2005ம் வருடம். திருப்பூர் அரிமா சங்கம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஏற்பாடு செய்திருந்த ஒரு குறும்பட நிகழ்வு. நானும் சென்றிருந்தேன். ஒவ்வொரு குறும்படமாக ஒளிபரப்பப்பட, அதை பார்வையாளர்கள் விமர்சிக்கலாம். நான் ஒவ்வொரு குறும்படத்துக்கும், விதவிதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடல் மாதிரி, பிற பார்வையாளர்களும் அவர்களது கோணத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு குறும்படத்திற்கு, நான் ஏதோ கருத்து சொல்ல எனக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதற்கு மாற்றுக் கருத்து வைத்தார். நான் என கருத்தை மீண்டும் வலியுறுத்த, அவர் அவரது கருத்தை முன்வைக்க ஒரு விவாதமாக அது அமைந்தது.
நான்கைந்து குறும்படங்கள் திரையிட்ட பிறகு, நன்றியுரை சொன்ன சுப்ரபாரதி மணியன், “சிறப்பாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்த ஒருவருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்..” என்று சொல்லிவிட்டு சடாரென முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “உங்க பேரு?” என்று கேட்க ஒரு மகிழ்ச்சியோடு என் பெயர் சொன்னேன்.
‘கிருஷ்ணகுமாருக்கு பரிசளிக்க R.P. ராஜநாயஹம் அவர்களை அழைக்கிறேன்’ என்றார்.
ராஜநாயஹம். ஆர்.பி.ராஜநாயஹம். அந்தப் பெயரை அடிக்கடி இலக்கியப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது போக சில எழுத்தாளர்களின் எழுத்தில் அடிபடும் அந்தப் பெயருக்குரியவரா எனக்கு பரிசளிக்கப் போகிறார் என்று ஒருவித ஆர்வமோடு அவரை எதிர்பார்க்க...
எனக்கு இரண்டு வரிசை பின்னால் இருந்து, என்னோடு விவாதித்தவரே எழுந்து வந்து, அந்தப் பரிசை எனக்கு அளித்தார். அவர்தான் ஆர்.பி.ராஜநாயஹம் என்று அறிந்து அதிர்ந்து போனேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்தித்து, “சார்... நீங்கன்னு தெரியாம விவாதிக்கறப்ப அதும் இதும் பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க. உங்களைப் பத்தி நிறைய பத்திரிகைகள்ல படிச்சிருக்கேன்” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “அச்சச்சோ... அதெல்லாம் இல்லைங்க. கருத்துப் பரிமாற்றம்ங்கறப்ப விவாதங்களும் வரத்தானே செய்யும்” என்று சொல்லிவிட்டு அவரது நூல் விமர்சனங்கள் வந்த ஒன்றிரண்டு நகல்களைப் பகிர்ந்து கொண்டார்.
----
அதன்பிறகு வெகுநாள் கழித்து, 2008ல் அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதத்தொடங்கியதும் “சார்.. உங்களை எனக்கு தெரியும்.. சந்திச்சிருக்கேன்” என்று கேனத்தனமாக ஒரு பின்னூட்டமெல்லாம் போட்டேன். அவ்வளவு பெரிய ஆள் பதிலெல்லாம் போடுவாரா என்று விட்டு விட்டேன்.
சமீபத்தில் திருப்பூர் புத்தகக்கண்காட்சியின்போது எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். எதேச்சையாக ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களும் அங்கே செல்ல எஸ்.ரா அவரைப் பார்த்து அளவளாவியிருக்கிறார். (ராஜநாயஹத்தை அறியாத எழுத்தாளர்களே இல்லை) அப்போது, எஸ்.ரா., தன்னுடன் இருந்த சேர்தளம் நண்பர்களை ‘இவர் வெயிலான்... இவர் முரளிகுமார் பத்மநாபன்” என்று அறிமுகப்படுத்த ராஜநாயஹம் ‘பரிசல்காரன் இருக்காரா?’ என்று கேட்டிருக்கிறார். முரளி “இனிமேதான் வருவார்” என்றாராம். இதை நண்பர்கள் சொன்னபோதும். ‘அவ்ளோ பெரிய ஆளு என்னையக் கேட்கறாரா? ஓட்டாதீங்க” என்று விட்டுவிட்டேன்.
கொஞ்ச நாட்களாக ட்விட்டரிலும் எழுதிவருகிறார் ராஜநாயஹம். ஒரு முறை “திருப்பூரில் நான் சந்திக்க விரும்பும் நபர் பரிசல்காரன்” என்று அவர் ட்விட்டவே, “சார்.. அப்டிலாம் சொல்லாதீங்க. வா-ன்னா வர்றேன்” என்று சொன்னேன். அதன்பிறகு போனவாரம் என் தளத்திலிருந்து என் எண்ணைப் பிடித்து எனக்கு அழைத்து என்னோடு பேசினார். அப்போது நான் ஒரிசாவில் இருந்தேன். அங்கே சந்தித்த சவாலை (அது வரும் பதிவில்..) குறித்து பேசினார். “பத்திரமா இருங்க கிருஷ்ணா” என்று அக்கறையோடு சொன்னார்.
