திருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு
ஒன்றில் பேச்சாளர் திரு. பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன - லியோ டால்ஸ்டாய் எழுதிய - இரண்டு கதைகள் இரண்டினை அடுத்த பதிவில் தருகிறேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்.
இதோ அவை:
--------------------
1.
ஒரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி ஒரு சூழல் வருகிறது. பறவைக்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.
வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது. (இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்ய விஷயம். பாரதி கிருஷ்ணகுமார் இந்தக்கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது மூன்றாவது வரிசையில் ஒருவர் தன் செல்ஃபோனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கு அது இடைஞ்சலாகப் பட்டது. மேடையில் பேசிக் கொண்டிருந்த பாரதி கிருஷ்ணகுமாருக்கும் இது உறுத்தவே.. இந்த நீ செய்வது நியாயமா என்ற வார்த்தையை இரண்டு முறை உரக்க அந்த செல்ஃபோன் ஆசாமியைப் பார்த்து கேட்க அவர் டக்கென்று செல்’லை அணைத்துவிட்டார்.)
பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.
போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!
மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.
“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.
வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.
இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.
சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!
--------------------------
2.
ஒரு வீட்டில் எஜமானர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்கிறார். காவலுக்கு நிற்கிறது கம்பீரமான நாய் ஒன்று.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு திருடன் அந்த வீட்டு வாசலுக்கு வருகிறான். நாய் இருப்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறான். நின்று நோட்டம் பார்க்கையில், நாயும் அவனைப் பார்க்கிறது. குரைக்காமல்.
குரைக்காத நாய் கடிக்காது என்றவனுக்கு யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஆக, இந்த நாய் விவரமானது என்றுணர்கிறான். கையோடு கொண்டு வந்த நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித் துண்டு ஒன்றை நடுவில் போடுகிறான்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதன், எதையோ போட்டதுமே சுதாரிக்கிறது நாய். மெதுவாக அந்தப் பொருளை நுகர்கிறது.
அவ்வளவுதான். அடுத்த நொடி அந்த மனிதன் மீது விழுந்து கடித்துக் குதறுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாத அந்தத் திருடன் நிலைகுலைந்து போகிறான். ஒருவாறு கடிபட்டவாறே தடுத்து அந்த நாயைப் பார்த்து வினவுகிறான்:
‘ஏன் நாயே.. நான் உன்னைப் பார்த்த போதே குரைத்து என்னை
எச்சரித்திருந்தால் நான் ஓடிப் போயிருக்க மாட்டேனா..’ என்கிறான்.
நாய் சொல்கிறது: ‘நான் உன்னைப் பார்த்து குரைக்காததன் காரணம் நீ சாதாரண மனிதனா அல்லது திருடனா தெரியாததால்தான். அதனால்தான் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போது என்னைக் கவர நீ ஓர் இறைச்சித் துண்டைப் போட்டாயோ.. அப்போதே நீ கயவனென்றறிந்தேன். ஆகவேதான் உன்னைத் துரத்தினேன்’ என்று சொன்னதாம்!
ஆக ‘தன்னை மயக்க இறைச்சித் துண்டைப் போட்டாலும் சுதாரித்துக் கொண்ட நாயைப் போல நீங்கள் மாற வேண்டும்’ என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.
.
இன்றைய அரசியலோடு இந்த இரண்டு கதைகளையும் பொருத்திப் பார்த்து பொருத்தமான இடங்களிலெல்லாம் கைதட்டி பேச்சாளரை திக்குமுக்காட வைத்துவிட்டனர் மக்கள்.
.
9 comments:
இப்படிப்பட்ட அரசியல்வியாதிகள் இருக்கும்பரை எந்த காலத்திற்கும் பொருந்துகிற மாதிரிதான் கதை இருக்கு. பகிர்ந்தமைக்கு நன்றிங்ண்ணா. :)
நல்ல பதிவு திரு கிருஷ்ணகுமார்.
வாழ்த்துக்கள்.
என்றோ எழுதப்பட்ட வௌவால் மற்றும் நாய் கதைகள் இன்றைய கால கட்டத்திற்கும் குறிப்பாக தமிழகத்திற்கு பொருத்தமாக இருப்பது கனகச்சிதம்.
நல்ல கதைகள்!
ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'ன்னு என்ன வேணும்னாலும் செய்வாங்க!!
//ஆக ‘தன்னை மயக்க இறைச்சித் துண்டைப் போட்டாலும் சுதாரித்துக் கொண்ட நாயைப் போல நீங்கள் மாற வேண்டும்’ என்றார் பாரதி கிருஷ்ணகுமார். //
Chekc this out.
பொருத்த்மான நேரத்தில் பொருத்தமான அருமையான கதை.
தேர்வுக்குப் பாராடுக்கள்.
பஞ்சதந்திரக் கதைகள் மாதிரி இருக்கே பாஸ்... :-)
டால்ஸ்டாயா?
இரண்டு கதைகளுமே நல்லா புத்தி சொல்றாப்ல இருக்கு கிருஷ்ணா.
நாய் கதை செம. ரெம்ப பிடிச்சது ;)
Post a Comment