Friday, April 29, 2011
மொக்கை மினிட்ஸ்...
“குமார்.. குமார்..”
நான் என்னவோ நடந்துச்சுடா மாதவான்னு நெனைச்சுட்டே, ஐ.பி.எல்-லை ம்யூட்ல போட்டுட்டு ‘என்ன மாமா..’ன்னுட்டே போனேன்.
“இங்க பாருங்கோ.. இத மாதிரி பொறுப்பில்லாம இருக்கறதுன்னா நீங்க வீடைக் காலி பண்ணிக்கலாம். என்ன ஆச்சுன்னு பாருங்கோ”ன்னார். மேல போய்ப் பார்த்தேன். அவர் வீட்டு வாசல் வரைக்கும் தண்ணி. அப்பவும் என் மரமண்டைக்கு புரியல.
“இன்னைக்கு ஏதாவது விசேஷமா மாமா? இந்நேரத்துக்கு வாசல் தெளிச்சிருக்கீங்க?”ன்னு கேட்டேன். அவருக்கு இன்னும் சுர்ர்ர்ர்ன்னு ஏறிடுச்சு.
“உங்க விளையாட்டை உங்க பொண்ணுங்களோட வெச்சுக்கோங்க..”
“கரெக்ட்தான் மாமா. உங்க பொண்ணுகள்கிட்ட வெச்சுட்டா தப்பாய்டுமே…”ன்னு மனசுல நெனைச்சுட்டே சுதாரிச்சுட்டேன். “ஓ.. மோட்டார் ஆஃப் பண்ணலியா”ன்னு தலைல தட்டிகிட்டே போய் ஆஃப் பண்ணீட்டேன். மறுபடி அவர்கிட்ட வந்து “ஸாரி மாமா.. இனிமே இப்படி நடக்காது”ன்னுட்டு போய்ட்டேன்.
ரெண்டு வாரம் முன்னாடி உமாவும் குட்டீஸும் ஊருக்குப் போயிருந்தப்போ, மோட்டார் போட்டேன். உமா ஆயிரம் வாட்டி, “போட்டீங்கன்னா 15 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுங்க. பாட்டு வாங்கிக்காதீங்க”ன்னு சொல்லிட்டுதான் போனாங்க. நானும் சுவிட்ச் ஆன் பண்ணீட்டு 15 நிமிஷம் என் மொபைல்ல அலாரம் செட் பண்ணீட்டு உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு பீரும், யுவன் ஷங்கர் ராஜாவும் என்னை எழுந்திருக்க விடாம பண்ணீட்டாங்க. கொஞ்ச நேரம் டியா டியா டோலு முடிஞ்சப்ப பாக்கறேன். 40 நிமிஷமாயிருந்தது. ஆஹா… விடமாட்டானே வெள்ளையத்தேவன்னு அவசர அவசரமா மோட்டரை ஆஃப் பண்ணீட்டு மாடிக்கு ஓடினேன்.
தண்ணி வழிஞ்சு மொட்டை மாடிபூரா பரவி, படிக்கட்டுக்கு பக்கத்துல வந்து நின்னுட்டிருந்தது. கொஞ்சம் இல்லைன்னா கீழ அப்டியே போயிருக்கும். அங்கயே நின்னுட்டு தண்ணி கீழ வராம தள்ளி விட்டுட்டு இருந்தேன். ஆறு மணியானா அவங்க எதுக்காவது மொட்டைமாடி வந்து, இதப் பார்த்தாலும் சண்டை போடுவாங்களேன்னு நெனைச்சுட்டிருந்தேன். ஒரு கட்டத்துல ‘போங்கடா.. என்னமோ ஆகட்டும்’ன்னு கீழ வந்துட்டேன்.
ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந்து நிறுத்தறாரு. மேல போகப் போறாரு.. ஒரு சண்டை இருக்குன்னு நான் நெனைக்கறப்ப, இடிச்சது இடி. அடிச்சது மின்னல். கொட்டிச்சு மழை!
தப்பிச்சேன்டா நான்!
--------------
வீட்ல எல்லாருமா உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கோம். தண்ணி குடிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஸ்ப்ரைட் பாட்டிலை மூடியைத் திறந்து வாய்க்குள்ள கொட்டினேன். நல்லெண்ணை!
