Sunday, September 30, 2012

சினிமா விமர்சனம் அல்ல

"ஏங்க.. மீராவைக் கூட்டீட்டு வந்தாச்சா?”

“ஓ.. அதுக்குதானே லீவு போட்டேன்... வந்தாச்சு..”

“படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா?”

“நேத்தே பண்ணீட்டேன். கிரி வந்திருக்கான். 5 டிக்கெட் புக் பண்ணியாச்சு”

“எத்தனை மணிக்கு ஷோ?”

“நைட் 9.45. ஸ்ரீ சக்தி.”

“என்னைக் கூட்டீட்டு போக வருவீங்கதானே? நான் பஸ் ஏறி வர்றதா இருந்தா டின்னருக்கு டைம் இருக்காது..”

“வர்றேன். வர்றப்ப கூப்டறேன்..”

“சரிங்க..”

------------

“என்னண்ணா ரொமப் நேரமா யாருக்கோ ஃபோன் ட்ரை பண்ணீட்டிருக்க?”

“இல்ல கிரி... பைக்ல அஞ்சு பேர் போக முடியாது. ஃப்ரெண்ட்கிட்ட பைக் கேட்கலாம்னு கூப்டறேன். நாட் ரீச்சபிளாவே வருது”

“நான் வேணா பஸ்ல வர்றேனே..”

“போறப்ப பஸ் இருக்கும். நைட் ஷோ முடிஞ்சு ரிட்டர்ன் வர்றப்ப என்ன பண்றது?

“ஆட்டோ?”

“15 கிலோ மீட்டர். நைட்டும்பான். 250 ரூவா கேட்பான். இரு... மேல போய் ஹவுஸ் ஓனர்கிட்ட அவரு டிவிஎஸ் கேட்டுப் பார்க்கறேன்..”

---------

“ஏங்க.. கிளம்பியாச்சா?”

“கிளம்பீட்டே இருக்கோம்.. ஹவுஸ் ஓனர் வண்டில கிரியும், மேகாவும் வர்றாங்க. நானும் மீராவும் பைக்ல வர்றோம்”

“கம்பெனி வர்றீங்கதானே என்னைக் கூட்டீட்டு போக?”

“இங்கிருந்து 32 கிலோ மீட்டர் வரணும். பஸ்ல வர்றியா..? ஆப்போசிட்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்”

“இப்ப சொல்லுங்க. மொதல்லயே சொல்லீருந்தா பர்மிஷன் போட்டு கெள்மபீருப்பேன்ல? வர்றதாதானே சொன்னீங்க?”

“சரி.. சரி.. இவங்க மூணு பேரையும் பிக் பஜார்ல வெய்ட் பண்ணச் சொல்றேன். நான் வந்து உன்னைக் கூட்டீட்டு - அப்பறமா வந்து டின்னர் சாப்பிட்டுட்டு எல்லாருமா போலாம்”

“சரி வாங்க”

“உள்ள வர டைம் இல்ல.. பத்து நிமிஷத்துல ஃபேக்டரி முன்னாடி வந்து நில்லு..”

----------

கஸின் ப்ரதர் கிரி + மேகா டிவிஎஸ்ஸிலும், நானும் மீராவும் பைக்கிலும் போனோம். பிக் பஜாரில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும், போய் உமாவைக் கூட்டிக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர். வரும் வழியில் பைக் ஆட்டம் கண்டது.

“என்னாச்சு.. ஏன் வண்டிய நிறுத்தினீங்க?”

நான் உமாவை இறங்கச் சொல்லிவிட்டு, பின் பக்க டயர் பார்த்தேன். பஞ்சர்.

“மணி 9 ஆகப்போகுது.. ஒண்ணு பண்லாம்க.. அவங்க மூணு பேரையும் பக்கத்துல சரவணபவன் போய் சாப்பிடச் சொல்லீடலாம். நாம பஞ்சர் கடை எங்கிருக்குன்னு தேடி, பஞ்சர் ஒட்டீட்டு போலாம்”

அப்படியே முடிவானது. “வண்டிய பிக் பஜார் பார்க்கிங்லயே விட்டுட்டு போகச் சொல்லு. இல்லைன்னா திரும்ப பார்க் வீதி சுத்திதான் தியேட்டர் வரணும்”

200 அடி தூரம், பைக்கை மூச்சிரைக்க தள்ளிக் கொண்டு போன பிறகு பஞ்சர் கடையைக் கண்டோம். நேரமாகிக் கொண்டிருந்தது. கடைக்காரர் நடுநடுவே வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். “ண்ணா..சாப்ட்டுட்டு படத்துக்கு போகணும். கொஞ்சம் சீக்கிரம்” என்றதற்கு, மேலும் கீழும் பார்த்தார்.

