Monday, July 25, 2011

அப்பாவின் சைக்கிள்

ப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.

அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.

ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)







நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.


ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.

நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.

ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.

என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை.


.

23 comments:

சுசி said...

என் அப்பாவும் இப்டித்தான். அவர் பைக் மேல உயிர்.

உங்க அப்பாவை விட ரெண்டு விஷயத்தில மாறுபடறார்.
1. கழுவி துடைக்கிறது அண்ணன்கள். 2. அம்மாவை அதிகமா கூட்டிப் போயிருக்கார்.

நினைவுகளை மலர வச்ச எழுத்துக்கு நன்றி பரிசல்.

VISA said...

Nice post Parisal.

Vijayashankar said...

அப்பா - விழுந்தால் அடிபடும் என்று நினைத்து - தன குடும்பத்தினரை ஒதுக்கினாரோ (அன்போடு?)

சிறு வயதில் அப்பா தோளில் தூக்கி சென்றதுக்கு ஈடாகுமா சைக்கிள் கேரியர்?

எங்க சொந்தக்கார அண்ணன் ஒருவர் (மஸ்கட்டில் இருக்கார்) என்னை முன்னால் ( ஹேண்டில் பார் அருகில் ) வைத்து தான் எங்கும் அழைத்து செல்வார். ஒரு முறை எட்டு கிலோமீட்டர் - ஒண்டிபுதூர் முதல் வட கோவை சென்றல் வரை சென்று வந்தோம் டார்சான் படம் பார்க்க. அதி அற்புத அனுபவம்...

விக்னேஷ்வரி said...

அப்பா சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்து காலை முன் கம்பியிலும், கையை அப்பாவின் இடுப்பைச் சுற்றியும் கட்டி அவர் முதுகில் முகம் புதைத்துப் போன நாட்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் கிருஷ்ணா.. பசுமையான நினைவுகள்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

நன்றி.

அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com

அமுதா கிருஷ்ணா said...

ஆகா..சைக்கிளில் போன அப்பாக்கள்..
இப்ப நிறைய குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு அனுபவம்.நான்,என் இரண்டு தம்பிகள் என மூவரும் என் அப்பாவுடன் சைக்கிளில் போய் இருக்கிறோம்.

kumar said...

வேறொன்றுமில்லை.உங்கள் அம்மா மீது உங்கள் அப்பாவுக்கு அளவு கடந்த அன்பு.பின்னே,எதிரே
வரும் வண்டியை பார்த்து ஓரம் கட்டுபவர் அப்படி தானே இருக்க முடியும்.உங்கள் அப்பாவுக்கு
நெகடிவ் தாட்ஸ் இருந்திருக்கலாம்.நீங்கள் அதை பாசிட்டிவாக பார்க்கலாமே!

பரிசல்காரன் said...

@அனைவருக்கும்


அப்பா அப்படி ஒன்றும் ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. பொண்டாட்டி என்ன சொன்னாலும் கேட்டுட்டு உட்கார்றதுக்கு அவர்தான் எனக்கு உதாரணபுருஷன். :))

கூட்டீட்டு போகலை அவ்ளோதான். நோ பெண்ணடிமைத்தனம், எக்ஸட்ரா எக்ஸட்ரா...

:))

kumar said...

அனைவருக்கும் என்று பொதுவாக சொல்லியது வருத்தமாய் இருக்கிறது.
நான் வேறு மாதிரி அல்லவா எதிர்வினை செய்திருந்தேன்.

kunthavai said...

மறந்து போன நினைவுகளை மீண்டும் நினைவு கொள்ள வைத்தது உங்கள் எழுத்து.
சைக்கிள் போய், இருசக்கர வாகனம் வந்து, இப்போது நான்கு சக்கர வாகனம் கூட வந்துவிட்ட காலத்தில்,நாம் இழந்துவிட்டதை நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
நன்றி.
- அனு.

stalin said...
This comment has been removed by the author.
சேலம் தேவா said...

சைக்கிள் கற்றுக்கொள்ளப்போய் விழுந்த விழுப்புண்கள் ஞாபகத்துக்கு வந்தது.

ponsiva said...

ஒரு தேர்ந்த சிறுகதை போல் இருக்கின்றது உங்கள் பதிவு ....
படித்துவிட்டு பத்து நிமிடம் யோசித்துக்கொண்டே இருந்தேன் ...
நல்ல பதிவு .. வாழ்த்துக்கள் ..

Lusty Leo said...

பரிசல், சைக்கிள் பற்றிய எனது பதிவு - http://lustyleo.blogspot.com/2011/04/blog-post_27.html

நேரமிருக்கும்போது படித்துவிட்டு சொல்லுங்கள்.

நிலாமதி said...

விடாபிடியாய் நான் சைக்கிள் பழகிய ஞாபகம் வந்துபோனது. பள்ளிக்கும் அதில்சென்றேன்.
இடபெயர்வில் சில சுமைகளை தாங்கி வந்ததும் அதுவே. உற்ற தோழன்.

கொங்கு நாடோடி said...

நல்ல பதிவு, தளி ரோடு, குட்டை மேடு, ராஜேந்திர ஸ்டோர், ஜம் ஜம் மெடிகல்ஸ் எல்லாம் என் கண் முன்னே வந்து சென்றன...

பழைய தாஜ் ஹோட்டல் முன்பு சைக்கிளில் வீர தழும்பு வாங்கியது, கல்பனா கிரௌண்ட்கு சைக்கிளில் கிரிக்கெட் பட, ச்டும்ப்ஸ் எல்லாம் கட்டிக்கொண்டு போனது நினைவுக்கு வருகிறது.

நிங்களும் உடுமலை என்பது மேலும் மகிழ்ச்சியை தருகிறது...

Vettipullai said...

அழகான பதிவுங்க.. என்னுடைய அப்பாவை நினைக்க வைத்தீர்கள்..

Mshree said...

என் அப்பாவும் ஒரு சைக்கிள் பிரியர். அடம் பிடித்து ஒரு TVS 50 வாங்க வைத்த பின்பும் சைக்கிளில் தான் அதிகம் சுற்றுவார்.அவர் அடையாளங்களில் ஒன்றாகவே அது மாறிப் போனது!

Mshree said...

என் அப்பாவும் ஒரு சைக்கிள் பிரியர். அடம் பிடித்து ஒரு TVS 50 வாங்க வைத்த பின்பும் சைக்கிளில் தான் அதிகம் சுற்றுவார்.அவர் அடையாளங்களில் ஒன்றாகவே அது மாறிப் போனது!

Unknown said...

என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான எழுத்துல இதுக்கு முதல் இடம் பரிசல் .. அருமையோ அருமை

Unknown said...

என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான எழுத்துல இதுக்கு முதல் இடம் பரிசல் .. அருமையோ அருமை

Unknown said...

என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான எழுத்துல இதுக்கு முதல் இடம் பரிசல் .. அருமையோ அருமை