அடச்சேன்னு ஆய்டுச்சு. அதுக்கப்பறம் தண்ணிக்குன்னு டப்பர்வேர் பாட்டில்ஸை ஸ்பெஷலா வாங்கினது தனி கதை.
இப்ப எல்லாரும் ஊருக்குப் போயிருந்தாங்கள்ல.. அப்பத்தான் கவனிச்சேன்.. எண்ணெய் பாட்டில்கள் வைக்கற ட்ரேல ஒவ்வொண்ணுலயும் பெரிசா வெள்ளை பேப்பர்ல குட்டீஸோட கையெழுத்துல ‘இது விளக்கெண்ணெய்’, இது நல்லெண்ணெய், ’இது தேங்காய் எண்ணெய்’-ன்னு எழுதப்பட்டிருந்தது.
அந்த பயம் இருக்கட்டும்!
-----------------
இதையெல்லாம் நீங்க செஞ்சிருக்கீங்களா?
என் ஃப்ரெண்டு ஒருத்தன். அவனோட மகன் பர்த்டே அன்னைக்கு அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப அவன் ஃபேமலியோட புறப்பட்டுட்டு இருந்தான். ‘கோவிலுக்காடா’ன்னு கேட்டேன்.
“இல்ல மச்சி”-ன்னவன் ஒரு நர்சிங் ஹோம் பேரைச் சொல்லி “அங்க போறேன். இவனுக்கு அந்த டாக்டர்தான் பிரசவம் பார்த்தாங்க. இவனோட ஒவ்வொரு பர்த்டேக்கும் அந்த டாக்டரைப் பார்த்துட்டு சாக்லெட் குடுத்துட்டு வருவோம்”ன்னான்.
அட! நல்லா இருக்கே.. நாமளும் பண்லாமேன்னு நெனைச்சேன். நெனைச்சதோட சரி.. இதுவரைக்கும் பண்ல!
----------------
ஹாலிவுட் நடிகர் ஒருத்தர். பேர் நினைவில இல்ல. தன்னோட ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவரோட அப்பா அம்மாவைக் கூப்ட்டு வாழ்த்துச் சொல்லுவாராம்.
‘அது ஏன் அப்டி’ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னது: “யோசிச்சுப் பாருங்க.. என்னோட மொத பிறந்த நாளைக்கு எனக்கு யாராவது வாழ்த்துச் சொன்னாங்களா? அவங்களுக்குத்தானே சொல்லிருப்பாங்க எல்லாரும்? அதுக்கப்பறம் அவங்களுக்கு யாரும் சொல்றதில்ல.. எல்லாரும் எனக்குத்தான் சொல்றாங்க. அதுனாலதான் அவங்களுக்கு நான் சொல்றேன்”
நல்லாருக்கு இல்ல?.
------------------------
அந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும் முண்டியடிச்சுட்டுதான் நிப்பாங்க. வரிசையா நின்னாலும் தள்ளு முள்ளு பண்ணீட்டுதான் நிப்பாங்க. அதுவும் பலபேரு நார்த் இண்டியாலேர்ந்து வந்து வேலை பார்க்கறவங்க. எவ்ளோ சொன்னாலும் கேட்கறதில்ல. பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர். அவங்க க்யூவா நிக்கற இடத்துக்கு வலதுபக்கம் அருகாமைல சுவரு இருந்துச்சு. அதுல புதுசா வர்ற ஹிந்திப்படம் பத்தின நியூஸு, ஸ்டார்ஸோட படங்கள், க்ரிக்கெட் நியூஸ்ன்னு ஒட்டி வெச்சாரு. அதை ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மாத்தினாரு.
செம மாற்றம். க்யூவுல நிக்கறவங்களை ‘முன்னாடி தள்ளி நில்லு, க்யூ நகர்ந்துடுச்சு பாரு’ன்னு சொல்ற அளவுக்கு நிக்கறப்ப எல்லாரும் வலதுபக்கமா கழுத்தைச் சாச்சு படிச்சுட்டே இருந்தாங்க.
நல்லாருக்குல்ல?
