பரதேசி திரைப்படத்தின் விமர்சனத்தையெல்லாம் எழுதுமளவு கொஞ்சம் கூட அருகதையெல்லாம் இருக்கிறதா எனக்கென்று தெரியவில்லை. பாலா என்கிற படைப்பாளி இன்னும் என்னை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எனக்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்காது. ஆனால்- பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி, பாலா எதைப் படைத்தாலும் பார்த்துக் கொண்டாடுவேன். பரதேசியும் அப்படியே.
கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இந்நேரம். அதைக் காட்சிப்படுத்திய விதம் பாலாவுக்கு மட்டுமே வாய்க்கிற வித்தை. இடைவேளையில் அந்த ஒற்றைக் கை, அசைத்து அழைக்கியிலேயே அழவைத்துவிடுகிறான் மனுஷன். இடைவேளைக்குப் பின், தொடரும் காட்சிகளில் அறைகிறது உண்மைகள்.
அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் கருத்தகன்னியாக நடித்திருக்கும் நடிகை, அவர் கணவனாக நடித்தவர், அதர்வாவின் பாட்டி என்று எல்லோரையும் நடிக்க வைத்தவிதத்திலேயே ‘அடிக்கிறாரா பாலா’ என்று விமர்சித்தவர்களையெல்லாம் அடித்துவிட்டார். கொட்டடித்தபடி ‘நியாயம்மாஆஆஆரேஏஏஏ’ என்கிற அதர்வா, கடைசியில் அதே நியாயம்மாஆஆஆரேஏஏஏ-வை நியாயமே இல்லாமல் நடந்து கொள்பவர்களையும் பார்த்துக் கதறிக் கேட்கிற இடம் வலி. இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கதறல்.
கேமரா- செழியன். முதல் சீனில் இதுதான் இவர்கள் உலகம் என்று சந்து பொந்தெல்லாம் ஓடி, சாலூர் கிராமத்தைக் காட்டும் செழியனின் கேமரா, கடைசிக் காட்சியில் 360 டிகிரி கோணத்தில் தேயிலைத் தோட்டத்தைக் காட்டியதன் மூலமே ‘இனி இதுதான் இவர்கள் உலகம் என்று சொல்லாமல் சொல்லி - கனக்க வைக்கிறது.
நாஞ்சில் நாடனின் வசனம், படத்துக்குப் பொருந்தி வருகிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல், சாலூர் கிராமத்தில் பெரிசுகளெல்லாம் பேசிக் கொள்வதை வசனப்படுத்திய விதம் அருமை. மந்திரி என்றாலே இனி சிரிப்புதான் வரும்.
இசை: ஜி.வி.பிரகாஷ். பாடல்களெல்லாம் சரி. ஆனால், இசைப்பது மட்டும் இசையல்ல. சில இடங்களில் மௌனமும் இசை என்பதை இவர் உணரவேண்டும். பின்னணி இசையில், கடைசி சில இடங்களில் இசை தூக்கலாக இருப்பது உறுத்துகிறது.
கவிஞர் வைரமுத்து, கலை இயக்குனர் பாலசந்தர், கேமராமேன் செழியன் - மூவரும் தங்கள் ஷோகேஸில் ஓர் அடுக்கை காலி செய்து வைக்கலாம். இந்தப் படத்திற்கான விருதுகளை அடுக்கிவைக்க.
இயக்குனர் பாலா?
ஒரு புதிய, பெரிய ஷோகேஸுக்கு ஆர்டர் செய்துவிடுங்கள்.