“உங்க பேரென்ன சொன்னீங்க” என்று கேட்ட பெண்மணியிடம் மூன்றாவது முறையாக என் பெயரைச் சொன்னேன்.
நாற்பதைத் தொடும் வயதிலிருந்த அவர், கண் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டபடி “பாலிசி நம்பர்?” என்று கேட்டார்.
ஏற்கனவே அவரிடம் கொடுத்த துண்டுச்சீட்டு, அவரது கணினிக்கருகே இருந்ததைச் சுட்டிக் காட்டி சொன்னேன். “அதோ அந்தப் பேப்பர்ல இருக்குங்க”
ஒரு மாதிரி சலித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு, “குடுத்திருந்தா? சொல்ல மாட்டீங்களா? உங்க பாலிசி நம்பரை ஞாபகம் வெச்சுக்க முடியாதா?” என்றார்.
‘எழுதிக் கொடுத்த பேப்பரை வைத்துக் கொண்டே இவனிடம் கேட்டுவிட்டோமே’ என்ற ஆற்றாமையில் அவர் கேட்பது புரிந்தது.
நான் எதுவும் பேசவில்லை.
அவர் பேப்பரிலிருந்த பாலிசி எண்களை கணினியில் தட்டிவிட்டு, ‘நெக்ஸ்ட் ப்ரீமியம் ஜூலைலதானே” என்றார்.
“நான் ப்ரீமியம் எப்பன்னு கேட்கலீங்களே…”
“அப்பறம் என்ன வேணும் உங்களுக்கு?”
“என் ரினீவ்ட் பாலிஸி போஸ்டல்ல அனுப்ச்சது எனக்கு வரலைங்க. போஸ்ட் ஆஃபீஸ்ல கேட்டா ரிட்டர்ன் அனுப்சாச்சுன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் வந்தேன்” என்றேன்.
“அதுக்கு என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க?” என்றவரிடம் மேலே தொங்கிக்கொண்டிருந்த போர்டைக் காட்டினேன். “மே ஐ ஹெல்ப் யூ” என்றது அந்த போர்ட்.
அவர் என்னை ஏற இறங்க ‘அற்பனே’ என்பதாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு “நேராப்போனீங்கன்னா ப்ளூஷர்ட்ல ஒருத்தர் இருப்பாரு. அவரைப் பாருங்க” என்றார்.
நேராய்ப்போனேன்.
அந்த அலுவலக அறை கொஞ்சம் பெரிய அளவிலானது. ஏகப்பட்ட க்யூபிக்கல்கள் இருந்தன. இடது புறம் ஒற்றை க்யூபிக்கல்கள். வலதுபுறம் பெரிய சைஸ் க்யூபிக்கலில், நான்கைந்து நாற்காலி, டேபிள்கள் என்று ஒருமாதிரியான அமைப்பில் இருந்தது அந்த நீளமான ஹால். அவர் காட்டிய ‘நேராப்போனீங்கன்னா’ கிட்டத்தட்ட ஒரு இருபத்தி ஐந்து அடி தாண்டி இருந்தது.
அந்த இடத்தை அடைவதற்குள் இரண்டு ப்ளூஷர்ட்கள் என்னைக் கடந்து செல்லவே கொஞ்சம் குழப்பமான பார்வையுடனே அவர்களைக் கடந்தேன். கடைசியிலும் ஒரு ப்ளூஷர்ட் இருக்கவே அவரிடம் சென்றேன்.
“சார்… என்னோட பாலிசி போன வாரம் வந்து ரினியூ பண்ணீருந்தேன். போஸ்ட்ல அனுப்பறதா சொன்னாங்க. போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து திருப்பி அனுப்ச்சிட்டதா சொன்னாங்க. முன்னாடி ஒரு மேடம் உங்ககிட்ட கேட்கச் சொன்னாங்க…”
“……………….”
அவர் நான் சொன்னதைக் கேட்டதற்கான எந்த அறிகுறியும் அவர் முகத்தில் தென்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு சூஃபி ஞானி ரேஞ்சுக்கு எந்த ரியாக்ஷனையும் காட்டாத அமைதி அவர் முகத்தில்.
“சார்…”
“லெஃப்ட்ல ப்ளூஷர்ட் போட்டுட்டு ஒரு சார் ஒக்கார்ந்திருப்பாரு. அவர்கிட்ட கேளுங்க”
நல்லவேளை. நான் சொன்னது கேட்டிருக்கிறது.
அவர் சொன்ன லெஃப்டில் இன்னுமொரு ப்ளூ ஷர்ட் சார். அவரிடமும் விவரம் சொன்னேன்.
“நீங்க AGMஐக் கேட்கணும்” என்றார்.
அவர் குறிப்பிட்ட ஏ ஜி எம் அடுத்த க்யூபிக்கலில் இருந்தார். கொஞ்சம் பணிவாக அவர் முன் போய் நின்றேன்.