நேற்று மாலை அவர் வீடு இருக்கும் பகுதி வழியே சென்றபோது, ‘இங்கேதானே எங்கோ அவர் வீடு இருக்கிறது?’ என்ற சிந்தனை எழவே, ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை, விசாரித்துக் கொண்டே அவர் வீட்டு முன் நின்றேன். கொஞ்ச நேர, “சார்.. மேடம்..”களுக்குப் பிறகு அவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.
நான்: “சார்.. வெளில இருக்கீங்களா?”
அவர்: “இல்லைங்க.. வீட்ல இருக்கேன்”
நான்: “நான் வெளில இருக்கேன்”
அவர்: “ஓ.. இன்னும் வீட்டுக்கு போகலியா?”
நான்: “அதில்லைங்க.. நான் உங்க வீட்டுக்கு வெளில இருக்கேன். காலிங்பெல் வேலை செய்யல” என்றேன்.
அவர் பதட்டப்படுவது தெரிந்தது. “அச்சச்சோ.. இருங்க வர்றேன்” என்று கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்.
கொஞ்ச நேரம் நான் வெளியில் நின்றதற்கு வருத்தப்பட்டுக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார்.
“என்ன சாப்பிடறீங்க? சப்பாத்தியா பூரியா?” என்றார். வழக்கமாக ‘காஃபியா டீயா என்றுதானே கேட்பாங்க?’ என்று ஆச்சர்யப்பட ”இல்லைங்க.. நான் இரவு டின்னருக்கு கேட்டேன். கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்” என்றார்.
“சார்.. சும்மா இருங்க.. வீட்ல சின்ன மக லீவுக்கு வந்து தனியா இருக்கா. நீங்க வேற” என்று மறுத்தேன்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேச ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து காண்பித்தார்.
கிரா, அசோகமித்திரன், தர்மு சிவராம் (பிரமிள்), ஜெமினி கணேசன், திருப்பூர் கிருஷ்ணன், ஜெயந்தன், மதுரை முன்னாள் மேயர் முத்து என்று பலரோடு பல சமயங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். இலக்கிய உலகில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. வாசிப்பில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஊட்டி சந்திப்பில் ஜெயமோகனோடு நடந்த விவாதம், சாரு என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்.
பிரமிப்போடு கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் மனைவி முந்திரி பக்கோடாவும், இனிப்பும் கொண்டு வந்து, காப்பியோடு வைத்துவிட்டு உபசரித்தார்.
பிற எழுத்தாளார்கள், சினிமா, இலக்கியம் என்று அவர் பேசுவதையும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தேன். நேரமாகிவிட்டதால் புறப்பட எத்தனிக்க, மேசையில் அந்த மாத ‘காட்சிப் பிழை’ பத்திரிகை. எடுத்துப் புரட்ட, அதில் இவர் எழுதிய ‘என்னத்தே கண்ணையா’ பற்றிய கட்டுரை கண்ணில் பட்டது.
'சாப்பிடாம போறீங்க.. ' என்று அவரும் அவர் மனைவியும் குறைபட்டுக் கொண்டே வழியனுப்பினர். அவர் மனைவி ஒருபடி மேலே போய்... -- வாசலில் ஒரு படி கீழே வந்து -- “ஆப்பிள் குழந்தைகளுக்கு எடுத்துப் போங்க” என்றார். விடைபெற்று வந்தபின்னும் அவர் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இப்பேர்ப்பட்டவர் திருப்பூரிலா என்று நினைக்கும்போது அண்ணன் ரமேஷ் வைத்யா-வின் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.
என் சுவடுகளில் மிதிபடும்
முகடுகளில் எனக்கொரு
பரவசம்
சங்கீதத்தில் மேல் சட்ஜமம்
சாலையில் டாப்கியர்
காகிதங்களில் காற்றாடி
மலையென்றால் சிகரம்
வீடென்றால் மாடி
கோயிலென்றால் எனக்கு கோபுரம்தான்
அடித்தளங்கள் அவசியமானாலும்
ஈர்த்ததில்லை என்னை அவை
உயரங்களின் ரசிகன் நான்
நடப்பதை காட்டிலும் பறக்கவே பிரியம்
புதைவதை காட்டிலும் எரிதல் விருப்பம்
கவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும்
க்ளார்க்காய் இருக்கிறேன்
வயிற்றின் அபத்தம்..
.
22 comments:
:)
கவிதையை போட்டிருக்க வேண்டாம். பல முறை படித்தது என்றாலும் பதிவை படித்ததையே மறக்கடித்துவிட்டது..