ரெடியாகி வண்டியை எடுக்கும்போது மணி ஒன்பதே காலை தாண்டியிருந்தது. வேகமாக ஹோட்டலை நோக்கி செலுத்தினேன். தம்பியும், மகள்களும் சாப்பிட்டு முடித்து அங்கே காத்திருந்தனர். நாங்கள் அவசர அவசரமாக ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.

“சரி. கிரி.. நீ மீராவை கூட்டீட்டு போ. வண்டிய எம்ஜிபி பக்கத்து ரோட்ல விடு. இந்தப் பக்கம் வந்தா அப்பறம் சுத்திதான் போகணும். நானும், அண்ணியும், மேகாவும் பைக்ல வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

தியேட்டர் போய் சேரும்போது மேகா, “அச்சச்சோ” என்றாள். “பிக் பஜார்ல மாமா வண்டிய நிறுத்தின டோக்கன் எங்கிட்ட இருக்குப்பா”

அதுவரை பொறுமை காத்த எனக்கு லைட்டாக கடுப்பு எட்டிப் பார்த்தது. அவளிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பைக்கை விரட்டினேன். பிக் பஜார் செக்யூரிட்டியிடம், “தம்பி பைக் எடுக்க போயிருக்காரு. டோக்கன் எங்கிட்ட மாட்டிகிச்சு” என்று சொன்னதும் அவர் இரண்டு செகண்டுகள் பார்த்தார். பின் டக் என்று ஏதோ நினைவு வந்தவர் போல, “இப்பதான் போனாங்க.. மேனேஜர்கிட்ட கேட்டு வண்டியக் குடுத்துட்டோம் சார்” என்றார். நன்றி சொல்லிவிட்டு மறுபடி தியேட்டருக்கு போனேன்.

மணி ஒன்பதே முக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எந்தப் படமானாலும் டைட்டிலிலிருந்து பார்த்துத் தொலைய வேண்டும். அவசரம். பதட்டம். பைக் ஸ்டாண்டில் பைக் நிறுத்த இடம் இருக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு நிறுத்திவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு கவுண்டர் நோக்கி மூச்சிரைக்க ஓடினேன்.

கவுண்டரில் டிக்கெட் புக்கிங் எண்ணைச் சொன்னேன்.

“ப்ரூஃப்?”

அவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாது என்பார்கள். எனக்கு பாக்கெட்டில் கை போகவில்லை. போராடி, பர்ஸை எடுத்து பான் கார்டை காட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.

“வாங்க வாங்க டைமாச்சு” -நின்று கொண்டிருந்த குடும்பத்தாரை அவசரப்படுத்தினேன்.

“படம் போட்டாச்சாம்” - மனைவி சொன்னதும் உற்சாகம் வடிந்தது. “சரி வாங்க” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு டிக்கெட் காண்பித்து சீட் நம்பர் தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கும்போது சந்தானம் தண்ணி டம்ளரைக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.

----

இது படம் பார்க்க ஒரு மிடில் க்ளாஸ் மாரோன் படும் ஆரம்ப அவஸ்தைளின் சிறு சாம்பிள். சம்பவங்கள் முன் பின் மாறலாம். ஆனால் என்னைப் போன்றோர்க்கு படம் பார்க்கச் செல்லும்போது, இதுபோன்ற போராட்டங்கள் சற்றேறக்குறைய சமம் தான். டிக்கெட் விலை, பாப்கார்ன், காஃபி, பார்க்கிங் என்று எப்படியும் ஐநூறைத் தாண்டும் செலவு. இடைவேளையின் காஃபி டோக்கனைக் குடுத்து சிந்தாமல் காஃபி வாங்குவது ஆயகலைகளில் சேர்க்கப் படாத கலை. போலவே ஷோ முடிந்து வண்டியை எடுப்பதும்.