-------------------
Thursday, April 28, 2011
அவியல் 28.04.2011
Friday, April 15, 2011
அவியல் 15.04.2011
இந்த விஷயத்தை ஏற்கனவே அவியலில் எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை. எழுதி, நீங்கள் படித்திருந்தால் டக்கென்று ஸ்க்ரோல் செய்து அடுத்த பத்திக்குப் போகலாம். (!!!)
ஒருமுறை என் பைக்கை ட்ராஃபிக் போலீஸ் பிடித்துவிட்டார்கள். நான் தவறு செய்திருந்தேன். ஆகவே வண்டியை ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு அடுத்த நாள் எடுக்கச் சென்றேன். தீபாவளி நேரம். கோர்ட்டுக்கு அலையவிட முயற்சி செய்தார்கள். அவரை இவரைப் பிடித்து 2000 ரூ தருவது என்று பேரம் பேசி முடிவாகி கொடுக்கும்போது ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தேன்.
‘எதுக்கு தம்பி 2001 தர்றீங்க?’ என்றார் அவர்.
‘அது என் வண்டி நம்பர். நீங்க மறக்காம இருக்க’ என்றேன் நான்.
------------------------
இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. யானை தும்பிக்கை வைக்கும்போது பயப்படுகிற குழந்தை, யானையை டிவியில் பார்த்தால்கூட தன்னிச்சையாக நடுங்குமல்லவா.. அப்படி ஒவ்வொரு முறை இந்தப் பட ட்ரெய்லர் டிவியில் போடப்படும்போதும் கை நடுங்க, வீட்டில் எல்லாருமே ரிமோட்டை அவசர கதியில் தேடி ம்யூட் போடவும், சேனல் மாற்றவும் செய்துகொண்டிருக்கிறோம். எந்தவித சுவாரஸ்யத்துக்காகவும் இப்படி எழுதவில்லை. சத்தியமான உண்மை. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?)
ஒருநாள் சாட்டில் வந்த ஃப்ரெண்ட் ஒருவர், இன்றைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போகிறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல். சரி பார்த்துவிட்டு என் விமர்சனம் சரியா என்று உண்மையாகச் சொல்லுங்கள் என்றேன். இரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் இல்லை.
படம் பார்க்குமுன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்திருந்தபோது சாட்டில் வந்தார். 30 நிமிடங்கள் பார்த்துவிட்டு மூடிவிட்டாராம் லேப்டாப்பை. (டவுன்லோடிப் பார்த்திருக்கிறார். அதற்கும்கூட தகுதியில்லாத படம்) HORRIBLE என்றார் ஒரே வார்த்தையில். குசேலன் ,குருவியைக் கூட மன்னிக்கலாம் என்றார்.
இந்திய உலகக் கோப்பை வெற்றி, அன்னா ஹசாரே, ஓட்டளிப்பது ஜனநாயகக் கடமை - இதிலெல்லாம் காட்டிய அதே ஒற்றுமையை தமிழர்கள் மாப்பிள்ளையை எதிர்ப்பதிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் சந்தித்ததில் ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை.
ரஜினியைப் பார்த்து கமல் கற்றுக் கொள்ளவேண்டும். கமலின் மகளை கைபிடிக்கப் போகிறவரிடம் கமல் வாங்கும் வாக்குறுதி ‘என் எந்தப் படத்தையும் ரீமேக்கக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும்.
------------------------------
திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.
அடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது!)
-----------------------------
கடவுள் என்றொருவர் இருக்கிறாரா என்று கேள்வி பலமுறை நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு வரும். பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் மகள் இறப்பைக் கேள்விப்பட்டதும் இந்தக் கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு சித்ரா தம்பதியினருக்கு ஜனித்த அந்தக் குழந்தை, நேற்று UAEல் ஒரு நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாம்.
கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் பாடவேண்டுமென்றால் கூட வெட்கப்படுபவர் சித்ரா. அவ்வளவு அமைதியான சுபாவம் கொண்டவருக்கு இப்படி ஒரு நிகழ்வா என்று வருத்தமாகவே இருக்கிறது.
:-(
குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
--------------
சில மாதங்களுக்கு முன் ஒரு வெப்சைட் நிறுவனம் தன் வெப்சைட்டின் PROMOவுக்காக தோனியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் தோனியின் ஒரு புத்தகம் வெளியிட்டது. ஒரு புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். லட்ச / கோடிக் கணக்கில் விற்பனையாகும் என்பது திட்டம். விற்றதோ ஆயிரத்துச் சொச்சம் மட்டுமே.
