங்கள்.
வலைப்பூ உருவாக்கம் பற்றி வாய்ப்பாடி குமார், முரளி ஆகியோரிடம் கேட்டுத்தெரிந்துக்கொண்டோம். திருப்பூர் வலைப்பதிவர்களை நம்பித்தான் ஆரம்பித்தோம். ஆரம்ப காலத்தில் தந்த ஆதரவுக்கு
அனைத்து திருப்பூர் பதிவர்களுக்கும் நன்றிகள். ஆனால் நீங்கள் மட்டும் இதுவரை வந்து பார்த்ததாக தெரியவில்லை. (மிரட்டல் கூட கொடுத்தும் கூட..)
ஒரு வேளை நீங்கள் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டது கூட இருக்கலாம்.
எப்படியாயினும் எங்களின் தொடக்கத்திற்கு உங்களுக்கும் பங்கு இருக்கிறது. நன்றி துரோணா...
//நிறையப் பேருக்கு தன் சுயத்தைத் தொலைக்க வைத்ததும் இந்த வலையுலகம்தான்.
//
//பெயர்காரணம் பற்றி லேசாக கோடி காட்டிவிட்டு உங்களைப்பற்றி சொல்லி இருக்கீங்க. //
ha..ha..ha..
ஒரு ட்ரைலர் பர்த்த மாதிரி இருக்கு
நல்ல பதிவு
//அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!//
தமிழக மக்களை மட்டுமாஆஆஆவ்வ்..
இருந்தாலும் ரைட்டு. நானும் பார்க்கறேன்.
ரொம்ப அருமை. எளிமை!
Nice!
//அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.
அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!//
ஓ...அப்படியா?
பெயர்க்காரணத்தை ரொம்பவும் சுவாரசியமா சொல்லியிருக்கீங்க அண்ணே சூப்பர் :)
உங்களைப் பற்றிய பகிர்வு முழுமையாக அருமை.
hi...hi.... from myside
http://thuklak.blogspot.com/2009/05/blog-post_13.html
சுவாரசியமான பதிவு.. உங்க கரையேத்துற வேலை தொடரட்டும் பாஸ்.
வலையுலகம் பல்வேறு சிந்தனைகளுடைய நண்பர்களை தந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்
உங்கள் சிறுகதைப் போட்டியைச் சாக்கிட்டுத் தான் எழுத வந்தேன்; நான் என் பெயர்க்காரணம் சொல்லி பதிவு எழுதும் வரை (ஏதோ கொஞ்சம்) வளர்ந்துள்ளேன். நன்றி!
பரிசல் பின்னணி புரிந்தது..
இயந்திரங்களுக்கு இடையிலும் தென்றல் வீசுவதால் தான் தமிழ் ஆர்ப்பறிக்கிறதோ??!!
நிறைய எழுதுங்க.. பின் தொடர்கிறோம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துடுவோமில்ல. :)
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
Post a Comment