எல்லாம் முடிந்து வெளியே வந்து ஃபோனில் ட்விட்டரையோ, கூகுள் ப்ளஸ்ஸையோ, ஃபேஸ்புக்கையோ திறந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட்டு பார்த்த படத்தின் டோரண்ட் லிங்கை ஒரு நண்பர் கேட்க, ‘இந்தா பாரு..” என்று பலர் LINKசாமிகளாக அள்ளிவழங்கிக் கொண்டிருப்பர்.

ஆக.. இவ்வளவு சிரமப்பட்டு, லோல் பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் என்னைப் போன்றோர்க்கு, “தியேட்டருக்கு சென்று மட்டுமே சினிமா பார்க்கவும்” என்று கூப்பாடு போடும் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன?


வால்துண்டு:

‘தாண்டவம்’ நல்லா இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாத ஒரு படம். முகமூடி போட்டுட்டு வந்து மிஷ்கின் அடிச்ச அடிக்கு, விக்ரமும் விஜயும் ஆடின தாண்டவம் Far Better.

இந்தப் படத்துல ஒரே ஒரு கேள்விதான் எனக்கு இருக்கு.

படத்துல எதுக்குய்யா எமி ஜாக்சன் கேரக்டர்?


.

Friday, September 28, 2012

ராஜ நாயகன்!




2005ம் வருடம். திருப்பூர் அரிமா சங்கம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஏற்பாடு செய்திருந்த ஒரு குறும்பட நிகழ்வு. நானும் சென்றிருந்தேன். ஒவ்வொரு குறும்படமாக ஒளிபரப்பப்பட, அதை பார்வையாளர்கள் விமர்சிக்கலாம். நான் ஒவ்வொரு குறும்படத்துக்கும், விதவிதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடல் மாதிரி, பிற பார்வையாளர்களும் அவர்களது கோணத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு குறும்படத்திற்கு, நான் ஏதோ கருத்து சொல்ல எனக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதற்கு மாற்றுக் கருத்து வைத்தார். நான் என கருத்தை மீண்டும் வலியுறுத்த, அவர் அவரது கருத்தை முன்வைக்க ஒரு விவாதமாக அது அமைந்தது.


நான்கைந்து குறும்படங்கள் திரையிட்ட பிறகு, நன்றியுரை சொன்ன சுப்ரபாரதி மணியன், “சிறப்பாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த ஒருவருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்..” என்று சொல்லிவிட்டு சடாரென முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “உங்க பேரு?” என்று கேட்க ஒரு மகிழ்ச்சியோடு என் பெயர் சொன்னேன்.


‘கிருஷ்ணகுமாருக்கு பரிசளிக்க R.P. ராஜநாயஹம் அவர்களை அழைக்கிறேன்’ என்றார்.


ராஜநாயஹம். ஆர்.பி.ராஜநாயஹம். அந்தப் பெயரை அடிக்கடி இலக்கியப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது போக சில எழுத்தாளர்களின் எழுத்தில் அடிபடும் அந்தப் பெயருக்குரியவரா எனக்கு பரிசளிக்கப் போகிறார் என்று ஒருவித ஆர்வமோடு அவரை எதிர்பார்க்க...


எனக்கு இரண்டு வரிசை பின்னால் இருந்து, என்னோடு விவாதித்தவரே எழுந்து வந்து, அந்தப் பரிசை எனக்கு அளித்தார். அவர்தான் ஆர்.பி.ராஜநாயஹம் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.


நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்தித்து, “சார்... நீங்கன்னு தெரியாம விவாதிக்கறப்ப அதும் இதும் பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க. உங்களைப் பத்தி நிறைய பத்திரிகைகள்ல படிச்சிருக்கேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “அச்சச்சோ... அதெல்லாம் இல்லைங்க. கருத்துப் பரிமாற்றம்ங்கறப்ப விவாதங்களும் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டு அவரது நூல் விமர்சனங்கள் வந்த ஒன்றிரண்டு நகல்களைப் பகிர்ந்து கொண்டார்.

----

அதன்பிறகு வெகுநாள் கழித்து, 2008ல் அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதத்தொடங்கியதும் “சார்.. உங்களை எனக்கு தெரியும்.. சந்திச்சிருக்கேன்” என்று கேனத்தனமாக ஒரு பின்னூட்டமெல்லாம் போட்டேன். அவ்வளவு பெரிய ஆள் பதிலெல்லாம் போடுவாரா என்று விட்டு விட்டேன்.


