உடுமலைப்பேட்டையில் தளிரோடு நூலகத்துக்கு அருகே உள்ள குட்டை விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ள செட்டியார் மசால் பொரிக்கடை இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பள்ளி நாட்களில் அங்கு செல்வதென்றால் அலாதி ப்ரியம். சினிமாப் பாட்டுப்புத்தகங்கள் பலவும் அங்கு வாங்கியவைதான். பொரி அத்தனை காரசாரமாக இருக்கும். இதை எழுதும்போதே அந்த மசால்பொரியின் நெடி உணர்கிற அளவுக்குப் பிடிக்கும். பள்ளி முடிந்து நண்பர்களோடு கிட்டத்தட்ட தினமும் செல்வதுண்டு. இரண்டு தட்டவடைக்கு நடுவே மசாலை வைத்துத் தருவார். பொரிக்குப் பிறகு அதையும் ஒன்றிரண்டு சாப்பிட்டுவிட்டு, ஒரு தேங்காய் பருபியும் சாப்பிட்டால்... வ்வாவ் என்றிருக்கும். மசால் பொரி, பூண்டுப்பொரி, காரப்பொரி என்று விதவிதமாக இருக்கும்.
அதேபோல, திருப்பூரில் சின்னக்கரை லீஷார்க்கில் பணிபுரிகையில் பல்லடம் ரோடு - சின்னக்கரை கார்னரில் ஒரு வடைக் கடை. மனைவி, குழந்தைகளோடு தள்ளுவண்டியில் வடை போட்டு விற்பார். பருப்பு வடை 50 காசு. 50 ரூவாய்க்கெல்லாம் வாங்கிக்கொண்டு ஆஃபீஸ் முழுக்க சாப்பிடுவோம். பின்னொரு நாள் அவர் ‘நாளைல இருந்து இருக்க மாட்டேன் தம்பி. சொந்த ஊருக்குப் போறேன்’ என்றார். அப்போது அவர் சொன்ன அவரின் கதை, எனக்கு பெரியதொரு வாழ்க்கைப் பாடம். அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாய் வடநாட்டவர்களின் புழக்கம் அதிகரிக்க, இவையெல்லாம் அருகிவிட்டன. அந்த மசால்பொரி என்கிற சமாச்சாரம் அன்றைய சுவையில் இல்லாமல் கேரட், அது இது என்று போட்டு சவசவ என்று ஏதோ தருகிறார்கள். வடை என்கிற ஐட்டம் ஏதோ பெரிய பெரிய ஹோட்டல்களில் ஒண்ணு 20 ருவா, 30 ரூவா என்று அலங்கரித்துத் தருகிறார்கள். எங்கு பார்த்தாலும் பானிபூரி, பேல்பூரிதான். எங்காவது தேடித்தேடித்தான் வடை, பொரி சமாச்சாரங்கள் கிடைக்கின்றன.
`எக்ஸ்பிரஸ் அவென்யூ’வில் ‘Goodness Of Arokya’ என்று ஆரோக்யாவின் ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட் ஒன்று உள்ளது. காபி இருக்கா என்றால் ‘காபச்சீனோ’ என்று போர்டைக் காட்டுகிறார்கள். ‘ஏன்யா உங்க டேக் லைனே ‘நலம் அன்புடன் நமது கிராமங்களிலிருந்து..’ கிராமங்களிலிருந்து எங்கடா காபச்சீனோலாம் வருது?” என்று கேட்டால் நஹி மாலும் நஹி மாலும் என்றுதான் பதில் வரும்.
சென்னையில் திருவல்லிக்கேணி மசூதிக்கு எதிரே ஒரு தள்ளுவண்டியில் மசால் வடை, போண்டா எல்லாம் குட்டிக்குட்டி சைஸில் கிடைக்கிறது. சரக்குக்கு செம சைடிஷ். மற்றபடி தெருவுக்குத் தெரு பானிபூரி, சமோசாக்கள்தான்.
சினிமா தியேட்டர்களிலும் இந்த வடக்கத்திய உணவு நொறுக்குகள் எல்லாம் கிடைக்கும். வடையோ பஜ்ஜியோ கிடைக்காது. வடை பஜ்ஜியே இல்லை என்ற பிறகு, மசால் பொரியெல்லாம்.. ம்ஹும்!
வடக்கத்தியர்கள் இந்த பானிபூரி, பேல்பூரியெல்லாம் விற்றது ஓகே. அவர்கள் வந்ததும் நம்ம ஆட்களின் விற்பனை குறைந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டதும்தான் கொடுமை.
ஆகவே, தயவு செய்து பிஜேபிக்கு ஓட்டுப்போடாதீர்கள்!
No comments:
Post a Comment