1…2…3..4…5 நிமிடங்களுக்கு அவருக்கு என் உருவமே தட்டுப்படவில்லை. இத்தனைக்கும் என்னைத்தாண்டி அவர் பார்வை போவதையும், சில ஃபைல்களை நகர்த்த அங்குமிங்கும் நகர்வதுமாய்த்தான் இருந்தார். சிறிதுநேரப் பொறுமைக்குப் பிறகு தணிந்த குரலில் “சார்” என்றேன்.
“வந்தீங்கன்னா எதுக்கு வந்தீங்கன்னு நீங்கதான் சொல்லணும்.. சும்மாவே நின்னுகிட்டிருந்தா?” என்றார் அவர், காலையில் மனைவி காஃபி கொடுக்காமல் அனுப்பிவிட்ட மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு..
“இல்ல சார்.. நீங்க எதோ ஃபைலைப் பார்த்துட்டிருந்தீங்க..” என்று தயக்கமாக இழுக்கவே அவர் என்னை “தள்ளி நின்னு சொல்லுங்க” என்றார்.
நான் நின்றிருந்த இடத்தைவிட்டு கொஞ்சம் வலதுபுறமாக தள்ளி நின்றபடி “என் பாலிசி ரிட்டர்ன் ஆகி.. “ என்று என் பல்லவியை சொல்லிக் கொண்டே கவனித்தேன். நான் முன்பு நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராக ஒரு மஞ்சள் சேலை ஆண்ட்டி அமர்ந்திருந்தார். அன்னார் அவரைத்தான் சைட் அடித்துக் கொண்டிருந்தார் போலும்.
நான் சொன்ன முழுவதையும் கேட்ட அவர் வெறிகொண்டு எழுந்தார். “அதுக்கு ஏங்க என்னை வந்து தொல்லை பண்றீங்க? ரைட்ல ப்ளூஷர்ட் போட்டுட்டு..”
“அவர்தாங்க உங்களைப் பார்க்கச் சொன்னாரு..” அவர் முடிக்கும் முன்னே சொன்னேன் நான்.
“கண்ணாயிரம்..”
அவர் கத்திய கத்துக்கு அந்த ப்ளூஷர்ட் அலறி அடித்து ஓடிவருவார் என்று எதிர்பார்த்தேன். ரொம்பவும் கூலாக உட்கார்ந்த இடத்திலிருந்து “என்னா சார்” என்றார் அந்த கண்ணாயிரம்.
“இவரு பாலிசி ரிட்டர்ன் வந்திருக்கான்னு பார்த்துச் சொல்லுய்யா.. என்கிட்ட ஏன் அனுப்பற?”
“நீங்க சொல்லாம நான் எப்டி பார்க்கறது?” என்று அவருக்கு பதிலுரைத்து விட்டு “இப்டி வாங்க சார்” என்றார் என்னைப் பார்த்து.
நான் மறுபடி அந்த ப்ளூ ஷர்ட்….. கண்ணாயிரத்திடம் போனேன்.
“நாங்க என்னைக்கு அனுப்பிருந்தோம்?” – ரொம்பவும் அறிவுபூர்வமாய்க் கேட்டார்.
“அது எனக்கு எப்டி தெரியும் சார்? நேத்து போஸ்ட் ஆஃபீஸ்ல கேட்டப்ப ரிட்டர்ன் ஆச்சுன்னு சொன்னாங்க”
“பாலிசி எந்த பேர்ல இருக்கு?”
சொன்னேன்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, அவர் கைகள் மேஜை மேலிருந்த பேப்பரில் ஒரு மரம் வரைந்துகொண்டிருந்தது. நான் சொன்னதையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறாரா என்பதும் எனக்குப் புரியவில்லை.
அடுத்ததாக என்ன கேட்கலாம் என்று அவர் யோசனையோடு என் முகத்தை ஏறிட்ட விநாடி என்னை கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு ஓர் உருவம் அவர் டேபிள் முன் நின்றது. “கண்ணா… தயிர்வடை போட்ருப்பான்.. போலாமா” – மெதுவாகத்தான் கேட்டார் வந்தவர். என் காதில் விழுந்துவிட்டது. இருந்தும் கேட்காதது போல நின்றேன்.
கண்ணாயிரம் எழுந்தார். “மேல சார் கூப்டறாராம். இருங்க வர்றேன்…”
“சரி சார்”
“அப்டி வந்து முன்னாடி பெஞ்ச் இருக்கும் உட்காருங்க… பத்து நிமிஷத்துல வர்றேன்”
“சரி சார்..”
நான் அவருடனே நடந்து முன்னால் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்தேன். சற்று அருகே அமர்ந்திருந்தவர் கையில் ஜூனியர் விகடனை வைத்து விசிறிக்கொண்டிருந்தார். கொஞ்சம் அதிகமாக அவர் வீசியதால் காற்று என்மீதும் பட்டது. அதை தெரிந்து கொண்டாரோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவர் வீசும் வேகம் குறைந்தது.
ஐந்து, பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் கூட்டம் சேர ஆரம்பித்தது. பெஞ்ச் நிறைந்து, சிலர் நிற்க ஆரம்பித்தனர்.