சமீபத்தில் திருப்பூர் புத்தகக்கண்காட்சியின்போது எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். எதேச்சையாக ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களும் அங்கே செல்ல எஸ்.ரா அவரைப் பார்த்து அளவளாவியிருக்கிறார். (ராஜநாயஹத்தை அறியாத எழுத்தாளர்களே இல்லை) அப்போது, எஸ்.ரா., தன்னுடன் இருந்த சேர்தளம் நண்பர்களை ‘இவர் வெயிலான்... இவர் முரளிகுமார் பத்மநாபன்” என்று அறிமுகப்படுத்த ராஜநாயஹம் ‘பரிசல்காரன் இருக்காரா?’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா? ஓட்டாதீங்க” என்று விட்டுவிட்டேன்.


கொஞ்ச நாட்களாக ட்விட்டரிலும் எழுதிவருகிறார் ராஜநாயஹம். ஒரு முறை “திருப்பூரில் நான் சந்திக்க விரும்பும் நபர் பரிசல்காரன்” என்று அவர் ட்விட்டவே,  “சார்.. அப்டிலாம் சொல்லாதீங்க. வா-ன்னா வர்றேன்” என்று சொன்னேன். அதன்பிறகு போனவாரம் என் தளத்திலிருந்து என் எண்ணைப் பிடித்து எனக்கு அழைத்து என்னோடு பேசினார். அப்போது நான் ஒரிசாவில் இருந்தேன். அங்கே சந்தித்த சவாலை (அது வரும் பதிவில்..) குறித்து பேசினார். “பத்திரமா இருங்க கிருஷ்ணா” என்று அக்கறையோடு சொன்னார்.

நேற்று மாலை அவர் வீடு இருக்கும் பகுதி வழியே சென்றபோது, ‘இங்கேதானே எங்கோ அவர் வீடு இருக்கிறது?’ என்ற சிந்தனை எழவே, ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை, விசாரித்துக் கொண்டே அவர் வீட்டு முன் நின்றேன். கொஞ்ச நேர, “சார்.. மேடம்..”களுக்குப் பிறகு அவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.

நான்: “சார்.. வெளில இருக்கீங்களா?”

அவர்: “இல்லைங்க.. வீட்ல இருக்கேன்”

நான்: “நான் வெளில இருக்கேன்”

அவர்: “ஓ.. இன்னும் வீட்டுக்கு போகலியா?”

நான்: “அதில்லைங்க.. நான் உங்க வீட்டுக்கு வெளில இருக்கேன். காலிங்பெல் வேலை செய்யல” என்றேன்.

அவர் பதட்டப்படுவது தெரிந்தது. “அச்சச்சோ.. இருங்க வர்றேன்” என்று கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்.

கொஞ்ச நேரம் நான் வெளியில் நின்றதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார். 

“என்ன சாப்பிடறீங்க? சப்பாத்தியா பூரியா?” என்றார். வழக்கமாக ‘காஃபியா டீயா என்றுதானே கேட்பாங்க?’ என்று ஆச்சர்யப்பட ”இல்லைங்க.. நான் இரவு டின்னருக்கு கேட்டேன். கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்றார். 

“சார்.. சும்மா இருங்க.. வீட்ல சின்ன மக லீவுக்கு வந்து தனியா இருக்கா. நீங்க வேற” என்று மறுத்தேன். 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேச  ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து காண்பித்தார்.

கிரா, அசோகமித்திரன், தர்மு சிவராம் (பிரமிள்), ஜெமினி கணேசன், திருப்பூர் கிருஷ்ணன், ஜெயந்தன், மதுரை முன்னாள் மேயர் முத்து என்று பலரோடு பல சமயங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இலக்கிய உலகில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. வாசிப்பில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டி சந்திப்பில் ஜெயமோகனோடு நடந்த விவாதம், சாரு என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்.  

பிரமிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் மனைவி முந்திரி பக்கோடாவும், இனிப்பும் கொண்டு வந்து, காப்பியோடு வைத்துவிட்டு உபசரித்தார். 

