Friday, January 23, 2015

ரிப்போர்ட்

"ஏப்பா ரிப்போர்ட் கேட்டு ரெண்டு நாளாச்சு. இன்னைக்கு தர்றேன்ன.. ஞாபகமிருக்கில்ல?”

“இருக்கு சார்” என்றான் கணேஷ்.

“இருக்கா? ஞாபகமிருக்குங்கறியா... இல்லை ரிப்போர்ட் ரெடியா இருக்கா?”

“ஞாபகமிருக்கு சார். ரிப்போர்ட் இன்னும் ஒன் ஹவர்ல ரெடியாகிடும்”

“சரி.. கேபினுக்கு கொண்டு வா” என்று நகர்ந்தார் மேனேஜர்.

*

“இன்னிக்கு நீயா?” என்றாள் மானஸா.

“ஆமாப்பா” என்றான் கணேஷ்.

“என்ன ரிப்போர்ட் குடுத்தாலும் எதாச்சும் ஒரு நொள்ளை சொல்லுவார். நாம எவ்ளோ கரெக்டா, எல்லா டேட்டாஸ் எடுத்தாலும் இல்லாத ஒண்ணைத்தான் கேட்பாரு” - புலம்பினாள் மானஸா.

”இப்படித்தான் போனவாரம்  நான்  ஒரு ரிப்போர்ட் குடுத்தனா..” என்று ஆரம்பித்தான் அடுத்த டெஸ்க் சுந்தர். அதன்பின் நான்கைந்து இப்படித்தான்கள் வந்தன.

“ப்ளீஸ்.. இன்னும் அரைமணி நேரத்துல ரெடி பண்ணிக் கொண்டு போகணும். எல்லாரும் சைலன்ஸ் ப்ளீஸ்” என்றான் கணேஷ்.

சிஸ்டத்தில் ஃபோல்டரைத் தேடினான். எக்ஸெல்லை திறந்தான். ஒவ்வொன்றாக காபி பேஸ்டினான். மூன்று மாத ரிப்போர்ட்டைத் தொகுத்தான். ஒவ்வொரு ஷீட்டிலும் ஒவ்வொரு விதமாக அதை பதிவாக்கினான். எல்லாவற்றிற்கும் Chart க்ரியேட் செய்தான். ஒவ்வொன்றையும் தனித்தனியாக காண்பிக்க எழுத்து / எண்களுக்கெல்லாம் வேறு வேறு கலர் கொடுத்தான்.   மொத்தம் 12 பக்கம் வந்தது.

45 நிமிடங்களானது முடிக்க.

ப்ரிண்ட் எடுத்தான். ஃபைல் ஃபோல்டர் ஒன்றை தேடி எடுத்து அதில் வரிசையாக சொருகினான்.

55  நிமிடங்கள்.

எழுந்தான். சுற்றியுள்ளவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.


 மேனேஜர் கேபினை - எக்ஸ்யூஸச் சொல்லிவிட்டுத் - திறந்தான்.

“3 மாச ரிப்போர்ட் சார்” என்றான்.

வாங்கியவர் இரண்டே நிமிடங்கள் மேய்ந்து விட்டுக் கேட்டார்:

“ப்ரிண்டர் டோனர் மாத்தலியா? பேப்பர்ல கோடு விழுது பாரு. போனதடவை சுந்தர்கிட்டயே சொன்னேன்.  மேனேஜர்ட்ட  ஒரு ஃபைல் குடுக்கறதுன்னா இப்படித்தான் குடுப்பீங்களா? சீ மிஸ்டர் கணேஷ்...” என்று ஆரம்பித்தார் மேனேஜர்.
.




2 comments:

a said...

எதுக்கு இந்த முட்டையில ஆம்லெட் போட்ட... அதுக்கு அதோ இருக்குது பாரு.

Ravikumar Tirupur said...

காட்சிப்பூர்வமாக இருக்கு. ரொம்ப நல்லாருக்கு.