நான் முதலில் சொன்ன, ‘மே ஐ ஹெல்ப் யூ’ பெண்மணி என்னை அழைத்தார்.
“இங்க வாங்க…”
“எஸ் மேடம்”
“நீங்க பாலிசி ரிட்டர்-ன்னு வந்தவர்தானே?”
“ஆமா மேடம்..”
“இங்க என்ன பண்றீங்க”
“நீங்க உள்ள ப்ளூ ஷர்ட்காரரைப் பார்க்கச் சொன்னீங்கள்ல..” என்று நான் ஆரம்பிக்க..
“எதுக்கு இங்க ஒக்கார்ந்திருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க. கூட்டம் சேர்ந்தா ஜி.எம்.வந்து திட்டுவாரு. சும்மா வளவளன்னு பேசாதீங்க..” என்றார்.
“அதான் சொல்ல வந்தேன் மேடம். நீங்க உள்ள ப்ளூஷர்ட் காரரைப் பார்க்கச் சொன்னீங்கள்ல..”
“சார்.. வேணும்னே பேசறீங்களா… ஏன் இங்க ஒக்கார்ந்திருக்கீங்கன்னு தானே கேட்டேன்..”
“அதான் மேடம் சொல்ல வர்றேன்.. உள்ள அந்த ப்ளூஷர்ட்காரரைப் பார்க்கச் சொன்னிங்கள்ல..” –இதற்குள் என்னைச் சுற்றி நின்றிருந்த ஐந்தாறு பேர் என்னையும் அந்த மேடத்தைச் சுற்றியிருந்த அலுவலர்கள் அவரையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். எனக்கு ஒருமாதிரி சங்கடமாய்ப் போய்விட்டது.
நான் தொடர்வதற்குள் அந்த மேடத்தின் அருகே அமர்ந்திருந்த இன்னொருவர் “பாலிசி ரிட்டர்னுக்கு வந்திருக்கீங்கனா நேராப் போனீங்கன்னா ப்ளூஷர்ட் போட்டுட்டு ஒருத்தர் இருப்பார். அவரைப் பார்த்தீங்கன்னா போதுமே.. எல்லாரும் இங்க நின்னுட்டிருந்தா கூட்டமாகுதுல்ல சார்…”
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கண்ணாயிரம் பெரும்பாலான நாட்களில் ப்ளூ ஷர்ட்டில்தான் வருகிறார்.
“சார்.. ஒங்களைத்தான்…”
“இல்லைங்க. அவர்தான் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னாருங்க” – நான் இந்த பதிலைச் சொல்வதற்கும் அந்த இடம் ஒரு சிறிய பரபரப்பை எதிர்கொள்வதற்கும் சரியாக இருந்தது.
“ஜி எம் வர்றாரு.. எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்றார் உள்ளே வந்த ஒரு செக்யூரிட்டி.
அவ்வளவுதான். தபதபவென எல்லாரும் நகர, அந்த மேடம் உட்பட எல்லாரும் தத்தம் வேலைகளில் பிஸியாகினர். அந்த மேடம் முன்னால் நின்றிருந்தவர்கள் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர்.
அப்போது உள்ளே சஃபாரி சூட்டுடன் ஒருவர் வர, அவருடனே இன்னொருவர் அவரது சூட்கேஸைத் தாங்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் உள்ளே செல்லும் ஒருநொடி முன், என்னைப் பார்த்து நின்றார்.
ஹெல்ப் டெஸ்க்குக்கு முன் க்யூ நிற்க, வேறு சிலர் பெஞ்சில் அமர்ந்திருக்க.. நான் மட்டும் தனித்து நின்றுகொண்டிருந்தேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
அவர் என்னைப் பார்த்து நிற்பதை கவனித்த ஹெல்ப் டெஸ்க் அம்மணி “சார்… லைன்ல நில்லுங்க.. இல்லைன்னா பெஞ்ச்ல உட்காருங்க.. இப்டி வழில ஏன் நிக்கறீங்க?” என்றார்.
‘நான் அங்கதானேங்க உட்கார்ந்திருந்தேன்’ என்று மனதில் நினைத்தவாறே என்னைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஜி.எம்மைப் பார்த்தேன். ஹெல்ப் டெஸ்க் அம்மணி என்னிடம் சொன்ன தோரணையில் இவன் ஏதோ ப்ரச்சினை பண்றான் போல என்று நினைத்தாரோ என்னமோ என்னைப் பார்த்து “எதுக்காக வெய்ட் பண்றீங்க? என்ன விஷயம்?” என்றார். குரலில் தெளிவான அதிகாரத்தொனி.
நான் அவரை பொறுமையாகப் பார்த்தேன். சொன்னேன்.
“துப்பாக்கி ஒண்ணு வெச்சுக்கணும் சார். அதுக்கு லைசென்ஸ் எடுக்கணும். அதான் என்ன ப்ரொசீஜர்ஸ்ன்னு கேட்க வந்தேன்”