பிற எழுத்தாளார்கள், சினிமா, இலக்கியம் என்று அவர் பேசுவதையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தேன். நேரமாகிவிட்டதால் புறப்பட எத்தனிக்க, மேசையில் அந்த மாத ‘காட்சிப் பிழை’ பத்திரிகை.  எடுத்துப் புரட்ட, அதில் இவர் எழுதிய ‘என்னத்தே கண்ணையா’ பற்றிய கட்டுரை கண்ணில் பட்டது. 

'சாப்பிடாம போறீங்க.. ' என்று அவரும் அவர் மனைவியும் குறைபட்டுக் கொண்டே வழியனுப்பினர். அவர் மனைவி ஒருபடி மேலே போய்... --  வாசலில் ஒரு படி கீழே வந்து -- “ஆப்பிள் குழந்தைகளுக்கு எடுத்துப் போங்க” என்றார். விடைபெற்று வந்தபின்னும் அவர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


இப்பேர்ப்பட்டவர் திருப்பூரிலா என்று நினைக்கும்போது அண்ணன் ரமேஷ் வைத்யா-வின் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.


உயரங்களின் ரசிகன் நான்

என் சுவடுகளில் மிதிபடும்
முகடுகளில் எனக்கொரு
பரவசம்

சங்கீதத்தில் மேல் சட்ஜமம்
சாலையில் டாப்கியர்
காகிதங்களில் காற்றாடி

மலையென்றால் சிகரம்
வீடென்றால் மாடி
கோயிலென்றால் எனக்கு கோபுரம்தான்

அடித்தளங்கள் அவசியமானாலும்
ஈர்த்ததில்லை என்னை அவை

உயரங்களின் ரசிகன் நான்

நடப்பதை காட்டிலும் பறக்கவே பிரியம்
புதைவதை காட்டிலும் எரிதல் விருப்பம்
கவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும்

க்ளார்க்காய் இருக்கிறேன்
வயிற்றின் அபத்தம்..




.

Wednesday, September 12, 2012

தைரியலட்சுமி



அன்றைக்கு வியாழக்கிழமை. (இப்படித்தான் ஒரு பதிவை ஆரம்பிக்கவேண்டும். அது என்ன தேதி என்றோ அன்றைக்கு வியாழன்தானா என்றோ யாரும் சரிபார்த்து நோட்டீஸ் அனுப்ப முடியாது.)

அலுவலக வேலையாக, வெளியில் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தேன். மணி, மாலை நான்கு இருக்கும்.

சாலையில் ஓரத்தில் நான்கைந்து பள்ளிக் குழந்தைகள் விளையாடியபடி சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு குட்டிப்பையன் மட்டும், அந்த நான்கைந்து பேருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். தோளில் ஒரு பக்கமாக சாய்ந்த பள்ளிப்பையுடன் விளையாட்டாக தத்தக்கா – பித்தக்கா என்று ஓட்டமுமில்லாமல், நடையுமில்லாமல் ஒரு மாதிரி போய்க் கொண்டிருந்தான். அவனைக் கடந்து பைக்கை செலுத்தியபின், முதுகில் பள்ளிப் பையும், அவன் சாய்ந்த நடையும் ஒரு மாதிரி கவரவே பைக்கை நிறுத்தி ஒரு ஃபோட்டோ எடுக்கும் ஆசை வந்தது. பைக்கை நிறுத்தினேன்.

அவன் என்னைத் தாண்டியதும், ஃபோட்டோ எடுப்பதற்காக, ஃபோனை கையிலெடுத்து வைத்துக் கொண்டேன். ரிவர்வ்யூ மிர்ரரில் அவனும், அவனுக்குப் பின்னால் பிற குட்டீஸும் வருவது தெரிந்தது. நான் ஃபோனில் கேமராவை ‘ஆன்’ செய்துவிட்டு காத்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்களாகியும் அவனோ, அவர்களோ வராதது கண்டு ரிவர்வ்யூ மிர்ரரைப் பார்த்தேன். அவர்களெல்லாருமே நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

திரும்பிப் பார்த்தேன்.

என் பைக்கிலிருந்து, பத்தடி பின்னால் அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களும், ஓடிவந்து அவனோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் பெரியவளான ஒரு சிறுமி – பத்து வயதிருக்கும் – ஓரடி முன்னால் வந்தாள்.

