Monday, August 12, 2013

தொலைந்த பழக்கங்கள்

என் புத்தகவாசிப்புப் பழக்கம் சமீபமாக கன்னாபின்னாவென்றுதான் இருக்கிறது. சமீபமாக என்றால் சமீப வருடங்களாக. முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை முடிக்காமல் இன்னொரு புத்தகத்தைத் தொட மாட்டேன். இப்போது ஒரே சமயத்தில் இரண்டு (அ) மூன்று புத்தகங்கள். மூடுக்குத் தக்க, மாற்றி மாற்றிப் படிக்கிறேன்.

காட்சி. 1: நண்பருடன் ஹோட்டல் ஒன்றுக்குப் போனபோது, மேற்கு நோக்கி வைக்கப்பட்டிருந்த கிழக்கு புத்தக ஸ்டாண்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அவர் பில் கொடுக்க பணம் நீட்டியபடி, ‘புக் ஏதாவது எடுக்கறியா?’ என்றார். கவனித்தால், அவர் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு. ஆஹா என்று, ரொம்ப நாட்களாக வாங்க நினைத்த ‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தை எடுத்துக் கொண்டேன்.

காட்சி. 2: சில தினங்களுக்கு முன் பாராக்குப் பார்த்தபடி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து கொண்டிருக்க, NCBHன் மாபெரும் புத்தகக் கண்காட்சி (அப்படித்தான் போட்டிருந்தது) என்றொரு போர்டைப் பார்த்தேன். 20X20 ஸ்டாலில் கொஞ்சம் புத்தகங்கள். டாஸ்மாக்கைக் கண்ட குடிகாரன் போல உள்ளே நுழைந்து, ழுத்தாளர் பாராவின் கொசு, மற்றும் சொக்கனின் திருப்பு முனைகள் இரண்டையும் எடுத்து வந்தேன். பாராவின் அரசியல் நாவல் எப்படி இருக்குமென்ற ஆர்வம். சொக்கனின், இந்தப் புத்தகம் ஆஃபீஸில் சில மீட்டிங்கில், சில காக்காக் கூட்டத்தில் பேச உதவும். (ஸாரி ஜெமோ!) ‘பாருய்யா.. எப்படி இருந்தவங்க இப்டி ஆய்ட்டாங்க’ என்று உதாரணங்கள் சொல்லி கைதட்டல் வாங்க. ஆகவே வாங்கினேன். (கொசுறு: நேரில் குடும்பத்தோடு சந்தித்திருந்தாலும், சொக்கனின் வெற்றி ரகசியம், இந்தப் புத்தகத்தின் பின்னட்டையைப் படிக்கும்போதுதான் தெரிந்தது. அவர் மனைவி பெயரும் உமாவாமே?)

ஆக, மேற்கண்ட மூன்று புத்தகங்களோடு எங்கள் திருப்பூர் நூலகமான, சேர்தளத்திற்கு கொடுத்து திரும்ப எடுத்து வந்த - நான் படிக்காமல் இருந்த - ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகமும் சேர்ந்து நான்கு புத்தகத்தையும்தான் சமீப வாசிப்பிற்கு எடுத்திருக்கிறேன்.

இதில் திருப்புமுனைகள் அவ்வப்போது தொட்டுக் கொள்கிறேன். கொசு இன்னும் ஆரம்பிக்கவில்லை. திடீரென்று இரண்டு நாள் முன்பு ‘ராஜிவ் கொலை வழக்கை’ எடுத்தேன். அப்ப்ப்ப்ப்பா! இதோ – சற்று முன்தான் படித்து முடித்து வைத்தேன். அவ்வளவு ஸ்பீடாக படிக்க முடிந்தது. ஒரு க்ரைம் நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் – நிஜத்தில் நடந்ததைப் படிக்க ஆவலாகவே இருக்கிறது.

புத்தகத்தில், என்னை பாதித்த / கவர்ந்த விஷயம், நாட்டில் அங்கங்கே நடக்கும் - நாம் சின்னச் சின்னதென்று நினைக்கும் - சிலபல அத்துமீறல்களுக்கு எத்தனை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதே. அதுவும் இந்திராகாந்தி கொலைக்கு முன்பே, எச்சரிக்கையாக உளவுத்துறை எடுத்த ஒரு நடவடிக்கையையும் – அது மீறப்பட்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதையும் படித்தபோது சிலிர்த்தது.

ஆனால் – நான் இங்கே எழுத ஆரம்பித்தபோது - சொல்ல வந்த விஷயம் அதைப் பற்றியல்ல. இன்னொன்று.