ரமேஷண்ணா என்ன பண்ணிட்டு இருக்காரோ
Excellent post about an excellent human being
நல்லாஇருக்காரு.
சூப்பர் :)
உங்கள் எழுத்தின் மூலம் எங்களையும் வாசலில் காத்திருக்க வைத்து, பின் R P ராஜநாயஹம் அண்ணனை சந்திக்க வைத்துவிட்டீர்கள். அண்ணன் ட்விட்டரில் இருப்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அவரது இந்த @RPRAJANAYAHEM ஐடியையும் சொல்லியிருக்கலாம். என்னைப்போல் புதியவர்கள் ட்விட்டரில் தொடர ஏதுவாக இருக்கும். நன்றி.
மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த மாதிரி ஓரு கணவன் மனைவியைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொழுது. அவர் பதிவுகளை ட்விட்டர் மூலமாக படித்து ரசிக்கிறேன். இந்த பதிவுக்கு நன்றி பரிசல் :-)
amas32
ராஜநாயஹம் போட்டோ இப்பதான் பார்க்கிறேன். அவரு பழைய படங்களை பற்றி எழுதுவதை வைத்து, ரெம்ப வயசானவரா இருப்பாருன்னு நினைச்சேன்.
Thanks for photo & post :)
கவிதை.... கார்க்கி..ஹூம்.சரிதான்.
பி.ஆர்.ராஜநாயஹம்.ஆஹா...
பெரிசுன்னுதான்.. போட்டோ ஆச்சர்யம்.
படிகள் மேலே கீழே பரிஜல் டச்சு.ரெண்டு இடங்களில்.
ரமேஷ்வைத்தியரிடம் பேச வேண்டும்.
ஆமாம் உங்களிடம் கூட ரொம்ப நாளாயிற்று இல்லையா...
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!
நன்றி.
கிருஷ்ணா! சுட சுட பரிமாறுகிறீர்களே!
ஒரு திருத்தம்.மு.க.முத்துவோட நான் போட்டோ எடுத்ததில்லை.
அன்று நானும் குறும்பட நிகழ்வுக்கு வந்திருந்தேன்.ராஜநாயஹம் அண்ணனை சந்திப்பு வியப்பாக இருந்த்து. இன்று பதிவில் படித்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிதை சூப்பர்
nalla pathivu
நீங்கள் பார்த்த புகைப்படத்தில் இருப்பவர் எங்கள் திருமணத்தை தலைமை தாங்கி நடத்திய மதுரை முன்னாள் மேயர் எஸ்.முத்து!
பரிசல்,
ஒரு 1 மணிநேரம் முன்பு கூட , ஏதோ ஒரு பதிவை படித்துவிட்டு, அங்கு இருந்த ராஜநாயகம் பதிவின் லிங்கை கிளிக்கி விட்டு, அவரின் பதிவை படித்துமுடித்தால், அவரை பற்றிய உங்க்ள் பதிவு...அவரின் பதிவுகளுக்கு தொடர் வாசகன்... ஒரு மனிதனின் மொத்த ஞாபக கூட்டிற்கு தலைவன் ஒருவன் இருக்கவேண்டுமெனில் ஜயா ராஜநாயகத்தை சொல்லலாம். அவ்வளவு தகவல்கள்...
சென்னைக்கு அவர் என்றெனும் வரும்பொழுது பதிவர் சந்திப்பு நடத்த வேண்டும் என்பது அவா..
அவரை பற்றிய பதிவிற்கு நன்றி பரிசல்...
மகிழ்ச்சி. அருமையான பதிவு.
நன்றி.
மேன்மக்கள் மேன்மக்களே..சாருடன் ட்விட்டரில் அளவளாவ முடிவதில் மிகவும் மகிழ்ச்சி..திருப்பூரில் இருப்பது செய்தி எனக்கு..
இதற்கு பெயர் தான் முதுகு சொறிதலா? :-)
பட் சீரியஸ்லி ... நல்ல விஷயம், நல்ல பகிர்வு, நன்றி பரிசல்.
உன் கூட பாசமா, மரியாதையா பழகுறார்னா.. ஹிஹி, உன்னைப்பத்தி வெளிய விசாரிச்சிருக்கமாட்டார்னு நினைக்கிறேன். :-))
ரமேஷின் கவிதை, நானெல்லாம் அவரோடு பழகுவது அவருக்குச் செய்யும் இழுக்கு என்ற பயத்தை உருவாக்குகிறது.
ரமேஷின் அந்தக் கவிதையின் நடுவே சங்கீதத்தில் மேல் சட்ஜமம் வரிக்கு அடுத்து சம்போகத்தில் மார்புகள் என்று ஒருவரி படித்ததாக நினைவு!
ரமேஷுக்கே இந்தக் கவிதை உற்சாகம் தரும்!
நன்றி பரிசல்!
Post a Comment