“அண்ணா.. வேணாம்ணா.. போயிருங்க. எங்க வீடு அதோ, அங்கதான் இருக்கு. அப்பாகிட்ட சொல்லீருவேன்” என்றாள். குரலில் கொஞ்சம் பயமும், கொஞ்சம் தைரியமும் கலந்திருந்தது.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது.. நான் ஏதோ அவர்களைக் கடத்தவோ வேறு ஏதோ செய்யவோ வந்திருக்கும் சமூக விரோதக் கும்பலில் ஒருவனாக நினைத்துத்தான், அவர்கள் அப்படி நின்றிருக்கிறார்கள் என்பது.

நான் பைக்கை விட்டு இறங்கினேன். சடாரென, - சாலையில் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவர்கள் - ஒரு விதமாக கூக்குரலிட்டபடி சாலையைக் கடந்து, அந்தப் பக்கம் போய் நின்றனர்.

“ஒண்ணுமில்ல பாப்பா. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன். பையன் நடந்துவந்தது அழகா இருந்துச்சு.. அதான்..” என்றேன் நான்.


அந்தப் பெண் மறுபடி, முன்னைவிட சற்றே உரத்தகுரலில் “வேணாம்ணா… போய்டுங்க. எங்க சித்தப்பா போலீஸ்ல இருக்காரு. சொன்னேன்னா அவ்வளவுதான்” என்றாள்.


கொஞ்சம் சுவாரஸ்யம் உந்தவே, சில அடிகள் அவர்களை நோக்கி எடுத்து வைத்தபடி ‘இல்ல பாப்பா..’ என்று சொல்ல அவர்கள் கோரஸாக ‘ஆஆஆஆஆஆஆஆஆஆ’ என்று கத்தினார்கள்.

அவ்வளவுதான்.

நான் நின்றிருந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு பைக், அந்தக் கூக்குரல் கேட்டு திரும்பி வந்தது. பைக்கில் இருவர் இருந்தனர்.

வந்து, வண்டியை நிறுத்தியதும் “ஏன்ம்மா.. என்னாச்சு” என்றார் பைக்கை ஓட்டி வந்தவர். அவர் மீசை கொஞ்சம் பயமுறுத்தியது. பின்னால் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் இளமையாக இருந்தார்.

“மாமா.. இவரு வண்டியை நிறுத்தீட்டு எங்களை என்னமோ பண்ண வர்றாரு. போகச் சொன்னா கேட்க மாட்டீங்கறாரு..” என்று புகார் செய்தாள் அந்தப் பெண்.

பில்லியன் ஆசாமி, “டேய்.. என்னடா.. யார் நீ?” என்றான் எடுத்ததுமே.

“ஹலோ.. மரியாதையா பேசு. சும்மா ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்காக நிறுத்தினேன். என்னமோ சின்னப் பொண்ணு சொல்லுதுன்னு வாய்க்கு வந்தபடி பேசற?” என்றேன் நானும் கொஞ்சம் எகிறலான குரலில்.

வண்டி ஓட்டியவர் போன ஜென்மத்தில் கோடுபோட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து பஞ்சாயத்து பண்ணிப் பழக்கட்டவராக இருக்க வேண்டும். அவனைப் பார்த்து, ‘ஏய்.. இப்படித்தான் எடுத்த உடனே மரியாதையில்லாம பேசுவியா?” என்று அதட்டிவிட்டு, என்னை நோக்கி, ‘தம்பி எங்கிருந்து வர்றீங்க?” என்றார்.

நான் சொல்ல வாயெடுக்கும் சமயத்தில்தான் கவனித்தேன். அந்தக் குழந்தைகளிடம், பாப்பா எதுவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அதில் மிகவும் சின்னவனான – நான் ஃபோட்டோ எடுக்க நினைத்தவனின் – கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தாள். ஒரு நொடியில் என்ன சமிக்ஞை செய்தாளோ, ஐந்தாறு பேரும் ஓட்டப்பந்தயத்திற்கு போகும் வீரர்கள் போல சடாரெனப் புறப்பட்டு, படு ஸ்பீடாக அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போதும், அந்தச் சிறுவனை ஒரு கையில் பற்றியபடி, பள்ளிப் பை முதுகில் ஆட அவள் ஓடிய விதத்தை புகைப்படமாக்க கை துடித்தது.