ராஜிவ் கொலை வழக்கு புத்தகத்தை கடகடவென்று இரண்டு தினங்களில் முடித்தேன். புத்தகம் தந்த சுவாரஸ்யத்தால், செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்றேன். அப்போது நடந்த ஒரு சம்பவத்தையே பகிர நினைத்தேன்.

சனிக்கிழமை குடும்பத்தோடு திருப்பூர் பிக்பஜாருக்குச் சென்றிருந்தோம். கையிலிருந்த புத்தகத்தை, ட்ராலியில் – குழந்தைகளை அமர வைப்பார்களே – அந்த இடத்தில் வைத்திருந்தேன். பில் போடும் இடம் வந்ததும் – பொருட்களை கவுண்டரில் வைத்துவிட்டு, ட்ராலியை விட்டுவிட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, மகளுக்காக வெளியே பானிபூரிக்காரரிடம் கைநீட்டிக் கொண்டிருக்கும்போது இடதுமூளையில் சடாரென்று, ‘ராஜிவைக் கொல்ல வந்த மனிதவெடிகுண்டு தனு, சென்னை பூம்புகாரில் சந்தனமாலை வாங்கியபோது - அதற்கான ரசீதை எழுதியவர் பிற்பாடு எவ்வளவு வருந்தியிருப்பார்’ என்றொரு சம்பந்தமில்லா சிந்தனை வந்தோடியது. அந்த சிந்தனை வந்ததுமே, ‘ஐய்யோ.. அந்த புக் எங்கே வைத்தோம்’ என்று பதறியது மனது.

பானிபூரியை வாங்கிக் கொண்டு, மீராவிடம் கொடுத்துவிட்டு, ‘அந்த புக் எங்கே’ என்று கேட்டேன். அம்மா, மகள்கள், உமா உட்பட எல்லாருமே என்னை எரித்துவிடுவது போல பார்த்தனர். ’நீதாண்டா வெச்சிருந்த? தொலைச்சுட்டியா?’ என்று சொன்னது பார்வை. ‘எதுக்கும் அந்த பேக்ல பாருங்க’ என்றேன். மளிகைப் பொருட்களைக் கலைத்துப் பார்த்தும் கிட்டவில்லை.

சடாரென்று ட்ராலிகள் அடுக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடினேன். குனிந்து எங்கேனும் இருக்கிறதா என்று தேடினேன். ம்ஹும். பதட்டமாக திரும்பி வந்தபோது, ‘இருக்கு’ என்று உமா சொல்வது கேட்டது.

‘இருக்கா? கெடச்சுட்டுதா?’ என்றேன்.

‘இல்லல்ல. ஐஸ்க்ரீம் இருக்குமான்னு மேகா கேட்டா. அதான் உள்ள இருக்குன்னு சொல்லீட்டிருந்தேன்’ என்றார் கூலாக.

நான் மறுபடி அங்கே இருந்த இரண்டொரு செக்யூரிட்டிகளிடம் விசாரித்தேன். ‘நஹி மாலும் சார்’ என்ற பதில் வந்தது.

பில்லிங் கவுண்டர் அருகே ட்ராலியை விட்ட இடம், வெற்றாகக் காட்சியளித்தது. (‘ட்ராலியெல்லாம் அங்க தள்ளீட்டுப் போய்டுவாங்க சார்’)

திரும்பி வந்து மீராவிடம் வெளியே சிலர் தள்ளிக் கொண்டுபோய் வைத்திருந்த நான்கைந்து ட்ராலிகளைக் காட்டி, ‘அதுல இருக்கான்னு பாரு’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினேன்.

உள்ளே போய் எல்லாரும் தள்ளிக் கொண்டிருந்த ட்ராலிகளையெல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் கழித்து நம்பிக்கை இழந்து வெளியே வந்தபோது, எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

“என்னாச்சு? கிடைச்சுதா?”

“இருந்துச்சுப்பா” என்றாள் மீரா. ‘நீங்க சொன்ன வெளி ட்ராலில வெச்ச மாதிரியே இருந்துச்சு’

அப்போதுதான் எனக்கு மூச்சு வந்தது. இருந்தாலும் ஒரு மாதிரி அமைதியாகவே இருந்தேன். ’அதெல்லாம் தொலையாதுன்னு எனக்குத் தெரியும்க. புக்கெல்லாம் யார் எடுக்கப்போறா?’ என்றார் உமா.

‘ராஜிவ் கொலை வழக்கு’ன்னு தலைப்பு பார்த்து பயந்து எடுக்காம இருந்திருக்கலாம்’ என்றேன் நான்.

இருந்தாலும், -

இப்படி ஒரு புத்தகம் கிடந்தும் தொலையவில்லையே, யாரும் எடுக்கவில்லையே என்ற வருத்தம் இருந்ததென்னவோ உண்மைதான். 

.