பிறகு காரணத்தை அலசியபோது அவர்களுக்கு கிடைத்த விடை: அணியின் வெற்றியை தோனி என்கிற தனிமனிதனின் சாதனையாக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அணியின் வெற்றியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று புரிந்ததாம். தனிப்பட்ட சாதனையாளர்களின் சுயசரிதையைத்தான் மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.
--------------------
கறை நல்லது என்பதுபோல கரண்ட் கட் நல்லது என்று சொல்ல வைத்து விட்டார்கள் ஒரு சில நாட்களுக்கு முன். மின்சாரத்தைத் துண்டித்து, அந்த நேரத்தில் வீடு வீடாக பணப்பட்டுவாடா நடந்ததாம். எங்கள் பகுதியில் இந்தச் செய்தி வேகமாகப் பரவ கரண்ட் கட்டானபோது பல வீடுகளும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கும் ஒரு கவர் கிடைக்குமென எதிர்பார்த்தேன். கிடைக்காத ஆத்திரத்தில் இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தேன்!
Jokes apart, சில ஊர்களில் கவர் கொடுக்க வந்த கட்சியினரை தேர்தல் கமிஷனிடம் மாட்டிவிட்ட மாற்றுக் கட்சியினர் மீது மக்களே கோவமாக இருந்ததைக் காணமுடிந்ததாம். ‘நமக்கு கொடுக்க வர்றதை தடுக்கறான் பாரு’ என்று காசு கொடுக்காமலே தங்கள் கட்சிக்கு ஓட்டு வாங்கிவிட்டார்களாம் கவரோடு வந்தவர்கள். கில்லாடிகள்தான்! எனக்குத் தெரிந்து ஓர் ஊரில் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு பணப் பட்டுவாடா நடந்ததாம்.
இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நடத்திக் காட்டிய தேர்தல் கமிஷன் பாவம்தான். படித்தவர்களின் மாநிலமாகப் போற்றப்படும் கேரளாவைவிட அதிக சதவிகித வாக்குப் பதிவானதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
----------------
.
Wednesday, April 13, 2011
உங்கள் பொன்னான வாக்கை...
Sunday, April 10, 2011
மாப்பிள்ளை - கொலைவெறி..
அங்க கெடக்கறது நான். சுத்தியும் இருக்கறது படத்தோட டைரக்டர், நடிகர்கள், முக்கியமா விவேக்ன்னு கற்பனை பண்ணிக்கோங்க.
ரெண்டு மணிநேரம்.. தெளியத் தெளிய அடிச்சுட்டாங்க... வீட்ல கூட்டீட்டுப் போனதுக்கு, பொண்டாட்டி மகளிர் போலீஸ்ல போய் வன்கொடுமை சட்டத்துல புகார் குடுக்கவான்னு கேட்கறாங்க. குழந்தைங்க ரெண்டு மணிநேரமா என்கிட்ட பேசல.
ஆடுகளம் நல்லாருந்துச்சுன்னா அவருக்கு திருஷ்டி கழியணும்தான். அதுக்காக இப்படியா?
விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். சேர்த்து வெச்ச பேரையெல்லாம் கெடுத்துக்க வேணாம். அவரு மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அநியாயம்.
இந்தப் படத்தை எடுத்தவங்களையும், நடிச்சவங்களையும்கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இந்தப் படத்துக்கு ப்ரிவ்யூன்னு ஒண்ணு போட்டிருப்பாங்கதானே.. அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல? அத நம்பித்தானே இவங்க படத்தை வெளியிடறாங்க? அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.
கொலைமுயற்சில இவங்க மேல கேஸ்போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.
படுபாவிங்க...
.
Thursday, April 7, 2011
‘டீ வேணுமா’ன்னு கேட்டதால் தான் சச்சின் அவுட்!
Tuesday, April 5, 2011
இரண்டு லியோ டால்ஸ்டாய் கதைகள்
Sunday, April 3, 2011
What a Moment!!!
சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!
------------------
அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.