கொஞ்ச தூரம் போனபிறகு அவள் திரும்பிப் பார்த்தாள்.  ஓட்டத்தை நிறுத்திவிட்டு,  மூச்சு வாங்க வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாள். எதையோ சாதித்துவிட்டதைப் போல திரும்பி நாங்கள் நிற்குமிடத்தை ஒரு வெற்றிப் பார்வை பார்த்தாள்.

நான் என் ஐ.டி. கார்டை பஞ்சாயத்துப் பேச வந்தவர்களிடம் காட்டி, ‘ஒண்ணுமில்லைங்க. குட்டீஸ் ஸ்கூல் பேகோட போனது பார்க்க நல்லா இருந்துச்சு. ச்சும்மா ஃபோட்டோ எடுக்கலாம்னு நிறுத்தினேன். அதுக்குள்ள அந்தப் பாப்பா கத்தி, கூச்சல் போட்டு..” அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு புறம் அந்தச் சிறுமியின் செய்கை என் மனதை ஆக்ரமித்தபடியே இருந்தது. பைக் ஓட்டி, “இந்தக் காலத்துப் பசங்க எவ்ளோ வெவரமா இருக்காங்க பாருங்க தம்பி…” என்று ஆச்சர்யப்பட்டபடி பைக்கை ஸ்டார்ட் செய்தார்.

நான் அவரிடம் சிரித்தபடி விடை பெற்றேன்.


-------

போனவாரத்தில் ஒருநாள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ‘சார் வெளில என் மனைவி, குழந்தை வந்திருக்காங்க.. கேண்டீன் வரைக்கும் விடுங்க சார். பேசிட்டு போய்டுவாங்க” என்றார். நான் செக்யூரிட்டியை அழைத்து, அனுமதிக்கச் சொன்னேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கேண்டீன் போனபோதுதான் கவனித்தேன். அவரது குழந்தைதான் – அந்தப் பாப்பா. அப்பா, மனைவியையும், அந்தப் பாப்பாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

”சாருக்கு குட் ஈவ்னிங் சொல்லு” என்றார் அவர் மனைவி. அவளோ என்னையே பார்த்தபடி இருந்தாள். அப்பா சொன்னார்.. “வெளில வந்தா இப்படித்தாங்க. ரொம்ப அமைதியா இருப்பா. ஒரு வார்த்தை பேசமாட்டா. எல்லா வாலும் வீட்டுக்குள்ளதான்”

“ஆமாமாம்.. பொண்ணுகன்னா அப்டித்தான்” என்றேன் அவளது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி.

-------------------

Tuesday, September 11, 2012

அவியல் 11/09/2012

ழுதுவது குறைந்துவிட்டது. புதுப்படங்களோ, பார்ப்பதே இல்லை. ஆனாலும் இந்த மிஷ்கின்-தான் ஏதோ அகிரா குரோசோவா ரேஞ்சுக்கு பேட்டி எல்லாம் கொடுத்தாரே என்று நம்பி, வித்தியாசமாக இருக்கும் என்று ‘முகமூடி’ படத்துக்குப் போய் ஏமாந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்துப் பார்த்த தமிழ்ப்படம் - இப்படி நோகடித்துவிட்டது!

மிஷ்கினின் எந்தப் படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், நந்தலாலா எல்லாவற்றையும் டிவியில்தான் பார்த்தேன். அதுவும் யுத்தம் செய் பார்த்துவிட்டு ‘செம டைரக்‌ஷன்.. எப்படி மிஸ் பண்ணினோம்’ என்று வேறு நினைத்தேன்.

முகமூடிக்கு வருவோம்.


படம் ஆரம்பிச்சதும் ஒரு போலிஸ் ஜீப் வருது. அப்போது எனக்கு ஒரு ஃபோன். எடுத்துட்டுப் போய், கொஞ்சநேரம் கழிச்சு வந்து உட்கார்ந்து மனைவிகிட்ட ‘என்ன ஆச்சு’ன்னு கேட்டேன். “அந்த போலீஸ் ஜீப் ரைட்ல உள்ள போச்சு. இப்ப ஒரு குப்பை வண்டி வந்துட்டிருக்கு’ என்றார். ‘என்ன விளையாடறியா? இவ்ளோ நேரம் பேசிட்டு வர்றேன்…’ என்றேன். ‘சத்தியமாங்க’ என்றார்.

