Monday, February 13, 2012

விகடனுக்கு நன்றி!


ந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் உலகத்திலேயே மிகச் சிறந்த எழுத்தாளுமை மிக்க, அறிவான, அழகான, நல்ல வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘வலையோசை’ என்கிற பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதில் கொங்கு மண்டல இணைப்பில், நான் மேற்கூறிய தகுதிகளோடிருக்கும் வலைப்பதிவாளர்கள் யாரும் இல்லாததால், என் வலைப்பூ பற்றிய செய்தி வந்திருக்கிறது.

இதைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறுகையில், ‘வலைப்பூ பற்றிய அறிமுகம் என்கிற வகையில் இது மிகச் சிறந்த அங்கீகாரம். வாழ்த்துகள்’ என்றார்.

கமலஹாசனுடன் பேசும் போது ‘உன் மூஞ்சிய எல்லாம் அட்டைப்படத்துல போட்டுட்டாங்களா! அட! நல்லாரு’ என்றார். பவர் ஸ்டார் சீனிவாசன் (அவர் வீட்டு மாடிப்படியில்) ஒரு படி மேலே போய் 'அடங்கொண்ணியா.. நடுப்பக்கத்துல ரெண்டு பக்கமா! இதே ப்ளேபாய்ல நடுப்பக்கம் வந்திருந்தாகூட அஞ்சோ பத்தோ (கோடியாம்) பார்த்திருக்கலாம்.. ஹும்.. ஒனக்கெல்லாம் நேரம்டா’ என்று வாழ்த்தி வசை பாடினார்.













எழுத்தாளரும், சிந்தனாவாதியுமான சாருநிவேதிதா ‘நோ கமெண்ட்ஸ். நீங்க வலைல எழுதறதெல்லாம் குப்பை. நான் அதையெல்லாம் படிக்கறதே இல்ல. அவியல்னு ஒரு குப்பை எழுதறீங்க. நகைச்சுவைங்கற பேர்ல பல குப்பைகளை எழுதித் தள்றீங்க. அதெல்லாம் படிக்கறதே இல்ல நான். என்னோட எக்ஸைல் புக் ஓசியில கெடச்சதா எங்கயோ எழுதிருந்தீங்க. அதப் படிச்சு விமர்சனம் போடாத உங்க வலைப்பூ பத்தியெல்லாம் அவங்க எழுதறாங்கன்னா.. அதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னு தெரியாததாலயே நோ கமெண்ட்ஸ்’ என்றார். மேலும் இது குறித்து நேயதேவப்பாணாவர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில் தான் பேசப்போவதில்லை என்றும் குறிப்பிடச் சொன்னார்.

மேலும் பலர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்:

ஜெயலலிதா: வாழ்த்துகள். ஆறு டூ ஒன்பது கரண்ட் இல்லாததால் இன்னும் அந்த விகடனைப் படிக்க முடியவில்லை. 9 மணிக்கு கரண்ட் வந்தால், சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு நான் உறங்கச் செல்வது வழக்கம். அதனால் பகலில் படித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். பகலில், கரண்ட் இல்லாமல் ஏசி வேலை செய்யாவிட்டால் புழுக்கத்தில் படிக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி: பரிசல் வாழ்க. சென்ற ஆட்சியிலேயே இதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. சில கருங்காலிகள் செய்த சதியால் அது தாமதமாகிவிட்டது. என் ஆட்சியாக இருந்தால் இந்தச் செய்தி மெய்ன் விகடனில் வந்திருக்கும். எனினும் மகிழ்ச்சியே.

கேப்டன் விஜய்காந்த்: ஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

விஜய்: ‘ ’

அஜீத்: நான் பேஸ்மாட்டேன்.



மேலும் கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், லக்கி, அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் ஆகியோர் முறையே ‘வாவ்’ ‘அட’ ‘ஆஹா’ ‘ச்சே’ ‘ம்ம்!’ ‘ஓஹோ’ என்று வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும்

‘ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்..
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்..
அனா நான்தான்.. ஆவன்னா நீங்கள்..
நீங்களில்லாமல் நானிங்கு இல்லை இல்லை’ என்ற பாடலைப் பாடி / ஆடி சிடி அனுப்புகிறேன்.

---------------

பி.கு: விகடன் வாங்கி, அதில் என் பேரை பேனாவில் எழுதி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.. இப்ப அந்த விகடன்லயே... (போதும்டா நிறுத்து..!) ஆகவே - விகடனுக்கு நன்றி!



.