Tuesday, December 20, 2011

சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா

ரு வாரம் முன்பு அழைத்தார் ஒரு நண்பர்:

“பரிசல்.. உங்க ப்ளாக் ஐடி என்ன?”

“parisalkaaran.com” என்றேன்.

“அது வெறும் சவால் போட்டிக்குன்னு தாரை வார்த்துட்டீங்கன்னு நெனைக்கறேன். எந்த வெப்ல எழுதறீங்க இப்ப”

என் வலைப்பக்கத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. ஒரே சவால் போட்டி அறிவிப்பு, விளக்கம், முடிவுகள் என்று.. அந்த வகையில் இன்றைக்கும் அதேதான். :)

18.12.2011 ஞாயிறு அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலசில் சவால் சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா யுடான்ஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற வருடம் போலவே கூரியரில் அனுப்ப உத்தேசித்திருந்த வேளையில் யுடான்ஸ் அதிபர்கள் கேபிள் சங்கரும், ஜோசப் பால்ராஜும் இதை ஒரு விழா போல ஏற்பாடு செய்து அளிக்கலாம் என்று முன்வந்தனர். அதன்படி சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் எளிதே நடத்த திட்டமிட்டிருந்தோம்.

விழாவுக்கு இயக்குனர்கள் நவீன், பத்ரி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து அசத்தினார் கேபிள். அறுபதுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

இயக்குனர் பத்ரி பதிவர்களின் விமர்சனங்கள் – கதைகள் திரைத்துறையால் கவனிக்கப்படுவதாகச் சொன்னார். இயக்குனர் நவீன், தான் நிகழ்ச்சி நடந்த டிஸ்கவரி புக் பேலஸை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை தன் பேச்சில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் அடுத்த படத்தில் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆறு பெண் கவிதாயினிகளுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைத் தருவதாய் சொன்னபோது அரங்கம் கைதட்டல்களால் நிறைந்தது.

இரண்டு வருடங்களிலும் சவால் சிறுகதைப் போட்டிக்கு நடுவராய் இருந்த அப்துல்லா, போட்டி மற்றும் சிறுகதைகளைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்.

விழாவில் என்னால் மறக்க முடியாத இரண்டு அம்சங்கள். நான் மிகவும் மதிக்கும் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தர்ராஜன் இருவரின் வருகையும் வாழ்த்துகளும்.

ரமேஷ் வைத்யா நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே வந்திருந்து, இறுதிவரை அமர்ந்து சிறப்பித்தார். பதிவர்கள் திடீரென ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததை ஆதாரத்தோடு சொன்னார். முடிவில் ‘இந்தப் போட்டியை நடத்திய என் தம்பிகளுக்கு ஆசிகள்’ என்றது நெகிழ்ச்சி.

அடுத்தவர் எழுத்தாளர் ராஜசுந்தர்ராஜன். நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நாடோடித்தடம் (தமிழினி வெளியீடு) புத்தகத்தின் ஆசிரியர். படிக்க ஆரம்பித்த்தில் இருந்து பலபேரிடம் அந்தப் புத்தக்கத்தில் அவர் பயன்படுத்தியுள்ள தமிழ் குறித்துப் பேசிவருகிறேன். அத்தனை தமிழ் வார்த்தைகள். சென்னையில் அவரை சந்திக்க முடியுமா என்றெல்லாம் கேட்டிருந்தேன். அவர் நிகழ்ச்சிக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் நிகழ்ச்சியை வாழ்த்தியும், எழுதுவது குறித்தும் ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியபோது ‘நான் எழுதிய எல்லா வார்த்தைகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன’ என்றார். இருந்தாலும் அவற்றைப் பொருந்தப் பல இடங்களில் பயன்படுத்தியதொரு புத்தகத்தைப் படித்த மகிழ்வில் அவருக்கு நன்றி சொன்னேன்.

டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் அவர்களுக்கு ஸ்பெஷலாக நன்றிகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இடம் தந்ததோடு, வெற்றியாளர்களுக்கு ரூ.1220 மதிப்பிலான புத்தகங்களை அவர் சார்பில் பரிசாக அளித்தார். (அந்த சுக்குகாபி அருமை நண்பரே!)

இறுதியில் நானும் ஆதியும் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.


ரூ.3000 மதிப்பிலான புத்தகங்கள் என்று ஆரம்பித்து நடுவரான அனுஜன்யா, அப்துல்லா ஆகிய பலரின் பங்களிப்பின் காரணமாக ரூ.7000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் பெற்றுக் கொண்டவர்களுக்கு போக, மீதிப் பேருக்கு கூரியரில் அனுப்பப்பட்டது. விழாவும், போட்டியும் சிறப்புற நடைபெற நடுவர்கள், யுடான்ஸ், டிஸ்கவரி, இயக்குனர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.


விழா குறித்த பதிவு, படங்களுடன் ஆதியில் வலையில் பதிவேற்றப்படும். காத்திருங்கள்.

.

9 comments:

சுசி said...

அசத்தலான முயற்சிக்கும், அதில் அடைந்த வெற்றிக்கும் வாழ்த்துகள் பரிசல் :)

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!

CS. Mohan Kumar said...

மகிழ்ச்சி. யாருமே விழா முடிந்த பிறகு அது பத்தி எந்த பதிவும் போடலையே என நினைத்தேன். நீங்களாவது போட்டீர்களே நன்றி

M.G.ரவிக்குமார்™..., said...

விழாவைத் தொகுத்தளித்த நம்ம கார்க்கி பத்தி ஒண்ணுமே சொல்லலையே?

அன்பேசிவம் said...

மோகன் ஜீ.. ரிப்பீட்டு...:-)

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

வரிடம் பேசியபோது ‘நான் எழுதிய எல்லா வார்த்தைகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன’ என்றார். இருந்தாலும் அவற்றைப் பொருந்தப் பல இடங்களில் பயன்படுத்தியதொரு புத்தகத்தைப் படித்த மகிழ்வில் அவருக்கு நன்றி சொன்னேன்.


அருமையான பகிர்வு..

விக்னேஷ்வரி said...

நிஜமாவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க முயற்சிக்குக் கிடைச்ச வெற்றி. மனமார்ந்த வாழ்த்துகள் க்ரிஷ்.

ஜேகே said...

பரிசில், பரிசில்கள் கிடைத்தது, மிக்க நன்றி, இது பற்று பதிவிட்டும் இருக்கிறேன். ஈமெயில் கூட அனுப்பினேன். பார்த்தீர்களா?

http://www.padalay.com/2012/02/blog-post_05.html