அப்பறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது உண்மைதான். சென்னையில் ஷூட்டிங் என்றால் கோயம்புத்தூரிலிருந்து கேமரா வைத்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற பல எரிச்சல்கள். வில்லன் என்கிற பேரில் வீட்டுக்கு வீடு ஆணியடிக்க காண்ட்ராக்ட் எடுத்த மாதிரி நரேன் சுத்தியலோடே சுத்துகிறார். சேஸிங் என்ற பெயரில் அரை மணிநேர நீளத்துக்கு ஒரு சீன். சிறுவர்கள் விளையாடும் அட்டாக் விளையாட்டு போல அடிக்கடி பல கேரக்டர் பேஸ்த் அடித்ததுபோல ஸ்டில்லாக நிற்கிறார்கள்.

திராபை!

முக்கியக் குறிப்பு: அந்த டாஸ்மாக் பாடலில் ‘தன்னானா’ என்ற குரல் வரும்போதெல்லாம் என் விழிகள் சாருவின் விரல்களைத் தேடின.

----------------

நண்பர் ஒருவருக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர், நம் கலாச்சார வழக்கப்படி ஒரு சரக்கு பாட்டிலை பரிசளித்துள்ளார். இவரும் வாங்கி, இரண்டு லார்ஜ் அடித்துவிட்டு பாட்டில் ;லேபிளை ஆராய்ந்திருக்கிறார். 'For Overseas Export Only' என்று போட்டு, பொடி எழுத்தில் ’Distilled, blended & bottled by RADICO KHAITHAN LIMITED, RAMPUR (U.P), Made in India.’ என்றிருந்ததாம்!


-------------

எந்தப் படங்களின் ஆடியோ சிடியும் வாங்கவே பயமாக இருக்கிறது. 5க்கு இரண்டு கூட தேறமாட்டேனென்கிறது. முகமூடி - வாயமூடி சமீபத்தில் கவர்ந்த, பலமுறை கேட்ட பாடல்.

இணைய சர்ச்சைகளுக்கு நடுவில் நீதானே என் பொன்வசந்தம் கேட்க நேர்ந்தது.

‘முதன்முறை பார்த்த ஞாபகம்’ - பாடலின் வயலின் ஆதிக்கம் செமயாக இருந்தது. ‘சாய்ந்து சாய்ந்து’ - குட்டி மெலடி. ‘காற்றைக் கொஞ்சம்’ ஹிட்டடிக்குமென்றாலும் ‘என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்’ டிபிகல் இளைஞர்களின் பாடல். கேட்கக் கேட்க கவர்ந்து, செம ஹிட்டடிப்பது உறுதி என்று கூறுகிறது. நா.முத்துகுமாரின் வரிகள் - ஓஹோ ரகம்.

(அதிஷா - யுவா: இந்தப் பத்திக்கு நோ கமெண்ட்ஸ்னு மட்டும் போடுங்கய்யா...)

----------

இமாம் அண்ணாச்சி கலக்குகிறார். சொல்லுங்கண்ணே சொல்லுங்க-வில். மனதுவிட்டு சிரிக்க முடிகிறது.

தமிழ் மாதங்கள் கேட்க - ஒரு பெண் சொல்கிறார்:  “ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, டிசம்பர்.....” என்று அடுக்குகிறார்.

தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார் என்ற கேள்விக்கு, “பா.விஜய், வைரமுத்து, திருவள்ளுவர் என்று பதில்கள் சிரிக்காமல் வந்து விழுகிறது.

தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை எழுதியவர் பரிமேலர் (அப்படித்தான் சொன்னார்கள்), இந்தியாவின் வடக்கே இருப்பது கோயமுத்தூர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் நூலில் உள்ளது - இப்படி நாமே எதிர்பார்க்காத பதில்கள். தெரியாது என்று சொல்வதற்கு பதில் இப்படியெல்லாம்கூட சொல்வார்களா என்று நினைக்கவைக்கும் பதில்கள்.

ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  வெகுசீக்கிரமே போரடிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால்.. அவர்கள் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.

(இணையத்தின் ஒரே பயன் இதுதான். சகட்டுமேனிக்கு யாருக்கு வேணா அட்வைஸ் பண்லாம்!)

வர்ட்டா!

---